ESK-16

என் சுவாசம்  16

சிவரஞ்சனி விடுதி அறையில்,  காலையில் கல்லூரிக்குச் செல்லக் கிளம்பி அமர்ந்திருந்தாள்.    கல்லூரி   துவங்க   இன்னும் நேரமிருந்தது. அன்று வெள்ளிக்கிழமை.    ஒரு வாரமாக நடைபெற்ற அனைத்தையும் நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.   அதிகாலையிலேயே ஃபோன் போட்டு விட்டான் கதிர்.  இன்று மாலை அழைக்க வருவதாக.

இருவர் தங்கும் அறை அது.  உடன் தங்கியிருக்கும் பெண்.  தஞ்சாவூர் ஆகையால் வெள்ளியன்று விடுப்பு எடுத்துக் கொண்டு, மூன்று நாட்கள்  விடுமுறையாக  அவளது ஊருக்குச் சென்றிருந்தாள். இவள் தனியாக இருப்பாள் என்று தெரிந்ததாலேயே, காலையில் அழைத்திருந்தான்.

நினைத்தால் இடையில் வருவேன் என்று கூறியிருந்தாலும்,,  அவனால் வர முடியவில்லை.  மாற்றி மாற்றி அவனுக்கு வேலைகள் இருந்தது.  ஸ்ரீதருடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க, நிறைய பேரைச் சென்று சந்திக்க வேண்டியிருந்தது. அதோடு அவனது வேலைகளும்.

மேலும் படிக்கும் அவளையும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதாலும் போகவில்லை. அவளைப் பார்த்தால் தான் தன்வசம் இருப்பதில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.  நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தவிர்த்தாலும், காலையில்  கல்லூரிக்குப் போவதற்கு முன்பும்,  மாலையில் கல்லூரி முடிந்த பின்பும் தினமும் அவளிடம் பேசி விடுவதைத் தவிர்க்கவில்லை அவன்.

இன்று இரண்டு வகுப்புகள் மட்டுமே கல்லூரியில்,  மீதி நாள் முழுவதும் அரசு ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு  சேவை செய்வதற்காக, கல்லூரி ஒய்ஆர்சி சார்பாக அழைத்துச் செல்கின்றனர். இந்த விபரத்தை அவனிடம் கூறியிருந்தவள், அவனை நேரடியாக முதியோர் காப்பகத்திற்கு வரச் சொல்லியிருந்தாள்.

திங்கள் அன்று அவளைக் கல்லூரியில் கண்ட கலாவும் கோதையும் வெகுவாக மகிழ்ந்து போனார்கள்.  மேலும் சிவரஞ்சனி நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லியதைக் கேட்டவர்கள்,  தோழி எத்தனை பெரிய இக்கட்டில் இருந்து தப்பித்து  இருக்கிறாள் என்று எண்ணிக் கலங்கிப் போயினர்.

கதிர் காப்பாற்றியதால் ஆயிற்று, இல்லையென்றால் இவளைப் பார்த்திருக்கவே முடியாதே என்று  நினைத்து வருந்தினர்.  மேலும் கதிருடன் தனக்குத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதை,  சிறு வெக்கத்துடன் கூறியவளை அணைத்துக் கொண்டு மிகவும் சந்தோஷப் பட்டனர்.

“நிஜமாவாடி…  ஹைய்யோ ரொம்ப சந்தோஷமா இருக்கு”  என்று குதித்த கலாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை அவளால்.

“ரஞ்சு…  உன் நல்ல மனசுக்கு எப்பவுமே உனக்கு நல்லதுதான் நடக்கும்டி.”   என்று உளமாற மகிழ்ந்து கூறிய கோதையும் சிவரஞ்சனியை  அணைத்துக் கொண்டாள்.

சிவரஞ்சனிக்கு  ஃபோன் போட்டு பேசிய கதிரிடம், இவர்களும் பேசி பாசப் பயிரை வளர்த்திருந்தனர்.   கள்ளமில்லாமல் அண்ணா என்று அழைத்துப் பாசத்துடன் பேசியப் பெண்களை அவனுக்கும் பிடித்திருந்தது. அதே இயல்புடன் அவனும் அவர்களிடம் நன்கு பேசினான்.

