ENE–EPILOGUE

எபிலோக்

இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட

காரணம் இருக்கிறதே

கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி

அர்த்தம் கிடைக்கிறதே

தானு பிடிவாதம் பிடித்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தாலும் இருவரும் தனி தனி வீட்டில் தான் வசித்தார்கள். விபா எவ்வளவு கெஞ்சியும் ஒன்றாக இருக்க ஒத்துக் கொள்ளவில்லை தானு. தொட்டு கூட பேச மாட்டேன் என விபா துண்டை போட்டு தாண்டியும் அவள் மசியவில்லை. எப்பொழுதும் போல் சனிக்கிழமைகளில் மட்டும் தான் தேவி தரிசனம் கிடைத்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் படித்து முடிக்கும் வரை பொறுத்துக் கொண்டான் விபா. கடைசி பரீட்சை முடிந்த மறுநாளே திருமணம் செய்து கொண்டான்.

திருமணம்  இந்தியாவில் வட பழனி கோயிலில் சொந்தங்கள் மட்டும் கலந்து கொள்ள சிம்பிலாக நடைப்பெற்றது. விபாவுக்கு யாரும் இல்லாததால் கற்பகமே இருவருக்கும்  தாயாய்  நின்று திருமணத்தை   நடத்தி வைத்திருந்தார். சென்னையில் விபாவின் தொழில் துறை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்குமாக பிரமாண்டமாக ஒரு வரவேற்பும் நடைப்பெற்றது.

டேனி, தானுவின்  திருமணத்துக்கு வர முடியாத சூழ்நிலை. பரீட்சைகள் அசையமுடியாதபடி அணிவகுத்து நின்றன. மூக்கை சிந்திய தானுவிடம் ரிஷப்சனுக்கு வருவேன் என உறுதி அளித்திருந்தான்.  முடித்துவிட்டு வரவேற்புக்கு கோலாலம்பூர் வந்திருந்தான். சொன்னபடியே வந்தும் விட்டான்.

அவன் அப்பா தான் அவனை அழைக்க வந்திருந்தார்.
“டேட்” என கட்டிக் கொண்டான் அவரை.
“வெல்கம் மை சன்”
“எப்படி பா இருக்கீங்க?”
“குட் டேனி. நீ எப்படி இருக்க?” என மகனை ஆராய்ச்சியாக பார்த்தார் ஓங்.
“ எப்படி இருக்கேன், நீங்களே பார்த்து சொல்லுங்களேன்” என சிரித்தான்.
“ உன் உடல் நலத்த பத்தி கேட்கலப்பா. உன் மன நலத்தைப் பத்தி தான் கேட்குறேன். போன்லயும் எதையும் சொல்ல மாட்டிக்கிற. டான்யா வேற யாரையோ கல்யாணம் செய்யுறான்னு கேள்விபட்டவிடனே எனக்கு மனசே ஆறலப்பா”
“டேட், நீங்க கவலை படற அளவுக்கு ஒன்னும் இல்ல. அவ காதலிச்சவனையே கல்யாணம் செய்யறதுல நாம சந்தோஷம் தான் படனும்”
“என் மகன்னு வரப்போ, மத்தவங்க சந்தோஷத்த விட எனக்கு உன் சந்தோஷம் தான்பா முக்கியம்”
அவர் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“ வாங்க டேட், ஒரு காபி சாப்பிட்டு பேசலாம். அதுக்கு அப்புறம் இந்த மேட்டர பத்தி என்னிக்குமே நாம பேச கூடாது. ஷி இஸ் வேணுஸ் வைப் நவ்” என காபி ஷோப்புக்கு தன் தந்தையை அழைத்து சென்றான்.

காப்பியை உறிஞ்சியவாறே தந்தையை கவனித்தான். இந்த சில வருடங்களில் இன்னும் வயதான மாதிரி தோற்றமளித்தார் அவர். சீக்கிரம் திரும்பி வந்து அவரது பிஸ்னசை கவனித்துக் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டான்.

