MayavaninMayilirage15

அத்தியாயம் 15

மறுநாள் காலை அபிஜித் வழக்கம்போல அலுவலகத்திற்கு தயாராக, அப்பொழுதும் கூட பாப்பு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

முதல் நாள் இரவு வீட்டிற்கு வரும்போதே காரில் தூங்கியவள், உணவுண்ணக் கூட எழும்பவில்லை. அபிஜித் மட்டும் பயண களைப்பு போக குளித்து கீழே வந்தான்.

இவன் வரவுமே ஜனனி சந்தோஷமாக இவனருகில் வர, அவளது தலையை பாசத்துடன் வருடினான்.

“எப்படா வந்தீங்க”

“காலைலயே வந்துட்டோம்ணா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தா, எங்களுக்குதான் சர்ப்ரைஸ், யாருமே இல்ல!”

அவள் சாதாரணமாக கூறுவதைப்போல தோன்றினாலும் அதில் இருந்த ஏமாற்றத்தை அறிந்தவனுக்கு சங்கடமாய் போனது. அவனுக்கு தெரியும் தன் பிறந்தநாளைக் கொண்டாடத்தான் வந்திருப்பார்கள் என்று.

“அது நீங்க வரீங்கன்னு தெரியாதுடா “அவன் வருத்தத்துடன் கூறவுமே,

“பரவால்லண்ணா சொல்லிட்டு வராதது எங்க தப்புதான” என்ற பேச்சில் கோபம் இருக்கிறதா என்று பார்க்க, அதில் வருத்தமே எஞ்சி நின்றது. அதில் தெளிந்தவன் மேலும் சில விசயங்களை பேசிக்கொண்டிருந்தபோது, மற்ற மூவரும் அவ்விடம் வந்தனர்.

தாத்தா பாட்டியிடம் நலம் விசாரித்தவன், அன்னையிடம் எதுவும் பேசவில்லை. அதுகுறித்து காயத்ரியும் கண்டுகொள்ளவில்லை. மகனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆசையாய் பெற்ற முதல் பிள்ளை இவன். அப்படியே தந்தையைப் போல ஜாடை. ஆனால் அருகில் வைத்துப் பார்க்க முடியாமல் விதி இவனை பிரித்து விளையாட்டு காட்டுகிறது.

தந்தையும் மகனும் அவ்வளவு ஒட்டுதல். பள்ளிக்கு போகும் நேரம் போக மீதி நேரத்தை தந்தையுடனேயே கழிப்பான் சிறுவன் அபிஜித். அதனால் இயல்பிலேயே அவருடைய அத்தனை பழக்கவழக்கங்களும் இவனுக்கும் உண்டு.

ஆனால் இப்பொழுது அவரை விட்டே இவ்வளவு வைராக்கியமாய் விலகி இருக்கிறானே! இவனுக்கு இத்தனை பிடிவாதம் எங்கிருந்துதான் வந்ததோ! என எண்ணாத நாளில்லை.

காயத்ரி கூட கணவரிடம் சொல்லிப் பார்த்துவிட்டார். என்னிடம்தான் கோபமெல்லாம், நீங்கள் சென்று அவனைப் பார்த்து வாருங்கள் என்று. ஆனால் அவரோ, “உன்னை ஏற்றுக்கொள்ளாத உறவு எனக்கும் தேவையில்லை. அது மகனாயினும் கூட” என மறுத்து விட்டார். அதில் காயத்ரிக்கு இன்னும் அவர்மேல் பாசமும், மரியாதையும் அளவில்லாமல் கூடத்தான் செய்தது.

தந்தை தன்னை சந்திக்க வருவார், என எதிர்பார்த்த அபிஜித் அவர் வராமல் போகவே, அவரும் தன்னை ஒதுக்கிவிட்டதாகவே கருதி அவரை விட்டும் ஒதுங்கினான், இன்றுவரையும். ஆனால் அவர்கள் ஒட்டாமல்தான் இருக்கிறார்களா? இல்லை, சில உறவுகள் அப்படித்தான், தூர நிற்பது போல இருந்தாலும் அவை அப்படியல்ல!

