Imk-epilogue

Imk-epilogue

௩௬(36)

நிறைவு

சிம்மவாசல். ராஜராஜேஸ்வரியின் கம்பீரமான கோபுரத்தின் மேலுள்ள  கலசம் காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு பொன்னாய் மின்னி கொண்டிருந்தது. கோவிலை சுற்றிலும் தென்னை மரங்கள் தூண்களாக  இடவல புறங்களில் நின்றிருக்க, அதன் வாயிலில் உள்ள பூச்செடிகளில் பூக்கள் பல வண்ணங்களில் சிரித்து கொண்டிருந்தன.

அதோடு கோவிலின் பின்புறம் அமைந்த அகண்ட ஆழி காலை கதிரவனின் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பிரதிபலிக்க, அடடா என்னே! இந்த இயற்கையின் அழகு என்று அவற்றை எல்லாம் கண்டு என் உள்ளம் சிலாகிக்கிறது.

அதேநேரம் செவிகளில் ஒலித்து கொண்டிருந்த கடலலையோசையின் தாளகெதியோடு நாதஸ்வரமும் கெட்டிமேள சத்தமும் கலந்து ஒலிக்க, கோவிலுக்குள் நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எண்ணி கொண்டேன். பூமாலை தோரணங்கள் கோவிலின் உள்கோபுரம் முழுக்க அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாகிய அதேநேரம் அவற்றின் வாசம் என் நாசிகளில் புகுந்து மயக்கம் கொள்ளவும் செய்கிறது.

ராஜராஜேஸ்வரி கருவறையில் சர்வஅலங்காரங்களோடு கிரீடம் தரித்திருந்த அழகையும் கம்பீரத்தையும் பார்க்க இரு விழிகள் நிச்சயம் போததாது. பார்த்து கொண்டே இருக்க மனம் ஆவல் கொள், அவளை கண்கொட்டாமல் ரசித்தபடி நான் உள்ளே நுழைந்தேன்.

வாயிலின் சற்று தள்ளி வரவேற்பு வேலையை  தன் அன்னையோடு நின்று திறம்பட செய்து கொண்டிருந்தான் முகில். பட்டு வேட்டி சட்டையில் அவனும் கதாநாயகன் போல்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு நாயகிதான் யாரும் கிட்டவில்லை.

“எதுக்கு சும்மா இருக்கிறவனை உசுபேத்திறீங்க ? சீக்கிரம் உள்ள போங்க ஆத்தரே…நேரமாயிடுச்சு” என்று அவன் என்னை பார்த்து அலுத்து கொள்ள,

“விடு முகில் … அடுத்த எடுக்க போற பார்ட்ல வேணா உனக்கு ஒரு நல்ல ஹீரோயினா பார்த்து செட் பண்ணிடுறேன்” என்றேன்.

“வேண்டாவே வேண்டாம்” என்று அவன் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டு உள்ளே போக சொன்னான்.

“வந்தவங்க கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசு முகில்” என்று தேவி எனக்காக பரிந்து கொண்டு அவர் மகனை முறைக்க, நாம் புன்னகை புரிந்து விட்டு வரவேற்பு தட்டிலிருந்த சந்தனத்தை நெற்றியில் வைத்து கொண்டு ரோஜா மலர்களை தலையில் சூடி கொண்டேன்.

கடைசியாக கற்கண்டை கைநிறைய அள்ளி வாயில் போட்டு கொண்டு அந்த இனிமையான தருணத்தை அனுபவித்தபடி உள்ளே செல்ல, ரகு பரபரப்பாய் மாங்கல்ய தட்டை வந்தவர்களிடம் நீட்டி ஆசிர்வாதம் பெற்று அட்சதையை கொடுத்து கொண்டிருந்தார்.

