SST—EPI 30 (EPILOGUE)
SST—EPI 30 (EPILOGUE)
எபிலாக்
காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் தங்களின் திருமண பதிவு நிகழ்வுக்கு ஒன்பது மணிக்கே அரசாங்க பதிவு ஆபிசில் காத்திருந்தார்கள் குருவும் மிருவும். மலேசியாவில் திருமண பதிவு என்பது கட்டாய விஷயமாகும். திருமண பதிவுக்கு விண்ணப்பிக்க பாரங்களைக் கொடுத்ததும், மணமகன் மணமகள் போட்டோவுடன் அந்த பாரம் பதிவாளர் அலுவலகத்தில் சில வாரம் காட்சிக்கு வைக்கப்படும். ஆபிசர் கொடுத்த தினத்தில் இவர்கள் வந்து திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
மிக நெருங்கிய சொந்தம் மட்டுமே இதில் கலந்துக் கொள்வார்கள். குருவின் குடும்பத்தில் அவனது அம்மா, தம்பி, தம்பி மனைவி, வந்திருக்க, மிருவின் தரப்பில் ரதி கணே, மற்றும் காசிம் வந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னமே ஒரு ஜோடி உள்ளே நுழைந்திருக்க இவர்கள் வெளியில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
ஃபார்மலாகவோ பாரம்பரிய முறைப்படியோ உடுத்தி வர வேண்டும் என ரூல்ஸ் இருப்பதால், மிரு சேலை அணிந்திருந்தாள். கொஞ்சமாக நகை அணிந்து, மிதமான ஒப்பனையுடன் அழகாக இருந்தாள் அவள். அன்று காலையில் சேலையில் கிளம்பி அவள் ரூமில் இருந்து வெளி வந்தவளைப் பார்த்ததும் குருவுக்கு குப்பென நெஞ்சடைத்தது. முதன் முறையாக சேலையில் பார்க்கிறான் தன்னவளை. அவள் அருகே நெருங்கி வந்தவன் மெல்லிய குரலில்,
“மிருது, கும்முன்னு இருக்கடி!” என ஜொள்ளினான்.
“வாட்டர் ஃபால்ஸ்ச க்ளோஸ் பண்ணுங்க பாஸ்! இந்த கர்மத்துக்குத்தான் நான் சேலையே கட்டறது இல்ல” என சிணுங்கினாள். இப்பொழுதெல்லாம் மிருவுக்கு அடிக்கடி வெட்கம் வருகிறது, சிணுங்கல் வருகிறது, சிரிப்பு வருகிறது.
இன்று சட்டப்படி தனதுரிமை ஆகப் போகிறவளின் சிணுங்கல் கண்டு சிலிர்த்துப் போனான் குரு.
“இந்த சீ ப்ளூ கலர் சாரில அப்படியே தேவதை மாதிரி இருக்கத் தெரியுமா!”
“நெஜமாவா பாஸ்?” தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டவள், எப்பொழுதும் எழும் சந்தேகத்தை தன் மணாளனிடம் வாய் திறந்துக் கேட்டாள்.
“முன்னுக்கு அசிங்கமா தெரியுதா பாஸ்?”
சற்று நேரம் அவள் முகத்தையே உற்று நோக்கியவன்,
“எது அசிங்கம் மிரு? எல்லா பெண்களுக்கும் உள்ளதுதானே உனக்கும் இருக்கு? இதுல என்ன அசிங்கமா தெரியப் போகுது? சிலருக்கு மூக்கு அகண்டதா இருக்கும், சிலருக்கு நீளமா இருக்கும், இன்னும் சிலருக்கு சப்பையா இருக்கும். மூக்கு மாதிரி உனக்கு இருக்கறதும் உடலோட ஒரு பாகம்தான் மிரு! பெருசோ, சிறுசோ, முதல்ல அசிங்கமா இருக்குன்னு நினைக்கறத நிறுத்திக்க மிரு! யூ ஆர் ப்யூட்டிபுல் அஸ் யூ ஆர்” என்றவன் மெல்லிய குரலில்
“ஐவ் நெவர் சீன் எனிதிங் அஸ் பியூட்டிபூல் ஆஸ் யூ” என பாடினான்.
சட்டென முகம் பிரகாசிக்க மலர்ந்து புன்னகைத்தாள் மிரு. அந்த புன்னகை முகம் வாடாமலே அவளையும் அவள் குடும்பத்தையும் அழைத்துப் போனான் குரு. அவனது குடும்பம் நேராக பதிவாளர் அலுவலகத்துக்கே வருவதாக சொல்லிவிட்டார்கள்.
குருவின் குடும்பத்தைப் பார்த்து புன்னகைத்தாள் மிரு. ஹரியை நேரில் பார்த்து பழகி இருக்கிறாள். பிரஷாவுடனும், மேனகாவுடனும் போனில் பேசி இருக்கிறாள். பேபிம்மா கூட மிருவுடன் வீடியோ சேட் செய்திருகிறாள். அவர்களும் இவளைப் பார்த்து முகம் மலர புன்னகைக்க, ஆனந்தி மட்டும் மில்லிமீட்டர் கணக்கில் உதட்டை பிரித்துக் காட்டினார். ரதி அவருடன் பேச முனைய, ஒன்றிரண்டு வார்த்தை மட்டும் மரியாதை நிமித்தம் பேசியவர், கையில் வைத்திருக்கும் பத்திரிக்கையை விரித்துப் படிப்பது போல அமர்ந்துக் கொண்டார். ரதியிடம் கண்களால் மன்னிப்பை இறைஞ்சினான் குரு.
அறவே முகத்தைத் திருப்பாமல், ஒன்றிரண்டு வார்த்தை பேசியதே ரதிக்குப் பெரியதாக தெரிய சிரித்த முகத்துடன் மேனகாவுடனும் பிரஷாவுடனும் ஐக்கியமாகி விட்டார் அவர். இவர்கள் மெல்லிய குரலில் அளவளாவிக் கொண்டிருக்க, தனித்திருந்த தன் அம்மாவின் அருகில் போய் அமர்ந்தான் குரு. மிரு அம்மா மகன் இருவரைத் தான் கவனித்திருந்தாள். அவன் என்னவோ சொல்லி சிரிக்க, ஆனந்தி முகம் மலர கேட்டிருந்தார். உம்மென இருந்த தன் அம்மாவை சிரித்த முகமாக்கியவன், நிமிர்ந்து தனது பொம்மாவைப் பார்த்தான். அவள் புன்னகைக்க, கண் சிமிட்டி அவனும் புன்னகைத்தான்.
