ESK-9

ESK-9

என் சுவாசம் —  9

சிவரஞ்சனி கல்லூரியை விட்டு வெளியேறிய அன்று மதியம்,  செயல்முறைப் பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த கலாவும் கோதையும், சிவரஞ்சனியைக் காணாமல் கல்லூரி முழுவதும் தேடினர்.

அவளது புத்தகப் பை,  நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அவள் அமர்ந்திருந்த இடத்திலேயே கிடந்தது. அவள் மட்டும் மாயமாகிப் போனதைக் கண்டுத் தவித்தனர் தோழிகள்.

கல்லூரி ஆசிரியர்களிடம் தெரிவித்தும் ஒரு பயனும் இல்லை.  “அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாள்” என்கிற அலட்சிய பதிலே கிடைத்தது.

அவளது உடைமைகளை அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு, எப்படி அவள் வீட்டிற்கு போவாள்?  தவித்தபடி கல்லூரி முடியும் வரை காத்திருந்தனர் தோழிகள்.  கல்லூரி முடியவும்  அவசரமாக அவளது வீட்டிற்கு சென்று பார்த்தவர்களுக்கு, பெரும் ஏமாற்றமாக இருந்தது.

அங்கேயும் அவள் இல்லை. காலையில் கல்லூரிக்கு வந்தவள்,  மாயமாக மறைந்திருக்கிறாள். அப்படியெல்லாம் எங்கேயும் சொல்லாமல் செல்பவளும் இல்லை. தோழிக்கு என்ன ஆபத்து ஏற்பட்டதோ? என்று அவர்களது மனம் அஞ்சியது.

சிவரஞ்சனியின் சித்தியும், “அவள் வீட்டிற்கு வராமல் எங்கோ ஓடிவிட்டாள்.  யாருடன் ஓடினாள்?  உங்கள் இருவருக்கும் தெரியாமல் இருக்காது” என்று அவர்களது வீட்டிற்கே வந்து ருத்ர தாண்டவம் ஆடியதில் தோழிகள் இருவரும் கதி கலங்கிப் போய் இருந்தனர்.

தெருவில் உள்ள அனைவரும் பார்க்கும் படி, அவளது சித்தி அவர்களது வீட்டு வாசலில் நின்று கத்தியது, அவர்களது குடும்பத்திற்கு மிகவும் தலையிறக்கமாகப் போய்விட்டது.

சிவரஞ்சனியைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும்,  இரவு முழுவதும் அவள் வீட்டிற்குச் செல்லாதது,   அவள் எங்கே சென்றிருப்பாள்? என்கிற கேள்வியை அனைவரது மனதிலும் ஏற்படுத்தியது.

சிவரஞ்சனியின் வீட்டில், அவளைக் காணவில்லை என்று பதறித் தேட யாரும் இல்லாததாலும்,  அவளது சித்திக்கு அவள் காணாமல் போனது ஒரு வகையில் நிம்மதி தந்ததாலும் அவளைத் தேட யாரும் முற்படவில்லை.

ஆனாலும் கலாவும் கோதையும் அவர்களது கல்லூரித் தோழர்களிடம் கூறி, கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்தனர்.  சந்தேகப் படும்படி ஏதும் கிடைக்காததால், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர்.

அவர்கள் வீட்டினரின் ஆதரவு இல்லாமல், போலீஸிடம் போவதற்கும் பயமாக இருந்தது  அவர்களுக்கு. மூன்று நாட்களாக சிவரஞ்சனி இருக்கும் இடம் தெரியாமல்,  அவளைப் பற்றிய அவதூரான கேள்விகளுக்குப் பதில் அளிக்க  முடியாமல் கலாவும் கோதையும் தவித்துப் போயினர்.

சிவரஞ்சனியின் சித்தி சாரதாவுக்கு, அவள் காணாமல் போனது ஒரு வகையில் பெருத்த நிம்மதியே.  இருக்கும் ஒரு வீட்டையும் சிவரஞ்சனியின் அம்மாவுடைய நகைகளையும், எந்தவிதமான பங்கும் இல்லாமல் முழுதாக தன்னுடைய பிள்ளைக்குக் கொடுக்க  வேண்டும் என்பது அவளுடைய எண்ணம்.

