சுவாசம் 2
மத்திய அமைச்சர் இல்லம்.
பிரம்மாண்டமான கேட், வாசலில் மத்திய அமைச்சரைப் பார்க்க வேண்டி சிறு கும்பலாக மக்கள் நின்றிருந்தனர். வாசலில் இருந்து போர்டிகோ வரை சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்ட சாலை போடப் பட்டிருந்தது. மத்திய அமைச்சர் வீடாகையால் பாதுகாப்பு சற்றே பலமாக இருந்தது.
சாலையின் இருபுறமும் அழகான புல்வெளி சீராகப் பராமரிக்கப் பட்டிருந்தது. சாலை ஓரத்தில் இருபுறமும் சீரான இடைவெளியில் ரோஜாச் செடிகள் நடப்பட்டு, அழகாக பூத்துக் குலுங்கியது.
போர்டிகோவில் அமைச்சரின் உபயோகத்திற்கு ஒரு வெள்ளை நிறத்தில் இன்னோவாவும், வீட்டு உபயோகத்திற்கு சில்வர் நிறத்தில் ஸ்விப்ட் டிசையர் ஒன்றும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
போர்டிகோவிலும் சிலர் அமைச்சரைக் காண வேண்டி நின்றிருந்தனர். அழகான வேலைப்பாடுகள் அமைந்த முன்புற கதவிற்கு பின், பத்து நபர்கள் அமரும் அளவுக்கு நவீன ரக சோபாக்கள் போடப்பட்ட ஹால் இருந்தது.
அமைச்சரின் உதவியாளன் சந்ருவும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து வீட்டு நபர்கள் மட்டுமே புழங்க, ஆளையே உள்ளிழுத்துக் கொள்ளும் அளவு மிருதுவான சோபாக்கள் போடப்பட்ட ஹாலும், அதைத் தொடர்ந்து உணவு உண்ணும் அறையும் சமையலறையும் இருந்தன.
பக்கவாட்டில் பூஜையறையில் பூஜை மணியோசையும் கமகமவென்று கற்பூர வாசனையும் வந்தது. சமையலறையில் இருந்து சாம்பார் தாளிக்கும் வாசமும், உளுந்துமாவு எண்ணெயில் வேகும் வாசமும் கலவையாக வந்தது.
கணவரும் இரு பிள்ளைகளும் கை கூப்பி நின்றிருக்க, வாயில் அபிராமி அந்தாதியை முனுமுனுத்தவாறு சுவாமிப் படங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டிய வாசுகி முப்பதுகளின் இடையில் இருந்தாள்.
மெல்லிய சரிகை வேய்ந்த காஞ்சிப் பட்டு உடுத்தியிருந்தாள். கண்களில் வழிந்த கருணையும் இதழ்களில் உறைந்த புன்னகையும் அவளைப் பேரழகியாகக் காட்டியது.
கழுத்தில் ஒற்றைத் தாலிச்சரடு, காதுகளில் சிறிய ஜிமிக்கி, கைகளில் இரண்டிரண்டு வளையல்கள் அணிந்திருந்தாள். மூக்கில் ஒற்றை வைரம் மின்னியது.
ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்ட ராகவன் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். அவரது மனதைப் போலவே தூய்மையான வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார்.
அவருக்கு இரு புறமும் நின்றிருந்த பிள்ளைகளில் மூத்தவள் அனன்யா பனிரெண்டு வயது . இளையவன் ஆதவன் எட்டு வயது. பள்ளி செல்லத் தயாராக இருந்தவர்களின் தலையில் ஆரத்தியைத் தொட்டு ஒற்றி விட்டு, “சாப்பிட டேபிளுக்குப் போங்க. அம்மா வரேன்.” என்றவள் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தாள்.
சமையலறைக்குள் சென்றவள், அங்கே சமையல் செய்பவரிடம், “ஐயாவ பார்க்க வெயிட் பண்றவங்களுக்கு காபியெல்லாம் போயிடுச்சா?”