“டேட், என் கிட்ட ஏற்கனவே நீங்க சொன்னது ஞாபகம் இருக்கா? தூரமா இருக்கும் போது தான் இது நிஜ காதலா இல்ல இன்பாக்சுவேஷனா தெரியும்னு சொன்னீங்க. இப்போ நான் நல்லா இதை புரிஞ்சுகிட்டேன். அவ மேல நான் வைச்சிருந்த அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் தப்பா காதல்னு நான் முடிவு பண்ணிட்டேன். அந்த அடலாசண்ட் வயசுல இது தான் காதல்னு நினைச்சுட்டேன். இப்ப யோசிச்சு பார்த்தா, டான்யாவை ஒரு காதலியா என்னால கண்டிப்பா ஏத்துக்க முடியாதுன்னு தோணுது டாட். ஓபனா சொல்லுறேன், அவளை கிஸ் பண்ணுறதையோ, இல்ல அதுக்கும் மேல போறதையோ என்னால இமேஜின் பண்ணி கூட பார்க்க முடியல டேட். இந்த பிரிவுல நான் உணர்ந்தது பாசத்தை மட்டும் தான் காதல இல்லை. தேங்க் கோட்! நான் இத பத்தி அவ கிட்ட பேசனது இல்ல. அப்பவே ஒரு தயக்கம். அதுவும் நல்லதா போச்சு. அவ கண்டிப்பா ஹர்ட் ஆகியிருப்பா. அதோட அவ காதலையும் மறைச்சு என்னையும் ஏத்துக்க முடியாம தவிச்சுருப்பா. அவ வேணுவ லவ் பண்ணறேன்னு சொன்னப்ப, மனசுல ஒரு வலி இருந்தது. ஆனா காதலி போய்ட்டான்னு இல்ல, என் தோழி என்னை பிரிஞ்சுருவாளோன்னு தான் இருந்தது. எங்க பிரண்ட்ஷிப்ப யாராலும் பிரிக்க முடியாதுன்னு மனச தேத்திக்கிட்டேன். அவ சந்தோஷம் தான் என் சந்தோஷம் டேட்.”

மகனின் தெளிவான பதிலை கேட்டு ஓங் மன நிம்மதி அடைந்தார். என் மகன் பெரிய மனுஷன் ஆயிட்டான் என்ற பெருமிதமும் அவரிடம் தோன்றியது.

“ரொம்ப சந்தோஷம்பா. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. டான்யா உனக்கு நீல கலருல ஷெர்வானி சூட் வாங்கி குடுத்துருக்கா. வீட்டுல தான் இருக்கு. கண்டிப்பா அதை தான் போட்டுட்டு வரனும்னு சொல்லி இருக்கா. நாம கிளம்பலாம் டேனி”

 

ஓர்கிட் பால்ரூம், பார்க் ரோயல் ஹோட்டேல் கோலாலம்பூர்

உள்ளே நுழைந்தவர்கள் தோவலோகத்துக்கு தான் வந்துவிட்டோமோ எனும் அளவுக்கு ஜொலிஜொலித்தது ஓர்கிட் பால்ரூம். வாசலிலேயே விபாவும் தானுவும் அந்தி சாயும் நேரம் கடற்கரையோரம் கைகோர்த்து நிற்கும் ஆளுயர படம் வந்தவர்களை வரவேற்றது. சான்டிலியர் விளக்குகள் கலர் கலராய் வண்ணங்களை வாரி இறைக்க, வானவில் வர்ணத்தில் திரைச்சீலைகள் ஹாலை சுற்றி படர்ந்திருக்க, நடைப்பாதையில் சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டு வருபவர்களை வா வாவென அழைத்தது. மேடை பூக்களாலே அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளித்தது. அதன் நடுவே மணமக்கள் அமருவதற்க்கு அழகிய வேலைப்பாடு கொண்ட நாற்காலி போடப்பட்டிருந்தது. சரியாக ஏழு மணிக்கே விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். வந்தவர்களை கற்பகமும், லெட்சுமியும் வரவேற்று அமர வைத்தனர். டெனியும், பிரபுவும், தருணும் பம்பரமாக சுழன்று மற்ற வேலைகளை கவனித்தனர். எட்டு மணிக்கு பெண்ணும் மாப்பிளையும் ஹாலுக்கு நுழைந்த போது, டிஜே குழுவினர் பாட்டைப் போட்டு அசத்திவிட்டனர். பாடலோடு நடன கலைஞர்கள் முன்னே ஆடி வர, அவர்கள் பின்னால் விபாவும் தானுவும் சிரித்த முகத்துடன் வந்தனர்.

“கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு
ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு”

விருந்தினர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரமாக அவர்கள் இருவரையும் வரவேற்றார்கள். தங்க நிற வேலைப்பாட்டுடன் கூடிய நீல சேலையில் தானு தகதகவென மின்னினாள். நீலமும் வெள்ளையும் கலந்த ஷெர்வானியில் கம்பீரமாக வந்த விபா எல்லோருடைய கண்ணையும் கவர்ந்தான். என்ன ஒரு ஜோடி பொருத்தம் என வந்தவர்கள் எல்லாம் அசந்து போய் விட்டார்கள்.

மணமக்கள் மேடையில் வந்து கேக் வெட்டி, இருக்கையில் அமர்ந்தவுடன் விருந்து கோலாகலமாக ஆரம்பித்தது. ஒரு பக்கம் காதுக்கு உணவாக இன்னிசை நிகழ்ச்சி, மறு பக்கம் வயிற்றுக்கு உணவாக விருந்து என தருண் தடபுடல் படுத்தி இருந்தான்.

“தானும்மா! உங்க அண்ணன் அசத்திட்டான். நான் செலவை பாதி ஏத்துக்கறேன்னு சொன்னதுக்கு கூட முடியாதுன்னுட்டான்”

“நானும்தான் சொன்னேன் இவ்வளவு செலவு எதுக்குன்னு. கேட்டாத்தானே. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்கன்னு சென்டிமென்ட்ல கை வச்சிட்டான்”

“சரி விடு, அவன் கல்யாணத்துக்கு நாம அசத்திறலாம்”

“வேணு, இந்த சட்டை ட்ரை பண்ணப்போ அவ்வளவு நல்லா இல்லைன்னு தானே உனக்கு எடுத்தேன். இப்ப பார்க்க ஜோரா இருக்கியே.”

“ஏன்டி ஏன்? நல்லா இல்லாத சட்டையையா செம்மையா இருக்குன்னு வாங்கி குடுத்த?”

“இன்னிக்கு, வந்தவங்கள உபசரிக்கறத பார்ப்பனா? இல்ல எவளாவது உன்னை சைட் அடிக்கிறாளான்னு பார்ப்பனா? அதான் இதை வாங்குனேன். ஆனாலும் எதை போட்டாலும், உன் அழகு மட்டும் குறைய மாட்டிக்குதுடா என் புருஷா”

கலகலவேன சிரித்தவன்,

“ரதி மாதிரி என் பொண்டாட்டி கூட இருக்கறப்போ, பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ங்கற மாதிரி நானும் அழகா தெரியறனோ என்னவோ” என ஆசையாக அவளைப் பார்த்தான் விபா.

“ஜொள்ளு விடறத கொஞ்சம் நிறுத்து. ஆளுங்க சாப்பிட்டுட்டு மொய் குடுக்க வராங்க.” என சிரித்தாள் தானு.

“கல்யாணம் ஆன இந்த ஒரு வாரத்துல நல்ல நேரம் இல்லைன்னு உன்னை என் கண்ணுலயே காட்டுல. இப்ப கூட பார்க்காதேன்னா எப்படி தானும்மா. அதெல்லாம் முடியாது” என முறுக்கிக் கொண்டான் விபா.

“டேய் வேணு, என் மானத்த வாங்காதே. என் கூட படிச்சவங்கலாம் வராங்க. முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிக்க” என அவன் கன்னத்தைப் பிடித்து சமாதானம் செய்தாள் தானு.

அவர்கள் இருவரையும் கீழே இருந்து பார்த்த கற்பகமும், தருணும் தங்களுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர்.

விருந்து முடிந்து அனைவரும் கிளம்ப இரவு பதினொன்றுக்கும் மேல் ஆகி விட்டது. இன்றே நல்ல நாளாக இருந்ததால், மணமக்களுக்கு அந்த ஹோட்டலிலே க்ராண்ட் சூட் புக் செய்து கொடுத்திருந்தான் தருண். வந்திருந்தவர்களிடம் விடைப் பெற்று கொண்டு தங்களது அறைக்கு சென்றனர் விபாவும் தானுவும்.

ஏற்கனவே அவர்களின் லக்கேஜ் பேக் அங்கே வைக்க பட்டிருந்தது. நாளை காலை இருவரும் சுவிசலார்ந்துக்கு தேன் நிலவு செல்ல ஏற்பாடு செய்திருந்தான் விபா. உள்ளே நுழைந்த தானு பெட்சைட் டேபிலில் இருந்த பால் சொம்பைப் பார்த்து சிரித்துவிட்டாள்.