சிவரஞ்சனியை மிரட்டி உருட்டிப் பேச முடியாமல் வைத்திருக்க முடியும் சாரதாவால். ஆனால் அவளது அண்ணன் சிவரஞ்சனியைத் திருமணம் செய்தால் கண்டிப்பாகப் பங்குக்கு வருவான்.  அவனை ஏமாற்ற முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.

 

உண்மையில் தனது அண்ணனுக்கு  சிவரஞ்சனியைத் திருமணம் செய்து கொடுக்க அவ்வளவாக விருப்பம் இல்லை சாரதாவுக்கு. அவள்  படித்து ஏதேனும் வேலைக்குப் போனால், காலம் முழுவதும் அவள் உழைப்பில் வாழ்ந்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் அவளது அண்ணன் பிடிவாதமாக, “அவளைக் கட்டிவை.  நான் என்னுடைய சேமிப்புப் பணத்தைத் தருகிறேன், நீ வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்துக் கொள்” என்றதாலும்,  அனைவரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்றதாலும் ஒத்துக் கொண்டாள்.

அது மட்டுமல்லாமல் சிவரஞ்சனியும் அவளது அண்ணனும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தையும், தனக்கே சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் மனக் கணக்குப் போட்டிருந்தாள். ஆனால், அவளது அண்ணனின் கிறுக்கு குணங்களை எண்ணி பயமும் இருந்தது.

சாரதாவின் அண்ணன் அவனது முதல் மனைவியைச் செய்த சித்ரவதை தாங்காமல், அவள் தற்கொலை செய்து கொண்டாள்.  அவனுக்கு எதிராக அவனது தெரு மக்களே வந்து சாட்சி சொன்னது,  அவனுக்குப் பாதகமாக அமைந்தது.

பணத்தைத் தண்ணீராய் செலவு செய்து,  யார் யாருடைய  கை கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி பெயிலில் வெளியே வந்திருக்கிறான்.  வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு அவனுக்குப் பாதகமாக இருந்தால், அவன் மீண்டும் சிறை செல்வது உறுதி.

சூழ்நிலை இப்படி இருக்க,  சிவரஞ்சனியைத் திருமணம் செய்து அவளையும்  சித்ரவதைப் படுத்தி,  அவள் ஏடாகூடமாக ஏதேனும் செய்து கொண்டால், தானும் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டி வரும் என்ற  பயம் சாரதாவுக்கு உண்டு.

இப்போது சிவரஞ்சனி காணாமல் போய்விட்டாள் என்பது சாரதாவைப் பொருத்தவரை நல்ல செய்தியே.  எனக்கு எந்தத் தொல்லையும் தராமல் சனியன் ஒழிந்தால் நிம்மதி என்றே எண்ணியிருந்தாள்.

ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதற்காக, ‘சிவரஞ்சனியைக் காணவில்லை’ என்று ஒப்பாரி வைத்து பொய்யழுகை அழுதாள்.

அவள் யாருடனோ ஓடிப் போய்விட்டாள் என்று, அனைவரையும் நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இனித் திரும்ப சிவரஞ்சனி வந்தாலும் வீட்டில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அவளது அண்ணன் கேசவனுக்கோ சிவரஞ்சனி காணாமல் போனது,  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் இருந்தான்.  சிவரஞ்சனியின் அழகு அவளைப் பார்த்ததும் அவனைப் பித்தாக்கி இருந்தது.  வயதும் ஆகிவிட்டது,  அவன் மேல் வழக்கும் உள்ளது. இனி அவனுக்கு யாரும் இரண்டாம் தாரமாகக் கூடப் பெண் தர மாட்டார்கள்  என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும்.

