EnJeevanNeyadi4

4

இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்; இத்தகைய சலனங்களுக்கு ஆட்படாத நடுநிலையே வாழ்க்கையாகும்.

ஆனால் நம்மால் அப்படி இருக்க முடிகிறதா என்ன? வாழும் நீர்க்குமிழி வாழ்க்கைக்குள் எத்தனை துவேஷங்கள்? எத்தனை துரோகங்கள்? எத்தனை ஏமாற்று? எத்தனை பொய்புரட்டு?

உண்மையில் இவற்றால் எதையாவது நம்மால் சாதிக்க முடிந்ததா என்று மரணப்படுக்கையில் ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தால், வாழ்வின் தாத்பரியம் அவனுக்குப் புரிந்துவிடும். ஆனால் அப்போது அதைப் புரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

வெகுசிலரே வாழ்வின் சாரத்தைப் புரிந்து வாழ முயற்சிக்கின்றனர். தவறு செய்யாத மனிதன் என்று உலகில் யாருமே கிடையாதுதான். ஆனால் தான் செய்த தவறுக்கு மனம்வருந்தி அதன் பாதகங்களைக் களைய முற்படுபவனே நல்ல மனிதன்.

மனமறிந்து எந்த பாவமும் செய்ததில்லை என்றாலும் அறியாமல் செய்த பாவம் அலர்மேல்மங்கையை வெகுவாக வாட்டியது. அமைதியற்றுத் தவித்தார் அவர். அவரது உள்ளுணர்வுகள் உணர்த்தும் செய்திகள் அவ்வளவு உவப்பாக இல்லை.

நம்ப வேண்டிய நேரத்தில் கோமதியை நம்பாமல் போனேனே என்று அலைபாய்ந்த மனதோடு சரஸ்வதியிடம் புலம்பித் தீர்த்தார். அவரை அமைதியாக இருக்கும் படி சமாதானப்படுத்திவிட்டு வெளியே வந்து அமர்ந்த சரஸ்வதிக்குள் எண்ணங்களின் ஊர்வலங்கள்.

சரஸ்வதி கணவனை இழந்து சேதுபதியிடம் தஞ்சமாக வந்து சேர்ந்த காலகட்டம் அது. அர்ஜுனின் பிள்ளை முகம் பார்த்து கவலைகளை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த தருணத்தில்தான், மாதவனுக்கு தேவதை எனப் பிறந்தவள் சுபத்ரா.

பெயர் வைக்கும் போதுகூட அர்ஜுனுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று சேதுபதி தேடி வைத்த பெயர் அது. மருமகளே என்று ஆசையாக அழைத்துக் குழந்தையை குடும்பமே கொண்டாடியது.

பஞ்சுப் பொதியைப் போல கொள்ளை அழகுடன் இருக்கும் குழந்தையை விட்டு நகர மாட்டான் அர்ஜுன். ஸ்வேதாவுக்கும் அப்பொழுது ஒன்றரை வயதுதான். தத்தித் தத்தி நடக்கும் அவளையும் அர்ஜுனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் மாதவனின் பிள்ளையை மருமகள் என்றே பத்மாவும் சேதுபதியும் கொண்டாடுவது மணிவாசகத்துக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இதே போக்கு நீடித்தால் பின்னாளில் தான் போட்டு வைத்திருக்கும் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணி சேதுபதி மாதவனின் நட்பை பிரிக்க பல வகையில் முயன்றார் மணிவாசகம்.

ஆனால் அவர் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் வீணானதோடு, சேதுபதியும் அவரது இழிசெயல்களை கண்டுகொண்டு வெகுவாக எச்சரிக்கை செய்தது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது மணிவாசகத்திற்கு.

என்ன மனதில் தோன்றியதோ சேதுபதிக்கு…? அனைத்து சொத்துக்களையும் அர்ஜுன் சுபத்ரா இருவர் பேரிலும் சேர்த்து எழுதியவர், உரிமையை மட்டும் தன்வசம் வைத்துக் கொண்டார்.

இது மிகுந்த ஆத்திரத்தை மணிவாசகத்துக்கு ஏற்படுத்தியது. மாதவனைக் குடும்பத்தோடு ஒழித்தால்தான் தான் தன் மகளைக் கொண்டு இந்த வீட்டின் அதிகாரத்தைப் பெற முடியும் என்று திட்டம் போட்டார்.

