ESK-14
ESK-14
சுவாசம் 14
உன் நியாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னை பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
பனிப்போர்வை போர்த்திச் சுகமாய் துயில் கொண்டிருந்த பூமிக் காதலியை, தன் வெதுவெதுப்பான கரங்களால் வருடி, எழுப்ப முயன்று கொண்டிருந்தான் வெய்யோன். அந்த இதமான அதிகாலைப் பொழுதில், எம்பி3 பிளேயரில் சுகமாய் ஒலித்தது பாடல். தன் அறையின் வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த கதிரின் நினைவெங்கும் தன்னவளின் சுவடுகள்.
தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. ஒரு வாரத்துக்கு முன்பு தன்னிடம், ஒரு பெண்ணைக் கண்டு நீ மயங்கக் கூடும் என்று எவரேனும் கூறியிருந்தால், அவர்தம் நிலைமை கவலைக்கிடமாக ஆகியிருக்கும்.
ஆனால் இன்றோ! இரவு கண்களைத் தூக்கம் தழுவும் வரை அவள் நினைவு. கனவிலும் கலையாத அவள் முகம் கண்டு அவன் உறக்கம் கலைய, நினைவிலும் ஒரு நொடி கூட அகலாமல் நெஞ்சத்தில் அவளுடைய நிறைவு. காதல் சுக இம்சையடா…! சந்தோஷ அலுப்பு அவனிடம்.
ம்கூம்… அவள் முகத்தை மீண்டும் காணாமல், தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்று தெரிந்த நொடி, உடற்பயிற்சி செய்வதைக் கைவிட்டுத் தரையில் கால் நீட்டி அமர்ந்தான். அண்ணாந்து வானத்தில் பார்வையைப் பதித்தவன், சுகமாய் அவள் நினைவுகளில் கரைந்து போனான்.
மேகங்கள் ஏதும் இன்றி துடைத்து வைத்தது போல இருந்தது வானம். அவளை முதன் முதலில் பார்த்த நிமிடத்தில் இருந்து, அவளது கையோடு கை கோர்த்த நேற்றைய நிமிடம் வரை விழிகளுக்குள் படமாய் ஓடியது.
தேகத்தில் அவளது நினைவுகள் தந்த வெம்மை, மார்கழிப் பனியில் மேலும் அதிகரிக்க… இப்பொழுதே! இந்தக் கணமே! அவளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு தவிப்பு. நொடி கூட தாமதிக்காமல், எழுந்து குளித்துக் கிளம்பி ரெடியானவன், அந்நேரத்திற்கே வாசுகியின் வீட்டை நோக்கித் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றான்.
வாசலில் வண்டியை நிறுத்திப் பூட்டியவனை வரவேற்றது வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரங்கோலி ஒன்று. ரசனையுடன் அதைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தவனைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பு சிரித்த செக்யூரிட்டி ஆபீசர்,
“என்ன கதிர்… அதிகாலையிலேயே காத்து இந்தப் பக்கம் வீசுது?”
“சும்மா… சார். அக்காவப் பார்க்கலாம்னு… “ என்று இழுத்தவனைப் பார்த்து உரத்துச் சிரித்தவர்,
“உள்ள போ மேன். உன் ஆளு கோவிலுக்கு ரெடியாகிட்டிருக்காங்க. நான்தான் பாதுகாப்புக்கு போறேன்.”
அவர் கூறியதைக் கேட்டவன், ‘ஏன்? நாங்க கூட்டிட்டுப் போக மாட்டோமா? அதுக்குத் தான டூவீலர் எடுத்துட்டு வந்திருக்கோம்’ என்று மனதில் நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தான். ஹாலில் யாரையும் காணாமல் குரல் கொடுத்தவன், சமயலறைக்குள் நுழைந்து பார்த்தான்.
காலை உணவுக்கு தயார் செய்ய வேண்டியவற்றை சமையல் செய்பவரிடம் சொல்லிக் கொண்டிருந்த வாசுகி, அவனது குரல் கேட்டு வியப்பாகத் திரும்பினாள்.
“என்னடா இது? இவ்வளவு காலையில கிளம்பி வந்திருக்க?”
“ஏன் வரக்கூடாதா? உன்னப் பார்க்கனும் போல இருந்துச்சி அதான் கிளம்பி வந்தேன்.”