சிவரஞ்சனிக்கு யாரும் இல்லை.  சாரதாவின் வாயை ஒன்றிரண்டு லட்சங்களைக் கொடுத்து அடைத்து விட்டால் அவளைத் திருமணம் செய்யத் தடை இருக்காது  என்பது அவன் எண்ணம்.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவரஞ்சனியின் வீடு, அவனது கணக்குப்படி பல லட்சம் ரூபாய் மதிப்பு பெறும். சாரதாவை ஏமாற்றி வீட்டை முழுவதும் கைப்பற்றும் எண்ணமும் கேசவனுக்கு இருந்தது.

அவள் மீண்டும் திரும்பி வரும் போது, அவளை அடித்து மிரட்டியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் மூன்று நாட்களாக அவள் வராதது, அவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருந்தது.

அவரரவர் எண்ணங்களின் படி அவரரவர் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, இறைவன் போடும் கணக்குகளை யார் அறிவார்?

யாருமில்லாதவள் என்று அவளை எண்ணிக் கொண்டு இவர்கள் கணக்கு போட,   அவளுக்கென்று ஒருவன் வருவான்,  இவர்கள்  போட்ட கணக்குகளைத் தூள்தூளாக்கி இவர்கள் அனைவரையும் விரட்டி விரட்டி வெளுக்கப் போகிறான் என்பதையும் யார் இவர்களுக்குச் சொல்வது?

சிவரஞ்சனியைக் காணவில்லை என்று உண்மையில் வருத்தப்படும் ஜீவன்கள் கலா கோதை மற்றும் அவளது தங்கை கல்யாணி மட்டுமே.  அவள் திரும்பி வந்துவிட வேண்டும் என்று கடவுளை நிதமும் வேண்டுபவர்களும் இவர்களே.

மத்திய அமைச்சரின் வீடு.   ஆயுதம்  தாங்கிய காவலர்கள் வாசலின் இருபுறமும் நின்றிருந்தனர். ராகவனும் கதிரும் வரும் வழியைப் பார்த்து, வாசலிலேயே கோபமும் கவலையும் சரிவிகிதத்தில் கலந்து முகத்தில் தாங்கியபடி நின்றிருந்தாள் வாசுகி. ராகவனுடன் கதிரும் கூடவே ஒரு பெண்ணும் வருவதாக அவளுக்குத் தகவல் கொடுத்திருந்தார்  ராகவன்.

மேலும், நடந்த விஷயங்களையும் மேலோட்டமாக அவளிடம் காரில் வரும் போது கூறியிருந்தார்.  வாசுகியைப் பொருத்தவரை அவளுக்குத் தன் குடும்ப நலன்தான் முதலில்.  குடும்பத்தினர் எந்த விதமானப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும்.  குடும்பத்தினர் என்பதில் கதிரும் அடக்கம்.

அரசியலில் மக்களுக்கு தொண்டு செய்கின்றீர்களா செய்யுங்கள்.   அறக்கட்டளைகள் மூலமாக பணத்தைச் செலவு செய்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறீர்களா தாராளமாகச் செய்து கொள்ளுங்கள்.   ஆனால் எந்த விதத்திலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என்பதுதான் அவளது எண்ணம்.

ராகவனுக்கோ கதிருக்கோ ஏதேனும்  சிறு பிரச்சினை என்றாலும், மிகவும் பயந்து போவது வாசுகிதான்.  அதனாலேயே கதிர் அடிதடி கட்டப்பஞ்சாயத்து என்று இறங்குவதில் பெரும்பான்மையான விஷயங்களை வாசுகி காது வரை எடுத்து வருவதில்லை.

அப்படியே அவளுக்குத் தெரியவந்தால் அவளைச் சமாளிப்பதும் கதிருக்குக் கடினமாகத்தான் இருக்கும்.  அதனால் கதிரின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததிலிருந்து அவள் மனம் ஒருநிலையில் இல்லை.

தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு இருக்கும் அவன் மீது, கடுமையான கோபத்துடன் இருந்தாள். அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால்?  என்ற எண்ணமே அவளை பதைபதைக்க வைத்திருந்தது.

