ESK-17

என் சுவாசம் 17

1

மிகவும் குழம்பிப் போன மனநிலையுடன்,  கைகளில் இருந்த நகத்தைக் கடித்தவாறு அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.   அது அவனுடைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் இருந்த அறையின் வெளிப்பகுதியில்   உள்ள சிறு வராண்டா மாதிரியான அமைப்பு.  அதனுள் ஒரு சோபா போடப்பட்டிருக்க அதில்தான் அமர்ந்திருந்தாள். சிலுசிலுவென்று காற்று வீசிக் கொண்டிருந்தது.

அங்கே ஒற்றைப் படுக்கையறை மட்டுமே இருந்தது. வெகு கோபமாக  அலைபாயும் மனநிலையுடன் இருந்தவன் அறைக்குள் படுத்திருந்தான்.  கடலூரில் இருந்து எப்படி வந்து சேர்ந்தோம் என்று நினைக்கும் அளவுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான். அவனிருந்த நிலைக்கு விபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று அரண்டு போய் அமர்ந்திருந்தாள்  அவள்.

இரண்டு மணி நேர பயண தூரத்தை ஒரு மணி நேரத்தில் எதிலிருந்தோ தப்பிப்பவன் போல பேய் வேகத்தில் கடந்து வந்திருந்தான். செக்கச் சிவந்த கண்களும் கற்பாறையாக இறுகிப் போன முகமும்   கண்டவளுக்கு, அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.  நேராக இங்கு அழைத்து வந்தவன் எதுவுமே பேசாமல் உள்ளே சென்று படுத்துக் கொண்டான்.

அவனுடைய கடந்த காலம் எதுவும் அவளுக்குத் தெரியாததால் எதற்கிந்த கோபம்? ஏன் இந்த ஆங்காரம்? எதுவும் புரியவில்லை அவளுக்கு.   அவனுடைய அம்மா அப்படி ஒரு நிலையில் ஏன் இருக்கிறார்?   ஒன்றும் விளங்கவில்லை. மெதுவாக படுக்கையறையுள் எட்டிப் பார்த்தாள். ஆதரவற்ற குழந்தை போல குப்புறப் படுத்துச் சுருண்டிருந்தான்.

அறைக்குள் நுழையத் தயக்கமாக இருந்த போதும் அவனை அப்படியே விடவும் மனதில்லை.  வந்து பத்து நிமிடங்கள் ஆகிறது. அவனது கோப முகம் வேறு அடிவயிற்றில் பயத்தைக் கிளப்பியது.   என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தவள்,  அவன் மதியத்திலிருந்து எதுவும் சாப்பிட்டிருக்கவும் மாட்டான் என்று எண்ணியபடி எழுந்தாள்.

அந்த வராண்டா போன்ற அமைப்பின் முடிவில் சிறிய சமையல் மேடை மட்டும் இருந்ததைப் பார்த்தவள், .மெதுவாகச் சென்று அங்கே இருந்த ஃபிரிட்ஜைத் திறந்து  பார்த்தாள்.  பால் பாக்கெட் ஒன்று இருக்கவும்  எடுத்துக் காய்ச்சி டீ தயாரித்தவள்,   அதனை எடுத்துக் கொண்டு மெதுவாக அறையினுள் சென்றாள்.

முகத்தை கைகளால் மறைத்தபடி குப்புறக் கிடந்தான்.  டீயை அருகே இருந்த மேஜையின் மேல் வைத்தவள்,  சிறிது தயக்கத்துடனே கட்டிலில் அமர்ந்து அவனது தோளில் கை வைத்து அவனைத் திருப்ப முயற்சித்தாள். அவளது ஸ்பரிசத்தில் அவனது உடல் லேசாக அதிர்ந்ததை  உணர்ந்தவள்,  முதுகை லேசாகத் தடவிக் கொடுத்தாள்.

“எழுந்துக்கோங்க…  இந்த டீ மட்டும் குடிச்சிட்டு படுத்துக்கோங்க.”

“…”

“என்ன ஆச்சு? எனக்கு ஒன்னுமே புரியல.  ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?”

