ESK- 18

ESK- 18

ன் சுவாசம்  18

காலங்கள் கடந்தன.  ராஜனும் அழகரும் சேர்ந்து கடினமாக உழைத்து கடையை ஒரளவு விரிவு படுத்தினர்.  மேலும் புறநகர் பகுதியில் வீட்டு மனையும் வாங்கிப் போட்டனர்.  இந்த அளவுக்கு  முன்னேறும் போது கதிருக்கு வயது பதினான்கு.  ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிறுவன்.

தாயின் உதாசீனமும், பாராமுகமும்,  தந்தைக்கும் தாய்க்கும் தினமும் நிகழும் சண்டை சச்சரவுகளும், பழகிப் போன ஒன்றாயிற்று அவனுக்கு.  அவனும் தனது தாய்க்குக் கோபம் வராத வகையில், அடங்கி அமைதியாகப் போய்விடுவான்.  அவனது தேவைகளை அழகரிடமோ அல்லது தந்தையிடமோ தீர்த்துக் கொள்வான்.

தன்னுடன் பயிலும் மற்ற மாணவர்களின் தாயைப் போல தனது தாய் இல்லையே என்ற ஏக்கம் உள்ளூர இருந்தாலும்,  ஜமுனாவையும் வெறுத்ததில்லை கதிர்.  தான் வளர்ந்து பெரியவனானதும் தனது தாயின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிக் கொள்வான்.

ஆனால் இவர்கள் அனைவருமே அறியாத விஷயம் ஒன்று இருந்தது.  இவர்கள் புதிதாகக் குடியேறிய வீட்டின் அருகே இருந்த வீட்டில் குடியிருந்த மோகன் என்பவனுடன் ஜமுனாவிற்கு சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது.  பார்ப்பதற்கு நல்ல தோற்றத்துடன் ஹீரோ போல இருந்தவன், எளிதாக வசீகரித்தான் அவளை.

ஆரம்பத்தில், அவளது அழகைப் புகழ்ந்து பேசியவனின் பேச்சில் கவரப்பட்டு  சாதாரணமாகப் பேசியவள், நாளாக நாளாக அவன் மீது முறையற்ற நேசத்தை வைக்கத் தொடங்கினாள்.

“உன்னோட அழகுக்கு கொஞ்சமும் உன் புருஷன் பொருத்தமேயில்ல ஜமுனா.  நீயெல்லாம்  எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டியவ தெரியுமா?  இப்படி வாடகை வீட்டுலயும் கஷ்டத்தோடயும் இருக்குற.

உன் புருஷனுக்கும் உன் மேல கொஞ்சம் கூட ஆசையே இல்லை.  எப்பப் பார்த்தாலும் அந்த நிலக்கரி பெல்ட்டுங்க கூட மாறடிச்சிட்டு இருக்குறான்.  ஆளும் அவனும்… கரிச்சட்டிக்கு கலர் சட்டை போட்ட மாதிரி.  நீ எப்படி அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட?”

“நான் எங்க ஒத்துகிட்டேன்?  கட்டாயப் படுத்தியில்ல கல்யாணம் பண்ணி வச்சாங்க.  ம்ம்… என்ன பண்ண? என் காலமும் ஓடிப் போச்சு.”

“பைத்தியக்காரி மாதிரி பேசாத ஜமுனா… என்ன உனக்கு முப்பத்தஞ்சு வயசு இருக்குமா?  சிட்டியில எல்லாம் உன் வயசுலதான் முதல் கல்யாணமே பண்றாங்க.  உனக்கு என்ன குறைச்சல்?  இப்பவும் இளமையா அழகா இருக்க.  பதினாலு வயசு பையனுக்கு அம்மான்னு, உன்னைப் பார்த்தா யாரும் சொல்ல மாட்டாங்க.”

“அதுக்கு என்ன பண்ண முடியும்? இதுதான்  என் விதி.  என்னோட தலையில என்ன எழுதியிருக்கோ, அதுதான நடக்கும்.”

“நீ நினைச்சா உன் தலையெழுத்தை மாத்தலாம் ஜமுனா.”

“புரியலையே…”

“என்னைப் பத்தி என்ன நினைக்குற ஜமுனா?”

