Epi 7
Epi 7
Epi7
சூரியனின் வெப்பத்தை உறிஞ்சிய நிலமும் அதன் மேலே உயர்ந்து வளர்ந்த மானுடனின் படைப்புக்களான கட்டிடங்களும் வெம்மையைக் கக்கும் மாலை வேளை…
குளிர் நிலவெனக் குளித்துக் கிளம்பினாள் கயல்விழி.
இள நீலநிற ஸ்லீவ்லெஸ் டாப், முழங்காலுக்குச் சற்றுக் கீழ் ரோஜா வண்ண ஸ்கர்ட் அணிந்து கூந்தலை விரித்து விட்டு ஒரு பக்கமாக சிறு பகுதியைக் கிளிப்பில் அடக்கியவள் என்றும் கண்களில் இருக்கும் மை, நெற்றியில் கறுப்பு நிறப் பொட்டு…
கிளம்பித் தனது வண்டியில் இரண்டு வீடு தள்ளியிருந்த மீனாட்சியின் வீட்டிற்குச் சென்றாள்.
இரண்டு வீடு தள்ளி என்றாலும் அதற்கு இடைப்பட்ட தூரம் என்னவோ அரைக்கிலோமீட்டர்.
கயல் வருகிறேன் என்றதும் அவரது வீட்டு ஓட்டுனரிடம், “அண்ணா எங்கூட ஆபிஸ்ல வேலை பார்க்கும் பொண்ணு இப்போ வருவா.கொஞ்சம் கேட் அருகே போய் பாருங்கண்ணா” எனவும்.
“அன்னைக்கி வண்டில கூட்டிப்போன பொண்ணாம்மா?”
“ஆமாண்ணா.” என்றார் மீனாட்சி.
” உங்க சொந்தமாகப் போறன்னும் அன்னைக்கி சொல்லிச்சே.” என அவர் கூறவும் அவர் சொல்ல வருவதைப் புரிந்துக் கொண்டவரோ,
“ஆமண்ணா இதுக்கு முன்ன நம்ம வீட்டுக்கு வந்ததில்லை,கொஞ்சம் பாருங்க.”என்றார்.
“இதோம்மா போறேன்.”என வாயிலை நோக்கி விரைந்தார்.
அவர் வாயிலை அடையவும் கயல் அவ்விடம் வந்தாள்.
“ஹலோ அங்கிள் மேம் இருக்காங்களா?” என கயல் கேட்க்கவுமே,
“அதோ அந்த வீடும்மா போங்க”என்றார்.
“ஓகே” என்றவள் அவரிடம் விடைபெற்று வர அவள் வண்டி சத்தம் கேட்டு மீனாட்சியும் வெளியில் வந்தார்.
கயல் வருவதை ருத்ராவின் வீட்டிலிருந்து அவனது அக்காளும்’யாரிது புது வரவு…’ என பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹேய் கயல் வா வா.நானே பேசும் வரை இருந்துட்ட இல்ல…”மீனாட்சி பொய்யாக முறைத்துக்கொண்டே அவளை வரவேற்க
“அச்சோ அப்படியெல்லாம் இல்ல மேம்” என்றவள் வண்டி விட்டிறங்க அவரோ அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
“மேம் வர அவசரத்துல உங்களுக்கு ஒன்னுமே கொண்டு வரல்லயே மறந்துட்டேன்” என்றவளை முறைத்தவர்,
“நான் என்ன நோயாளியா? “எனவும்,
‘அதானே’என்றவள் அவரையும் அமரச் சொல்லி அவளும் அமர்ந்துக்கொண்டாள்.
“என்ன சாப்பிடற?”என மீனாட்சி கேட்கவும் தான், பகல் அவள் இன்னும் உண்ணாதது நினைவிலேயே வர
“அது என்னன்னாலும் ஓகேதான்” என்றாள்.
“சரி அப்போ வா, நான் இன்னும் லஞ்ச் சாப்பிடல எனக்கு கம்பனி கொடு.”என அவளையும் உள்ளே அழைத்து சென்றவர் சமயலறையோடு போடப்பட்டிருந்த மேசையில் அவளை அமர வைத்தவர் உணவை எடுத்து பரிமாற,
“நீங்க எதுக்கு இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? உடம்பு என்னதுக்காகும்… நேரத்துக்குச் சாப்பிட வேணாமா? “
“ஆபிஸ் போய்ட்டு வீட்டுக்கு வரவே ஒன்னாச்சு டா.சோ கொஞ்சம் நேரமாகட்டும்னு இருக்கவும் தான் நீ வரதா சொன்ன அதான் வெய்ட் பண்ணேன்.சரி சாப்பிடு.”என்று இருவருமாய் உண்டனர்.