“குடுத்தனுப்பிட்டேங்கம்மா… “
“ சின்னவனுக்கு இட்லி பிடிக்காது, அவனுக்கு தோசை ஊத்திடுங்க.”
“ஆகட்டும்மா.”
அனைவருக்கும் தட்டு வைத்து இட்லி, வடை, சட்னி, சாம்பாரோடு பரிமாறியவள், மகனுக்கு தோசையை ஊட்டத் தொடங்கினாள்.
“என்ன கதிர இன்னும் காணோம்? நேத்தும் வரல. ”
“வருவான்ல உன் தம்பி, அவன்ட்டயே கேளு. காலைலயே துரையப் பத்தி போன் வந்துடுச்சி.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரம் சரியாக உள்ளே நுழைந்தனர் கதிரும் அவனது மாமா அழகரும்.
“தலைவரே, வெளிய நம்ம ஏரியா ஆளுங்க மனு கொடுக்க நிக்கறாங்க. ஏரிப் புறம்போக்கு நிலத்தில ஆக்ரமிப்பு நிறைய இருக்காம், அத அகற்ற மனு கொண்டு வந்திருக்காங்க. என்னன்னு பாருங்க.”
அனன்யா தட்டில் இருந்த வடையை எடுத்துக் கடித்தவாறு அமர்ந்தவன், “அனு, ஆது ஸ்கூல்க்கு டைம் ஆகல சீக்கிரம் சாப்பிடுங்க” என்றான்.
“நீயும் சாப்பிட உட்காரு” என்று அவனுக்கும் அழகருக்கும் தட்டு எடுத்து வைத்த வாசுகி உணவைப் பரிமாறினாள்.
“ஏரிப் புறம்போக்கு நிலத்தை எல்லாம் ஆக்ரமிப்பு பண்ணி வச்சிருக்கவன் அவ்வளவு பேரும் ஆளும்கட்சி ஆளுங்கதான். போன தடவையே கலெக்டர் கிட்ட இதப்பத்தி பேசுனேன்.
அவனும் கமிஷன் வாங்கியிருப்பான் போல, பிடி கொடுத்தேப் பேசல. சென்ட்ரல்ல நம்ம செல்வாக்கு இருந்தாலும், ஸ்டேட்டுல அவனுங்க ஆட்சிதான நடக்குது.
அதிகாரிகளும் அங்கதான் வளைஞ்சி போறாங்க. போலீஸ் டிபார்ட்மெண்ட்லயும் நிறைய கருப்பாடு இருக்கு. பார்க்கலாம், என்ன செய்ய முடியும்னு பார்க்குறேன்.”
“அது இருக்கட்டும் நேத்து என்ன பிரச்சனை? கவர்ண்மெண்ட் ஆபிசுக்கே போய் ஒருத்தன அடிச்சிருக்க… “
‘நீ சொன்னியா?’ என்பது போலத் தன் மாமனைப் பார்த்தவன், அவரது, “நான் சொல்லல தம்பி” என்ற வார்த்தையில் முகத்தைத் திருப்பினான்.
“அழகர ஏன்டா முறைக்குற? எனக்கு அந்த ஆபீஸ்ல இருந்தே ஃபோன் வந்துடுச்சி.”
“அது ஒன்னும் இல்ல தலைவரே, சின்ன மேட்டர்தான். புது பஸ் ஸ்டாண்ட் ஒட்டி ஒரு இடம் இன்னைக்கு உங்க பேர்ல பதியப் போறோமில்ல, அதுல கொஞ்சம் பிரச்சினை பண்ணான். அதான் ஒரு காட்டு காட்டுனேன்.”
“எடேய் இப்பலாம் அம்புட்டு பய கையிலயும் கேமரா ஃபோன் இருக்கு. நீ காட்டுறதெல்லாம் வீடியோ புடிச்சி நெட்ல விட்ருவானுங்க ஜாக்கிரதை.”
