kv1

kv1

                                                  காம்யவனம்

 

                                                          1

 

“ இங்க இருந்து உங்க பயணம் ஆரம்பிக்குது. இங்கயே தங்கி நீங்க இந்த காட்டை எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.இந்த காடு ரொம்ப அழகானது மட்டுமில்ல ஆபத்தும் இருக்கு. எப்போ, எங்க, எது நடந்தாலும் உங்களுக்குக் கொடுத்த வாக்கி டாக்கில அப்டேட் பண்ணிகிட்டே இருங்க, அப்போ தான் மத்தவங்க உங்கள ட்ராக் பண்ண ஈசியா இருக்கும்.” காட்டின் ஆரம்ப எல்லையில் நின்று கொண்டு மற்றவர்களிடம் விதிமுறைகளைப் பற்றிச் சொல்லிகொண்டிருந்தார் பஞ்சபூதம்.

பிரபல பத்திரிகை ஒன்றில் வேலை செய்தவர். உண்மை என்னவென்று தெரிந்தும், பல பெரிய தலைகளுக்கு பயந்தும் கமெர்ஷியல் பாபுலாரிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவ்விஷயத்தை மறைத்தும் திரித்தும் சில நேரங்களில் பூதாகரமாக விரிவாக்கியும் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டார்.

சிறிது நாட்களில் மனம் ஒப்பாமல், அங்கிருந்து வெளிவந்து இந்தக் கால இளைஞர்களை எளிதாகச் சென்றடையும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில அரசியல் நிகழ்வுகளையும், நாட்டின் பழம் பெருமை பற்றிய விஷயங்களையும் பற்றி மட்டுமே அதில் பதிவிட, அதிக வரவேற்பில்லாமல் போனது.

அதன் பிறகு ஒவ்வொரு ஜானராக மாற்றி மாற்றி பதிவுகளை தர ஆரம்பித்தார். ஒரு நாள் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி பதிவிட அப்போது சூடு பிடித்தது அவரது சேனல்.

பிறகு மாந்த்ரீகம், துப்பறிதல், யாருமே செல்ல முடியாத இடங்களுக்குச் செல்லுதல் மூலம் அவரது வீடியோக்கள் பிரபலமாக ஆரம்பித்தது.

மக்கள் அதை தொடர்ந்து பார்கக , அவரது பதிவுகளுக்கு லைக் மற்றும் கமெண்டுகள் இட ஆரம்பித்தனர்.

இது ஒரு போதை. நம்மை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்று அறிந்தால் நாம் இன்னும் அதிகமாக அவர்களை ஈர்க்கவே நினைப்போம். அதே போல பஞ்சபூதம் இதற்காக எதையும் செய்ய ஆரம்பித்தார்.

தன்னுடன் பணிபுரிய ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்க, வந்து சேர்ந்தனர் மற்ற நால்வரும். குரு, மகதி , தேவா மற்றும் மாயா.

இந்த நால்வருக்கும் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அத்தோடு வீடியோ,போட்டோ, இன்னும் பல புதிய தொழில்நுட்பத்தையும் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே இரு கரம் நீட்டிச் சேர்த்துக் கொண்டார் பஞ்சபூதம்.

பல புத்தகங்கள், பலதரப் பட்ட மக்கள், உண்மைச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என்று தேடிச் சென்று நம்ப முடியாத விஷயங்களைக் கூட பதிவிட ஆரம்பித்தனர்.

இவர்கள் சேர்ந்த பிறகு இன்னும் பல ஆயிரம் பேர் அவரது சேனலை தொடர ஆரம்பித்தனர். பஞ்சபூதம் என்றால் இப்போது சமூக வலைதளத்தில் நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது.

காம்யவன காடு பற்றி பல வருடங்களுக்கு முன்பே பஞ்சபூதம் அறிந்திருந்தார். ஆனால் சரியான தகவல் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஒரு சில குறிப்புகள் மட்டுமே வைத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இந்த நால்வரையும் அதைப் பற்றி தகவல் சேகரிக்க அவர் பணித்திருந்தார். முதலில் இவர்கள் மேம்போக்காக அதை பற்றி தேட நினைத்தாலும் போக போக அவர்கள் அதற்குள் மூழ்கிவிட்டனர்.