ஐந்து நாட்கள் கழித்து அவனைக் காணப் போகும் ஆவல் நெஞ்சு முழுக்க நிறைந்திருக்க,  கல்லூரி செல்லத் தேவையானவற்றை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தமாக ஐம்பது ஏக்கர் விவசாய நிலத்தை,   பார்ட்டி ஒருவருக்குப் பேசி முடித்திருந்தான்  கதிர்.  இரு பக்கத்து நபர்களுக்கும் திருப்தியாக இருக்கும் வகையில் பேசி முடித்ததில், இருவருமே சந்தோஷமாக நன்றி சொல்லியிருந்தனர். அன்று காலையில் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டவர்கள்,   தை மாதம் பத்திரம் பதிவதாக கூறியிருந்தனர்.

நல்லபடியாக முடித்துக் கொடுத்த திருப்தியுடன் காரில் திரும்பி  ஊருக்கு வந்து கொண்டிருந்தான்  கதிர்.  உடன் அழகரும் இருந்தார்.  வண்டியை சீராக செலுத்தியபடியே,

“இரண்டு பேருக்கும்   ரொம்பத் திருப்தி மாமா.”

“ஆமாம் மாப்ள. அதுவும் நிலத்தை விக்கறவர், பொண்ணு கல்யாணத்துக்காக விக்குறார் போல. நல்ல விலை கிடைச்சதுல அவருக்கு ரொம்பவே சந்தோஷம்.”

“வாங்கறவரும் விவசாயம் பண்றதுக்காக அமெரிக்கால பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு இங்க வந்திருக்கறவரு.  நல்ல வளமான நிலமா அமைஞ்சதுல அவருக்கும் திருப்தி.”

“இன்னைக்கு சாயங்காலம் சிவாவக் கூப்பிட கடலூர் போகனும் மாமா.”

“அதெல்லாம் நேத்தே வாசுகி என்கிட்ட சொல்லிடுச்சி மாப்ள.”

“அதான பார்த்தேன்…   அக்காவா மறக்கும்?”

“ஏன் மாப்ள?  நடுவுல சிவாவப் போய் பார்க்கலையா நீ?   முந்தா நேத்து கூட கடலூர் போனியேடா?”

“இல்ல மாமா…   வேற வேலையாப் போயிருந்தேன். அதுவுமில்லாம படிக்கற பொண்ணு. அடிக்கடிப் போய் நின்னா தொந்தரவா இருக்காது? அதான் போகலை.”

“வேற என்ன வேலை மாப்ள?  எனக்குத்  தெரியாம…”

“அது ஒன்னும் இல்ல மாமா… சும்மாதான்.” சமாளித்தவனைப் பார்த்து,

“ ஸ்டீபன் எல்லாத்தையும் சொல்லிட்டாப்ல. அடிதடிய விடுன்னு சொன்னாலும் கேட்காம,   அந்த மெக்கானிக் பயலுகள   கட்டி வச்சி அடிச்சிருக்க.   யார் சொல்றதையும் கேட்க மாட்டியா நீ?”

“சிவா மேல கைய வச்சிருக்கானுங்க,   அவ பயந்து போய் கடல்ல விழற அளவுக்கு, அவளைத் துரத்துனவனுங்களைச் சும்மா விட்ருவனா நான்?  மூனு பயலுகளும் இன்னும் ஆறு மாசத்துக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. அவனுங்க பொண்டாட்டி நினைப்புக் கூட வராது.”

என்று பல்லைக் கடித்தவனைச் சலிப்பாகப் பார்த்தவர்,  “வீணானப் பிரச்சினை வளர்த்துக்காதன்னு சொன்னா கேட்க மாட்டேங்குற.   பாரு… சகாயம் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்ததால, ஸ்டேஷனுக்கு விசாரிக்கக் கூப்பிட்டிருந்தாங்க உன்ன.  இதெல்லாம் தேவையா உனக்கு?”

“என்ன பெரிசா விசாரிச்சாங்க?  ஸ்கூல்  புள்ளைங்க மாதிரி நிக்க வச்சு ஒருத்தர ஒருத்தர் ஏன் அடிச்சீங்கன்னு கேட்டாங்க…  அப்புறம் இப்படியெல்லாம் அடிச்சிக்கக் கூடாதுன்னு  சொல்லி,   ரெண்டு பேரும் கையக் குடுத்துக்கோங்க,  கட்டிப் புடிச்சிக்கோங்கன்னு சமாதானம் பண்ணி வச்சாங்க. சகாயம்தான் பாவம் செம காண்டாயிட்டான்.”

