KS 7

காதல் சன்யாசி 7

கதவை திறந்த தமிழ்ச்செல்வி வாசலில் நின்ற ராகுல் கிருஷ்ணனைப் பார்த்து திகைத்தாள்.

“ராகுல்…! என்ன திடீர்னு வந்திருக்க? உள்ள வா” என்று புன்னகையுடன் வரவேற்றாள்.

“ஏன் நான் வரக்கூடாதா?” வரண்ட குரலில் அவன் கேட்க, தமிழ் அவன் முகத்தை கவனித்தாள்.

வாடிய முகமும், சோர்ந்த கண்களுமாய் ஏதோ கலக்கமுடன் காணப்பட்டான் அவன்.

“என்னாச்சு டா, ஏதாவது பிரச்சனையா?” என்று வினவ, அவன் அமைதியாக உள்ளே வந்தான்.

“சரி, நீ முதல்ல உட்காரு. நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றவள் சமையலறை நோக்கி செல்ல,

ராகுலின் பார்வை அந்த வீட்டை நிதானமாக சுற்றியது. அந்த குட்டி வீடு நன்றாகவே இருந்தது. ஆனால், வெறுமை நிறைந்திருந்தது.

அவள் தன் மனக் கதவுகளைப் போல, அங்கிருந்த சன்னல்களை எல்லாம் அடைத்து வைத்து இருந்தாள்.

இந்த பகல் வேளையிலும், இருளின் கருமை எங்கோ தட்டுபடத்தான் செய்தது.

பூசை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கபட்ட விளக்கு ஒன்று இப்போதும் வெகு சாந்தமாய், எவ்வித சலனமும் இன்றி எரிந்து கொண்டிருந்தது. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் அவள் நாட்களை போல,

ஆவிபரக்க சூடான தேநீர் கலந்து எடுத்து வந்தவள், கூடத்தில் ராகுலை காணாமல் தேடி நின்றாள்.

பூஜை அறையில், மாலை அணிவித்து மாட்டி வைக்கப்பட்டிருந்த சேகரின் உருவ படத்தை பார்த்தபடி ராகுல் கிருஷ்ணன் நின்றிருந்தான்.

அங்கு அவனை பார்த்து துணுக்குற்று, இவள் தயங்கி நின்றாள்.

“என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?” அவன் மீளாத அதிர்ச்சியுடன், அந்த நிழற்படத்தை வெறித்தபடி கேட்க,

இவளிடம் பதிலின்றி சங்கடமாக தலைக் கவிழ்ந்தாள்.

அவளிடம் திரும்பியவன், “நான் கேள்விப்பட்டது எதுவுமே உண்மையா இருக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, இங்க…” அவன் வார்த்தைகள் ஆற்றாமையைச் சுமந்து வந்தன.

“உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நான் நினைக்கல. நீ ஆர்வமா சேகரை பத்தி விசாரிச்சப்போ என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல” உலர்ந்த அவள் விழிகளை உயர்த்தி சொன்னாள்.

“எப்படி… நடந்தது? என்னாச்சு சேகருக்கு?” அவன் கனத்த மனதோடு கேட்க,

“விபத்து, பைக்ல லாரி மோதி…” துன்பம் அவள் நெஞ்சை அழுத்த, வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கின.

“எப்போ?” ராகுல் பதற்றமாய் கேட்டான்.

“ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு மேல” தமிழ்ச்செல்வி கலக்கமாக சொல்ல, ராகுல் தன் நெற்றியை அழுத்தப் பற்றி கொண்டான்.

“உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு கூட எனக்கு தெரியல. கேள்விப்பட்ட என்னாலயே தாங்க முடியல. எல்லாத்தையும் தாங்கிட்டு நீ எப்படி தமிழ்?” தன் தோழியின் நிலையை எண்ணி அவன் முழுவதுமாக உடைந்து போனான்.

“பழகி போச்சு டா. கண்ணீரால இங்க எதையும் மாத்த முடியாதுன்ற உண்மையை தெரிஞ்சிக்கிட்டேன்” அவள் பதில் விரக்தியில் தோய்ந்த திடமான சொற்களாய் வந்தன.