போர்டிகோவினுள் ஒய்யாரமாக வந்து நின்றது அந்த வெள்ளை நிற  இன்னோவா. அதிலிருந்து இறங்கிய கதிரையும் ராகவனையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் வாசுகி.

அவளைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தக் கதிரை மேலும் முறைத்தவள்,  பின்னிருக்கையில் இருந்து பயந்தபடி இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் புன்னகையுடன்,

“வாம்மா… “ என்றாள்.  வாசுகியின் கோப முகம் கதிரை பாதிக்க,

“அக்கா…  இப்படி எல்லாம் இவனுங்க ப்ளான் பண்ணுவானுங்கன்னு எனக்குத் தெரியுமா?”

“அதான் சேஃப்பா வந்துட்டேனில்ல?”  என்று கெஞ்சினான்.

“நீ பேசாத கதிர்.  உன் மேல கொலவெறில இருக்கேன்.”

பாவமாக முகத்தை வைத்தவாறு,  “அதையேதான் க்கா அவனுங்களும் சொல்றானுங்க.”

“வாய மூடு…  உனக்கேன்டா இந்த வேண்டாத வேலையெல்லாம்?  எவனோ எக்கேடு கெட்டுப் போனா  உனக்கு என்ன?  உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் என்ன செய்வேன்?”

“இந்த மாதிரி  யோசிச்சவனுங்க இன்னும் என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ?  அத நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.   முதல்ல நீ இந்த   அடிதடி   கட்டப்பஞ்சாயத்து இதையெல்லாம் விடு  சொல்லிட்டேன்.”

“அக்கா அவனுங்க இனிமேல்  எதுவும் பண்ண முடியாதுக்கா.  டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் தூக்கியாச்சு.  அவனுங்க இருந்த தைரியத்துலதான் எம்எல்ஏ குமார் ஆடுனான். அவன் இனிமே பல்லு புடுங்குன பாம்புதான்.

அதுவும் இல்லாம அடுத்து வரப்போற இன்ஸ்பெக்டர் நேர்மையான ஆளு,  டிஎஸ்பி என்கூடப் படிச்சவன். என் ஃப்ரண்டு.  இனி பாரு என்னோட ஆட்டத்தை. என்னையவே ஊர விட்டு ஓட வச்சவனுங்களை நான் சும்மா விடுவேனா?”

அவனை மேலும் முறைத்தவள்,  “நீ அடங்க மாட்டடா.  உன்னய எப்படி அடக்கனும்னு எனக்குத் தெரியும்.  உடனே உனக்கு ஒரு பொண்ணப் பார்த்துக் கட்டி வச்சாதான், உனக்கு குடும்பப் பொறுப்பு வரும். இப்படி நினைச்ச நேரம் நினைச்சபடி திரிய முடியாம, உன்ன ஒருத்தி கேள்வி கேட்டாதான் நீயெல்லாம் அடங்குவ.”

மேலும் சிலபல திட்டுகளை வாசுகி வாறி வழங்க,  நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ராகவன்,

“வாசு…  போதும்மா உள்ள போய் மீதிய திட்டு. அந்தப் பொண்ணு பயந்து போய் நிக்குது பாரு”

இவர்களையே சற்று பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த  சிவரஞ்சனிக்கு பெரும் ஆச்சரியம்தான். இந்தக் காட்டான் என்ன இவங்ககிட்ட இப்படிப் பம்முறான் என்று எண்ணிக் கொண்டாள்.   அவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்ட வாசுகியை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு.

“வாம்மா…  உள்ள வா.”  என்றபடி அவளைக் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் வாசுகி.

“தலைவரே அக்கா திட்டும் போது கொஞ்சம் கூட சப்போர்ட் பண்ணாம, உள்ள போய் மீதிய திட்ட  சொல்றீங்க…  உங்க வீட்டுக்காரம்மாவக்  கொஞ்சம் சமாதானம் பண்ணக் கூடாதா?”

