Enge En Punnagai–EPI 4

202926025_883159952271340_5635091821604340674_n-1cabc138

அத்தியாயம் 4

இன்னும் படுக்கையில் படுத்திருந்த மனைவிக்கு, அவளுக்கு பிடித்த வகையில் இனிப்பாய் டீ வைத்து எடுத்துப் போகும் மகனையேப் பார்த்தப்படி இருந்தார் சிவகாமி. சாற்றாமல் இருந்த கதவின் வழி இவன் டீ குடிக்க சொல்லி கெஞ்சுவதும், அவள் இன்னொரு புறம் திரும்பிப் படுத்துக் கொள்வதையும் பார்த்தவருக்கு கோபம் ஒரு பக்கம் வந்தாலும், பரிதாபமும் வந்தது தனது மருமகளின் மேல்.

முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தவன், அம்மாவின் பார்வையைக் கண்டு முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டான்.

“என்னடாப்பா உன் பொண்டாட்டி எழுந்துட்டாளா? டீயெல்லாம் வைக்கக் கத்துக்கிட்ட போலருக்கு! நம்ம வீட்டுல எல்லாம் இருக்கற இடம் தேடி எல்லாம் வரனும் ஐயாவுக்கு! இங்க அவ படுத்துக் கிடக்க, வேலைக்குப் போகற மனுஷன் ஓடி ஆடி வேலையப் பார்க்கற!” என சத்தமாக கேட்டார் அவர்.

அவர் சத்தத்தில் படுக்கையை விட்டு மெல்ல எழுந்தாள் காமினி.

“அம்மா! அவளே மசக்கையில பாடா படுறா! கொஞ்சம் படுத்துருக்கட்டுமே! விஷயம் கேள்விப்பட்டதும் முத ஆளா ஓடி வந்தீங்க! சரி அவளுக்கும் துணையா இருக்கும்னு பார்த்தா, சும்மா அது இதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க! நாளைக்கே டிக்கட் போடறேன், தயவு செஞ்சு கிளம்புங்க! என் பொண்டாட்டிய நானே பார்த்துக்கறேன்!”

“இங்கயே இருங்க அத்தைம்மா! எனக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாம கஸ்டமா இருக்கு! நீங்க இருந்தா கொஞ்சம் ரிலீப்பா இருக்கும்” என்ற காமினி, காலை உணவை சமைக்கப் போனாள்.

தன்னிடம் மட்டும் மௌன விரதம் காப்பவளை சோகமாய் பார்த்தான் கிருபாகர். அன்று அழுதழுது உறங்கி இருந்தவளுக்கு மறுநாளே காய்ச்சல் கண்டிருக்க, இவன் வீட்டில் இருந்த மருந்தைக் கொடுக்க முயல வாயே திறக்கவில்லை அவள். கன்னத்தைப் பற்றி மருந்தைத் திணிக்க முயல,

“வயித்துல பாப்பா இருக்கு கிரு! எந்த மருந்தும் டாக்டர கேக்காம சாப்பிட கூடாது!” என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் அவன்.

“என்னடி சொல்லற? பாப்பாவா?”

மெல்ல தலையாட்டியவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

“எப்படிலாம் சொல்லனும்னு ஆசைப்பட்டேன்! ரெண்டு கோடு காட்டன ப்ரெக்னசி கிட்டை கிப்ட் வ்ரேப் பண்ணி வச்சிருந்தேன். உன் கையில குடுத்து உன் ரியாக்‌ஷன வீடியோ எடுக்கனும்னுலாம் திட்டம் போட்டு வச்சிருந்தேன். கடைசில என்னை இப்படி அழுதுட்டே சொல்ல வச்சிட்ட!” என அழுதவளை அணைத்துக் கொண்டவனுக்கும் கண்ணீர் பெருகியது.

