Enge enathu kavithai final

“கெட்டி மேளம்…..கெட்டி மேளம்……” என்று அய்யர் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க வெண்ணிலாவின் கழுத்தில் தாலிகட்டிய சூர்யா வெண்ணிலாவை தன் வாழ்வில் சரி பாதியாக இணைத்து கொண்டான்.

கண்களில் காதல் மின்ன சூர்யாவை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா புன்னகையோடு தன் அருகில் நின்று கொண்டிருந்த அபிநயாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக் கொள்ள அந்த பரிபூரண குடும்பத்தை அனைவரும் பார்த்து மனம் நிறைந்து நின்றனர்.

வெண்ணிலா, சூர்யாவின் திருமண சடங்குகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ராபர்ட் அக்ஸயாவின் பின்னால் வட்டமடித்து கொண்டிருந்தான்.

சூர்யா ஓரக் கண்ணால் வெண்ணிலாவிடம் அதனைக் காண்பிக்கவும் சிரித்து கொண்ட வெண்ணிலாவின் நினைவுகள் ஒரு வாரத்திற்கு முன்பு ஜேர்மனில் இருந்து இந்தியா வந்து சேர்ந்த அந்த நாளினை நோக்கி நகர்ந்தது.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆண்டாள், ராபர்ட், சூர்யா மற்றும் வெண்ணிலா நேராக வெண்ணிலாவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

காரில் இருந்து இறங்கும் போது ஒரு கையினால் வெண்ணிலாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட சூர்யா மறு கையினால் குழந்தையின் தலையை ஆசையாக தடவி கொடுத்தான்.

வாசலிலேயே வந்து நின்று அவர்களை வரவேற்ற அழகர், வெற்றி மற்றும் அபிநயா வெண்ணிலாவையும், சூர்யாவையும் பார்த்து கண் கலங்கி போயினர்.

வீட்டினுள் வந்து அமர்ந்த பின்பும் அங்கு ஒரு கனத்த அமைதி நிலவ அதை கலைக்கும் பொருட்டு சூர்யா முதலில் பேச ஆரம்பித்தான்.

“என்ன எல்லோரும் ஏதோ பேயைப் பார்த்த மாதிரி சைலண்டா இருக்குறீங்க????” என்று சூர்யா கேட்கவும்

அவன் தோளில் கை போட்டவாறு அவனருகில் அமர்ந்திருந்த வெற்றி

“சவுண்ட் சரோஜா மாதிரி இருந்த எங்க நிலாவை அன்னை தெரசா ரேஞ்ச்க்கு மாற்றிட்டியே…..அது தான் எங்களுக்கு பேச்சே வரல…..” என்று கூறவும்

அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா

“நான் உனக்கு சவுண்ட் சரோஜாவா???” என்று அவன் தலையில் கொட்டினாள்.

“பிசாசு….பிசாசு….குட்டி பிசாசு…..” என்று வெற்றி தன் தலையை தேய்த்து கொண்டே வெண்ணிலாவை திட்டவும் அவனை பார்த்து பழிப்பு காட்டிய வெண்ணிலா குழந்தையை தூக்கி கொண்டு அவளது அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.

வெண்ணிலாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஆண்டாள் மற்றும் அழகரின் புறம் திரும்பிய சூர்யா

“அத்தை…..மாமா…..முதல்ல நீங்க இரண்டு பேரும் என்னை மன்னிச்சுக்கனும்…..நடந்த பிரச்சினைக்கு எல்லாம் ஒரு வகையில் நானும் தான் காரணம்…..அவசரப்பட்டு ஏதோ பண்ணப் போய் ஏதோ ஆகிடுச்சு….இப்போ நான் உங்களுக்கு ஒரு வாக்கு தர்றேன்….என் உடம்பில் கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் நிலாவையும், குழந்தையையும் நான் ஒரு போதும் பிரிய மாட்டேன்….” என்று கூறவும்

“சூர்யா…..” என்று கண்கள் கலங்க அவனை ஆரத் தழுவினான் வெற்றி.

