Ennai Ko(Ve)llum Vennilavei – 20

Ennai Ko(Ve)llum Vennilavei – 20

~20~

தன்னைப் பார்த்து சிரிக்கும் கணவனை ஏகத்துக்கும் முறைத்தவள், “ரொம்ப சிரிக்காத..வாய் சுளுக்கிட போகுது..” அவளது கோபமான குரலைக் கேட்டதும் தனது சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவன்..

“சரி சிரிக்கல..நான் கேட்கட்டுமா..?” என்றான் அவளது விழிகளை ஊடுருவி..

“அட கேளுப்பா ஆதிக்…” என்றவளும் அவன் முகம் பார்த்து நிற்க

“இல்ல…நீ என்னைவிட்டு போறதுலையே குறியா இருக்கியே ஒருவேள அங்க நீ யார்கூடயாவது லிவிங் டுகெதெர்..?..” அவனது கேள்வியில் அவள் உறுத்து விழிக்க,

“இல்லனா யாரையாச்சும் லவ்…” இப்போது இடுப்பில் கை வைத்து முறைக்கத் துவங்க

“இல்லனா ஒன் லவ் ஃபேளியர்..” அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் அவனது முகத்துக்கு நேரே கை நீட்டித் தடுத்தவள்

“ஹேய் என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..” அவனது பனியனின் காலரைப் பிடித்து இழுத்து கோபமாய் கேட்க

பிடித்திருந்த கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் மெதுவாய் அவளது கைகளை விலக்கினான்..

அவன் விலக்கியதும், “இங்க பாரு எனக்கு இந்த லவ்ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் கிடையாது புரிஞ்சுதா..எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் பாய்ஸ்லயும் இருக்காங்க தான்..பட் எல்லோருக்கும் ஒரு லிமிட் வச்சிருக்கேன்..அன்ட் ஒன் மோர் திங் எனக்கு என்னோட லிமிட் தெரியும் யாரை எங்க நிறுத்தி வைக்கனும்னு எனக்கு தெரியும்…ஒருத்தன நினைச்சிட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணுற அளவுக்கு நான் **** இல்ல..காட் இட்…”

“அப்புறம் என்ன கேட்ட லிவிங் டுகெதெர்…என் சுண்டு விரல் தொடவும் பயப்படுற ஆம்பளைங்கள தான் இதுவரைக்கும் நான் பார்த்திருக்கேன்…ம்ம்…” நக்கலாய் மொழிந்தவளின் கண்கள் அவனை மேலிருந்து கீழாய் பார்த்துச் சிரிக்க

ஆதிக்கின் கோபம் இப்போது உச்சத்தைத் தொட்டது..திமிர் திமிர் கோபமாய் நினைத்திருந்தவனுக்குக் கடைசியாய் அவள் பார்த்த பார்வை சொன்ன நீயும் அந்த ஆம்பளை லிஸ்ட்டில் ஒருவன் என்ற செய்தி எரிச்சலைக் கிளறியிருந்தது.

தன் முன்னே நீண்டிருந்த அவளது கரத்தைப் பற்றி வளைத்தவன், அவளது முதுகோடு உரசுமாறு நின்று, “யாரைப் பார்த்து டி சொன்ன..?” என்றவனின் கர்ஜனைக் குரலில் பயம் வந்தாலும் அதை விரட்டியவள் கையின் வலியையும் பொருட்படுத்தாமல்

“நீ மட்டும் என்னைப் பார்த்து என்ன என்னலாம் கேட்ட..?” அவளின் கைகளின் அழுத்தத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் அவன் கோபத்துடன்

“யாரைப் பார்த்து ஆம்பளையான்னு கேட்ட..?” கைகளின் அழுத்தத்தை அவன் கூட்டவும் முகம் வலியில் கசங்க

“கையை விடுறா பன்னி…” பக்கவாட்டில் திரும்பி அவனது முகம் பார்த்து கத்தினாள் மதி..

