ESK-10
ESK-10
சுவாசம்— 10
பொன் அந்திப் பொழுது வேகமாகத் தனது இரவுக் காதலியைத் தேடத் துவங்கி இருந்தது. இரவு மகளும் காதலனின் தேடலை ரசித்து எங்கும் வியாபித்துப் பரவ ஆரம்பித்திருந்தாள். சிவரஞ்சனியின் வீட்டு வாசலில் ஒற்றை மின்விளக்கும், உள்ளே ஒற்றை மின்விளக்கும் போடப்பட்டு சுமாரான வெளிச்சத்தில் இருந்தது.
வாசலிலேயே திண்ணையில் அமர்ந்திருந்தான் கேசவன். அது கொஞ்சம் வளர்ச்சியடைந்த மெயினான ஏரியா. சிவரஞ்சனியின் வீடு போல ஒருசில வீடுகளே, சற்று அளவில் சிறிய வீடுகள். மற்ற அனைத்தும் நல்ல வசதியானவர்கள் குடியிருக்கும் பங்களா டைப் வீடுகளே.
பல வருடங்களாக அங்கே குடியிருந்து வருவதால், அனைவருடனும் நல்ல பழக்கம் இருந்தது சிவரஞ்சனிக்கு. அவளைக் காணவில்லை என்றதும், அவள் சித்தியிடம் இருந்து தப்பித்து, எங்காவது நன்றாக இருந்தால் சரி என்ற மனநிலையில் இருந்தனர் அவளது அக்கம் பக்கத்தினர்.
ஒருவருக்கொருவர் தேவையற்றப் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை அவர்கள். அதிலும் சாரதாவிடம் பேசுவது கூடக் கிடையாது.
வீட்டினுள் அன்றைய பொழுதின் நூறாவது முறையாக, கல்யாணி தனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அம்மா… அக்கா எங்க ம்மா? எப்ப வரும்?”
“ம்ம்… வாய மூடுடி… அவ எங்க போய்த் தொலைஞ்சாளோ… அவ இனிமே வரமாட்டா. அக்கா நொக்கா ன்னு ஏதாவது புலம்புன, வாயில சூடு போட்டுடுவேன் பார்த்துக்க.”
தன் மேல் எப்பொழுதும் பாசமாக இருக்கும் தனது தமக்கையைக் காணாமல், அந்தப் பிஞ்சு ஏங்கிப் போய் இருந்தது. சாரதா அடுப்படியில் முனுமுனுத்தவாறு சமையல் செய்து கொண்டிருந்தாள்.
“அந்தக் கழுத இருந்தா இந்த வேலையெல்லாம் அவ தலையில கட்டிடுவேன். இப்ப நானே செய்ய வேண்டியதா இருக்கு. இந்த அண்ணன் வேற நல்லா வாய்க்கு வக்கனையா செய்யச் சொல்லுது. முதல்ல அத ஊருக்கு அனுப்பனும்.”
கைகள் வேலையைச் செய்து கொண்டிருக்க, வாய் சிவரஞ்சனியைத் திட்டிக் கொண்டிருக்க, மூளையோ அவள் அண்ணனை எப்படி ஊருக்கு அனுப்புவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.
வாசலில் அமர்ந்திருந்த கேசவன், போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும் தெருவில் நடந்து போகும் பெண்களின் மீது சற்று அதிகமாகவே பார்வை போனது.
அப்பொழுது வாசலில் இருந்து சில அடிகள் தள்ளி ஒரு கார் வந்து நிற்கவும், அவனது கவனம் அங்கே சென்றது. அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம், சற்று தூரத்தில் தள்ளி நிறுத்தப் பட்டிருந்தது.
காரில் இருந்து முதலில் இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் அவனது கண்கள் விரிந்தன.
“ஏ… சாரதா உன் மூத்த பொண்ணு வந்துட்டா பாரு.” என்று வேகமாகக் குரல் கொடுத்தபடி உள்ளே ஓடினான்.