இவர்கள் முறை வர அனைவரும் அலுவலக அறைக்குள் நுழைந்தார்கள். பதிவாளராக ஒரு மலாய் பெண்மணி அமர்ந்திருந்தார். அவரின் மேசையில் எதிரே மிருவும் குருவும் அமர, குரு பக்கத்தில் ஆனந்தியும், மிருவின் பக்கத்தி வீல்சேரில் ரதியும் அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் சற்று தள்ளிப் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்கள்.
அந்தப் பதிவாளார்,
“குருப்ரசாத், மிருதுளாஸ்ரீ?’ என கேட்க இவர்கள் ஆமேன தலையாட்டினார்கள். இருவரின் அடையாள அட்டையையும் வாங்கி சரிப்பார்த்தவர், திருமணத்தின் தாத்பரியங்களை விளக்கி, இனிமேல் இருவரும் சட்டப்படி கணவன் மனைவியாக இணைக்கப்படுகிறீர்கள் என வலியுறுத்தி, என்றேன்றும் இணைப்பிரியாமல் வாழ்வோம் என கைத்தூக்கி உறுதிமொழி எடுக்க சொல்லியவர், மேரேஜ் சர்டிபிகெட்டை அவர்கள் முன் நகர்த்தி கையொப்பமிட வைத்தார். மிருவும் குருவும் கையெழுத்திட்டு மணவாழ்க்கைக்குள் நுழைய ஆனந்தியும் ரதியும் சாட்சி கையெழுத்திட்டு அதை ஆசீர்வதித்தார்கள்.
தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டவளின் கையை மேசைக்கடியில் இறுகப் பற்றிக் கொண்டான் குரு. படபடப்புடன் இருந்தவள், அந்த நொடி மனம் லேசாக மெல்லியப் புன்னகை ஒன்றை குருவுக்குப் பரிசளித்தாள். குரு சொல்லி இருந்தப் படி சிகப்பு ரோஜாக்கள் கொண்ட பொக்கேவை வாங்கி வந்திருந்த ஹரி அதை தன் அண்ணனின் கையில் கொடுத்தான். மிருவைக் கைப்பற்றி எழுப்பி, அந்த பொக்கேவை அவளுக்குக் கொடுத்த குரு,
“வெல்கம் டூ மை லைப் மிசஸ் குருப்ரசாத்” என சொல்லி புன்னகைத்தான். வெட்கப் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள் மிரு.
அருகில் இருந்த ஒரு உயர்தரமான உணவகத்தில் மதிய உணவுக்கு டேபிள் ரிசர்வ் செய்திருந்தான் குரு. மூன்று கார்களில் அந்த உணவகத்துக்குப் பயணப்பட்டார்கள். அந்த நீண்ட மேசையில் அனைவரையும் அமரவைத்த குரு, காசிமையும் ஸ்பெஷலாக கவனித்தான். பின்பே மிருவுக்கும் தன் அம்மாவுக்கும் நடுவில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஹரியிடம் இருந்து ஓடி வந்த ரேஷ்மி குருவின் மடியில் அமர்ந்துக் கொண்டாள். மேனகா அழைத்தும் போக மாட்டேன் என அடம் செய்தவளை தன்னிடமே வைத்துக் கொண்டான் குரு. பிரஷா பிள்ளைகளை கணவனிடம் விட்டு விட்டுத் தனியாக வந்திருந்தாள், இல்லையென்றால் மை மாமா, மை குருப்பா என உரிமைப் போராட்டம் வேறு நடந்திருக்கும்.
தனது பேபிம்மாவுக்கு ஊட்டுவதில் கவனமாக இருந்தவன், அவன் வயிற்றைக் கவனிக்கவில்லை. நான்கு வாய் வாங்கிக் கொண்டு அவள் ஓடி விட, ஒரே நேரத்தில் இரு கைகள் அவன் முன் நீண்டன உணவை ஊட்டுவதற்காக. தன் ஆனந்தியின் கையையும் தன் ஆனந்தத்தின் கையையும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. கையில் உணவுடன் மிரு ஆனந்தியைப் பார்க்க, அவரும் கையில் உணவுடன் அவளைத் தான் பார்த்திருந்தார். திண்டாட்டத்துடன் யார் கையில் உள்ள உணவை வாங்குவது என பேய் முழி முழித்த தன் அண்ணனை நமுட்டு சிரிப்புடன் பார்த்திருந்தான் ஹரி.
மகனின் சங்கடத்தை உணர்ந்து ஆனந்தி கையை எடுத்துக் கொண்ட அதே நேரத்தில் மிருவும் தன் கையை எடுத்திருந்தாள். கிடைத்த கேப்பில் சட்டென தானே உணவை அள்ளித் தன் வாயில் திணித்துக் கொண்டான் குரு.
“ஜஸ்டு மிஸ்!” என சிரிப்புடன் சொல்லி அண்ணனைப் பார்த்து கண் சிமிட்டினான் ஹரி. சாப்பிட்டவாறே இன்னும் இரு வாரத்தில் ஈப்போ கோவிலில் நடக்கப் போகும் திருமண ஏற்பாட்டைப் பற்றி பேசினார்கள்.
ஏற்கனவே சென்ற வாரம் கோலாலம்பூர் வந்திருந்த ஆனந்தி, மிரு குருவுடன் சேலை, நகை என ஷாப்பிங்கை முடித்திருந்தார். ரதியால் பல கடைகள் ஏறி இறங்குவது சாத்தியப்படாது என்பதால் இவர்கள் மட்டும் சென்றிருந்தார்கள். மகன் தன் மனைவிக்கு ஆசையாய் சேலை தேர்ந்தெடுப்பதை முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பார்த்திருந்தார் ஆனந்தி. நடு நடுவே மிரு பேச்சுக் கொடுத்தாலும், ஆம், இல்லை, நன்றாக இருக்கிறது என சில வார்த்தைகளிலேயே முடித்துக் கொண்டார். அவளிடம் பேசக்கூடாது என இல்லை! திட்ட வந்தது போல சுமூகமாகப் பேச வரவில்லை அவருக்கு. மனைவிக்குத் தேர்ந்தெடுத்தவன் அம்மா மனம் கோணாமல் அவருக்கும் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தான். ரதிக்கும் கணேவுக்கும் கூட வாங்க மறக்கவில்லை குரு.