“இப்போ தான் என் தம்பியை நினைச்சு எனக்கு நிம்மதியாக இருக்கு…..” என்று அபிநயா கூறவும் அவளை பார்த்து புன்னகத்து கொண்ட சூர்யா ஆண்டாள் மற்றும் அழகரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள பெரியவர்கள் மட்டும் இல்லாமல் அறையில் இருந்து அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த வெண்ணிலாவின் கண்களும் கலங்கியது.

படியேறும் சத்தம் கேட்கவும் அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்ட வெண்ணிலா குழந்தையின் அருகில் சென்று எதுவும் தெரியாதது போல அமர்ந்து கொண்டாள்.

காலடி ஓசையை வைத்தே சூர்யா தான் வருகிறான் என்பதை புரிந்து கொண்ட வெண்ணிலா தடதடக்கும் இதயத்தோடு அமர்ந்திருந்தாள்.

“நிலா……” என்ற அழைப்போடு சூர்யா வெண்ணிலாவின் தோள் தொடவும் கண்கள் கலங்க அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

“என்னம்மா……” என்று சூர்யா அவள் தாடையை நிமிர்த்தி கேட்கவும்

மேலும் மேலும் அவனோடு இறுக ஒன்றிக் கொண்ட வெண்ணிலா

“நான் உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன் தேவ்…..உங்களை புரிஞ்சுக்காம சந்தேகப்பட்டு…..எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன்….ஆனா நீங்க என்னை இவ்வளவு ஈஸியாக மன்னிச்சு ஏத்துக்கிட்டிங்களே…..இதற்கு எல்லாம் நான் எப்படி…..” என்று கூறியவளின் இதழ்கள் மேல் விரல் வைத்த சூர்யா

“என்ன பேச்சு இது????” என்று கடிந்து கொண்டான்.

“நீ என் மேல இருந்த அளவு இல்லாத காதலால் தான் இதெல்லாம் பண்ணுணனு எனக்கு மட்டும் இல்லை உனக்கும் தெரியும்……அது மட்டுமில்ல நீ இப்படி என் கூட சண்டை போடலனா எனக்கும் உன் மேல இருக்குற அந்த காதலோட பெறுமதி தெரிஞ்சு இருக்காதே!!!!” என்று சூர்யா கூறவும்

விழி விரித்து அவனை கண்ணீர் சூழ்ந்த கண்களோடு இறுக அணைத்த வெண்ணிலா அவன் 

முகமெங்கும் தன் இதழ் முத்திரையை பதித்தாள்.

வெண்ணிலாவின் ஒவ்வொரு இதழ் ஒற்றுதலையும் காதலோடு பெற்று கொண்ட சூர்யாவின் மனமெங்கும் சந்தோஷச் சாரல் வீசியது.

“இத்தனை வருஷமாக நான் உங்க கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தை இப்போ சொல்லப் போறேன்…..” என்று வெண்ணிலா கூறவும்

“அப்படி என்ன விஷயம்????” என்று ஆச்சரியமாக கேட்டான் சூர்யா.

மெல்ல விழி நிமிர்ந்து அவனைப் பார்த்த வெண்ணிலா

“என் வாழ்க்கையில் கிடைத்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் நீங்க…..நான் என்ன தப்பு பண்ணாலும் உங்க பக்கம் என்னை அறியாமலே நீங்க இழுத்து போயிடுறீங்க….உங்களை மாதிரி ஒரு பிரண்ட், லைஃப் பார்ட்னர் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க….அப்படி கிடைச்சா அதை விட வேறு எந்த அதிர்ஷ்டமும் இல்ல….அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சுருக்கு…..இந்த மாதிரி அதிர்ஷ்டத்தை நான் இனி ஒரு போதும் இழக்க மாட்டேன்…..ஐ லவ் யூ டா தேவாங்கு…..” என்று விட்டு அவன் கன்னத்தில் இதழ் பதிக்க மனம் நிறைந்த சந்தோஷத்தோடு அவளை அணைத்துக் கொண்டான் சூர்யா.

