KS 6

KS 6

காதல் சன்யாசி 6

தெளிவான முகம், ஊடுருவும் பார்வை, கம்பீரமான தோற்றம், சோஃபாவில் சாய்வாய் அமர்ந்திருந்தாலும், ஏதோ சிங்கம் போல திடமாய் காட்சியளித்தார் அவர்.

ராமச்சந்திரனின் கைகள் தோய்திருந்தன, பேச்சில் சிறிதாய் குழற்வு தெரிந்தது. அதை தவிர, அவரை பார்த்த மாத்திரத்தில் நோயாளி என்று கூறி விட முடியாது.

தயக்கம் முழுதும் விலகாதவனாய் ராகுல் கிருஷ்ணன் அவர் முன்பு உட்கார்ந்தான்.

நிவேதாவும் சின்ன கலவரத்துடன் தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள்.

நாகரீக, ஆடம்பர தோற்றமாய், பார்வையில் ஏளனத்துடன் இறுகிய முகமாய் நிவேதாவின் அன்னை சாருமதி மகளை அடுத்து அமர்ந்திருந்தார்.

அந்த இடத்தில் நிலவியிருந்த விசித்திர அமைதி ராகுலுக்கு மிகவும் சங்கடமாய் தோன்றியது. எனவே, அவனே முதலில் பேச தொடங்கினான்.

“எனக்கு நிவேதாவ ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க உயிருக்கு உயிரா நேசிக்கிறோம். வாழ்க்கை முழுக்க ஒண்ணா இணைஞ்சு வாழணும்னு ஆசபடுறோம். அதுக்கு உங்களோட சம்மதமும்…” ராகுல் கிட்ட தட்ட தைரியமாய் பேச,

“என் பொண்ண காதலிக்கிறேன்னு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு?” சாருமதியின் ஆவேசமான குரல், அவன் வார்த்தைகளின் குறுக்கே தடைப் போட்டது.

ராகுலின் பார்வை சாருமதியின் பக்கம் திரும்பியது. அவரின் ஆவேசத்தில் அவன் அசைந்தானில்லை.

“உங்களோட ஆடம்பரமும் பணக்கார தனமும் தான் நீங்க குறிப்பிட்ட தகுதின்னா, அந்த தகுதி நிச்சயமா என்கிட்ட இல்ல மேடம்” அவன் பதில் தெளிவாய் நிமிர்வாய் வந்தது.

“எவ்வளவு திமிரா பேசுறான் பார்த்தீங்களா ராம்? இதெல்லாம் நிவி கொடுத்த இடம் தான்” சாருமதி ஆத்திரம் குறையாமல் கணவனிடம் முறையிட்டாள்.

அதுவரை அமைதியாக அவனை கவனித்து கொண்டிருந்தவர், ஒரு கையசைப்பில் மனைவியை அமைதியாக்கினார்.

“நீங்க சொல்ற எல்லாம் சரிதான் ராகுல் கிருஷ்ணன். ஆனா, எதையும் நாம நடைமுறைக்கு தகுந்த மாதிரி யோசிக்கணும்” என்றவர்,

“நிவேதா ஆசைபடற காதலனா நீங்க இருக்கலாம். ஆனா, அவளோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ற கணவனா உங்களால இருக்க முடியாது”

“அதேபோல தான், நீங்க ஆசைபடற காதலியா நிவேதா இருக்கலாம். நீங்க எதிர்பார்க்கிற மனைவியா, நிச்சயமா நிவேதாவால இருக்க முடியாது” ராமச்சந்திரன் அவர்களுக்கு நிதானமாக உண்மை நிலையை புரிய வைக்க எத்தனித்தார்.

ராகுலும் நிவேதாவும் தயக்கமான பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் அவர், “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழ ரெண்டு வழி தான் இருக்கு. நிவேதா இந்த ஆடம்பர வாழ்க்கைய முழுசா உதறிட்டு,
ஒரு சாதாரண பொண்ணா உங்க வீட்ல வாழ வேண்டி வரும். அது சுலபமான காரியமல்ல. இவளை நம்பி நாங்க மட்டுமில்ல, எங்க கம்பெனி பொறுப்பு இருக்கு. ஆயிர கணக்கான தொழிலாளிகள் இருக்காங்க. அதனால…”

“…?”

“உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லன்னா நீங்க எங்க வீட்டு மருமகனா…” சொல்லிக்கொண்டு போனவர், ராகுலின் முகம் கடுமையாவதை கவனித்து பேச்சை நிறுத்தி விட்டார்.

“ராகுல், உங்க தன்மானத்தை நான் சீண்ட விரும்பல. இருக்கிற உண்மைய தான் சொல்றேன்” என்று ராமச்சந்திரன் சமாதானமாக பேச,

“நீங்க சொன்ன காரணங்களுக்காக எங்களோட காதலை நாங்க இழக்க விரும்பல சர். ஆனா, எந்த காரணத்துக்காகவும் என்னோட சுய கௌரவத்தை என்னால விட முடியாது” ராகுலும் நிதானமாக அழுத்தமாக சொன்னான்.

“நிவிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அதனால, ஒரு சாதாரண மனைவியா, என் வீட்டுக்குள்ள அடஞ்சி கிடக்கணும்னு நான் எப்பவுமே நினைக்க மாட்டேன்”

“என்னை பத்தி எல்லா தெரிஞ்சி தான் நிவியும் என்னை நேசிக்கிறா, எங்க கல்யாணத்துக்கு அப்புறமும் நிவேதா உங்க கம்பெனி எம்டியா இருக்கிறதுல என் தரப்புல இருந்து எந்த தடையும் நேராது. ஆனா, என் மனைவியா, என்கூட, என் வீட்ல தான் நிவி இருக்கணும்” ராகுல் அழுத்தம் திருத்தமாக சொல்ல,

“எஸ் டேட், நாங்க இதை பத்தி முன்னமே பேசி முடிவெடுத்து இருக்கோம்” என்று நிவேதாவும் ஆமோதித்து பதில் தந்தாள்.

ராமச்சந்திரனின் புருவங்கள் உயர, “ம்ம் பரவால்ல, உங்களோட எதிர்கால திட்டம் அத்தனை மோசமானதா இல்ல. உங்க ரெண்டு பேரோட வெளிப்படையான எண்ணத்தை நான் நிச்சயமா பாராட்டி ஆகணும். ஆனா?”

“உங்களால எந்த சூழ்நிலையிலும் இதே மனநிலையோட ரெண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ முடியும்னு நினக்கிறிங்களா?” என்று சந்தேகமாய் இழுத்தார் அவர்.

“நிச்சயமா சர்!”

“கண்டிப்பா டேட்!”

இருவரும் ஒரே நேரத்தில் ஒரே குரலாய் உறுதியாக கூறினர்.

“நிவிம்மா, நீ இன்னொரு முறை யோசிக்கிறது நல்லதுன்னு எனக்கு படுது” ராமச்சந்திரன் மகளிடம் கேட்க,

“எத்தனை முறை யோசிச்சாலும் எனக்கு கிருஷ் வேணும் டாட், எங்களால எல்லாத்தையும் சமாளிக்க முடியும் நம்புங்க டாட்” நிவேதா தீர்க்கமாய் சொல்ல, கிருஷ்ணாவும் தங்கள் காதலில் உறுதியோடு இருந்தான்.

சற்று நேரம் யோசித்தவர், அவர்கள் காதலை விரிந்த புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். ராகுலிடம் ஏதோவொன்று அவரை கவர்ந்தது.

“என்ன விளையாட்டா போச்சா ராம் உங்களுக்கு? நம்ம குடும்பத்தோட அந்தஸ்து, மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த கல்யாணத்துக்கு என்னால சம்மதிக்க முடியாது” சாருமதி பொறுமை இழந்து திட்டவட்டமாக மறுத்து சொன்னார்.