ஜனனியும் அண்ணன் வந்து பேசவுமே, பாப்புவைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவனோடு பேசிக்கொண்டிருந்தாள். அபிஜித் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்க அமைதியாய் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் அண்ணன் என்ற பாசம் இருந்தாலும், அவனைப் பற்றிய பிரமிப்பும், மரியாதையுமே அதிகம் இருக்கும். சாதாரண சகோதர, சகோதரிகளைப் போல அடிதடி சண்டைகளோ, கலாட்டாக்களோ, பிடிவாதங்களோ, கோபங்களோ, சமாதானங்களோ இருக்காது.

ஒருவேளை ஜனனியும் சரிக்கு சரி வாயாடி, அவனை கலாட்டா செய்து, அவனுடன் விளையாடி இருந்திருந்தால் அவனும் அதையே பிரதிபலித்திருப்பானோ என்னவோ! அதாவது இப்போது பாப்புவுடன் இருப்பது போல.

ஆனால் மரியாதையான பேச்சு மட்டுமே அவளிடமிருந்து வர, அவனும் அப்படியே தள்ளி நின்று கொண்டான். இப்போதும் அப்படியே அவனுக்கும் தங்கைக்கும் இடையில் இரண்டு பேர் அமரக்கூடிய அளவு இருந்த நிரப்பப்படாத இடைவெளி அவர்கள் உறவின் இடைவெளியைதான் பறைசாற்றியது.

உறவில் எப்போதும் நாம் எதை கொடுக்கிறோமோ, அதுவே பிரதிபலிக்கப்படும்!

பின் சாப்பிடும் நேரமாகவும் பொன்னம்மா அனைவரையும் சாப்பிட அழைக்க, இங்கும் ஒரு முறை தங்கைக்காக அவள் வாங்கி வைத்திருந்த கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினான் அபிஜித்.

ஜனனி தன் அண்ணனிற்காக பார்த்து பார்த்து வாங்கிய, வைரத்தில் “அபி” என எழுதப்பட்ட செயினை பரிசாக கொடுக்க, அதை மறுக்காமல் பெற்றுக்கொண்டான்.

கேக் வெட்டும் போது மின்னலாய் கூர்க்கில் கேக் வெட்டிய நினைவு எழ, கண்கள் தானாக அவனறையைப் பார்த்தது. அவன் எண்ண அலைகள் மரக்கதவையும் மீறி அதனுள்ளே இருந்தவளிடம் தஞ்சமடைந்தது.

அவன் பார்த்ததை ஜனனியும் பார்த்துவிட, அண்ணன் அந்தப் பெண்ணைத்தான் தேடுகிறான் என்று புரிந்ததும் மீண்டும் பாப்புவின் மேல் ஒருவித பொறாமை வந்து அப்பிக்கொண்டது இந்த சகோதரிக்கு!

அவன் சாப்பிட்டு அவனறைக்கு செல்லும்போது பாப்புவிற்காக பிளாஸ்க்கில் பாலும், சில பழங்களும் எடுத்துச் செல்ல, “ஏன் மகாராணி இதை கீழ வந்து சாப்பிட மாட்டாங்களோ?” என்ற எண்ணமும் ஜனனிக்கு எழாமலில்லை. இப்படி அவளுக்கே தெரியாமல் பாப்புவின் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

அபிஜித் காலை பயிற்சியை முடித்து கொண்டு, அப்போதுதான் பக்கத்து அறையில் குளித்து தயாராகியவன், இங்கு அவனது அறைக்கு வந்து, ஜனனி கொடுத்த செயினைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டிருந்தான்.