ஹாஸ்பிட்டல் அழைத்துப் போய் வந்தவன், இரு வீட்டு பெரியவர்களுக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தினான். சிவகாமி கிளம்பி வரும் வரை தன்னவளை தனக்குத் தெரிந்த வகையில் பார்த்து கவனித்துக் கொண்டான். சாப்பிட மட்டும் கிச்சன் பக்கம் போபவன், மனைவிக்காகவும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகவும் அம்மாவை கேட்டு, யூடியூப் பார்த்து சிம்பிளாக சமைக்க கற்றுக் கொண்டான். கையை வெட்டிக் கொண்டும், விரலை சுட்டுக் கொண்டும் அவன் சமைத்துக் கொடுத்ததை அவள் தொட்டும் பார்க்கவில்லை. பாலையும் ப்ரட்டையும் சாப்பிட்டே உயிர் வளர்த்தாள்.

அவளை நெருங்க அவன் எடுத்த எந்த முயற்சியும் பலன் தரவில்லை. நொந்துப் போனான் கிருபாகர். எப்பொழுதும் சிரித்த முகமாய் அன்பை வாரித் தரும் தன் மனைவிக்குள் இப்படி ஒரு அந்நியன் ஒளிந்திருக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டவனுக்கு சிரிப்பதா அழுவதா என கூட தெரியவில்லை.

சிவகாமி வரவும் தான் பேசவே ஆரம்பித்தாள் காமினி. படுத்தே கிடந்தவள், அவரின் அதட்டல் உருட்டலில் எழுந்து நடமாட ஆரம்பித்தாள். மகன் இருக்கும் வரை மாமியார் கெத்தைக் காட்டுபவர், அவன் வேலைக்குப் போனதும் இவளை அமர வைத்து வாய்க்கு ருசியாய் ஆக்கிப் போடுவார்.

‘ஏன் இப்படி?’ என்பது போல் இவள் பார்த்து வைத்தால்,

“ஒத்தப் பையன்டி எனக்கு! அவன் முன்னுக்கே நானும் உனக்கு கூஜா தூக்குனா, நாள பின்ன உனக்கு அடிமையா என்ன செட் பண்ணிடுவான். ம்மா, என் பொண்டாட்டிக்கு காபி வச்சுக் குடு, என் பொண்டாட்டிக்கு கால் அமுக்கி விடுன்னு ஏவ ஆரம்பிச்சா எனக்கு என்ன மரியாதை! உனக்கு ஒன்னு செய்யனும்னா அத நானா செய்யனும்! அவன் சொல்லி செஞ்சா என் கெத்து என்னாகிறது?” என சொல்லி சிரித்தவரை புன்னகையுடன் பார்த்தாள் காமினி.

“உன் கிட்ட நல்லபடியா நடந்துக்கறதுக்கு கூட என்னோட சுயநலம்தான் காரணம். நீ சந்தோஷமா இருந்தா, என் மவன சந்தோஷமா வச்சிருப்ப! அவன் சந்தோஷத்தை விட எனக்கு வேற என்ன நிம்மதி இருந்துடப் போகுது இந்த உலகத்துல” என்றவர் அவளை ஆழமாய் ஒரு பார்வைப் பார்த்தார்.

அவர் பார்வை வீச்சில் நெளிந்தாள் காமினி.

“அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சப்ப, ஒரே ஆர்ப்பாட்டம், அட்டகாசம்! காட்டற போட்டோவ எல்லாம் பிடிக்கல, பிடிக்கலன்னு சொல்லிட்டே திரிஞ்சான். ப்ரோக்கருக்கு மண்டையப் பிச்சிக்கிற நிலமை. காட்டுன போட்டோவ எல்லாம் பைலுல எடுத்து வைக்கறப்போ, பைல் கைத்தவறி விழுந்து, உள்ள வச்சிருந்த போட்டோ எல்லாம் தரையில சிதறிக் கிடந்துச்சு. அதுல உன்னோட போட்டோவ குனிஞ்சு எடுத்தவன், பார்த்துட்டே இருந்தான். ம்மா, இவதான் உன் மருமகன்னு சொல்லிட்டு போட்டோவோட எழுந்துப் போயிட்டான். ப்ரோக்கரோ, அந்தப் பொண்ணு குடும்பம் நீங்க கேட்ட சீர் செனத்திக்கெல்லாம் சரிப்பட்டு வராதும்மான்னு சொல்ல, ம்மா இவதான் என் பொண்ட்டாட்டி! இவ இல்லைனா உன் மவனுக்கு இனி காவி வேட்டின்னு ரூமுல இருந்துகிட்டு வசனம் பேசறான்! இவனோட அப்பாவுக்கு வேற செம்ம கோபம்! பொண்ணுங்களுக்கு அவ்ளோ செலவு பண்ணி பண்ணோம்! இவன் மூலமாச்சும் வரவு வரும்னு பார்த்தா, இப்படி ஒத்தைக் காலுல நிக்கறானேன்னு”

“அப்புறம் என்னாச்சு அத்தைம்மா?”

