LL5

LL5

Dear Friends,

     Thank you so much for your likes and comments… :):)

அத்தியாயம் – 5

ஹரியின் வன்மத்தோடும், லவியின் துள்ளலோடும் நாட்கள் இனிதே நகர்ந்தது.

அன்று மாலை, லவி ஆங்கில பாட்டைக் கேட்டுக் கொண்டு, காரை வேகமாக அந்த இசைக்கு ஏற்பச் செலுத்த, நித்திலா சோகமாக அமர்ந்திருந்தாள்.

“நித்தி… ஏன் சோகம்?” என்று கண்களை நித்திலாவின் மீது வைத்துக் கொண்டும், கவனத்தைச் சாலையின் மீது வைத்துக் கொண்டும் கேட்டாள் லவி.

“லவி. இன்னக்கி காலேஜில் சொன்ன டூர் போகணும்னு ஆசையா இருக்கு… உங்க வீட்டிலும் விடமாட்டாங்க… எங்க வீட்டிலும் விடமாட்டாங்க… ஒருத்தர் வீட்டில் பெர்மிஸ்ஸன் வாங்கிட்டா ரெண்டு வீட்டிலும் கிடைச்சிரும்…” என்று நித்திலா யோசனையாகக் கூற, லவி அழகாகப் புன்னகைத்தாள்.

“ஜுஜுபி… இந்த விஷயத்துக்காக இவ்வளவு யோசனையா? அதெல்லாம் பிளான் பக்காவா ரெடியா இருக்கு…” என்று தலை அசைத்து ஸ்டைலாகக் கூறினாள் லவி.

அவள் தலையின் ஆட்டத்தின் வேகத்தைத் தாள முடியாமல், லவியின் காதில் உள்ள மணி தள்ளாடியது.

நித்திலா லவியை யோசனையாகப் பார்க்க, “அது தான் நமக்கு வாய்த்த அடிமைகள் ரெண்டு இருக்குல… அவனுகள வச்சி வேலையை முடிச்சிருவோம்…” என்று லவி கூற, “சங்கர், யாதவ் பாவம் டீ…” என்று மென்மையாகக் கூறினாள் நித்திலா.

“யார் பாவம்?” என்று நக்கலாகக் கேட்டாள் லவி.

நித்திலா மௌனம் காக்க, “சங்கர்? சங்கர் ஒரு ஊமைக் கோட்டான்… பாக்கத்தான் அப்பிராணி… செய்றதெல்லாம் முந்திரிக்கொட்டை தனம்…” என்று கடுப்பாகக் கூறினாள் லவி.

“அப்படி உனக்கு என்ன கெடுதல் பண்ணான் சங்கர்?” என்று நித்திலா கேட்க, “அய்ய… முதல் நாள் எங்க வீட்டுக்கு வந்தப்ப அழுக்கு துணியோட இருந்தான்… நான் சின்னப் புள்ளையா இருந்தா கூட, எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு… பாக்க சகிக்கலை… சரி அவனுக்குப் புது துணி வாங்கி குடுத்து அவனை எங்கயாவது அனுப்ப வேண்டியது தானே… சங்கரை எங்க அம்மாவும், அப்பாவும் நம்ம வீட்டிலேயே வச்சிக்கிட்டாங்க…” என்று வெறுப்பாகக் கூறினாள் லவி.

“இதைப் பெரியம்மா, பெரியப்பா கிட்ட சொல்லிருக்கியா?” என்று நித்திலா யோசனையாகக் கேட்க, “சொல்லாமல் என்ன? பல தடவை சொல்லிருக்கேன்… அப்பா பெரிய கதையே சொல்லுவாங்க… சங்கர் அப்பா நமக்கு நிறைய உதவி பண்ணிருக்காங்க… அவரால் தான் நாம நல்ல நிலைமையில் இருக்கோம்… சங்கர் அப்பாக்கு எதோ பிசினெஸ் லாஸ்… அந்த அதிர்ச்சியில் இறந்துட்டாங்க… சங்கர் நம்ம பொறுப்பு… அப்படி இப்படின்னு…” என்று சலிப்பாகக் கூறினாள்.