நக்கலாகக் கூறியவனைப் பார்த்துச் சிரித்த அழகர், “ஏன் மாப்ள?   சரித்திரம் திரும்புது போல?”

“பின்ன என்ன மாமா…  பழைய இன்ஸ்பெக்டர் இருந்தப்ப கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனானுங்க?  நியாயமா கம்ப்ளைன்ட் குடுக்கப் போனாக் கூட, கம்ப்ளைண்ட்ட  வாங்காம, எவ்வளவு எகத்தாளம் பேசுவானுங்க?   இப்ப அடங்கி உட்கார்ந்து இருக்கானுங்க.”

இருவரும் பேசிக் கொண்டே வரும் போது,    சற்று தூரத்தில் ஊர் எல்லையில் இருந்த சிதிலமடைந்தக் கோவில் மண்டபம் ஒன்றில் மறைவாக, வெள்ளை சட்டையும் நீல  நிற பேண்டும் அணிந்த சிலர் நிற்பது   கதிர் கண்களுக்குத் தெரிந்தது.  வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தியவன். பள்ளிச் சீருடை போலத் தெரிகிறதே என்று எண்ணியபடி காரை ஓரமாக நிப்பாட்டினான்.

“என்ன ஆச்சு மாப்ள?”

“ஒன்னும் இல்ல…  அங்க கோவில் மண்டபத்துகிட்ட பாருங்க, ஸ்கூல் பசங்கதான நிக்கறானுங்க?  இந்த நேரத்துல இவனுங்களுக்கு இங்க என்ன வேலை?”

என்றவன் காரில் இருந்து இறங்கி, விடுவிடுவென்று அந்தப் பாழடைந்த மண்டபம் நோக்கி நடக்கத் துவங்கினான். அழகரும் அவனைப் பின்தெடர்ந்தார்.

நான்கு மாணவர்கள் அங்கு இருந்தனர்.   மூவர் சற்று போதையோடு தள்ளாடிக் கொண்டு   இருந்தனர். ஒருவன் மயங்கிக் கீழே விழுந்து கிடந்தான். மூவரும் சேர்ந்து அவனை எழுப்பி நிற்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

மயங்கிக் கிடந்தவனோ சுத்தமாக பிரக்ஞை இன்றிக் கிடந்தான்.  தங்கள் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவன் முகத்தில் தெளித்தபடி இருந்தான் ஒருவன்.

திடீரென்று வந்து நின்ற கதிரைக் கண்ட மூவரும் மயங்கியவனைக் கீழே விட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்த்தனர். அவர்களை வளைத்துப் பிடித்த அழகரும் கதிரும் அவர்களின் முதுகிலே நான்கு அடிகளைப் போட,  தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர்.

“அண்ணே…  ப்ளீஸ்…  தெரியாமப் பண்ணிட்டோம் விட்டுடுங்கண்ணே…”

“என்னடாப் பண்ணீங்க இந்தப் பையன?  எந்த ஸ்கூல்டா நீங்க?”   என்றவாறு மேலும் இரண்டு அடிகளைப் போட,

“அண்ணே…  நாங்க ஒன்னும் பண்ணலண்ணே…  அவனுக்கு இன்னைக்குப் பிறந்த நாளு.  அதான் கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு இத வாங்கி  சாப்பிட்டோம்.”  என்றபடி   அவன் காட்டியது போதை வஸ்து.

அதை முகர்ந்து  பார்த்து  விட்டு அதிர்ந்து போன கதிரும் அழகரும்,  “அவன் ஏன்டா மயங்கிக் கிடக்குறான்?”

“எங்களுக்கு வாங்கித் தந்தது அவன்தான் ண்ணா. இன்னைக்குப் பிறந்த நாள்ன்றதால கொஞ்சம் அதிகமா சாப்பிட்டான் ண்ணா.”  என்று அழுதபடியே கூற.

மண்டியிட்டு அமர்ந்த கதிர் மயங்கிக் கிடந்த பையனின் நாடித் துடிப்பைப் பார்த்தவாறு, “எந்த ஸ்கூல்டா நீங்க?   உங்க அப்பா பேரெல்லாம் சொல்லு” என்க

பள்ளியின் பெயரையும் தங்களது தந்தையின் பெயரையும் கூறினர்.   அனைவருமே சற்று வசதியான வீட்டுப் பிள்ளைகள்தான்.