‘எல்லாருக்கும் ஒரு கவலைனா எங்க அம்மாவுக்கு ஒரு கவலை. சொம்பு இல்லாம முதலிரவு நடக்க கூடாதா என்ன’

கட்டிலில் அமர்ந்தவள் விபா கதவின் அருகிலே நின்று கதவை திறந்து திறந்து மூடுவதை கேள்வியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உள்ளுக்கு வராம அங்க என்ன செய்றீங்க?”

“கதவு நல்லா லாக் ஆகுதான்னு பார்க்குறேன். உங்க தாத்தாவ நம்ப முடியாது. திடீருன்னு வந்து நிப்பாரு.” என சீரியசாக சொன்னான் விபா.

அவன் முகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் தானு.

“களைப்பா இருக்காருன்னு அவர அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க வேணு. நீங்க இங்க வாங்க”

“என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது”

“நீங்க என் கண்ணான கணவரா ஆகிட்டீங்களாம். இனிமே இப்படி தான் மரியாதையா கூப்புடனும்மாம். கற்பு ஆர்டர்”

சிரித்துக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தவன்,

“அவங்க முன்னாடி மட்டும் மரியாதையா கூப்பிடு. மத்த நேரமெல்லாம் எப்போதும் மாதிரியே இரு தானு. எனக்காக எதையும் மாத்திக்க வேணாம்”

“நான் மாறிட்டா பூமி தலைகீழா சுத்த ஆரம்பிச்சுரும். அதனால நீ பயப்படாத வேணு. நான் இப்படியே தான் இருப்பேன்” என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள் இடிப்பில் கை வைத்து இன்னும் நெருக்கி அமர வைத்துக் கொண்டவன்,

“இப்பவாச்சும் ஐ லவ் யூ வேணுன்னு சொல்ல மாட்டியா தானும்மா?” என ஏக்கமாக கேட்டான்.

கண்கள் லேசாக கலங்க,

“நான் சொன்னாதான் தெரியுமா வேணு, உன்னை நான் எவ்வளவு லவ் பண்ணுறேன்னு. நீதான் என் உயிர், உணர்வு, ஆன்மா, எல்லாமே. ஐ லவ் யூ வேணு” என்றவள் அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள். அவள் ஆரம்பித்த முத்தத்தை அவன் தான் முடித்து வைத்தான். மெல்ல மெல்ல அவளை தன் வசமாக்கி கொண்டிருந்தவனை,

“வேணு, பால் குடிக்கல. நிப்பாட்டு வேணு. பால் பால்” என என்ன முயன்றும் தானுவால் அவனை நிறுத்த முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தியவன் கதவைப் பார்த்து முறைக்க ஆரம்பித்துவிட்டான்.

(உங்கள தாங்க முறைக்கிறான். முதலிரவுல பொண்டாட்டிகிட்ட ஜால்சா கூட பண்ண முடியாம நீங்க எல்லாம் தொடர்ந்து வந்தா அவனும் என்னதாங்க செய்வான். போங்க போய் வேற வேலை வெட்டி இருந்தா பாருங்க)

தானுவும் விபாவும் தேன்நிலவு கிளம்பியவுடன், இன்னும் இரு நாட்கள் பெற்றோருடன் இருந்து விட்டு ஆஸ்திரேலியா கிளம்பினான் டேனி. செக்கின் முடித்துவிட்டு வெய்ட்டிங் ரூமில் அமர்ந்திருந்தான். தாகமாக இருந்ததால் மினரல் வாட்டர் வாங்கலாம் என எழுந்தவன்,தன் முன்னே ஒரு பெண் பேக்கை தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு போவதை சிரிப்புடன் பார்த்திருந்தான். ஹேன்ட் பேக்குடனும் ட்ரோலி பேக்குடனும் போராடியவள், கையில் பிடித்திருந்த பாஸ்போர்டை தவற விட்டிருந்தாள். நடந்து சென்று அதை கையில் எடுத்த டேனி, போர்டிங் பாசை பார்த்து,

“டரண்யாஸ்ரீ (தரண்யாஸ்ரீ) சுந்தரம்” என அழைத்தான்.

திரும்பி பார்த்தவளை கண்ட டேனியின் இருதயம் ஒரு நிமிடம் நின்று மறுபடியும் துடித்தது. அசப்பில் தானுவைப் போலவே இருந்தவள், சோடபுட்டி கண்ணாடியோடு , வெள்ளை வெளேரென்ற நிறத்தில் கொலுக் மொலுக்கேன இருந்தாள் தரண்யாஸ்ரீ, சுந்தரத்துக்கும் மோனாவுக்கும் பிறந்த கடைக்குட்டி. டேனியின் கைகள் தானாக பியானோ வாசிக்க ஆரம்பித்தன.