அங்கு மௌனம் நிலவ, “சரி… சங்கர் அப்பா, நல்லவர் உத்தமராவே இருந்துட்டு போகட்டும்… அதுக்காக இவனை அப்படி தாங்குதாங்குன்னு தாங்கணுமா?” என்று லவி ஆற்றாமையோடு கேட்க, “பொறாமை…” என்று நித்திலா சிரித்தாள்.

“அய்ய… இவன் மேல பொறாமை வந்துட்டாலும்… அப்படியே சீன் போடுவான் நித்தி… உலகத்திலேயே அவன் தான் ஒழுங்கு மாதிரி… இந்த உலகத்திலேயே அவன் தான் அமைதி மாதிரியும்… நாம என்ன கடுப்பேத்தினாலும் பொறுமையின் சிகரம் மாதிரி நடிப்பான்… அம்மாவும், அப்பாவும், அவனைப் பாரு எப்படி இருக்கான்! அப்படின்னு நமக்கே அட்வைஸ் பாண்ணுவாங்க…” என்று லவி சிலாகிக்க, நித்திலா அவள் பேச்சை ரசித்துச் சிரித்தாள்.

“சரி யாதவ் என்ன பண்ணான்?” என்று நித்திலா கேலியாகக் கேட்க, “அவன்… அடுத்து என் உயிரை எடுக்க வந்தவன்… எப்ப பாரு சங்கர் கூடச் சேர்ந்து படிக்கிறேன்னு வீட்டுக்கு வந்து என் உயிரை எடுப்பான்…” என்று மேலும் கடுப்பானாள் லவி.

நித்திலா புன்னகைக்க, “ஆஆஊன்னா… சந்தைக்குப் போனும்… காசு கொடு… ஆத்தா வையும்… அப்படின்னு புலம்பற அம்மா பிள்ளை…” என்று கூறி லவி சிரித்தாள்.

“ஆக, அம்மா புள்ளையையும் பிடிக்கலை… அடக்கமான புள்ளையையும் பிடிக்கலை… பசங்க எப்படி தான் இருக்கணும்?” என்று நித்திலா விளையாட்டாகச் சந்தேகம் கேட்க, “பசங்க என்ன… பொண்ணுங்க என்ன? எல்லாருக்கும் ஒரே சட்டம் தான்… அவங்க அவங்களா இருக்கனும்… சுயமா சிந்திக்கணும்…” என்று லவி ஆழமான குரலில் கூறினாள்.

“நாம எப்பவும் அப்படி இருக்க முடியாது லவி.” என்று அன்பாகக் கூறினாள் நித்திலா. மறுப்பாகப் பேச நினைத்து, லவி தன் வாயைத் திறக்க, நித்திலாவின் கண்களில் இருந்த அளவில்லா நட்பு கலந்த அன்பில் அமைதியாகத் தன் காரை அவர்கள் வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

லவி செருப்பை விட்டெறிந்து, தடதடவென்று வீட்டிற்குள் நுழைய, நித்திலா அவள் செருப்பையும், லவியின் செருப்பையும் எடுத்துச் சரியான இடத்தில் வைத்து விட்டு, மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

“அம்மா… சங்கர், யாதவ் எங்க?” என்று தோரணையாகக் கேட்டாள்.

“சங்கர் ரூமில் படிச்சிட்டு இருக்காங்க…” என்று கூறி, அவள் மேலே ஏதோ பேச, “அம்மா… ஸ்நாக்ஸ் ரெடி பண்ணுங்க… நாங்க, அவங்க கிட்ட கொஞ்சம் சந்தேகம் கேட்டுட்டு வரோம்…” என்று தன் தாய் கல்யாணியிடம் கூறி, நித்திலாவை கைப்பிடித்து அவுட் ஹௌஸிற்கு அழைத்துச் சென்றாள் லவி.