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நல்ல வசதியான வீட்டுப் பையன்னு நினைக்குறேன்.  நல்லா படிச்சு நல்ல உத்யோகத்துல இருக்கீங்க.  நல்லா பழகுறீங்க.  வேறென்ன…”

“நீ சொன்ன எல்லாமே சரி ஜமுனா.  எனக்கு சென்னையில பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கு.  எங்க வீடு பெரிய மாளிகைதான்.  நாங்க கோடீஸ்வரங்க.  நான் வேலைக்கே போகத் தேவையில்ல. பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கு.

ஆனா,  இதையெல்லாம் அனுபவிக்க குடும்பம் இல்ல ஜமுனா.  ஒரு விஷக் காய்ச்சல் வந்து என் மனைவி இறந்துட்டா.  அதுக்கப்புறம் எனக்கு யாருமே இல்லை. நான் ஒரு அனாதை  ஜமுனா.”

என்று குலுங்கிக் குலுங்கி  அழுதவனின் நடிப்பில் ஏமாந்து போனாள்.  பத்துத் தலைமுறைக்கு சொத்து வைத்திருப்பவன், இங்கு வந்து ஏன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறான் என்பதை யோசிக்க மறந்தாள்.

அவனை வெகுவாக சமாதானப் படுத்தியவள், அவனது வசியப் பேச்சில் அறிவை இழந்தாள்.  புருஷன், மகனை விட எவனோ ஒரு அந்நியன் அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தான்.  ஆனாலும், இந்த சமுதாயத்தைப் பற்றிய சிறு பயம் இருந்தது அவளுக்கு.  தன்னை ஊரார் தூற்றுவார்களே என்று பயந்தாள்.  அவளது தாய் தந்தையின் வளர்ப்பு அவளைத் தவறு செய்ய விடாமல் காத்தது.

அந்தக் கயவனோ, அவளைத் தன்னுடன் வந்து விடுமாறும், தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவதாகவும்,  அவளைப் பொன்னால் இழைத்து, வைரத்தால் பூட்டுவதாகவும் கூறினான்.  மாளிகை போன்ற எனது வீட்டின் மகாராணி நீயே என்று ஆசை வார்த்தை கூறினான்.

மதில் மேல் பூனை போல தவித்தபடி இருந்தாள்.  ஆசை அறிவை மழுங்கடித்து இருந்தது.  இதுவரை தனக்குக் கிடைக்காத வாழ்வை, இனித் தானே அமைத்துக் கொண்டால் என்ன?   என்று  தீவிரமாக சிந்தித்தபடி இருந்தாள்.

இந்த காலகட்டத்தில் தான், இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் தொழிலை விரிவு படுத்தலாம் என்று முடிவெடுத்து, வங்கிக் கடன் வாங்கி  சரக்குகளை வாங்கிப் போட்டனர் ராஜனும் அழகரும்.

அந்த வாரத்தில், அவர்களது  உறவினர் ஒருவர் இறந்ததாகத் தகவல் வந்ததால்,  கிளம்பி அவர்களது ஊருக்குச் சென்றார் அழகர். அன்றிரவு கடையை அடைத்து விட்டு  வந்து படுத்த ராஜனுக்கு, நள்ளிரவில் அவரது கடை தீப்பிடித்து எரிவதாகத் தகவல் வந்தது.  அலறி அடித்துச் சென்று பார்த்த போது, அவரது கடை மொத்தமும் தீக்கிரையாகி இருந்தது.

ரப்பர் பெல்ட் ஆகையால், மளமளவென்று பற்றிய தீ அனைத்தையும் எரித்து ஓய்ந்தது. புதிய சரக்குகள் பழைய சரக்குகள் அனைத்தும் நாசமாகின.

தலையில் கை வைத்து அமர்ந்து விட்ட ராஜனை யாராலும் தேற்ற முடியவில்லை.  ஊருக்குச் சென்றிருந்த அழகரும் செய்தி கேள்விப்பட்டதும்,  அடித்துப் புரண்டு ஓடி வந்தார்.  மச்சினனைக் கட்டிக் கொண்டு அழுத ராஜனைப் பார்த்து ஊரே கண்ணீர் விட்டது.