“மாமா இந்தப் பையனுக்கு பல்ஸ் கொஞ்சம் டவுனா இருக்கு.  உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்.”   என்றபடித் தூக்கித் தோளில் போட்டவன்.

“இந்தப் பையனோட அப்பா யாருடா?”  என்க,

“இவனோட அப்பா பேரு சகாயம்  ண்ணா.  ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றாரு.”  என்று கூறவும் ஒரு நொடி திரும்பி அழகரைப் பார்த்தவன்,  விடுவிடுவென்று காரை நோக்கி நடந்தபடி,

“மூனு பேரும் என் கூட வாங்க. உங்க அப்பா  ஃபோன் நம்பர்லாம் குடுங்க.”  என்றான். அந்த  மயங்கிய சிறுவனை வண்டியில் கிடத்தியவன், அனைவரும் வண்டியில் ஏறியதும் காரைக் கிளப்பினான்.   மூன்று பேரின் தந்தைக்கும் ஃபோன் செய்து ஹாஸ்பிடல் பெயரைச் சொல்லி வரச் சொன்னவன். சகாயத்திற்கும் ஃபோன் செய்து கூறியிருந்தான்.

கதிர் ஃபோன் செய்து விஷயத்தைக் கூறியதும் முதலில் நம்பாத சகாயம், “டேய்…  வீணா என் புள்ள மேல பழி போடாத.  நீதான் அவனை ஏதாவது செஞ்சிருப்ப.”  என்று குதிக்க.

“பைத்தியக்காரன் மாதிரி உளறாத. புள்ளைக்கு ரொம்ப முடியல.  ஹாஸ்பிடலுக்குதான் தூக்கிட்டுப் போறேன்.  சீக்கிரம் வந்து சேரு.”  என்று எரிச்சலோடு கூறியவன்,  ஸ்ரீதருக்கும் ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினான்.

“நீ உடனே   அந்தப் பையனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணு கதிர். நான் உடனே அங்க வரேன்.”

என்று ஸ்ரீதர் கூறவும்,  போதைமருந்து   உட்கொண்டதால் அட்மிட்   செய்ய மறுத்த மருத்துவமனையில், ஸ்ரீதரை நேரடியாகப் பேசச் செய்து, ஒரு வழியாக அந்த மாணவர்கள் அனைவரையும் அட்மிட் செய்திருந்தான். ட்ரீட்மெண்ட் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

வேகவேகமாக வந்த சகாயம் கதிரின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி,

“எங்கடா என் புள்ள?  என் ஒத்த புள்ளடா  அவன். அவனை என்ன பண்ண நீ?”  என்று உலுக்க,   அவனது கண்களிலோ கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தது.

“சகாயம் கொஞ்சம் ரிலாக்ஸா இரு. பையனுக்கு   ஒன்னும் ஆகாது. உள்ள ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு.   இப்படிக் கொஞ்சம் உட்காரு.”   என்று அவனது கைகளில் இருந்த தனது சட்டையை விடுவித்துக் கொண்டவன், அவனை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“மாமா சகாயத்துக்கு கேன்டீன்ல இருந்து ஒரு டீ வாங்கிட்டு வாங்க.”  என்று கூறவும் அழகர் டீ வாங்கச் சென்றார்.  அதற்குள் மற்ற மூன்று மாணவர்களின் பெற்றோரும் வந்து விட,   அனைவரிடமும் நடந்த விஷயத்தை விளக்கினான். அதிர்ச்சியடைந்த அனைவரும் மருத்துவர் வெளி வருவதற்காக காத்திருந்தனர்.

டீயைக் குடிக்க வைத்து, அழுது புலம்பிய சகாயத்தைச் சற்று ஆசுவாசப்படுத்தியவன்,  அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்த மருத்துவரிடம் அவசரமாகச் சென்றான்.

“டாக்டர்…  பசங்களுக்கு இப்ப எப்படி இருக்கு?”  அதற்குள் சகாயமும் மற்ற மூன்று மாணவர்களின் பெற்றோரும் அருகே வந்து விட.

“இவங்கல்லாம் யாரு?”

“அந்தப் பசங்களோட பேரண்ட்ஸ் டாக்டர்.”