“அடங்கப்பா…! பார்த்துடா… பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லு. நீ சொல்றதக் குழந்தை கூட நம்பாது.”
“ஏன்? உன்னைப் பார்க்க நான் வந்ததே இல்லயா?” முறுக்கிக் கொண்டான்
“சரிடா… என்னைதான் பார்க்க வந்தன்னு ஒத்துக்கறேன். காபி குடிக்கிறியா?”
“ம்ம்ம்… குடு” என்றபடி ஹாலில் வந்து அமர்ந்தவன், பார்வையைச் சுழற்றியபடி, “எங்கக்கா பிள்ளைங்களக் காணோம்?”
காபியை அவன் கையில் கொடுத்த வாசுகி, “எதுக்குடா காலையிலயே பிள்ளைகளைத் தேடுற?”
“ஸ்கூல்க்கு டைம் ஆகிடுச்சில்ல, எழுந்து கிளம்ப வேணாம்?”
ஆச்சர்யமாகத் தாடையில் கை வைத்த வாசுகி, “என்னடா கதிரு? இப்படி ஆகிட்ட…? ஞாயிற்றுக்கிழமை ஏதுடா ஸ்கூல்?”
நாக்கைக் கடித்துக் கொண்டவன், “ஹி… ஹி… மறந்துட்டேன்க்கா.. .”
“அது சரி…”
அவனது பார்வை, அப்பொழுது கீழே அறையிலிருந்து அன்றலர்ந்த மலர் போல வெளியே வந்த சிவரஞ்சனியின் மீது படிந்தது. அவள் கோவிலுக்குச் செல்லத் தயாராக கிளம்பியிருந்தாள்.
அவனைப் பார்த்துப் புன்னகைத்தவளைக் கண்டு கண்களைச் சிமிட்டியவன், “எங்கக் காலையிலயே ஃபிரெஷ்ஷா கிளம்பி இருக்க?”
“கோவிலுக்குப் போகலாம்னு…”
“ஓ… செக்யூரிட்டி சொன்னாரு. அக்கா நானே சிவாவ கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேனே.”
“ஒன்னும் வேண்டாம்… நான், அனு, சிவா மூனு பேரும் கோவிலுக்குப் போறோம். நீ வீட்ல இருந்து ஆதுவ பார்த்துக்கோ. ஆது நல்லா தூங்கிட்டு இருக்கான். முழிச்சா அழுவான். பக்கத்திலே இருந்து பார்த்துக்கோடா.” அவன் நினைப்பில் கூடை மண்ணை அள்ளிக் கொட்டியவள்,
அனு மாடியிலிருந்து இறங்கி வரவும், மூவரும் அவனைச் சட்டையே செய்யாமல் வெளியேறினர். அவர்களைக் கடுப்பாக முறைத்தவன்,
‘இவளப் பார்க்கனும், பேசனும்னு ஒருத்தன் காலையிலயே கிளம்பி வந்தா… கொஞ்சம் கூடக் கண்டுக்காம போறதப் பாரு. இருடி என் கையில சிக்கும் போது உனக்கிருக்கு’ மனதிற்குள் முனுமுனுத்தபடி அவர்கள் பின்னே போக…
வாசுகி காரில் ஏறியதும், “கதிர், ஆது எழுந்ததும் சூச்சூ போகனும் சொல்வான்டா. அவனுக்கு ஹெல்ப் பண்ணு இல்லைன்னா பெட்லயே போயிடுவான்.”
கடுப்பாக முறைத்தவன், “ரொம்ப சந்தோஷம். அதுக்குதான் நான் சீக்கிரமா கிளம்பி வந்தேன் பாரு.”
“ரொம்ப அலுத்துக்காதடா, ஒரு மணி நேரத்தில வந்துடுவோம்.”
கார் பார்வையை விட்டு மறைந்ததும் உள்ளே வந்தவன் கடுப்புடன் டீவியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த ஆதவனைக் குளிக்க வைத்து, பால் குடிக்க வைத்து தயாராக்கி இருவரும் அ.மர்ந்திருந்த போது, கோவிலுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்திருந்தனர்.