“எவ்ளோ வரதட்சணை எதிர்ப்பாக்கறாருன்னு கேளுங்கம்மா! மாசா மாசம் என் சம்பளத்துல இருந்து அவர் கேக்கறத கொஞ்சம் கொஞ்சமா குடுத்து செட்டில் பண்ணறேன்னு சொன்னவன், வேணான்னு சொல்லியும் இன்னும் பணம் போட்டுட்டுத்தான் இருக்கான். உடனே நீ பெரிய அழகி, அதான் என் புள்ள விழுந்துட்டான்னு நெனைக்காதே! உன்னை விட அழகான பொண்ணுங்கள காட்டிக் கூட நீதான் வேணும்னு நின்னுட்டான்”

மெலிதாய் பெருமூச்சு வந்தது அவளிடத்தில்.

“சரி சொல்லு! என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்? ஏன் அவன் கிட்ட வந்தாலும் நீ தள்ளிப் போகற? உன் மாமியாரா நினைச்சுத் தயங்காம, உன் அப்பா கூட பொறந்த அத்தை மாதிரி நினைச்சு சொல்லு”

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள், கடகடவென எல்லாவற்றையும் ஒப்பித்தாள். முழுவதும் கேட்டு முடித்தவர்,

“நம்ம வீட்டு ஊறுகாய் சாப்பிட்டிருக்கியா நீ?” என கேட்டார்.

எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறார் என நினைத்தவள், ஆமென தலையாட்டினாள்,

“அந்த ஊறுகாய நம்ம வீட்டு உபயோகத்துக்கு மட்டும் செய்யலடி! அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கு காசுக்கும் விக்கறேன்! நம்ம ஏரியா அண்ணாச்சி கடையிலயும் விக்க சொல்லி குடுத்துடுவேன். ஊறுகாயோட அப்பளம், வடாம், இட்லி மாவு எல்லாம் விக்கறேன்! எதுக்குன்னு கேளேன்!”

“எதுக்கு அத்தைம்மா?”

“உன்னை மாதிரி மன உளைச்சல்ல மூளையில மூக்கை சிந்திக்கிட்டு முடங்கிடாம, சுயமா சொந்தக் காலுல நிக்கனும்னு தான் இதெல்லாம் செய்யறேன்! பிசாத்து நூறு ரூபா சம்பாதிச்சாலும், அது நான் வேர்வை சிந்தி சம்பாதிச்சதுடி! என் உழைப்புக்குண்டான ஊதியம்! ஆம்பளைங்க ஓடித் திரிஞ்சு நாய் பொழப்பா சம்பாதிக்கற கஸ்டத்துல நாலு வார்த்தை அதிகமா விடுவாங்க! படிக்காத குப்பனும் அப்படித்தான், படிச்ச சுப்பனும் அப்படித்தான். நீ நாயா பேயா வீட்டுல உழைச்சி ஓடா தேஞ்சாலும் அவங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது! பணம், அதுதான் ஆணிவேரு. அன்பு, காதல் இருந்தா போதும் வாழ்க்கைக்கு! எல்லாம் சரியாகிடும்னு சொல்லற குருப்பூ ஒரு பக்கம் இருக்கு! அதெல்லாம் தெய்வீகம்! போன பிறப்புல ரொம்ப புண்ணியம் பண்ணவங்களுக்கு வேணும்னா தங்கமாட்டம் புருஷனும், வைரமாட்டம் பொண்டாட்டியும் அமைஞ்சு பணம், பதவிலாம் கிட்ட நெருங்காம சொர்க்கமா போகும் வாழ்க்கை. அந்தப் பக்கம் நாம போக வேணா! நம்மள மாதிரி மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிக்கற பொண்ணுங்கள மட்டும் பார்ப்போம்!” என்றவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் காமினி.

