UUP–EPI 1

அத்தியாயம் 1

டேஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் எலும்பு வலுப்பெறவும், தசைகள் உறுதியாக இருக்கவும், விந்தணு உற்பத்திக்கும் உதவுகிறது. ஆண்களை ஆண் என அடையாளம் காட்டுவதே இந்த ஹார்மோன்தான்.

 

அன்று

“ப்ரூம்! ப்ரூம்! ப்ரூம்! நகரு நகரு, லாரி வருது”

கையில் வைத்திருந்த ப்ளாஸ்டிக் லாரியில் மண்ணை அள்ளிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் சண்மு. அவள் அருகில் அமர்ந்து லாரியைப் போக விடாமல் தடுத்தப்படி அமர்ந்திருந்தான் கதிர்.

“வழி விடுடா காட்டெருமை! வண்டி வரது கண்ணுக்குத் தெரியல?”

“நான் போலிசுடி சம்மு! மணல் லாரிலாம் நான் தான் தடுத்துப் புடிப்பேன்”

“உன்னைலாம் போலிசுல சேக்க மாட்டாங்கடா! கை காலுலாம் குச்சி மாதிரி இருக்கு! கண்ணு வேற ஒன்னு கிழக்கும் இன்னொன்னு மேற்கும் பாக்குது! திருடன் லெப்டுல ஓடுனா நீ ரைட்டுல ஓடுவ! அதனால உன்னை சேர்த்துக்கமாட்டாங்க”

“அதெல்லாம் சேத்துக்குவாங்க! நான் கண்ணு ஆபரேஷன் போக போறேன்! அதுக்கு அப்பறம் போலிசுல சேர்த்துக்குவாங்கன்னு எங்கம்மா சொன்னுச்சு”

“உங்கம்மா பொய் சொல்லுதுடா! ஒன்ரைக் கண்ணுக்கெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாதாம்! உங்கம்மா ஊரையே ஏச்சு வட்டிக்கு உடுதுல அதான் சாமி உனக்கு கண்ண இப்டி ஆக்கிருச்சாம். ஆத்தா செய்யற பாவம் மவன அடிக்குதாம். எங்கம்மா சொன்னுச்சு”

“அப்படிலாம் பேசாத சம்மு! எனக்குக் கோபம் வருது”

“அப்படித்தான்டா பேசுவேன்! ஒன்ரைக்கண்ணா!”

“அப்டி கூப்புட்டே, கடிச்சு வச்சிருவேன் பாத்துக்கோ! போதும் உன் கூட வெளாண்டது. என்னோட லாரிய குடுடி! நான் வீட்டுக்குப் போறேன்!”

“முடியாது போடா! எப்போ என் கைக்கு வந்துச்சோ இனிமே லாரி என்னோடது!”

“ஏ சொறி சம்மு! எங்கம்மா அப்பவே உன் கூட சேர கூடாதுன்னு சொன்னிச்சு! உன் சொறி எனக்கு ஒட்டிக்குமாம்! நான் தான் அவங்க பேச்ச கேக்காம விளையாட வந்தேன். இனி உன் கூட சேரவே மாட்டேன். என் லாரி பொம்மைய குடுடி”

“யாருடா சொறி சம்மு? நானா? இருடா வரேன்!”

புழுதியில் கதிரின் லாரியை பிடுங்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்த சண்முவுக்கு சொறி என்றதும் கோபம் கரை கடந்தது. கட்டி இருந்த பாவாடையைத் தூக்கி லுங்கி போல மடித்துக் கட்டியவள், அடுத்த நொடி கதிரின் மேல் பாய்ந்திருந்தாள். புழுதி பறக்க இருவரும் அந்த மண் சாலையில் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டனர்.

அடித்துக் கொள்ளும் கதிருக்கும் சண்முவுக்கும் வயது ஆறுதான். வாரியங்காவல் எனும் கிராமத்தில் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இரண்டு வீட்டுக்கும் ஆகவே ஆகாது. ஆனால் சிறுசுகள் மட்டும் சேர்ந்து விளையாடுவார்கள்.

சண்டையில் கதிரின் புது லாரி உடைக்கப்பட, அவன் அழுதுக் கொண்டே வீடு நோக்கி ஓடினான்.

“எங்கம்மாட்ட சொல்லி உன்னை என்ன செய்யறேன் பாருடி!”