“நம்மகிட்ட அதெல்லாம் நடக்காது தலைவரே. நியாயம் நம்ம பேர்லதான். கேஸ் போட்டாலும் நான்தான் ஜெயிப்பேன். ஆனா அத எத்தனை நாளுக்கு இழுக்க? இதோ நேத்து போட்ட போடுல இன்னிக்கு எட்டு மணிக்கே பத்திர பதிவு ஆபீஸ் முன்னாடி நிக்குறானாம்.”
அவனை முறைத்துக் கொண்டே, அவனது தட்டில் குறைந்தவற்றை நிரப்பியவாறு வாசுகி, “நேத்து சாயந்திரம் ஏன் வரல?”
“பத்திரம் பதியற விஷயமாதான் வெளிய போயிருந்தேன் க்கா.”
“காலேஜ்ல படிக்கற பொண்ணுங்க கிட்ட உனக்கென்ன பிரச்சினை?”
யார் சொல்லியிருப்பா?? என்பது போல திருதிருவென்று விழித்தவன், “காலேஜ் பொண்ணுங்களா அதுங்க… சரியான அகராதி பிடிச்சதுங்க. ஆம்பளைப் பையன்னுகூட பார்க்காம எப்படி கலாய்க்கறாளுக. அதான் கொஞ்சம் மிரட்டி விட்டேன்.”
“காலேஜ்க்கு நீ எதுக்கு போன?”
“அது… நம்ப ஏரியா ரகுக்கு ஃபீஸ் கட்டப் போனேன்.”
“சரி… கோவில்ல பொம்பளைங்ககிட்ட என்ன பிரச்சனை?”
அது… எப்பவும் காலைல நம்ம ஆஞ்சநேயரப் பார்க்கப் போவேன்ல. அங்க வந்தும் சாமி கும்பிட விடாம நசநசன்னு பேசிகிட்டே இருந்துச்சிங்க. அதான் திட்டி விட்டேன்.”
அப்பொழுது ராகவனும், “நடு ரோட்ல லேடி ட்ராபிக் போலீஸ்கிட்ட சண்டை போட்டிருக்கான் அத என்னன்னு கேளு” என்று எடுத்துக் கொடுக்க,
அவரை முறைத்துப் பார்த்து, “ஏன்?… ஏன் இப்படி…?” என்று கேட்டவன்,
“அது ஒன்னும் இல்ல க்கா… அந்த லேடி நடுரோட்ல நின்னு போற வர்ற வண்டியெல்லாம் நிறுத்தி, லஞ்சம் வாங்கிட்டு இருந்துச்சி. என்னையும் நிப்பாட்டுச்சி, நல்லா வாங்கி கட்டிக்கிச்சி.”
“அதெல்லாம் சரி… அனு கிளாஸ்ல படிக்கற பொண்ணுகிட்ட உனக்கென்னத் தகராறு?”
அதுவரை மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த அனு அவனை முறைக்க.
“ஏன் மாப்ள? ஆறாங் கிளாஸ் படிக்கற பொண்ணு கூட உனக்கென்னடா சண்டை?”
“அது ஒரு சின்ன பிரச்சினை மாமா.”
“அனுக் குட்டி அந்த பொண்ணு உன் கூடவா படிக்குது? அது கூடல்லாம் சேராதடா…”
“ நீ என்ன பண்ணன்னு சொல்லு மாமா” என்றாள் அனு.
“நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன், வழியில ஒரு பையனோட நின்னு பேசிகிட்டு இருந்துச்சி. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு விசாரிச்சா, ஆழாக்கு சைஸ்ல இருக்கற அதுக்கு அவன் பாய் ஃப்ரண்டாம். அதான் ரெண்டு பேர் மண்டைலயும் தட்டி விரட்டி விட்டேன்.”
“நீயே சொல்லுக்கா… முளைச்சு இன்னும் மூனு இலை விடல, அதுக்குள்ள இதுகளுக்கு பாய் ஃப்ரண்டாம்.”
புசுபுசுவென்று கோபப் பெருமூச்சு விட்ட அனு, “மாமா… கூடப் படிக்கற ஃப்ரண்ட் பாயா இருந்தா, அது பாய் ஃப்ரண்டுதான்.”