உறங்குவதற்கு மட்டுமே இந்த அறை வருபவன், மற்றபடி பக்கத்து அறையையே உபயோகித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் பாப்பு மெதுவாக கண்விழித்தாள். விழித்ததும் அபிஜித் கண்ணில் பட, “ஜித்து கெளம்பிட்டயா” என படுத்த நிலையிலேயே தூக்க குரலில் கேட்க, அவளது குரலில் செயினை அப்படியே டிரசிங் டேபிளிலேயே வைத்து சிரிப்புடன் திரும்பியவன், “மேடம்க்கு இப்பதான் தூக்கம் தெளிஞ்சதா. எவ்ளோ நேரம் தூங்கற நீ” என கிண்டலாக கேட்டான்.

அவள் “ம்ம்ம்” என சோம்பல் முறிக்க, அவன் மேலும், “ஆமா! ராத்திரி ஒரு பூனை திருட்டுத்தனமா நான் வச்சிருந்த பாலையும் பழத்தையும் காலி பண்ணிருக்கு, அது எந்த பூனைன்னு உனக்கு தெரியுமா” என ஒற்றை புருவத்தை உயர்த்தி மயக்கும் புன்னகையுடன் அவளிடம் கேட்டான்.

அவனது கேள்வியில் தூக்கம் தெளிந்து திருதிருவென முழித்தவள், “ஆமா ஜித்து இங்க ஒரு பூனை இருக்கு” என சுற்றிப் பார்வையை ஓட்டியவள் அவனை கண்சிமிட்டி அருகில் அழைத்தாள்.

அவளது புனைவில் சிரிப்பு வர அதை அடக்கியவன் அவளருகில் செல்ல, அவனை அருகே அமருமாறு சைகை செய்தவள், “அது கருப்பு கலர்ல கொடூரமா இருக்கும், நாலு கால், ஒரு வால் இருக்கும், கண் கோல்ட் கலர்ல மின்னும்” என கண்களை உருட்டி அவனை கபளீகரம் செய்தாள்.

அவளது பாவனையில் மயங்கினாலும், “ஓஹோ அப்படியா! அப்ப அதை முதல்ல பிடிக்கனும்” என அவளை சார்ந்து பேசியவன், “போ போய் தயாராகி வா கீழே போலாம் நேத்தே நீ யாரையும் பாக்கல…அண்ட் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என மூக்கில் ஒற்றை விரல் கொண்டு தட்ட, சிணுங்கினாலும் அது என்ன என்ன என கேட்டவளை வலுக்கட்டாயமாக குளியலறைக்குள் அவளது உடை சகிதம் அனுப்பி வைத்தான்.

குளியல் அறையினுள் சென்றவள், மீண்டும் கதவைத் திறந்து, “ஜித்து அந்த பூனைய விட்டுடாத” என கண்ணிரண்டையும் சிமிட்டி கதவைச் சாற்ற, அவளது சேட்டையில் இவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளும் சமத்தாக விரைவில் குளித்து வந்தாள். தலை வாரும் போது டேபிளின் மேல் இருந்த செயின் அவளை ஈர்க்க, “ஹை! ஜித்து இது ஏது? அழகா இருக்கே! நான் போட்டுக்கவா?” என கழுத்தில் பொருத்தியவாறு கேட்க, அவனது பெயர், அவள் மேல். அதைப் பார்த்தவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள். தலை தானாக அவளுக்கு சம்மதம் சொல்ல, கால்கள் அவளிடம் தானாக அவளிடம் சென்றது.

அவள் அதன் கொக்கிகளை போட முனைய, அவளைத் தடுத்தவன் கண்ணாடியில் அவளை பார்த்தவாறு தானே அவளுக்கு அணிவித்து விட்டான்.

அவளை திருப்பி மீண்டும் ஒருமுறை அழகு பார்த்தவன், பின் நேரமாவதை அறிந்து, அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

இரண்டு நாளைக்கு பிறகு அவளது “பூ” வை பார்த்தவள் அவரருகில் வேகமாக செல்ல பார்க்க, அங்கு புதிதாக இருவரைப் பார்த்ததும் வழக்கம்போல அவனின் பின் ஒன்றினாள்.

