SST–EPI 25

SST–EPI 25

அத்தியாயம் 25

மலேசியாவின் கிங் ஆப் பேஷன் என அழைக்கப்படுபவர் பெர்னர்ட் சந்திரன் என்பவராவார். அவரது படைப்புகள் மலாய், சீன, இந்திய பாரம்பரியத்தைக் கலந்து இருக்கும். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், வெளிநாட்டிலும்  திறமையைக் காட்டி கொடிகட்டிப் பறக்கிறார்.

 

“வாங்க தம்பி! நல்லா இருக்கீங்களா?” என கேட்டார் ரதி.

“நான் நல்லா இல்லைம்மா!”

சம்பிரதாயமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை ரதி கேட்டு வைக்க, அதற்கு வந்த பதிலில் திகைத்துப் போனார்.

“நான் நல்லா இருக்கறது உங்க கையிலத்தான் இருக்கும்மா”

கணேவுடன் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த குருவை குழப்பத்துடன் பார்த்தார் ரதி. ஹாலில் அவர் அமர்ந்திருக்க, ரதியின் அண்ணனும் அண்ணியும் அவரோடு இருந்தார்கள்.

“என்ன சொல்லுறீங்க தம்பி?”

“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. உங்க மக மிருவ நான் மனசார விரும்பறேன். அவளைத் திருமணம் செஞ்சு என் கூடவே வச்சிக்க ஆசைப்படறேன்! அதுக்கு உங்க சம்மதம் வேணும்மா”

அதிர்ச்சியாக குருவைப் பார்த்தார் ரதி. குருவிடம் மகள் வேலை செய்கிறாள் என தெரியும் அவருக்கு. அவனை காரில் ஏற்றி இறக்குகிறாள் எனவும் தெரியும். மகள் பேச்சில் அடிக்கடி பாஸ் புராணம் எட்டிப் பார்ப்பதையும் அறிவார். ஆனால் தன் குட்டி மகள் காதலில் விழுந்திருப்பாள் என்பதை நம்பவே அவருக்கு சிரமமாக இருந்தது. ரதிக்கு எப்பொழுதுமே மிரு குழந்தைதான். அந்தக் குழந்தை ரொம்ப நாளாகவே தனக்குத் தாயாய் மாறி இருந்ததையும் உணர்ந்துத்தான் இருந்தார் ரதி.

மெல்ல பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அண்ணனையும், அண்ணியையும் நோட்டமிட்டார் ரதி. அண்ணா முகத்தில் அமைதி தெரிந்தாலும், அண்ணியின் முகம் மலர்ச்சியைக் காட்டியதை குறித்துக் கொண்டார். அண்ணனிடம் அருளை தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்கக் கேட்டிருந்தார் ரதி. யோசித்து சொல்வதாக அவர் சொல்ல, அண்ணியோ வெளிப்படையாகவே அதிருப்தியைக் காட்டி இருந்தார். தான் நல்ல உடல் நிலையில் இருக்கும் போதே தன் ஆசை மகளுக்கு நல்ல மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆசைப்பட்டவருக்கு, இந்த வீட்டில் அவள் மகிழ்ச்சியாக இருப்பாளா எனும் பெரும் சந்தேகம் முளைவிட்டிருந்தது.

கணேவும் ஜாடைமாடையாக அவர்கள் மிருவிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என சொல்லி இருந்தான். அதைக் கேட்டதில் இருந்து அவருக்கு அந்த வீட்டில் இருக்கவே முடியவில்லை. மகள் ஒரு மாதத்தில் அழைத்துக் கொள்வதாக சொல்லியிருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்.