“ஏன் மாப்ள?, இப்படி ஏரியால இருக்கற எல்லா பொண்ணுங்களோடயும் சண்டை போட்டா என்ன செய்ய? பொண்ணுங்க சாபம் சும்மா விடாது மாப்ள.”
“அடப் போங்க மாமா. எனக்கும் பொண்ணுங்களுக்கும் ஏழாம் பொருத்தம், ஒத்தே வராது.”
“ஏன்டா… காலேஜ் எல்லாம் போய் படிச்சிருக்க. அங்க கூட உனக்கு ஒரு கேர்ள் ஃப்ரண்டு இல்லயா?” இட்லியை சாம்பாரில் பிரட்டி வாயில் போட்டபடி ராகவன் கேட்க,
“தலைவரே… பொண்ணுங்களுக்கு ஃப்ரண்டா இருக்கனும்னா, முதல்ல அவங்க என்ன சொன்னாலும் தலையாட்டனும், பேசறதுக்கு எதிர் கருத்து பேசக் கூடாது.
அவங்க செய்யற சேட்டையெல்லாம் பொறுத்துப் போகனும். முக்கியமா டார்லி, பேபி ன்னு செல்லப் பேர் வச்சிக் கூப்பிடனும்.
சத்தியமா என்னால இதெல்லாம் முடியாது. அதான், எனக்கு ஃப்ரண்டா ஒரு பொண்ணு கூட செட்டாகல.”
மெதுவாக வாய்க்குள் அழகர், “ அடேங்கப்பா… செட் ஆகிட்டாலும்… “ என்று முனக,
“என்ன மாமா சொன்னீங்க?”
ஒன்றுமில்லை என்பது போல தலையை ஆட்டியவர் உணவில் கவனத்தை செலுத்தினார்.
“என்னடா நீ இப்படி சொல்ற? உன் அக்கா உனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடனும்னு சொல்றா.”
“தலைவரே, என்ன ஆள விடுங்க… நான் நிம்மதியா இருக்கறது பொறுக்கலையா உங்களுக்கு.”
“ஏன்? நீயும் உங்க மாமா அழகர் மாதிரி காவி கட்டி பிரம்மச்சாரியா இருக்கப் போறியா? முதல்ல ஆஞ்சநேயர் கோவில சுத்தறத விடு.”
“நான் எந்தப் பொண்ணப் பார்த்து கை காட்றனோ? அந்தப் பொண்ண நீ கல்யாணம் பண்ற புரியுதா?”
விரல்களில் இருந்த சாம்பாரை சப்பிக் கொண்டே எழுந்தவன்,
“அக்கா… நீ எனக்கு பொண்ணு பார்க்கறதெல்லாம் இருக்கட்டும். தலைவரு அடுத்த வாரம் மலேசியா ஹாங்காங் டூர் போறாரே அது உனக்கு தெரியுமா? அதுவும் ஹாங்காங்ல பொண்ணுங்க செமயா மசாஜ் பண்ணி விடுவாங்களாமே? உண்மையான்னு கேளு.”
ராகவனை வாசுகிப் பார்த்த பார்வையில் அனல் பறந்தது.
“தலைவரே, அக்காவுக்கு பதில் சொல்லிட்டு நிதானமா ரிஜிஸ்டர் ஆபீஸ் வாங்க. நான் பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு நேரா அங்க போயிடறேன்.” என்று கண்களைச் சிமிட்டிக் கூறியவன்,
“பசங்களா… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பை பை சொல்லிட்டு வாங்க.’ என்றபடி வெளியேறினான்.
“டேய்… டேய்… இப்படி என்னக் கோர்த்து விட்டுப் போறியேடா…”
“வாசு… கல்யாணப் பேச்சு எடுத்ததும், என்னை உன் கிட்ட மாட்டி விட்டுட்டு அவன் எஸ்கேப் ஆகிப் போறான்.”