“ஜித்து யார் இவங்க”என மெல்லிய குரலில் அவனைக் கேட்க, என்ன சொல்வது என தடுமாறினாலும் , “சொல்றேன் வா” என கை பிடித்து அழைத்துச் சென்றான்.

அங்கு சென்றதும் இவனது உதவி அவளுக்கு தேவையாய் இருக்கவில்லை. பாட்டி புவனாவின் அருகில் அமர்ந்தவள் ஓடும் நதியைப் போல சலசலத்துக் கொண்டிருக்க, புவனாவிற்கு அந்தபுறம் அமர்ந்திருந்த காயத்ரி இவளை ஒருவித ஆராயும் பார்வை, பின் அச்சோ இப்படி இவளுக்கு ஆகியிருக்க வேண்டாம் என்ற கருணை பார்வை, தன் மகனை காப்பாற்றியவள் என்ற நன்றி பார்வை, கடைசியாய் அவளது குழந்தைதனத்தில் தாயாய் ஒரு நேசப்பார்வை என பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் ஜனனியோ எதிரில் அமர்ந்திருந்ததால் அவளை எதிரி போலவே பார்க்கத் தோன்றியதோ? முகத்தில் அப்பட்டமாய் வெறுப்பை காட்டியவாறு அமர்ந்திருந்தாள்.

இவள் பாட்டியுடன் ஒன்றி விடவும் அபிஜித் சாப்பாட்டு மேசையை நோக்கி சென்றான். அவனுக்கு பரிமாற வந்த பொன்னம்மா அவனுக்கு பரிமாறியபடி, “ஆமா கண்ணு என்ன சர்க்கரை, மாவெல்லாம் காலியா இருக்கு… நான் போகும் போது டப்பால நிறைய இருந்தது. என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்” என கேட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று தலையை நிமிர்த்தி பாப்புவை பார்க்க, அவள் திருதிருவென விழித்துக்கொண்டு இவனை பாவமாக பார்த்து வைத்தாள், எதாவது சொல்லேன் என்பதை போல.

அன்றைய தினத்தை நினைத்துசிரிப்பு வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதை போல கண்களை மூடி திறந்தவன், “அது வந்து கோல்ட் மம்மி, இந்த வீட்ல கருப்பா கொடூரமா, நாலு கால், ஒரு வாலோட, கண்ணு கோல்ட் கலர்ல ஒரு பூனை சுத்துது… அந்த பூனையோட வேலைதான். அதுதான் எல்லாத்தையும் கீழ தள்ளிவிட்ருச்சு இல்லடா பாப்பு” என அவளையும் வளையத்துக்குள் இழுக்க,

“ஆமா..ஆமா நானும் பாத்தேன் பொன்னு. அது ரொம்ப மோசமா இருந்தது” என இவள் பங்கிற்கு மேலும் ஒரு பிட்டை சேர்த்து போட்டாள்.

அதைக் கேட்ட பொன்னம்மா, “அப்படியா” என யோசித்தவர், “என் கண்ணுல மாட்டட்டும் அன்னைக்கு இருக்கு அதுக்கு” என பேசிக்கொண்டே சென்றுவிட, இருவரின் முகத்திலும் குறும்பு புன்னகை தவழ்ந்தது.

பிறகு அங்கு இவர்களது செயல்களை கவனித்து சிரித்துக் கொண்டிருந்த காயத்ரியை பார்த்தவள், மெதுவாக பாட்டியின் தோளை சுரண்டி, “பூ இவங்க யாரு?” என கேட்க, “இவங்க உன் ஜித்துவோட அம்மா, அவ அவன் தங்கச்சி” என ஜனனியைக் காட்டி கூறினார்.

“ஹை அப்படியா…நீங்க ஜித்துவோட அம்மாவா! அப்ப நானும் உங்கள அம்மான்னு கூப்பிடவா” என கபடமில்லாமல் கேட்ட அடுத்த நொடி, “நோ” “வேண்டாம்” என இருகுரல்கள் ஓங்கி ஒலித்தன அங்கு. அதைக் கேட்டு பாப்பு ஏன் என ஏக்கமாக காயத்ரியை பார்க்க அவருக்கே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியாதே. எதிர்ப்பு வந்த இடங்கள் அப்படி.