அவளைத் தொடர்ந்து வாசுகியும் ராகவனும் இறங்கினர். அவளிடம் ராகவன், “இவர் யாரும்மா?”
இவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாறி, தனது வீட்டின் அருகே வரவும் சிவரஞ்சனியின் அடிவயிறு பயத்தில் தடதடத்தபடி இருந்தது. கண்களில் கலவரம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிலும் கேசவனைக் கண்டதும் மேலும் பயம் அதிகரித்தது. சற்று நடுக்கத்துடனே பதில் தந்தாள்.
“எங்க சித்தியோட அண்ணன் சார்.”
கதிர், “நான் காரிலே இருந்து கொள்கிறேன், நீங்க ரெண்டு பேரும் போய் விட்டுட்டு வாங்க” என்று கூறியதால், அவனுடன் குழந்தைகளை விட்டுவிட்டு மூவர் மட்டும் சிவரஞ்சனியின் வீட்டிற்குள் சென்றனர்.
காரில் இருந்து இறங்கிய கதிர், அதன் மீது சாய்ந்து நின்றபடி சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் இருவரும் காருக்குள் ஆளுக்கொரு ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு, கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
காரில் வரும் போது அவள் படிக்கும் கல்லூரியைப் பற்றி விசாரித்து, படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தார் ராகவன். அவள் கல்லூரி பெயரைச் சொன்னதும் கதிரின் மனதில் சிலபல கணக்குகள்.
அவளிடம் சில விபரங்களைக் கேட்க வேண்டி இருந்தது அவனுக்கு. வாசுகியின் முன் விசாரித்தால் அடுத்த பிரச்சனைக்கு ரெடி ஆகிட்டியா? என்று திட்டுவாள் என்பதால், பிறகு தனியாகச் சந்தித்து விசாரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
மேலும் சிவரஞ்சனி அவளது சித்தியைப் பற்றி சொல்லியிருந்ததால், அவனுக்கு உள்ளே சென்று அவர்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கவில்லை. சாரதாவைச் சமாதானப் படுத்தும் அளவுப் பொறுமையெல்லாம் தனக்குக் கிடையாது என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும்.
தான் தேவையில்லாமல் ஏதேனும் பேசி விட்டாலோ, கை நீட்டி விட்டாலோ சிவரஞ்சனிக்குத்தான் பிரச்சினை என்பதால், தான் உள்ளே வரவில்லை என்று கூறிவிட்டான்.
மூவரும் வீட்டினுள் நுழையவும், கேசவனின் குரலைக் கேட்டு சாரதா வெளியே வரவும் சரியாக இருந்தது.
“வீட்டுக்குள்ள கால எடுத்து வச்ச வெட்டிடுவேன். வெளிய போடி.”
சாரதாவின் ஆங்காரக் குரலைக் கேட்டதும் நடுங்கிப் போய் வாசுகியுடன் ஒட்டி ஒடுங்கிப் போய் நின்றிருந்தாள்.
“பெரியவங்க அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க. சிவரஞ்சனி மேல எந்தத் தப்பும் இல்லை.”
அமைதியான குரலில் பேசிய வாசுகியையும் உடன் வந்திருந்த ராகவனையும் பார்த்ததும் சாரதாவின் வேகம் சற்றுக் குறைந்தது. ஆனால் சிவரஞ்சனியை முறைப்பதை விடவில்லை அவள்.
சிவரஞ்சனியுடன் வந்திருந்த ராகவனைப் பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. மத்திய அமைச்சர் என்றதும் சற்று பயம் கலந்த மரியாதையும் வந்திருந்தது.
ஆனால் கேசவனுக்குத்தான் சட்டென்று உடன் வந்திருப்பவர்கள் யார் என்பது புரிபடவில்லை. சாரதா அமருமாறு நாற்காலியைக் காட்டியதும் அமர்ந்த ராகவன்,
சிவரஞ்சனி கடலில் விழுந்ததில் இருந்து, மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களும் கதிரும் அவளைக் காப்பாற்றியதையும், உடனடியாகத் திரும்ப முடியாத சூழ்நிலையால் மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று திரும்பி வந்ததையும் எடுத்துக் கூறினார்.