பிறந்தது முதல் வெவ்வேறு உணவகங்களில் பலவகையான உணவு உண்டிருக்கிறாள்.ஆனால் இன்று தான் பிற வீடொன்றில் இன்னொருவருடன் அமர்ந்து உண்ணுகிறாள்.அதுவே அவளுக்கு ஒரு மகிழ்வை கொடுத்தது.
உண்டு விட்டு அவருடன் அமர்ந்தவள் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு,
“உங்க கூட நிறையப் பேசணும் மேம் ஆனா எப்டி ஆரம்பிக்கிறதுன்னு தெரில… “
“பேசலாம்டா.ரிலாக்சாகு முதல்ல.”என்றவர்,
“அப்பா அம்மாவெல்லாம் எப்போ இந்தியா வருவாங்க?”என கேட்டும் வைக்க,
அதுவே அவளுக்குப் பேச ஆரம்பப் புள்ளியாகிப் போனது.
“நான் அப்பா கூடத்தான் வந்திருக்கேன்…”
“ஓஹ்! அப்டின்னா ஏன் என்னைப் பார்க்க வரல்ல உங்கப்பா? கலை மட்டும் அங்க தனியா மேனேஜ் பண்ணிப்பாளா?”மீனாட்சி கேட்டார்.
“அது நானும் எங்கப்பாவும் இருபது வருஷமா அம்மா இல்லாமத்தான் இருக்கோம். “என்றவளைப் பார்த்தவர்
“அம்மா இல்லாமன்னா? என்ன கயல் அம்மா எங்க இருக்கா? “என அவள் கையை இறுகப் பற்றியவர் கேட்க,
“நான் இரண்டு வயசா இருக்கப்பவே சூசைட் பண்ணிகிட்டாங்களாம்… “
“கயல் என்ன சொல்ற நீ? “அவர் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியாது அப்படியே அவள் கைகளை இறுக்கிப் பிடித்தபடி அமர்ந்திருக்க,
“அச்சோ மேம் பிளீஸ் !காம் டவுன். உணர்ச்சி வசப்பட்டுராதீங்க “என அவர் கையைத் தடவிக் கொடுத்தாள்.
குடிக்க நீரும் கொடுத்தவள் அவர் நிலை உணர்ந்து ‘எதுக்குத்தான் இப்படி அவசரப்படுறேனோ…
அவங்க நிலைமை உணர்ந்தும் ச்சே ‘என மனதில் தன்னையே திட்டிக்கொண்டவள் “சாரி உங்க நிலை புரியாம நானும் பேசுறேன். நாம வேறொரு நாள் இது பற்றிப் பேசலாம் மேம்.” என்று அவரைப் பார்த்து கயல் கூறினாள்.
அவளையே பார்த்திருந்தவர் அவள் மனதில் தன்னை விடவும் வருத்திக்கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்து, அவள் கன்னம் தடவியவாறு
“இல்லடா சொல்லு இன்னைக்கே… எதுன்னாலும் நான் கேட்கிறேன். அது உனக்கும் ஒரு நிம்மதியைத் தரும்.” என்று அவள் கூறுவதைக் கேட்க தன் மனதை திடப்படுத்திக்கொண்டார்.
1996 ஆம் ஆண்டு…
தமிழ் நாட்டில் நகரமயமாகும் ஓர் நகர கிராமம் அது.பல ஏக்கர் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட மனிதர்களும், அதில் அன்றாடம் தொழில் செய்து தன் குடும்பம் காக்கும் மனிதர்களும் வாழ்ந்து வர அங்கே நகரங்களை நரகங்களாக மாற்றப் பல ஏக்கர் நிலங்களைத் துண்டாக்கி அதில் லாபம் ஈட்டும் மனிதர்களும் வாழும் நிலமது.
சிவநேசன்,சாந்தியின் மகனான தேனரசன் கல்லூரியில் இறுதிக்கட்ட படிப்பில் இருக்க, அவனது அத்தை மகள் (சிவநேசனின் தங்கை மகள்)கலையரசி கல்லூரியில் முதல் வருடம்.
அவ்வூரில் பெரிய வீடு என்று அழைக்கப்படும் வாசுதேவன் குடும்பத் தோட்டத்தில் கைவேலைச் செய்பவராக இருந்து இன்று மேற்பார்வையாளராக உயர்ந்து வேலை செய்து தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் மனிதர் நம் சிவநேசன்.