ஆரம்பத்தில் பிடி கொடுக்காவிட்டாலும், அதற்கு பிறகு அருள் மிருவின் மேல் அக்கறை காட்டுவதுப் போலத்தான் தோன்றியது ரதிக்கு. இவருக்குப் போன் செய்யும் போதெல்லாம், மிருவிடமும் நாலு வார்த்தைப் பேசி விட்டுத்தான் வைத்தான். ஆசையில் மிருவை மணந்தாலும், அவன் அம்மாவின் தேள் போல கொட்டும் பேச்சில் இருந்து அவளைக் காப்பானா என்பது ரதிக்கு சந்தேகமாகவே இருந்தது. பணத்தால் குளிப்பாட்டாவிட்டாலும் பாசத்தால் குளிப்பாட்டித்தானே வளர்த்தார் மகளை. வருபவனும் அவளை கண்ணுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கடவுளை வேண்டாத நாளில்லையே.

மகளின் பாஸ் எனும் கண்ணோட்டத்தில் இருந்து விலகி, மகளின் கணவன் எனும் கண்ணோட்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தவனை ஏற இறங்கப் பார்த்தார் ரதி. கண்ணுக்கு லட்சணமாக, மேல் தட்டு தோற்றத்தில் அவர் முகத்தையேப் பார்த்திருந்தனை கவலையாகப் பார்த்தார் ரதி. கீழிருந்து முன்னேறி வந்த தன் அண்ணன் குடும்பமே மிருவை கேவலமாகப் பார்க்க, பரம்பரை பணக்காரன் போல தோன்றும் இவன் குடும்பம் தன் மகளை எப்படி பார்ப்பார்கள் என கலங்கினார் ரதி.

“எங்க மிரு என் கிட்ட இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலியே தம்பி. அதோட இதெல்லாம் சரி வருமான்னு தெரியலையே!” என இழுத்தார் ரதி.

படக்கென எழுந்தவன், ரதியின் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான். அவர் கையை அடுத்து தன் கையில் வைத்துக் கொண்டவன்,

“மிருக்கு உங்க மேல ரொம்ப பாசம். எனக்கு அம்மா அப்பாலாம் என் ரதி தான்னு அடிக்கடி சொல்லுவா! உங்கள மாதிரியே அதே பாசத்தோட நான் மிருவ பார்த்துப்பேன்! தயவு செஞ்சு அவளை என் கிட்ட குடுத்துருங்க ரதிம்மா” என கெஞ்சும் குரலில் கேட்டான் குரு.

குருவின் கெஞ்சலும், தன் கைப்பிடித்திருந்தவனின் கைகளில் தெரிந்த மெல்லிய நடுக்கமும் ரதியின் மனதை உருக்கியது.

“இன்னிக்கு பாஸ் பச்சை கலர்ல ஷேர்ட் போட்டுட்டு வந்தாரும்மா! செம்ம கலரு தெரியுமா!”

“கணே, அந்த சாக்லேட்ட சாப்பிட்டு முடிச்சிராதடா! என் பாஸ் குடுத்தது. எனக்கும் வைடா, டேய்!”

“அம்மா சோறு போதும், இன்னும் வைக்காதீங்க! நைட்ல நிறைய சாப்பிட்டா ரொம்ப தொந்தி வைக்குமாம். என் பாஸ் சொன்னாரு”

“இந்த ஹீரோ என்னடா சிரிக்கறான்! நல்லாவே இல்லடா கணே! எங்க பாஸ் சிரிக்கறப்போ பல்லு எல்லாம் பளபளன்னு ஜோலிக்கும் தெரியுமா”

“பாஸ் சொன்னாரு, பாஸ் செஞ்சாரு, பாஸ் சிரிச்சாரு, பாஸ் மொறைச்சாரு” இப்படி அடிக்கடி மகள் வாயில் வரும் பாஸ்கள், வேலைக்கு இவன் பாஸ்சாக இருப்பதால் மட்டும்தான் வந்ததா இல்லை மனதுக்கும் பாஸாக ஆகிவிட்டதால் வந்ததா என இப்பொழுதுதான் சந்தேகம் வந்தது ரதிக்கு.