பொய்க் கோபத்துடன் முறைத்தவனை,  முஷ்டியை மடக்கி புஜத்தில் குத்தியவர், “வாங்குடா…  எத்தனை தடவை அவகிட்ட என்னை மாட்டிவிட்டு திட்டு வாங்க வச்சிருக்க.  இப்ப உன் டர்ன் நீ வாங்கு.”

அதற்குள் அழகரும் சுந்தரும் வந்திருக்க அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அழகர்,  “ஏன் மாப்ள, சேதாரம் ரொம்ப அதிகமோ…?”  என்க,  சுந்தரோ, “ திட்டு மட்டும் தானா…? அடியும் வாங்குனியா ண்ணா?”   என்று கலாய்க்க,

“ரொம்ப ஏத்தமாகிப் போச்சு உங்களுக்கு.  அப்புறம் கவனிச்சுக்கறேன் உங்கள”   என்று அழகரை முறைத்தபடி சுந்தரின் மண்டையிலும் ஒன்று போட்டான்.

அந்த பிரம்மாண்டமான வீட்டைச் சுற்றிக் கண்களால் பார்த்தவாறு வந்தவளை, சோபாவில் அமரச் சொல்லவும் தயக்கத்துடனே அமர்ந்தாள்  சிவரஞ்சனி. அவளுக்கும் மற்ற அனைவருக்கும் குளிர் பானம் வரவழைத்துக் கொடுத்தாள் வாசுகி.  வீட்டின் செல்வ நிலையும் பகட்டும் சற்று பதட்டத்தைக் கொடுத்தது சிவரஞ்சனிக்கு.

அவளின் பதட்டத்தைப் பார்த்த வாசுகி, அவளருகே அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுத்து, அவளைப் பற்றிய  விபரங்களை விசாரித்ததில்,  சிவரஞ்சனியின் தயக்கம் சற்று விலகியது.

தொளதொளவென்று அவள் போட்டிருந்த சட்டையைப் பார்த்ததும் தெரிந்தது அது கதிருடையது என்று.  அதுவே அவளுக்கு முட்டி வரை இருக்க அதற்குக் கீழே சற்றும்  பொருந்தாத அவளுடைய சுடிதார் பேண்ட்.  அவளுடைய உடையைக் கண்டதும் வாசுகி,

“ஏன்டா…  அந்தப் பெண்ணக் கூட்டிட்டு வர்ற வழியில அவளுக்கொரு ட்ரஸ் வாங்கியிருக்கலாம் இல்ல.  இப்படியேவா கூட்டிட்டு வருவீங்க.”  என்று கடிந்து கொண்டாள்.

“நீ வாம்மா… வேற புடவை தரேன் குளிச்சிட்டு அத மாத்திக்கோ.”

“அட,  அத யோசிக்கவே இல்ல க்கா.”

“நீ எதத்தான் ஒழுங்கா யோசிச்ச?   கண்டிப்பா இந்த பொண்ணு கூடவும் சண்டை போட்டிருப்ப.”

“அதெல்லாம் நல்லா போட்டான் மா”   என்ற அழகரை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்தவன்  சிவரஞ்சனியிடம்,

“ஏய்…  உன் கிட்ட நான் சண்டையா போட்டேன்?”

அவன் கேட்ட த்வனியே அவளை மிரள வைப்பதாய் இருந்தது.

“இப்ப எதுக்குடா அந்தப் பொண்ண மிரட்டிகிட்டு இருக்க?”

“நீ வாம்மா…  புடவை கட்டத்  தெரியுமில்ல…?”

“கட்டுவேன் க்கா.” என்று தயக்கத்துடன் பதிலளித்தவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொன்ன வாசுகி,  அவளது புதுப்புடவை ஒன்றையும் அதற்குத் தோதான ரெடிமேட் ப்ளவுஸ் ஒன்றையும் எடுத்து வைத்தாள்.

வெளியே வந்தவள்,  “நல்ல பொண்ணாத் தெரியுது கதிர்.  வீட்லயும் நிறைய பிரச்சினை போல.  ஏதாவது உதவி செய்யனும்.”