காலை உணவை கதிருக்கும், அனுக்கும் வாசுகி பரிமாற, ஆதவனுக்கு உணவூட்டுவதாகச் சொல்லி, அவனோடு சேர்ந்து கார்ட்டூன் பார்க்க அமர்ந்து விட்டாள் சிவரஞ்சனி. தன்னுடன் வந்து அமரும்படி கதிர் காட்டிய சைகைகளை, பாவம் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இது வேலைக்காகாது என்று எண்ணிக் கொண்டவன், அவளை எங்காவது வெளியே அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்து,
“அக்கா… நம்ம கட்டிகிட்டு இருக்கற வீட்டோட கட்டுமான வேலைகள் இந்த மாசம் முடிஞ்சிடுமாம். இன்னைக்கு மாடுலர் கிச்சன் போடறதுக்கு ஆட்கள் வர்றாங்களாம் இன்ஜினியர் சொன்னாரு.”
“சரிடா அப்ப அடுத்த மாசம் தை மாசம்தான், பால் காய்ச்சிடலாமா?.”
“ம்ம்… ஆமாக்கா நானும் அதான் நினைச்சேன். அப்புறம் சிவாவ இன்னைக்கு வீட்ட காட்றதுக்கு கூட்டிட்டுப் போகட்டா? மாடுலர் கிச்சன் அவளுக்குப் பிடிச்ச மாதிரி ஃபிக்ஸ் பண்ணலாம் இல்ல.” நைசாக நூல் விட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“அதுவும் சரிதான். அவ இருக்கப் போற வீடு. அவ விருப்பத்துக்கு செய்யச் சொல்லலாம். நீ என்ன பண்ற மதியானம் அந்த இன்ஜினியர வரச் சொல்லு. நானும் சிவாவும் போய் பார்த்து என்ன ஏதுன்னு பேசிக்கிறோம்.” நான் உனக்கு அக்காவாக்கும் என்று நிரூபித்தாள் வாசுகி.
அவளைப் பாவமாகப் பார்த்தவன், “நீ எப்பக்கா எனக்கு வில்லியா மாறுன?”
“நீ எப்ப ரெமோவா மாறுனியோ? அப்பதான்.” என்றவாறு புன்னகைக்க…
“இப்ப முடிவா என்ன சொல்ற? அவள என்கூட அனுப்புவியா? மாட்டியா?”
“உன் தலைவர் வந்து, அவ வீட்டுக்குப் போய் கல்யாணம் பேசி, தேதி முடிவு செய்யற வரை அனுப்ப மாட்டேன்.” என்றபடி சாப்பிட்டத் தட்டுகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
மிகுந்த எரிச்சலோடு சிவரஞ்சனியைத் திரும்பிப் பார்த்தான். குழந்தைகளோடு குழந்தையாக அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் மேலும் கடுப்பேறியது.
‘நமக்குள்ள மட்டும்தான் விதவிதமா பல்ப் எரியுது டிசைன் டிசைனா மணியடிக்குது போல… அம்மணி ஒரு பாதிப்புமே இல்லாம டீவி பார்த்துகிட்டு இருக்கறா. இவள…’ பல்லைக் கடித்தவன், அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிவரஞ்சனி ஆதவனுக்கு உணவூட்டி முடித்து, கைகளைக் கழுவ இவனருகில் இருந்த வாஷ்பேசினுக்கு வந்தாள்.
குழந்தைகள் டீவியில் கவனமாக இருக்க, வாசுகியோ சமையறையில் இருக்க, நொடி நேரத்தில் அவளது கரத்தைப் பற்றி இழுத்து, சுவரோடுச் சாய்த்து அவள் மேல் சாய்ந்தவன், அவள் அதிர்ந்து விழிக்கும் போது, அவளது இதழில் அழுந்த முத்தமிட்டான்.
அதே வேகத்தில் விலகியவன், “அக்கா நான் கிளம்புறேன். என் ஃபிரண்டு ஸ்ரீதர பார்க்கப் போறேன். மதியம் நீங்க வீட்ட பார்க்க வரும் போது எனக்கு ஃபோனப் போடுங்க.” குதூகலத்துடன் கூறியபடி வெளியேறினான்.
அவன் முத்தமிட்ட பாதிப்பில் இருந்து வெளிவராத சிவரஞ்சனி, பேயை நேரில் பார்த்தவள் போல அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
சற்றே வளர்ந்து வரும் புறநகர் ஏரியா அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காலி மனைகள் இருந்தாலும் ஓரளவு நெருக்கமாக வீடுகள் இருந்தன. அனைத்தும் பங்களா டைப் வீடுகளே. சந்தன கலர் டிஸ்டம்பரில் குளித்திருந்த அழகிய வீட்டின் முன் தன்னுடைய டூவீலரை நிறுத்திய கதிர், வீட்டின் அழைப்பு மணியை அலற விட்டான்.