பதில் இல்லை அவனிடம்.  சில நொடிகள் கழித்து முகத்தைத் திருப்பியவன், அவளது மடியில் தலையை வைத்து இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டான். அவனது செய்கையில்  மனம் அதிர்ந்தாலும்,  குழந்தை போல மடியில் படுத்திருப்பவனை விலக்க முடியாமல்,  அவனது தலையைக் கோதினாள்.

என்ன பேசுவது? என்ன கேட்பது? ஒன்றும் புரியாமல், அவனை ஆறுதல் படுத்துவது மட்டுமே நோக்கம் என்பது போல அமைதியாக அமர்ந்திருந்தவள், சில நிமிடங்கள் கழிந்ததும்  மெல்லிய குரலில்,

“அவங்க உங்க அம்மான்னு அழகர் அப்பா சொன்னாங்க. ஏன் அவங்க அப்படி இருக்காங்க?”

பதிலில்லாத சில நொடி மௌனங்களுக்குப் பின் அவன் உடல் லேசாகக் குலுங்கியது. மடியில் உணர்ந்த ஈரத்தில் அவன் அழுவதை உணர்ந்து கொண்டவள் பதறிப் போனாள்,

“என்ன ஆச்சுங்க?  நான் எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?  ப்ளீஸ்… என்னன்னு சொல்லுங்க.”  எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளது கண்களில் இருந்தும் கண்ணீராக வழிந்தது.

கம்பீரமாக,  தோரணையாக, ஆளுமையோடு பார்த்த ஒருவன் அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.   அவனை எப்படி ஆறுதல் படுத்துவது ஒன்றும் புரியவில்லை.   அவனது தலையை இறுக்கி மடியோடு கட்டிக் கொண்டவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை.

அவனது தலையைக் கோதிக் கொடுத்தபடி அமைதியாக  அமர்ந்திருந்தாள்.  பிரச்சனையின்   அடிமுடி எதுவும் புரியாவிட்டாலும்,   அவனது இந்த நிலை அவளுக்கு தாங்க இயலாத மனபாரத்தைத் தந்திருந்தது. அவனை வருத்தப் படுத்தும் எதையும்   அதற்குமேல் பேசத் துணியவில்லை அவள்.

மாடியில் யாரோ ஏறி வரும் அரவம் கேட்டது. வருவது யார் என்பது போல பார்த்திருந்தவளுக்கு,  வாசுகியைக் கண்டதும் மீண்டும் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்னன்னு தெரியல அண்ணி…  இவங்க அழறாங்க…”

கேவியபடி பேசியவளைக் கண்டிப்போடு பார்த்த வாசுகி,

“கதிர் எழுந்திரு…  நீ என்ன சின்ன பிள்ளையா?  உன்னைப் பார்த்து அவளும் வருத்தப்படறா  பாரு…   எனக்கு அழகர் ஃபோன் பண்ணாரு. இவ்வளவுதானா உன் மனதைரியம்?  திரும்பவும் பதினைஞ்சு வயசு பையனோட மனநிலைக்குப் போயிட்டியா  நீ?

அப்ப… இவ்வளவு நாளா உன்னை மாத்திட்டேன்னு நான் நினைச்சது பொய்…  அப்படிதானே…!  உன்னை சுத்தி நாங்க இத்தனை பேர் இருக்கோம். எங்களைப் பத்தி நீ கவலைப்படலையா? நீ இப்படி உடைஞ்சு போறத பாக்கறதுக்காடா, உன்னைக் கஷ்டபட்டு மாத்திக் கொண்டு வந்தோம்.

இங்க பாரு… நீ அழுதா கூட அழறதுக்கும், நீ சிரிச்சா உன் கூட சேர்ந்து சிரிக்கவும், உனக்கே உனக்குன்னு ஒருத்தி இருக்கா… அவ மட்டும்தான் இனி உனக்கு எல்லாமே.  உன் வாழ்க்கையில முடிஞ்சு போன அத்தியாயத்துக்காக இன்னும் வருத்தப் படறியா கதிர்?

உன்னை இப்படிப் பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு. எழுந்திரு வீட்டுக்குப் போகலாம்.   அனுவும் ஆதுவும் உனக்காக வெயிட் பண்றாங்க.”

வாசுகி பேசவும் மெல்ல எழுந்தவன்… முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “நீ சிவாவ கூட்டிட்டுப் போக்கா…  நான் நாளைக்கு வரேன்.”