படிக்காத அந்தக் காலத்து மனுசி வாயில் இருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் வேதமாக தோன்றியது.

“ஒவ்வொரு பொண்ணும் ஏதோ ஒரு சூழ்நிலையாலத்தான் வீட்டுல இருக்கறா! புள்ளைங்கள பார்த்துக்கனும், வயசான மாமனார் மாமியார பார்த்துக்கனும், புருஷன் கூட பொறந்தவங்கள வளர்த்து விடனும்னு ஆயிரம் கடமை அவ தலையில. இந்த மாசம் பட்ஜெட்டுல துண்டு விழுகுதேன்னு புருஷன் இடிஞ்சுப் போய் நின்னா, ஐயோ அவருக்கு உதவ முடியாம தெண்டமா வீட்டுல கிடக்கறமேன்னு நெஞ்செல்லாம் காந்தும். நீ வேலைக்குப் போனாலும், புள்ளய பார்க்க, பாத்திரம் தேய்க்க, சமையல பார்க்க, வீட்ட கிளின் பண்ணன்னு ஆள் வைக்கனுமே! அந்த காச நீ மிச்சம் பண்ணிக் குடுக்கறன்னு சந்தோஷப்பட்டுக்கனுமமே தவிர, உடஞ்சிப் போயிட கூடாது, வேலைக்குப் போனாத்தான் சம்பாதிக்க முடியும்னு யார் சொன்னது? உன்னை வேலைக்குப் போக வேணாம்னு சொன்னேனே தவிர சம்பாதிக்கக் கூடாதுன்னு சொன்னேனா காமினி?”

மெல்லிய புன்னகை விரிந்தது அவள் உதட்டில்.

“புரிஞ்சதுல்ல? எங்க காலம் மாதிரியா இப்போ? போனுக்குள்ள ஒலகமே வந்துடுச்சாமே! பூ கட்ட தெரிஞ்சா, கட்டி வியாபாரம் பண்ணு! பின்னல் வேலை தெரிஞ்சா, பின்னி வியாபாரம் பாரு! சமைக்கத் தெரிஞ்சா சமைச்சு, வியாபாரம் செய்! போனுல சேலை விக்கறாங்களாமே, அந்த மாதிரி சேலை, துணிமணி விக்கற வேலை பாரு! நீ கூட கேக்கு நல்லா செய்வியாம்! போன் போடறப்பல்லாம் உன் பெருமைய சொல்லி என் காத தீச்சு வைப்பான் இவன். அந்த கேக்கு செஞ்சு விக்கப் பாரு! எடுத்தோனே முன்னேறி பணம் கொட்டும்னு சொல்லல! விடாமுயற்சியா செஞ்சுப் பாரு, எந்த வாசலாச்சும் தொறக்கும்டி! வீட்டையும் புள்ளையும் பார்த்த மாதிரியும் ஆச்சு, நாலு காசு நாமே சம்பாதிச்ச மாதிரியும் ஆச்சு! அதுக்கு அப்புறம் எந்த நாய் நீ வீட்டுல சும்மா இருக்கன்னு வாயத் தொறந்து சொல்லும்? வால ஒட்ட நறுக்கிட மாட்டோம்!” என சொல்லியவரை பட்டென கட்டிக் கொண்டாள் காமினி.

“பிரிஞ்சிடலாம்னு நெனைச்சேன் அத்தைம்மா”

“உன் மேல உசுர வச்சிருக்கான்டி. கோபத்துல பேசனத புடிச்சுட்டு தொங்காம, ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு நடந்துப் போங்க! இந்தக் காலத்துல விவாகரத்து செய்யறது ரொம்ப சகஜமா ஆகிடுச்சு! சரியான காரணம் இருந்தா சேர்ந்து இருந்து கஸ்டப்படறத விட, பிரிஞ்சு நிம்மதியா இருக்கறது நல்லதுதான். அதுக்குன்னு உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் பிரிஞ்சுப் போய் பெத்த புள்ளைங்களையும் தவிக்க விடறது ரொம்பத் தப்புடி! என் மருமகன்றதுனால சொல்லல! ரெண்டு பொண்ண பெத்தவன்ற உரிமையில எல்லாப் பொண்ணுங்களுக்கும் சொல்லறேன்.”