“எல்லாரும் என் கேபினுக்கு வாங்க.”  என்றபடி டாக்டர் செல்ல…  அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

மருத்துவரின் அறைக்குள் அனைவரையும் அமரச் சொன்னவர்,

கதிரிடம், “சரியான நேரத்தில  அந்தப் பையனை நீங்க கூட்டிட்டு வந்துட்டீங்க. இல்லைன்னா அவனோட நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டு இருக்கும். உயிருக்கும் ஆபத்தாப் போயிருக்கும்.  இப்ப பையன் சேஃப்பா இருக்கான். மத்த மூனு பசங்களும் இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க. அந்தப் பையன் கண் விழிக்க ஆறு மணி நேரம் ஆகும்.”

என்றவர் போதை மருந்தினால் வரும் தீமைகளையும் எடுத்துக் கூறினார்.

“நியாயமா போலீஸ்ல கேஸ் ஃபைல் பண்ணாம நான் ட்ரீட்மெண்ட் கொடுக்கவே முடியாது. ஆனா நீங்க பர்சனலா டிஎஸ்பிய பேசச் சொன்னதால உடனடியா ட்ரீட்மெண்ட் பண்ண முடிஞ்சது.”

“படிக்கற பசங்க சார்.  விபரம் தெரியாம பண்ண தப்பு இது.  போலீஸ் கேஸ்லாம் இந்தப் பசங்களோட ஃபியூச்சர பாதிக்கும்.”

போலீஸ் கேஸ் என்றதுமே அனைவருக்கும் சற்று பயம் வந்தது.  படிக்கும் மாணவர்கள் ஆயிற்றே. அவர்களின் எதிர்காலமே பாழாய்ப் போகுமே. கதிரின் செயலுக்கு நன்றி கூறியவர்கள்,  பிள்ளைகளைப் பார்க்கத் துடித்தனர்.

“ஜெனரல் வார்டுக்கு மாத்தியதும் போய்ப் பாருங்க. ஒரு மாதம்  தொடர்ந்து   கவுன்சிலிங்குக்கு கூட்டிட்டு வாங்க. நாலு பசங்களுமே இதுக்கு   அடிமையாகல.  சில நாட்களாகத்தான் இந்தப் பழக்கம் இருந்திருக்கனும்.   கண்டிப்பா நல்ல வழிக்கு கொண்டு வந்திடலாம்.”

அப்பொழுது அங்கே வந்த ஸ்ரீதரும் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட,   அனைவருக்கும் சற்று ஆசுவாசமானது.

தனிப்பட்ட முறையில் ஸ்ரீதரும் மாணவர்களின் பெற்றோருக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினான்.

“பிள்ளைகளோட மனம் விட்டு பேசுங்க. அவங்களை உங்க கண்காணிப்புல வச்சிக்கோங்க. ஸ்கூல்க்கு மாசம் ஒருமுறையாவது போய் அவங்க ஆசிரியரைச் சந்தித்துப் பேசுங்க. கூடப் பழகுற நண்பர்களைப் பத்தித் தெரிஞ்சுக்கோங்க.

உங்க பிள்ளை உங்களுக்குச் செல்லம்தான்  இல்லைங்கல. ஆனா இந்த வயசுல அவங்களுக்குத் தேவையில்லாத செல்ஃபோன், வண்டி இதெல்லாம் வாங்கித் தராதீங்க. கொடுக்குற ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் கணக்கு கேளுங்க. அளவுக்கு அதிகமாக பணம் தராதீங்க.

பிள்ளைகளைச் சுதந்திரமா விடனும்தான்.  ஆனா, ஒரு மெல்லிய பிணைப்பு நமக்கும் நம்ம பிள்ளைகளுக்கும் இடையில இருக்கனும். அவங்களுக்குத் தெரியாம நம்மோட மொத்த கவனமும் அவங்க மேல இருக்கனும்.

இதெல்லாம் தப்பு, இதைச் செய்தால் என் அம்மாவும் அப்பாவும் வருத்தப்படுவாங்கன்னு அவங்களுக்கு  உணர்த்தும்படி வளர்க்கனும்.  அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துக்க முடியாத அனைத்து விஷயமும்  தப்புதாங்கறத நாமதான் அவங்களுக்குப் புரிய வைக்கனும்.”

அவன் பேசியது அனைவருக்குமே ஏற்றுக்  கொள்ளும்படி இருந்தது.

சற்று நேரத்தில் மூன்று மாணவர்களும் கண் விழித்துவிட, அவர்களுக்கு போதை மருந்து எப்படிக் கிடைத்தது என்று ஸ்ரீதர்  விசாரித்தான். அவர்கள் கூறிய விபரங்களை வைத்து சம்பந்தப்பட்ட  அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தான்.