“உன்ன இப்படி பார்க்கும் போது எனக்கு கடவுள் மேல இருந்த நம்பிக்கையே போச்சு டி” என்று அவன் கசப்பாய் சொல்ல,

“எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு கடவுளை ஏன் குத்தம் சொல்ற? என் விதி இதுதான். என் வாழ்க்கை இவ்வளவு தான்னு நான் புரிஞ்சிகிட்டேன்” தமிழ் வெறுமையாய் சொல்லி முடித்தாள்.

“உன் வாழ்க்கையில இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு, எங்க யார்கிட்டேயும் சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல?” ராகுல் கசப்பாகவே கேட்டு விட்டான்.

அவள் நிலை கண்டு அவனுக்கு அனுதாபம் தோன்றினாலும், தன் கோபமும் நியாமானதாகவே தோன்றியது.

வழக்கம் போல அவளிடம் இந்த கேள்விக்கு பதிலில்லை மௌனமாய் நின்றாள்.

ராகுல் மேலும் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான். தன் உற்ற தோழியின் வாழ்க்கை நிலை எண்ணி மனம் பாரமானவனாய்.

அந்த இடம் மறுபடியும் நிசப்தமானது.

தமிழ்ச்செல்வி துன்ப பெருமூச்சோடு நிமிர, சேகர் நிழற்படத்தில் சிரித்து கொண்டிருந்தான்.

# # #

தேய்பிறை நிலவு, பாதி உடைந்த முகத்துடன் இரவு வானில் தவழ்ந்து கொண்டிருந்தது.

பார்க்க கொஞ்சம் பாவமாகவும், புரிந்து கொள்ள வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது அந்த தேய்பிறை நிலவு!

அந்த பாடத்தை கற்க முயன்றவனாய், தன் வீட்டு மொட்டை மாடியில் சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகுல் கிருஷ்ணன்.

அவன் சிந்தனையைக் கலைப்பதாக கைப்பேசி சிணுங்கி அழைத்தது.
எடுத்து பார்க்க, ‘கிருஷ் ஆர் யூ ஓகே?’
நிவேதாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, சின்ன இதழ் விரிப்புடன், ‘ம்ம்’ பதில் தட்டினான்.

‘ஃபிரண்ட் லைஃப் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சிக்காம இருந்துட்டு, இப்ப ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி ஷோ காட்ற நீ?’ அதட்டலாக அடுத்த செய்தி வந்தது.

‘தமிழ் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க ஃப்ரண்ஸ் யாரையும் காண்டாக்ட் பண்ணவே இல்ல. நாங்களும் படிப்பு, வேலைன்னு இருந்துட்டோம். எப்பவாவது எல்லா பிரண்ட்ஸும் சேர்ந்து இருக்கும் போது தமிழை மிஸ் பண்ணுவோம் அவ்ளோ தான்’.

‘இங்க தமிழை நான் பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டேன். அவளோட வாழ்கை சந்தோசமா இருக்குனு தான் நான் நினச்சு இருந்தேன். ஆனா…?’ பொறுமையாக விளக்க,

‘இப்ப என்ன? தமிழ்ச்செல்வி வாழ்க்கை போச்சுன்னு அழுதுட்டா இருக்காங்க, தன்னம்பிக்கையோட, சொந்த கால்ல சுயமா நிக்கிறாங்க, அதை நினைச்சு நீ பெருமைபடணும்’.

‘ம்ம்’ என்று அலைப்பேசியை அணைத்து வைத்தான்.

நிவேதா சொல்வதும் சரியெனவே பட்டது அவனுக்கு. எனினும் தங்கள் தோழியின் நிலை அவனை கவலை கொள்ளவே செய்திருந்தது.