“மொத்தமா போச்சு அழகா…  என்னோட பதினைஞ்சு வருஷ உழைப்பும் போச்சே…  கடன் கொடுத்தவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன். இனி என்னால மீளவே முடியாதே…” என்று அழுதவரைத் தேற்றிய அழகர்,

“அழாதீங்க மச்சான்…  எதுவா இருந்தாலும் நாம சமாளிக்கலாம் மச்சான்.  இன்ஷூரன்ஸ் பணம் வரும். ஊர்ல இருக்கற நிலத்தை வித்துடலாம். ஜமுனா நகைங்க கொஞ்சம் இருக்கு.

இங்க இருக்கற வீட்டு மனையும் வித்துக்கலாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சா இழந்தத மீட்டுடலாம். கவலைப் படாதீங்க மச்சான்.”

ராஜனைக் கஷ்டப் பட்டு சமாதானப் படுத்திய அழகரைப் பார்த்த கதிரும்,  “அப்பா… நானும் இனிமே வேலைக்குப் போறேன் பா.  நாம மூனு பேரும் சேர்ந்து சம்பாதிச்சா சீக்கிரம் முன்னேறிடலாம்பா.” என்க.

அவனைக் கட்டிக் கொண்ட அழகரோ, “மாமாவும் அப்பாவும் இருக்கும் போது உனக்கு என்னடா ராஜா குறைச்சல்?  பணப் பிரச்சனையெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்குவோம். நீ  ஒழுங்கா படிச்சு நல்ல நிலைமைக்கு வரனும்டா.”

கதிரை வழக்கம் போல பள்ளிக்கு கிளப்பி அனுப்பி வைத்து விட்டு, ராஜனுக்கு ஆதரவாக அவருடனே இருந்தார் அழகர்.  இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில், ஜமுனாவின் அமைதி யாருடைய கவனத்தையும் கவராமல் போனது.

மைத்துனனும் மகனும் ஆறுதல் கூறிய போதும், மனைவி தனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசாமல், அமைதியாக இருப்பது  ராஜனை வருத்தினாலும்,  அவளுக்கும் கடை எரிந்து போன வருத்தம் இருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டார்.

அழகரோ கடைக்கான இன்ஷூரன்ஸ்  பணத்தைப் பெறுவதிலும்.  வங்கிக் கடன் சம்பந்தமாகவும் அலைந்து கொண்டிருந்தார்.  ஒரு வாரம் சென்றது.  ராஜனும்  அழகரும் கதிரும் சற்று இயல்புக்கு வந்திருந்தனர்.  எப்படியும் மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை ராஜனுக்கு வந்திருந்தது.

“ஜமுனா… நாளைக்கு உன்னோட நகையெல்லாம் குடும்மா.  அதை வித்து பேங்க் கடனை பாதி அடைச்சிடலாம்.”

“அழகா… நீயும் நாளைக்கு  விடியற் காலையிலயே ஊருக்குப் போய் நிலத்தை விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வா.”

“சரிங்க மச்சான்.”

“நானும் இங்க வீட்டு மனையை விக்க ஏற்பாடு பண்ணிட்டேன். அது விஷயமா புரோக்கர்  நாளைக்கு வரச் சொல்லியிருக்காரு.  அங்க போகனும் நான்.”

மெதுவாக ராஜனின் அருகே வந்த ஜமுனா, “இதையெல்லாம் விக்காம சமாளிக்க முடியாதா?”

“இல்லம்மா… எல்லாத்தையும் வித்தாலும் கொஞ்சம் பத்தாதுதான்மா.  ஆனா…  அதுக்கப்புறம் பெல்ட்டு கடை ஒன்னுத்துல, எனக்கும் அழகருக்கும் வேலைக்கு சொல்லி வச்சிருக்கேன். எப்படியும்  சமாளிச்சிடலாம்மா.  கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம்  முன்னேறிடலாம்.”

என்ற ராஜனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள், எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள்.  அவளது சிரிப்பின் அர்த்தம் அந்த நேரம் யாருக்கும் புரியாமல் போனது.

மறுநாள் காலையில் அழகர் ஊருக்குக் கிளம்பிவிட,  கதிரும் பள்ளிக்குச் சென்று விட,  ராஜன் புரோக்கரைப் பார்க்கப் போனார்.

அனைவரும் சென்றதும்,

‘ராஜனுக்கு,

எனக்கான சரியான வாழ்க்கையைத் தேடிப் போகிறேன்.  நீங்கள் எனக்கு சரியான துணை கிடையாது என்பது தெரிந்தாலும், ஒரு கட்டாயத்தின் பேரில் இத்தனை வருடங்கள் உங்களுடன்  வாழ்ந்து விட்டேன்.