நான்கு வருடங்களுக்குப் பிறகு,

சென்னை

“அப்பா செல்லத்துக்கு பசி எடுத்துருச்சா? நீங்க வாங்க கீழ போலாம். அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என தன் மூன்று வயது மகள் காவ்யாஸ்ரீயைத் தூக்கிக் கொண்டான் விபா.

“அப்பா சாயாங். பாப்பாக்கு பாலு. பசிக்குது” என அவனிடம் செல்லம் கொஞ்சி கொண்டே சென்றாள் மகள். அவள் அப்பா செல்லம். எல்லா விஷயத்துக்கும் அப்பா தான் வேண்டும். அவள் செய்யும் அலப்பறையை தானுவால் தாங்கி கொள்ளவே முடியாது. தானுவை விபாவின் பக்கத்தில் நெருங்கவே விடமாட்டாள். அம்மாவுக்கும் மேல் ரவுடி அவள்.

பால் கொடுத்து பிள்ளையை மறுபடியும் அறைக்கு தூக்கி வந்தான் விபா. கட்டில் காலியாக இருந்தது. பெட்சைட் டேபிளில் வண்ணப் பேப்பரில் சுற்றி வைத்திருந்த சிறு பரிசு பெட்டி அவன் கவனத்தை ஈர்த்தது. ஆமாம், இன்று விபாவின் பிறந்த நாள். மகளை கட்டிலில் அமர வைத்தவன், அவளை சுற்றி தலையணைகளை அடுக்கி விட்டு பொம்மைகளையும் எடுத்துப் போட்டான். அவள் விளையாட ஆரம்பித்ததும், அந்த பரிசை திறந்து பார்த்தவன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.

“தான்யாஸ்ரீ!!!!!” அவன் செய்கையை பாத்ரூம் கதவை சின்னதாக திறந்து வைத்துக் கொண்டு பார்த்து கொண்டிருந்த தானு, கதவை மூடி தன்னை சமன் செய்து கொண்டாள்.

‘முழுசா பேர் சொல்லி கூப்பிடுறான். செம்ம கோபத்துல இருக்கான் போல. இங்கயே கொஞ்ச நேரம் இருப்போம்’ என உள்ளேயே இருந்தாள்.

பாத்ரூம் கதவை படபடவென தட்டியவன்,

“கதவை திறடி” என வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.

பட்டேன கதவை திறந்தவள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

கையில் இருந்ததை ஆட்டி,

“என்னடி இது?” என ஆத்திரமாக கேட்டான் விபா.

“உனக்கு என்னோட பிறந்த நாள் பரிசு. பார்த்தா தெரியலையா?  ப்ரேக்னசி டெஸ்ட் ரிசால்ட். ரெண்டு கோடு காட்டுது. இன்னும் புரியலையா. நான் முழுகாம இருக்கேன். இந்த தமிழாச்சும் புரியுதா?” என மிதப்பாக கேட்டாள்.

“எப்படி நடந்துச்சு?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான் விபா.

“ஏன், உனக்கு தெரியாதா? தினந்தோரும் ராத்திரி என் தூக்கத்தைக் கெடுக்கறப்போ இது நடக்கும்னு தெரியாதா?” அவளும் சிலிர்த்துக் கொண்டாள்.

“கதைய மாத்தாதடி. போன தடவை பாப்பா பொறக்கறப்பவே நீ என்ன பாடு பட்ட. இனிமே நமக்கு பேபி வேணா, நான் ஓப்பரேஷன் பண்ணிக்கிறேன்னு சொன்னனா இல்லையா? மேடம் என்ன சொன்னீங்க? அதெல்லாம் வேணாம், நான் பில்ஸ் சாப்பிட்டுக்கிறேன். நீங்க எதுவும் செய்யாதீங்கன்னு சொன்னதானே. அப்படியும் உன்னை நம்பாம, நான் தானே காலையிலே உனக்கு மருந்து குடுத்து தண்ணியும் குடுப்பேன். பிறகு எப்படிடி?”