“போடா போடா! எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்ல! இப்போதைக்கு லேசாத்தான் கடிச்சு வச்சிருக்கேன்! இனிமே சொறி சம்முன்னு சொல்லு, முழு காதையும் கடிச்சு நாய்க்குப் போட்டுருவேன்” என தொடையை சொறிந்துக் கொண்டே அவனை மிரட்டி அனுப்பினாள் சண்மு.

அடுத்த ஐந்தாவது நிமிடம், சண்முவின் வீட்டின் முன்னே நின்றிருந்தார் பார்வதி. அவர் பக்கத்தில் அழுதபடியே கதிர்.

“அடியே மீனாட்சி! வெளிய வாடி”

“எவடி அவ என் வீட்டு வாசல்ல நின்னுட்டு என்னையே வாடி போடின்னு கூப்படறது?”

தோளில் வழிந்த முடியை அள்ளிக் கொண்டையாக முடிந்தபடி வெளியே வந்தார் மீனாட்சி, சண்முவின் அம்மா.

“பிச்சை எடுக்குதாம் பெருமாளு, அதைப் புடுங்கி திங்குதாம் அனுமாருன்ற மாதிரி, என் வீட்டுப் பையனுக்கு நாலு காசு சேர்த்து வச்சு லாரி பொம்மை வாங்கிக் குடுத்தா, உன் வீட்டு அராத்து அதையும் உடைச்சிப் போட்டுருக்காளே! இது எங்கயாச்சும் அடுக்குமா? பொருளுதான் போகுது போன்னு விட்டரலாம், நான் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்துப் போட்டுருக்கற என் மவனையும்ல காதை கடிச்சு அனுப்பி வைச்சிருக்குறா!”

அழுதபடி நின்றிருந்த கதிரைப் பார்த்த மீனாட்சி,

“சண்மூ!!!!” என குரலெடுத்துக் கத்தினார்.

கொய்யாக்காயைக் கடித்தப்படி தெனாவெட்டாக வந்து நின்றாள் சண்மு.

“என்னாம்மா?”

“கதிரு காதைக் கடிச்சியா?”

“இல்லையே!”

“பாரேன் எவ்வளோ திமிரா நின்னுக்கிட்டு பொய் சொல்லுறான்னு! பொட்டைப் புள்ள மாதிரியா வளத்து வச்சிருக்க இவள! சரியான ரவுடி! எவன் கிட்ட உதை வாங்கிட்டு வந்து நிக்கப் போறாளோ தெரியல” வறுத்தெடுத்தார் பார்வதி.

மீனாட்சிக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டே இருந்தது. தன் மகளை தான் ஏசலாம், பேசலாம் ஏன் கொல்லக் கூட செய்யலாம். ஆனால் மூன்றாவது மனுஷியான பார்வதி வாயில் எல்லாம் அவள் விழுந்து எழுவது மீனாட்சியின் கோபத்தைத் தூபம் போட்டுக் கிளறியது.

“திரும்ப கேட்கறேன் சண்மு! அவன் காதைக் கடிச்சியா?”

“ஏண்டா கதிரு, நான் உன் காதைக் கடிச்சேன்?” என அதே கேள்வியை கண்களை உருட்டி கதிரைப் பார்த்துக் கேட்டாள் சண்மு. அவள் கண்ணை உருட்டியதில், இவனுக்கு பயம் எட்டிப் பார்த்தது.

“அது வந்து, மீனாம்மா… லேசா தான் கடிச்சா! வலிக்கவே இல்ல” என திக்கித் திணறி சொன்னான் கதிர்.

அடுத்த நொடி சண்முவின் முதுகில் பட்டாசு வெடித்தது. சரமாரியாக வெளுத்து விட்டார் மீனாட்சி.

“வலிக்குதும்மா, வலிக்குது! விடு வலிக்குது” என கதற கதற விடவில்லை. அவள் அடி வாங்குவதை திருப்தியாகப் பார்த்தப்படி நின்றார் பார்வதி. கதிரோ தன் விளையாட்டுத் தோழி கண்ணிரோடு கத்தி அழுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் நடுவே நுழைந்தான்.

“அடிக்காதீங்க மீனாம்மா! அடிக்காதீங்க! சண்மு பாவம்! அடிக்காதீங்க” என அவனும் பெருங்குரலெடுத்துக் கதறி நாலு அடியை தன் முதுகில் வாங்கிக் கொள்ள ஊரே அந்த வீட்டின் முன்னே நின்று வேடிக்கைப் பார்த்தது.