“நோ” என்ற குரல் ஜனனியினுடையது. ‘தன் தாயை எப்படி இந்த பெண் ‘அம்மா’வென அழைக்கலாம்,எற்கனவே அண்ணன், இப்போது அம்மாவையும் அபகரிக்கும் எண்ணமா’ என்று ஏற்கனவே பாப்புவின் மேல் கொண்ட பொறாமையிலும், கோபத்திலும் வந்தது என்றால், அபிஜித்தோ ‘அய்யோ! இவளுக்கும் அம்மான்னா அப்ப நான் இவளுக்கு யாரு?’ என்று நினைத்ததால் “வேண்டாம்” என கத்தியிருந்தான்.

ஒருமித்த பதிலில் அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மற்றவர் மனதில் என்ன நினைக்கின்றனர் எனத் தெரியாமலே இருவரும் ஒற்றுமையாய் பேசியது ஆச்சர்யம்தான். ஆனால் அது மற்றவர்க்கு தெரிய வரும்போது!

வீடே இவர்களை விசித்திரமாக பார்க்க, அதைப்பற்றி கவலைப்படாமல் ஜனனி பாப்புவை கேலிப்பார்வை பார்த்தாள். அவள் பார்வையின் பொருள் பாப்புவிற்கு புரியவில்லை.

அபிஜித் சாப்பிட்டு முடிக்கவும் அவனது அலுவலக வாகனம் வந்ததற்கான ஒலி கேட்டது. அவனது உதவியாளர் வரவும் அவரிடம் ஒரு கோப்பை கொடுத்தவன் காரில் காத்திருக்க கூறினான்.

அவர் சென்றதும் இவனும், “நான் போய்ட்டு வரேன்” என பொதுவாக கூறிவிட்டு வாயிலை நோக்கி செல்ல, பாப்பு இவன் பின்னே எழுந்து ஓடினாள். “ஜித்து நில்லு”

“ஷ்…ஏன் ஓடி வர பொறுமையா வரத் தெரியாது” என அவளைக் கடிய அவள் முகம் சுருங்கி போனது.

இருந்தாலும், “ஜித்து அவங்க உன்னோட அம்மாவா. உன்னோட அம்மாவ நான் அம்மான்னு கூப்பிடட்டா. எனக்குதான் அம்மா இல்லையே. எங்கம்மா வர வரை, உங்கம்மாவ கொஞ்ச நாள் எனக்காக கொடுக்க மாட்டயா. எனக்கு அம்மான்னு கூப்பிட ஆசையா இருக்கு” என மனதில் தோன்றியதெல்லாம் பேச அபிஜித், “வேண்டாம் அவங்கள அத்… ஆன்ட்டினு கூப்பிடு” என கறாராய் கூற , “ஏன்…ஏன்…ஏன் அப்படி கூப்பிட கூடாது. நான் அப்படிதான் கூப்பிடுவேன்” என பிடிவாதம் பிடித்தாள்.

“இல்ல நீ ஆன்ட்டின்னுதான் கூப்பிடற” அவனது கண்டிப்பில் இவள் கண்களில் நீர் நிறைந்தது. அவனுக்கு முதுகு காட்டியவாறு திரும்பி நிற்க, அவளைத் திருப்பியவன் அவள் கண்களை துடைத்து விட்டு, “என்ன இது சின்ன பிள்ளையாட்டம் அழற” என அதட்ட, “நான் சின்ன பிள்ளதான், ஆனா எனக்கே எனக்குன்னு அம்மா இல்ல” என மேலும் அழுதாள்.