சங்கரின் அறைக்குள் லவி தடாலடியாக நுழைய, அறைக்குள் இருந்த யாதவ் மற்றும் சங்கர் தர்மசங்கடமாக நெளிந்தனர். நித்திலா, சற்று பயத்தோடும், தயக்கத்தோடும் பார்க்க… “நித்தி பயப்படாத. படிச்சிட்டு தா இருப்பாங்க.” என்று கூறி, சங்கரின் அறையை நோட்டமிட்டாள் லவி.

லவி சங்கரின் அறைக்கு, அவளுக்கு ஏதாவது தேவை என்றால் எப்பொழுதாவது வருவாள்.

“அம்மா… அப்பா… சொல்றது நிஜம் தான். ரூம் நீட்டா இருக்கு… ஏன் சங்கர் ரூமை இவ்வளவு நீட்டா வச்சிருக்க? இது என்ன மியூசியமா? இல்லை இதுக்கு உனக்கு ஏதாவது விருது குடுப்பாங்களா?” என்று அங்கிருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி சங்கரைப் பார்த்துப் புருவம் உயர்த்தி கேட்டாள் லவி.

அதற்கு, மௌனமே பதிலாகக் கிடைக்க, “சரி… விடு… நீ என்னைக்கி பேசியிருக்க?” என்று லவி தன் பேச்சை மேலும் தொடர்ந்தாள்.

“எனக்கு நீங்க இரண்டு பெரும் ஒரு வேலை பண்ணனும்…” என்று மிதப்பாகக் கூற, “அதெல்லாம் பண்ண முடியாது… நீ இங்கிருந்து கிளம்பு…” என்று தெனாவட்டாகக் கூறினான் யாதவ்.

“யாதவ்… நீ காலேஜ்ல எல்லா பொண்ணுகளையம் சைட் அடிக்கிறேன்னு மாமா கிட்ட சொல்லட்டுமா?” என்று லவி யாதவை மிரட்ட, நித்திலாவின் உதடுகள் மெலிதாக வளைந்தது.

“என்ன பண்ணனும்?” என்று சங்கர் கேட்க, ” நெக்ஸ்ட் வீக் காலேஜ் டூர்… அது எடுகேஷனல் டூர்… எல்லாரும் போறாங்க… நாங்களும் கண்டிப்பா போகணும்னு சொல்லி எங்க இரண்டு பேருக்கும் பெர்மிசன் வாங்கி தரணும்…” என்று லவி மிதப்பாகக் கூற, யாதவ் மறுப்பு தெரிவிக்க வாயைத் திறக்குமுன், சங்கர் சம்மதமாகத் தலை அசைத்தான்.

“அது…” என்று கூறி, லவி அங்கிருந்து கிளம்ப, நித்திலா தலை அசைத்து அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றாள்.

“சங்கர்… நீ ஏன் ஒத்துக்கிட்ட?” என்று யாதவ் பிடிவாதமாகக் கேட்க, “இல்லைனா அவ… இன்னும் பேசுவா… யார் கேட்கறது?” என்று பரிதாபமாக சங்கர் கேட்க, யாதவ் சங்கரை மனத்தாங்கலோடு பார்த்தான்.

“நித்திலா பாவம் தானே…” என்று சங்கர் சமாதானமாகக் கூற, ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் யாதவ்.

நடராஜிடம் பேசிச் சங்கர் வழியாகக் கிடைத்த அனுமதியின் பெயரில் லவி, மற்றும் நித்திலா அனைவரோடும் கேரளா நோக்கிப் பயணித்தனர்.

“ஓ…ஓ ஹோ… ஓ…ஓ…ஓஹோ… ஓ…ஓ…ஓஹோ… ஓ…” என்ற ஆரவாரச் சத்தத்தோடு அவர்கள்  கல்லூரி பேருந்து சீரான வேகத்தில் சென்றது.