“எக்ஸ்கியுஸ் மீ…..மே வீ கம் இன்???” என்றவாறு வெற்றி மற்றும் அபிநயா அறை வாயிலில் வந்து நிற்கவும் சட்டென்று சூர்யாவிடம் இருந்து விலகி கொண்ட வெண்ணிலா வெட்கம் தாளாமல்  அவசரமாக படியிறங்கி சென்று விட வெற்றி மற்றும் அபிநயா சூர்யாவை ஒரு வழி செய்தனர்.

சிறிது நேரத்தின் பின்னர் அனைவரிடமும் கூறி விட்டு சூர்யா மற்றும் ராபர்ட் சூர்யாவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

சூர்யா ஒரு வித சந்தோஷத்தில் திளைத்து இருக்க ராபர்ட்டோ அக்ஸயாவைப் பார்க்க போகும் ஆவலில் மிதந்து கொண்டிருந்தான்.

சூர்யாவின் வீட்டை வந்து சேர்ந்ததும் சூர்யா சந்தோஷம் அடைந்த அளவை விட பன் மடங்கு சந்தோஷம் மற்றும் படபடப்புடன் காரில் இருந்து இறங்கிய ராபர்ட் காரில் இருந்து பெட்டியை எடுத்து வைத்து கொண்டே அக்ஸயாவை கண்களால் வலை வீசி தேடினான்.

“அவ காலேஜ் போயிட்டா….நீ என்ன தான் தேடுனாலும் இன்னைக்கு அவளைப் பார்க்க முடியாது…..” என்ற சூர்யாவின் குரலில் 

திடுக்கிட்டு கையில் இருந்த பெட்டியை தவற விட்ட ராபர்ட்

“ஸார்….” என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

“என்ன அப்படியே பிரீஸ் ஆகிட்ட???” என்று சூர்யா கேட்கவும்

அவசரமாக இல்லை என தலை அசைத்த ராபர்ட்

“நான்….எதுவுமே பண்ணல ஸார்….” என்று தயக்கத்துடன் கூறினான்.

“ஓஹோ…..அப்படியா???? அப்போ பிளைட்ல வைச்சு அவ்வளவு டயலாக் விட்ட??? அதெல்லாம் எந்த கணக்கு????” என்று கேட்கவும்

திருதிருவென்று விழித்த ராபர்ட்

“அட கடவுளே!!! ட்ரீம்ஸ்னு நினைச்சு சத்தமாக பேசிட்டேனோ……” என்று தன் தலையில் அடித்துக் கொள்ள

“உன் கிட்ட இப்படி எல்லாம் பேசி சரி வராது……” என்ற சூர்யா ராபர்ட்டின் கையை பிடித்து வீட்டினுள் இழுக்காத குறையாக அழைத்து கொண்டு சென்றான்.

“ஸார்….நான் தப்பா எதுவும் சொல்லல ஸார்….ப்ளீஸ் ஸார்…..ப்ளீஸ்….” என்று கெஞ்சிக் கொண்டே ராபர்ட் வரவும் 

அவனது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாத சூர்யா நடு ஹாலில் வந்து நின்று 

“அப்பா……அம்மா……” என்று சத்தமிட்டான்.

“அடடா….வீட்டுக்கு வந்து இறங்குனதும் எதுக்கு டா இப்படி சத்தம் போடுற???” என்றவாறே சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த மகாலட்சுமி சூர்யாவையும், சூர்யாவின் பின்னால் பயத்தோடு நடுங்கி கொண்டிருந்த ராபர்ட்டையும் விசித்திரமாக பார்த்தார்.

“என்ன சூர்யா இது??? நிலாவை கையை பிடிச்சு கூட்டிட்டு வருவேனு பார்த்தா ராபர்ட்டோட கையை பிடிச்சு கூட்டிட்டு வர்ற???? என்னடா நடக்குது இங்க???” என்று மகாலட்சுமி கேட்கவும் 

தன் தலையில் தட்டி கொண்ட சூர்யா

“அம்மா…..” என்று கோபமாக அவரை முறைத்து பார்த்தான்.