இவன் தமிழைப் பற்றிய விவரம் சொன்னவுடன் நண்பர்கள் அனைவரும் பேச்சிழந்து அதிர்ந்து தான் போயினர் இவனை போலவே,

தமிழை உடனே காண வேண்டும் என அவர்களின் அங்கலாய்ப்பை இவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதற்கிடையே தன் அம்மாவிடம் நிவேதா பற்றி சொல்ல, இன்னும் காலம் தாழ்த்தலாகாது என்பதையும் உணர்ந்து இருந்தான்.

பார்வதி மகனின் கேசத்தை மென்மையாய் வருடி கொடுக்க, அம்மாவின் தோளில் சின்ன பிள்ளையாய் தலை சாய்த்து கொண்டான் அவன்.

அவன் வாட்டம் கண்டு, “ஏன்,
ஒரு மாதிரியா இருக்க? என்னாச்சு கிருஷ்ணா?” என்று அவர் பரிவாய் விசாரிக்க,

ராகுல் ஒன்றுமில்லையென தலையசைத்து, உதட்டை மடித்து உச்சுக் கொட்டினான்.

“ம்ம் இப்ப எல்லாம் என்கிட்ட எதையோ மறைக்கற இல்ல?” மகனை அறிந்தவராக அவர் விடாமல் கேட்க,

“நான் எதையாவது மறைக்கனும்னு நினைச்சா கூட, நீ தான் கண்டு பிடிச்சுடுவியே ம்மா” ராகுல் அம்மாவிடம் சுற்றி வளைத்து பதில் தர,

பார்வதி அவன் காதை பிடித்து திருகியவாறு, “படவா, பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல, யாரு டா அந்த பொண்ணு?” என்று கேட்க, ராகுல் அவரை வியப்போடு பார்த்தான்.

“உன்ன நான் கவனிச்சிட்டு தான் டா இருக்கேன். நீயா வந்து சொல்லுவன்னு எதிர்பார்த்தேன். நீ சொல்லல. அதான் நானே கேக்கிறேன்” அவர் பேச்சில் தன் மகனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன் என்ற பெருமையும் தொற்றி இருந்தது.

தன் அம்மாவிடம் தான் வசமாய் மாட்டிக் கொண்டதாக நினைத்தான் அவன்.

சின்ன வெட்க சிரிப்போடு, “நிவேதா ம்மா” என்று தன்னவள் பெயரை அழகாய் உச்சரித்தான்.

மலர்ந்திருந்த பார்வதியின் முகம் சட்டென மாறி போனது.

“ஏதோ, பெரிய இடத்து பொண்ணுன்னு சொன்னியே, பெரிய கம்பனி முதலாளின்னு அந்த பொண்ணா? அந்த பொண்ணையா நீ விரும்புற?” பார்வதி நம்ப முடியாதவராய் வாய் பிளந்தார்.

“நான் மட்டுமில்ல, நிவியும் என்னை அவ்வளவு நேசிக்கிறா ம்மா” என்று ராகுல் சொல்ல, அவர் மலைத்து போனார்.

சிறிது நேரம் பதிலின்றி யோசனையில் ஆழ்ந்தவர் மகனின் முகத்தை கலவரமாய் ஏறிட்டு, “நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப தான கிருஷ்ணா?” பார்வதி கேட்க, ராகுல் தயக்கமாய் ஆமோதித்தான்.

“அந்த பொண்ண நீ மறந்திடு டா” பார்வதி பட்டென சொல்ல,

“ஏன் ம்மா அப்படி சொல்றீங்க?” ராகுல் பரிதவிப்பாய் கேட்டான்.

“சொன்னா புரிஞ்சுக்க ராகுல். நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வராது டா. உன்னோட ஆசைக்காக என் மகனை அந்த பணகார வீட்டுக்கு அடிமையாக்க என்னால முடியாது” எனறார்.

“அம்ம்ம்மா, உன் மகனை யாராலையும் அடி பணிய வைக்க முடியாது ம்மா” என்று உறுதியாக சொன்னவன்,

“நிவேதா, நீ நினைக்கிற மாதிரி இல்ல ம்மா. வித்தியாசமானவ, சாதாரண பொண்ணுங்க கிட்ட கூட அகங்காரத்தையும் திமிரையும் நான் பார்த்திருக்கேன். எல்லாம் இருந்தும் நிவேதாகிட்ட பண திமிரோ, ஆணவமோ நான் இதுவரைக்கும் பார்த்தது இல்ல” என்று புரியவைக்க முயன்றான்.