அர்ஜுனின் ஏழாவது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடிவிட்டு அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் போது விபத்தை ஏற்படுத்த ஆட்களை செட் செய்தவர் கவனமாக அவர் குடும்பம் போகாமல் தவிர்த்துக் கொண்டார்.

அலர்மேல்மங்கைக்கும் அப்போது ஏதோ உடல்நலக் குறைவால் அவரும் செல்லவில்லை. அவருக்குத் துணையாக சரஸ்வதியும் இருந்து கொள்ள, சேதுபதியின் குடும்பமும் மாதவனின் குடும்பமும் மட்டும் சுற்றுலா சென்றனர்.

அனைவரும் ஒழிந்தாலும் நிம்மதிதான் என்று குதூகலமாக நினைத்துக் கொண்டார் மணிவாசகம். அந்த விபத்தில் சேதுபதி பத்மா மாதவன் மூவரும் இறந்துவிட அர்ஜுனுக்கு தலையில் அடிபட்டது.

மணிவாசகத்தைத் தவிர அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நடந்த கொடூரம். தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிய அர்ஜுன் மீண்டு வர ஒரு மாத காலமானது. அவனுக்கு அதுவரை நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மறந்தும் போயின.

“சிரமப்பட்டு எதையும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டாம். வலுக்கட்டாயமாக எதையும் அவனுக்கு நியாபகப் படுத்த வேண்டாம் அது அவனது மனநிலையை பாதிக்கும்” என்று மருத்துவர்கள் கூறவும், அவனுக்கு ஏழு வயதிற்கு முந்தைய நிகழ்வுகள் நினைவுக்கு வராமலே போனது.

தந்தையையும் தாயையும் இழந்த பிள்ளைக்கு அனைத்துமாக மாறிப்போனார் அலர்மேல்மங்கை. பெற்ற பெண்ணையும் மாப்பிள்ளையையும் இழந்து மனவேதனையில் உழன்ற போதும், பேரனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்த அலர்மேல்மங்கை, மாதவனை இழந்து தவித்த கோமதியை கவனிக்கத் தவறினார். சற்று சித்தம் தெளிந்து அவர் பார்க்கும் போது அனைத்தும் கைமீறிப் போயிருந்தது.

அதற்குள் மனதளவில் பெரும் சித்ரவதையை அனுபவித்திருந்தார் பயந்த சுபாவமுடைய கோமதி. வேண்டுமென்று தன்மீது அபாண்டமாக பழி போடும் மணிவாசகத்தின் சூழ்ச்சிகளை அலர்மேல்மங்கையிடம் நிரூபிக்க முடியாமல் போனது கோமதிக்கு.

கணவனையும் இழந்து தன்மானத்தையும் இழந்து இங்கிருக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வரவைத்தது மணிவாசகத்தின் சில கேவலமான நடவடிக்கைகள்.
மருத்துவமனையிலேயே வைத்து அர்ஜுனையும் கொன்று விடுவேன் உன் பிள்ளையையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதில் ஏகத்துக்கும் பயந்து போன கோமதி இதையெல்லாம் யாரிடம் கூறுவது என்றுகூட தெரியாமல் தவித்துப் போனார்.

“அனைத்து சொத்துக்களையும் அர்ஜுன் பெயருக்கு மாற்றி எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஊரைவிட்டே ஓடிவிடு. உன் மானமும் உன் பிள்ளையின் உயிருமாவது மிஞ்சும்” என்று மிரட்டிய மணிவாசகத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை கோமதிக்கு.
பெரும் புத்திர சோகத்தில் ஆழ்ந்திருந்த அலர்மேல்மங்கைக்கு இவை யாவும் அந்த நேரத்தில் தெரியாமல் போனதுதான் கொடுமை.

ஓரளவு பேரனைத் தேற்றிக் கொண்டு அலர்மேல்மங்கை சுதாரித்து வந்த போது, வீட்டில் நடந்த சம்பவங்கள் அவருக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. கோமதியின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கி மகன் மணிவாசகமும் மருமகள் லோகேஸ்வரியும் கூறிய கதைகளை நம்ப முடியவில்லை அவரால்.