நானும் என் பங்கிற்கு அந்த மாங்கல்யத்தை பக்தியோடு தொட்டு வணங்கிவிட்டு அட்சதையை எடுத்து கொண்டேன். பின் நான் இருக்கையில் அமர செல்ல எண்ணிய போது என் பார்வையில் தென்பட்டான் இவான் ஸ்மித்.  கோபியர் கூட்டம் சூழ கிருஷ்ணன் போல இவானை சுற்றிலும் இளம் பெண்கள் கூட்டம். அவன் உயரத்திற்கு எத்தனை பேர் சுற்றி நின்றாலும் அவனை மறைக்க முடியாது.

“ஹாய் இவான்!” என்று நாம் பழக்க தோஷத்தில் கை காட்ட அவன் என்னை பார்த்த மாத்திரத்தில் கோபமாகி, அந்த கோபியர் கூட்டத்தை விலகி விட்டு பாய்ந்து கொண்டு என்னிடம் வந்தான்.

“வெய்ட் வெய்ட்… ஒய் டென்ஷன்?” என்று நாம் அவன் உயரத்தை பார்த்து அச்சத்தோடு விலகி நிற்க,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல” என்றவன் அவனின் ஆங்கில பாணியில் கேட்க, நான் திருதிருவென்று விழித்துவிட்டு,  “நோ… இவ்வளவு பாஸ்டா பேசுனா எனக்கு சத்தியமா புரியாது” என்றேன்.

“ஓகே… நான் தமிழ்லயே கேட்கிறேன்… எனக்கு தமிழச்சி மாறியே ஒரு ஹீரோயின் வேணும்…” என்று அவன் சட்டமாய் சொல்ல, ‘அடப்பாவி… இவன் அடங்க மாட்டான் போலயே’ என்று வெளிவந்த மைன்ட் வாய்சை உள்ளே சைலன்ட் மோடில் போட்டு கொண்டேன்.

அவன் முறைப்பாய் என்னை பார்த்து கொண்டு, “முடியுமா முடியாதா?” என்று மீண்டும் கேட்க, “பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமா? வேற இந்த ஜீரோ வால்ட்ஸ்… ட்யுப் லைட்… இதெல்லாம் போட்டா உங்களுக்கு பல்பு எரியாதா?” என்று படபடத்து கொண்டே கேட்டேன்.

“வாட்?” என்று அவன் புரியாமல் பார்க்க வேறுவழியின்றி அவனை சமாளிக்க,  “ஓகே ஓகே… ஒரே மாறி உலகத்தில ஏழு பேர் இருப்பாங்களாம்… அப்படி யாரையாச்சும் தேடி பிடிக்க ட்ரை பண்றேன் பாஸ்” என்றதும் அவன் முகம் கொஞ்சம் சமாதான நிலைக்கு வந்தது.

“சீக்கிரம் தேடி பிடிங்க… ஐ கான்ட் வைட்” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் மீண்டும் அந்த கோபியர்கள் கூட்டதில் சென்று ஐக்கியமாகிவிட, “தப்பிச்சேன் டா சாமி” என்று பெருமூச்சுவிட்டு என் காலியாக இருந்த முன்இருக்கையில் சென்று அமர்ந்தேன்.

என் பார்வை மேடையில் இருக்க, முதலில் விழிகள் சென்று நின்றது மாலையும் கழுத்துமாய் இருந்த மணமக்களிடம்தான். சிம்மாவின் கம்பீரத்திற்கும் மிடுக்கும் அந்த பட்டு வேட்டி சட்டை மிக பொருத்தம். மதியழகி உண்மையில் அழகு பதுமைதான். அதுவும் கல்யாண கோலத்தில் பார்க்க அவள் அத்தனை சௌந்தர்யமாக இருந்தாள்.

ஆனால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் விழகள் நாணமெனும் பெண்மையின் மொழி பேசி கொண்டிருந்தது. சிம்மவிற்கோ அந்த முழு நிலவு எப்போது தன் முழு முகத்தை காட்டும் என்றிருந்தது.

இந்த அழகான காட்சிகளுக்கு இடையில் சம்பந்தமே இல்லாமல் தலையை நுழைத்தார் அமைச்சர் விக்ரம் அவர்கள்.