“என்ன எதுக்கு டா முறைக்குற??? ஆமா நிலா எங்க????” என்று மகாலட்சுமி கேட்கவும் 

எதுவும் பேசாமல் இருந்த சூர்யா

“அப்பா……” என்று சத்தமிட்டான்.

“என்ன சூர்யா என்ன ஆச்சு????” என்று பதட்டத்துடன் அவரது அறையில் இருந்து வெளியே வந்த பெருமாள் சூர்யாவையும், ராபர்ட்டையும் பார்த்து விட்டு ஆண்டாளின் புறம் திரும்பி

“என்ன ஆச்சு????” என்று சைகையால் கேட்டார்.

“தெரியலையே…..” என்று ஆண்டாள் அழகரைப் பார்த்து கூறவும் 

“அம்மா….அப்பா….இரண்டு பேரும் இப்படி வந்து உட்காருங்க…..” என்று கூறிய சூர்யா ராபர்ட்டின் கையை பிடித்து கொண்டே அங்கிருந்த ஒரு ஸோபாவில் அமர்ந்து கொண்டான்.

ஆண்டாள் மற்றும் அழகர் குழப்பத்தோடு சூர்யாவின் எதிரில் அமர்ந்து கொள்ள ராபர்ட்டோ முள் நிற்பதைப் போல தவிப்போடும், கெஞ்சலோடும் சூர்யாவை பார்த்து கொண்டு நின்றான்.

“நீங்க ராபர்ட்டை பற்றி என்ன நினைக்குறீங்க???” என்று சூர்யா கேட்கவும்

“என்ன சூர்யா??? அப்போ நிஜமாகவே அப்படி தானா??” என்று மகாலட்சுமி கவலையாக கேட்பது போல கேட்க 

அவரை முறைத்து பார்த்த சூர்யா

“அம்மா…….” என்று பல்லைக் கடித்து கொண்டு கூற மகாலட்சுமி சிரமப்பட்டு தன் சிரிப்பை அடக்கி கொண்டார்.

“என்ன விஷயம் மகா???” என்று பெருமாள் மகாலட்சுமியின் காதில் கேட்கவும்

“அய்யோ அப்பா!!! நீங்க வேற சும்மா இருங்கபா…..ராபர்ட்டை பற்றி என்ன நினைக்குறீங்க??” என்று கேட்டான் சூர்யா.

“அவனுக்கு என்ன நல்ல பையன் தான்…..” என்று மகாலட்சுமி கூறவும்

“அப்படியா???” என்று ராபர்ட்டை திரும்பி பார்த்த சூர்யா

“அப்படினா நம்ம அக்ஸயாவுக்கு ராபர்ட்டை கல்யாணம் பண்ணி கொடுக்குறதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா???” என்று கேட்டான்.

சூர்யா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மகாலட்சுமி மற்றும் பெருமாள் அதிர்ச்சியடைந்து போய் நிற்க ராபர்ட்டோ ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

“என்ன ஆச்சு???” என்று சூர்யா கேட்கவும் 

உடனே தன்னை மீட்டு கொண்ட ராபர்ட்

“மச்சான்……” என்று சூர்யாவை தாவி அணைத்துக் கொண்டான்.

மகாலட்சுமி மற்றும் பெருமாள் சூர்யாவை குழப்பத்தோடு பார்க்கவும் பிளைட்டில் நடந்த எல்லாவற்றையும் சூர்யா விளக்கமாக கூறவும் ராபர்ட் கூச்சத்தால் நெளிந்த வண்ணம் நின்றான்.

“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன நெளியுற??” என்று சூர்யா அதட்டலாக கேட்கவும் 

“நான் இதை சத்தியமாக எதிர்பார்க்கல ஸார்…..உங்க கிட்ட வேலை பார்க்குற என்னை…..” என்று குரல் கம்ம கூற 

“ஹேய்…..என்ன மாப்பிள்ளை இதெல்லாம்??? நீ என் கிட்ட வேலை பார்க்குற நாள்ல இருந்து நான் உன்னை கவனிச்சுருக்கேன்…..உன் மேல எனக்கு எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கு…..அந்த பாசம் தான் எங்க வீட்டு பொண்ண உனக்கு கொடுக்க தைரியம் கொடுத்துருக்கு…..” என்று ராபர்ட்டின் தோளில் சூர்யா ஆதரவாக கை போட்டு கொண்டான்.