கண்களில் கண்ணீர் துளிர்த்து மூக்கு விடைக்கக் கேட்கும் மதியின் முகத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்தவன் கைகளின் அழுத்தத்தை குறைத்து தன்னை நோக்கித் திருப்ப அவன்மீதே மோதி நின்றாள்.

அவளது இடையில் கைபோட்டு தன்னோடு அவன் நிற்க வைக்க, அவனது மார்பின் குறுக்கே கைகளை வைத்துத் தள்ளினாள்..

அவளது விலகலைக் கண்டு கொள்ளாதவன், “ஏய்! இங்க பாரு டி..” தன்னைவிட்டு விலகி போவதிலே குறியாய் இருப்பவளை மிரட்ட

அவளோ நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல் கைவளைவில் இருந்து வெளி வருவதிலே குறியாய் இருந்தாள்..
இடையை வளைத்தப் பிடியை மேலும் இறுக்கியவன், “என்னை நிமிர்ந்து பாருன்னு சொன்னேன் மதியழகி..” அவனது அழைப்பில் சிலிர்த்தவள்..

“ஏய் மதியலகி மதியலகின்னு ஏலம் விடாதன்னு இப்போ தானே சொன்னேன்..” என்றவளின் பிரச்சனை அவன் முழுநீள பெயரிட்டு அழைப்பதில் நின்றது..

அதைக் கண்டு கொள்ளாதவன், “உனக்கு எதுக்கு என்னை பிடிக்கல? இங்க இருக்க பிடிக்கல..?” என்றான் கூர் விழியுடன்

“எனக்கு இங்க இருக்க பிடிச்சிருக்கு அன்ட் உன்னையும் எனக்கு பிடிச்சிருக்கு பட் எனக்கு என் விருப்பமில்லாம நடந்த இந்தக் கல்யாணத்தை தான் பிடிக்கல..” என்றவளுக்கு அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது மறந்து போயிருந்தது..

“மதி…இதுதான் லைஃப்..இதைவிட்டு விலகி போறத பத்தியே பேசுற உனக்கு என்னையும் நம்ம வீட்டையும் பிடிச்சிருக்கு அப்புறம் என்ன..?” நம்ம வீடு என்ற சொல் மனதிற்கு இதமாய் இருக்க,

“ஆதிக்..பிடித்தம் வேற விருப்பம் வேற…நாம பண்ணிகிட்ட கல்யாணம் நம்ம விருப்பம் இல்லாம நடந்தது..இந்த வாழ்க்கைய நாம விரும்பி வாழல ஆதிக்..உனக்குப் புரியுதா..மத்தவங்களுக்காக என்னால எப்பவும் வாழ முடியாது எனக்காக வாழனும்னு நான் நினைக்கிறதுல என்ன தப்பிருக்கு…சரி, இதெல்லாம் விடு ஆதிக் நீ சொல்லு உனக்கு என்னைப் பிடிச்சு தான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னியா..இல்ல என்னைப் பிடிச்சு தான் இப்போ உன்கூட இருக்க சொல்றீயா..?” அடுக்கடுக்கான கேள்வி கேட்பவளை பிடித்திருந்தாலும் இப்போதைக்கு அவன் இருக்க சொன்னதே அன்னையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் என்ற நினைப்பில் அவனது கைகள் தளர்ந்து அவளைவிட்டு விலகி நின்றிருந்தான்..

அவனது விலகலைக் கண்ட மதியின் மனதில் வெறுமை குடியேற, “ஆதிக், அத்தைக்காக தான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டன்னு தெரியும்..” என்றவளின் முகத்தில் வந்து சென்ற ஒரு நிமிட வேதனையைச் சரியாக ஆதிக்கின் மனம் கவனித்தது.