நிவேதா தன் அம்மாவின் தோள் பற்றி, “மாம், நான் ஆசபடற எல்லாமே எனக்கு கிடைக்கும்னு சொல்லுவிங்க இல்ல. எனக்கு ராகுல் வேணும் மாம். அவனை நான் அவ்வளோ நேசிச்சு தொலைச்சிட்டேன். எனக்காக சம்மதம் சொல்லுங்க. ப்ளீஸ் மாம்” என்று அவள் கண்கள் சுருக்கி கெஞ்சினாள்.

“சாரு வசதி, வாய்ப்ப வச்சு மனுசங்கள எடை போடாதன்னு, உனக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன்.”

“ராகுலுக்கு என்ன குறைச்சல்? நீ தேடி அலைஞ்சாலும் இப்படி பர்ஃபெக்டான மேட்ச் நம்ம நிவிக்கு கிடக்க மாட்டான்? உன் வரட்டு பிடிவாதத்தை விட்டுட்டு சம்மதம் சொல்லு” என்று ராமச்சந்திரனும் தன் மனைவிக்கு எடுத்து சொன்னார்.

சாருமதி வேறு வழியின்றி, கணவனையும் மகளையும் எதிர்க்க முடியாமல் ராகுலை வெறித்தார்.

“சரி, உங்க இஷ்டம்” என்று அரை மனதாக ஒத்துக் கொண்டாள்.

நிவேதா சந்தோசத்தில் சாருமதியை கட்டி அணைத்து கொள்ள, ராகுல் மகிழ்ச்சியில் வானைத் தொட்டு மீண்டான்.

தன் அம்மாவிடம், தன் காதலை சொல்லி எப்படி சம்மதம் வாங்குவதென தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் யோசனையின் முடிவில் தமிழ்ச்செல்வியிடம் வந்து நின்றான்.

நிறைவாய் சாமி தரிசனம் முடித்து கோயில் பிராகாரத்தில் வந்தமர்ந்த தமிழ்ச்செல்வி, அங்கே தீவிர யோசனையோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்த ராகுலைக் கவனித்தவள், பொறுமை இழந்து, “ஏன் டா, உன்னால உருப்படியா ஓரிடத்தில நிக்க கூட முடியாதா?” என்று கடிந்தாள்.

ராகுல் அசட்டு புன்னகையுடன் அவள் எதிர் வந்து, “தமிழ், எனக்கு உன் ஹெல்ப் வேணுமே” என்று அவசரமாய் கேட்டான்.

“செஞ்சுட்டா போச்சு? என்ன செய்யணும்?”

“உனக்கு தெரியும் இல்ல, எங்க காதலுக்கு நிவேதா வீட்ல பச்ச கொடி காட்டியாச்சு. இப்ப, அம்மாகிட்ட தான் சம்மதம் வாங்கணும்” என்று இழுத்தான்.

“அவ்வளவு தான, போய் அம்மாகிட்ட பேசு டா”

“அதேதான் நீ எனக்காக அம்மாகிட்ட போய் பேசறியா, தமிழ்?” அவன் சட்டென கேட்க,

தமிழ் செல்வி, “நான் எப்படி டா?” என்றாள் ஒருவித தயக்கத்துடன்.

“அம்மாவுக்கு தான் உன்னை நல்லா தெரியுமே. நிவேதா பத்தி நீ எடுத்து சொன்னா அம்மா நிச்சயமா புரிஞ்சிக்குவாங்க. ப்ளீஸ் தமிழ்” அவளிடம் கெஞ்சி கேட்டான்.

அவளுக்குள் ஏதோ நெருடல் தோன்ற, “என்னால முடியாது ராகுல்” அவள் மறுத்து விட்டாள்.

“என்ன நீ இப்படி சொல்லிட்ட? எனக்காக இந்த சின்ன உதவி கூட செய்ய கூடாதா?” தான் கேட்டு தமிழ் மறுப்பாளென்று அவன் நினைக்கவே இல்லை.

“இது தவிர நீ வேறென்ன உதவி கேட்டாலும் செய்றேன்” தமிழ் சங்கடமாய் மேலும் சொல்ல,

“இது சின்ன விசயம் தான தமிழ்?” அவள் மறுப்பிற்கான காரணம் புரியாமல் மேலும் கேட்டான்.