மகனை நம்பவா அல்லது கோமதியை நம்பவா ஒன்றும் புரியவில்லை அவருக்கு. ஆனால் எது எப்படியோ, மாதவனின் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு உண்டு என்பது அலர்மேல்மங்கைக்கு தெரியும். தன்னை அம்மா என்று அழைத்து அன்பைக் காட்டும் மாதவனின் இழப்பும் அவரை வெகுவாக வருத்தியது.
ஆனால் சில நாட்களிலேயே அனைத்து சொத்துக்களையும் அர்ஜுன் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஊரைவிட்டே கோமதி சென்றுவிட்ட பிறகுதான் அலர்மேல்மங்கைக்கு தனது மகனின் சூழ்ச்சிகள் புரிய ஆரம்பித்தன.

அதற்கு ஏற்ப மகள் மற்றும் மருமகன் இறப்பு விபத்து அல்ல கொலை என்ற சந்தேகம் போலீசுக்கு வரவும் சற்று சுதாரித்தார் அலர்மேல்மங்கை. மகனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கலானார். சில சந்தேகங்கள் ஊர்ஜிதமான போதும், கேவலம் சொத்துக்காக உடன்பிறந்தவளைக் கொல்லும் அளவுக்குச் சென்றிருக்க மாட்டார் என்று சிறு நம்பிக்கை இருந்தது அவருக்கு.

அளவுக்கு மீறிய பாசத்தை செயற்கையாக அர்ஜுன்மீது மணிவாசகமும் லோகேஸ்வரியும் பொழிவதைக் காணும்போது, அவர்களிடம் இருந்து அர்ஜுனை எச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் அலர்மேல்மங்கைக்கு.

சில நேரங்களில் மணிவாசகத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவரை பாம்பென்பதா பழுதென்பதா என்றே புரியாமல் போகும்.

ஆனால் கோமதியை மனம் வெறுத்து ஊரைவிட்டு செல்லும் நிலைக்குக் கொண்டு வந்தது தன் மகனே என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. கோமதியின் மீது நம்பிக்கை கொண்டு அவளுக்கு பக்கபலமாக இருக்காமல் போனேனே என்று அவர் வருந்தாத நாட்களே இல்லை.

இத்தனை வருடங்களாக தனது குற்ற உணர்வை போக்கிக் கொள்ள கோமதியையும் அவளது குழந்தையையும் தேடாத இடம் கிடையாது. திடுமென மாயமாக மறைந்தது போல மறைந்து விட்டவள் எங்காவது நலமாக இருந்தால் போதும் என்பதே அவரது தினசரி பிரார்த்தனையானது.

ஆனால் திருமண வயது வந்தபோது அர்ஜுன் ஸ்வேதாவைத் திருமணம் செய்ய விரும்பியதும் அதற்கு மணிவாசகம் காட்டிய ஆர்வமும் அவரின் திட்டங்களைத் தெளிவாகக் காட்டியது. ஸ்வேதாவும் அவரது பேத்திதான் இருந்தாலும் அர்ஜுனுக்கு ஏற்ற இணை அவள் இல்லை என்ற எண்ணம் அலர்மேல்மங்கைக்கு உண்டு.

இதுவரை பிடிகொடுக்காமல் திருமணத்தை தள்ளி போட்டாயிற்று. அவனும் அலர்மேல்மங்கை பார்த்த பெண்களை பிடிக்கவில்லை என்று தட்டிக் கழித்தாயிற்று. இனி இவருக்குப் பின் அர்ஜுன் தான் நினைத்ததை கண்டிப்பாக நடத்திக் கொள்வான்.

வியாபாரத்தில் பெரும் வெற்றி கொள்பவன் வாழ்வில் வெற்றி பெறாமலா போய்விடுவான். அவன் விருப்பப்படி அவன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவனுக்கும் உரிமை உண்டுதானே. இதுகுறித்து அலர்மேல்மங்கையிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் சரஸ்வதி.

காலம் தன் கடமையைச் செய்ய என்றுமே தவறியதில்லை. வழக்கம் போலவே சூரியனும் சந்திரனும் தத்தம் பணிகளைச் செய்ய மறுநாளும் விடிந்தது.

முக்கிய கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக அர்ஜுனின் வீட்டிற்கு வந்த ஸ்ரீராம் பணியாளர் போட்டுக் கொடுத்த காபியை பருகியபடி அர்ஜுன் அறையின் சிட்அவுட்டில் அமர்ந்திருந்தான். அர்ஜுன் குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தான்.
ஆடிட்டர் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய முக்கிய கோப்புகள் அவை. ஆகவே மெனக்கெட்டு ஸ்ரீராமே நேரடியாக வந்திருந்தான். நல்ல மணமுடைய ருசியான காபி துளித் துளியாக தொண்டையில் இதமாக இறங்கிக் கொண்டிருந்தது.