‘இதை அப்பப்ப சொல்லி ஞாபகப் படுத்திட்டே இருக்கனுமா, நீ சின்ன பிள்ளையாட்டம் இருக்கறதாலதான் நான் நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம தவிக்கறேன்’ என நினைத்தாலும், அவளை தோளோடு அணைத்தவன், “உனக்கு ஜித்து வேணுமா? வேண்டாமா?”

“வேணும்” உடனே பதில் வந்தது. “அப்ப அவங்களை அம்மானு கூப்பிடாத, ஆன்ட்டினு கூப்பிடு சரியா”

அவள் யோசனைக்கு செல்லவும், “சரி ப்ரிட்ஜ்ல உனக்கு கேக் இருக்கு பொன்னம்மா அம்மாட்ட கேட்டு எடுத்துக்கோ. நான் ஆபீஸ் போய்ட்டு வரேன். சமத்தா மாத்திரை முழுங்கிட்டு இருக்கனும் சரியா” என அவள் மூக்கை பிடித்து ஆட்டி சில நிமிடங்களில் அவளை சிரிக்க வைத்துவிட்டே சென்றான்.

அவனுக்கு கையசைத்து விடையளித்துவிட்டு பாப்பு உள்ளே வரவும் ஜனனி அவளை முறைத்தவாறு நின்றிருந்தாள்.

அபிஜித் அலுவலகத்தில் அவனது அலுவலில் மூழ்கி விட்டான். ஆனால் இன்று அவனை சந்திக்க நினைத்திருந்த ஷௌரியா விமானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

காலையில் அபிஜித்தை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தவனுக்கு வந்த போன்கால் அவன் மும்பை செல்வதற்கான முக்கியத்துவத்தோடு வந்திருந்தது. அதனால் உடனே விமானத்தில் பறந்து விட்டான்.

அவனது டாலு அவனுக்கு முக்கியம்தான். ஆனால் அவளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை ஏனென்றால், அபிஜித் அவளை நன்கு பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்திருந்தது.

அபிஜித்துக்கே தெரியாமல் அவனை கண்காணிக்கவும், அவன் டாலுவுக்கு பாதுகாப்பாகவும் போட்டிருந்த சீக்ரெட் பாடிகாட்ஸ் சேகரித்து தந்திருந்த தகவலால் வந்த நம்பிக்கை அது.

அன்று பாப்பு காயத்ரியுடனும், புவனாவுடனுமே சுற்றிக் கொண்டிருந்தாள். ஜனனியுடன் பேச முயல அவள் முறைத்து பார்க்கவுமே அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பி விட்டாள்.

மதியம் போல் சாப்பிட்டு ஹாலில் அமர்ந்திருக்க, ஜனனி காயத்ரியின் மடியில் படுத்து பாட்டியுடன் கதை பேசிக்கொண்டிருந்தாள்.

இதைப் பார்த்த பாப்புவிற்கு இதுபோல தனக்கும் அம்மாவின் மடி வேண்டுமென பலமாக தோன்ற ஆரம்பித்தது. அதையே முகமும் அப்பட்டமாக பிரதிபலிக்க, “ஜித்து அம்மானுதான கூப்பிட கூடாதுன்னு சொன்னான். மடியில படுக்க வேண்டான்னு சொல்லலயே” என நினைத்தவாறு அவர்களிடம் சென்றாள்.

தாத்தா வெளியில் சென்றிருக்க, பாட்டி, பொன்னம்மா, காயத்ரி, ஜனனி மட்டுமே இருந்தனர். அவர்களிடம் சென்றவள் காயத்ரியைப் பார்த்து, “நான் உங்க மடியில படுத்துக்கவா” என கேட்க,

அதில் கோபம் வரப்பெற்ற ஜனனி, முதல்ல அண்ணன், இப்ப அம்மாவா என்ற எண்ணம் எழ, “இது எங்கம்மா நான்தான் படுப்பேன். நீ உங்கம்மா மடியில போய் படுத்துக்கோ” என தயவுதாட்சணம் பார்க்காமல் எடுத்தெறிந்து பேச, காயத்ரியே திகைத்துதான் போனார். “ஜனனி ஏன் இப்படி பிஹேவ் பண்ற, பாப்பு வருத்தப்படபோறா” என தாயாய் அதட்டவும் செய்தார்.