“நீ குடுத்துட்டு, அந்த பக்கம் போனவுடனே, நாக்கு கீழ வச்சிருந்த மருந்த நான் இந்த பக்கம் துப்பிருவேன். பாப்பாக்கு மூனு வயசு ஆகட்டும்னு தான் வெயிட் பண்ணேன். அதோட சிசேரியன் செஞ்ச உடம்பு, டாக்டர் மூனு வருஷம் கேப் விட சொன்னாங்க. இல்லைன்னா மறு வருசமே பெத்துருப்பேன்”

“ஏன்டி ஏன்? போன தடவை பத்து மணி நேரம் லேபர் வார்ட்ல நீ பட்ட கஸ்டத்தைப் பார்த்தும் இதுக்கு நான் எப்படிடி ஒத்துக்குவேன்?” பயத்தில் தன்னவளை இருக அணைத்துக் கொண்டான் விபா.

“நீ இருக்கறப்ப எனக்கு என்ன பயம் வேணு. அந்த சமயத்துல எங்க ரெண்டு பேரையும் எப்படி பாத்துக்கிட்ட நீ. இன்னும் பத்து பிள்ளைங்க கூட பெத்துக்குவேன்.”

“தொலைச்சி கட்டிருவேன் உன்னை. இது தான் கடைசி. இன்னும் பிள்ளைங்க வேணும்னா, தாய் தகப்பன் இல்லாம எத்தனை பிள்ளைங்க இருக்காங்க. அவங்களை எடுத்து வளர்ப்போம். இனிமே நோ ரிஸ்க். புரியுதா தானும்மா”

“எனக்காக நீ பார்த்து பார்த்து செய்யுறப்போ, உனக்காக நான் இத கூட செய்யமாட்டேனா வேணு? சரி. இந்த பிள்ளை தான் கடைசி. இனிமே வளர்த்துக்கலாம்” என ப்ராமிஸ் செய்தாள் தானு.

அலேக்காக அவளை தூக்கி கொண்டவன், கட்டிலில் கொண்டு வந்து படுக்க வைத்தான்.

“இனிமே கவனமா இருக்கனும். பிள்ளை பிறக்கற வரைக்கும் ஹாஸ்பிட்டல் போக வேணாம். அம்மாவை நம்ப கூட வந்து இருக்க சொல்லு. உங்க அண்ணன் மகனுக்கு தான் ஒரு வயசு ஆகுதே. அண்ணி தனியா சமாளிச்சிக்குவாங்க.”

“சரி கற்பு கிட்ட சொல்லுறேன். ஹோஸ்பிட்டலுக்கு லீவ் போட மாட்டேன். டெலிவரி கிட்ட வரப்போ பார்த்துக்கலாம் வேணு. கண்ணாடி மாதிரி என்னை தாங்காதே. போன தடவை என்னை நடக்க கூட விடல. அதான் டெலிவரி பிரச்சனை ஆயிருச்சு. பாப்பாவை மட்டும் நீ பார்த்துக்க என்னை நான் பார்த்துக்குவேன்”

“அதெல்லாம் முடியாது. நீ தான் என் முதல் பாப்பா. அப்புறம் தான் காவ்யா”

சிரித்தபடி விபாவின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள் தானு. இருவரும் கொஞ்சி கொண்டிருந்த வேளையில், படீரென ஒரு அறை விழுந்தது தானுவுக்கு.

“என் அப்பா. எட்டப் போ” என இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள் காய்வாஸ்ரீ.

“முதல்ல எனக்கு தான் அப்பா. அப்புறம் தான்டி உனக்கு” என மகளிடம் மல்லுக்கு நின்றாள் தானு.

மகளா அசருவாள்? ஒட்டி இருந்த தாய் தகப்பன் கன்னங்களுக்கு நடுவில் கையைக் கொண்டு வந்து பிரித்துவிட்டவள்,

“என் அப்பா. என் அப்பா, என் அப்பா” என உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்து விட்டாள். எழுந்து நின்று தன் இரு குழந்தைகளையும் இரு பக்கமாக அணைத்துக் கொண்டான் விபா. அவன் முகமெங்கும் புன்னகை.

இரு மாதங்களில் டேனியின் திருமணத்திற்காக மீண்டும் கோலாலம்பூருக்கு பயணித்தது விபாவின் குடும்பம். தானுவுக்கு லேசாக வயிறு தெரிய ஆரம்பித்திருந்தது. அவள் சொன்னதையும் கேட்காமல் மீண்டும் அவளை தாங்கு தாங்கென தாங்கினான் விபா.