பிறகு, அந்தப் பிள்ளைகள் படித்த பள்ளிக்குச் சென்று, பள்ளி முதல்வரைச் சந்தித்துப் பேசினர் கதிரும் ஸ்ரீதரும்.   பள்ளி மாணவர்களை கவனமாகக் கண்காணிக்குமாறும்,   அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவர்களைப் பற்றிய விபரங்களை, அவர்களது பெற்றோரிடம் தெரிவிக்குமாறும் கூறினான்  ஸ்ரீதர்.

மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான, நல்லொழுக்கங்களை போதிக்கும் வகுப்புகளை நடத்துமாறு கூறி,  பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்தினான்.

ஒருவாறாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு ஸ்ரீதர் புறப்பட்டுச் சென்றதும்,  மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று சகாயத்தின் மகனையும், மற்ற மாணவர்களையும் பார்த்துவிட்டு கதிர் கிளம்பும் போது, அருகில் வந்தனர் சகாயமும் அவன் மனைவியும்.

கதிரின் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு கண்ணீர் விட்ட சகாயம்,

“என் ஒரே புள்ள கதிரு  அவன். அவனுக்கு ஏதாவது ஒன்னுன்னா நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கறதில அர்த்தமே இல்ல. எங்க குடும்பத்தையே காப்பாத்திக் குடுத்திருக்க.  நான் உனக்கு எவ்வளவோ குடைச்சல் குடுத்திருக்கேன். ஆனா,  எதையுமே மனசுல வச்சிக்காம எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க.  என் உயிர் உள்ள வரை இத மறக்க மாட்டேன் கதிரு.”

“உன் பையன்னு இல்ல, அந்த இடத்துல யார் புள்ள இருந்திருந்தாலும், நான் இதத்தான் செய்திருப்பேன்  சகாயம்.     போதைமருந்து பழக்கம் நம்ம ஊர் பிள்ளைகள்கிட்ட இருக்குதுன்னு  டிஎஸ்பி  ஸ்ரீதர் சொன்னதிலிருந்து, ஒரு வாரமாவே இது சம்பந்தமாதான் அலைஞ்சுகிட்டு இருக்கேன்.

அதனாலதான், சட்டுன்னு ஊருக்கு ஒதுக்குப் புறமா ஸ்கூல் பிள்ளைங்களைப் பார்த்ததும் என்னன்னு போய் பார்த்தேன்.  இல்லைன்னா நானும் அலட்சியமாதான் கடந்து போயிருப்பேன்.   கடவுள் புண்ணியத்துல உடனே கொண்டு வந்து சேர்த்ததுல பிள்ளைக்கு நல்லபடியாகிடுச்சு.”

வாயில் சேலையை வைத்து மூடியபடி அழுது கொண்டிருந்த சகாயத்தின் மனைவியோ, “என் புள்ளைகிட்ட இப்படி ஒரு பழக்கம் இருக்குதுங்கறத என்னால நம்பவே முடியல.  இன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள். ஃபிரெண்ட்ஸ்க்கு பார்ட்டி குடுக்கப் போறேன்னு சொல்லி பணம் வாங்கிட்டுப் போனான். இப்படிப் பண்ணுவான்னு நினைக்கவே இல்லை.”

“கவலைப் படாதீங்க சிஸ்டர்.  கவுன்சிலிங் தொடர்ந்து குடுத்து அவனை சரி பண்ணிடலாம்.  பணத்தைக் குடுத்து உங்க பாசத்தைக் காட்டாதீங்க. அவனுக்குத் தேவையான அரவணைப்பைக் குடுங்க.”

“கவனமா பார்த்துக்கோ சகாயம்.  பையன் கூட மனசு விட்டு பேசு.  இந்த வயசுப் பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்ணா பிடிக்காது.  அதனால ஃபிரன்ட்லியா அவன்கூடப் பேசி அவன் செய்த தப்பை உணர வை.  நான் கிளம்புறேன்.  நாளைக்கு மறுபடியும் வந்து பார்க்குறேன்.”

சகாயத்திடமும் அவன் மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த  கதிர்,  நேராக வாசுகியிடமும் ராகவனிடமும்   சென்று அனைத்து விபரங்களையும் வழக்கம் போல பகிர்ந்து கொண்டான்.