“நீ அவமேல இருக்க ஆசையில இப்படி எல்லாம் பேசற. அப்புறம் நீயே நினைச்சாலும் எதையும் மாத்த முடியாம போயிடும்” மகனின் வாழ்வின் மீது கொண்ட அக்கறையில அவரும் வாதாடினார்.

“நிவேதா எனக்கு மனைவியா மட்டுமில்ல, உனக்கு செல்ல மருமகளாவும் இருப்பா ம்மா” அவன் கெஞ்சி நிற்க,

“பணக்காரங்க புத்தி என்னன்னு உனக்கு தெரியாது கண்ணா, நீ எந்தளவு ரோசகாரன்னு எனக்கு நல்லாவே தெரியும். எதிர்காலத்தில நீ அவஸ்தை படறதை என்னால பார்க்க முடியாது. உன் எண்ணத்தை மாத்திக்கிற வழிய பாரு ராகுல்” பார்வதி திட்டவட்டமாக மறுத்து சொன்னார்.

“ம்மா, எனக்கு நிவேதாவ பிடிச்சிருக்குன்னா, உங்களுக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் ம்மா. எனக்காக இன்னொரு முறை யோசிச்சு பாருங்க ம்மா ப்ளீஸ்” என்று ராகுல் கெஞ்சி நிற்க,

பார்வதி எந்த பதிலும் சொல்லாமல் குழப்பத்துடன் அங்கிருந்து சென்றார்.

# # #

எஸ்டேட் தொழிலாளர் சங்கத்தினருடன் சந்திப்பு நடந்தேறிக் கொண்டிருந்தது.

தோட்ட தொழிலாளர்களின் வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் குறைகள் பற்றிய விவாத பேச்சுக்களை சங்க தலைவர்கள் முன் வைத்தனர்.

நிவேதா அவர்கள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டபடி அமர்ந்திருந்தாள்.

அவர்கள் விண்ணப்பத்தில் சில அதிகப்படியான கோரிக்கைகளும் இருக்க தான் செய்தன.

“சரி, உங்களோட கோரிக்கைகளை என்னால முடிஞ்ச வரைக்கும் கண்டிப்பா செய்றேன்” என்ற‌ அவளின் ஆமோதிப்பான தலையசைப்பிற்கு கூட்டம் கலைந்தது.

ஆயாச பெருமூச்சோடு நெற்றியை விரல்களால் அழுத்திக் கொள்ள, ஏலக்காய் தேநீரின் இதமான வாசம் அவள் நாசிக்குள் பரவியது.

நிமிர, தமிழ்ச்செல்வி நிவேதாவிடம் தேநீர் கோப்பையை நீட்டினாள். அதை மென்னகையுடன் வாங்கி, “தேங்க்ஸ் தமிழ்” என்று பருகினாள். இந்த இதம் இப்போது அவளுக்கு தேவையாக இருந்தது.

அவள் அலைப்பேசி அழைக்க, ராகுல் முகம் திரையில் சிரித்தது.

தமிழை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்வையின் பொருள் புரிந்து இவள் வெளியேறினாள்.

எடுத்து காதில் வைத்தவள், “நீ எதுவும் பேசாதே கிருஷ்”

“ப்ச் நிவி, உன்ன பார்க்கணும் போல இருக்கு, ப்ளீஸ்” அவன் குரல் சோர்வாய் கெஞ்சியது.

“நான் உன்மேல செம கோபத்துல இருக்கேன், இன்னும் நீ அம்மாகிட்ட சம்மதம் வாங்கல, இங்க, மாம் என்னை படுத்தி எடுக்கிறாங்க”

“என்னவாம் என் மாமியாருக்கு?”