நிறைய விஷயங்கள் இந்நால்வரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பஞ்சபூதத்திடம் முழுதுமாக எதுவும் சொல்லாமல், இங்கே இரண்டு மாதம் தங்கி காட்டைப் பற்றி அறிந்து கொண்டு வருவதாக சம்மதம் வாங்கினர்.

 

 “ உங்களுக்கு சில காட்டுவாசிங்க இருப்பாங்க. அவங்கள்ள ஒருத்தர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. இப்போ வர நேரம் தான். நீங்க எங்க வேணா டென்ட் போட்டு தங்கிக்கலாம். உங்களுக்கு எதாவது சிட்டி லேந்து வேனும்னா எனக்கு உடனே கால் பண்ணுங்க. சாப்பாடு இங்க செட் ஆகலான கூட எனக்கு சொல்லுங்க. தேவையானத வாங்கிட்டு வந்து குடுக்கறேன். எதுவா இருந்தாலும் இந்த எடத்துக்கு வந்து கால் பண்ணுங்க. இத தாண்டி உங்களுக்கு நெட்வொர்க் கெடைக்காது” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பல நாட்கள் சவரம் செய்யாத தாடி மீசை, தலை நிறைய எண்ணெய் வைத்து வழித்து வாரிய ஒருவன் அங்கே வந்தான்.

பஞ்சபூதம் இவர்களுக்கு உதவ அவனிடம் தான் கேட்டிருந்தார்.  

“வாங்க கடற்கரை.” வரவேற்றார் பஞ்சபூதம். நால்வரும் அவனைப் பார்க்க,

“வணக்கம் சார். இவங்க தானா நீங்க சொன்னவங்க?” ரேடியோவில் டியூன் ஆகாத சேனல் போல கொரகொரப்பான குரலில் பேசினான் கடற்கரை.

“ஆமா பா. கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோங்க” பஞ்சபூதம் அக்கறையாகச் சொல்ல,

“சார், என்னால முடிஞ்ச உதவி பண்றேன். அப்பறம் அந்த ஆண்டவன் பாடு. நீங்க கெளம்புங்க. நீங்க நாலுபேரும்  என் கூட வாங்க” அதிகம் பேசாமல் முன்னே நடக்க ஆரம்பித்தான்.

“டேக் கேர் கைஸ்”

“ ஷூர் சார். நீங்க சேனல் வேலைய பாருங்க. நாங்க இங்க பாத்துக்கறோம்” பொறுப்பாக பதில் தந்தான் தேவா.

“பை சார்” நால்வரும் விடைபெற்று கடற்கரையின் பின்னால் சென்றனர்.

சிறிது தூரம் வரை அவர்களை வழிநடத்திக்கொண்டு  சென்றவன் , காட்டிற்குள் சிறிது தூரம் வந்ததும் நின்றான்.

“உங்களுக்கு குடிசை ஏற்பாடு பண்ணிருக்கேன். அங்க தங்கிக்கோங்க. ஆனா இங்க இருக்கற மத்தவங்கள அனாவசியமா தொந்தரவு பண்ணாதீங்க. அது உங்களுக்கே ஆபத்தா முடியலாம்.” எச்சரிப்பது போல கடற்கரை சொல்ல, அனைவரும் அவனை கேள்வியாகப் பார்த்தனர்.

“உங்களுக்கு நிறைய கேள்விகள் மனசுல இருக்கும். ஆனா அதையெல்லாம் இன்னிக்கு ராத்திரி நடக்கப் போற பௌர்ணமி பூஜை முடிஞ்ச பிறகு நீங்க என்கிட்டே கேளுங்க. அதுவரை எதுவா இருந்தாலும் உங்க மனசுலையே இருக்கட்டும். இப்போ உங்களோட குடிசைய காட்றேன் வாங்க” விறுவிறு வென நடந்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்தனர்.

காட்டின் நடுவில் ஒரு சிறிய கிராமம் போல அமைந்திருந்தது அந்த இடம். வருசையாக இல்லாமல் ஆங்காங்கே குடிசைகள் போடப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. மொத்தமே ஒரு பதினைந்து அல்லது இருபது குடிசைகள் தான் இருக்கும். ஆனால் அமைப்பில் எல்லாம் ஒன்று போலவே இருந்தது.