இதில் சிவரஞ்சனியின் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் எடுத்துக் கூறினார்.
“கடல்ல விழுந்தவ அப்படியே செத்துப் போயிருந்தாக் கூடக் கவலையில்ல. ஆனா மூனு நாள் இராத்திரி வீடு வராம வேற ஆம்பளைங்களோடத் தங்குனவள, நான் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன் ஐயா.”
கடலில் விழுந்து செத்திருந்தாலும் பரவாயில்லை என்று சாரதா கூறியது, அப்படி ஒரு கோபத்தைக் கொடுத்தது ராகவனுக்கு. ஆனாலும் பொறுமையாக,
“அப்படிச் சொல்லாதீங்கம்மா… அந்தப் பிள்ள மேல எந்தத் தப்பும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு. உங்கப் பொண்ண பத்திரமாதான் கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.”
“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது. இந்த ஓடுகாலிக் கழுதைய என்னால வீட்டுக்குள்ள சேர்க்க முடியாது.”
ராகவனும் வாசுகியும் வெகு நேரம் சமாதானமாகப் பேசியும், சாரதா தன் பிடியில் இருந்து மாறவே இல்லை. இடையிடையே சிவரஞ்சனிக்கு முதுகில் நான்கு அடியும் விழுந்தது. ராகவனாலும் வாசுகியாலும் சாரதாவைத் தடுக்க முடியவில்லை.
கேசவனைப் பார்த்த ராகவன், “உங்க தங்கைக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா நீங்க?” என்று அவனைத் துணைக்கு அழைக்க, அவனோ…
“அய்ய சாரதா… எதுக்கு இப்ப அவள உள்ள சேர்க்க மாட்டேன்னு சொல்ற? இப்ப எதுவும் பேசாத. அடுத்த முகூர்த்தத்துல எனக்கும் அவளுக்கும் கல்யாணத்த முடிச்சி விடு. அதுக்கு மேல அவ வெளியில கால எடுத்து வைக்க முடியாதபடி காலை வெட்டறேன்.”
என்ற கேசவனின் பேச்சில் மிரண்டு போயினர் இருவரும். ‘முக்காக் கிழவனா இருக்கான்… இவனுக்கு இந்த சின்னப் பொண்ணக் கட்டி வைக்கறதா?’ நினைக்க நினைக்கத் தாங்கவில்லை வாசுகிக்கு.
இனியும் இந்தப் பெண்ணை இந்த வீட்டில் விட வேண்டுமா? என்ற எண்ணத்தில் இருந்தனர் இருவரும். அதிலும் கேசவனைக் கண்டதும் அவ்வளவு கோபம் வந்தது.
இந்தப் பேச்சுக்களைக் கேட்டு அழுது கொண்டிருந்த சிவரஞ்சனியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவள் நாள்தோறும் இத்தகைய சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
அவளைக் கட்டிக் கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்து விட்டபடி இருந்த கல்யாணி மட்டுமே, அவளுக்கு ஒரே ஆறுதல் என்பதும் புரிந்தது.
உள்ளே சிவரஞ்சனி அடிவாங்கும் சப்தமும் சாரதாவின் உயர்ந்த குரலையும் கேட்ட கதிர், உடனடியாக வீட்டின் வாசலுக்கு வந்து விட்டான். ஆனால், உள்ளே செல்லாமல் அனைவரது பேச்சுக்களையும் கேட்டபடி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு சாரதா, கேசவனை விட சிவரஞ்சனியின் மீது அதிகமான கோபம் இருந்தது. இவ்வளவு ஏச்சுப் பேச்சுகளையும் அடியையும் வாங்கிக் கொண்டு, எதிர்த்துப் பேசாமல் அழுது கொண்டிருக்கிறாளே என்று வெகுவாகக் கோபப் பட்டான்.