குருவின் குடும்பம் உணவு முடித்து அப்படியே ஈப்போ கிளம்பி இருக்க, இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மகளைத் தங்கள் அறைக்கு அழைத்தார் ரதி.
“என்னம்மா?”
“உங்க அத்தை என் கிட்ட ஒரு விஷயம் சொல்லி விட்டாங்கடி!”
“என்னவாம்?”
“சட்டப்படி புருஷன் பொண்டாட்டி ஆகிட்டாலும், சம்பிரதாயப்படி இன்னும் தாலி கட்டலயாம்! அதனால…”
“அதனால???”
“என்னடி மிரு? எல்லாத்தையும் அக்ஷியோன் (பாத்திரம் துலக்கும் சோப்பு) போட்டு விளக்கனுமா? எப்பொழுதும் மாதிரி என் கூடவே படுத்துக்கோ! மாப்பிள்ளை ரொம்ப மோடனா இருக்காரு! இதெல்லாம் பார்ப்பாரோ இல்லையோ, ஆனா அவங்க அம்மா பார்க்கறாங்க. டைம்லாம் குறிச்சு வச்சிருக்காங்களாம். பார்த்து நடந்துக்க சொன்னாங்கடி” என சொல்லி விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டார்.
மிருவுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. தினமும் எல்லோரும் தூங்கியதும், இவர்கள் இருவரும் சமையல் அறையில் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொஞ்சிப் பேசிக் கொள்வார்கள். திருமணத்துகு முன் என் காதலியுடன் டேட்டிங் வேண்டும் என கேட்டவன், விடிகாலை மூன்று மணியைத் தான் அதற்கு ஃபிக்ஸ் செய்திருந்தான். டைனிங் டேபிளில் மிருவை அமர்த்தி, அவன் நாற்காலியில் அமர்ந்து பேசுவான் பேசுவான் பேசிக் கொண்டே இருப்பான். அவள் கண் சொருகும் போது முத்தமிட்டு எழுப்பி அவள் ரூமுக்கு படுக்க அனுப்புவான். சில நாட்களில் இவள் அலாரத்தை அடைத்துப் போட்டுவிட்டு டேட்டிங் வராமல் தூங்கி விடுவாள். அந்நாட்களில் அவள் கையால் சாப்பிடாமல் தனது கோபத்தைக் காட்டுவான் குரு. அவனை கெஞ்சிக் கொஞ்சி சமாதானப் படுத்தி மீண்டும் டேட்டிங்கை ஆரம்பிப்பாள் அவள். மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு இந்த அக்கப்போரே தேவையில்லை! தன்னுடனே தனது ரூமிலே இருந்துக் கொள்ள சொல்லி இருந்தான் குரு. அவன் அம்மாவின் நினைப்போ வேறு விதமாக இருந்தது.
இவளது பொருட்கள் எல்லாம் ஏற்கனவே அவன் ரூமில் அடைக்கலமாகி இருந்தன. அன்றிரவு மேசேஜ் செய்திருந்தான் குரு.
“மிருது! வரல?”
“இல்ல பாஸ்”
“ஏன்?”
“கல்யாணம் முடியட்டும் பாஸ்”
“அப்போ இன்னிக்கு நடந்ததுக்குப் பேரு என்ன?” கோப முகம் காட்டும் இமோஜி பறந்து வந்தது. இத்தனைக்கும் இருவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். அருகில் கணேவும் டீவியில் ஆழ்ந்திருந்தான்.
டைப்பிங் என ஐந்து நிமிடமாக காட்டியதே தவிர, பதில் மட்டும் வரவில்லை மிருவிடம் இருந்து. நிமிர்ந்து அவளைப் பார்த்தான் குரு. உதட்டைக் கடித்துக் கொண்டு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும், முகம் கனிந்தது அவனுக்கு.
“எங்க அம்மா எதாச்சும் சொன்னாங்களா மிரு?”
“தாலி கட்டற வரைக்கும் வேய்ட் பண்ண சொன்னாங்க”
“இது நம்ம பெர்சனல் மிருதும்மா! இதுல அவங்க தலையிடறத நாம அனுமதிக்கக் கூடாது! என் அம்மாவா இருந்தாலும், நம்ம அந்தரங்கம்னு வரப்போ, அவங்க வெளி ஆள்தான்!”
“எனக்குமே ஒரு மாதிரி இருக்கு பாஸ்! வேய்ட் பண்ணலாமே”
“பைத்தியம்! நீ என் பக்கத்துல இருக்கனும்னு தான் நினைச்சேனே தவிர, மேரிட்டல் ரைட்ஸ்ச கிளேம் பண்ணனும்னு நினைக்கலடி! இப்படி முகத்தை சுளிச்சுட்டு இருக்காதே! சரி விடு! இவ்ளோ நாள் வேய்ட் பண்ணிட்டேன் இன்னும் 2 வீக்ஸ் வேய்ட் பண்ணமாட்டேனா!”
“தேங்க்ஸ் பாஸ்!”
“போடி! உன் தேங்க்ஸ்ச நீயே வச்சிக்கோ! என் மிருது என் கிட்ட வரப்போ முழு மனசோட சந்தோசமா வரனும்! அவ்ளோதான்! என் மிரு நோ சொன்னா சத்தியமா அது எனக்கு நோதான்! புரியுதா? ஆனா நம்ம மிட்நைட் டேட்டிங் மட்டும் ஸ்டாப் ஆகக்கூடாது. அது மட்டும்தான் என்னோட பூஸ்ட்! சீ யூ அட் 3”
அவன் பதிலில் மயங்கியவள் கண்ணில் ஹார்ட் இருக்கும் இமோஜியை அள்ளி அனுப்பினாள்.
“கல்யாணம் ஆகியும் வைப்ப திருட்டுத்தனமா டேட்டிங் கூப்பிட்ட ஒரே ஆளு நானாத்தான் இருப்பேன். இப்போ போய் படு” என முடித்துக் கொண்டான் குரு.
நாளொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாக போனது அவர்களின் நாட்கள். திருமண நாளும் வந்தது. ஈப்போவில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மிருவின் குடும்பத்தைத் தங்க வைத்திருந்தான் குரு. மிருவின் மாமா குடும்பம், காசிம் என சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். கோலாலம்பூரில் கொடுக்கப்படும் டின்னருக்கு நட்புக்களையும், ஆபிசில் உள்ளவர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டான் குரு. நிச்சயதார்த்த விழா வைக்காததால் உடன் பரிசம் போட்டு, பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கப்போகும் திருமணத்திற்கு அப்படியே மிருவை அழைத்து செல்லலாம் என முடிவெடுத்திருந்தார் ஆனந்தி.