“நானும் அதை தான் சொல்றேன். இது சின்ன விசயம். நீ எடுத்து சொன்னா அம்மா கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க” அவளும் பிடி கொடுக்காமல் பேசினாள்.

ராகுல் சற்று நிதானித்து, “நான் சொல்லி அம்மா மறுத்துட்டாங்கன்னா, அவங்கள வற்புறுத்தியோ, எதிர்த்தோ பேசற தைரியம் எனக்கு இல்ல தமிழ், அதான் உன்ன பேச சொல்றேன். இங்க, எனக்கு உன்னவிட்டா வேற யாரு இருக்கா?” அவன் உருக்கமாக பேசினான்.

“இது உன்னோட தனிப்பட்ட விசயம் ராகுல்! உன் குடும்ப விசயம்! தயவு செஞ்சு என்னை இதுல இழுக்காத” தமிழ் வேகவேகமாக மறுத்து சொல்ல ராகுலின் முகம் இறுகியது.

“நீ என் ஃப்ரண்ட்னு நினச்சு உதவி கேட்டேன். நீ யாரோ, நான் யாரோன்னு சொல்லிட்ட இல்ல?”

“இல்ல டா, நான் வந்து…”

“உனக்குன்னு ஒரு லைஃப் வந்ததுக்கு அப்புறம், பழைய ஃபிரண்டிஷிப் எல்லாம் தூக்கி போட்டாச்சு இல்ல. இதான பொண்ணுங்க சைக்காலஜி! இதுல நீ மட்டும் விதிவிலக்கா என்ன?”

ராகுல் அவளிடம் கடுமையாக பேசிவிட்டு கோபமாக அங்கிருந்து சென்று விட்டான்.

தமிழ்ச்செல்வி அவன் போவதை பார்த்து கொண்டு அமைதியாய் நின்றிருந்தாள்.

தனக்கு நேர்ந்த நிலையை அவனிடம் தான் சொல்லாமல் விட்டது தவறென்று தோன்றியது அவளுக்கு.

# # #

வெட்டவெளி உணவகத்தில், ஒரு பெரிய வண்ண குடையின் கீழ் அமைக்கப்பட்ட இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் மேசையில் ஆவி பறக்கும் தேநீர் காத்து கிடந்தது.

தான் அருகில் இருந்தும் வேறேதோ யோசனையில் உழன்று காணப்பட்டவனை கவனித்த நிவேதா,

“நீ சுத்த வேஸ்ட் கிருஷ்” என்று குரலில் சலிப்பு காட்ட, அவன் என்ன என்பது போல் அவள் முகம் பார்த்தான்.

“நீ இவ்வளோ சைவமா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல”

நிவேதா மேலும் அசட்டையாக சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல், “இல்ல நிவி, நான் அசைவமும் சாப்பிடுவேன்” என்று ராகுல் பதில் தர, அவள் வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“அச்சோ, நான் உன் சாப்பாட்ட சொல்லல டா, உன் காதலை பத்தி தான் சொன்னேன்” என்று சொல்லி விட்டு மேலும் சிரித்தாள் அவள்.

ராகுல் அப்போதும் புரியாமல், ‘சைவ… காதலா?’ என்று யோசிக்க,

அந்த காதல்காரனுக்கு இப்போது தான் அர்த்தம் விளங்க, அவன் தோரணை மாறியது.

அவன் புருவங்கள் உயர்ந்து, அவன் இதழ் மென்மையாய் விரிய அவளை நெருங்கினான்.

அவள் கன்னக் குழியில் தன் இதழ் தடத்தை அழுத்தமாய் பதித்து மீண்டான் அவன்.

மேலும் அவன் காந்த பார்வை அவள் விழிகளை சிறைபிடிக்க முயல, உணர்ச்சி பெருக்கை தாங்க இயலாது அவள் விலகி எழுந்து நடந்தாள். ராகுலும் அவளோடு இணைந்து கைகோர்த்து கொண்டான்.

சைவ காதல் தந்தாய்!
ஏன் அசைவம் இல்லை என்றேன்!
நீ அசைவ காதல் தந்தாய்!
நான் சைவம் போதும் என்றேன்!