உள்ளே நுழைந்து அவளைக் கூட்டிக் கொண்டு வந்துவிடுவோமா என்று, உள்ளம் பரபரத்தது அவனுக்கு. அதிலும் கேசவன் கடைசியாகப் பேசியதைக் கேட்டவுடன், அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் வேகம் வந்தது.
“பெரிய மனுஷங்க சொல்றாங்க, நான் சொல்றேன் கேட்க மாட்டியா நீ. மூனு நாளு வெளியில தங்கி வந்தவள எவன் கட்டிப்பான்றது தான உனக்கு பிரச்சினை.
கவலைய விடு சாரதா. நானே அவளக் கட்டிக்குறேன். அதுக்கப்புறம் அவ வீட்ட விட்டு வெளியே போக மாட்டா. அதுக்கு நான் கேரண்டி”
“அண்ணா… உனக்கு அவளக் கல்யாணம் பண்ணனும்னா, நீயே உன் ஊருக்கு கூட்டிப் போயி கல்யாணம் பண்ணிக்க. நான் இவள வீட்டுக்குள்ள வச்சிக்க மாட்டேன்.”
சிவரஞ்சனிக்கு உள்ளுக்குள் அவ்வளவு கோபமும் ஆற்றாமையும் இருந்தது. அவளுக்கு உண்மையில் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. வாசுகியிடம் சொல்லி ஏதேனும் பெண்கள் விடுதியில் சேர்த்துவிடச் சொல்வோம் என்று நினைத்தபடி, அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.
அப்போது கேசவன் அவளது வலது கையைப் பிடித்து இழுத்தபடி,
“அழுவாத புள்ள… மாமா உன்னக் கல்யாணம் பண்ணிக்கறேன். நாம இங்க இருக்க வேணாம். நம்ம ஊருக்குப் போயிடுவோம். அப்புறமா வந்து உன் சித்திய சமாதானம் பண்ணலாம்.” என்று கூறினான்.
அவனை மிரட்சியாகப் பார்த்தபடி அவனது கைக்குள் சிக்கியிருந்த தனது வலது கையை விடுவிக்கப் போராடியபடி இருந்தாள் சிவரஞ்சனி. சரியாக அந்த நேரம் கேசவனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல், உள்ளே நுழைந்தான் கதிர்.
உள்ளே நுழைந்தவனின் பார்வை முதலில் சிவரஞ்சனியின் கைகளைப் பிடித்திருந்த கேசவனின் கைகளில் ஒரு நொடி நிலைத்துப் பின் சிவரஞ்சனியின் முகத்திற்கு வந்தது.
“இந்த ஆளக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”
கேசவனிடம் இருந்து கைகளை விடுவிக்கப் போராடியபடியே, கதிரின் குரலில் மிரண்டு அவன் முகத்தைப் பார்த்தவள், வேகமாக இல்லை என்று தலையை ஆட்டினாள்.
உடனேக் கேசவனின் கை மணிக்கட்டைப் பற்றியவன்,
“உனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிடுச்சா?”
“ம்ம்…” மீண்டும் ஆமாம் என்ற வகையில் ஒரு தலையாட்டல்.
“உனக்கு இந்த வீட்ல இருக்கனுமா?”
“இல்லை”
அவனது ஒவ்வொரு கேள்விக்கும் கேசவனைப் பிடித்திருந்த கதிரின் பிடி இறுகியது. தானாக சிவரஞ்சனியின் கையை விட்டான் கேசவன்.
“டேய்… டேய்… கைய விடுடா… ஆ… ஆ… அம்மா…”
கதிர் அவனது கையை முறுக்கியதில் வலி தாங்காமல் கத்தினான் கேசவன்.
“அப்புறம் எதுக்கு இவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு அழுதுகிட்டு அடி வாங்கிகிட்டு இருக்க?”