கதவைத் திறந்த மனிதன் ஆறு அடிக்கு மேல் வளர்ந்திருந்தான். கேஷூவலாக ஒரு பெர்முடாஸும், கையில்லாப் பனியனும் அணிந்திருந்தான். பனியனின் இறுக்கத்தில் தெரிந்த அவனது உடற்கட்டு அவன் ஒரு காவல்காரன் என்பதைக் கூறியது.
கதிரைக் கண்டவன் முகம் கொள்ளாத சிரிப்போடு, “டேய்… கதிரு… வாடா நல்லவனே. எவ்வளவு நாளாச்சு நாம பார்த்து.” என்றபடி தாவி அணைத்துக் கொண்டான்.
தானும் அணைத்துக் கொண்ட கதிர், சற்று விலகி,
“டேய் ஸ்ரீதர்… இது என்னடா லேசா தொப்பை போட்டிருக்க? போலீஸ்காரன்றத இப்படியும் ப்ரூஃப் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்றபடி அவனது வயிற்றில் லேசாக கைகளை மடக்கி குத்தினான்.
வலிப்பது போல பாவனை செய்தவனோ, “கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால சாப்பிட்டா இப்படித்தான் தொப்பை போடும். நீ இன்னும் ஆஞ்சநேயரத்தான சுத்திகிட்டு இருக்க… அதான் ஃபிட்டா இருக்க.” என்றபடி கதிரை வீட்டினுள் அழைத்து வந்தான்.
“அதெல்லாம் இப்ப ஆஞ்சநேயரோட சேர்த்து ஏழுமலையானையும் சுத்த ஆரம்பிச்சாச்சு. சீக்கிரம் இங்கயும் தொப்பை விழுந்திடும்.”
முகத்தில் ஆச்சர்ய பாவனைக் காட்டிய ஸ்ரீதர், “டேய்…! கதிரு நீயாடா? யார்றா அது உன்னையும் மயக்கிய மேனகை?”
சிவரஞ்சனியைப் பற்றிய விவரங்களைக் கூறியவன், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதையும் கூறினான்.
உண்மையான மகிழ்ச்சியுடன் கதிரை அணைத்துக் கொண்ட ஸ்ரீதர், “க்ரேட் கதிர். உன்ன நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. சிஸ்டர பார்க்கனும்டா ஒரு நாள் கூட்டிட்டு வா.”
“சரிடா கூட்டிட்டு வரேன்… மஞ்சு எப்படி இருக்காங்க? கூட்டிட்டு வரலயா?”
“இல்லடா திடீர்னு இந்த ட்ரான்ஸ்பர் வந்ததால எதுவும் ப்ளான் பண்ண முடியல. அதுமட்டுமில்ல அவளுக்கு இது ஒன்பதாம் மாதம். வளைகாப்புப் போட்டு அவங்க அம்மா வீட்டுல இருக்கா. எப்படியும் இன்னும் ஆறு மாசமாவது ஆகும் அவளைக் கூட்டிட்டு வர. அதுவரை லீவு கிடைக்கும் போது நான்தான் போய்ப் பார்த்துக்கனும்.”
“ஓ… சாரி மச்சான்… திடீர்னு உன்ன இங்க ட்ரான்ஸ்பர் பண்ணதுல பர்சனலா எம்பி ராகவன் தலையீடு இருந்துச்சி. எனக்காகத்தான் உன்னை இங்க வரவச்சிருக்கார்.”
“ம்ம்… தெரியும்… கேள்விப்பட்டேன். சாரியெல்லாம் எதுக்கு சொல்ற மச்சான்? எனக்கு மினிஸ்டர் ராகவன் பத்தியும் தெரியும், உன்னைப் பத்தியும் தெரியும். முக்கியமான விஷயம் இல்லைனா எனக்கு இந்த ட்ரான்ஸ்பர் வந்திருக்காது. என்னப் பிரச்சினை?”
ஆதியோடு அந்தமாக எம்எல்ஏ குமாரும் எக்ஸ் எம்பி நாகராஜனும் சேர்ந்து செய்யும் அராஜகங்கள், அவர்களின் தங்கக் கடத்தல் முயற்சி, அதைக் கதிர் முறியடித்த விதம், அதற்குப் பழி வாங்க அவர்கள் போட்ட ப்ளான், அதிலிருந்து அவன் தப்பித்தது என அனைத்தையும் கூறினான்.