“அப்படியெல்லாம் உன்னைத் தனியா விட்டுட்டுப் போக மாட்டேன்.   இப்ப என் கூட வா. அழகர் வந்ததும் நீ இங்க வரலாம்.”

“அவரப் பத்தி என் கிட்ட பேசாத…  அவருக்கு என்னை விட அவரோட உடன்பிறப்புதான் முக்கியமா போச்சு. இனி அவர் முகத்துலயே நான் முழிக்க மாட்டேன்.”

“அத அழகர் வந்து, அவர் முகத்தை காட்டும் போது முடிவு பண்ணிக்கலாம்…  இப்ப நீ கிளம்பு.”

அவளைக் கடுப்போடு முறைத்தவனைப் பார்த்து,

“ம்ம்ம்…  இதுதான் எங்க கதிர்.  அத விட்டுட்டு சும்மா கண்கலங்கிட்டு இருக்கற…  உனக்கு நல்ல ஜோடியா இவளும் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கறா.  போங்க, ரெண்டு பேரும்  முகம்  கழுவிட்டு வாங்க. இந்த டீ ஆறிடுச்சி நான் வேற போடுறேன்.”

என்றபடிச் சென்ற வாசுகியைக் கலங்கிய விழிகளோடு பார்த்தவன், எழுந்து சென்று  முகம் கழுவி வந்தான்.  சிவரஞ்சனியும் முகம் கழுவி வந்ததும்,  வாசுகி எடுத்து வந்த டீயை மூவரும் பருகினர்.

“அக்கா…  இப்ப நான் ஃபிரியாகிட்டேன்.  நீ சிவாவ கூட்டிட்டுப் போ.   நான் நாளைக்கு வரேன்.”

“அதெல்லாம் முடியாது…   ஒன்னு நீ கிளம்பி அங்க வா…  இல்லையா சிவா இங்க இருக்கட்டும்.”

லேசாக புன்னகை செய்தவன், “கடலூருக்குப் போகறதுக்குக்கூட தனியா என் கூட அனுப்ப மாட்டேன்னு சொல்லுவ. இப்ப என் கூட இங்க தங்கட்டும்னு சொல்ற…  உன் தம்பி மேல நம்பிக்கை வந்துடுச்சா உனக்கு?”

“ உன் மேல எனக்கு நம்பிக்கை கொஞ்சம் கம்மிதான்.  ஆனா சிவா மேல நிறைய இருக்கு. அவகிட்ட நீ ஏதாவது வம்பு பண்ணா, உன்னை விரட்டி விரட்டி உதைப்பா அவ…  இல்லையா சிவா… “

என்றபடி சிவரஞ்சனியைப் பார்க்க…   அவளோ   இவர்களது பேச்சில் மிரண்டு போய் நின்றிருந்தாள்.

சற்று உரத்துச் சிரித்தவன், “அவ சும்மாவே மிரண்டு போய் இருக்கா…  பாரு  நீ இங்க விட்டுட்டுப் போய்டுவியோன்னு முழிச்சுகிட்டு நிக்கறத.”

ஒரளவு அவன் பேசிச்  சமாதானம் ஆனதும், மூவரும் கிளம்பி வாசுகியின் வீட்டிற்கு வந்தனர்.  பிள்ளைகளோடு   அவர்கள் அறையில் பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அறைக்குள் வந்த சிவரஞ்சனியைப் பார்த்ததும் புன்னகை வந்தது.

பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவதற்காக, இட்லி சட்னி சாம்பார் அனைத்தையும் ஏந்தியபடி வந்தவள்,  அனுவுக்கும் அதவனுக்கும் ஊட்ட ஆரம்பித்தாள். அப்படியே கதிரின் உதட்டருகே ஒரு வாய் உணவைக் கொண்டு வந்து வைத்து அவன் முகத்தைப் பார்க்க,  லேசாக கலங்கிய விழிகளோடு வாங்கிக் கொண்டான்.

“எனக்கு நினைவு தெரிஞ்சு எனக்கு சாப்பாடு ஊட்ற முதல் ஆள் நீதான்.”  அவனது குரல் கரகரத்து வந்தது.