“…”
“தைரியமா உன் சம்பந்தப்பட்ட முடிவ நீ எடுக்கலாம். அதுக்கான வயசு வந்துடுச்சி உனக்கு.”
“…”
“எங்க கூட வா… உன்னப் படிக்க வச்சு நல்ல வேலை வாங்கித் தரவேண்டியது எங்க பொறுப்பு. என்ன… வர்றியா?”
சம்மதமாகத் தலையசைத்தபடி, “சரி” என்றாள்.
“போ… உள்ள போய் உனக்குத் தேவையான உன்னோட சர்டிபிகேட் மட்டும் எடுத்துட்டு வா”
அவன் கூறியதும் விடுவிடுவென்று உள்ளே சென்றவள், தனது சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலுடன் வந்தாள்.
வாசுகி ராகவன் இருவருக்குமே கதிரின் அடாவடிதான் இவர்களுக்குச் சரி என்று தோன்றியது.
கேசவனின் கையில் மளுக்கென்று ஒரு சப்தம் வரவும் அவன் உச்சஸ்தாயில் கத்தவும் சரியாக இருந்தது. கதிர் கையை உதறியதும் அந்த அறையின் மூலையில் போய் விழுந்தான் கேசவன்.
சமாளித்து எழுந்து வந்தவன், கதிர் கையை உடைத்து விட்டக் கோபத்தில்,
“ஏய்… எங்க வீட்டுக்குள்ள வந்து என் கையவே உடைச்சிட்டியா? எங்க வீட்டுப் பொண்ண எங்கடா கூட்டிட்டுப் போற?” என்று கதிரிடம் எகிறிக் கொண்டே,
“ஏய் ஓடுகாலி நாயே… எவனோ ஒருத்தன் கூப்பிட்டா அவன் பின்னாடியே போயிடுவியா? போடி உள்ள.” என்றுக் கூறியபடி சிவரஞ்சனியின் தலைமுடியை இடது கையால் பற்ற வந்தான்.
அவனது இடது கையையும் பிடித்து முறுக்கியபடி அவன் வயிலும் மூக்கிலும் சரமாரியாகக் குத்தினான் கதிர். கதிரின் பலத்தின் முன்னால் கேசவனால் அரை நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாமல், அவனது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வழிந்தது.
தனது அண்ணனைத் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து தாக்குபவனைக் கண்டதும் சாரதா, பெருங்குரலெடுத்துக் கத்தியதுடன், சிவரஞ்சனியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, கதிரின் பிடியில் இருந்து கேசவனைக் காப்பாற்றப் போராட…
மயங்கித் தொய்ந்து போயிருந்த கேசவனை விட்டவன், அதேக் கையால் சாரதாவின் குரல் வளையைப் பிடித்து நெரிப்பது போல, அருகே கொண்டு சென்றிருந்தான்.
அவன் கழுத்தை நெரிப்பது போல வந்த வேகத்திலும், அவன் பார்வையில் தெரிந்த உக்கிரத்திலும், அரண்டு போன சாரதா சுவரோடு சுவராக பயத்தில் பல்லி போல ஒட்டிக் கொண்டாள்.
அவளைப் பார்த்து முறைத்தபடி, ஒற்றை விரலை நீட்டி,
“அந்தப் பொண்ணு எதிர்த்துப் பேச மாட்டேங்குதுங்குற ஒரே காரணத்தால உன் இஷ்டத்துக்கு ஆடிகிட்டு இருக்குற. இதே உன் பொண்ணா இருந்தா இப்படிப் பேசுவியா?”
“பொம்பளைன்னு பார்க்க மாட்டேன். இன்னோரு தடவை அந்தப் பொண்ண ஏதாவது பேசுன… உன்னைக் கொன்னு போட்டுடுவேன்” என்று கர்ஜித்தவனைக் கண்டு மிரண்டு போனாள் சாரதா.