“அவனுங்க பெருசா என்னவோ தப்புப் பண்றானுங்க ஸ்ரீதர். அது என்னன்னுதான் பிடிபடல. ஹார்பர சுத்தி நடக்குற அத்தனை இல்லீகல் விஷயமும் என் காதுக்கு வந்துடும். ஆனா இது வேற எதுவோ!”
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”
“இல்ல மச்சான் அவனுங்க கையில புழங்குற பணம் இப்பல்லாம் அதிகம். அவனுங்க பேர்லயும் பினாமிங்க பேர்லயும் வாங்குற சொத்துக்கள் அதிகரிச்சிருக்கு. அதுமட்டுமில்ல அவன் இந்தத் தேர்தலில் செலவு பண்ணத் தொகையக் கேட்டா நீ அதிர்ந்து போயிடுவ”
”இவ்வளவு பணம் விளையாடுதுனா சாதாரண விஷயமா இருக்க முடியாது.”
“ம்ம்… ஆமா…, ஆனா எப்படியும் ஒரு நாள் மாட்டுவானுங்க. அப்ப சிந்தாம சிதறாம அவனுங்களப் பந்தாடனும்னா, எனக்கு லோக்கல் போலீஸ் உதவி கொஞ்சம் தேவை. அதான் உன்னை டிஎஸ்பியா இங்க வரவச்சோம். பழைய இன்ஸ்பெக்டரையும் மாத்தியாச்சு. இப்ப வந்திருக்கறவரு நல்ல நேர்மையான ஆளு.”
“கவலைப் படாதக் கதிர் கண்டிப்பா அவனுங்களைக் கூண்டோட களி திங்க வச்சிடலாம்.”
“ம்ம்… கண்டிப்பா செய்யனும் ஸ்ரீதர். உனக்கு இது புரமோஷன் வித் ட்ரான்ஸ்பர்தான?”
“ம்ம்… ஆமா. எனக்கு பர்சனலா ரெண்டு அசைன்மெண்ட் குடுத்துதான் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. ஒன்னு இந்த மாவட்டத்தில இப்ப சமீப காலமா அதிகரிச்சிட்டு வர்ற போதைப்பழக்கம். குறிப்பா சிறுவர்கள்கிட்ட.”
“போதைப் பழக்கம் அதிகரிச்சிட்டு வர்றது கவலைக்குரிய விஷயம்தான் ஸ்ரீதர். ஆனா கவர்ண்மெண்டே டாஸ்மாக் கடையை திறந்து வச்சிகிட்டு போதைப் பழக்கம் அதிகமாயிடுச்சின்னு சொன்னா என்ன செய்ய முடியும்? இந்த மாவட்டத்தில கூலித் தொழிலாளர்கள் அதிகம் ஸ்ரீதர். அதனால போதைப்பழக்கம் இங்க அதிகம்தான்.”
“நீ நான் சொன்னத சரியா புரிஞ்சிக்கல கதிர். போதைப் பழக்கம்னு நான் சொன்னது டாஸ்மாக் மட்டும் இல்ல. போதை மாத்திரை, போதை ஊசி, மிட்டாய் வடிவத்துல கூட கிடைக்கிற போதை மருந்துகள்தான். இந்த போதைப் பழக்கம் படிக்கிற மாணவர்கள்கிட்ட கணிசமா அதிகரிச்சிட்டு வருது.
போன மாசம் கடலூர்ல ஓடுற பஸ்ல இருந்து உருண்டு விழுந்து ஒரு ஸ்கூல் படிக்கற பையன் செத்தான்ல. கண்டக்டர், ட்ரைவருக்கு எதிரா போராட்டம்லாம் நடந்துதே.
உண்மையில அந்தப் பையன் போதை மருந்து உபயோகிச்சிருந்தான். ஸ்கூல் பேரு கெட்டுடும்னு விஷயத்தை அமுக்கிட்டாங்க.
அதுமட்டுமில்ல இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வராத ஏகப்பட்ட சம்பவங்கள் இந்த மாவட்டத்தில நடந்திருக்கு. எங்களுக்கு கிடைச்சிருக்க ரிப்போர்ட் படி 13 வயசில இருந்து 20 வயசு வரை உள்ள பிள்ளைகள்தான் அதிகமா பாதிக்கப்பட்டு இருக்காங்க.”