போகிற போக்கில் அவள் இதயத்தில் கள்ள கிறுக்கல்கள் வந்து மறைந்தன.

பனி சுமந்த பச்சை புல்தரையில், நான்கு கால்களும் ஒரே தாளத்துடன் மெல்ல நடை பயின்றன.

அவர்களிடையே நிலவிய அசாத்திய அமைதி, இருவரின் தனிப்பட்ட உள்ள உணர்ச்சிகளை வேறு எவரும் அறியாமல் பரிமாறிக் கொள்வதாய்.

ஏனோ, இந்த பரந்த பூமியில் அவர்கள் இருவர் மட்டும் தனித்து நடைப் போடுவதாய் உணர்ந்தனர்.

“கிருஷ்”

“ம்ம்”

“உன் அம்மாகிட்ட பேசினியா? என்ன சொன்னாங்க?”

நிவேதா ஆர்வமாக கேட்க, ராகுல் உதட்டை மடித்து இல்லை என்று தலையசைத்தான்.

“எப்போ பேச போற?”

“சீக்கிரமே பேசணும், அம்மா என்ன சொல்லுவாங்களோன்னு தயக்கமா இருக்கு நிவி”

“அப்ப உன் அம்மாகிட்ட நான் வந்து பேசவா?” நிவேதா சட்டென கேட்க,

“ரொம்ப தான் வேகமா இருக்க, அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூடாதென்று தலையசைத்தான்.

“நீயும் பேச மாட்ட, நானும் பேச கூடாது. அப்ப, நமக்காக யார் தான் பேசுவா?” நிவேதா அவனை குடைய தொடங்கினாள்.

“அதான், நமக்காக தமிழை அம்மாகிட்ட பேச சொல்லி கேட்டேன். ஆனா, அவ இந்த சின்ன உதவி கூட செய்ய மறுத்துட்டா. அவளை நினச்சாலே அப்படியே கோப கோபமா பத்திகிட்டு வருது.”

ராகுல் ஆத்திரமாக பேச, நிவேதாவின் முகம் மாறி போனது.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா கிருஷ்? நம்ம கல்யாண விசயத்தை தமிழ்ச்செல்வி எப்படி போய் பேசுவாங்க?” நிவேதா அவன் தலையை தட்டி கேட்க,

“ஏன்? தமிழ் பேசுனா தான் என்னவாம்?” ராகுல் சாதாரணமாக பதில் கேள்வி கேட்டான்.

“ப்ச் அவங்களே கணவனை இழந்துட்டு இருக்காங்க, அவங்க எப்படி சுப காரியத்துக்கு எல்லாம் முன்ன நிப்பாங்கன்னு யோசிக்க மாட்டியா நீ?” நிவேதா சொல்ல, ராகுல் அதிர்ந்து போனான்.

“என்ன உளர்ற நீ?” ராகுல் நம்ப முடியாதவனாய் அவளிடம் சீறினான்.

நிவேதா அவன் வெளிறிய முகத்தை கவனித்து, “முன்னமே உனக்கு தெரியும்னு நான் நினைச்சேன்! உனக்கு தெரியாதா?” என்றாள்.

அவன் தயக்கத்துடன் இல்லை என்று தலையசைக்க,

“தமிழ்ச்செல்வி எங்க கம்பனியில வேலைக்கு சேரத்துக்கு முன்னாடியே அவங்க கணவர் இறந்திட்டதா சொன்னாங்க. பாவம், இந்த சின்ன வயசுல…”

நிவேதா வருத்தமாக சொல்வதை மேலும் கேட்க முடியாதவனாய், “இப்ப, நீ சொன்னதெல்லாம் பொய் தான நிவி?” ராகுல் கலக்கமாக கேட்க, நிவேதா பேச்சிழந்து ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

தன் தோழியின் வாழ்வில் என்ன நேர்ந்தது என்பதை கூட அறிந்து கொள்ளாமல், விட்டத்தியாக திரிந்த தன் போக்கை எண்ணி இவன் மனம் குன்றி போனது.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!