சைனீஸான டேனியை மணந்து கொள்ள தரண்யாவின் குடும்பத்தில் ஒத்துக் கொள்ளாததால் அவள் வீட்டை விட்டு வந்திருந்தாள். அசப்பில் தன் மகளை போலவே இருந்த முன்னாள் கணவரின் மகளை ஏற்றுக் கொண்டு அவளுக்கு தாயாக கற்பகம் தான் இந்த திருமணத்தை நடத்துகிறார். அவளும் பாசம் காட்டிய கற்பகத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். தானுதான் விபாவிடம் புலம்புவாள், என்னை விட எங்க அம்மாவுக்கு அவ தான் பெருசா போயிட்டா என்று. ஆனால் நேரில் நல்லபடியே நடந்து கொள்வாள் தானு. அதுவும் தன் உயிர் நண்பனின் காதலி, அதற்காகவே பொறாமையை ஒதுக்கி சுமூகமாக பழகுவாள். தரண்யாவும் அக்கா அக்கா என இவளிடம் ஒட்டிக் கொள்வாள். தானுவிடம் சண்டை போடும் காவ்யா கூட தரண்யாவை சித்தி சித்தி என சுற்றி வருவாள். தரண்யாஸ்ரீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டான் விபா. பார்த்தால், மச்சினிய பார்ப்பியா,பார்ப்பியா என தனிமையில் வெளுத்து விடுவாள் தானு.

அவர்கள் கற்பகத்தின் வீட்டை அடைந்ததும், வீடே அல்லோல கல்லோலம் பட்டது. பிரபுவும் பானுஜாவுடனும், தன் இரு வயது இரட்டை ஆண் பிள்ளைகளோடும் வந்து விட்டான். எல்லோருக்கும் பெரியவளாகிய காவ்யா தான் மற்ற மூவரையும் அதட்டி உருட்டிக் கொண்டிருந்தாள். தருணும் வேலைக்கு லீவ் போட்டு விட்டு கல்யாண வேலைகளை கவனித்தான்.

எப்பொழுதும் போல் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு, அண்ணி இதை கொண்டு வாங்க அதை கொண்டு வாங்க என அதிகாரம் செய்து கொண்டிருந்தாள் தானு. தருணின் மனைவி தருணுக்கு மேல் அவனது தங்கையிடம் பாசமுள்ளவள். பெண் பார்க்க வந்த போது, தருணுக்கு முன், எனக்கு அண்ணிய புடிச்சுருக்கு என சொல்லி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தவளே அவள் தான்.

எல்லோரும் தேநீர் அருந்தி, ஆசுவாசபடுத்தி கொண்ட போது கற்பகம் தான் குரல் கொடுத்தார்,

“எல்லாரும் குளிச்சுட்டு வாங்க. தாய் வீட்டு நலுங்கு வைக்கனும். தானு நீ டேனி வீட்டுக்கு போய் அங்க நலுங்க பார்த்துக்க. இங்க நாங்க பார்த்துகுறோம்” என விரட்டினார்.

நாளை காலை சர்ச்சில் மோதிரம் மாற்றி, இரவில் மண்டபத்தில் தாலி கட்டி கல்யாணம் செய்வதாக ஏற்பாடு.

விபாவும், தானுவும் தங்கள் மகளோடு டேனியின் வீட்டை அடைந்த போது, வாசலுக்கே வந்து தன் தோழியை அணைத்துக் கொண்டான் டேனி. விபாவுக்காக மட்டுமில்லாமல் டேனிக்காகவும் சண்டை போடுவாள் காவ்யா. அவர்கள் இருவரின் நடுவில் புகுந்து கொண்டவள்,

“டேனி!!!! கேரி மீ” என கையை நீட்டிக் கொண்டே நின்றாள். ஆசையோடு அவளை தூக்கி அணைத்துக் கொண்ட டேனி,

“மை லிட்டல் ஏஞ்சல்” என கொஞ்சினான்.

அவனுக்கும் நலுங்கு வைத்தவர்கள், சிறிது நேரம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“நீ பயங்கரமான ஆளுடா டேனி. ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்த புள்ளைக்கு காதல் பாடம் சொல்லி குடுத்துட்டீயே” என கலாய்த்தாள் தானு.

வெட்கத்துடன் சிரித்தவனை,

“டேய் வைட்டு, வெட்கத்துல கூட நீ அழகாதான்டா இருக்க. அதான் என் அம்சமான மச்சினி கவுந்துட்டா” என வம்பிழுத்தான் விபா. அதற்கு தானுவிடம் ஒரு முறைப்பையும் பெற்று கொண்டான்.