இனியும் இப்படி ஒரு போலி வாழ்க்கை வாழ எனக்கு விருப்பம் இல்லை. என் மனதுக்குப் பிடித்த மோகனுடன் செல்கிறேன்.  என்னைத் தேடி வர வேண்டாம்.’  என்று ஒரு கடிதத்தை எழுதியவள்,  அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு மோகனுடன் சென்று விட்டாள்.

அன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டிற்கு வந்த கதிர், வீடு பூட்டியிருப்பதைக் கண்டான்.  அவனுக்கு இது வழக்கம்தான் என்பதால் அமைதியாக வாசலில் அமர்ந்து கொண்டான்.

சில நேரங்களில் ஜமுனா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருப்பாள்.  சில சமயங்களில் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே தூங்கிக் கொண்டிருப்பாள்.  எழுப்பினால் திட்டுவாள்  என்பதால்  அவளாகத் திறக்கும் வரை, அமைதியாக வாசலில் அமர்ந்து இருப்பான்.

அன்றும் அது போல அமர்ந்து வீட்டுப் பாடங்களைச் செய்து கொண்டிருந்தவனின் காதுகளில்,  மேஜையை நகர்த்துவது போல சத்தம் கேட்கவும்,  “அம்மா…” என்று மெதுவாக குரல் கொடுத்தான்.

பதில் வராததால்  எழுந்து சென்று, வீட்டின் பக்கவாட்டில்  படுக்கையறை ஜன்னல் வழியாக, அம்மாவை எழுப்பலாம்  என்று  பார்த்தவன் கண்டது,  மேஜையின் மேல் தலை சாய்த்துப் படுத்திருந்த தந்தையும், அவர் அருகில் இருந்த மது பாட்டில்களும்தான்.

குடிப் பழக்கமே இல்லாத தனது தந்தையின் இன்றைய நிலையைக் கண்டு அதிர்ந்து போனவன்,  “அப்பா…” என்று அழைக்க,  அவனை நிமிர்ந்து பார்த்த ராஜனோ வேதனை மிகுந்த விரக்திச் சிரிப்பு ஒன்றை சிந்தினார்.

வீட்டின் விட்டத்தில் இருந்த ஃபேனில் தூக்குக் கயிறு ஒன்றும்  தொங்கிக் கொண்டு இருந்தது.  அதைக் கண்டு மேலும் அதிர்ந்து போன கதிர்,

“அப்பா… என்னப்பா பண்றீங்க?  கதவைத் திறங்க. அம்மா எங்க?  அம்மா… அம்மா…”

கதிரின் அழைப்பைக் கேட்டு உரத்துச் சிரித்த ராஜன், “அம்மாவா… அவ எங்கடா இங்க இருக்கா?  ஒரு நாளாவது உனக்கு அம்மாவா நடந்திருக்காளா?  இன்னைக்கு மொத்தமா போயிட்டா.”

“அப்பா… என்னப்பா உளர்றீங்க?  முதல்ல கதவைத் திறங்க.”

“கதிரு… நானெல்லாம் வாழவேத் தகுதியில்லாதவன்டா.  என்னோட வாழ்க்கையில ரொம்பக் கேவலமா, அசிங்கமா தோத்துப் போனவன்டா.  நான் இந்த பூமியில இன்னும் இருக்கறதே அசிங்கம். அவமானத்தோட என்னால வாழ முடியாது கதிரு.  நான் என்னோட வாழ்க்கைய முடிச்சிக்கப் போறேன்.”

வாய் குழறி கண்களில் நீர் மல்க பேசிய தகப்பனைப் பார்த்தவனின் விழிகளில் கண்ணீர் பெருகியது.

“அப்பா… என்னாச்சுப்பா?  ப்ளீஸ் கதவைத் திறங்க. எனக்கு பயமா இருக்கு. அம்மா எங்கப்பா?”

“உங்க அம்மா நம்மையெல்லாம் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போயிட்டாடா.  இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்தது போலின்னு சொல்லிட்டா… என்னைவிட, உன்னைவிட  எவனோ ஒருத்தன் தான் முக்கியம்னு எழுதி வச்சிட்டுப் போயிட்டா.”