மதிய உணவை முடித்தவன், வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு, அழகரையும் அழைத்துக் கொண்டு, சிவரஞ்சனியை அழைத்து வர கடலூர் நோக்கிச் சென்றான்.

ஒரு வாரம் கழித்து சிவரஞ்சனியைப் பார்க்கப் போகிறோம் என்ற இன்பப் படபடப்பு   ஒரு பக்கம், காலையில் இருந்து நடைபெற்ற சம்பவங்களின்  தாக்கம்  ஒரு பக்கம் என, கலவையான ஒரு மனநிலையில் இருந்தான் கதிர்.   சிவரஞ்சனி காலையிலேயே அரசு ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு வரச் சொல்லியிருந்தாள்.  ஆகவே நேராகக் காரை அங்கு செலுத்தினான்.

அரசு ஆதரவற்ற முதியோர் காப்பகம். ஊருக்குச் சற்று ஒதுக்குப் புறமாக இருந்தது.  பழைய தகரக் கதவுகளும், பெயிண்ட் அடித்தே பல வருடங்கள் ஆகியிருக்கக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கட்டிடம் ஒன்றும் இருந்தது.  வளாகத்தில் மரங்கள் நிறைய இருந்தன.

சுற்றுப் புறத்தை கண்களால் அளந்தபடி உள்ளே சென்றான் கதிர்.  அழகரும் அவனைப் பின்தெடர்ந்தார்.  “இங்க என்ன சேவை செய்யறா  இவ?”  எனச் சன்னமாக முனகியபடி பார்வையைச் சுற்றிலும் சுழல விட்டான்.

நிறைய கல்லூரி மாணவிகளும் மாணவர்களும் வளாகத்தில் விழுந்து கிடந்த இலைக் குப்பைகளைப் பெருக்கி அள்ளிக் கொண்டு இருந்தனர்.  அவர்களில் சிவரஞ்சனி தென்படுகிறாளா எனப் பார்த்தவன்,  அவளில்லாது போகவும் மேலும் உள்ளே நடந்து சென்றான்.

தூரத்தில் ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்த முதிய பெண்மணியுடன் நின்று கொண்டிருந்த சிவரஞ்சனியைப் பார்த்ததும் நடையை எட்டிப் போட்டான்.

அந்த முதிய பெண்மணியின் முதுகு மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.  அருகே நெருங்க நெருங்க அவள் அந்தப் பெண்மணிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘இவ எங்க போனாலும் யாருக்காவது சாப்பாடு ஊட்ற வேலையை  எடுத்துக்குவா போல…  கல்யாணம் முடிஞ்சதும்  எனக்கும் ஊட்டுவா’  என்று கிளுகிளுப்பாக ஜொள்ளியபடி அருகில் நெருங்கினான்.

கதிரைக் கண்டு கொண்ட சிவரஞ்சனியும் அவனைப் பார்த்து புன்னகை புரிய…  ஒற்றைக் கண் சிமிட்டி உதடுகளைக் குவித்தவனைப் பார்த்து இன்பமாக அதிர்ந்தவள்,  அவனது செய்கையை யாரேனும் பார்த்து விட்டார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.

அருகில் நெருங்கியவன்  புன்னகையுடன்   புருவத்தை உயர்த்தி, “என்ன மேடம் ஊருக்குப் போக ரெடியா? கிளம்பலாமா?”

“ம்ம்…  அவ்வளவுதான் முடிஞ்சிருச்சி   கிளம்பலாம்.  இவங்க பாவம் சுயநினைவே இல்லாதவங்க.  வெறிச்ச பார்வையோட அசையாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்காங்க. சாப்பாடு கூட சாப்பிட மாட்டாங்களாம்.  யாராவது குடுத்தாதான் வாயில வாங்குவாங்களாம்.

பேசவும் மாட்டாங்களாம்.  இங்க வேலை செய்ய ஆளுங்களும் ரொம்ப இல்ல. யாரும் சாப்பாடு தரலைன்னா ரெண்டு நாளானாலும் சாப்பிடாம கிடப்பாங்களாம்.  டாக்டர் மாசம் ஒரு தடவை வந்து பார்ப்பாங்க போல.

இங்க இருக்கற மற்ற முதியவங்கதான் இவங்கள கவனிச்சிக்கிறாங்க.  பாவம் இல்ல.”   வாய் அவனுடன் பேசிக் கொண்டிருக்க,   அந்தப் பெண்மணிக்கு ஊட்டி முடித்துக் கைகளை   பாட்டில் தண்ணீர் வைத்துக் கழுவியவள்,  அந்தப் பெண்மணியின் வாயையும் துடைத்து விட்டாள்.