அவர்கள் அருகில் வந்த பெருமாள்

“ராபர்ட் மாதிரி ஒரு நல்ல பையன் வலை வீசி தேடுனாலும் கிடைக்க மாட்டான்…..நாளைக்கே உன்னோட அம்மா, அப்பா எல்லோரையும் கூட்டிட்டு வா ராபர்ட்….” என்று கூற

“தாங்க்ஸ் மாமா….” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டான் ராபர்ட்.

அதன் பிறகு அக்ஸயாவிடம் இது பற்றி கூறவும் அவளது சம்மதமும் கிடைத்து விட ராபர்ட் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தான்.

மறுபுறம் வெண்ணிலா மற்றும் சூர்யாவின் திருமண வேலைகளில் அனைவரும் மூழ்கிப் போக வெண்ணிலா சூர்யாவுடனான தன் வாழ்க்கையை எண்ணி சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கான ஆடைகள் தெரிவு செய்வது முதல் மற்ற ஏற்பாடுகள் செய்வது வரை வெண்ணிலாவின் ஆசைகள் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு சூர்யா செய்து கொண்டிருக்க வெண்ணிலாவோ சூர்யாவின் காதலை எண்ணி மெய்சிலிர்த்து போனாள்.

எளிமையாக அவர்களது வீட்டின் அருகில் இருந்த முருகன் கோயிலில் வைத்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்களோடு வெண்ணிலா மற்றும் சூர்யாவின் திருமணம் நடந்து முடிந்து இருக்க அதை தொடர்ந்து குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு ஆரம்பித்து இருந்தது.

சூர்யா மற்றும் வெண்ணிலா ஒன்றாக குழந்தையின் காதில் அருகில் குனிந்து புன்னகத்து கொண்டே

“ஜனனி….ஜனனி….ஜனனி…..” என்று பெயர் சொல்ல சுற்றி நின்ற அனைவரும் அவர்களை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தனர்.

வெற்றி வெண்ணிலாவின் அருகில் வந்த அவள் தோள் தொடவும் அவனை திரும்பி பார்த்த

வெண்ணிலா

“இந்த ஜனனியை கண்டிப்பாக நான் தப்பான வழியில் போக விடமாட்டேன்…..” என்று கூறவும் கண்கள் கலங்க அவளது தலையை வாஞ்சையுடன் வெற்றி வருடிக் கொடுத்தான்.

அதன் பிறகு கோவிலில் வைத்தே அக்ஸயா மற்றும் ராபர்ட்டிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட ராபர்ட் பிளைட்டில் வைத்து செய்தவற்றை எல்லோரிடமும் சொல்லி சூர்யா மற்றும் வெற்றி அவனை ஒரு வழி செய்தனர்.

அதன் பிறகு எல்லோரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்று விட வெண்ணிலா பழைய சம்பவங்களின் தாக்கத்தில் சூர்யாவின் வீட்டு வாசலிலேயே தயங்கி நிற்கவும் குழந்தையை தன் கையில் வாங்கி கொண்ட சூர்யா மறு கையால் வெண்ணிலாவின் கை பற்றி வீட்டினுள் அழைத்து கொண்டு சென்றான்.

அனைவரும் வெண்ணிலாவிடம் சகஜமாக பேசப் பேச வெண்ணிலா ஏதோ தவறு இழைத்து விட்டதைப் போல தயக்கத்துடன் அமர்ந்திருக்க அவளது மன எண்ணங்களை புரிந்து கொண்ட சூர்யா

“நிலா நீ டயர்டா இருப்ப…..கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ…..” என்று கூறவும் இது தான் வாய்ப்பு என்பது போல வெண்ணிலா வேகமாக அவர்களது அறையை நோக்கி சென்றாள்.

அறைக் கதவை திறந்து உள் நுழைந்த வெண்ணிலா அறையின் உள் அமைப்பை பார்த்து கண்கள் கலங்கி நின்றாள்.