“ம்ப்ச்….  சாப்பிடும் போது பேசக் கூடாது.  அமைதியா சாப்பிடுங்க.”

மூவருக்கும் மாற்றி மாற்றி ஊட்டி விட்டு வயிற்றை நிறைத்தாள்.  மூன்று  தம்ளர்களில் பால் எடுத்துக் கொண்டு வந்த வாசுகி,  மூவரிடமும் கொடுத்து  விட்டு,

“அனு நீ  போய் சிவா அத்தை கூட படுத்துக்கோ.  ஆதுவும் மாமாவும் இங்க தூங்கட்டும்.”

“சரிம்மா… கொஞ்ச நேரம் விளையாடிட்டு போய் படுத்துக்கறேன்மா.”  பிள்ளைகளின் விளையாட்டில் மனம் லேசானது அவனுக்கு.

சிறிது நேரம் பிள்ளைகளோடு விளையாடியவன் கண்ணயர்ந்தான்.  அவன் உறங்கவும் அனுவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்த சிவரஞ்சனி, அனுவை அவளறையில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.

சரியாக அந்த நேரம் அழகரும் வந்து சேர்ந்தார்.

“கதிர் எங்கம்மா?”

“தூங்கிட்டாங்க ப்பா.”

“அதுக்குள்ள தூங்கிட்டானா?”

“அவனுக்கு இன்னைக்கு மன உளைச்சல் அதிகம். அதான் நல்லா தூங்கட்டும்னு, பால்ல ஒரு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வச்சிருக்கேன்.” சமையலறையில் இருந்து வெளியே வந்த வாசுகி பதில் தந்தாள்.

“அதுவும் நல்லதுக்குதான், இப்ப என்னைப் பார்த்தாலும் ரொம்ப டென்ஷனாவான். நல்லா தூங்கி எழுந்தா அவன் மனசு கொஞ்சம் அமைதியா இருக்கும்.”

“சரி… நீங்களும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. சாப்பிட வாங்க. நீயும் வா சிவா.”

சாப்பிட அமர்ந்த அழகர், “தலைவர் எங்க ம்மா.”

“கட்சி மீட்டிங் ஒன்னு சிதம்பரத்துல, அதுக்குதான் போயிருக்கார்.  சுந்தரும் கூட போயிருக்கான். வர்ற நேரம்தான்.

எனக்கு கேட்கவே இஷ்டம் இல்ல… இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது.  உங்க அக்கா எப்படி இருக்காங்க?”

சில நொடி மௌனத்திற்கு பின், “என்ன சொல்றது. யானை தன் தலையில தானே மண்ண வாரி போட்டுக்குமாம். அந்த மாதிரி, நல்லா வாழ வேண்டிய வாழ்க்கைய அவளே கெடுத்துகிட்டு, இப்ப பித்து பிடிச்சு நிக்குறா. எல்லாம் விதி.”

“…”

“ஹாஸ்பிடல்ல கூட்டிட்டுப் போய் காட்டினேன்மா.  ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. இன்னும் ஸ்கேன் நாளைக்கு எடுக்கனும்னு சொன்னாங்க.  நாளைக்குதான் அவளோட முழு உடல்நிலையும் தெரியும்.  ஏதோ அதிர்ச்சியால இப்படி ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க. மறுபடியும் கூட்டிவந்து அந்த ஹோம்லயே விட்டுட்டு வந்தேன்.”

“எங்க போனாங்க?  ஏன் பிரிஞ்சு போனாங்க? இவ்வளவு நாளா அவங்களைத் தேடலையாப்பா நீங்க?”

“தெரியாம தொலைஞ்சு போயிருந்தா தேடியிருக்கலாம். எல்லார் தலையிலும் நெருப்பள்ளி கொட்டிட்டு, கட்டின புருஷனும் பெத்த பிள்ளையும் பத்தி கவலைப்படாம, ஓடிப் போனவள எங்க போய் தேட முடியும்.”

அதிர்ச்சியுடன் பார்த்த சிவரஞ்சனியைப் பார்த்து விரக்தி சிரிப்பு சிரித்தவர், அவரது இளமைக் காலங்களில் நடந்தவற்றை சொல்லத் துவங்கினார்.