“ஏன் தங்கச்சி? என் பிரெண்ட் முகம் என்ன அவ்வளவு கர்ணகொடுரமாவா  இருக்கு… நிமிர்ந்தே பார்க்க மாட்டுற” என்று அவன் கேட்ட நொடி, “என்ன ண்ணா நீங்க… அவரை போய்” என்று பதறி கொண்டு நிமிர்ந்தாள் மதியழகி.

முழு மதியின் தரிசனம் கிட்டிய சந்தோஷத்தில் சிம்மா அவள் முகத்தை பார்த்து குறும்புத்தனமாக புன்னகை செய்ய விக்ரம் அப்போது, “எப்படி மச்சான் என் ராஜதந்திரம்” என்று சொல்லி மெச்சுதலாய் தன் காலரை தூக்கிவிட்டு கொண்டான்.

“நண்பேன் டா” என்று புன்னகைத்தான் சிம்மா!  மதிக்கு அவர்களின் தந்திரம் புரிந்து மீண்டும் நாணத்தில் தலை கவிழ்ந்து கொண்டு முகம் மலர்ந்தாள்.

அப்போது தமிழச்சி அங்கே வந்து, “விக்ரம்” என்றழைக்க, நிமிர்ந்தவன் சிவப்பு வண்ண பட்டு புடவையில் அழகாய் நின்று கொண்டிருந்த தன் நாயகியை பார்த்து காதல் ரசம் சொட்ட பார்த்தான்.

அவள் கடுப்பாகி, “பார்த்தது போதும்…டேடை காணோம்… ஃபோன் பண்ணா கூட எடுக்கல… வெளிய யாருகிட்டயாச்சும் பேசிட்டு இருக்காறோ என்னவோ…  பாத பூஜைக்கு… டைமாச்சு கூட்டிட்டு வா” என்றாள் .

“அப்பாவை கூட்டிட்டு வரவா… ஒரு அமைச்சனை இப்படி எடுபிடி வேலை வாங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்ல… இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”

“ஐயோ! முடியல இவன் கூட” என்று அவள் கடுப்பாய் தலையில் அடித்து கொண்டு, “சரி விடு… நான் இவான் கிட்ட சொல்லிக்கிறேன்” என்று சொல்லி கொண்டே, “இவான்” என்று அழைத்தாள்.

“ஏய் ஏய்… கூல்… நானே போறேன்” எஎன்று அவன் அவள் கரத்தை பிடித்து தடுத்துவிட்டு அங்கிருந்து விரேந்திரனை அழைத்து வர சென்றான். அதன் பின் தமிழச்சி பொறுப்பாய் ஐயருக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொடுத்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் பாத பூஜை சடங்கு தொடங்க, ஜோடி சமையதறாய் விரேந்திரனும் அவரின் சரிபாதியுமான செந்தமிழ் நிற்க மதியும் சிம்மாவும் அவர்கள் பாதம் கழுவி பூஜை செய்தனர். அதே போல் ரவிக்கும் அருந்ததிக்கும் அவர்கள் செய்து முடிக்கவும் ஐயர் மாங்கலய தாரணம் செய்ய நாழியானது என்ற கூவ தொடங்கினார்.

அதேநேரம் மணமகனின் சகோதரி விளக்கு எடுக்க வேண்டும்.

“மாசமா இருக்கும் போது விளக்கு எடுக்க கூடாது” என்று சொந்தத்தில் ஒரு பெண் சொல்ல, செந்தமிழும் தமிழச்சியும் என்ன செய்வதென்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“தமிழச்சி மாசமா இருக்காளா? நமக்கு தெரியாம இது எப்ப நடந்தது” என்று யோசித்து கொண்டிருந்த நான் பிறகு அவர்கள் அந்த விளக்கு எடுக்கும் சடங்கை எப்படி பூர்த்தி செய்ய போகிறார்கள் என்று ஆர்வமாய்  பார்த்திருந்தேன்.