மிருவின் அலங்காரம், ஜடை மாலை போன்ற விஷயங்களுக்கு மேனகாவே ஏற்பாடு செய்திருந்தாள். திருமண நாளுக்கு முன்னிரவு அந்த வாடகை வீட்டுக்கு குருவுடன் வந்தார் ஆனந்தி. கையில் மெஹந்தியுடன் அமர்ந்திருந்த மிருவை நோக்கிப் போனவர், ஒரு பெட்டியை அவள் அருகில் வைத்தார். தொண்டையை செருமிக் கொண்டவர்,
“என் குருப்பா மனைவிக்குன்னு நான் சேர்த்து வச்ச நகைங்க இந்த பெட்டியில இருக்கு! இதுலாம் இனி உனக்கு சேர வேண்டியது! எடுத்துக்க! நாளைக்கு எது போடனும்னு பிரஷா சொல்லுவா! போட்டுக்க! நம்ம சொந்தமெல்லாம் வருவாங்க! அவங்க முன்ன என் மருமக தங்க சிலையாட்டம் நிக்கனும்! யாரும் நாக்குல பல்ல போட்டு ஒரு வார்த்தை பேசிறக் கூடாது!” என சொல்லி முடித்தார்.
வார்த்தை அவளிடம் இருந்தாலும் பார்வை எதிரில் இருந்த சுவற்றில் இருந்தது. தன்னைப் பார்க்காமல் சுவற்றைப் பார்த்து பேசியதில் கோபம் வந்து விட்டது மிருவுக்கு.
“தேவையில்ல! எனக்கு உங்க குருப்பா போதும்! இதெல்லாம் வேணாம்” என பட்டென சொல்லிவிட்டாள்.
சுவற்றில் இருந்து பார்வையைத் திருப்பி மிருவின் மேல் வைத்தவர்,
“ஹ்ம்ம்..போட்டுக்க மிரு! என் பையன் கௌரவம் இனி உன் கிட்டத்தானே இருக்கு!” என மெல்லிய குரலில் சொன்னார்.
“அத்தை! என்னைப் பார்த்து பேசுங்க, என் கண்ணைப் பார்த்து பேசுங்க! உங்க மகன நான் தானே கட்டிக்கப் போறேன்? இல்ல இவ்வளவு நேரம் நீங்கப் பார்த்து பேசன அந்த குட்டி சுவத்துக்கு கட்டி வைக்கப் போறீங்களா? அத்தைன்னு எல்லா மரியாதையும் நான் உங்களுக்குக் குடுப்பேன்! என்னைப் பிடிக்கலைனாலும், உங்க மருமகளுக்கு உரிய மரியாதைய நீங்க குடுத்துத் தான் ஆகனும். நம்ம ரெண்டு பேரையும் இணைக்கற புள்ளி உங்க மகன்தான். அவருக்கு நீங்களும் வேணும், நானும் வேணும்! அதனால நமக்குப் புடிக்குதோ புடிக்கலையோ உங்க குருப்பாவுக்காகவாச்சும் முகம் திருப்பாம நாலு வார்த்தைப் பேசிக்கறது நல்லதுன்னு நான் நினைக்கறேன். தப்பா எதாச்சும் சொல்லிருந்தா என்னை மன்னிச்சிருங்க அத்தை”
மிரு படபடவென பொரியவும் திகைத்துப் போனார் ஆனந்தி. மெல்லிய குரலில் தான் இருவரும் பேசினார்கள்.
“அம்மா, மிரு!” என்ற குரலில் நிமிர்ந்துப் பார்த்தார்கள் இருவரும்.
கதவில் சாய்ந்து நின்று தவிப்புடன் தாயின் முகத்தையும் தாரத்தின் முகத்தையும் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த குருவை பார்க்க இருவருக்கும் மனம் உருகி விட்டது. மிரு சட்டென புன்னகைக்க, ஆனந்தியும் மகனைப் பார்த்து புன்னகைத்தார். இவர்களின் புன்னகையில் குருவின் முகம் மலர்வதை இருவரும் ஆசையாகப் பார்த்திருந்தனர். அந்த நொடியில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் சகித்துக் கொண்டுப் போவது என முடிவெடுத்தனர் மாமியாரும் மருமகளும். ஆனந்தி பேசிய பேச்சுக்கு மன்னிப்பை வேண்டவில்லை, மிருவும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.
மறுநாள் பிரம்மன் எழும் நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் ஆனந்தி செயற்குழுவில் இருக்கும் அந்தக் கோயிலில் திருமண சடங்குகள் அமோகமாக ஆரம்பித்தன. அந்த அதிகாலையில் கூட ஆனந்தியின் சொந்தபந்தங்கள் வந்து குவிந்து விட்டார்கள். தனி தனியாக குருவுக்கும் மிருவுக்கும் சடங்குகள் முடிய, முகூர்த்தப் புடவையை மிருவிடம் கொடுத்துக் கட்டி வர சொன்னார் குருக்கள். பிரஷா பெண்ணின் தோழியாக இருக்க, கணே மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான். பட்டு வேஷ்டி சட்டையிலும், அவர்கள் குல வழக்கத்தின்படி தலைப்பாகையும் கட்டி ராஜ களையுடன் மேடையில் அமர்ந்திருந்தான் குரு.
“பொண்ண கூட்டிட்டு வாங்க” என ஐயர் அவசரப்படுத்த,
“சேலைய என்ன அப்படியே சுத்தியா விட முடியும்? அழகா கட்டறதுக்குள்ள இந்த பூசாரிங்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது” என மெல்லிய குரலில் அவரைத் திட்டிக் கொண்டே மேக்கப் ஆர்டிஸ்ட் அருமையாக மிருவுக்கு சேலையைக் கட்டிவிட்டார். அழகாக பட்டுப் பாவாடை அணிந்து குட்டி வாண்டுகள் வரிசையாக அலங்கார விளக்குகள் பிடித்து முன்னே நடக்க, அவர்கள் பின்னால் அன்ன நடையிட்டு நடந்து வந்தாள் குருவின் மிரு. தான் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பால் வண்ண சாமுத்திரிகா பட்டுடுத்தி பாவையவள் நடந்து வருவதை விழி மூடாமல் பார்த்திருந்தான் குரு. இவள் என் மனைவி எனும் எண்ணத்தில் அவன் நெஞ்சம் விம்மியது.