“செய்யலாம் க்கா.  படிக்கற செலவு முழுக்க நாமளே நம்ப ட்ரஸ்ட் மூலமா ஏத்துக்கலாம்.  படிச்சு முடிச்சதும் நல்ல வேலை வாங்கிக் குடுக்கலாம்.”

“கண்டிப்பா செய் கதிர்.   நீயும் கொஞ்சம் ரிஸ்கான வேலையெல்லாம் விட்டுடக் கூடாதா? உனக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்களால தாங்க முடியுமா சொல்லு?”

“அக்கா…  இனிமே கவனமா இருக்கேன்கா.   தலைவர் எவ்வளவோ நல்ல காரியம் செய்யறாரு.  அது எல்லாம் மக்கள்கிட்ட சேரனும்னா, கெட்டதெல்லாம் கொஞ்சம் களையெடுக்கனும் க்கா.”

“உன் ஒருத்தனால நாட்டைத் திருத்த முடியுமா கதிர்? உன் உயிருக்கே ஆபத்து வர்ற மாதிரி இந்த வேலையெல்லாம் எதுக்கு  உனக்கு?”

“எல்லாரும் இப்படி நினைச்சா முடியுமாக்கா? என் ஒருத்தனால இந்த நாட்டைத் திருத்த முடியாதுதான்.  ஆனா,  என் ஊரைக் கொஞ்சம் திருத்த முடியுமே…   எவ்வளவோ பேர் என்னென்ன தியாகமெல்லாம் இந்த நாட்டுக்காக செய்யறாங்க. நான் என்னால முடிஞ்ச சின்ன உதவியத்தானக்கா செய்யறேன்.”

“…”

“ப்ளீஸ்க்கா…  நீ இப்படி முகத்தை வச்சிருந்தா என்னால எதுவுமே செய்ய முடியாது. ஆனா இனிமே, இப்ப இருந்த மாதிரி அசால்ட்டா இல்லாம, கவனமா இருக்கேன்.  எனக்கு எதுவும் ஆகாது க்கா.  நீ கவலைப்படாம இரு.”

வாசுகியைச் சற்று சமாதானப் படுத்திய பின், கதிரும் அழகரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குப் போய் தயாராகி வருவதாகவும்,  வந்தவுடன் சிவரஞ்சனியை அழைத்துக் கொண்டு சென்று அவளது வீட்டில் விட்டு வரலாம் என்றும் கூறிச் சென்றனர்.

 

இளம் ரோஜா வண்ண  சில்க் காட்டன் புடவை பாந்தமாகப் பொருந்தியது சிவரஞ்சனிக்கு.   ரெடிமேட் ப்ளவுஸும் கச்சிதமாக இருந்தது. தலையை நன்கு துவட்டிக் காய வைத்தவள் தளர்வாகப் பின்னி வாசுகி கொடுத்த பூவையும் வைத்துக் கொண்டாள்.

பளிங்கு போன்ற முகத்தில் வைத்தப் பொட்டைத் தவிர வேறு ஒப்பனைகள் தேவைப்படவில்லை அவளுக்கு. இயல்பிலேயே நல்ல அழகுடைய  அவளுக்கு அந்த அழகிய விலை உயர்ந்த சேலை மேலும் அழகைக் கொடுத்தது.

அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்த வாசுகி,   “ரொம்ப அழகா இருக்கம்மா.  சாப்பிட வா.”

“கூச்சப்படாம சாப்பிடுமா.  உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோ.”

அவளை அமர வைத்து உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது தானும் தயாராகி,   பள்ளியில் இருந்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் கதிர்.

தங்கள் வீட்டினுள் புதிதாக ஒரு பெண் அதுவும் கொள்ளை அழகாக இருந்தது,   குழந்தைகளைத் தானாக அவளிடம் இழுத்து வந்தது.

“அம்மா யார் இந்த அக்கா?”

“உங்க கிட்ட உங்க கதிர் மாமா சொல்லலையா?  இவங்க மாமாவோட ஃப்ரண்டு.”