ஆண்கள்பின் பகுதியில் அமர்ந்திருக்க, பெண்கள் பட்டாளம் முன் பகுதியில் அமர்ந்திருக்க ஆட்டமும் பாட்டமும் தூள் கிளப்பியது.

பெண்கள் தங்கள் துப்பட்டாவை இடுப்பிலும், தலையிலும் கட்டிக் கொண்டு, பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப நடனமாட, ஆண்கள் அவர்கள் பாணியில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

பேருந்து மூணார் விடுதியில் நின்றது. அவர்கள் கல்லூரிக்கு என ஏற்பாடு செய்திருந்த இடம் மிக அழகாகக் காட்சி அளித்தது. பெண்களுக்கு மூன்று அல்லது நான்கு பேருக்கு ஓர் அறை என்றும் குளிப்பதற்கு ஓர் பொதுவான இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

பல கதைகளோடும், பேச்சுகளோடும் லவியின் அறையில் அவர்கள் இரவைக் கழித்து மறுநாள் காலையில் லவியின் அறையில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் எழும்ப, குளிப்பதற்கு இடம் கிடைக்காமல் அனைவரும் தடுமாறினார்.

“ஏய்… நமக்குக் குளிக்க ஒரு பாத்ரூம் கூடவா கிடைக்கலை?” என்று சுமி புலம்ப, “இல்லை டீ. அந்த லதா நாங்கெல்லாம் நேத்து நைட் பாத்ரூம்ல துண்டைப் போட்டுட்டோம்முனு சொல்றா…” என்று நித்திலா சோகமாகக் கூறினாள்.

மெத்தையில் உருண்டபடி, நைட் ட்ரெஸ்ஸோடு “எவ அவ? அவ ஹாஸ்டேல்ன்னு நினைச்சாலா? மவளே வச்சி செய்வோம் அவளை…” என்று சண்டைக்குத் தயாராகியபடி மெத்தையில் எழுந்து அமர்ந்தாள் லவி.

” இதுக்கெல்லாம் உடனே எந்திருச்சிருவியே… அம்மா… தாயே… நீ ஒன்னும் பண்ண வேண்டாம்… நீ கொஞ்சம் அமைதியா இரு… நான் பேசி நமக்கு ஒரு பாத்ரூம் உஷார் பண்றேன்…” என்று லவியை கை எடுத்துக் கும்பிட்டாள் நித்திலா.

“நித்தி… நீ ஏன் பயப்படுற?” என்று லவி ஈயென்று சிரித்தபடியே கேட்க, நித்திலா அவளை அர்த்தத்தோடு பார்த்தாள்.

“நித்தி கூல்… நான் வேணா இந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு கவிதை சொல்லட்டுமா?” என்று கேட்டு, “தண்ணீர்… தண்ணீர்…” என்று லவி ஆரம்பிக்க, அருகே இருந்த பிரெடை லவியின் வாயில் திணித்தாள் நித்திலா.

“ஏய் நான் இன்னும் ப்ரஷ் கூடப் பண்ணலை… ப்ரெட்டில் ஜாம் கூட இல்லை…” என்று மூச்சு விட முடியாமல் முனங்கினாள் லவி.

“இப்பயாவது வெறும் பிரெடை கொடுத்தேன்… அடுத்த தடவை கவிதைங்கிற பெயரில் மொக்கை போட்ட, பிரட்டில் விஷம் வச்சிருவேன்.” என்று நித்திலா லவியை மிரட்டினாள்.

“பேபி… கூல்… நான் இனி கவிதை சொல்லமாட்டேன்… காட் ப்ரோமிஸ்…” என்று லவி சமாதான புறாவைப் பறக்க விட, நித்திலா அமைதியாக தலை அசைத்து கேட்டுக் கொண்டாள்.