சடங்குகள் செய்யப்பட்டு பாத பூஜைக்கு பெற்றவர்களை அழைத்தார் பூசாரி. மிரு ஏற்கனவே தன் அம்மாத்தான் அதற்கு முன் நிற்க வேண்டும் என சொல்லி விட்டதால் வீல் சேரில் மிருவின் அருகில் நிறுத்தப்பட்டார் ரதி. குருவுக்கு ஆனந்தி முன் நின்றார். தன் ரதியின் ஒற்றைக் காலுக்கு பாலால் அபிஷேகம் செய்த மிருவுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஒரு செக்கண்ட் தங்களை வளர்க்க தன் அம்மா பட்டப்பாடும் துயரமும் கண் முன்னே ஓடியது அவளுக்கு. ரதி தன் மகளின் நிலை உணர்ந்து மெல்ல அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். குருவும் தன் ஆனந்திக்கு பாத பூஜை செய்து முடிக்க அடுத்தடுத்து சடங்குகள் செய்யப்பட்டன.
பூசாரி கெட்டிமேளம் என முழங்க, அப்சரஸ்சாக ஒளிர்ந்த தனது மிருதுவுக்கு சொந்த பந்தங்கள் மஞ்சள் அரிசி தூவி ஆசீர்வாதம் செய்ய, தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சுக்கள் போட்டு தனது மறுபாதியாக ஏற்றுக் கொண்டான் குரு. உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்க நின்ற மிருவை தோளோடு அணைத்து,
“உனக்கு ஒரு அடிமை சிக்கிருச்சுன்னு நீ ஹெப்பியா இருக்கனுமே தவிர, கண் கலங்கக் கூடாது மிருது!” என்றவன், பிரஷாவிடம் இருந்து டிஷூ வாங்கி மேக்கப் கலையாமல் மிருவின் கண்ணைத் துடைத்து விட்டான்.
அந்தக் காட்சியைக் கூட அழகாக தனது கேமராவில் கிளிக்கிக் கொண்டார் கேமராமேன். அதன் பின்னர் கோயிலை சுற்றி வித விதமாக இருவரையும் போட்டோ எடுத்துத் தள்ளினார் அவர். கோயில் வளாகத்தில் இருந்த மண்டபத்திலேயே காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மணமக்களுக்கு மொய் கொடுத்து விட்டு வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றார்கள். சில பல வம்புகள் மிருவை முன்னிருத்தி பேசப்பட்டது தான். அதையெல்லாம்,
“மகன் ஆசைப்பட்டான், கட்டி வச்சுட்டேன்! வயசு புள்ளைங்க சந்தோஷம் தானே முக்கியம். சாதி, அந்தஸ்த்து இதையெல்லாம் சாவரப்போ கொண்டுட்டா போக போறோம்!” என ஒரே போடு போட்டு அடக்கி விட்டார் ஆனந்தி. அதற்கு மேல் அவரை எதிர்த்து வம்பு பேச யாருக்கு தைரியம் இருக்கும்!
ஒரு வழியாக திருமணம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் பிடித்தது. சாந்தி மூகூர்த்தம் என ஆனந்தி ஆரம்பிக்க,
“அம்மா அதெல்லாம் ஹனிமூன் போகறப்போ நாங்களே பார்த்துக்கறோம்! கல்யாணம் உங்க ஆசைப்படி எல்லா சாங்கியமும் அனுசரிச்சு செஞ்சிகிட்டேன்ல! அதுக்கும் மேல என் வழியில விட்டுருங்கம்மா” என முடித்துவிட்டான் குரு.
மகனிடம் தன் பாச்சா பலிக்காது என மருமகளிடம் வந்து நின்றார் ஆனந்தி.
“வந்து மிரு!!!”
“சொல்லுங்கத்தை”
“நல்ல நேரம் பார்க்கனும் முதல் இரவுக்கு. என் மத்த புள்ளைங்களுக்கு எல்லாம் முறைப்படி தான் எல்லாம் செஞ்சேன்! இவன் மட்டும் என்னிக்கும் என் வட்டத்துக்குள்ள வரமாட்டான்”
தன்னை திருமணம் செய்ததையும் அந்த வட்டத்தில் இணைக்கிறாரோ என அவர் முகத்தைப் பார்த்தாள் மிரு. சாதாரணமாகத்தான் முகத்தை வைத்திருந்தார் ஆனந்தி.
“சரித்தை! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர மாதிரி ஒரு டைம் பிக்ஸ் பண்ணிக் குடுங்க! எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டாள் மிரு.
இங்கிருந்த சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எல்லாம் விருந்தாட போய்விட்டு இரண்டு நாட்கள் கழித்துதான் கோலாலம்பூரில் இருந்து மால்டிவ்ஸ் போவதற்க்கு டிக்கேட் புக் செய்திருந்தான் குரு. மூன்று நாட்கள் மட்டுமே அங்கே தங்குவது என் ஏற்பாடு. ரதியும் கணேவும் நீண்ட நாள் தனித்திருப்பதை குரு விரும்பவில்லை. அந்த நாட்களில் கவனித்துக் கொள்ள சொல்லி காசிமிடமும் சொல்லி இருந்தாள் மிரு. அவர்கள் திரும்பும் வாரத்தில் வரும் சனிக்கிழமையில் கோலாலம்பூரில் டின்னர் வைப்பது என ஏற்பாடாகியிருந்தது.
தங்களின் எல்லா கடமையையும் முடித்து விட்டு மால்டிவ்ஸ் செல்லும் விமானத்தில் அக்கடாவென சாய்ந்து அமர்ந்தார்கள் மிருவும் குருவும்.
“கல்யாணம் ஆனதுல இருந்து நம்மால டேட்டிங் கூட பண்ண முடியல. எப்போ பாரு பக்கத்துல யாராச்சும் இருந்துகிட்டே இருந்தாங்க! கரேக்டா நைட் டைம்ல உன்னை கண்ணால கூட காண முடியல. போனையும் அடைச்சு வச்சுட்ட. எவ்வளவு கஸ்டமா இருந்துச்சு தெரியுமா எனக்கு! ஐ மிஸ்ட் யூ சோ மச் மிருது” என்றவன் அவள் தோளில் சாய்ந்துக் கொண்டான். அவன் கையை எடுத்து தன் கையோடு பிணைத்துக் கொண்டாள் மிரு.