செந்தமிழ் வீர் உறவு முறையில் வேறு சிம்மாவிற்கு நெருக்கமான தங்கை முறை யாரும் இல்லை.

செந்தமிழ் யோசித்துவிட்டு பின் அந்த நொடியே கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கை காட்டி வர சொல்லி அழைத்தார்.

யாரந்த பெண் என்று நான் திரும்பி பார்க்க, “அட!  நம்ம ஜெசிக்கா… சும்மா சொல்ல கூடாது… பட்டு புடவையெல்லாம் கட்டி நம்மூர் பொண்ணு மாறியே இருக்காங்க” என்று எண்ணி கொண்டிருக்கும் போதே ஜெஸ்சி அந்த சடங்கை செய்வதில் ஆர்வமானாள்.

சிம்மாவிற்கும் ஜெஸ்சி அந்த சடங்கை செய்வதில் முழு ஆனந்தம். சிறப்பாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே, “எங்க நம்ம இன்னொரு முக்கியமான ஜோடியை காணோம்” என்று யோசனையில் நான் என் பார்வையை சுழற்ற,

ஆஹா! அவர்களும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தார்கள். நம் ஆதர்ஷ தம்பதிகளான ஆதியும் விஷ்வாவும்! குன்றாத காதலும் மனநிறைவும் அவர்கள் முகத்தில் திண்ணமாய் பிரதிபலித்தது.

தாலி கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்த்த கெட்டி மேளம் சத்தம் காதில் ஒலிக்க புது மணத்தம்பதிகளை எழுந்து நின்று அட்சதை போட்டு ஆசிர்வதிக்க நான் எண்ணிய போது அருகிலிருந்த முதியவர் அவரை எழுப்பிவிட சொல்லி உதவி கேட்க, இத்தனை நேரம் அவரை கவனிக்காமல் போனோமே!

மகேந்திர பூபதி. அவர் என் உதவியோடு எழுந்து நின்று தன் பெயரன் பேத்தி சிறப்பாக தங்கள் இல்லற வாழ்வை தொடங்க அட்சதை தூவி வாழ்த்தினார். நானும்தான்.

சிம்மா மதியின் கழுத்தில் மாங்கல்யம் கட்ட கெட்டி மேள சத்தம் அந்த இடத்தை முழுவதுமாய் நிரப்பியது. அவன் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்து நெற்றியில் குங்கமிட பெண்ணவள் மனம் காதலன்… கணவனாக மாறிய அந்த தருணத்தில் சொல்லிலடங்கா இன்பத்தில் மூழ்கி திளைத்தது.

“கங்க்ராட்ஸ் அழகி!… கங்க்ராட்ஸ் டா ண்ணா!” என்று தமிழ்ச்சி பின்னிருந்து வாழ்த்த, அவர்கள் இருவரும் அவளை பார்த்து நன்றி சொல்லி முகமலர்ந்தனர்.

அப்போது ஜெஸ்சி, “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று தன் வாழ்த்தை தீந்தமிழில் திருவள்ளுவத்தில் தெரிவிக்க சிம்மா வியப்போடு,

“ஒ! திருக்குறளையும் கரைச்சி குடிச்சிட்டியா?” என்று கேட்டான்.

“எஸ்…” என்றவள் கெத்தாக சொல்ல, “பாவம் நந்து!” என்று சொல்லி சிம்மா தன் நண்பனின் பரிதாப நிலையை எண்ணி உள்ளுர சிரித்து கொண்டான்.

சடங்குகள் முடிவடைய வாழ்த்து படலம் தொடங்கியது. ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்க வாஷிங்டனில் பார்த்த நம்முடைய நண்பர்களும் சிம்மாவை வாழ்த்த வந்திருந்தனர்.

“வாங்க வாங்க… இராமநாதன் சார்… அஜீஷ்… தேஜா… எழில் நீங்களுமா?” என்று சிம்மா ஆச்சரய்மாக,

“நண்பரோட திருமணத்திற்கு பங்கேற்காமல் எப்படி?” என்றார் எழில் புன்னகையோடு!