அவளைக் கனிவோடு ஏறிட்டவன்,  “கண்டிப்பா நம்மளால முடிஞ்சது ஏதாவது செய்யலாம்டா.  இவங்களோட ட்ரீட்மெண்ட்க்கு ஏற்பாடு பண்ணலாம்.”  என்று பேசியவாறு முன்னே வந்து அந்த முதிய பெண்மணியின் முகத்தைப் பார்த்தவன் உயரழுத்த மின்கம்பியை மிதித்தவன் போல அதிர்ந்து போனான்.

அவன் உடல் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக நடுங்கியது. அவனது அதிர்ந்த முகத்தைப் பார்த்த அழகரும் முன்னே வந்து அந்தப் பெண்மணியைப் பார்த்து அவரும் அதிர்ந்து போனார்,  அவரது இதழ்கள் “ஜமுனா…”  என்று முனகின.

இருவரது அதிர்ந்த முகத்தையும் குழப்பமாகப் பார்த்திருந்தாள் சிவரஞ்சனி.  முதலில் சுதாரித்தவன் கதிர்தான். இரத்தமெனச் சிவந்து இறுகிப் போன முகமும் கரகரத்தக் குரலுமாக, “சிவா போகலாம் வா”   என்று அழைத்தவன் முற்றிலும் புதிய நபராகத் தெரிந்தான் அவளுக்கு.

கோபத்தைக் கட்டுப்படுத்துகிறான் என்பது அவனைப் பார்க்கையிலேயே புரிந்தது.  இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தான்.  இப்போது என்ன ஆயிற்று? என்று குழம்பியவள்,

“என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?”  என்க,   அவளது கையைப் பிடித்து இழுத்தவன்,  “சிவா போகலாம் வா. மாமா வாங்க போகலாம்.”  பல்லைக் கடித்துக் கொண்டு பேசுபவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது அவளுக்கு. குழப்பமாக அவனை ஏறிட்டவளைப் பார்த்தவன்,

“இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தாலும் கொலகாரனா மாறிடுவேன்.  போகலாம் வா.”  என்று அவளை இழுத்தபடி நடக்க எத்தனித்தவன் அழகரையும் வரச் சொல்ல,

“நீ போ மாப்ள…  நான் கொஞ்சம் என்னன்னு பார்த்துட்டு வரேன்.”  என்று பாவமாகக் கேட்டவரை முறைத்தவன்,

“ஓ…  ஒரே இரத்தம்ங்கவும் துடிக்குதோ?  இப்ப என் கூட வரப் போறீங்களா இல்லையா.”  குரலை  உயர்த்திக்  கத்தியதில் அதிர்ந்து போனாள் சிவரஞ்சனி.

இவ்வளவு களேபரத்திலும் அசையாமல் சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த, அந்த கருத்துச் சருகாகிப் போன பெண்மணியைப் பார்த்தவர்,   பாவமாகக் கதிரைப் பார்த்து,

“சொல்றதக் கொஞ்சம் கேளு மாப்ள.  நீ போ நான் பின்னாடியே வந்துடுறேன்.”

“இனிமே என் மூஞ்சிலயே முழிக்காதீங்க… “  இதைச் சொல்லும் போது அவன் உடல் கோபத்தில் தடதடவென ஆடியதை சிவரஞ்சனியால் உணர முடிந்தது. அழகரை ஏறிட்டவள்,

“என்ன நடக்குதுப்பா  இங்க…?  யார் இவங்க?”

அவனிடமும்,  “கொஞ்சம் பொறுமையா இருங்களேன்”  எனக் கெஞ்ச,  பதில் கூறாமல் அழகரை முறைத்தவன், அவளை இழுத்தபடி நடந்தான்.

அவனது இழுப்புக்கு இசைந்தபடி நகர்ந்தவள், அழகரைக் கேள்வியாகப் பார்க்க, “அவனப் பெத்தவமா இவ. நான் வந்து மத்ததைச் சொல்றேன் அவன்கூடப் போ நீ.”  என்று  தளர்ச்சியாகக்  கூறியவரை அதிர்ச்சியாகப் பார்த்தபடி அவனுடன் நடந்தாள்.

 

காற்று வீசும்.