“இந்த மூனு நாளைக்கு ஒன்லி யூ அண்ட் மீ! மை ஹனியோட ஹனிமூன்!” என சொல்லியவன் புன்னகையுடன் இணைந்திருந்த கைகளைத் தூக்கி முத்தமிட்டான்.
அவர்களுக்குக்காக அவன் புக் செய்திருந்த அறையைப் பார்த்ததும் மூச்சு விட மறந்தாள் மிரு. மலாக்காவையே வாய் பிளந்து ரசித்தவளுக்கு மால்டிவ்ஸ் சொர்க்கலோகமாக காட்சி அளித்தது. கடலை ஒட்டிய ரூம் என சொல்லவதா இல்லை கடலன்னை மடியிலே ரூம் என சொல்வதா! மலைத்துப் போனாள் மங்கை. ரூமில் நுழைந்ததில் இருந்து மிரு முகம் காட்டும் பாவங்களையேப் பார்த்திருந்தவனுக்கு புன்னகை அரும்பியது.
தங்களது லக்கேஜ்களை கொண்டு போய் ரூமில் வைத்து விட்டு வந்தவன், மிருவின் அருகே போனான். குரு புக் செய்திருந்தது, ஹால், குட்டியான கிச்சன், ப்ரைவேட் நீச்சல் குளம், படுக்கை அறை என சகல வசதிகளையும் கொண்ட ரூமாகும். நீச்சல் குளத்தின் அருகே தெரிந்த கடலை பார்த்தப்படி நின்றிருந்த மிருவைப் பின்னிருந்து கட்டிக் கொண்டான் குரு.
“புடிச்சிருக்கா மிரு?”
“ரொம்ப ரொம்ப!”
“பசிக்குதாமா?”
“இல்லையே!”
“எனக்கு பசிக்குதே!”
“அச்சோ! வாங்க சாப்பிடப் போகலாம்” என முன்னே திரும்பினாள்.
திரும்பியவளை முன்னிருந்து அணைத்துக் கொண்டவன்,
“என்னோட ஃபுல் மீல் இங்கத்தானே நிக்கிது! அள்ளி சாப்பிடவா?” என கேட்டுக் கொண்டே மிருவின் காதை கவ்வினான்.
மிருவின் மனதில் ஓடியது ராத்திரி நேரத்து பூஜை சாங்!!!
“சாப்பிட வாடா சாப்பிட வாடா
உன் ஆசைத் தீர என்னை நீயும் சாப்பிட வாடா!!!!”
மயங்கிக் கிறங்கிக் கிடந்தவள் மூளையில் அலாரம் அடித்தது.
‘ஐயோ, நல்ல நேரம்!!!! ராத்திரி ஒன்பதுக்குத்தானே அத்தை சொன்னாங்க! அதை சொன்னாலும், நாம ரெண்டு பேரும் சேரர நேரம்தான் நல்ல நேரம்னு டயலோக் விடுவாரே!’
“மிரும்மா”
“ஹ்ம்ம்”
“ஐ லவ் யூடி”
“ஹ்ம்ம்”
“யூ ஆர் மை சன்ஷைன்டி”
“ஹ்ம்ம்”
“மை ஏஞ்சல்டி”
“ஹ்ம்ம்”
“மை லவ் கோடேஸ்டி(goddess)”
ஒவ்வொன்றை சொல்லும் போதும், காது, மூக்கு, கண்கள் என ஒவ்வொரு இடமாக முத்தமிட்டு முத்தெடுத்தான் குரு.
“பாஸ்”
“என்னம்மா!”
“பசிக்குது”
“நான் உன்னை சாப்பிடற மாதிரி நீயும் என்னை சாப்பிடு! பசி போய்டும்” என சொல்லிக் கொடுத்தான் குரு.
“நெஜமாலுமே பசிக்குது பாஸ்!!”
அவள் கழுத்தில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன், கொஞ்ச நேரம் அவளை அணைத்தப்படி அமைதியாக இருந்தான்.
“ரிப்ரேஷ் ஆகிட்டு, சட்டை மாத்திட்டு வா மிரும்மா! சாப்பிட போகலாம்” என சொல்லியவன், விலகி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.
இந்த ட்ரிப்புக்கா வாங்கி இருந்த ஷார்ட்சும், பச்சைக் கலரில் இலைதளைகள் படம் போட்டிருக்கும் ஷேர்ட்டும் அணிந்து வந்தாள் மிரு. குருவும் அவளைப் போலவே மேட்சிங் உடை அணிந்து வர கைக்கோர்த்து உணவருந்த போனார்கள். உணவு உண்டு, பீச்சில் காலார நடந்து, தண்ணீரில் ஆடி, ஓடிப்பிடித்து விளையாடி, லைட்டாக டின்னர் சாப்பிட்டு விட்டு அவர்கள் ரூமுக்கு வந்த போது மணி ஐந்தரை ஆகியிருந்தது. குளித்து முடித்து இருவரும் ஸ்வீம்மில் பூல் அருகே கடல் காற்று தாலாட்ட தண்ணீரில் கால் நனைய அமர்ந்திருந்தார்கள்.
“மிரும்மா”
“யெஸ் பாஸ்”
“எங்க அம்மா எதாச்சும் சொல்லி அனுப்புனாங்களாடா?”
“உண்மைய சொல்லனுமா பொய் சொல்லனுமா இப்போ?”
“கசந்தாலும் உண்மைத்தான் நல்லது. சொல்லு, என்ன சொன்னாங்க?”
“ஒன்பது மணிதான் நல்ல நேரமாம்”
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன்,
“சாரிடா மிரு” என மன்னிப்புக் கேட்டான்.
“எதுக்கு பாஸ்?”
“அவ்ளோ ஆசை என் மேல இருந்தும் என் அம்மாவுக்காகத்தானே தள்ளிப் போன இன்னைக்கு?”
“அவங்க உங்க அம்மா பாஸ்! உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க! உங்க நல்லதுக்குத்தானே இதெல்லாம் கடைப்பிடிக்கிறாங்க! அதை ஏன் மறுக்கனும்!”
“அவங்க மேல உனக்கு கோபம் கொஞ்சம் கூட இல்லையா மிரு?”
“கோபம் இருந்துச்சுத்தான், ஆனா இப்போ இல்லை! என்னோட கோபம்லாம் ரொம்ப நாள் நிக்காது பாஸ்! கோபத்த உள்ளுக்குள்ளேயே வச்சிருந்தா கெட்ட ஹார்மோன்லாம் சுரந்து அது உடம்புல உள்ள மத்த பார்ட்ஸ்லாம் டேமேஜ் பண்ணுமாம். நமக்கு எதுக்கு அந்த கஸ்டம். நான் ரொம்ப நாள் உங்க கூட சந்தோஷமா வாழனும் பாஸ்” என சொன்னவளை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தான் குரு.