 

இன்று

ஜெயங்கொண்டமில் இருந்த அந்தக் கல்யாண மண்டபம் களைக்கட்டி இருந்தது. மண்டபத்தின் வெளியே பூக்களினாலே ‘நிச்சயதார்த்தா விழா’ என எழுதி ‘கதிர்வேலன்’ கீழே ஹார்ட் போட்டு அதற்கும் கீழே ‘தவமங்கை’ என எழுதி இருந்தார்கள். அந்தி சாயும் அந்த நேரத்தில் பெயர்களின் மேல் லைட் போடபட்டு பார்க்கவே மிக அழகாக இருந்தது.

உள்ளே கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டே வந்திருந்தவர்களுக்கு டீ காபி என சப்ளை செய்துக் கொண்டிருந்தனர். அந்த பரபரப்பிலும் பார்வதியின் குரல் அங்கங்கே உரக்க ஒலித்த வண்ணம் இருந்தது.

“டேய் சின்ராசு, சாப்பாடு வேலைலாம் ஒழுங்கா நடக்குதான்னு ஒரு கண்ண அங்க வச்சிக்கடா! எம்மா ராஜி, பொண்ணு வீட்டுக்காரங்க சீர் தட்டுலாம் ஒழுங்கா அடுக்கி வச்சிருக்காங்களான்னு பார்த்து வச்சியா? இவனே இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் கல்யாணத்துக்குப் புடி குடுத்துருக்கான். எல்லாம் பக்காவா இருக்கனும். என் வீட்டு கல்யாணம் மாதிரி இந்த வாரியங்காவல்லயே எவன் வீட்டுலயும் நடந்துருக்கக் கூடாது. சும்மா அதிரிபுதிரி பண்ணிறனும்”

“அதெல்லாம் பேஷா பண்ணிறலாங்கா! நீ கொஞ்ச நேரம் அக்கடான்னு உட்காரு. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம். தூள் கிளப்பிருறோம்” என்றவாறே சீர் தட்டை சரிப்பார்க்கப் போனார் ராஜி, பார்வதியின் ஒன்றுவிட்ட சகோதரி.

‘நிச்சயத்தையே கல்யாண ரேஞ்சுக்கு தடபுடல் பண்ணுதே இந்தக்கா! இன்னும் மூனு மாசம் கழிச்சு வர கல்யாணத்துக்கு எப்படிலாம் அதகளம் பண்ணப்போதோ தெரியல போ! நம்ம ஊருல இல்லாத மண்டபமா, இல்ல இவங்க வீட்டுல இல்லாத வசதியா! ஊருக்கே பஸ்சு புடிச்சு இங்க கொண்டு வந்து நிச்சயத்த வச்சிருக்குப் பாரேன். எல்லாம் பணம் படுத்தும் பாடு’ கொஞ்சமாக பொறாமையும் வயித்தெரிச்சலும் கலந்துக் கட்டி பெருமூச்சு விட்டவாறே வேலையைப் பார்க்கப் போனார் அவர்.

“சின்ராசு டேய்!” சத்தமாக கூப்பிட்டார் பார்வதி. சின்ராசு அவர் வீட்டில் எடுபுடிக்கு இருப்பவன்.

“என்னம்மா?”

“எங்கடா இந்த மனுஷன்?”

பதில் சொல்லாமல் தலையை சொறிந்தான் சின்ராசு.

ஊதா கலர் பட்டுப் புடவைக்கு எடுப்பாக இருக்கப் போட்டிருந்த காசு மாலையை சரி செய்தவாறே சின்ராசுவை கூர்ந்துப் பார்த்தார் பார்வதி.

“சொல்லுடா!”

“நான் காவலுக்கு ஆள் பக்கத்துலயே வச்சேன்மா! அப்பவும் கண்ணுல மண்ண தூவிட்டு போய்ட்டு வந்துட்டாரும்மா”

தலையிலேயே அடித்துக் கொண்டார் பார்வதி.

“பெத்தப் பையன் நிச்சயத்தன்னிக்குக் கூட அந்த சனியன் புடிச்ச சரக்க போடாம இருக்க முடியலனா, இந்தாளுலாம் என்ன ஒரு அப்பன்! எல்லாம் நான் வாங்கி வந்த வரம். தண்ணியில அந்தாள பார்த்தாலே இவன் எகிறுவானேடா! பொண்ணு வீடு முன்னுக்கு என் மானம் இப்படி கப்பல் ஏறப் போகுதே!” புலம்பினார் அவர்.