 

சிதம்பரத்தை அடுத்த புவனகிரியைச் சேர்ந்தவர் முத்து ராமன். அவரது மனைவி ஜானகி அம்மாள். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு  இரண்டு பிள்ளைகள்.  மூத்த பெண் ஜமுனா. அவளை விட இரண்டு வயது இளைய மகன் அழகர்சாமி.

சிறு வயதில் இருந்தே தனது தமக்கை மீது அலாதியான அன்பு உடையவர் அழகர்.  வயதில் மூத்தவளானாலும்,  சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளும் ஜமுனாவிற்கு, ஒரு அண்ணனைப் போல பொறுப்புடன் நடந்து கொள்வார் அழகர்.

திருமணமாகிப்  பல வருடங்கள் கழித்து பிறந்தவள் என்பதால், ஜமுனாவின் மீது பாசம் அதிகம் அவளது பெற்றோருக்கு.  அதிலும் வளர வளர தங்க விக்ரகம் போல ஜொலிப்பவளின் அழகு, பெற்றவரை பெருமை கொள்ள வைத்தது.

கையளவு நிலம் வைத்து விவசாயம் செய்து சிரமப் பட்டாலும், மகள் ஒன்றை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் அதனை எப்பாடு பட்டாவது வாங்கித் தந்து விடுவார் அவளது தந்தை முத்து ராமன்.  ஜமுனாவிற்கும் தான் நினைத்ததை எல்லாம் சாதிக்கும் பிடிவாதமும் அதிகம்.

சிறு வயதில் இருந்தே அவளது அழகைப் பலரும் புகழ்வதும், “உனக்கென்ன… உன் அழகிற்கு அந்த ராஜகுமாரனே வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வான். “ என்று கூறுவதையும் கேட்டுக் கேட்டு வளர்ந்தவளுக்கு, கற்பனைகளும் அது போலவே இருந்தது.

மிகப் பெரிய பணக்கார வீட்டில் இருந்து அழகான பையனுக்குத் தன்னை மணமுடிக்கக் கேட்டு வருவார்கள் என்று கற்பனையில் மிதந்தாள். அவளது ஆசைகளும் கற்பனைகளும் பெரிய அளவிலேயே இருந்தன.  யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் கற்பனை உலகில் சஞ்சரித்தவளுக்கு, நிஜத்தில் அவளைப்  பெண் கேட்டு வந்த வரன்களின் விபரங்கள் எட்டிக் காயாய் கசந்தன.

திருமண வயதை எட்டிய மகளுக்குத் தோதாக, அவர் தந்தை பார்த்த ஒரு வரனையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. படிப்பும் அவ்வளவாக வரவில்லை,  பெண்பிள்ளையை எவ்வளவு நாள் வீட்டில் வைத்திருக்க முடியும்? அவர்களது கிராமத்தில் அவள் வயதை ஒத்த பெண்கள் அனைவரும் திருமணம் முடித்திருக்க,  அவளோ வரும் அனைத்து மாப்பிள்ளைகளையும் குறை கூறிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஒரு திருமண வீட்டில் ஜமுனாவைப் பார்த்து, மிகவும் பிடித்துப் போய் பெண் கேட்க வந்தான் ராஜன்.  தாய் தந்தை யாரும் இல்லாமல் வயதான அத்தையை மட்டுமே துணையாகக் கொண்டு,  காட்டு மன்னார் கோவிலில் சொந்தமாக கன்வேயர் பெல்ட் விற்கும் கடை வைத்திருந்த, கல்லூரிப் படிப்பையும் முடித்திருந்த ராஜன், அம்சமான வரனாகத் தோன்றினான் ஜமுனாவின் பெற்றோருக்கு.

மேலும், வரதட்சணை என்று ஒரு பைசா கூட வேண்டாம் பெண்ணை மட்டும் தாருங்கள் என்று கேட்ட அவனை, அனைவருக்கும் வெகுவாக பிடித்துப் போனது.  அப்பொழுது கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த அழகரை, ராஜனைப் பற்றி விசாரிக்கச் சொன்னதில், வந்த தகவல்கள் அனைத்தும் வெகு திருப்தியாக இருந்ததில்,  அனைவரும் ஜமுனாவை வற்புறுத்த ஆரம்பித்தனர்.