பள்ளி செல்லும் பிள்ளைகளை வழியனுப்பி வைத்துவிட்டு, ராகவனை முறைத்தபடி அறைக்குள் புகுந்து கொண்டாள் வாசுகி. அவள் பின்னே சென்று அணைத்தவர்,
“வாசு… செல்லம்ல அவன் சொல்றத நம்பாதம்மா… மலேசியால தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில நடத்தற கருத்தரங்கத்துல பேசக் கூப்பிட்டு இருக்காங்கடா, அதுக்குதான் போறேன்.”
“என் கிட்ட சொல்லவே இல்ல.”
“நேத்துதான் முடிவாச்சு. நான் சொல்றதுக்குள்ள அவன் முந்திகிட்டான்.”
அவர்புறம் திரும்பியவள், கலக்கமாக அவர் முகத்தைப் பார்த்தபடி, “ஹாங்காங், மசாஜ் அப்படின்னு ஏதோ சொன்னான்.”
பல்லைக் கடித்தவர், “அந்தப் பயல… “
“ஹாங்காங்ல தொழிற் பயிற்சி கூட்டமைப்பு கூட்டம் நடக்குது. அதுல கலந்துக்கப் போறேன். நான் மட்டும் இல்ல இன்னும் மூனு எம்பிக்கள் போறோம்டா.”
தன் கன்னத்தால் அவளது கன்னத்தை உரசியபடி, “ஏகபத்தினி விரதன்டி நான். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? “
முகச்சிவப்புடன் அவரிடமிருந்து விலகியவள், “சரி சரி போதும்… வெளியே எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்றாங்க. அவங்களப் பார்த்துட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் போகனுமில்ல.”
“உனக்கும் சேர்த்து ப்ளைட் டிக்கெட் போடறேன். ஹாங்காங்க்கு நீ கூடவே வா. நாம செகண்ட் ஹனிமூன் கொண்டாடுவோம்.”
உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அவரை முறைத்தவள், “வயசுக்கு வர்ற வயசுல பொம்பளப் பிள்ளய வச்சிகிட்டு, ஐயாவுக்கு செகண்ட் ஹனிமூன் கேட்குதோ… முதல்ல நீங்க கிளம்புங்க. கட்சி நிர்வாகிகள் எல்லாம் பார்க்க வந்திருக்காங்க.” என்றபடி அறையை விட்டு வெளியேறினாள்.
தானும் சிரித்தபடி வெளியே வந்தவர் வரவேற்பறையில் அமர்ந்திருந்த, அவருடைய உதவியாளர் சந்ருவிடம் அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டபடியே,
வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு, சந்ருவுடன் கிளம்பி பத்திரப் பதிவு அலுவலகம் சென்றார்.
சமையலறைக்குள் கைகள் அதன் போக்கில் வேலை செய்து கொண்டிருக்க, மனமோ குமுறிக் கொண்டிருந்தது சிவரஞ்சனிக்கு. ஹாலில் அமர்ந்து அவளையே வெறித்துப் பார்த்தபடி இருந்த கேசவனை என்ன செய்வது என்றே தெரியவில்லை அவளுக்கு.
சித்தி சாரதாவின் அண்ணன் அவன். ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாள். போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் அவனைக் கைது செய்து சிறையில் போட்ட வரை தெரியும் அவளுக்கு.
ஆனால் இவன் எப்போது சிறையில் இருந்து வெளியே வந்தான்?. வந்ததுமில்லாமல் நேராக இங்கு எதற்காக வந்திருக்கிறான்? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. வந்ததிலிருந்து விடாமல் அவளைத் துரத்தும் பார்வையை இனம்காண முடியாத அளவுக்கு சிறு பிள்ளை அல்லவே அவள்.
சொந்த வீட்டிலேயே பாதுகாப்பில்லாமல் நிற்கும் நிலையை அறவே வெறுத்தவள், கண்களோரம் கசிந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, அவனுக்கு காபியை ஆற்றிக் கொண்டுபோய் நீட்டினாள்.