“அதானே” என்று அஜீஷ் சொல்ல, “நன்றி சகோ” என்று பூரித்தான் சிம்மா!

இராமநாதன் தங்கள் கையிலிருந்த புத்தகங்களை பரிசாக வழங்கிவிட்டு, “விஜயன் மட்டும் வர முடியல… ஆனா உங்களுக்காக பரிசு அனுப்பியிருக்காரு” என்றார்.

அந்த பரிசை பெற்று கொண்ட சிம்மா, “உங்க எல்லோரையும் பார்த்ததில ரொம்ப சந்தோசம்” என்க, அஜீஷ் முன்னே சென்று நின்று “ஒரு செல்பி எடுத்துக்கலாமே” என்றான்.

ராமநாதன் சிம்மாவின் தோள் மீது கை போட்டு பெருமிதமாய், “தமிழன் டா” என்று சொல்ல மதி உட்பட எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர்.

வாழ்த்து படலங்கள் நிறைவு பெறும் தருவாயில் நாமும் சென்ற அந்த அழகிய தம்பதியை வாழ்த்த எண்ணி அருகில் செல்ல சிம்மாவின் முகம் மலர்ந்து, “வாங்க வாங்க… உங்க நாவல் இருமுனை கத்தி முடிஞ்சுதா?” என்று கேட்க,

“இன்னையோடு இருமுனை கத்தி முடிச்சிடலாம்… ஆனா அதோட அடுத்த பாகத்தில உங்களை மட்டுமே பிரத்யேகமா ஹீராவா வைச்சு” என்று நான் சொல்லி கொண்டிருக்கும் போது,

“ஐயோ! வேண்டாம்” என்று மதி பதறினாள்.

சிம்மா மனைவியை அதிர்ச்சியை பார்க்க, மதி வேகமாய் என் கரத்தை பற்றி தனியே அழைத்து வந்தார். நான் என்னவென்று புரியாமல் பார்க்க,

“அக்கா… ப்ளீஸ் எனக்கு இந்த ட்விஸ்ட் அன் டர்ன்ஸ் எல்லாம் சத்தியமா தாங்க முடியாது… அதுவும் பாம்ப் ப்ளேஸ்ட் ஆக்சிடன்ட் கொலை கொள்ளைன்னு ஐயோ! எனக்கு சொல்லும் போதே ஹார்ட் பீட் எகிறுது…  அதுவும் இல்லாம இருந்து இருந்து இப்பதான் நான் அவர் கூட கஷ்டப்பட்டு சேர்ந்திருக்கேன்… அதுல மண்ணள்ளி போட்டிறாதீங்க” என்று கெஞ்சினாள்.

“அப்படி எல்லாம் ஆகாது” என்று நான் தன்னிலை விளக்கம் கொடுக்க,

“ஆன வரைக்கும் போதும்… இப்படியே முற்றும் போட்டுடுங்க” என்று இறங்கி கேட்டவளை பார்த்து ஒரு பெருமூச்சோடு சரியென்று தலையசைத்தேன். சிம்மாவோ என்னிடம் பேசிவிட்டு அருகில் வந்து நின்ற மதியிடம், “என்ன சொன்ன?” என்று கேட்க,

“ஒன்னும் இல்ல… சும்மா ஒரு சின்ன மேட்டர்” என்று அவள் தலையை குனிந்தபடிஏ பதில் சொல்ல, சிம்மா உடனே என்னை பார்த்தான். நான் நல்ல பிள்ளையாக அவர்களை வாழ்த்திவிட்டு விடைபெற்று கொண்டேன்.

திருமணம் வைபவம் நிறைவாக முடிவடைந்தது.