அவூரிலேயே தேனரசன் நன்றாகத் தன் வயதுக்கேற்ற திடமான உடல் அழகுடன் ஆண்மை மிளிர நல்ல மா நிறத்திலும் இருக்க பார்ப்பதற்கே மரியாதையைத் தரும் தோற்றம்.
தேனரசன் பெற்றோரும் கலையரசனின் பெற்றோரும் ஒருமுறை வெளியூர் சென்றிருக்க அவர்கள் சென்ற பஸ் வண்டி தடம் புரண்டு அவ்விடமே கலையின் பெற்றோர் உயிரிழந்திருக்க தேனரசன் பெற்றோர் உயிர் தப்பியிருந்தாலும் அவன் அன்னை கடந்த வருடம் வரை ஐந்து வருடங்களாகவே படுக்கையில் இருந்து விட்டு இறந்திருந்தார்.
அவரைக் கவனித்தது கலையரசிதான். பொறுப்பான பாசமான பெண். தன் அத்தானுடன் மாமாவுடன் உயிரினும் மேலான பாசம் மிக்கவள்.
தேனரசனுக்குமே அவளுடன்தான் அவன் பேச்சுக்களும் பொழுதுகளும்…
சிவநேசனும் அவர்களுக்காகவே வாழ்ந்து வருபவர்.
தன் மகனிடம் அடிக்கடி கூறுவது சிறந்த மனிதனாக, அனைவரும் மதிக்கத்தக்க மனிதனாக நிமிர்வுடன் வாழவேண்டும். தொழிலில் கால் வைக்கும் முன்னமே உனக்கிருக்கும் மரியாதையை என்றும் இருத்திக் கொள்ள வேண்டும்.அதோடு கலை உன் பொறுப்பு. சுமையாக அல்ல… என்பதை அடிக்கடி நினைவு படுத்துவார்.
“மாமா நான் கிளம்புறேன், நீங்க போக முன்னமே சாப்பிட்டு போயிருங்க.”என வெளியில் தன் காலணிகளை அணிந்தவாறே கலை கூற,
“சரிடா நீ கவனமா போய்ட்டு வா. “என்றவரைத் தொடர்ந்து,
“கலை அந்த வீட்டு முன்னாடி போய் நின்னுகிட்டு உன் பிரெண்டு பேரைச் சொல்லி ஏலம் விடாம இங்கயே நில்லு. இந்த வழியாத்தானே அவளும் வரணும். நீ போய்த்தான் அவளைக் கூட்டி வரணும்னு இல்லை. “தேனரசன் கலையை கடிந்துக்கொள்ள,
“அச்சோ அத்தான். நான் அதுக்கு மட்டுமா அந்தப்பக்கம் போறேன்னு உனக்கு தெரிந்துமா என்ன போக வேணாம்னு சொல்ற?”கலையரசி அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவனருகே வந்து கூற,
“கலை நீ தினமும் பார்க்குறன்னு மிலிட்டரில இருக்கவனுக்கு தெரியுமா? வருஷத்துக்கு ஒருக்கத்தான் வரான். அதுவும் இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கு. அவங்க பாட்டி மட்டும் தான் வீட்டு வாசல்ல உட்கார்த்து இருப்பாங்க. அவங்களை பார்த்து என்னாகப் போகுது. ”
“அத்தான் அதுல எனக்கொரு திருப்தி. உனக்கு சொன்னா புரியாது.”என்றவளைப் பார்த்தவன்,
“ஆமா… எனக்குப் புரியாதுதான்.மீனாகிட்ட எப்பவும் மீட் பண்ற இடத்துல பார்க்கலாம்னு சொல்லிரு. அதோட உனக்கு டைம் பாசாகணுமே, சோ நல்ல புத்தகமா எடுத்துட்டு வா.” என அவளை பார்த்து சிரித்துக்கொண்டே கூற…
“நடக்கட்டும் நடக்கட்டும்…”என்றவள்,
இரண்டு தெரு தள்ளி இருந்த பெரிய வீட்டுப் பொண்ணான அவள் பள்ளிக்காலம் தொட்டே உயிர் தோழியும், நம் தேனரசன் உயிர் காதலியுமான மீனாட்சி வீட்டிற்குச் சென்றாள்.
வாசுதேவன் ரொம்பவே மதிப்பு பார்க்கும் மனிதர்.அவர் தரம் கொண்ட மக்களையே அவருடன் சேர்த்துக்கொள்வார்.ஏனையோர் அவர் வீட்டு வாசலுடன்தான்.