அவளிடம் எதையோ சொல்ல அவன் வாயெடுக்கவும் கை நீட்டித் தடுத்தவள், “நானும் என் அம்மாவுக்காக தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்..ஆனா யோசிச்சு பாரு அவங்களுக்காக இந்த வாழ்க்கைய இன்னும் எத்தனை நாளுக்கு நம்மால வாழ முடியும்..?” சரியாக கேட்கிறாள் ஆனால் எதற்கும் அவனிடம் பதிலில்லை என்றாலும் அன்னைக்காக தான் தன்னை திருமணம் செய்து கொண்டாள் என்பதில் அவனது மனம் வலித்தது..

அதே வலி அவளுக்கும் இருந்திருக்கும் என்பதை அவன் உணரவில்லை, அவளும் உணர்த்த நினைக்கவில்லை..
இருவரும் அவரவரில் சரியாய் இருந்தார்கள் அதைவிடச் சரியாக யோசித்தார்கள்..

தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்ட ஆதிக்கு, “ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனையா..?” என்று நினைக்கத் தோன்றாமல் இல்லை..

தனது அருகே அமரும் மதியை நிமிர்ந்து பார்த்தவன், “இப்போ என்ன தான் பண்ணனும்…?” என்றவனின் முகம் கசங்கியிருந்தது.

“பாஸ்..நான் ஃபாரின் கிளம்புறேன்..”

“ஹய்யோ வாயத் திறந்தாளே நீ என்னைவிட்டு போறத பத்தி மட்டும் தான் யோசிப்பியா..இடியட்..போ போய் தொலை…” உச்ச டெஸிபியில் கத்தியவன், பின் நிதானித்து

“இங்க பாரு…நீயும் நானும் பிரிஞ்சி வாழுறதால என்னோட குடும்பமும் பாதிக்கப்படும் அதைவிட உன்னோட குடும்பமும் பாதிக்கப்படும்…நான் ஆம்பளை எனக்கு வரும் பிரச்சனைய விட ஒரு பொண்ணா உனக்கு வர பிரச்சனை ரொம்ப அதிகம்…சோ வாயை மூடிட்டு என் கூட வாழுற வழியைப் பாரு மதியழகி…எனக்கு இதுக்கு மேல இதப் பத்தி யோசிக்க முடியல…” கோபத்தில் எரிந்து விழுந்தவன் முதுகை வருடிய அவளது கைகளை தட்டிவிட்டான்…

அவனது செயலுக்கு ஆட்சேபித்தவள் பேச வாயெடுக்கும் முன் வேணி மறுபடியும் சாப்பிட அழைத்திருந்தார்..
வருவதாய் குரல் கொடுத்தவன், “வா சாப்பிட போகலாம்..” என்றான் வேறெங்கோ பார்த்து..

“எனக்கு ஒண்ணும் வேணாம்…” உரைத்தவள் கட்டிலில் ஏறி படுத்துக் கொள்ள, தோளைக் குலுக்கியவன் அமைதியாய் வெளியேறி விட்டான்..

தன்னை மறுபடியும் சாப்பிட அழைப்பான் என அவள் நினைத்திருக்க அவனோ அமைதியாய் வெளியே சென்றதும் கட்டிலில் ஏறி நின்றவள் கீழே குதித்து..

“இன்னைக்கு அவனுக்கு மிச்சம் வைக்காம நான் ஃபுல்லா சாப்பிடல என் பேர் மதி..மதியலகி இல்லடா ஆதிக் வர்மா..” வீரமாய் பேசியவள், கதவைத் திறந்து கீழிறங்கி வர அவனும் அவளது வருகையை எதிர்பார்த்தது போல தனது அறையின் வாயிலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

தன்னை ஆதிக் பார்க்கிறான் என்றதும் சட்டென்று முகத்தைத் திருப்பியவள் கீழிறங்க, “மதி நாங்கயெல்லாம் சாப்பிட்டாச்சு..நீயும் சாப்பிட்டதும் ராஜ் ரூம்ல ரேகா இருக்கா அவா கூட படுத்துக்கோ..ஆதி ராஜ் உன் ரூம்க்கு வருவான் டா..” என்ற வேணி அவ்விடத்தை விட்டு அகல நினைக்க அவரது அருகே சென்ற மதி..

