ukk-3b

ukk-3b

உலாவரும் கனாக்கள் கண்ணிலே – 3B

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் அவன் தந்தையின் ஆண்ட்ராய்டு போனிலிருந்து வந்திருந்த பெண்ணின் போட்டோவை தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் எனும் செய்தியுடன் கண்டவன், தனது அனுமதியில்லாமல் தனக்கு திருமணம் பேசிய பெற்றவர்கள் மீது ஆங்கிரி பேர்ட் ஆக ரியாக்ட் ஆன மனதை அடக்கி, உடனே ஊருக்கு கிளம்பியிருந்தான்.

————————–

முதன் முறையாக எந்தவொரு முன்னறிவிப்பின்றி அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து நின்ற மகனைக் கண்ட அன்பரசி முதலில் திகைத்து, பின்

“வாப்பா… அமரு நல்லாருக்கியா?”

“இருக்கேன்மா… அப்பா எங்கம்மா?”

சாதாரணமாக, தனது தாயை குயின் எலிசபெத் அல்லது குயின் எனவும், அவன் தந்தையை நாட்டாமை எனவும், தனது தாயிடம் விளையாட்டாக பேசும் மகன் இன்று, தன்னை அம்மா எனவும், கணவரை அப்பா எனவும் கூறியதைக் கேட்டு, தனது மகன் ஏதோ சிக்கலோடு வந்திருப்பதாக எண்ணியது, தாயுள்ளம்.

“பின்னாடி தோட்டத்துல நிப்பாரு… வந்தவுடனே என்னப்பா அப்பாவைத் தேடுற! எதுவும் பிரச்சனையா?”

“சும்மா தான்மா கேட்டேன்”, என்றபடி கையில் இருந்த ட்ராவல் பேகுடன் அவனது அறைக்குச் சென்றான்.

அவசரமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, தனது தந்தையை தேடி வந்த அமரைக் கண்ட கிருஷ்ணன்

“அடடே…. வாப்பா….. என்ன ஒரு வார்த்தை சொல்லல….திடீர்னு வந்திருக்க… எப்ப வந்த?”

“இப்பதான்பா வந்தேன்”

“சரி போ…. போயி முதல்ல டீ குடி…. அம்மாவைப் பாத்தியா?”

“பாத்துட்டேன்பா……”

நகராமல் நின்ற அமரின் தோரணையில், ஏதோ விடயம் பேச வந்திருக்கும் தோரணை தெரிய மகனை யோசனையுடன்….

“என்னப்பா…. எதுவும் எங்கிட்ட சொல்லணுமா?”

“ஆமாபா…… இப்பொ ஜனதாவுக்கு கல்யாணம் பண்ணுவோம்பா…. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா”

“அட… அத சொல்றதுக்கா இவ்வளவு தூரம் நேருல வந்த!?”

“ஆமாபா…..”

“உன்ன விட ஜனதா மூணு வருஷம் சின்னவ…. இருந்தாலும் நீ அவளுக்கு முடிஞ்ச பின்னாடி தான் பண்ணுவேன்னு சொன்னதால உனக்கு நாங்க இதுவர பாக்கவே இல்ல….

அதவிட நம்ம ஜனதாவுக்கு அமஞ்ச அதே வீட்டுல உனக்கு பொண்ணு கொடுக்கறேனு வந்தாங்க….. ஆனா இது அதுவா அமைஞ்சு வந்தது…. பொருத்தம் இருந்தது…  பொண்ணு போட்டோல மட்டுமில்ல….. நேரிலயும் நல்லா இருக்கு… அதான் உங்கிட்ட சொல்றதுக்குள்ள அவங்ககிட்ட சரினு சொல்லிட்டேன்”

“இல்லபா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா?”

சற்று நேரம் அமைதி காத்த கிருஷ்ணன்,

“என்னபா…. என்ன விடயம்.? என்னனு சொல்ல வந்தத எதையும் மறைக்காம சொல்லு”

“இல்லபா… என்கூட படிச்ச மௌனிகாங்கற பொண்ண எனக்கு பிடிச்சிருக்குபா..!”