அது அவர் மகள் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்தால் தன் கொள்கையை மாற்றியிருப்பாரோ என்னவோ.
இதனால்தான் கலையரசியை தேனரசன் அவர் வீடு முன்னே சென்று நிற்க வேண்டாம் என்றது.
கலையரசியோ அதெல்லாம் பார்க்கமாட்டாள்.தன் தோழியை அழைக்க தினமும் அருண் (மிலிட்டரியில் இருக்கிறான்) வீட்டை பார்த்துக்கொண்டே சென்று வருவாள்.
மீனாட்சி…”என கலை குரல் கேட்டு,
“இதோ வரேன் கலை.” என கிளம்பி வந்தவளை
“ஹேய் என்ன இன்னக்கி நேரத்தோடயே கிளம்பிட்ட, இல்லன்னா நான் இன்னும் ரெண்டு கூவல் விட்ட பிறகு தானே வந்திருப்ப. “மீனாட்சி கேட்க,
“கொஞ்சம் சீக்கிரமா எழுந்துட்டேன்டி. இப்போ நான் நல்லதை பண்ணினேன்றியா இல்லன்னா திரும்ப உள்ளே போய் நீ ரெண்டு முறை கூவினதும் வரட்டுமா? “
“தங்கமே மீனம்மா…வாங்கம்மா… கிளம்பலாம். என் வீட்டுக்கு தானே மகளே எப்ப இருந்தாலும் வருவ. உன்னை வெச்சுக்கிறேன் இரு.” என அவளை சீண்ட,மீனாவோ “அப்றம் நீ என்ன கிழவி ஆகுறவரை என் தேனு வீட்லயே இருக்கலாம்னா ஐடியாவோ? “
“ச்சே ச்சே நாமிலிட்டரி பொண்டாட்டி. நாம நாட்டைகாக்க போயிருவோமில்ல…”கலை பதில் தர,
“பார்க்கலாம்டி நீ போறியா அவர் வேலை விட்டு நிக்கிறாரான்னு… “
இருவருமாக அரைட்டை அடித்துக்கொண்டே கல்லூரி வந்தனர்.
தேனரசன் கல்லூரி சேர்ந்த நாள் முதல் பல நூறு பெண்கள் கடந்து போனாலும் யாரும் அவனைக் கவரவில்லை.சில நாள் சென்று புரிந்தது அவன் மனதில் மீனாட்சி சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை. ஆனாலும் அவள் கல்லூரி ஆரம்பித்ததுமே தன் காதலைச் சொன்னான்.அவளுக்கும் அவன் மேல் இருந்த ஈர்ப்பு அவள் மனதையும் அவனிடம் இழக்க செய்தது.
இனி தாய் பொழுதுகளும் விடிந்து கடந்து போக அவர்கள் காதலும் ஆழமாய் பதிந்து போனது…
மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தினாலும் அதன் வேர் நிலத்தில் என்றும் அதே இடத்தில் ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
வாரத்தில் ஒரு நாள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் கல்லூரியின் ஓர் மரத்தடியில் அமர்ந்திருக்க கலை இன்னொரு பக்கமாய் அமர்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பாதையில் வரும் போதும் பேசிக்கொண்டாலும் பார்ப்பவர்களுக்கு அத்தை மகளும் அத்தானும் ஒன்றாக வர இவர்கள் இருவரிடையான பேச்சு அவ்வளவாக விளங்காது.
“மீனு சென்னைல பெரிய கம்பனி ஒன்னுல வேலைளுக்கு ஆபர் வந்திருக்கு.ஆனா இன்னும் கொஞ்சம் மேல படிச்சிட்டே வேலைல சேரணும்னு நினைக்கிறேன்.
அப்பாவும் வெளிநாடு போறதுன்னா போய் படின்னுதான் சொல்றாங்க.என்ன பண்ணட்டும்? “என தேனரசன் மீனாட்சியைக் கேட்க,
“தேனு… என அவள் ஆரம்பிக்கவும்.” பொண்ணு பெயர் வெச்சு என்னைக் கூப்பிடாதேன்னு சொன்னாக் கேட்க மாட்டியா நீ? ” என அவளை அவன் கோபித்துக்கொள்ள,
“அச்சோ… எனக்கு அப்படித்தானே கூப்பிட வருது என்ன பண்ணட்டும்?”என சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவிப் பெண்ணாட்டம் அவனை கேட்டு வைக்க…
அவள் முகத்தை பார்த்தவனோ,
“இப்படி முகத்தை வெச்சுக்காத மீனாட்சி என்னால பார்க்க முடில…”என்றவன்,
“எப்டிவேன்னாக் கூப்பிடு.ஆனா கலை முன்னால வேணாம். வீட்ல என்ன ஓட ஓட ஓட்டுறா.”