“நோ ஆண்ட்டி..நான் இவர் கூடவே இருக்கேன்..எனக்கு நோ ப்ராப்ளம்..” என்று சொல்லி வைக்க, வேணிக்கு எப்படி சொல்வது என்ன சொல்வது என்று புரியாமல் திருதிருத்து நின்றார்.

அவரது முகத்தைப் பார்த்தவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வர, “அம்மா நீங்க போங்க நான் பேசிக்கிறேன்..” என்றவன் மதியை தன் கண்களால் சுட்டிக் காட்டி அமரச் சொன்னான்..

வேணி அந்தப் பக்கம் சென்றதும், “ஆதி..ஐ ஹேட் யூ..” என்றவளைச் சின்ன சிரிப்போடு பார்த்தவன்

“நீ என்னை எப்போ லவ் பண்ணுன ஹேட் பண்ணுறதுக்கு..?” அவனது கேள்விக்கு பதிலுக்கு விடையளிக்காமல் கீழுதட்டை கடித்தவள் வெட்டும் பார்வை பார்த்து அமைதியாய் சாப்பிடத் துவங்கினாள்..

அவளது முறைப்பைக் கண்டு கொள்ளாதவன், “மதி நீ இன்னைக்கு ரேகா கூட தூங்கு..” என்றவனிடம் ஏன் என்ற ஒற்றைக் கேள்வியை அவள் கேட்டு வைத்தாள்

“ஏன்னா..? ஏன்னா..? அது இன்னைக்கு நல்ல நாள் இல்லையாம்..” என்றவன் குனிந்து சாப்பிடத் துவங்க

“ஓ..அப்புறம் எதுக்கு இன்னைக்கு நமக்கு கல்யாணம் பண்ணுனாங்களாம்..?” என்றவளுக்கு புரியுதா புரியவில்லையா என்ற சந்தேகம் அவனது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது..

அவனது முகத்தில் வந்து சென்ற பாவனையைப் பார்த்தவள், “என்ன சொல்லனுமோ அதை நேரடியா சொல்லுங்க பாஸ்..?” என்க

“இன்னைக்கு நமக்கு முதல் ராத்திரி புரியுதா அது தான் அந்த ஃபர்ஸ்ட் நைட் வைக்க நல்ல நேரம் இல்லையாம்..சோ நாளைக்கு தான் அதுவும்..அதனால இன்னைக்கு ரேகா கூட தூங்கனுமாம் புரியுதா..”அவன் சொல்ல ஆரம்பித்ததும் அவளறியாமல் முகம் செந்தணலாய் மாறிப் போக அவன் முகம் பார்க்க முடியாமல்

“ம்ம்..” என முணுமுணுத்தவள் சாப்பாட்டில் கவனம் செலுத்த, அவளிடம் வம்பிலுக்க நினைத்தவன்

“என்ன ம்..ம்..?” என்றான் சிரிப்புடன்

“அப்பா சாமி ஒண்ணுமில்லை..இப்போ நீ பேசாம சாப்பிடுறீயா இல்ல நான் போகவா..?” வெட்கத்தை மறைக்க அவள் கோபம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டாள்..

அவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் உண்டவன் மதியுடன் படிகள் ஏற, சரியாய் ஆதிக்கின் அறை வாயிலில் ராஜ் நின்றிருந்தான்..

‘உள்ளே போகாம எதுக்கு வெளியே நிக்கிறான்..’ மனதில் மதி நினைக்க, ஆதிக்கு தெரியும் ராஜ் தன்னிடம் கேட்காமல் அறைக்குள் வரமாட்டான் என்பது..