ஒவ்வொரு குடிசையின் அருகிலும் ஒரு மரம் கட்டாயம் இருந்தது. ஏதோ அந்தக் குடிசைக்கு துணையாக நான் இருக்கிறேன் என்பது போல!

அந்த இடத்தில் கடைசியாக இருந்த குடிசையின் எதிரே போய் நின்றான் கடற்கரை.வாசலில் வைத்திருந்த சிறிய குவளையில் மஞ்சள் நீர் கலக்கப்பட்டு தயாராக இருந்தது.

“வாங்க” என்றான் அவன்.

தேவா முதலில் செல்ல, அவன் மீது சிறிது நீரைத் தெளித்தான். அதன் பிறகு குரு, பின் மகதி கடைசியாக மாயா. அனைவரின் மீது தெளித்த நீரும் அப்படியே இருக்க, மாயாவின் மீது தெளிக்கப் பட்ட நீர் அவளது உடலால் உள்ளே உறிஞ்சப் பட்டது. சூடான தரையில் நீரைத் தெளித்தால் அது உடனே மறைந்து விடுவது போல ஆனது.

மற்றவர்கள் இதை கவனிக்காவிட்டாலும் கடற்கரையின் கண்களில் இருந்து அது தப்பவில்லை.

“எதுக்கு இப்போ தண்ணி தெளிக்கறீங்க?” மகதி கடற்கரையிடம் கேட்க, அவன் பார்வை சிறிது நேரம் மாயவை விட்டு அகலவில்லை.

“ஹலோ உங்களைத் தான்” குருவின் குரல் அவனை திரும்ப வைத்தது.

“இந்த இடம் உங்களுக்குப் புதுசு. இந்த காத்தும் இடமும் உங்களுக்கு பழக்கப் படனும்னு தான் தண்ணி தெளிச்சேன். இது எங்க சம்ப்ரதாயம்.நான் சொல்ற சில விஷயங்களை நீங்க இங்க இருக்கற வரைக்கும் கேட்டுத் தான் ஆகணும்.” ஆணையிட்டான் கடற்கரை.

“என்னங்க இப்படி பேசறீங்க ? நாங்க என்ன உங்க அடிமையா? கேள்வி கேட்காம நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட..” குருவின் முன்கோபம் தலை தூக்க, அவனை அடக்கினான் தேவா.

“குரு கோபப் படாத. அவங்க நம்ம நல்லதுக்கு தான் சொல்வாங்க. அண்ணா நீங்க போங்க, நாங்க உங்கள நம்பறோம்” என அனுப்பினான். மூவரும் உள்ளே சென்றனர்.

கடற்கரைக்கு குருவின் மீது சிறு எரிச்சல் கூட வரவில்லை. புரியாமல் பேசுகிறான் என்று தான் தோன்றியது. ஆனால் மாயாவின் சிந்தனை தான் முன்னே நின்றது அவனுக்கு. மாயா அவளது உடைமைகளைத் தூகிக் கொண்டு உள்ளே செல்ல எத்தனிக்க, அவளை நிறுத்தினான்.

“உன் பேர் என்னம்மா?” பரிவாகக் கேட்டான்.

“மாயா” சிரித்த படி கூறினாள்.

கடற்கரைக்கு உடலெல்லாம் வியர்ப்பது போல இருந்தது. தொண்டை வரண்டது. ஒரு சொம்பு நீர் உடனடியாகத் தேவைப்பட்டது.

எச்சிலை விழுங்கிக் கொண்டான்.  

“வரேன்..” என மாயா செல்ல, “ஒரு நிமிஷம்” என்றான் கடற்கரை.

மீண்டும் அவள் நிற்க,

“இன்னிக்கு ராத்திரி நடக்கப் போற பௌர்ணமி பூஜைல நீ கண்டிப்பா கலந்துக்கனும். அங்க நடக்கற எல்லாத்தையும் கவனமா பாரு. ராத்திரி பூஜைல உங்கள சந்திக்கறேன்.” சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான்.

புரியாமல் சற்று நேரம் அவன் செல்வதையே பார்த்தவள்,

“மாயா உள்ள வா!” மகதியின் அழைப்பில் நடப்பிற்கு வந்தாள்.

குடிசை மிகவும் அழகாக இருந்தது. ஆங்காங்கே மூங்கில் கம்புகளால் முட்டுக் கொடுத்து நேர்த்தியாக அமைத்திருந்தனர்.