“ஐம் சோ லக்கி டூ ஹேவ் யூ மிரு”
முத்த மழை கொஞ்சம் கொஞ்சமாக உடல் யுத்த மழையாக மாறத் தொடங்கியது. அப்பொழுது கூட இவள்,
“பாஸ்.. பாஸ்! நல்ல நேரம்” என வாய் திறக்க, அந்த வாய்க்கு அழுந்த முத்தமிட்டான் குரு.
“நம்ம நாட்டு டைம் இப்போ ஒன்பது மணி ஆச்சுடி! இதுக்கு மேலயும் என்னை சோதிக்காதே மிருது” என்றவனை புன்னகையுடன் எதிர்கொண்டாள் மிரு. சிக்கித் தவித்து தத்தளித்த ஜோடிப் புறாக்கள், திக்கித் திணறி காதல் கரை தொட்டார்கள்.
ஐந்து வருடங்கள் கழித்து…
“மிருது”
“வரேன் பாஸ்” என மாடி ஏறி தன் கணவனை நாடிப் போனாள் மிரு.
இப்பொழுது குருவும் மிருவும் கொண்டோவில் வசிக்கவில்லை. ரதிக்காகவும், தங்கள் குடும்பத்தின் புது வரவினாலும் டபுள் ஸ்டோரி வீடு ஒன்று வாங்கி குடியேறி இருந்தார்கள்.
“பையன பிடி மிரும்மா! நான் குளிக்க வச்சிட்டேன். கட்டில்ல உட்கார வச்சா இறங்க ட்ரை பண்ணுறான். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்குடா இன்னைக்கு!” என தங்களது இரண்டு வயது மகன் ஜெய்ப்ரசாத்தை மிருவிடம் நீட்டினான் குரு.
“ம்மா!” என சிரித்தப்படியே தாவினான் மகன். மேலே இரண்டு கீழே இரண்டு என பல் முளைத்திருக்க, அவன் சிரிக்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது.
“குட்டி ஜெய் அப்பாவ டிஸ்டர்ப் செய்றீங்களா? வாங்க வாங்க கீழ போகலாம்” என தங்கள் மகனை கொஞ்சிய மிருவை ஆசையாகப் பார்த்திருந்தான் குரு.
ஜெய்ப்ரசாத் அப்படியே குருவின் ஜாடை. ஆனால் நிறம் மட்டும் மிருவைக் கொண்டிருந்தான். ஜாதி பூக்கான் என மிருவை மனம் வருந்த செய்த ஆனந்திக்கு கடவுள் கொடுத்த பரிசு அவன். பேரன் நிறம் வேறாக இருந்தாலும், தன் குருப்பாவை அவனுள் பார்த்தார் ஆனந்தி. பேரனைப் பார்க்க மாதத்திற்கு இரு முறை வந்து விடுவார் கோலாலம்பூருக்கு. வெள்ளிக்கிழமை வருபவர், ஞாயிறு மனமே இல்லாமல் கிளம்பிப் போவார். இவரோடு சேர்ந்து சில சமயம் ஹரியும் குடும்பத்துடன் வருவான். பிரஷாவும் வருவாள். தனிமையே இனிமை என வாழ்ந்த குருவுக்கு குடும்பமே சொர்க்கம் என கற்றுத் தந்திருந்தாள் மிரு.
திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த நேரத்தில் தான் ஆனந்தியுடன் மனதளவில் நெருங்கி இருந்தாள் மிரு.
“மிரு! ரெண்டு வருஷம் ஆகுதே, இன்னும் எனக்குப் பேரப்புள்ளைய கண்ணுல காட்ட மாட்டறீங்க ரெண்டு பேரும்! செக்கப் எதுக்காச்சும் போகறியா இல்லையா?” என ஆரம்பித்தவரை கொலை வெறியில் பார்த்திருந்தவளுக்கு,
“குருப்பாவையும் கூட்டிட்டுப் போய் செக் பண்ண சொல்லு! குறை யாருகிட்ட இருந்தாலும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்” என முடித்தது இவளுக்கு கண்ணீரை வர வைத்தது. குறை என்றால் பெண்ணிடம் தான் என சொல்லும் மாமியார்கள் மத்தியில் மகனையும் செக் செய்து கொள்ள சொன்ன ஆனந்தி அவள் மனதில் உயர்ந்து நின்றார். மிரு டாக்டரைப் பார்த்து, கரெக்டான டயட் இருந்து, சரியான உடற்பயிற்சிகள் செய்து, சில பல மருந்துகள் உண்டு பிறந்தவனே ஜெய்ப்ரசாத்.
குழந்தை தாங்கும் போது, இன்னும் பெரிதாகிப் போன நெஞ்சத்தினால், அடிக்கடி இடுப்பு வலி, முதுகு வலி, மூச்சிரைப்பு என சிரமப்பட்ட மிருவை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான் குரு. அந்த வலி இந்த வலி என அவதியுறும் மிரு சிடுசிடுத்தாலும், கோபம் கொண்டாலும் சாந்தமாகவே அவளை சமாதானப்படுத்தி இதமாக கவனித்துப் பார்த்துக் கொள்வான். பிள்ளைப் பெற்றவளை ஆடி ஓடி ரதியால் கவனிக்க முடியாது என கூடவே தங்கி இருந்து மருமகளையும் பேரனையும் தேற்றிவிட்டார் ஆனந்தி.
மகனை கொஞ்சிக் கொண்டிருந்த மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் குரு.
“மமி மரு!”
“என்ன பாஸ்?”
“இப்போ நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமாடா?”
“தெரியுமே! அதைத்தான் தினம் நைட் சொல்லிட்டே இருக்கீங்களே பாஸ்”
“நைட்ல சொல்லறது எல்லாம் ஒரு போதைல சொல்லறதுடி! பகல்ல சொல்லறதுதான் எப்பவுமே நெஜம்”
“பார்டா! இத்தனை நாள் இது தெரியாம போச்சே எனக்கு” என சிரித்தாள் மிரு.
“என் மிருது பிள்ளை பொறந்ததும் தான் இன்னும் மிருதுவா இருக்கா தெரியுமா?”
“இதுல எதாச்சும் ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ் இருக்கா பாஸ்?”