“ம்மா! ரூமுக்குள்ள தள்ளி கதவை பூட்டி வச்சிருக்கேன்! வாங்க போய் தலைக்கு தண்ணிய ஊத்தி வேற சட்டை மாத்தி விடலாம். ஒரே நாத்தம்”

சுற்றி முற்றிப் பார்த்து விட்டு இவர்கள் இருவரும் பரமசிவம் இருந்த ரூமுக்குப் போனார்கள். கதவைத் திறந்த நொடியே, குபீரென ஒரு நெடி. கட்டிலில் மல்லாக்கக் கிடந்தார் பரமு.

அவர் அருகில் போய் தட்டி எழுப்பினார் பார்வதி.

“யோவ், எழுந்திரியா! எழுந்திரி”

கண்ணைக் கஸ்டப்பட்டுத் திறந்தார் பரமு. எதிரே மங்களகரமாக பார்வதி. முகத்தில் ஒரே இளிப்பு அவருக்கு.

“பாழு, பாழும்மா! (பாரும்மா)! அழ்க்கா இழுக்கடி! ஊடா ஜேலைல ஒட்ரே அழ்க்கு! ஜிங்குச்சா ஜிங்குச்சா ஊடா கல்ரு ஜிங்குச்சா! வண்ண வண்ண ஜேலைங்க! ஜிங்குச்சா” என பாட வேறு செய்தார். பற்றிக் கொண்டு வந்தது பார்வதிக்கு.

“பாவி மனுஷா! படிச்சு படிச்சுத் தானயா சொன்னேன்! இன்னிக்கு ஒரு நாளைக்கு தண்ணிப் போடாம நிதானமா இருன்னு! ஏன்யா நீ செத்து ஒழியாம நிதம் என் பிராணன வாங்கி என்னை சாகடிக்கற!”

“பாழும்மா! ஜெத்துப் போட்டா? நோம்மா நோ! ஒன்கு பூ போய்ரும், பொட்டு போய்ரும் பாழும்மா! ஜாக மாட்டேன்” மனைவி சாக சொன்னதில் கண்ணீர் கண்ணில் வழிய சாக மாட்டேன் என புலம்பி அழுதார் பரமு. பட்டென அறைக் கதவு திறக்கப்பட யாரேன திரும்பிப் பார்த்தார்கள் சின்ராசுவும் பார்வதியும்.

ஒட்ட வெட்டிய முடி, கருத்த நிறம், முறுக்கி விட்ட மீசை, கட்டுமஸ்த்தான தேகம், ஆளைத் துளைக்கும் பார்வை என அங்கே நின்றிருந்தான் கதிர்வேலன். அவனது லேசர் விழிகள் சட்டென சூழ்நிலையை உள்வாங்கியது.

“தண்ணியா?”

“ஆமாப்பு!” தயங்கி பதில் சொன்னார் பார்வதி.

“ராசு, போய் லெமன் ஜீஸ் வாங்கிட்டு வா” என சின்ராசுவை அனுப்பியவன் மெல்ல தந்தையின் அருகே வந்து கைக்கட்டி நின்றான். நடையில் நிதானம் இருந்தது. கூர்ந்துப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் விந்தி நடப்பது தெரியும்.

கம்பீரமான மகனை நிமிர்ந்துப் பார்த்த பரமு,

“லாசா! நீ கண்ணாலத்துக்கு ஜெரி ஜொல்லிட்ட ஜந்தோஷத்துல அப்பா தண்ணி போட்டுட்டேன்பா! ஒட்ரே ஜந்தோஷம். கை காலுலாம் ஆடிப்போச்சு. அதான்பா ஹால்ப் போட்டேன்! கோச்சிக்காதே என்ற ஜாமி” கை எடுத்துக் கும்பிட்டார். பட்டென அவர் கையை இறக்கி விட்டான் கதிர்.

ஒன்றுமே பேசவில்லை அவன். தான் அணிந்திருந்த ஜிப்பாவையும், வேட்டியையும் கலட்டி கட்டிலில் வைத்தவன், தன் அப்பாவை கைப்பிடித்துத் தூக்கினான். சின்ன வயதில் தன்னைத் தூக்கிக் கொஞ்சி குளிபாட்டி விட்ட தகப்பனை குழந்தைப் போல தூக்கி இவன் குளிக்க வைக்க பாத்ரூம் அழைத்துப் போனான். தலையோடு அவருக்கு தண்ணீரை ஊற்றி, குளிக்க வைத்தவன் ஈரம் போக துவட்டி விட்டு மீண்டும் தோளணைத்து கூட்டி வந்து கட்டிலில் அமர்த்தினான். பார்வதி எடுத்து வைத்திருந்த உடைகளை அவருக்கு மாட்டி விட்டவன், தலையைத் துவட்டி, படிய வாரி விட்டான். மகன் செய்த பணிவிடைக்கெல்லாம் அமைதியாகவே இருந்தார் பரமு. அதற்குள் லெமன் ஜீசுடன் வந்திருந்தான் சின்ராசு. பரமுவின் வாயைப் பிடித்து,

“வாயைத் திறந்து இத குடிங்க” என்றான் கதிர். மடமடவென குடித்தார் பரமு.