“என்னபா சொல்ற….. இவ்வளவு நாளா நம்ம ஜனதாவுக்கு தட்டிக்கிட்டு போன சம்பந்தம்…. இப்போ போயி நான் என்ன அவங்கட்ட பேச முடியும்…. இதனால ஜனதாவுக்கு கல்யாணம் நின்று போனால் என்ன செய்வேன்?”

“விடயத்த சொல்லுங்கப்பா”

“என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கறப்பா?”, என தளுதளுத்த குரலில் கிருஷ்ணன் கேட்க

“எனக்கு பிடிக்கணுமில்லபா”

“கண்டிப்பா… உனக்கு வேற பொண்ணு பிடிச்சிருக்குங்கற செய்தியை முன்பே சொல்லியிருந்தா… அவங்க கேட்டப்ப… நாங்க அவனுக்கு வேற பொண்ணு பேசி வச்சுருக்கோம்னு சொல்லியிருப்போம்பா…

அவங்க கேட்டப்ப… ஒத்துக்கொண்டு, பொண்ணு பாத்து சரினு சொல்லிட்டு… போயி நாளு குறிச்சு, பத்திரிக்கை எல்லாம் அடிக்க குடுத்துட்டு… இப்போ மாட்டேனு சொல்லிட்டா… அதனால் நம்ம ஜனதா வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தியா?”

தனது தங்கையின் மேல் இருந்த பாசத்தால், சற்று நிதானித்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து அவனது அறையை நோக்கி அகன்றான்.

     அமர்நாத்தின் வருகையை அறியா மற்றவர்கள் இயல்பாக அவரவர் பணியில் ஈடுபட்டிருக்க, பெற்றவர்கள் இருவரும் மகனின் மாற்றத்தினை சிந்தித்தவாறு இருக்க,

“அம்மா, உங்களுக்கு உங்க சின்ன மகன் ஞாபகம் வந்திருச்சோ?”, இது ஜனதா

     “…”

     “அம்மா……”

     “என்னடி, அவன் ரூம்ல தான் இருக்கான், என்னனு தெரியல டீ கூட குடிக்கல, போயி கூப்புடு”

     “என்னம்மா சொல்றீங்க? பங்கு (பங்காளி) எங்க வந்தான்? கனவு எதுவும் கண்டீங்களா?”, இது பத்ரி

     “நீங்க ரெண்டு பேரும் அவன் வந்ததா பாக்கலன்னா, அவன் வந்தது இல்லனு ஆகிருமா?”, இது குயின் (அன்பரசி)

     “அரசி அவன போயி பாரு! என்ன செய்றான்னு”, கிருஷ்ணன்

     “சித்தப்பா தூங்குறாங்க”, இது நிசி, நிகியின் கோராஸான பதில்

     “காலைல உங்ககூட பேசிட்டு இருக்கறத பாத்துட்டு… டீ போட்டு எடுத்துட்டு போனேன்; அப்போ உங்கள காணோம் அங்க, மாமாகிட்ட பேசிட்டு திரும்பி வந்தவங்ககிட்ட டீய குடுத்தேன். அப்புறம் ஆளயே காணோமேனு நிசிகிட்ட சித்தப்பா எங்கனு போயி பாக்க சொன்னேன், அவ போயி பாத்துட்டு வந்து… அமரு தூங்குறதா சொன்னா”, இது உமா

          அதற்குள் பத்ரி, அமரின் அறைக்குள் நுழைந்து உறங்கும் அமரைத் தொட்டு

     “பங்கு எந்திரி! சாப்டுட்டு தூங்கு”, என எழுப்பினான்.

     “அப்றம் சாப்டுறேன் தலைவா!, ஆஃபிஸுக்கு கிளம்பணும்ல… நீ போயி சாப்டுட்டு கிளம்பு, சாயங்காலம் பாக்கலாம்”, எழாமல் சொன்னவனை, விடாமல் எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு, தந்தையிடம் பேசியவன் பணிக்கு கிளம்பிவிட்டான், பத்ரி.

சம்பந்த முறையிடம் மகன் வந்திருப்பதை கூறலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையுடன் இருந்த கிருஷ்ணனுக்கு, நெடுஞ்செழியனிடம் இருந்து வழமைபோல கால் வர, சின்னவன் வந்திருக்கான் என அமர் வந்த விடயத்தைக் கூற, அரை மணி தியாலத்தில், மகனுடன் அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார், செழியன்.

     மரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தைகள் பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சந்திரசேகர் மற்றும் அமர்நாத் இருவரும் அவரவர் தொழில், பணி சார்ந்த விடயங்களை பேச ஆரம்பித்திருந்தனர்.  பிறகு தொழில் சார்ந்த வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் சந்துரு கிளம்ப எத்தனிக்க, அவனை வழியனுப்ப அவனுடன் வெளியே வந்தான் அமர்.

     “உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேக்கலாமா அமர்?”

     “என்ன சந்தேகம், கேளுங்க சந்துரு”

     “அர்ச்சனாவுக்கு உங்கள பேசி முடிச்ச பின்னாடி, உங்கள பத்தி விசாரிக்க சொன்ன இடத்துல ஒரு தகவல் வந்தது…”, சற்று நிதானித்து கூறவா, நீயாகச் சொல்வாய அதுபற்றி என்பது போல அமரை ஒரு பார்வை பார்க்க

     “என்ன தகவல்னு சொல்லுங்க”

     “உங்க கூட படிச்ச பொண்ணு கூட உங்களுக்கு பழக்கம் இருக்கிறதா சொல்லிருக்காங்க, ஆனா அது எந்த விதமான உறவுனு கண்டுபிடிக்க முடியலனு ரிப்போர்ட்ல சொல்லிருக்காங்க”

     “டிடெக்டிவ் எல்லாம் அப்ரோச் பண்ணீங்களா? இதுக்கு!”, என ஆச்சரியமாக கேட்க

     “எங்க வீட்டு பொண்ணு உங்க வீட்டுல வந்து சந்தோசமா வாழனும்னு நாங்க ஆசப்பட்டா… அதெல்லாம் விசாரிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம்ல அமர்”

     “எல்லாருமே அப்டிதான ஆசப்படுவாங்க, வேற என்னவெல்லாம் டிடெக்டிவ்ல என்ன பற்றி சொல்லிருக்காங்க?”

          “வேற எல்லாமே உங்க வீட்ல பெரியவங்க சொன்னதுதான், அதுல எந்த மாற்றமும் இல்ல, ஆனா உங்களப்பற்றின இந்த விடயத்தைப் பற்றி நேரில விசாரிக்கணும்னு யோசிச்சேன்.  அதான் கேக்குறேன்”

     நான் கேட்டதற்கு உன்னிடமிருந்து வந்த மழுப்பலான பதில்கள் எனக்கு தேவையில்லை, உண்மையை உள்ளதுபடிச் சொல் என்ற செய்தி அதில் மறைந்து இருந்தது.

     “அவங்க என் காலேஜ்மேட், அவங்க அப்பா எங்கிட்ட கேட்டிருந்தார்”

     “உங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கும் பட்சத்தில, நான் அப்பாகிட்ட பேசுறேன்… அதனால உங்க தங்கைய வேணாம்னு சொல்லிருவோமோனு நீங்க பயப்பட வேண்டாம்”

     சந்துருவின் இந்த பதிலால் இதுவரை மனதில் இருந்த சலனம் மறைந்து, “அவங்கப்பாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன், எங்க குடும்பத்துல இத ஒத்துக்கொள்ள மாட்டங்கன்னு, அதனால நீங்க மனச குழப்பிக்க வேணாம், என் முழு விருப்பத்தோடதான் உங்க தங்கைய கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன்”, என்ற பதில் அமர் அறியாமலேயே, அவன் வாயில் வந்திருந்தது.

விடைபெற்று கிளம்பிய பின்னும் சந்துருவின் பேச்சை அசைபோட்ட அமரின் தெளிவான முகத்தைக் கண்ட கிருஷ்ணன், அமரிடம் அவனது திருமணம் பற்றிய நிலைப்பாட்டை அவனது வாயால் சொல்லிக் கேட்டவர், மகனின் மனமாற்றத்திற்கான காரணத்தையும், மௌனிகா பற்றிய அனைத்து தகவல்களையும் மகனிடம் கேட்டறிந்தார்.

தனக்குள் போட்டு வைத்திருந்த மௌனிகா சார்ந்த தகவல்களை தந்தையுடன் பகிர்ந்ததில் மனம் லேசாக, ஒரு முடிவுடன், சென்னை சென்று சுந்தரத்தை சந்தித்து, தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வைத் தெரிவித்தவன், அவனது பணியை கவனிக்க ஒரிசா சென்றுவிட்டான்.