தோட்டத்தைப் பார்வையிட்டபடி நின்றிருந்தவனின் பார்வை வெளி கேட்டில் கூர்க்காவிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் மீது படிந்தது. அவரது தோற்றமே வெளியூரில் இருந்து வந்திருப்பவர் என்பதைக் காட்டியது.

அவரது உடல் மொழி கூர்க்காவிடம் ஏதோ கெஞ்சுகிறார் என்பதையும் காட்டியது. இன்டர்காமில் கூர்க்காவை அழைத்தவன் விபரம் கேட்க… அலர்மேல்மங்கையை பார்க்க வேண்டும் என்று கூறுவதாக கூர்க்கா பதிலளித்தான். அந்தப் பெரியவரை உள்ளே அனுமதிக்கச் சொன்னான்.

பாட்டியைப் பார்க்க யார் வந்திருப்பது. ஏதேனும் உறவினர்களாக இருக்குமோ என்று எண்ணியவன், விடுவிடுவென்று கீழே இறங்கிச் சென்று அந்தப் பெரியவரை தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்து விசாரித்தான்.

“தம்பி… என் பேரு மருதமுத்துங்க. கோவில்பட்டி பக்கமிருந்து வரேன்ங்க. அலர்மேல்மங்கை அம்மாவப் பார்க்கனும்.”

“என்ன விஷயமா பார்க்கனும் பெரியவரே. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.” ஏதேனும் உதவி கேட்டு வந்திருப்பார் என்ற முடிவுடன் அவன் கேட்க, அவர் வெகுவாக தயங்கினார்.

“அது… அது வந்துங்க… நான் அவங்ககிட்டதான் பேசனும்ங்க. அவங்களைப் பார்க்கலாம்ங்களா?”

அவரது தயக்கத்தைப் பார்த்ததும், ஒருவேளை அர்ஜுனிடம் அவர் விபரத்தைக் கூறலாம் என்று எண்ணி வீட்டினுள் அழைத்துச் சென்று அமர வைத்து, களைப்பாக இருந்தவருக்கு காபி வரவழைத்துக் கொடுத்தான்.

அர்ஜுனுக்கு தகவல் சொல்லவும் கீழே இறங்கி வந்தவன் மருதமுத்துவைப் பார்த்து புருவத்தை சுருக்கினான். யார் என்று அவனுக்கும் தெரியவில்லை. உறவினர்களை ஓரளவுக்கு அவனுக்குத் தெரியும். இவர் கண்டிப்பாக உறவினர் இல்லை.

பார்க்கவும் வெள்ளந்தி மனிதராக இருந்தார். உதவி கேட்டு வந்தவர் போலவும் இல்லை. ஒருவேளை பாட்டிக்குத் தெரிந்தவராக இருக்கலாம் என்ற நினைப்பில்,

“பெரியவரே, பாட்டிக்கு ரொம்பவும் உடம்புக்கு முடியல. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். நான் அவங்க பேரன்தான். என்ன விஷயமோ என்கிட்டயே சொல்லுங்க.”

“என்ன ஆச்சுங்க தம்பி அவங்களுக்கு. இப்ப எப்படி இருக்காங்க?”

மருதமுத்துவிடம் பாட்டியின் நிலையை சுருக்கமாக கூறியவன், அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மருத்துவர் கூறியதையும் கூறினான். என்ன விஷயமோ என்னிடம் சொல்லுங்கள், என்னால் முடிந்ததை செய்கிறேன் என்றும் கூறினான்.

அர்ஜுன் பாட்டியின் உடல்நிலையைப் பற்றி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார் மருதமுத்து. சுபத்ராவைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று கோமதி அவ்வளவு தூரம் சொல்லியிருக்கும் போது அர்ஜுனிடம் எதுவும் கூற பிரியப்படவில்லை அவர்.
இனி என்ன செய்வது என்று புரியாமல் வெகுவாக தளர்ச்சியைக் காட்டியது முகம்.

சுபத்ராவுக்கு ஏதேனும் உதவி கிடைக்கும் என்று எண்ணி வந்திருக்க, அலர்மேல்மங்கை உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது என்ன உதவியைக் கேட்க முடியும் அவரால்.