மாமியாரிடம் பேசியவளுக்கு மனம் தெளிவாக இருந்தது. சுயபச்சாதாபம்!!! தன்னை ஆட்டி வைத்த உணர்வுக்கு தெளிவாய் பெயர் சூட்டினாள் காமினி. கிருபாகர் கோபத்தில் சொன்னது பேசியது எல்லாம் தப்பு தான். ஆனால் அதில் சுயபச்சாதாபம் கொண்டு, நம்மால் சம்பாதிக்க முடியவில்லையே, நம்மை நம் பெற்றோர் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லையே, இந்த ஊரில் சமாளிக்க முடியவில்லையே, என அதிலேயே உழன்று மன உளைச்சலை இழுத்துக் கொண்டது மிகவும் தவறாய் பட்டது காமினிக்கு. சுயபச்சாதாபம் கேன்சரைப் போல உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் நோய். ஒரு கட்டத்தில் அதிலேயே உழன்று சோகத்தைக் கூட சுகமாய் மாற்றி அதிலேயே அமிழ்ந்துப் போக வைக்கும் கொடூர அரக்கன். சிவகாமியின் வழிகாட்டுதலின் பேரில் சரியான பாதையில் சிந்திக்க ஆரம்பித்தாள் காமினி.

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. நெறைய பேரு அவங்க ஆதங்கத்த பகிர்திருந்தீங்க..நீங்க மட்டும் இல்ல, வீட்டுல இருக்கற முக்கால்வாசி பெண்கள் கடந்து வரும் பிரச்சனை இதுதான்(என்னையும் சேர்த்து). என்னால முடிஞ்ச சொல்யூஷன் சொல்லிருக்கேன். ஆனா எல்லாருக்கும் இது சரிப்படாம போகலாம். அப்படிப்பட்டவங்க மனசு ஒடஞ்சிடக் கூடாது. சுயபச்சாதாபம் கூடவே கூடாது. வீட்டைத் தாங்கிப் பிடிக்கும் தூண் நீங்க. சுத்தி உள்ளவங்க அத புரிஞ்சிக்கலனாலும் உங்கள நீங்க பார்த்துக்கங்க. மனசு கஸ்டப்படறப்ப அதுலயே உழன்றுட்டு இருக்காம மனச திசை திருப்பப் பாருங்க. இந்த கொரோனா டைம்ல வீட்டுல உள்ள பெண்கள் எவ்ளோ கஸ்டப்படறாங்கன்னு எனக்கும் நல்லாவே தெரியும். சோ ப்ளீஸ் டேக் கேர் ஆப் யுர்செல்ப்.

எப்படி நம்மள ஆண்கள் புரிஞ்சுக்கலன்னு நாம நினைக்கறமோ, அப்படித்தான் நம்மளயும் அவங்க நினைப்பாங்க. புரிஞ்சுக்க முயற்சி செய்வோம். நமக்கு வீட்டுல ஸ்ட்ரேஸ், அவங்களுக்கு வெளிய ஸ்ட்ரேஸ். விட்டுக் குடுத்துப் போகறதுல தப்பில்ல. அதுக்குன்னு நாமளேதான் விட்டுக் குடுக்கனும்னு சொல்லல. எந்த நேரத்தில எப்படி நடந்துக்கனும்னு யோசிச்சி செயல்படுங்க! ஆனால்………..வன்முறை எதுக்கும் தீர்வு இல்ல. நீங்களும் அவர அடிக்காதீங்க 🙂 அவரையும் அடிக்க அனுமதிக்காதீங்க.. டேக் கேர் டியர் ஆல்..

இந்த கொரோனா டைம்ல யார் என்னை காண்டாக்கனாலும் மைண்ட்ல ஓடற தாரக மந்திரம்–ஓம் சாந்தி டிஸ்கோ சாந்தி!!!!!!!!!!! நீங்களும் இதை ஃபோலோ பண்ணா எந்த ஸ்ட்ரெசையும் ஊதித் தள்ளிடலாம்… லவ் யூ ஆல்)