“பெரிய வளர்ச்சி அடைந்த சிட்டிகள்ல இந்தப் போதை மருந்து பிரச்சனை இருக்கறது தெரியும் ஸ்ரீதர். எங்க மாவட்டத்திலுமா மாணவர்கள் கிட்ட இந்தப் பழக்கம் இருக்கு? ரொம்ப வேதனையா இருக்குடா. ஆனா ஸ்டூடண்ட்ஸ் கையில எப்படிடா கிடைக்குது இதெல்லாம்?”
“இதுல பெரிய நெட்வொர்க்கே செயல்படுது கதிர். வெளி மாநிலங்கள்ல இருந்து, குறிப்பா சொல்லனும்னா பஞ்சாப் மாநிலத்துல இருந்து போதை மருந்துகள் சப்ளை ஆகுது. தரைவழிக் கடத்தல்தான் அதிக அளவுல நடக்குது.
இலங்கையில இருந்து கடல் வழியா கடத்திட்டு வர்ற போதை மருந்துகள் ராமேஸ்வரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல இருந்து எல்லா மாவட்டத்துக்கும் கடத்தப்படுது.
எவ்வளவு தீவிரமா கண்காணிச்சாலும், போலீஸ் கிட்ட பிடிபடற சரக்கு வெறும் 20 பர்சன்ட்தான். மீதி 80 பர்சன்ட் வியாபாரம் ஜரூரா நடக்குது.
இவங்களோட முக்கியமான டார்கெட்டே ஸ்கூல் பிள்ளைங்கதான். வெறும் பத்து ரூபாய்க்கே போதை மருந்துகள் கிடைக்குது.
போதை ஊசி மருந்துதான் பெரிய பிரச்சினையா இருக்கு. ஆபரேஷன் பண்ணும் போது உபயோகப் படுத்தற தடை செய்யப்பட்ட ஊசி மருந்த குளுக்கோஸ்ல கலந்து போதை ஊசியா பயன்படுத்தறாங்க.
வெறும் நாலு ரூபாய்தான் அந்த மருந்தோட விலை. ஆனா டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம கடைகள்ல கிடைக்காது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாங்கப்படற இந்த மருந்துகள் பெருமளவுல திருடப்படுது.
இது பற்றின கம்ப்ளைண்டே வர்றதில்ல. விலைக் குறைவான மருந்துங்கற அலட்சியம். ஆனா இதனால ஏற்படற பாதிப்பு ரொம்பவே அதிகம். மருத்துவமனை ஊழியர்களே இந்த மருந்துகளை வெளியில விக்கறதும் நடக்குது.
அப்படியே போதை மருந்து விக்கிற ஒரு சிலர் பிடிபட்டாலும் அவங்க கிட்டயிருந்து பெருசா எந்த விஷயமும் தெரிஞ்சிக்க முடியறது இல்ல. ஒரு ஏரியால கன்ட்ரோல் பண்ணா வேற ஏரியால விற்பனைய மாத்திக்கிறாங்க. அரசியல்வாதிகளோட ஆதரவு இல்லாம போதைப் பொருள் வியாபாரம் நடக்க வாய்ப்பே இல்லைங்கறது என்னோட கருத்து.”
“இதுக்கு என்னதான் தீர்வு ஸ்ரீதர்? இதை மொத்தமா அழிக்கவே முடியாதா?”
“உண்மைய சொல்லனும்னா… முடியவே முடியாதுங்கறதுதான் கசப்பான உண்மை. கட்டுப்பாட்டுல வச்சிக்க முடியும். மாணவர்கள் மத்தியில விழிப்புணர்வ ஏற்படுத்த முடியும். மேலும் மேலும் போதைப் பழக்கம் பரவாம தடுக்க முடியும். பார்க்கலாம்… நம்மளால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்.”
“கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவியச் செய்யறேன் ஸ்ரீதர். இரண்டு அசைன்மெண்ட்னு சொன்ன. இன்னோன்னு என்ன?”
“இன்னோன்னு இதுவரை வெளிவராத விஷயம் கதிர். நம்ம நாட்டுக்கு வர்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கடத்தி பிணையக் கைதியா வச்சிகிட்டு அவங்க உறவினர்கள்கிட்ட பணம் பறிக்கறது. முழுக்க முழுக்க ஆன்லைன் ட்ரான்ஸ்பர்ல நடக்குது இந்தப் பணப் பரிமாற்றம்.”