எழுந்து கைகூப்பியவர், “அப்ப நான் கிளம்புறேங்க. கடவுள் அருளால அவங்களுக்கு எதுவும் ஆகாது. நல்லாயிருப்பாங்க. நான் வந்த விஷயத்தை அவங்ககிட்டதான் சொல்லனும். வேற யார்கிட்டயும் சொல்ல முடியாத நிலையில நான் இருக்கேங்க. நான் அப்புறமா வந்து பார்க்கறேங்க.” என்று மிகுந்த வருத்தத்தைக் காட்டிய முகத்தோடு விடைபெற்றார்.

‘என்ன விஷயத்துக்காக இவ்வளவு தூரம் வந்தாரோ… முக்கியமான விஷயமாக ஏதும் இருக்குமோ என்னவோ… மனிதர் வெகுவாக ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்கிறார் பாவம்’ என்று எண்ணிய ஸ்ரீராம்,

“இவ்வளவு தூரம் வந்துட்டு பாட்டியை பார்க்காம போறீங்களே. நாங்க இப்ப ஹாஸ்பிடல்தான் போறோம். எங்ககூட ஹாஸ்பிடல் வாங்க. அவங்களைப் பார்த்துட்டு போங்க. அவங்க உடல்நிலை கொஞ்சம் தேறினதும் உங்களைப் பற்றி அவங்ககிட்ட சொல்றோம்.”

வந்ததற்கு அந்த பெண்மணியைப் பார்த்து விட்டாவது செல்வோம் என்று முடிவெடுத்த மருதமுத்து சரியென்று தலையசைத்தார்.

அவர் குளித்துக் கிளம்ப விருந்தினர் அறையைக் காட்டியவன், அவரை காலை உணவை உண்ண வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.

ஹாஸ்பிடல் அறையினுள் நுழைந்தனர் மருதமுத்துவும் ஸ்ரீராமும். அர்ஜுன் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தான். அலர்மேல்மங்கைக்கு உடலைத் துடைத்துவிட்டு, அவரைச் சற்று சாய்வாக படுக்க வைத்திருந்தார் சரஸ்வதி.

நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அலர்மேல்மங்கை. மௌனமாக உள்ளே சென்று அவரைப் பார்த்தபடி நின்றிருந்தனர் இருவரும். சரஸ்வதி மருதமுத்துவை யார் என்று கேட்க விபரத்தைக் கூறியிருந்தான் ஸ்ரீராம்.

சரஸ்வதிக்கும் அவரை யாரென்று எதுவும் தெரியாததால், என்ன விஷயத்துக்காக அவர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

மருதமுத்துவிடம் கேட்டும் பலன் இல்லை. தான் பிறகு வருவதாகச் சொல்லி மருதமுத்து விடைபெற்ற நேரம் மூதாட்டியின் விழிகள் லேசாக அசைந்தன. கண்களை மெதுவாக விழித்துப் பார்த்தவரின் பார்வை வட்டத்தினுள் மருதமுத்து விழுந்தார்.
கேள்வியும் ஆராய்ச்சியும் கலந்த பார்வையால் மருதமுத்துவை ஆழ்ந்து பார்த்தவரின் விழிகள் ஏதும் புரிந்து கொள்ள முடியாமல் சரஸ்வதியை நோக்கியது.

“கோவில்பட்டியில இருந்து வந்திருக்காங்கம்மா. யாருன்னு தெரியல. உங்ககிட்ட பேசனும்னு வந்திருக்காங்க.”

சரஸ்வதி அலர்மேல்மங்கையிடம் பேசிக்கொண்டிருந்த நேரம் அர்ஜுன் மருத்துவர்களோடு உள்ளே நுழைந்தான். அலர்மேல்மங்கையை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை முறைகளை சரிபார்த்துவிட்டு மாற்றிக் கொடுக்கவேண்டிய மருந்துகளை மாற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறினர்.

அலர்மேல்மங்கையின் பார்வை மருதமுத்துவையே சுற்றி வந்தது. நேற்றிலிருந்து கோமதியின் நினைவுகள் துளைத்து எடுக்கின்றன. ஒருவேளை அவளைப் பற்றிய தகவல்களைக் கூற வந்திருப்பாரோ… உள்ளுணர்வுகள் உறுதியாக கூறியதில், மெல்லிய குரலில்,

“என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க ஐயா.”

தன்னுடன் நின்றிருந்த மூவரையும் ஒருமுறை தயக்கமாகப் பார்த்த மருதமுத்து.