குருவின் கைப்பிடித்துத் தட்டிக் கொடுத்தவர்,

“என்னோட சம்மதம் முக்கியமில்லைப்பா! என் மகளுக்குப் பிடிச்சிருந்தா போதும். அவ சந்தோஷமா இருக்கனும், நிறைவா வாழனும்! அது மட்டும்தான் எனக்கு வேணும். கணே ஆம்பளைப் பையன், அவன பத்தி எனக்கு கவலை இல்ல. என் பயமெல்லாம் இவ மேலதான். எனக்கு மகளா பிறந்ததுல படாத பாடு பட்டுட்டா! இன்னும் பல கேடு கெட்ட ஜென்மங்களோட வாயில விழுந்து எழுந்துகிட்டுத்தான் இருக்கா!” இதை சொல்லும் போது ஜாடையாக தன் அண்ணியைப் பார்த்தார் ரதி. அவர் முகம் சுருங்கிப் போக, ரதிக்கு திருப்தியாய் இருந்தது.

“மிருவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் ரதிம்மா! சில விஷயங்களை நினைச்சுத் தயங்கறா! அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். அவளை கண்டுப்பிடிக்கும் போது, எனக்கு உங்க சைட்ல இருந்து எந்த தடையும் இருக்கக் கூடாது. அதுக்குத்தான் உங்களைத் தேடி வந்தேன்.”

“கண்டுப்பிடிக்கும் போதா? என்ன தம்பி சொல்லுறீங்க? வேலை விஷயமா நீங்கதான் கெடாவுக்கு அனுப்பிருக்கீங்கன்னு சொன்னாளே” பதறினார் ரதி.

“பதட்டமடையாதீங்க ரதிம்மா! கெடால தான் இருக்கா. அவ இருக்கற இடத்துல நெட்வோர்க் ப்ராப்லமா இருக்கு! அதைத்தான் அப்படி சொன்னேன். லைன் கிடைச்சதும், உங்களுக்குப் போன் செய்வா.” என சமாதானப்படுத்தினான் குரு.

மிருவின் வீட்டுக்கு முன் நின்றிருந்த போது கணே அவனுக்குப் போன் செய்திருக்க, உடனே அவனைப் பார்க்க வந்திருந்தான் குரு. வீட்டின் வெளியே காரிலேயே அமர்ந்து கணேவுடன் பேசியவன், அதற்குப் பிறகு தான் ரதியைப் பார்க்க உள்ளே வந்திருந்தான்.

மிரு மருத்துவமனையில் இரவு தங்க, தன்னோடு இருந்த கணேவுடன் குருவுக்கு நல்ல நட்பு உருவாகி இருந்தது. இருவரும் சேர்ந்து ஜிம் போவது, ஒன்றாக அமர்ந்து ஆங்கில சண்டைப் படம் பார்ப்பது, குரு சாப்பிடாவிட்டாலும் கணேவுக்கு நல்ல உணவு வகைகளை வாங்கித் தருவது என இருவரும் நெருங்கி இருந்தார்கள். மிருவைப் போலவே கணேவும் பாஸ் என தான் அழைப்பான் குருவை.

தன் அக்காவுக்கு ஆபத்தில் உதவி, தங்கவும் இடம் கொடுத்திருந்த குருவின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் கணே. குரு அடிக்கடி பேச்சில் மிருவைப் இழுத்து, அவளைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதை கண்டுத்தான் வைத்திருந்தான் கணே. தனது சேகுவுக்கு நோ சொன்ன தமக்கை குருவைத் தான் மனதில் வைத்திருக்கிறாளோ எனும் சந்தேகம் பலமாகவே இருந்தது அவனுக்கு. குருவின் நடவடிக்கைகளில் அது உறுதியாகி இருந்தது அவனுக்கு. அதனால்தான் மிருவின் சந்தேகமான நடவடிக்கையை கண்டுக் கொண்டதும் உடனே குருவுக்கு போன் செய்தான்.

“ஹலோ பாஸ்”

“கணே, உன் நம்பரா இது? இப்ப நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க?” என அவசரமாகக் கேட்டான் குரு.