“நிச்சயம் முடியற வரைக்கும் நான் உட்கார வச்ச இடத்துல அசையாம உட்கார்ந்து இருக்கனும். நகர்ந்தீங்கன்னு தெரிஞ்சது, நிச்சயமும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு சென்னைக்குக் கிளம்பிருவேன். புரியுதா?” குரலில் கண்டிப்புடன் கேட்டான் கதிர்.

தலையை சரி என ஆட்டினார் அவர். மீண்டும் தனது உடையை அணிந்துக் கொண்டவன், கைத்தாங்கலாக தகப்பனை அழைத்துப் போய் மேடைக்கு கீழே நாற்காலிப் பார்த்து அமர்த்தினான். பின் தனது நண்பர்களையும் வந்திருந்தவர்களையும் கவனிக்கப் போய் விட்டான்.

சரியாக இரவு எட்டு மணிக்கு நிச்சய வைபவம் ஆரம்பித்தது. பெண் தவமங்கை, பார்வதிக்கு தூரத்து உறவு. அழகாக அதோடு மகனுக்கேற்றார் போல படித்து இருந்த மங்கையை மிகவும் பிடித்து விட்டது பார்வதிக்கு. மகன் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற கொடியிடையாளைத் தேடிப் பிடித்தவருக்கு அவள் ஒரு கவர்மெண்ட் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை என்பது இன்னும் மகிழ்ச்சியைக் கூட்டியது. போட்டோவைப் பார்த்ததும், இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம் என சொன்னவன் கூட ஒத்துக் கொண்டதில் பார்வதி வானத்தில் மிதந்தார்.

சிறப்பாக நிச்சயம் முடிய மாப்பிள்ளையும் பெண்ணும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். போட்டோகிராபர் வேறு போட்டோக்களை எடுத்துத் தள்ளினார். ரிஷப்ஷன் அளவுக்கு தடபுடலாக போனது நிகழ்வு. வாழ்த்தியவர்கள் சாப்பிட போக, இளசுகளுக்கு கொண்டாட்டம் ஆனது. மேசை நாற்காலிகளை தள்ளி ஹாலின் நடுவே இடம் ஒதுக்கியவர்கள் ஆட்டக் கச்சேரியைத் தொடங்கி இருந்தார்கள். எல்லோரும் சொந்தம், ஒன்றுக்குள் ஒன்று. அதனால் பெரியவர்களும் ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி அமர்ந்து கதைப் பேசியவாறே சிறுசுகளின் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தனர்.

மெலொடியாக ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன் பாடல் ஒலிக்க கதிரை பிடித்து இழுத்து வந்தார்கள் அவன் நண்பர்கள். அந்தப் பக்கம் மங்கையையும் அவனுடன் கொண்டு வந்து சேர்த்தார்கள். சிரிப்புடன் இருவரும் கையை மட்டும் பிடித்து மெல்லிய நடனம் ஒன்றை ஆடினார்கள்.

“என்ன நான் கேட்பேன் தெரியாதா

இன்னமும் என் மனம் புரியாதா

அட ராமா இவன் பாடு

இந்தப் பெண்மை அறியாதா ஆஆஆ”

எனும் வரிகளுக்கு மெல்ல மங்கையை பற்றி ஒரு சுற்று சுற்றியவனின் கண்கள் வாசலில் அப்பொழுதுதான் நுழைந்த ஒரு பெண்ணின் மீது ஆணியடித்து நின்றது. உடல் விறைக்க, கண்கள் மெல்ல சிவக்க, சின்ன வயதில் இருந்தது போல கண்கள் மறுபடியும் மேற்கையும் கிழக்கையும் பார்ப்பதைப் போல மாயத்தோற்றம் வர, உதடு மட்டும் மெல்ல முணுமுணுத்தது.

“சம்மு!!!!”

(உயிர் போகும்….)