அதற்குள், ராகவனும் வாசுகியும் கதிரை பின்பக்கம் இழுக்கப் போராட… இந்தக் களேபரத்தில் மிரண்டு அழுத கல்யாணியைத் தூக்கிக் கொண்டு கதிரிடம் விரைந்த சிவரஞ்சனி, அவளது சித்தியை விட்டு விடும்படிக் கெஞ்சினாள்.
அழுது கொண்டிருந்த கல்யாணியைப் பார்த்ததும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், சாரதாவை முறைத்து விட்டு, வாசுகியையும் ராகவனையும் பார்த்து,
“அவள அழைச்சிட்டு வாங்க… நான் வெளியே வெயிட் பண்றேன்.” என்றவாறு வெளியேறினான். புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. அவன் உள்ளே நுழைந்து ஐந்து நிமிடங்களில் இவ்வளவும் முடிந்தது.
கொஞ்சம் விட்டிருந்தால் அவன் தன் கழுத்தைக் கண்டிப்பாக நெரித்திருப்பான் என்பது புரிந்தது சாரதாவுக்கு. அது சிவரஞ்சனிக்காக என்பதும் புரிந்தது. பயத்தில் ஓய்ந்து போய் சுவரோரம் சரிந்து அமர்ந்தாள்.
இங்கு கேட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே கூடி இருந்தனர். அவர்களுக்கும் உள்ளே நடக்கும் பிரச்சனையின் சாராம்சம் புரிந்தது.
சுவற்றை ஒட்டி அமர்ந்திருந்த சாரதாவைப் பார்த்த ராகவன்,
“என்னைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நாங்க சிவரஞ்சனியைக் கூட்டிட்டுப் போறோம். நல்ல ஹாஸ்டல்ல சேர்த்து நானே அவள படிக்க வைக்குறேன்.
என்னைக்காவது அவள உங்களுக்குப் பார்க்கனும்னா, தாராளமா வந்து பாருங்க. அப்ப நாங்க கிளம்புறோம்.” என்றவர் சற்று நிதானித்து,
“கதிர் உங்க கிட்ட நடந்துகிட்ட முறை தப்புதான். கோபத்துல பண்ணிட்டான். மன்னிச்சிடுங்க.”
அவரைப் பின்பற்றி வாசுகியும், “நாங்க போய்ட்டு வரோம் மா.” என்றவள் சிவரஞ்சனியிடம்,
“சித்திகிட்ட சொல்லிட்டு வாம்மா.” என்றபடி வெளியேறினாள்.
அமைதியாக கல்யாணியை இறக்கி விட்ட சிவரஞ்சனி, தனது சித்தியின் அருகில் சென்றாள்.
“உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கலைன்னு எனக்குத் தெரியல சித்தி. ஆனா, நான் ஒருநாளும் உங்களை வெறுத்ததில்லை. நான் போயிட்டு வர்றேன். என்னால இனி உங்களுக்குத் தொல்லை இருக்காது. நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க சித்தி.”
கல்யாணியிடமும், “அக்கா போய்ட்டு வர்றேன் பாப்பு.” அந்தக் குழந்தைக்கு என்ன புரிந்ததோ? தன் அக்கா வெளியில் இருந்தால் நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணியபடி, “சரிக்கா… நீ அப்புறமா என்னைப் பார்க்க வா…”
“கண்டிப்பா வருவேன்டா… வரேன் பாப்பு… வரேன் சித்தி…” என்றபடி வெளியேறினாள் .
வெளியே நின்றிருந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடந்ததை விளக்கிக் கூறி விடைபெற்றாள். அவளை அழைத்துச் செல்வது மத்திய அமைச்சர் ராகவனும் அவரது மனைவியும் என்பதால் பெரிதாக விளக்கங்கள் தேவைப்படவில்லை அவர்களுக்கு.