“ஆமா, என் நம்பர்தான். அக்கா கிளம்பற முன்னுக்கு வாங்கிக் குடுத்தா”

“கிளம்பற முன்னுக்கா? எங்க கிளம்பிட்டா?” பதட்டம் அவன் குரலில்.

“நீங்கதான் வேலை விஷயமா கெடாக்கு அனுப்பறீங்கன்னு சொன்னாளே!”

“வாட்????”

“ஆமா, அப்படித்தான் சொன்னா!”

“மை காட்! கணே மிரு வேலைய விட்டுட்டாடா!”

“வாட்????” இப்பொழுது கத்துவது கணேவின் முறையானது.

“இரு நான் நேருல வரேன், பேசலாம்” என கணேவின் தாய் மாமன் அட்ரஸ் வாங்கிக் கொண்டான் குரு.

வீட்டின் வெளியேவே காரை நிறுத்து கணேவை அழைத்தான் குரு. அவன் வந்து காரில் ஏறிய மறு நிமிடம்,

“கணே உனக்கு நான் வெறும் பாஸ்சா இல்லாம மாமாவா அகனும்னு ஆசைப்படறேன்! உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?” என கேட்டான் குரு.

ஆமென தலையாட்டினான் கணே.

“போகும் போது என்ன சொல்லிட்டுப் போனா மிரு? எல்லாத்தையும் சொல்லு. எங்க போயிருக்கான்னு எதாச்சும் க்ளூ கிடைக்குதா பார்ப்போம்”

“கெடாக்கு போய் வேலைக்கு சேர்ந்துட்டு ஒரு மாசம் கழிச்சு எங்களைக் கூப்பிட்டுக்கறேன்னு சொன்னா! ஒரு மாசம் ஆகுமாடின்னு அம்மா கேட்டதுக்கு, மேடமுக்கு கோபம் வந்துருச்சு. போய் வீடு பார்க்கனும், ஹாஸ்பிட்டல் கிட்ட இருக்கா, கணேக்கு ஸ்கூல் பக்கமா எல்லாம் பார்க்கனும்மா! மந்திரம் போட்ட மாதிரி எல்லாம் நடக்குமான்னு சத்தம் போட்டா. அப்புறம் அவளே அம்மாவைக் கட்டிப் பிடிச்சுகிட்டா! கொஞ்சமா அழுதா! அப்பவே எனக்கு லேசா சந்தேகம் தான்”

“நீ எதுவும் கேக்கலியா கணே?”

“கேட்டேனே! ஆபிஸ் எங்க இருக்கு, என்னிக்கு பஸ் எடுக்கற, வீடு கிடைக்கற வரை எங்க தங்குவ எல்லாம் கேட்டேன். உடனே நீ எனக்கு தம்பியா இல்லை அண்ணனா? இத்தனை நாளு இந்தக் குடும்பத்த நாந்தான் பாத்தேன். இனிமேலும் நாந்தான் பாப்பேன். நீ இதெல்லாம் போட்டு மண்டையக் குழப்பிக்காம படிக்கற வேளைய மட்டும் பாருன்னு கோபமா கத்திட்டா. அதுக்கு மேல அம்மா என்னைப் பேச விடுவாங்களா! சும்மா இருடா கணேன்னு அடக்கிட்டாங்க”

நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் குரு.

“எங்கடா போயிருப்பா? போன் வேற அடைச்சிப் போட்டு வச்சிருக்கா! எனக்கு பயமா இருக்குடா கணே. உன் அக்கா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லடா. ஷீ இஸ் மை எவிரிதிங்!” குரல் கரகரத்துக் கிடந்தது.

அவன் நிலையைப் பார்த்து மெல்லிய சிரிப்பு மலர்ந்தது கணேவின் முகத்தில்.

“என்னடா சிரிக்கற?”

“நீங்க என் அக்காவ ரொம்பவே லவ் பண்ணறீங்கன்னு தெரியுது மாமா! இந்த மச்சான் இருக்கறப்போ கவலை ஏன்!” என்றவன் தனது புத்தம் புது போனை எடுத்து குருவின் முன் ஆட்டினான்.