“அது… வந்துங்கம்மா… நான் உங்ககிட்ட தனியா ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசனும்ங்க.”

இடையில் குறுக்கிட்ட அர்ஜுன், “பெரியவரே அவங்க ரொம்ப முடியாம இருக்காங்க. அவங்க நல்லபடியா ஆனதும் நீங்க வாங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாது இப்ப.”

மெல்லிய உறுதியான குரலில், “எனக்கு இப்ப பரவாயில்லை அர்ஜுன். நான் அவர்கிட்ட பேசிக்கறேன். நீ கொஞ்சநேரம் வெளிய இரு.”

யாரோ? எவரோ…? அவரோடு பாட்டியைத் தனியே விட அவனுக்கு விருப்பமில்லாத போதும், அருகே செவிலிப் பெண்கள் இருப்பதால் அறையைவிட்டு வெளியேறினான். அவன் பின்னே ஸ்ரீராமும் சரஸ்வதியும் வெளியேறினர்.

மூவரும் வெளியேறியதும் தனது பையிலிருந்து சேதுபதியும் மாதவனும் இணைந்து இருந்த புகைப்படத்தையும் அவர்கள் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தையும் எடுத்துக் காட்டினார் மருதமுத்து. அந்த முதியவளின் சோர்ந்த விழிகள் ஒளிபெற்றன.

“மா… மாதவன்… என் மாப்பிள்ளை ஃபோட்டோ உங்ககிட்ட… கோ… கோமதி எங்க இருக்கா? உங்களோட இருக்காளா? நா… நான் உடனே பார்க்கனும் அவளை. என் பேத்தி எப்படியிருக்கா?.” பரபரப்போடு எழுந்துகொள்ள முயன்றார். அவரால் முடியாது போகவும் ஆயாசத்தோடு சாய்ந்தவர், இறைத்த மூச்சுகளோடு,
“கோமதி நல்லாயிருக்காயில்ல? வந்திருக்காளா உங்ககூட?” உறுதியாக நம்பியது அவரது உள்ளம். மருதமுத்துவை அனுப்பியது கோமதிதான் என்று. அவரைப் பேசவிடாமல் மூச்சிறைக்கப் பேசினார்.

“அம்மா…. பதட்டப்படாதீங்க. கோமதியும் உங்க பேத்தியும் எங்ககூடதான் இருந்தாங்க இத்தனை வருடங்களாக.” மெதுவாக கோமதி அடைக்கலமாக எட்டையபுரம் வந்ததிலிருந்து கோமதியின் இறுதிகாலம் வரை கூறி முடித்தார்.
கரகரவென்று கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது அலர்மேல்மங்கைக்கு.

உடலெல்லாம் உதறவும் பதறிப் போனார் மருதமுத்து. அவர் ஆசுவாசம் அடைய செவிலி உதவவும் சப்தம் கேட்டு உள்ளே வந்தான் அர்ஜுன்.

“என்ன ஆச்சு பாட்டிக்கு? அவங்க இப்படி பதட்டப்படற அளவுக்கு என்ன சொன்னீங்க? இதுக்குதான் அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொன்னேன்.” என்று மருதமுத்துவை வெகுவாக கடிந்து கொண்டான் அர்ஜுன்.

அதற்குள் சற்று ஆசுவாசம் அடைந்திருந்த பாட்டி, “அர்ஜுன் அவரை எதுவும் சொல்லாதப்பா. இப்ப எனக்கு அவர் கடவுளாதான் தெரியறாரு. இருபது வருஷமா நான் தேடிகிட்டு இருந்த என் நிம்மதியை என் கடைசி காலத்துலயாவது என்கிட்ட சேர்க்க வந்திருக்காரு.”

புரியாமல் பார்த்தவனை கெஞ்சும் விழிகளோடு பார்த்தவர், “நான் ஒன்னு சொல்லுவேன் ஏன் எதுக்குன்னு கேக்காம செய்யனும் நீ.”

“எதுக்குப் பாட்டி நீங்க கெஞ்சுறீங்க? என்ன செய்யனும்னு சொல்லுங்க பாட்டி.”

“நீ தாமதிக்காம உடனே கிளம்பி இவர்கூட இவர் ஊருக்குப் போ. அங்க என் பேத்தி இருப்பா. அவளைக் கையோட கூப்பிட்டுகிட்டு வா. கூடவே சரஸ்வதியையும் கூட்டிட்டு போ. வயசுப் பொண்ணு உன்னோட வர யோசிச்சாலும் யோசிக்கும். சரஸ்வதியைக் கூப்பிடு நான் அவகிட்ட பேசனும்.”

தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை அவனுக்கு. இத்தனை வருடங்களாக இல்லாத பேத்தி திடீரென்று எங்கிருந்து வந்தாள். முதலில் யார் அவள்? அவளை அழைத்துவர நான் ஏன் போக வேண்டும். உள்ளுக்குள் பல குழப்பங்கள் கும்மியடித்த போதும் பாட்டியின் வார்த்தைக்காக சரி என்றான்.

பாட்டிக்கு இரண்டே பிள்ளைகள் பத்மாம்மாவுக்கு மகன் நான். மணி மாமாவுக்கு மகள் ஸ்வேதா. நாங்கள் இருவரும்தான் பேரன் பேத்தி. இடையில் வேறு யார் புது பேத்தி. உள்ளுக்குள் கேள்விகள் குடைய சரஸ்வதியிடம் வந்து பாட்டி பார்க்க விரும்புவதைக் கூறினான்.

பாட்டியிடம் பேசிவிட்டு வந்த சரஸ்வதியின் முகத்திலும் சந்தோஷ சாயல்கள்.

“கண்ணா… உடனே மதுரைக்கு ஃப்ளைட் இருக்கான்னு பார்த்து புக் பண்ணு. நானும் நீயும் போகனும். கூடவே மருதமுத்து ஐயாவும். நான் உடனே வீட்டுக்குப் போய் பயணத்துக்குத் தேவையானதை ரெடி பண்ணிடறேன்.”

“பெரியம்மா… நாம யாரைப் பார்க்கப் போறோம்? யார் அவங்க அவ்வளவு முக்கியமானவங்க? இத்தனை வருஷமா எனக்கு எதுவுமே நீங்க சொன்னதில்லையே.”

“கண்ணா உனக்குத் தெரியக்கூடாதுன்னுலாம் எதுவுமே இல்லைப்பா. நாங்களா உனக்குப் பழைய விஷயங்களை நினைவு படுத்தக் கூடாதுன்னு டாக்டர் சொன்னதால நாங்க எதுவுமே உன்கிட்ட சொன்னதில்லை.

நாம பார்க்கப் போறது உன் அப்பாவோட உயிர் நண்பரோட பொண்ணை. போகும்போது உனக்கு எல்லா விபரமும் சொல்றேன். நாம இப்ப கிளம்பலாம். வரும்போது அந்தப் பொண்ணும் நம்மகூட வரும்பா.” என்றுகூறியபடி அவர் வெளியேற…

அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீராம் அருகே சென்று அமர்ந்த அர்ஜுன்,

“உஃப்… நான்கூட ஏதோ படத்துலலாம் வர்ற மாதிரி எனக்கும் ஸ்வேதாவுக்கும் இடையில வர்ற வில்லியோன்னு பயந்துட்டேன். எங்க அப்பாவோட நண்பர் பொண்ணாம். ஏதாவது உதவி செய்வாங்களா இருக்கும்.” என்று அமைதிப் பெருமூச்சு விட்டவனை ஆழ்ந்து பார்த்த ஸ்ரீராம்,

“எனக்கு என்னவோ அப்படி சாதாரணமா தெரியலை. படுக்கையில இருக்கற பாட்டியே பதறிப் போறாங்க. சரோம்மா சின்னப்பிள்ளை மாதிரி குதூகலமா ஓடறாங்க.

அந்தப் பொண்ணைப் பார்க்கப் போற சந்தோஷம் இரண்டு பேர் முகத்துலயும் தெரியுது. அந்தப் பொண்ணு சாதாரணப் பொண்ணா இருக்காது.

பார்க்கலாம் சரோம்மா நடந்தது எல்லாம் சொல்றேன்னு சொல்லியிருக்காங்கல்ல. எனக்கும் அது யார்னு பார்க்கனும் போல இருக்கு நானும் வரேன்.”

“நானே உன்னைக் கூப்பிடனும்னுதான் இருந்தேன். அது அந்த மகாராணியைப் பார்க்க இல்லை. எனக்குத் துணைக்கு.” ஏனோ அவ்வளவு எரிச்சல் மண்டியிருந்தது அர்ஜுனின் குரலில்.

—-தொடரும்.

error: Content is protected !!