மாமியார் நாத்தனார் பிக்கல் பிடுங்கல் இல்லை,  சொந்தத் தொழில் செய்பவன் வருங்காலத்தில் பெரிய பணக்காரனாக வருவான்.  எந்த விதமான கெட்ட பழக்கங்களும்  இல்லை.  நன்கு படித்தவன்.  என்பது போன்ற சாதகமான விஷயங்களை, ஜமுனாவிற்கு எடுத்துச் சொல்லி, அவளைப் பெண் பார்க்கும் நிகழ்விற்கு சம்மதிக்க வைத்தனர்.

ஆனால், பெண் பார்க்க வந்த ராஜனைப் பார்த்து மிகுந்த ஏமாற்றமாகப் போய் விட்டது ஜமுனாவிற்கு.  ராஜகுமாரன் போல மாப்பிள்ளை வருவான் என்று எண்ணியிருந்தவளுக்கு,  ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவாக, தொட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளும் அளவு கறுத்த நிறத்தில், ஐயனார் போல அமர்ந்து  இருந்தவனைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை அவளுக்கு.

“என் அழகென்ன? என் கலரென்ன?  எனக்குப் போய் இப்படி கரிச்சட்டி போல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்களே”  என்று  அழுது சண்டை போட்டவளைச் சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவளைப் பெற்றவர்களுக்கு.

“இதற்கு மேல் என்னால் மாப்பிள்ளை பார்க்க முடியாது. நீ திருமணம் ஆகாமல் இங்கேயே இருக்க வேண்டியது தான்” என்று அவளது தந்தை வெகுவாகக் கோபப்பட,  வேறு வழியின்றி அரை மனதாக ராஜனுடன் பிடிக்காத திருமண பந்தத்தில் இணைந்தாள் ஜமுனா.

ஜமுனாவின் பெற்றோர்களோ,  தங்கள் மகள் இன்னமும் விபரம் அறியாத சிறு குழந்தைதான், திருமணம் முடிந்து மாப்பிள்ளையின் குணத்தைப் புரிந்து கொண்டால், நன்கு வாழ ஆரம்பித்து விடுவாள் என்று எண்ணி சமாதானப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் ஜமுனாவோ,  தனக்குப் பிடிக்காத திருமண பந்தத்தில் தன்னைத் தள்ளி விட்டதாக எண்ணி, பெற்றோரிடம் சுத்தமாகப் பேச்சு வார்த்தையை நிப்பாட்டிக் கொண்டாள்.  அவளைப் பார்த்து அனைவரும் கேலி செய்வது போல, ஒரு பிரமையை மனதில் ஏற்படுத்திக் கொண்டு, அவளது ஊருக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டாள்.

ஆனால் ராஜனோ,  அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்.  ஆசைப் பட்டுக் கட்டிக் கொண்ட பேரழகு மனைவியின் மீது, மிகுந்த பாசத்தையும் காதலையும் காட்டினான்.  அவள் ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் வாங்கிக் குவித்தான்.  அவளின் கண் ஜாடைக்கேற்ப ஆடும் பொம்மையானான்.

அனைத்துக் கணவன்மார்கள் போல, இரவில் மனைவி மீது கொண்ட மோகத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, விடிந்ததும் செய்வதறியாமல் விழித்தான்.  மனைவியின் முகம் லேசாகச் சுளித்தாலும் உயிரே போவது போலத் துடித்தவன்,  அவள் ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் கடனை வாங்கியாவது வாங்கிக் கொண்டுவந்து, அவள் காலடியில் கொட்டினான்.

பட்ட கடனை அடைக்க இரவு பகல் பாராமல் கடையில் உழைத்தான்.  அதற்கும் அவள், “என் மீது உங்களுக்கு ஆசையே இல்லை.  நாள் முழுவதும் கடை கடையென்று இருக்கிறீர்கள்” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால்,  கடையை அடைத்து விட்டு அவள் காலடியில் கிடந்தான்.

இப்படியே சில மாதங்கள் கழிந்தன.  ஜமுனாவின் வயிற்றில் குழந்தை தங்கியதும், ஆனந்தக் கூத்தாடியவனை  நொறுக்கிப் போட்டது அவள் கூறிய வார்த்தைகள்.