“டொட்டொடொய்ங்க்!”

“அக்கா வாங்கி குடுத்தாளா? குடுத்துருப்பா, குடுத்துருப்பா! அவ தான் புது பணக்காரி ஆகிட்டாளே!” சோகத்தையும் மீறி கண்ணில் சிரிப்பு தெரிந்தது குருவுக்கு.

“ஆமா, அவ தான் வாங்கிக் குடுத்தா. அதோட ஃபைண்ட் மை ப்ரேண்ட் ஆப்ளிகேஷனும் போட்டுக் குடுத்துருக்கா! அவ எங்க இருக்கான்னு நானும், நான் எங்க இருக்கேன்னு அவளாலயும் ட்ரேக் பண்ண முடியும். இப்போ போன் அடைச்சு வச்சிருக்கறதுனால லாஸ்ட் லோகேஷன் கோலாலம்பூர் தான் காட்டுது”

குருவுக்கும் முகம் மெல்ல மலர்ந்தது.

“ஆர் யூ திங்கிங் வாட் ஐ அம் திங்கிங் கணே?” சிரிப்புடன் கேட்டான் குரு.

“அதே அதே! அந்த பக்கி நாம அவள கண்டுப்பிடிக்கனும்னு தான் இதெல்லாம் செஞ்சிருக்கா! ஆனா அம்மாகிட்ட மூனு நாள் போன் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கா! அதே மாதிரி போனையும் அடைச்சிருக்கா”

“இட் மீன்ஸ், இந்த மூனு நாளுல உங்கக்கா கேடி என்னமோ பண்ணறதுக்கு திட்டம் போட்டுருக்கா! அந்தக் காரியம் முடியற வரை நாம அவளைக் கண்டுப்பிடிக்கறதெ அவ விரும்பல”

“பெத்தூல் பெத்தூல் பெத்தூல்!(ஆமா, ஆமா, ஆமா)”

“சரி, உள்ளே போய் அம்மா கிட்ட பேசிட்டு அந்த லாஸ்ட் லோகேஷன் போய் பார்ப்போம்” என காரை பூட்டினான் குரு.

ரதியிடம் பேசி சம்மதம் வாங்கியவன், கணேவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான். காரை இவன் ஓட்டி வர, கணே தன் புது போனில் கேம் விளையாடியபடியே வந்தான். அவன் போனை பார்க்கவும் மீண்டும் குருவின் நினைவுகள் சீசீடீவியில் பார்த்த காட்சிகளை அசைப்போட்டது.

மிரு உடலை குறுக்கி கால்களைக் கட்டி அமர்ந்திருந்தவள், சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர போராடியபடி இருந்தாள். அவளின் நிலையைப் பார்த்த ஆனந்தி நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.

“இங்க பாரும்மா! இந்த மாதிரி என்னை நீதான் பேச வைக்கற! இவ்ளோ லோவா இறங்கிப் பேசக் கூட எனக்குப் பிடிக்கல. நான் கேட்கறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். என் மகன விட்டுட்டுப் போயிரு! ஹீ இஸ் சோ ப்ரீஷீயஸ் டூ மீ! உன்னை மாதிரி ஜாதி பூ…ம்ப்ச்! உன்னை மாதிரி ஒருத்திய கட்டிக்கிட்டு அவனால சோசியலைஸ் பண்ண முடியுமா? எங்க சொந்தபந்தங்கள் முன்ன தலை நிமிர்ந்து அவனால நிக்க முடியுமா? மனைவின்னு ஒருத்தி கணவனோட முன்னேற்றத்துக்கு ஏணியா இருக்கனும். நீ கண்டிப்பா அவனோட வீழ்ச்சிக்குத் தான் துணையா இருப்பே! ப்ளீஸ் அவன விட்டுரு”

வாய் வார்த்தையாக எதையும் சொல்லாவிட்டாலும், முடியாது என அழுத்தமாகத் தலையை ஆட்டினாள் மிரு.