அன்று இரவு வானில் சந்திரன் உதயமாக, தமிழச்சியின் வீடு வெறிச்சோடி இருந்தது. ஆள் அரவமே இல்லை. எங்கும் எந்தவித சின்ன சத்தமும் கூட எழவில்லை. தனிமையில் மதியழகி அந்த வீட்டை சுற்றி பார்த்து யாருமில்லாததை கண்டு அச்சமுற்றாள்.

திருமணம் முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் சோர்வில் அவள் உறங்கி இப்போதுதான் விழித்தெழுந்தாள். எழுந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. அதற்குள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடியவள் வேகமாய் தன் அறைக்கு சென்று தன் பேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.

சில நொடி நிசப்தத்திற்கு பின்,

“உன்னை காணாத நான் இங்கு நான் இல்லையே…

விதையில்லாமல் வேர் இல்லையே” என்ற பாடலின் ஒலி கேட்க, சிம்மா அவள் முன்னே வந்து கம்பீரமாய் காட்சியளித்தான்.

“பரவாயில்ல மதி… வேற யாருக்கும் கால் பண்ணாம எனக்கே கால் பண்ணிட்ட?” என்று அவன் கேட்க அவள் புரியாமல் அவனை பார்க்க,  அவன் அறைக்குள் வந்து கதவை மூடினான்.

அவன் செய்கையில் அவள் முகம் சிவக்க, “எல்லோரும் எங்க?” என்று படபடப்பாய் கேட்டாள்.

“நம்மக்கான ப்ரைவசியை நமக்காக கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று அவன் சொல்லி கொண்டே அவளை நெருங்கி வர,“என்ன?” என்று அதிர்ச்சியாக கேட்டு அவனை தயக்கமாய் பார்த்தாள்.

அவன் பதில் சொல்லாமல் மேலும் அவளை நெருங்கி வந்தான். காலையில் கட்டியிருந்த மஞ்சள் வண்ண பட்டு புடவை லேசாக கசங்கியிருக்க மல்லிகை சரம் வாடியிருந்தது. இருப்பினும் கூட அவள் அழகில் எந்த குறைபாடு இல்லை.

பேரழகியாகத்தான் திகழ்ந்தாள். அதுவும் அவன் நெற்றியில் இட்ட குங்குமமும் கட்டிய மஞ்சள் தாலியும் அவளுக்கு புதுவிதமான அழகை கொடுத்திருந்தது.

அவளை ரசனையாக பார்த்து கொண்டே முன்னே வர அவள் தலைகவிழ்ந்து அவன் வருகையை விரும்பியவளாகவே நின்றிருந்தாள். பெண்மையும் நாணத்தையும் தாண்டி அவன் மீதான காதல் அவளை பித்து பிடிக்க வைத்திருந்தது.

அவன் மிருதுவாக அவள் இடையை பற்றி இழுத்து அணைக்க அவள் நாணத்தில் தன் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.

“நான் இன்னும் ஒன்னுமே பண்ணல… அதுக்குள்ள வெட்கமா?” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வைத்தான். அந்த பார்வையில் ஒரு விண்ணப்பம் இருந்தது.

அவள் யோசனையாய் பார்க்க, “நான் கேட்டதை மறந்திட்டியா மதி” என்றான்.

“என்ன கேட்டீங்க?” என்றவள் குழப்பமாக, “அந்த பாட்டுக்கு நீ ஆடறதை நான் பார்க்கனும்னு சொன்னேனே” என்றவன் சொல்லி தன் புருவத்தை ஏற்றினான்.

மீண்டும் அவள் நாணம் அவளை பற்றி கொண்டது. அவளுக்கு மனதெல்லாம் ஏதோ செய்ய, “இன்னைக்கு வேண்டாமே” என்றாள் கெஞ்சுதலாய்.

“ப்ளீஸ்… எனக்காக ஆட மாட்டியா?” என்று அவன் ஏக்கத்தோடு அவள் முகம் பார்த்து கேட்க, அவளால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.

“சரி ஆடுறேன்” என்றவள் சொன்ன போதும் அவன் தன் அணைப்பை விடாமல் அவளையே கிறக்கமாய் பார்த்து கொண்டிருந்தான்.