‘நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிறா? இந்த பார்வை இன்னும் ஒரு வாரத்துக்கு வெளிய படுன்னு சொல்லுற பார்வையாச்சே. எப்படிடா சமாதான படுத்துவது’ என விழி பிதுங்கினான் விபா.

“நீ இல்லைன்னா கண்டிப்பா என் காதல் நிறைவேறி இருக்காது டான்யா. ஒவ்வொரு தடவை அவ என்னை வேணாம்னு சொல்லுறப்பையும் நீ குடுத்த மோட்டிவேஷன் தான் என்னை மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்க வச்சது. யூ ஆர் மை பில்லர் டான்யா.” என தன் தோழியைக் கட்டிக் கொண்டான்.

‘பொசுக்கு பொசுக்குன்னு என் பொண்டாட்டிய கட்டிப் புடிச்சுக்குறானே. இதெல்லாம் நான் ஒன்னும் கேட்க கூடாது. வாய் தவறி ஒரு வார்த்தை சொல்லிட்டா மட்டும் டார்ச்சர் பண்ணிருவா’ என கடுப்பில் உட்கார்ந்திருந்தான் விபா. அவன் மகளோ இன்னும் ஒரு படி மேலே போய் நண்பர்கள் இருவரையும் பிரித்து விட்டு டேனியின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

மறுநாள் அமைதியாக சர்ச் வெட்டிங் நடந்தது. இரவில் வேதங்கள் ஓத மங்கள நாணை தரண்யாவின் கழுத்தில் கட்டினான் டேனி. கற்பகம் தான் தரண்யாவை தாரை வார்த்துக் கொடுத்தார். ஓங்கும் கேத்ரீனும் மகனின் திருமணத்தைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். விருந்தோடு லைவ் பேன்டும் ஏற்பாடு செய்திருந்தனர். சம்பிரதாயங்கள் முடிந்து சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் லைவ் பேன்ட் கச்சேரி பார்க்க அமர்ந்தார்கள்.

மேடையில் ஏறிய விபா, தானுவையும் மேலே வர சொல்லி சைகை காட்டினான். அவள் பின்னோடு காவ்யா, தருணின் மகன், பிரபுவின் மகன்கள் எல்லோரும் ஏறினார்கள். தானு கிட்டாரை கையில் எடுக்க விபா மைக்கை சரி பார்த்தான். பிள்ளைகள் அவர்கள் அருகில் வரிசையாக நின்று கொண்டார்கள்.

மியூசிக் ஆரம்பிக்கும் போதே, கீழே இருந்து பிரபு,

“பேமிலி பாட்டா மச்சான்? கலக்கு ராசா நீ” என கத்தினான்.

சிரித்துக் கொண்டே, தானு கிட்டாரில் சுருதி ஏற்றுவதற்காக காத்திருந்தான் விபா. பின்பு அவள் வாசிக்க, இவன் பாட ஆரம்பித்தான். குழந்தைகள் அவர்கள் இஸ்டத்துக்கு ஆட ஆரம்பித்தார்கள்.

“காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும்,நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்,
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் கண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே …கண்ணே”

 

என உருக்கமாக தானுவைப் பார்த்து பாடி நிறுத்தியவன், மைக்கை தூக்கி டேனியிடம் வீசினான். அழகாக கேட்ச் பிடித்த டேனி, பாடிக்கொண்டே மேடை ஏறி வந்தான்,

“தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை ,,அடியே ஏ புள்ள ,,,,”

டேனி தமிழில் பாடியதும் தானுவுக்கு கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது. ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்டே,

“காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும்,நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்,
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்”

என தரண்யாவை பார்த்து கண் சிமிட்டிப் பாடினான் டேனி. அவனின் பார்வையில் அழகாக வெட்கப்பட்டாள் தரண்யா.

விபாவையும் அருகில் அழைத்து அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள் தானு. நானும் நானும் என பிள்ளைகளும் அவர்களைக் கட்டி கொண்டார்கள்.

கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘வீட்டுக்கு போய் முத வேலையா பிள்ளைங்களுக்கு சுத்தி போடனும். ஊரு கண்ணே அவங்க மேலதான்’ என நினைத்துக் கொண்டார்.

 

நாமளும் அவங்கள கண்ணு போடாம, எல்லா வளங்களையும் பெற்று நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தி விடைபெறுவோம்.

 

முற்றும்.