“ஓகே ஓகே.சொல்லலை.”என்றவள்,
“வெளிநாடு போய்த்தான் ஆகணும்னா உங்க விருப்பங்க.ஆனால் எங்க வீட்ல காலேஜ் முடிச்சதும் மாப்பிள்ளைப்
பார்க்க ஆரம்பிச்சுருவாங்களே… “
“ஆமால்ல… அதோட எப்படியும் நா வெளிநாடு போகவே ஒரு வருடமாகலாம். வரதுக்கு எப்படியும் மூன்று வருடம் சரி ஆகுமே டா. பார்க்கலாம்.டைமிருக்கு எதுவும் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. கலைக்கும் ஒரு வழி பார்க்கணும். இந்த முறை அருண் வந்ததும் பேசணும் “
என்றவன் அவர்களுக்கான சில மணித்துளிகளை அவர்களுக்காக அவர்கள் இருவரும் பற்றியான பேச்சுக்களைக் கொண்டு செலவிட்டுக்கொண்டனர்.
மீனாட்சியின் அண்ணன் ஜனார்த்தனன் திருமணம் முடித்து தன் பிள்ளைகளான ஒன்பது வயது ரித்திகா, ஏழு வயது ருத்ரா இவர்களின் அன்னை பார்வதி நிறை மாத கர்ப்பிணி (நீண்ட ஆறு வருடங்களின் பின்னர்) எனத் திருமணம் முடித்ததுமே அரசியலில் இறங்கி அவர் மாமாவின் செல்வாக்குடன் சென்னையில் குடியமர்ந்துவிட்டார்.
அவருக்கு அடுத்து அவர் தம்பி விமலன் விஜயா என்பவரை திருமணம் முடித்து குடும்பத்துடன் தன் தந்தையுடனேயே வசிக்கிறார்.
ருத்ரா மீனாட்சியுடன் அருகே இல்லா விட்டாலும் தினமும் அவன் சேட்டைகளை, பாடசாலை நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வான்.இருவருக்கும் நெருங்கிய உறவு.
வீட்டில் சின்ன அண்ணியின் பேச்சுக்கள் அதிகம் என்றாலும் எதனையும் மனதில் வருத்திக்கொள்ள மாட்டாள்.தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள்.ஆனால் தந்தை என்றாள் அவ்வளவு பயம். பாசமானவர்தான்.ஆனால் பல பேச்சுக்களும் அவரிடம் பிடிக்காது
அவர் பார்வையும் பேச்சுமே ஓரடி எட்ட நில் என்பதையும் காட்டும்.அதோடு கலையுடன் நட்பை முறித்துக்கொள்ள பலமுறை கூறினாலும் அதை மட்டும் இன்றுவரைச் செய்யவில்லை.
இதில் தேனரசனை கல்யாணம் பண்ணிக்கேட்டால்.அதோடு அவர் என் வீடு தேடி வந்தால் படப்போகும் அவமானம்… நினைக்கவே பயந்துக்கொண்டு காலம் கடத்திக்கொண்டு இருந்தாள் மீனாட்சி…
இரண்டு மாதங்கள் கடந்திருந்த வேளை, அன்று அருண் விடுமுறையில் வீடு வந்திருந்த அதிகாலை நேரம் ஒன்றில் அவன் பாட்டிக்கு உடம்பு முடியாமல் போக தேனரசனே அவனுக்கு உதவியாக இருந்து அவரை மருதுவமனையில் சேர்த்தனர்.
அருண் தேனரசனை விடவும் ஐந்து வருடம் பெரியவன்.