வாயில் இருக்கும் முப்பத்திரெண்டு பற்களும் வெளியே தெரியும்படி ஒரு இளிப்புடன் அவளது கைகளைத் தடவிக் கொண்டே காபி டம்ளரை வாங்கினான் கேசவன்.
தீச் சுட்டது போல கைகளை உதறி விட்டு விலகி நின்றவள், அவனை எரித்து விடுவது போல முறைக்க, அவளது சித்தியோ,
“அடியே ரஞ்சனி, இனிமே நீ படிக்கல்லாம் போக வேணாம். என் அண்ணனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சிருக்கேன். எங்க அண்ணனுக்கு அது ஊர்ல இருந்த மரியாதையே போச்சு. அதுக்கு அந்த ஊருக்குப் போகப் புடிக்கல.
அதான் உன்னைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டோட இருந்துக்கறேன்னு சொல்லிடுச்சி. ஆம்பள இல்லாத இந்த வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும். என்ன புரியுதா?”
அதைக் கேட்டு அதிர்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க, அழுகையில் துடித்த உதடுகளைக் கடித்து அழுகையை நிறுத்தியவள், அவளது சித்தியைப் பார்த்து, “சித்தி நான் படிக்கனும். எனக்கு கல்யாணம்லாம் வேணாம்.”
“என்னது கல்யாணம் வேணாமா? அப்படியே உன்னக் கட்டிக்க கோடீஸ்வர மாப்பிள்ளைங்க வரிசைல நிக்கறாங்களோ? உன் கிட்ட யாரும் அபிப்ராயம் கேக்கல. என் முடிவத்தான் சொன்னேன்.”
‘பத்தொன்பது வயசு பொண்ணுக்கு நாற்பது வயசுல மாப்பிள்ளையா? இந்தக் கொடுமைய கேட்கக்கூட எனக்கு யாரும் இல்லயே’ என்று எண்ணிக் கதறி அழுதவளைத் தேற்றத்தான் ஆளில்லை அங்கே.
“எதுக்குடி அழுது ஊரக் கூட்டுற? உன்னய வீட்ட விட்டு விரட்டி விடாம, உனக்கொரு வாழ்க்கைய அமைச்சி கொடுக்கனும்னு நினைக்கறேன் பாரு என்ன சொல்லனும். வாய மூடிகிட்டு நான் சொல்றதக் கேட்டு இருக்கறதுன்னா இந்த வீட்ல இரு. இல்லைன்னா எங்கயாவது ஓடிப் போயிடு சொல்லிட்டேன்.”
கண்களை உருட்டியபடி மிரட்டிய. சித்தியைப் பாவமாகப் பார்த்தவள், தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிரண்டு நின்றாள்.
சாரதா திட்டியதும் இடைப்புகுந்த கேசவன், “இந்தா சாரதா… எதுக்கு அந்தப் புள்ளய திட்ர. பயந்து கிடக்குது பாரு. எடுத்து சொன்னா புரிஞ்சுக்க போவுது. அத விட்டுட்டு திட்டிகிட்டு கிடக்குற. கல்யாணம் முடியும் மட்டும் அது காலேஜுக்கு போவட்டும்.
அதுபாட்டுக்கு ஒன்னுகெடக்க ஒன்னு பண்ணிக்கிச்சுன்னா யாரு பதில் சொல்றது? நீ போ புள்ள போய் காலேஜுக்கு கிளம்பு.”
“அதுவும் சரிதான். இன்னைக்குதான் மார்கழி ஆரம்பிச்சிருக்கு. இந்த மாசம் கல்யாணம் பண்ண முடியாது ண்ணே. தையிலதான் விசேசம் வைக்க முடியும். அதுவரைக்கும் காலேஜுக்கு போகட்டும்.
விதியை நொந்து கொண்டவள், இந்த ஒரு மாத காலத்தில் ஏதேனும் விடிவு தனக்கு வாராதா என்று எண்ணியபடி வேலைகளை முடித்து வைத்து விட்டு கல்லூரிக்குக் கிளம்பினாள்.
—காற்று வீசும்.