ஆதிக் மனதால் ராஜை தம்பியாக நினைத்தாலும் தனது பாசத்தையோ உரிமையையோ வெளிக்காட்டத் தெரியாது, அதே போல் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டான் என்பதால் சில சமயங்களில் வலிக்கும் ராஜின் ஒதுக்கத்தைக் கூட இவன் ஒதுக்கித் தள்ளிவிடுவான்..

மதி, “ராஜ்..எதுக்கு ரூம் வாசல்ல வாட்ச் மேன் வேலை பார்த்துட்டு இருக்க..?” கேள்வியாய் ராஜ் முகம் பார்த்து கேட்க

ஆதிக்கும் அவனைத் தான் பார்த்து கொண்டிருந்தான் ஆனால் மதியிடமும் எதுவும் சொல்லவில்லை அவனிடமும் எதுவும் கேட்காமல் கையை கட்டி சுவரில் சாய்ந்து நின்றான்..

ராஜின் தோளைத் தட்டி மதி வினவ ‘ஏதோ ஆண்டாண்டு காலம் பழகியதைப் போல பேசும் மதியை அவனுக்குப் பிடித்து போனது..’

“ஒண்ணுமில்லை அண்ணி..சார்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..” அவனின் பதிலில் வாசலையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தவள்..பின்,

“ராஜ் மணி 9.30 ஆகுது..இப்போவா உங்க சார வரச் சொன்னீங்க…?” என்றவளின் கன்டன பார்வையில் ஆதிக்கு சிரிப்பு வந்தது..

“அய்யோ இல்ல அண்ணி…நான் ஆதிக் சாருக்கு வெயிர் பண்ணிட்டு இருந்தேன்..” அவசரமாய் சொல்லும் ராஜை புரியாத பார்வை பார்த்தவள்

“என்னது ஆதிக் சாரா..?” புரியாமல் ஆதிக்கை பார்க்க

“ராஜ்..என்னை சார்ன்னு தான் கூப்பிடுவான்..” தகவலாய் சொன்னவனின் சின்ன ஏக்கத்தைச் சரியாக உணர்ந்து கொண்டவள்..

“இது என்ன ராஜ்..நான் மட்டும் உங்களுக்கு அண்ணி இவர் உங்களுக்கு சாரா..”முறைத்துக் கேட்டவள்

“ஒழுங்கா அண்ணா கூப்பிடு இல்ல ஆதிக்னு கூப்பிடு..” என்றாள் கண்டிப்புடன்
அவளையும் ஆதிக்கையும் செய்வதறியாது ராஜ் பார்த்து நிற்க, அறையின் வாயிலில் நின்று ரேகாவும் அவர்களைத் தான் கவனித்துக் கொண்டிருந்தாள்..

“இல்ல..வேணாம்…” என ஆதிக் தயங்க

“அவனுக்கு விருப்பம் இல்லாதத செய்ய சொல்லாத மதி..” என்றவன் இப்போது அலைபேசியைக் காதுக்கு கொடுத்துத் தள்ளி நின்றான்…

அவனது விலகலில் ராஜின் முகம் விழுந்துவிட்டதைப் பார்த்த மதி, ஆதிக்கின் காதுகளில் இருந்த போனை நோக்கி கையை நீட்டியிருந்தாள்..

அவளது செய்கையை உணர்ந்தவன் போன்று தன்னிச்சையாய் திரும்பிய ஆதிக் மதியை முறைக்க இப்போது அவளின் கவனம் ராஜின் மீது சென்றது..

“ராஜ்…இவரை அண்ணா சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லனா ஆதிக்னு பெயர் சொல்லி கூப்பிடுங்க..பட் இனி சார்னு கூப்பிடுற வேலை வேணாம்..” கறாராக அவள் சொன்னதை மற்றொரு காதில் வாங்கிய படி போன் பேசிக் கொண்டிருந்த ஆதிக்கின் இதழ் சிரிப்பில் வளைந்தது..

ஆதியும் மதியும் பிரிவார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!