அதிர்ந்து போய் சிலையாக நின்றவனின் அருகே தட்டுத்தடுமாறி எழுந்து வந்தவர்,  ஜன்னலின் ஊடே கை விட்டு கதிரின் முகத்தைத் தொட்டுப் பார்த்தார். “உன்னை விட்டுப் போக மனசில்ல கதிரு.  அதான்,  இதுவரைக்கும் குடிக்காத இந்தக் கருமத்தைக் குடிச்சேன்.

நான் அவ மேல வச்ச பாசம் நிஜம் கதிரு.  அவ கையாலயே என்னைக் கொன்னுட்டுப் போயிருக்கலாம்.  நாளைக்கு ஊரே கேட்குமே என்னை,  நீ ஒரு ஆம்பளையாடான்னு?  நான் உயிரோட இருக்கவேக் கூடாது. “

தனது கையைப் பிடித்துக் கொண்டு தன் போக்கில் புலம்பும் தந்தையைப் பார்த்தவன், “அப்பா…  ப்ளீஸ் கதவைத் திறங்க. எனக்கு நீங்களாவது வேணும்.  இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க. எனக்கு பயமா இருக்கு” என்று கதற,

“உன்னைப் பார்க்கனும்னு ஆசைப்பட்டேன்… பார்த்துட்டேன்.  இனி உயிர் வாழல்லாம் ஆசை இல்லை கதிரு.  இந்த அப்பாவ மன்னிச்சிடுடா.” என்றவர்  ஜன்னல் கதவை மூடிக் கொண்டார்.  ஜன்னலின்  வெளியே  கதிர் கதறிய கதறல்கள் பலனளிக்கவில்லை.

கதிரின் அழுகுரல் ஓசையைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தது, ராஜனின் உயிரற்ற உடலைத்தான்.  அருகே அவரது மனைவி எழுதிய கடிதமும்.

வெறி பிடித்தவன் போல தந்தையை உலுக்கிய கதிரை, யாராலும் அடக்க முடியவில்லை.

“அப்பா…  என்னை விட்டுட்டு ஏன் போனீங்க?  என் கண்ணு முன்னாடியே இருந்தும் உங்களைக் காப்பாத்த முடியாமப் போச்சே… உங்களோட இந்த நிலைமைக்கு காரணமானவங்களை நான் சும்மா விடமாட்டேன்.”

என்று  தன்னிலை  இழந்து கத்திக் கதறியவன் , யாருக்கும் அடங்காமல் திமிறிக் கொண்டு, அரிவாளை  எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவன் போல ரோட்டில் ஓடினான்.

அவனை யாராலும் கட்டுப் படுத்த முடியாமல் போனது. ஒவ்வொரு பேருந்தாக ஏறித்  தனது தாயைத் தேடியவன், வெறி பிடித்த சிங்கம் போலத் தோன்றினான்.  அவனது தோற்றமும் கையில் இருந்த அரிவாளும், பார்ப்பவர் அனைவரையும் பயமுறுத்தியது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவனை மடக்கிப் பிடிக்க முயல்கையில் அவர்களையும் தாக்கினான்.  ஒரு வழியாக மிகவும் கஷ்டப்பட்டு,  அவனது கையில் இருந்த அறிவாளைப் பிடுங்கியவர்கள்,  அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிலம் விற்பது தொடர்பாக ஊருக்குச் சென்றிருந்த அழகர், மாலை திரும்பி வந்தபோது கண்டது உயிரற்ற ராஜனையும்,  தனது சகோதரி எழுதி வைத்த கடிதத்தையும், சிறையில்  அநாதரவாக  இருந்த கதிரையும் தான்.

சகோதரி செய்து வைத்துவிட்டுப் போன  காரியத்தை எண்ணி வருத்தப்படுவதா?  அவமானம் தாங்காமல் தன் உயிரையே போக்கிக் கொண்ட ராஜனை நினைத்து அழுவதா?  இந்த சிறு வயதிலேயே பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்து உள்ளம் பாதித்து வெறி பிடித்தவன் போல சிறையில் இருக்கும் கதிரை நினைத்து கண்ணீர் விடுவதா? ஒன்றும் புரியவில்லை அழகருக்கு.

ராஜனுக்கான இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து விட்டு, ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு கதிரைப் பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் அழகர்.

 

காற்று வீசும்.

 

error: Content is protected !!