“இருக்கறது வாடகைக்கு  ஒண்டுக் குடித்தனம்.  தனியா ஒரு வீடு நமக்கு சொந்தமா இருக்கா? நல்ல ஆஸ்பத்திரியில பிள்ளை பெத்துக்க முடியுமா? அதை நல்லா வளர்க்கற அளவுக்கு உங்களுக்கு வருமானம் இருக்கா?

ஒரு ஓட்டை உடைசல் கடைய வச்சி பெல்ட் விக்கற உங்களுக்கு எதுக்கு புள்ளை?  நான் இதைக் கலைக்கப் போறேன்.  நீங்க வீடு வாசல்னு வாங்கி செட்டில் ஆனப்புறம் பிள்ளையெல்லாம் பெத்துக்கலாம்.”

யாருக்கும் அடங்காமல், பிள்ளையைக் கலைக்கப் போகிறேன் என்று பிடிவாதமாக நின்றவளை,  கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து பிள்ளையைச் சுமக்க சம்மதிக்க வைத்தான்.

“இங்க பாருடா… பிள்ளையெல்லாம் கடவுள் நமக்குக் குடுக்கற வரம்.  நாம இஷ்டப்பட்ட நேரத்துக்கு நமக்குக் கிடைக்காதுடா.  உனக்கென்ன சொந்த வீடுதான வேணும். நான் கண்டிப்பா வாங்கிடுவேன்.  இன்னும் கொஞ்ச வருஷத்துல நாம சொந்த வீட்டுக்குப் போயிடலாம்.

கவர்ண்மெண்ட் ஆஸ்பிடல்லதான் சுகப் பிரசவம் ஆகும். தனியார் ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணிடுவாங்க.  உனக்கு எந்த கஷ்டமும் வராம நான் பார்த்துக்கறேன்டா.  தயவு செய்து நம்ம பிள்ளைய கலைக்கப் போறேன்னு உன் வாயால சொல்லாதடா.”

என்றுக் கெஞ்சியவனைக் கண்டு சற்று மனமிரங்கியவள், ஒரு வழியாக பிள்ளை பெறச் சம்மதித்தாள். அவளது ஒவ்வொரு உபாதைக்கும் அவனைப் படுத்தி எடுத்தாள்.  அவள் பிள்ளை பெற்றுத் தேறுவதற்குள், அவன் தேய்ந்து நொந்து போனான்.  பத்து மாதமும் அவனை படாதபாடு படுத்தி வைத்தாள்.

அரசு மருத்துவமனையில் செவிலியர்களிடம் ஏச்சு பேச்சு வாங்கி பிள்ளை பெற்றது, அவளை மனதளவில் வெகுவாக பாதித்தது.  அடுத்து இனி பிள்ளை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியவளை, அவனும் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கும் போதும்போதும் என்றாகியிருந்தது.

சிங்கக்குட்டி போல, பேர் சொல்ல ஆண் பிள்ளை பிறந்ததே அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. தன்னைப் போலவே முகஜாடையும்,  ஜமுனா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவு கலராகப் பிறந்திருந்த மகனைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினான்.  தனது தந்தையின் நினைவாக கதிரேசன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான்.

அழுத பிள்ளைக்குத் தாய்பால் கொடுக்க மறுத்தாள் ஜமுனா.  அழகு குலைந்து விடும் என்றாள்.  பெற்றவர்களிடமும் பேசுவதில்லை.  அவளது ஊருக்கும் செல்ல மறுத்தாள்.  வீறிட்டு அழும் குழந்தையை தூக்க மறுத்தாள்.  சேவகம் செய்ய வந்த அவளது தாயையும் கடுஞ்சொற்களை வீசி அனுப்பி விட்டாள்.

ராஜன் வெகுவாக சோர்ந்து போனான்.  ஜமுனாவின் போக்குப் பிடிக்காமல், ஊரோடு போய் தங்கியிருந்த தனது அத்தையை வரவழைத்தான். குழந்தையை அவரிடம் ஒப்படைத்து  பார்த்துக் கொள்ளச் செய்தான்.