‘நாளைக்கி பாருங்க இந்த பாத்ரூம் பிரச்சனையை எப்படி டீல் பண்றேன்னு…’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் லவி.

கேலியும் கிண்டலுமாக அவர்கள் அதிரப்பள்ளி அருவியை நோக்கிப் பயணித்தனர்.

அதிரப்பள்ளி அருவி. சுற்றிலும் மரங்கள். பறவைகளின் கீச்… கீச்சென்ற சத்தம். பசுமையாய் காட்சி அளித்த இடம் அந்த இளவட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தியது. சுற்றிலும் மரங்கள். அவர்கள் அருகே கடந்து செல்லும் நீர், அருவியாகப் பாய்ந்தோடுவதை மாணவர்களும், மாணவிகளும் கண்டு களித்தனர்.

லவி, நித்தி, சுமி, சுவி, ஸ்விட்டி, வசு… என அவர்கள் கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் கும்மாளம் அடித்தது.

அப்பொழுது அவர்கள் தோழி ஒருத்தி உச்சியிலிருந்து, அருவியை ரசிக்க… “இப்ப அம்மா, அப்பா கிட்ட பேசு… உன் காதலை வீட்டில் சொல்லிச் சம்மதம் கேளு… செம்ம பாயிண்ட் இது தான்…” என்று லவி கேலியாகக் கூற, “லவி… உனக்கு எல்லாமே விளையாட்டு தானா?” என்று நித்திலா அவளைக் கண்டித்தாள்.

சில பெண்களோ, “லவி… உன் மூளையோ மூளை… யாருக்கு வரும் இப்படியொரு ஐடியா…” என்று கூறி லவியை உற்சாகப்படுத்தினர்.

“வேணாம்… லவி நீ இவங்க பேச்சை எல்லாம் கேட்காத…” என்று நித்திலா லவியின் காதில் கிசுகிசுத்தாள்.

அப்பொழுது லவி அவள் பார்வையைச் சுற்றிலும் சூழ விட, அவள் கண்கள் ஹரியின் மீது நின்றது.

பாறையின் உச்சியின் மீது நின்று கொண்டிருந்த ஹரியின் கண்கள் அருவியை ரசிக்காமல், லவியையும் அவள் தோழிகளையும் ரசித்துக் கொண்டிருக்க… அவன் அலைப்பேசி படக்கருவி இவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

லவி கோபமாக எழுந்திருக்க, நித்திலா அவள் கைகளைப் பிடித்து, “வேண்டாம் லவி… அவன் மொபைல்… அவன் கேமரா… பேசாம அமைதியா போயிடுவோம்…” என்று மென்மையாகக் கூறினாள்.

“நித்தி… படம் பிடிக்கிறது நம்மளை…” என்று லவி கடுப்பாகக் கூற, “லவி… சொல்றது சரி தான்… நம்மளை எதுக்கு அவன் படம் பிடிக்கணும்?” என்று சுவீட்டி கோபமாகக் கேட்டாள்.

“சுவீட்டி… நீ சமமா இரு… இவ சும்மாவே எகிறுவா…” என்று நித்திலா கூற, “இல்லை நித்தி… இவனை இன்னைக்கி சும்மா விடக் கூடாது…” என்று கூறிக் கொண்டு நித்திலாவின் கையை உதறிவிட்டு பாறையின் உச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த ஹரியை நோக்கி வேகமாகச் சென்றாள் லவி.

லவியின் வருகையை எதிர்பார்க்காத ஹரி சற்று தடுமாற, ஹரி அருகே சென்று லவி செய்த செயலில் சுற்றி இருந்த அனைவரும் லவியை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

நித்திலா தன் கையைத் தலையில் வைத்து நோந்துகொண்டே அங்கிருந்த பாறையில் அமர்ந்தாள்.

லவ்லி லவி வருவாள்…

Next episode on Wednesday Friends… :)

error: Content is protected !!