பாட்டியோ அவர் இறுதிக்கட்டத்தில் இருக்க அருண் கை பிடித்து அவனை அவர் கண் மூடும் முன்னமே அவன் கல்யாணத்தை பார்க்கவேண்டும் என வற்புறுத்த, அவனுக்கு அன்னை தந்தையாய் இருந்தவரது ஆசை நிறைவேற்ற அவன் சென்று நின்றது சிவநேசன் முன்னே…
“மாமா இப்போ இல்லை,எப்படியும் நம்ம கலை படிப்பு முடிஞ்சதும் உங்க முன்ன வந்து நின்னிருப்பேன்.ஆனா இப்போ இன்னக்கி என் பாட்டிக்காக வந்திருக்கேன்.எனக்கு கலையரசியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவள நல்ல படியா பார்த்துக்குவேன். எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறீங்களா?”என அருண் கேட்கவும்,
திடீர் என அவன் கேட்க அவருக்கும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை.தேனரசுவை அவர் திரும்பி பார்க்கவும் அவரருகே வந்தவன் அவர் தோள்களில் கை வைத்து,
“அப்பா அருணை விட நம்ம கலைக்கு மாப்பிள்ளைத் தேட முடியாதுப்பா.” என்றான்.
அவரும்,”அது புரியுது அரசு.அவ இப்ப தானே காலேஜ் போக ஆரம்பிச்சிருக்கா. அதான்…” என அவர் கூறவும்,
அருண்,”மாமா அவ படிப்பை அப்படியே தொடரட்டும். இப்போ பாட்டிக்காக பண்ணிக்கலாம்.”என்றான்.
அவருக்கும் அந்த வயதானவரின் இறுதி சந்தோஷத்தைக் கொடுக்கும் எண்ணத்தில்,
“சரிப்பா நான் போய் ஊர் பெரியவங்களோட பேசி எல்லாம் தயார் பண்றேன்.”என கூறி கிளம்பினார்.
பாட்டியோ அவரை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு அடம் பிடிக்க டாக்டரும் சரியென்று விட்டார்.அவரை வீட்டிற்கு அழைத்து வந்ததும் அருண்,
“அரசு இதுல பணம் இருக்கு கயலுக்கு தாலிச் சங்கிலியும் பட்டுப் புடைவையும் வாங்கிட்டு வந்துர முடியுமா? மத்ததெல்லாம் நான் அப்புறமா அவளுக்கு வாங்கி கொடுக்குறேன்.இப்போ பாட்டியை விட்டு எனக்கு எங்கயும் போக முடியாத நிலை.” என கேட்டான்.
“அதெல்லாம் அப்பா பார்த்துப்பாங்க.நீங்க அது பற்றி யோசிக்க வேணாம்.” என்றவனை,
“இல்ல கலை என்கிட்ட ஆசையா முன்னமே கேட்டது. இப்போ அவசர அவசரமாக் கல்யாணம் பண்றதுல பயந்திருப்பா. இதுலயாவது அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கி கொடுத்துடுங்க அவ மனசு சந்தோஷப்படும்.” என்று அருண் கூறவும் மறுக்காது அதனைச் செய்தான்.
ஊர் பெரியவர்கள் சிலர் மற்றும் அக்கம் பக்கத்தினரை அவசரமாக விடயம் கூறி அழைப்பு விடுத்துக் கோயிலில் ஒரே நாளில் என்றாலும் முறையாகக் கலையின் திருமணத்தை நடத்தி வைத்தார் சிவநேசன்.
அவர்களைக் கையோடு அழைத்து வந்து வீட்டில் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தார்.அங்கே கூடியிருந்தவர்களுக்கும் சிறு விருந்தொன்றையும் வைத்து விட்டார்.
அவசரமாகக் கல்யாணம் நடந்திருந்தாலும் கலையரசிக்கு அவள் மனம் நிறைந்த வாழ்வு அமைய சந்தோஷமாய் ஏற்று மன நிறைவுடன் அருண் அருகே அமர்ந்து இருக்க,
“சாரிடா கலை. உனக்கு எவ்வளவு நம்ம கல்யாணத்தைப் பற்றி ஆசை இருந்திருக்கும் ஆனா எனக்காக.” என அருண் எதுவோ கூற வர அவனை இடையில் நிறுத்தியவள்,
“ஹேய் !என்ன இது. நான் ரொம்ப சந்தோஷமாதான் இருக்கேன்.அது பற்றி எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.நீங்க அது பற்றி உங்களை வருத்திக்க வேணாம்.”என்று அவன் தோள் சாய்ந்துகொண்டாள். அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று அவள் நெற்றியில் இதழ் ஒற்றி அதனை வெளிப்படுத்த கண்கள் மூடி அதில் இருந்த அன்பின் ஆழத்தை உணர்ந்தவள் அதனை ஏற்றாள்.
மாலை அந்தி சாயும் வேளை பாட்டியின் உயிரும் இவ்வுலகை விட்டும் மகிழ்வுடன் பிரிந்திருந்தது.