அவளுடைய தாய் தந்தையோ அழகரோ யாருடைய புத்திமதியும் அவளை மாற்றவில்லை.  மகளைப் பற்றிய கவலையிலேயே அவளது பெற்றோர்  ஒருவர் பின் ஒருவராக விண்ணுலகம் அடைந்தனர்.  தனியாக இருந்த அழகரும் கல்லூரியை முடித்து விட்டு, தனது அக்கா வீட்டுக்காரரின் கடையிலேயே பணிபுரிய வந்தார்.

கதிருக்கு மூன்று வயதாகும் போது, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அத்தையம்மாளும் காலமாகிவிட, பிள்ளையை கவனிக்கும் பொறுப்பு அழகருக்கும் ராஜனுக்கும் என்றாகிப் போனது.  இதற்குள்ளாகவே ராஜன் இல்லற வாழ்வில் வெகுவாக சோர்ந்து போனான்.

அனைத்துப் பெண்களைப் போல ஆசைப் பட்டாலும் பரவாயில்லை. ஜமுனாவின் ஆசைகள் விண்ணைத் தாண்டி இருந்தன. ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீட்டை, வீடு என்றே ஒப்புக்கொள்ள மறுத்தாள் ஜமுனா.  பல அடுக்கு மாடிகளை உடைய வீடு போல வாங்க வேண்டும் என்றாள்.  ராஜனும்  வளர்ந்து வரும் ஏரியாவில் ஒரு நல்ல தனி வீட்டிற்கு வாடகைக்கு குடி புகுந்தான்.  ஆனால் அது அவளை திருப்தி படுத்தவில்லை.

எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவனுக்கு வீட்டு மனை வாங்குவதற்கான பணத்தைக் கூட சேமிக்க முடியவில்லை.  இதென்ன சினிமாவா? ஒற்றைப் பாட்டு முடிவதற்குள்,  பல அடுக்கு மாளிகை கட்டி, அனைவரும் கை கோர்த்து ஆட…

மேலும் மேலும் கடனை வாங்கினால் ஒரு கட்டத்தில், தானே இல்லாமல் போய் விடுவோம் என்பதை உணர்ந்தவன், மனைவியின் ஆசைகளில் முடிந்தவற்றை மட்டும் பூர்த்தி செய்தான்.

அவளோ,  நினைத்த நேரமெல்லாம் நகையும் பட்டுப் புடவைகளும் பரிசளிக்க வேண்டும் என்றாள்.  வாரம் ஒருமுறை வெளியூர் சுற்ற வேண்டும் என்றாள்.  அதைச் செய்யத் தவறினால், அழுது ஆகாத்தியம் செய்து சண்டை போட்டாள்.  காரணம் இன்றி குழந்தையை அடித்தாள்.  அவளை அடக்க முடியாமல் போனது ராஜனுக்கு.

சாம, பேத, தான, தண்ட  முறைகளைப் பயன்படுத்தி மனைவியை வழிக்குக் கொண்டு வர முயன்ற ராஜனுக்கு அவளிடம் இருந்து கிட்டியது என்னவோ,  மோசக்காரன் ஏமாற்றுக்காரன், வக்கற்றவன் போன்ற  பட்டங்களே.

ஆசையாக அருகில் வரும் குழந்தையிடம், வெறுப்பை உமிழும் மனைவியைக் கண்டிக்கவும் முடியாமல்,  அவளது  பேராசைகளில் ஒரு பங்கைக் கூட நிறைவேற்றவும் முடியாமல், தான் மனைவியின் மீது வைத்திருந்த உண்மையான காதல் நீர்த்துப் போவதைத் தடுக்கவும் முடியாமல், வாழ்வே வெறுத்துப் போனது அவனுக்கு.  தினமும் வீட்டில் சண்டையும் சச்சரவும் என்றாகிப் போனதால் கடையே கதி என்று கிடந்தான்.

விபரம் புரியாத வயதில், உணவு கேட்டால் கூட வெறுப்பை உமிழும் தாயிடம் இருந்து விலகி அழகருடன் ஒட்டிக் கொண்டான் கதிர். தனது தமக்கை அடிக்கும் கூத்துகளைப் பார்த்த அழகருக்கும் திருமண ஆசையே அற்றுப் போனது.  கதிரே தனது உலகம் என்று வாழத் துவங்கினார்.

 

காற்று வீசும்.