அவள் தவிப்போடு, “என்னை நீங்க விட்டாதானே போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்து ஆட முடியும்” என்றவள் சொல்ல,

“ஆமா இல்ல” என்றவன் அசடு வழிந்து கொண்டே அவளை விட்டு நகர்ந்து தன் அறையின் பின் வாசல் புறமாய் சென்று நிலவை ரசித்து கொண்டிருந்தான். அவன் மதி வரும் வரை அவனுக்கு அந்த வானின் மதிதான் துணை.

மௌனமாய் தன் இல்லற வாழ்வின் கனவுகளோடு அவன் மிதந்து கொண்டிருக்க, மதியின் கொலுசு சத்தம் அவன் ஹார்மோன்களை எல்லாம் தட்டி எழுப்பிவிட்டது. ஆசையாய் அவன் திரும்ப அவள் ஒரு மெல்லிய பொன்நிற கரையோடு கூடிய ஒரு சிவப்பு நிற காட்டன் புடவையில் நின்றிருந்தாள். திருத்தமான முக அமைப்பில் மத்தியில் குங்கும நிற பொட்டு அவனை கட்டி இழுத்தது. அவளின் கரிசல் கூந்தல்கள் காற்றோடு சரசம் புரிந்து கொண்டிருந்தது.

மல்லிகை சரம் அவள் தோளில் தவழ்ந்து விளையாடியது. பார்க்க அவள் உயிருடன் வண்ணம் தீட்டிய ஓவியமாகத்தான் அவனுக்கு தெரிந்தாள். காதலும் மோகமும் சேர்த்து அவனை பாடாய் படுத்த தொடங்கியது.

இதுவரை ஒரு ஓவியனாக அவன் அரைநிர்வாண வடிவத்திலிருந்த பல விதமான பெண் சிற்பங்களை ஊடுருவி பார்த்து வரைந்திருக்கிறான். அப்போதெல்லாம் அந்த அழகின் ரூபம் அவன் மனதை சலனப்படுத்தியதில்லை. ஆண்மை தலைதூக்கியதும் இல்லை.

ஆனால் முதல்முறையாக ஒரு ஆணாக அவன் கண்ணியம் தம் கட்டுபாடுகளை தளர்த்தி கொள்ள, அவன் விழிகள் அவளின் பெண்மையை  இன்னும் ஆழமாய் ஊடுருவி பார்க்க விழைந்தது. அதை அவள் உணராது முழுதாய் நடனமாடும் மனநிலையில் இருந்தாள்.

அவள் தயாரகிவிட்டு அவனிடம் தலையசைத்து ஆடவா என்று அனுமதி கேட்க ஏக்கபெருமூச்சொன்றை வெளிவிட்டு அவன் தலையசைத்தான்.

அவள் அந்த பாடலை ஒலிக்க விட்ட மறுகணம் அவளின் செவ்விதழ்கள்அந்த வரிகளை உச்சரித்தன. அவளின் பாதங்கள் பூமியின் மீது தாளங்கள்வாசித்தன. அவள் விழிகள் பாவங்களால் உணரவுகளுக்கு உயிர் கொடுத்தன. அந்த பாடலும் அதற்கான அவளின் நடனமும் அவனை போதை கொள்ள செய்தது.

தக தக தக
தின தின தின
நக நக நக
திக்கிட தான தான தான
திக்கிட திக்கிட தகின தான
தாக்குடு தான

 

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

……………………………………………

………………..

அவ்வாறு நோக்கினாள்
எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன்நின்று

பார்த்து கொண்டேன்
ஒன்றாக செய்திட

ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து
எதிர்பார்த்து இருந்தேன்

எதிர் பாராமலே…. அவன்
எதிர் பாராமலே அவன்
ஓஓஓ பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்

அந்த வரி முடியும் போது அவன் கரம் அவள் இடையை தனக்குள் சிறையிட்டு அவள் இதழ்களுக்குள் தன் இதழ்களை பாய்ச்சி இருந்தது. அவள் நடனம் நின்று போக பாடல் மட்டும் நிற்காமல் ஒலித்து கொண்டிருந்தது.

இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளாடி

அவன் தீண்டலில் அவள் உலகமே மறந்து போனாள் என்பதுதான் உண்மை. சிம்மாவும் அவள் பெண்மையோடு கூடி அவன் கண்டிராத புது உலகை கொண்டான். அவனும் அவளும் மட்டுமே வாழும் உலகம் அது.

அன்று அவளின் ஓவியத்திற்கு வஸ்திரம் தரித்த அவன் விரல்கள் இன்று முற்றிலும்  நேர்மாறான வேலையை செய்து கொண்டிருந்தது. அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவளின் பெண்மை நெகிழ நாணம் அவிழ்ந்தது.

காமத்துப்பாலும் அகத்திணையும் அடி முதல் நுனி வரை கற்றாலும் அது நடைமுறைப்படுத்தும் போது அவை வெறும் ஆரம்ப நிலை மட்டுமே என்பதை புரிந்து கொண்ட சிம்மாவிற்கு காதலையும் களவியலையும்  இன்னும் ஆழ்ந்து கற்க பேரவா உண்டானது.

இவ்வாறாக அவர்களின் கற்றலும் காதலும் கரைகாணாமல் சென்று கொண்டிருக்க, இனிதே தொடங்கியது அவர்களின் இல்லறம்!

இன்னும் கதை முடியல… ஒரு முக்கியமான நபரை பார்க்காமல் எப்படி?

கமலக்கண்ணனிடம் அந்த சோழர் காலத்து நடராஜர் சிலை வருவதற்கு முன்னதாக அந்த சிலை ஒரு கடத்தல் பொருள்கள் விற்கும் தரகனிடம் கிடைத்தது என்பது முன்னமே சொல்லப்பட்டது.  ஆனால் அந்த சிலை கிடைத்தன் பின்னணி இதோ.

தஞ்சை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அடித்தளம் தோண்டும் போதுதான்  அந்த நடராஜன் வெளிப்பட்டான். அதாவது பூமிக்கு அடியிலிருந்து!

அம்பலத்தரசன் முடிவெடுத்துவிட்டால் யார் அவனை மறைக்க இயலும்? தரிசனம் தரவேண்டும் என்று யாதுமானவன் அன்றே முடிவெடுத்துவிட்டான்.

இப்போது அந்த ஆடலரசன் டில்லி மாநகரத்தில் புதுப்பிக்கப்பட்ட மத்திய தொல்லியல் துறை அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தமிழனின் மாட்சிமையை நிருபித்தபடி நின்று கொண்டிருந்தான்.

**********நிறைவு***********

இந்த கதையில் குறிப்பிடப்பட்ட இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே! ஆனால் கதையில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் யாவும் ‘சிலை திருடன்’ அல்லது ‘Idol of theft’ எஸ். விஜயகுமார் ஆங்கிலத்தில் எழுதிய மொழிபெயர்க்கப்பட்ட  நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் பிறந்து வளர்ந்த விஜயகுமார் தற்போது சிங்கபூர் வாழ் தமிழன். சிலை திருட்டை ஒழிப்பதில் அவருடைய பங்கு மிக அதிகம். poetryinstone என்ற பெயரில் அவர் நடத்தி கொண்டிருக்கும் இணையத்தளம் மற்றும் முகநூல் குழு சிலை கடத்தலை ஒழிக்க முக்கிய பங்காற்றி கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க நிஜ நாயகன் எஸ். விஜயகுமார் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

இந்த கதையை எழுத முதல் வித்திட்ட மரியாதைக்குரிய ஆதிம்மா அவர்களுக்கு  நன்றி மற்றும் இந்த கதைக்கு தொடர்ந்து ஆதரவளித்த வாசக பெருமக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

 

 

 

 

 

 

error: Content is protected !!