“ஆனா, ஆள்கடத்தல் எப்படிடா வெளிய தெரியாம இருக்கும்? அதுவும் வெளிநாட்டு பயணிகள். ஒரு கம்பளைண்ட் கூடவா வரல? ஆன்லைன் ட்ரான்ஸ்பர்னா ஈசியா மாட்டுவானுங்களேடா.”
“இது கொஞ்சம் புத்திசாலித்தனமா செயல்படுற ஒரு நெட்வொர்க். கடந்த இரண்டு வருஷத்துல மூன்று கடத்தல் இதுமாதிரி நடந்திருக்கு.
முதல் இரண்டு தடவை கடத்தப் பட்டவங்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவங்க. இவங்களை சென்னை ஏர்போர்ட்ல வச்சு கடத்தியிருக்காங்க. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் நல்ல வசதியான இடத்துல அடைச்சு வச்சிருக்காங்க.
அவங்களோட உறவினர்களைத் தொடர்பு கொண்டு பேசி பிணையக் கைதிய விடுவிக்கப் பணத்தை நேரடியா ஒரு அக்கவுண்ட்டில் பேங்க்ல போடச் சொல்லியிருக்காங்க. பல பேருடைய அக்கவுண்டுக்கு அந்தப் பணம் மாறி இவங்க கைக்கு வந்ததும் கடத்தினவங்களைப் பத்திரமா விமானம் ஏத்தி அனுப்பி வச்சிட்டாங்க.
கடத்தப் பட்டவங்க பெரிய கோடீஸ்வரர்கள். அவங்களுக்கு இழந்த தொகை சில கோடிகள் என்பதாலயும், உயிர் பிழைத்து வந்ததே போதும்னு நினைச்சதாலயும் இந்த விஷயம் வெளியவே வரல.”
“அப்புறம் எப்படி ஸ்ரீதர் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சது?”
சொல்றேன், மூன்றாவதா கடத்தப் பட்டாங்க பாரு அவங்க லண்டனைச் சேர்ந்த தம்பதிங்க. அவங்க இலங்கைத் தமிழர்கள். இலண்டன் குடியுரிமை பெற்றவங்க. தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா வந்தவங்க சென்னையில இருக்கற பிரபல ஹோட்டல்ல ரூம் புக் பண்ணியிருக்காங்க. சென்னை ஏர்போர்ட்லயே வச்சு அவங்கள ரிசீவ் பண்ண வந்த ஹோட்டல் ஊழியர் மாதிரி நடிச்சு கடத்தியிருக்காங்க.
கார் வேற பாதையில போகறதைப் பார்த்து சத்தம் போட்டவங்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியிருக்காங்க. கடலூர் விருத்தாச்சலம் நெய்வேலின்னு அவங்கள கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இடத்தை மாற்றி மாற்றி இரண்டு பேரோட கண்களைக் கட்டி அடைச்சு வச்சிருக்காங்க.
இலங்கைத் தமிழர்கள் என்பதால, இவங்க பேசற பாஷை அவங்களுக்குப் புரிஞ்சிக்க முடிஞ்சிருக்கு. லண்டன்ல இருந்த அவங்களோட பொண்ணு தீபிகாங்கறவங்களுக்கு ஃபோன் போட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டியிருக்காங்க.
தீபிகாவ லண்டன்ல இருக்கற பேங்க்ல ஒரு அக்கவுண்ட்டில் பணத்தைப் போடச் சொல்லியிருக்காங்க. அது பல பேர் கை மாறி இந்தியா வந்ததும். இந்தத் தம்பதிகளை பத்திரமா விமானம் ஏத்தி அனுப்பி வச்சிட்டாங்க.”