‘பாப்புவாம் பாப்பு’ என முனகியவள், “ம்மா அதெல்லாம் முடியாது. அவள அவ அம்மாட்ட போய் மடியில படுக்க சொல்லு, நான் எங்கம்மாவ விடமாட்டேன்” என தாயை இறுக்கி பிடிக்க புவனாவும் பேத்தியை ஒன்றும் சொல்ல முடியாமல், பாப்புவை பார்த்து பதறிதான் போனார்.

ஏனென்றால் அவள் தன் அழுகையை அடக்கி, மூக்கு விடைக்க, கோபமும் ஏக்கமுமாக நின்றிருந்தாள்.

அப்போதுதான் அவளது கழுத்தைப் பார்த்த ஜனனி அதிர்ந்தாள், “ஏய் இது நான் அண்ணனுக்கு கொடுத்த செயின். இத ஏன் நீ போட்றுக்க. திருடி போட்டுகிட்டயா” என ஆத்திரமாக கேட்டவள் அருகில் வந்து வெடுக்கென அதை பறித்தும் கொண்டாள்.

அதில் மேலும் அதிர்ந்த பாப்பு, “அது என் ஜித்துவோடது” என வாதம் செய்ய , வந்ததே கோபம் ஜனனிக்கு,

“அவன் என்னோட அண்ணன் மட்டும்தான். உனக்கு யாரும் இல்ல புரியுதா” என அழுத்தமாக கூறவும், இனி ஜித்து தனக்கு இல்லை என புரிந்ததோ என்னவோ, அழுதுக்கொண்டே மேலே சென்று விட்டாள். அவளை அழைத்த புவனாவையும், பொன்னம்மாவையும் கூட கண்டுகொள்ளவில்லை.

தனதறைக்கு அழுதுக்கொண்டே வந்தவள் மெத்தையில் படுத்து அழுதவாறு, “அம்மா எங்க இருக்க நீ. எனக்கு நீ வேணும். இப்பவே வேணும், எப்ப வருவ நீ. ஜித்து இனி எனக்கு இல்லையாம். எனக்கு அழுகையா வருது!” என புலம்பி அழுது அப்படியே உறங்கியும் விட்டாள்.

கீழே ஜனனியோ கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். “நான் அண்ணனுக்கு கொடுத்தத, இவ எப்படி போடலாம்” என அவர்களிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

காயத்ரியோ, “எது எப்படியோ, நீ செய்தது தவறு” என எடுத்துரைக்க ஜனனி கோபத்தில் தனதறையில் சென்று புகுந்து கொண்டாள்.

அவர்களுக்கு என்ன செய்வது, யாருக்காக பேசுவது என தெரியவில்லை. ஜனனி இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றவள் கிடையாது. தன் அண்ணனின் மேல் வைத்த பாசம், அவன் பாப்புவிடம் காட்டும் நெருக்கம், இந்த இரண்டும் அவளை மாற்றியிருந்தது. இன்னும் அபிஜித் வந்த பிறகு என்ன நடக்குமோ, அவன் யாருக்காக பேசுவான் என இரு பெண்களும் பதட்டத்தில் இருந்தனர்.

சிறிது நேரத்தில் பொன்னம்மா மேலே சென்று பாப்புவை பார்க்க அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே கதவை சாற்றிவிட்டு கீழே வந்துவிட்டார். பின்னே பட்டாம்பூச்சியாய் சிரித்து, சுற்றிக் கொண்டிருக்கும் பெண் அழவும் அவருக்கே தாள முடியவில்லை.

மூன்று மணி அளவில் ஒரு கோப்பை எடுக்க வேண்டி, அபிஜித் வீட்டிற்கு வரவுமே பெண்கள் மூவரும் பதட்டத்துடன் அவனையே பார்த்திருந்தனர். வித்தியாசமாய் இருந்தாலும் அதை ஒதுக்கியவன் ஷுவை கழற்றி அதனிடத்தில் வைத்துவிட்டு, பொன்னம்மா கொண்டு வந்த தண்ணீரை பருகினான்.