“ம்ம் இந்த திமிரு பிடிச்ச மருமகனை பிடிக்கலையாம்”

“ஆனா, அவங்க பொண்ணுக்கு அவனை தான் ரொம்ப பிடிச்சு இருக்காமே”

“என்ன செய்ய அவன் தான் ஏதோ மாயம் செஞ்சு அவ மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டானே ” அவள் கேலியாக சொல்ல,

“ம்ம் அப்புறம்? வேற என்னல்லாம் செஞ்சான், அவன் உன்ன?”

“ம்ம் எல்லாத்தையும் சொல்லணுமா?” அவள் குரல் குழைந்தது.

“சொல்லேன் நிவி, நான் அவனை ஒரு கை பார்க்கிறேன்”

வெற்று பேச்சுகள் அங்கே நீள மற்றதெல்லாம் மறந்து போனது, அந்த காதல் கிள்ளைகளுக்கு.

தமிழ்ச்செல்வி எஸ்டேடிலிருந்து கிளம்பி விட்டிருந்தாள். நிவேதாவிடம் அனுமதி வாங்க காத்திருக்க, அவள் கைப்பேசியை வைப்பதாக தோன்றவில்லை எனவே, சொல்லாமலேயே கிளம்பி இருந்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாய் அவள் பார்த்த நிவேதாவிற்கும் இப்போது சில மாதங்களாய் பார்க்கும் நிவேதாவிற்கும் எத்தனை வித்தியாசங்கள்!

காதல் வந்தால் அவர்களிடம் இத்தனை மாற்றம் வருமா என்ன?

முன்பு கம்பெனி, ஆஃபிஸ், எஸ்டேட் என்று எப்போதும் தீவிரத்தை பிரதிபலிக்கும் தன் மேமின் முகத்தை ஒப்பிட்டு பார்த்தாள்.

இப்போதெல்லாம் நிவேதாவின் இதழ் கடையில் புதிதாய் ஒட்டிக் கொண்ட இளநகையும் முகத்தில் படர்ந்திருந்த பூரிப்பும் அவளின் பேரழகை மேலும் மெருகூட்ட செய்வதாய்,

இந்த மாற்றம் அவர்களின் வாழ்வின் சந்தோஷத்தின் திறவுகோலாகவே தோன்றியது தமிழ்ச்செல்விக்கு.

“ஆன்ட்டி…” அழைப்பு கேட்டு திரும்பியவள், பள்ளி சீருடையில் அழகாய் நின்றிருந்த குழந்தைகளைப் பார்த்து முறுவளித்தாள்.

“என்ன செல்லம் வேணும் உங்களுக்கு?” என்று மென்மையாய் வினவ,

“ஆதரவு இல்லாதவங்களுக்காக நாங்க நிதி திரட்டுறோம். உங்களால முடிஞ்ச பணவுதவி செய்யிங்க, ஆன்ட்டி” என்று மழலை தமிழில் சொல்லி உண்டியலை நீட்ட,

இவள் புன்னகைத்து, பையிலிருந்து சில பணத்தாள்களை எடுத்து உண்டியலில் இட்டாள்.

“தேங்க் யூ ஆன்ட்டி” என்று அந்த குழந்தைகள் நன்றி சொல்லி விட்டு வேறொருவரிடம் உண்டியலை நீட்ட, அதனை நெகிழ்வோடு பார்த்து ரசித்தபடி சாலையை கடந்து நடந்தாள்.

எதிரே ஏதோ சலசலப்பு தோன்றி, கூட்டம் சேர என்னவென்று அருகே சென்று கவனிக்க, ஒரு பெண்மணி சாலையில் மயங்கி கிடந்தார்.

அது ராகுலின் அம்மா என்று கண்டதும், பதறியோடி அவர் தலையை உயர்த்தி தன் மடியில் வைத்துக் கொண்டவள், ஈர கைக்குட்டையால் அவர் முகத்தை துடைத்து மயக்கம் தெளிவிக்க முயன்றாள்.

“அம்மா… அம்மா… என்னாச்சு ம்மா உங்களுக்கு?”

பார்வதியிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, அங்கிருந்தவர்களிடம் உதவி கோரி ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.

# # #

காதல்காரன் வருவான்…