“…”
“தன்னுடைய பெற்றோர்கள் வந்து சேர்ந்ததும் தீபிகா லண்டன் போலீஸ்க்கு (ஸ்காட்லாந்து யார்டு) தகவல் தெரிவிச்சு இருக்காங்க. அது மட்டுமல்லாமல் ஸ்பெஷல் ஆர்கனைஸ்டு க்ரைம் ஏஜென்சிக்கும் புகார் அனுப்புனாங்க. அதுக்கப்புறம்தான் இப்படி ஒரு கடத்தல் நடந்ததே, தமிழ்நாடு போலீஸ்க்கு தெரிய வந்தது.”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“அந்தத் தம்பதிகள் கிட்ட விசாரிச்சதுலதான், ஏற்கனவே இரண்டு முறை கடத்தல் நடந்த தகவல்கள் எங்களுக்குத் தெரிய வந்தது. அவங்க மொபைல் நம்பர் இங்க கடத்தி வைக்கப்பட்ட நாட்கள்ல எங்கல்லாம் ஆக்ட்டிவேட் ஆகியிருந்ததுன்னு பார்க்கும் போதுதான், கடலூர் மாவட்டத்தைக் காட்டியிருக்கு.
வேற எந்தத் தகவலும் அந்தத் தம்பதிகளால சொல்ல முடியல. கண்கள் கட்டப்பட்டு இருந்ததால யாரோட முகமும் அவங்களுக்குத் தெரியல.”
“பணம் போட்ட பேங்க் அக்கவுண்ட்ட ட்ரேஸ் பண்ண முடியலயா?”
“லண்டன்ல இருந்த ஜார்ஜ்ன்றவரு அக்கவுண்ட்டிலதான் தீபிகா பணம் போட்டிருக்காங்க. ஆனா அந்த ஜார்ஜ்க்கும் இந்தக் கேஸ்க்கும் சம்பந்தமே இல்ல. அவர் அக்கவுண்ட்டில் போடப்பட்ட பணம் அன்னைக்கே வேற அக்கவுண்டுக்கு மாறிடுச்சி.
அவர் அக்கவுண்ட்டில பணம் போடப்பட்டதும் எப்படின்னு ஜார்ஜ்க்குத் தெரியல, எடுக்கப்பட்டதும் தெரியல. ஆன்லைன் ட்ரான்ஸ்பர்ல பணப் பரிமாற்றம் நடந்திருக்கு. அவர் இதை பேங்க்ல போய் கம்ளைண்ட் பண்ணியிருக்காரு. இப்படி பல முறை மாறி கடைசியா ஆந்திரால இருக்கற ஒரு ட்ரஸ்ட்க்கு வந்து சேர்ந்திருக்கு.
அது சுனாமில பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்ன்ற பேர்ல வந்து பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கு. அவங்க அதுக்குப் பக்காவா கணக்கு வச்சிருக்காங்க.”
“அப்ப எப்படித்தான் அந்தப் பணம் கடத்துனவங்க கைக்குப் போச்சு?”
“அதுதான் புரியல. ஆனா பணம் கைக்கு வந்ததும்தான் கடத்துனவங்களை விடுவிச்சு இருக்காங்க. வேற எந்த விபரங்களும் தெரியாததால, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல. அந்த கேஸ் அப்படியே நிக்குது.”
“புத்திசாலித்தனமா, பல மொழிகள் தெரிஞ்சுகிட்டு, முக்கியமா தமிழ்நாட்டுக்கு வர்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பத்தின எல்லா விபரங்களையும் தெரிஞ்சிகிட்டு, கம்ப்யூட்டர்ல ஹேக்கிங் நல்லாத் தெரிஞ்ச ஒரு க்ரூப்தான் இத செய்யறாங்க இல்லையா ஸ்ரீதர்.”
“ஆமா… இதப்பத்தின இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணித் தரச்சொல்லிதான் எனக்கு அசைன்மெண்ட் குடுத்திருக்காங்க.”
“…”
“இதுல பிரச்சினை என்னன்னா கடத்தப்பட்டவங்க விடுவிக்கப் பட்ட பிறகுதான் விஷயமே வெளிய தெரியுது. பிணையப் பணமும் கொடுக்க முடியற அளவுக்குப் பெரிய பணக்காரங்களைத்தான் கடத்துறாங்க. அதனால உயிர் பிழைத்து வந்ததேப் போதும்னு இந்த விஷயம் வெளியவே தெரிய வரல. ட்ரஸ்டுக்கு வந்த பணம் இவங்க கைக்கு எப்படி வந்து சேருதுன்னு புரியல.”
“பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்னு கேள்விப் பட்டதில்லை. எப்படியும் சிக்குவானுங்க ஸ்ரீதர்.”
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க மற்றொரு வெளிநாட்டுத் தம்பதி கடத்தலுக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது கடத்தல்காரர்களால்.
—காற்று வீசும்.