“மாமா… உங்க ஃபரண்டா இவங்க? நீங்க சொல்லவே இல்ல.” என்றது சின்ன வாண்டு.

பெரியவளோ, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா.” என்று நொடியில் ஒட்டிக் கொண்டாள் சிவரஞ்சனியிடம்.

சிவரஞ்சனிக்கும், சிறியவர்களிடம் பேசிப் பழகுவது சற்று இயல்பாக இருந்தது.

“என்னடா வரும் போதே ஸ்கூல்க்குப் போய் பிள்ளைகளைக் கூட்டிட்டு வர்ற?”

“மூனு நாளா உன்னையும் புள்ளைங்களையும் பார்க்காம ரொம்ப கஷ்டமாப் போச்சுக்கா.  அதான் நேரா ஸ்கூல்க்குப் போயிட்டேன்.”

சிவரஞ்சனியின் இருக்கைக்கு எதிர்ப்புறம்  அமர்ந்தவனுக்கு உணவைப் பறிமாறிய வாசுகி,  “சாப்பிட்டதும் சிவரஞ்சனியை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடலாம் கதிர்.”

“சரி க்கா… “  என்றவனின் பார்வை சிவரஞ்சனியைக் கண்டதும் சற்று விரிந்தது.  அவனது  சட்டையைப் போட்டுக் கொண்டு,  கடல் காற்றில் முகம் பிசுபிசுத்திருக்க,   அள்ளி முடிந்த கூந்தலுடன் இருக்கும் போதே இவனது கவனத்தைக் கலைத்தவள்,  இன்று தழையத் தழையப் புடவை கட்டிப் பூச்சூடி  பொட்டிட்டு,  பளிங்கு சிலை போல மின்னுபவள் வெகுவாக தடுமாற வைத்தாள்.

ரசனையுடன் அவளை வருடியவனின் விழிகள் பிறர் பார்க்கும் முன் விலகிக் கொண்டது. ‘இந்தச் சேலைதான் இவள இவ்வளவு எடுப்பாக் காட்டுது. நாமளும் இந்தக் கலர்ல ஒரு சட்டை எடுப்போமா?’  என்று எண்ணியவன் கலவரமாகத் தலையை உலுக்கிக் கொண்டான்.

‘டேய் கதிரு…  என்னடா நினைப்பு இது? நீ இந்தக் கலருல சட்டை போட்டா ஒன்னு உன்ன பஞ்சு மிட்டாய் விக்குறவன்னு சொல்வாங்க. இல்லயா ராமராஜனுக்குத் தம்பின்னு சொல்லுவாங்க.  உனக்கு இது தேவையா?  நமக்கு என்னைக்கும் வொயிட் அண்ட் வொயிட் தான் சரி’ என்று எண்ணியபடி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

படகில் பார்க்கும் போது கேஷுவலாக ஒரு டீசர்ட்டும் ஷார்ட்ஸ்ஸும் போட்டிருந்தவன்,  இன்று தூய வெண்மை நிற வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் மிடுக்காக அணிந்து   புதிதாகத் தெரிந்தான்.

புருவத்தின் மத்தியில் இருந்த குங்குமப் பொட்டும் அவன் வலது கையில் அணிந்திருந்த வெள்ளிக் காப்பும் அவனது கம்பீரத்தைக் கூட்டிக் காட்டியது.

எப்போதும் மனதுக்குள் காட்டான் என்றும் அவன் இவன் என்றும் கூறிக் கொள்பவள்,  அவனது இந்தத் தோரணையைக் கண்டு வியந்து போனாள். தானாக மனதிற்குள் மரியாதை வந்தது. அவனது தோற்றமே அவனது ஆளுமையைச் சொல்லாமல் சொல்லியது.

கதிர் வண்டியை ஓட்ட ராகவன் அவனருகில் அமர்ந்திருந்தார்.  பின்னிருக்கையில் வாசுகி சிவரஞ்சனி மற்றும் குழந்தைகளும் அமர்ந்து கொள்ள,   வாகனம் கடலூரை நோக்கிச் சென்றது

——காற்று வீசும். .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!