ஒரு வாரம் கழித்து மௌனிகாவிடமிருந்து வந்த மெயில் சொன்ன செய்தியை அவனால் நம்ப இயலவில்லை.

     கடந்த ஆறு மாதத்தில் சுந்தரத்திற்கும், அமருக்குமிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை மகளிடம் தெரிவித்திருக்கமாட்டார் என எண்ணியிருந்தான் அமர்.

ஆனால், சுந்தரம் அனைத்தையும் மகளிடம் தெரிவித்திருக்க, இழவு காத்த கிளி போல, தனது வாழ்வு மாறியதாகவும், அமரால் வஞ்சிக்கப்பட்ட பேதையான தனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமெனவும், மறுத்தால் அமரை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என்றும் மௌனிகா மெயிலில் அனுப்பியிருந்த செய்தி… மௌனிகாவின் மறுபக்கத்தை அமருக்கு எடுத்துக்கூற, வெறுப்பினால் அவளின் வாட்ஸாப், முகநூல், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் மெயில் என அனைத்தையும் பிளாக் செய்தான்.

அவளின் மெயிலை அவளின் தந்தைக்கு ஃபார்வார்டு செய்துவிட்டு, அவளின் இந்த செயல்பாடுகளை எதிர்பார்க்கவில்லை எனவும், மீண்டும் தனது வாழ்வில் மௌனிகா ஏதேனும் இடர் தரும் நிலையில் அவன் ப்ரொபராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய இருப்பதாகவும், ஆகையினால மகளை கண்டித்து நல்வழிப்படுத்துமாறும் மொபைலில் பேசினான்.

அதன் பிறகு அவனுடைய திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில், இரண்டு முறை புதிய எண்களில் இருந்து அமருக்கு கால் செய்திருந்தாள் மௌனிகா.  முதல் முறை ரெஸ்பான்ஸ் செய்தவன், அவளின் முறையற்ற பேச்சினால் அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டான். அடுத்த முறை அவள் லைனில் இருப்பதை அறிந்து காலை துண்டித்துவிட்டான்.

பிறகு திருமணத்தன்று புதிய எண்ணிலிருந்து வந்த அவளின் எதிர்பாரா அழைப்பினால், கொரியரில் அனுப்பிய பொருள் பற்றிய சிந்தனையில், நிகழ்காலத்தில் எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல் வந்த தனது விழிப்பற்ற நிலையால் விபத்து நேர்ந்ததை எண்ணியவன், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு நிதானத்துடன் கூடிய புத்திசாலித்தனம் மட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

பறவைகளின் கீச்சுக்குரலால் விடியலை உணர்ந்தவன், எழுந்து காலைக்கடன்களை முடித்து வந்தான்.  அதற்குள் எழுந்து அன்றாட பணிகளை கவனிக்க சென்றிருந்த அவனது குயினை தேடி அடுக்களைக்குள் சென்றான்.

அங்கு அவனது தாய் அன்பரசி, கணவருக்கு சூடான காஃபியை தயாரித்திருந்தவர், மகனைக் கண்டவுடன்

“இந்தா அமரு, அப்பாவுக்கு காஃபி கலக்குனேன்… நீயும் குடி, இப்போ வலி பரவாயில்லையா?”, என கேட்டவாறு காஃபி டம்ளரை மகனிடம் நீட்டினார்.

“நாட்டாமைய நல்லா தான் கவனிக்கிறீங்க குயின் நீங்க”, என கிண்டல் பேச்சு பேசியவன், டம்ளரில் இருந்த காஃபியை அருந்த ஆரம்பித்திருந்தான்.

“ம்… காஃபிய குடிச்சிட்டு போயி உன் குயின பாரு மொதல்ல!”. என்ற தாயின் பேச்சில் அர்ச்சனாவை நினைவு கூர்ந்தவன், அவளை எப்படி மறந்து போனேன்.. என எண்ணியவனாய் அவனது அறைநோக்கி நடந்தான், தன்னவளைக் காண…

விழிப்பு நிலையில் காணும் கனா ஆழ்நிலை தியானமானது!!

————————————————————————

error: Content is protected !!