“சேச்சே! பையன பார்த்துக்கறதுனால பொறுமை வந்துருச்சு! அதனால குணம் இன்னும் மிருதுவாயிருச்சுன்னு சொன்னேன்”
“ஹ்கும் நம்பிட்டேன்! என் கழுத்துல உதட்டால கோலம் போடறத விட்டுட்டு போய் ஆபிசுக்கு கிளம்புங்க பாஸ்” என சொன்னவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே கீழே இறங்கி சென்றாள்.
தன் மகனை ப்ளேபென்னில் விளையாட விட்டவள், தங்கள் எல்லோருக்கும் காலை உணவு சமைக்கப் போனாள்.
இப்பொழுது கணே யூனிவெர்சிட்டியில் படிக்கிறான். செமெஸ்டர் ப்ரேக்குக்கு மட்டும்தான் வீட்டுக்கு வருவான். ச்சேக்கு சொன்னது போலவே தமிழ் பெண்ணை போன வருடம் தான் மணமுடித்திருந்தார். இவர்களும் குடும்பமாய் போய் கலந்து சிறப்பித்து விட்டு வந்தார்கள். காசிமும், ரீனாவும் அடிக்கடி வந்து இவளைப் பார்த்து விட்டுப் போவார்கள். அருளுக்கு இன்னும் ஆஸ்ட்ரேலியாவில் காண்ட்ரேக்ட் முடியவில்லை. திருமணம் முடித்து, தன் மனைவியுடன் அங்கே செட்டில் ஆகிவிட்டான் அவன்.
மிரு இன்னும் குருவின் ஆபிசில் வோர்க் ப்ரோம் ஹோம் செய்கிறாள். வீட்டில் வேலைகளை செய்துக் கொண்டே ப்ரோகிராமும் செய்வாள். குரு சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம் என சொல்லியும், படித்தது மறந்துப் போய்விடும் என சொல்லி பிடிவாதமாக இதை செய்கிறாள்.
“மிரும்மா”
“அம்மா, வாங்க! நல்லா தூங்கனீங்களா?”
“எனக்கு என்ன கவலைடி மிரு! ஆமோகமா தூக்கம் வருது. அன்பான மக, ஆசையான மகன், அருமையான மருமகன், செல்லக்குட்டி பேரன்! என் வாழ்க்கையே நிறைஞ்சு சந்தோஷத்துல தளும்பிக் கிடக்குதுடி! என்னை மாதிரி குடுத்து வச்சவங்க இந்த உலகத்துல யாரும் இல்லைடி”
“மிருது” மேலிருந்து மீண்டும் கத்தினான் குரு.
“போம்மா, தம்பிக்கு என்ன வேணும்னு பார்த்து எடுத்துக் குடுத்துட்டு வா! ஜெய் பக்கத்துல நான் இருக்கேன்”
“ஆபிஸ் போகறதுக்குள்ள பத்து தடவை மிரு, மிருது, மமி மருன்னு அட்டகாசம்டா சாமி” முனகிக் கொண்டே படி ஏறினாள்.
“ங்கொய்யால! இன்னும் என்ன பாஸ்?” கடுப்புடன் கேட்டாள் மிரு.
“மறுபடியும் மால்டீவ்ஸ் போகலாமா?”
“இப்போ நமக்கு ஒரு குட்டிப் பையன் இருக்கான்! பாஸ்க்கு அது ஞாபகம் இருக்கா? கடல் காத்து அவனுக்கு ஒத்துக்காது!”
“அவன் எதுக்குடி மால்டிவ்ஸ்கு? அம்மாவும் ரதிம்மாவும் நம்மல விட நல்லா பார்த்துப்பாங்க! நாம செகண்ட் ஹனிமூன் போலாம்”
“எது? இது செகண்ட் ஹனிமூனா? பிள்ளை தங்கனும்னா வெளியூர் போங்கன்னு டாக்டர் சொன்னத கேட்டு பூகேட் போனது, ஹவாய் போனது, பாலி போனது, போரா போரா போனது எல்லாம் என்ன பாஸ்?”
“அதெல்லாம் பிள்ளை வரம் வேண்டி போனதுடி! அந்த ட்ரீப்லாம் கிக் இருந்தாலும் லேசா ஸ்ட்ரேஸ்சும் இருந்துச்சு! இப்போ போக போறோம் பாரு இதுதான் ரியல் ஹனிமூன்! டிக்கட் போட்டாச்சு! அதே ஹோட்டல், அதே ரூம், அதே மாதிரியே புத்தம் புதுசா கசமுசா!”
வெட்கத்துடன் புன்னகைத்தாள் மிரு.
“புத்தம் புதுசா ஒன்னும் இல்ல பாஸ்! அதே பழைய மிருதான்”
“யார் சொன்னா அதே பழைய மிருன்னு! என் நெஞ்சுல நாளுக்கு நாள் வளந்துகிட்டே வர காதல்னால நீ இன்னும் இன்னும் புதுசாத்தான் தெரியறடா!”
குரு சொன்னதைக் கேட்டு கண் கலங்கியவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
“காதல் எல்லோருக்கும் தான் வரும் பாஸ்! வந்த மாதிரியே பலருக்கு மறைஞ்சும் போயிரும்! உங்கள மாதிரி சிலரால தான் கிடைச்ச காதல நாளுக்கு நாள் அன்பு எனும் உரம் போட்டு வளர்த்து செழிக்க வைக்க முடியும். அந்த வகையில நான் ரொம்ப குடுத்து வச்சவ பாஸ். மஐ மலவ் மயூ மகு மரு”
“மஐ மலவ் மயூ மமி மரு டில் டெத் டூ அஸ் பார்ட்” என சொன்னவன் தன் இணையை இறுக அணைத்துக் கொண்டான்.
சிக்கிச் சிக்கித் தவித்தவர்கள் காதல் கூட்டுக்குள் தாமாகவே சிறைப்பட்டார்கள். இது விடுதலை இல்லாத வாழ்நாள் சிறை!
தடைகளை தாண்டி வந்து
உன்னை நான் நெருங்கிட
கடலிலே மூழ்காமல்
உன்னிலே மூழ்கிட
தேவதை உன்னிடம்
வரம் ஒன்று கேட்டிட
காதலில் விழுந்தேன்
நீ தரிசனம் காட்டிட
ஏ பெண்ணே!!!
சிக்கிச் சிக்கித் தவிக்கிறேன்………….
(அடங்கியது தவிப்பு)