எப்போதும் தன் வாகன சத்தம் கேட்டதும் மானாக துள்ளி வரும் அவன் தேவதைப் பெண்ணை காணாமல், “பாப்பு எங்கமா காணோம்” என அவரிடம் கேட்டிருந்தான்.

“பாப்பா தூங்குது கண்ணு”என கூறவும்,

“என்ன தூங்கறாளா, இந்நேரத்துக்கு தூங்க மாட்டாங்களே மேடம். உடம்பு ஏதும் சரியில்லையா” என்றவாறே பாதிப்படிகள் ஏறியிருந்தான். அவன் செல்வதை பார்த்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அறையில் இருந்து வெளியில் வந்த ஜனனிக்கு, அண்ணன் எதாவது கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்ற திடம் இருந்தால், சிறு உதறல் எடுக்கத்தான் செய்தது.

அறைக்குள் சென்றதுமே அவன் பார்த்தது, வாடிய முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தவளின் முகமே. அது அழுதழுது வீங்கி இருந்தது. அதைப் பார்த்து பதட்டமடைந்தவன், என்னாச்சு, ஏன் இப்படி இருக்கா என தவித்து, “பாப்பு, பாப்பு” என அழைக்க, மெதுவாக கண்விழித்தவள், அவன் “என்னடா, ஏன் இந்நேரம் தூங்கற” என கேட்டதுதான் தாமதம் “ஜித்து” என அழைத்து அவன் மடியில் படுத்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும் தலையை வருடி கொடுத்தான். ” என்னடா, என்ன பண்ணுது. உடம்பு சரியில்லையா. ஆஸ்பிடல் போலாமா” என கேட்கவும், அப்போதுதான் மதியம் நடந்தது நினைவில் வந்தது அவளுக்கு.

அபிஜித்தை பார்த்தவள், “ஜித்து, நீ என்னோட ஜித்து இல்லையா” என எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக கேட்க, அதில் உருகியவன், “ச்சே… ச்சே நான் உன்னோட ஜித்துதாண்டா. ஏன் அப்படி கேக்கற” என்றதும், அதில் மகிழ்ந்தவள், எதையோ யோசித்து உடனே எழுந்து, “ஜித்து வா ” என எழுப்பி அவன் எங்கே என, கேட்க கேட்க, அவனை இழுத்துக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்திருந்தாள்.

அங்கு அனைவரையும், குறிப்பாக ஜனனியைப் பார்த்தவள், “நீ சொன்ன மாதிரி எனக்கு அம்மா இல்ல, ஆனா என்னோட ஜித்து இருக்கான். நீ உங்கம்மா மடில படுத்துக்கோ, நான் என் ஜித்து மடில படுத்துக்குவேன்” என்று கூறியவள், திகைத்து நின்ற அபிஜித்தை சோபாவில் அமரவைத்து அவன் மடியில் படுத்து, இடுப்போடு அணைத்து விட்ட தூக்கத்தை சுகமாய் தொடர்ந்தாள்.

அவள் தெளிவாக கூறிவிட்டாள். உனக்கு உன் தாய் எப்படியோ, அப்படி எனக்கு என் ஜித்து இருக்கிறான் என்று.

மற்றவர்கள் திகைத்து நின்றிருக்க, அபிஜித், தன்னை தாயாக்கி சேயானவளின் சயனத்தை கலைக்காமல் அவளின் நேசத்தில் நெஞ்சம் விம்ம, கைகள் நடுங்க பரிவுடன் தலைகோதி கொண்டிருந்தான்.

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு

இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு

மயில்தோகை போலே விரல் உன்னை வருடும்

மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமைதாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண் ஆனதே

ஆம்! கடலாக கண் ஆனதே!