படக்கென எழுந்தார் ஆனந்தி. மிருவின் முன்னே குறுக்கும் நெடுக்கும் நடந்தவர்,

“ஐம்பதாயிரம் தரேன்! வாங்கிட்டு ஓடிரு” என அவள் கண்களைப் பார்த்து சொன்னார்.

கலகலவென சிரித்தாள் மிரு.

“பிசாத்து ஐம்பதாயிரம் தானா? உங்க குருப்பா அவ்ளோ தான் வோர்த்தா?”

“ஏய்! வார்த்தைய அளந்துப் பேசு!”

“நீங்க காச அளந்து குடுக்கறீங்களே அத்தை! அள்ளிக் குடுத்தா நானும் அளந்துப் பேசுவேன்”

“1 லட்சம்!”

“நோ..உங்க மகன நீங்க ச்சீப்பா வாங்கப் பார்க்கலாம். ஆனா நான் என் குருவ ச்சீப்பா விக்க மாட்டேன். இன்னும் ஏத்திக் கேளுங்க அத்தை”

பல்லைக் கடித்தார் ஆனந்தி.

“2 லட்சம்!”

“உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா! அஞ்சு லட்சம் குடுங்க! உங்க மகன் கண்ணுலயே படாம ஓடிப் போயிடறேன்”

“அஞ்சா?”

“ரொம்ப கேட்டுட்டேனோ? உங்க குருப்பாட்ட கேளுங்க கண்டிப்பா குடுப்பாரு! இவ்ளோ காசு எதுக்குமான்னு கேட்டா, உன் உயிர புடுங்கி வெளியே போடன்னு சொல்லுங்க! ரொம்ப சந்தோஷப்படுவாரு!”

அவள் அப்படி சொன்னதில் சில நொடிகள் வாயடைத்து நின்ற ஆனந்தி, மீண்டும் அகங்காரத்துடன் நிமிர்ந்தார்.

“நாளைக்கு உன் அக்கவுண்ட்ல காசு இருக்கும். இப்போ இங்கிருந்து கிளம்பு”

“அஸ்க்கு புஸ்க்கு! கையில காசு, வாயில தோசை மை டியர் அத்தை. காசு முதல்ல வரட்டும், அப்புறம் உங்க மகனுக்கு கண்டிப்பா டாட்டா பாபாய் சொல்லிருவா இந்த மிரு! ட்ரஸ்ட் மீ. ஆனா ஒன்னு! காசு வாங்கிட்டு நான் போனதும், உங்க மகன அடக்கி வைங்க. அதுக்கு அப்புறமும் உங்க குருப்பா, மிரு, மிருது, மமி மருன்னு என்னைத் தேடி வந்தான்… சத்தியமா  இந்த ஜென்மத்துல நான் தான் உங்க மருமக. மைண்ட் இட்! இப்போ இடத்தை கழுவுங்க! எனக்கு மூச்சு முட்டுது” என அலட்சியமாக சொன்னாள் மிரு.

“யார் வீட்டுல இருந்து யாரடி வெளியே போக சொல்லுற?”

“ஷப்பா! மறுபடியும் முதல்ல இருந்தா!!! போங்கத்தை போங்க! போய் காசு ஏற்பாடு பண்ணற வழிய பாருங்க! காசு கைல வர வரைக்கும் இது என் குரு வீடு!” என்றவள் ஆனந்தியின் அருகே நெருங்கினாள்.

அவர் எதிர்பாரா நிமிடம் சட்டென ஆனந்தியைக் கட்டிக் கொண்டாள் மிரு. ஆனந்தி திகைத்து நிற்க,

“தோற்றம் குரு மாதிரி இல்லைனானும், மேனரிஷம்லாம் அப்படியே என் குருதான். ஐ லவ் யூ அத்தை! வெளிய போறப்போ கதவை நல்லா பூட்டிட்டுப் போங்க! வரட்டா!” என்றவள் ரூமில் நுழைந்துக் கொண்டாள்.