குழந்தைக்கு தேவையான அமைப்பில் அந்த அறையை முற்றிலும் மாற்றி அமைத்திருந்தான் சூர்யா.

சுவரெங்கும் பல வண்ணங்களில் படங்கள் ஒட்டப்பட்டிருக்க அறையின் மறுபுறம் குழந்தை விளையாடும் வகையிலான அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.

அறையில் இருந்த மாற்றங்களைப் பார்த்து வெண்ணிலாவிற்கு பேச வார்த்தைகள் வரவில்லை.

அவளது பின்னால் வந்த சூர்யா

“என்ன மேடம்??? உள்ளே போகலயா???” என்று கேட்டான்.

“தேவ்…..” என்றவாறு தயங்கி நின்ற வெண்ணிலாவை பார்த்து புன்னகத்து கொண்ட சூர்யா

“எப்போ நீ ஜனனியை உன் குழந்தையாக நினைச்சியோ அப்போவே நான் முடிவு எடுத்துட்டேன்…..ஜனனி தான் நம்ம பர்ஸ்ட் குழந்தைனு…..அதனால தான் நம்ம கூடவே நம்ம ஜனனிக்கும் எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டேன்…..” என்று கூறவும்

“என்னை மேலும் மேலும் நீங்க சங்கடப்பட வைக்குறீங்க……” என்ற வெண்ணிலாவை பார்த்து மறுப்பாக தலை அசைத்த சூர்யா வெண்ணிலாவை தோளோடு சேர்த்து அணைத்தவாறு அறைக்குள் அழைத்து சென்றான்.

“எதுக்கு சங்கடப்படணும்??? உனக்கு என் கூட சண்டை போட, சந்தேகப்பட முழு உரிமை இருக்கு….அதை நான் தான் புரிஞ்சுக்கல….சின்னப் பொண்ணு கிட்ட நான் பணிந்து போறதானு ஒரு எண்ணம்….அதற்காக எனக்கு ஈகோனு நினைச்சுக்காதே…………லைட்டா ஈகோ தான்…..” என்ற சூர்யாவை பார்த்து வாய் விட்டு சிரித்தாள் வெண்ணிலா.

“தேவ் நீங்களும், நம்ம குழந்தையும் என்னில் சரி பாதி…..இது எந்த காலத்திலும் மாறவே மாறாது….இனி காலம் முழுவதும் என்னுடைய காதல் உங்களுக்கு மட்டும் தான்……அது போல என்னுடைய மொத்த பாசமும் நம்ம ஜனனி பாப்பாவுக்கு தான்…..” என்று வெண்ணிலா கூற

 குழந்தை வெண்ணிலாவைப் பார்த்து அழகாக புன்னகத்தது.

“பார்த்தியா பாப்பாவே சிரிச்சுட்டா…….நடந்தது எல்லாம் நன்மைக்கே……அப்படினு மட்டும் நீ மைண்ட்ல ஞாபகம் வைச்சுக்கோ…..இனிமேல் என் நிலாவோட முகத்தில் எப்போதும் இதே மாதிரி சிரிப்பு மட்டும் தான் இருக்கணும் ஓகே வா???” என்று சூர்யா கேட்கவும்

புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்து கொண்ட வெண்ணிலா

“ஓகே டா தேவாங்கு தேவ்…..” என்று கூற 

மனம் நிறைந்த சந்தோஷத்தோடு தன் மனைவியை பார்த்து புன்னகத்து கொண்டான் சூர்யா.

குழந்தையை தன்னோடு வெண்ணிலா அணைத்துக் கொள்ள, சூர்யா தன் மனைவியை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள இனி சூர்யா வெண்ணிலாவின் குடும்பத்தில் எப்போதும் ஆனந்தம் மட்டுமே நிலைத்து இருக்கும்.

பலவிதமான மேடு பள்ளங்களைத் தாண்டி இந்த நிலவும், சூரியனும் காதல் வானில் ஜனித்திருக்க இந்த அழகிய காதல் மேன் மேலும் வளரும் என்று நம்பிக்கையோடு நானும் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்……