செய்தியறிந்து கலாவும் கோதையும் கூட ஓடி வந்திருந்தனர். தோழிகளைக் கண்டதும் அவர்களிடமும் விடைபெற்றவள் காரில் ஏறிக் கொண்டதும் கார் மீண்டும் காட்டுமன்னார்கோவில் நோக்கி விரைந்தது.
காரில் கணத்த மௌனம் நிலவியது. குழந்தைகள் இருவரும் சிவரஞ்சனி திரும்பவும் அவர்களுடனே வருவதால், மகிழ்ச்சியாக அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ராகவன்தான் முதலில்,
“இனிமே மனசுல எதுவும் கவலையை வச்சுக்காம படிப்புல மட்டும் கவனத்தைச் செலுத்துமா. நீ நல்லாப் படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டா தானா புரிஞ்சுக்குவாங்க உன்ன.”
“சரிங்க சார்.”
“எப்பவும் கதிர் அடிதடியில இறங்கினா நான் கண்டிக்கத்தான் செய்வேன். ஆனா எனக்கே இன்னைக்கு கதிர் செஞ்சதுதான் சரின்னு தோனிடுச்சி.”
“பெண்கள் என்னைக்கும் தைரியமா இருக்கனும் சிவரஞ்சனி. எல்லாருக்கும் அடங்கிப் போய் அழுதுகிட்டு இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சிட்டுப் போயிடுவாங்க.”
வாசுகியின் கூற்று அனைவருமே ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. பாசம் காட்ட வேண்டிய இடத்தில் மட்டுமே பாசத்தைக் காட்ட வேண்டும். நம்மை அடக்கி ஆள்பவர்களிடம் இல்லை என்பது, சில நேரங்களில் உண்மைதானே.
கதிருக்கோ அவள் மீது வெகுவான கோபம் இருந்தது. ‘தேவையான இடத்தில் கூட எதிர்த்துப் பேசாமல் அடங்கியிருந்து, எதைச் சாதிக்கப் போகிறாள் இவள்? அமைதிசிகாமணி என்று யாராவது பட்டம் கொடுத்து சிலை வைக்கவா போகிறார்கள்?’ வாயைத் திறந்தால் அவளைக் கண்டிப்பாகக் கன்னாபின்னாவென்று திட்டிவிடுவோம் என்றதால் அமைதியாக வந்தான்.
அவளுக்குத் தேவையான உடைகள் சிலவற்றை வாங்கியவர்கள், அவளுக்கு அத்தியவசியமான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டனர்.
ஒரு நல்ல உணவகம் சென்று இரவு உணவை முடித்தவர்கள் ஊர் வந்து சேர்வதற்கு இரவு மணி பத்துக்கு மேல் ஆனது. ராகவனது வீட்டில் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு, தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான் கதிர்.
போகும் முன் சிவரஞ்சனியிடம் வந்து அவளது கண்களைக் கூர்ந்து பார்த்தவாறு, “நிம்மதியாத் தூங்கு. இனிமே எந்தக் கஷ்டமும் உனக்கு வராது. நாளைக்கு விடியற விடியல் உனக்கானதா நினைச்சுக்கோ.
நான் நாளைக்கு வந்து உன்னை நல்ல ஹாஸ்டலாப் பார்த்துச் சேர்த்து விடறேன் புரியுதா.”
அவனது பார்வையின் தீட்சண்யம் தாங்க முடியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டு சரி என்பது போலத் தலையசைத்தவளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.
விருந்தினர் அறையில் அவள் உறங்குவதற்கு வசதி செய்து கொடுத்த வாசுகி, “நிம்மதியா கவலையில்லாமத் தூங்குமா. எல்லாப் பிரச்சனையும் நாளைக்குச் சரியாகிடும்” என்று கூறி வெளியேறி தனது அறைக்குச் சென்றாள்.
தான் இருந்த அறையின் கதவைத் தாழிட்டுவிட்டு வந்து படுத்த சிவரஞ்சனிக்கு உறக்கம் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டியது.
—-காற்று வீசும்.