அந்தக் கால விறகு அடுப்பு, மண் பாண்டங்கள் , மண் குவளைகள் என்றிருக்க அவற்றை மிகவும் ரசித்தாள் மாயா.

“ஏண்டா அவன் சொல்றதுக்கு எல்லாம் நாம தலை ஆட்டனும்?” குரு மனதளவில் அங்கேயே பிடிவாதமாய் நின்றான்.

“இங்க நமக்கு எதுவும் தெரியாது குரு. நாம இந்தக் காட்டைப் பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சுக்கல. அதைப் பத்தி தெரிஞ்சவங்க நமக்கு உதவ வரப்ப அதை யூடிலைஸ் பண்ணிக்கறது தான் புத்திசாலித் தனம்.” தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டே பதில் சொன்னான் தேவா.

சலித்துக் கொண்டான் குரு.

“இந்த பிளேஸ் ரொம்ப அமைதியா நல்லா இருக்குல?” மகதி மூடை மாற்ற,

“ஆமா! எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படி ஒரு இடத்துக்கு வந்து ஸ்டே பண்றது தான் என்னோட லாங் டைம் விஷ். கண்டிப்பா ரெண்டு மாசம் இங்க டேரா போட்டுடனும்” மாயா உணர்ந்து கூறினாள்.

“இது என்ஜாய் பண்ற இடமா? எப்படிப்பட்ட காடுன்னு தெரிஞ்சு தான வந்திருக்கோம். சோ கொஞ்சம் சீரியஸா நடந்துகோங்க.” குரு சற்று பயம் ஊட்டினான்.

“எனக்கு ஒன்னும் பயம் இல்ல. என்ன என்ன விஷயம் இங்க நடக்குதுன்னு ஃபுல்லா ஸ்டடி பண்ணனும். ரியலா அதை பீல் பண்ணனும். ஐ அம் சோ எக்சைடெட்.” மாயா இரு கையையும் நீட்டி கண்மூடி குதூகலித்தாள்.

“ இவளுக்கு இருக்கற ஆர்வத்த பாத்தா இங்க இருந்து வரவே மாட்டா போலிருக்கு” தேவா சிரித்தான்.

“நாம நாலு பெரும் ப்ளான் பண்ணி இதுக்காகத் தான பஞ்சபூதம் கிட்ட வந்து சேர்ந்தோம். அவன் நம்மள நம்பி இதை ஒப்படைக்க எத்தனை நாள் ஆச்சு. நம்மள சாதாரண காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ்ன்னு நெனச்சுகிட்டு இருக்கான்.லூசு பய” குரு சிரித்தான்.

“அவர் கிட்ட அந்த ரெண்டு பேப்பர் மட்டும் இல்லனா இத்தனை நாள் அவர் கூட இருந்தே  இருக்க வேண்டாம். சரி விடு. எல்லாம் வொர்த் தான். இப்போ காம்யவனம் மொத்தமும் நம்ம பொக்கிஷம். நமக்கு மட்டுமே தெரியப் போற அற்புத பூமி.” மகதி குருவோடு சேர்ந்து கொண்டாள்.

“நாலு பேரும் நம்ம பாதைய நோக்கி போய்கிட்டே இருப்போம்.” தேவாவும் பேச்சில் இணைந்தான்.

“காம்யவனம். எங்களுக்கு என்ன கொடுக்க போற? ஆவலா காத்திருக்கோம்” மாயா கண்களில் கனவோடு காத்திருந்தாள்.

அப்போது “ஜல் ஜல் ஜல்” என்ற ஒலி அவர்களின் குடிசையை சுற்றி வந்தது. நால்வரும் அமைதியாயினர். இதயம் வேகமாகத் துடித்தது. சுற்றி முற்றி அங்கிருந்த ஜன்னல் வழியே பார்த்தும் ஒன்றும் தெரியவில்லை.வெகு நேரம் அவர்களின் குடிசையை பல முறை சுற்றி வந்த அந்த ஒலி அவர்களின்  வாசலில் வந்து நின்றது. நால்வரும் உறைந்து போய் வாசலைப் பார்த்தனர்.

வாசலில் நிழலாடியது ஒரு உருவம்.

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!