அதிர்ச்சியில் நின்றிருந்த தன் அம்மாவின் முகத்தை திரையில் பார்த்த குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்பொழுது கூட அதை நினைக்கும் போது சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

‘என் கிட்ட பணம் வாங்கி என் ஆளுக்கே குடுத்துருக்காங்க எங்கம்மா! இவ என்னான்னா என் பணத்தை எனக்கே ஐம்பதாயிரத்துக்கு செக்கா திருப்பிக் குடுத்துட்டுப் போயிருக்கா! மொத்தத்துல என்னை வச்சி போத் ப்ளே பாஸ்கேட்பால் இன் மை லைப்’ மிரு சொல்லும் வடிவேலு வசனம் போல தன் நிலை ஆனதை நினைத்து அழுவதா சிரிப்பதா எனும் நிலையில் இருந்தான் குரு.

ஆப்ளிகேஷன் காட்டிய இடத்தில் மூன்று பட்ஜேட் ஹோட்டல்கள் இருந்தன. இவர்கள் போய் விசாரிக்கும் போது செக்குரிட்டி ரீசன் என சொல்லி விவரம் தர மறுத்து விட்டார்கள். கணேவின் அடையாள அட்டையைக் காட்டி மிரு அவனின் அக்கா, தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் பாட்டிக்கு சீரியஸ் என வாயில் வந்ததை எல்லாம் அள்ளி விட்டார்கள் இருவரும். அதற்கும் மசியாத இடங்களில் லேசாக பணத்தைத் தள்ளி விவரம் அறிந்தான் குரு. ஆப்ளிகேஷன் குத்துமதிப்பாக இங்கே என காட்டியதே தவிர, கரேக்டான விவரம் தரவில்லை. கடைசியாக விசாரித்த ஹோட்டலில், அரை மணி நேரத்துக்கு முன் தான் மிரு செக் அவுட் செய்ததாக சொன்னார்கள்.

மீண்டும் இருவருக்கும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்ட உணர்வு.

போன் ஆன் செய்திருந்தால் பல வழிகளில் ஒருத்தரைக் ட்ரேக் செய்ய முடியும். அதுவே அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் மிகவும் சிரமம்தான்.

“என்ன மாமா செய்யறது?”

“உங்க அக்கா போன் ஆன் பண்ணற வரைக்கும் வேய்ட் பண்ண வேண்டியதுதான். அவ பத்திரமாத்தான் இருப்பா! நீ கவலைப்படாதே” என கணேவைத் தேற்றியவன் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான். அவனுக்கு மிலோ ஷேக் செய்து கொடுத்து, சின்னவனை படுக்க சொல்லியவன், அவன் போனை எடுத்து வைத்துக் கொண்டான். இரவு முழுக்க உறங்காமல் , ஆப்ளிகேஷனையே ரிப்ரெஷ் செய்து பார்த்தப்படியே இருந்தான் குரு. சரியாக விடியற்காலை நான்கு முப்பதுக்கு, மிருவின் போன் நம்பர் அருகே பச்சை நிறம் காட்டியது. படக்கென துள்ளி எழுந்த குரு, ரூமுக்கு ஓடினான்.

“கணே, நான் வெளிய போறேன்! அவசரம்னா வீட்டுப் போன் யூஸ் பண்ணிக்க” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.

காரில் அமர்ந்து மீண்டும் ஆப்ளிகேஷனைப் பார்த்தான். அது காட்டிய இடம் பி.எம். மெடிக்கல் சென்டர்.

‘இது காஸ்மெடிக் சர்ஜரிக்கு புகழ் பெற்ற இடமாச்சே! இங்க இவ என்ன செய்யறா?’ (கமேண்ட்ல சொல்லிட்டுப் போங்கப்பா அங்க மிரு என்ன செய்யறான்னு)

 

(தவிப்பார்கள்)

error: Content is protected !!