33

உணர்வுகளற்ற விழிகள்…

விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான கோபம் ஆழமாய் அழுத்தி கொண்டிருக்க, ஆதித்தியாவை பார்க்க போகும் தருணம் அவளுக்கு எரிச்சலை தோற்றுவித்திருந்தது.

இருந்தும் அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டு சந்திரகாந்த்திற்காக நடந்து வந்தவளின் எதிரே பைக்கில் சீறிக் கொண்டு ஆதித்தியா வந்தான்.

விந்தியா கேட்டை தாண்டி உள்ளே வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஆதித்தியா, கட்டுபடுத்த முடியாத வேகத்திலும் சடாரென நொடி பொழுதில் அவள் எதிரே கொண்டு வந்து பைக்கை நிறுத்தினான்.

“என்ன விந்தியா… அப்பப்போ ஷாக் கொடுத்து முன்னாடி வந்து நிக்கிற. டைம் நல்லா இருக்கு… வந்த ஸ்பீடுக்கு மோதியிருந்தால்…”

“மோதினா என்ன… எனக்கு அடிபட்டிருக்கும். என்னை நீங்க காயப்படுத்துறதும் நான் காயப்படுவதும் புதுசா நடக்குதா என்ன?” என்றாள்.

ஆதித்தியா பைக்கில் இருந்து இறங்கி வந்தான்.

“என் கூட சண்டைப் போட வந்திருக்கியா? அதைத் தவிர வேறெதுவும் தெரியாதா உனக்கு?”

“ப்ளீஸ் ஆதி… உங்க கூட சண்டை போடற தெம்பெல்லாம் இப்போதைக்கு எனக்கில்லை.உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…… பேசலாமா?”

“ஷுவர்… வா உள்ளே போய்ப் பேசுவோம்”

“இல்ல… இங்க கார்ட்னில் நின்னு பேசுவோமே”

“ஓகே” என்று சொல்லி விட்டு தோட்டத்தில் பசுமையான புற்களின் மீது இருக்கை போல் அமைக்கப்பட்ட கல் மேடையின் மீது கால் மீது கால் போட்டுச் செளகர்யமாக அமர்ந்து கொண்டான். விந்தியாவையும் உட்கார அருகில் அழைத்தான். ஆனால் அவளோ அவன் எதிரே நின்று கொண்டு எங்கேயோ பார்த்தபடி தான் நினைத்ததைப் பேசத் தொடங்கினாள்.

“அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியல… நீங்க வந்து பார்க்கணும்னு விருப்பப்படுறாரு…”

“யாரோட அப்பாவுக்கு?” என்று கேட்டான்.

“ஏன் நடிக்கிறீங்க? உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லனு உங்களுக்குத் தெரியாது? அவர வந்து பாக்காம இப்படி ஊரை சுத்திட்டிருக்கீங்க… மனுஷனா நீங்க?”

“மிருகம்தான்… இப்ப என்ன பண்ண போற? உன் மாமனார நீ பாத்துக்கோ… அதை விட்டுட்டு என்னை ஏன் தொல்லை பண்ற. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி எழுந்து கொண்டவன் அவளைக் கவனிக்காமல் பைக்கை நோக்கி நடந்தான்.

அவனைத் தடுப்பதற்காக அவன் பின்னோடு அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

“ஆதி… நில்லுங்க… நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க… ஆதித்தியா!”

அவள் கத்திய போதும் அவன் அவளைத் திரும்பி கூடப் பார்க்கவில்லை. பைக்கின் சாவியை எடுத்து வண்டியில் போட்டதும் விந்தியா கத்தினாள்.

“நில்லுங்க ஆதி… உயிரோட இருக்கிற வரைக்கும் அந்த மநுஷனோட அருமை தெரியாது… ஆனா மொத்தமா போயிட்டா நீங்க என்னதான் அய்யோ அம்மான்னு கதறினாலும் வராது”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றான்.

“நீங்க போட்டிருக்கிற டிரஸ்… பைக்கு… இந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை… உங்க பேருக்கு முன்னாடி இருக்கிற இன்ஷியலிருந்து கடைசியில இருக்கிற பட்டம் வரைக்கும் எல்லாம் உங்க அப்பா கொடுத்தது… அதையெல்லாம் வேண்டாம்னு தூக்கிப்போட வேண்டியதுதானே”

ஆதித்தியா அவளைத் திரும்பி பார்த்தான்.

“அப்பான்னா… இத செஞ்சிட்டா போதுமா? எங்க அம்மா இறந்த போது தனிமை மட்டும்தான் என் கூட இருந்தது… இவரு இல்ல. எனக்கு உடம்பு சரியில்லாத போது, வேலை செய்றவங்கதான் கூட இருந்தாங்க இவரு இல்ல… என் வெற்றிக்காகப் பாராட்டுறதுக்கு… தோல்வி வந்தா தேற்றுவதற்கு… இவரு இல்ல விந்தியா.

கொஞ்சோண்டு அந்த மனுஷன் மேல அக்கறை இருக்கிற காரணத்தாலதான் இங்க இருக்கேன்… அதுவும் வேண்டாம்னு சொல்லு… தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கேன்”

பைக்கின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டான்.

“அம்மாவும்… அப்பாவும் வேற வேற ஆதி. அப்பாக்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது. அந்த உறவே அப்படிப்பட்டதுதான்.

அப்பா இல்லாததின் வலி என்னன்னு என்னை விட வேற யாராலயும் சொல்லவே முடியாது. அப்பான்னா ஃபீஸ் கட்டுவாரு… துணிமணி வாங்கித் தருவாரு… எப்பையாவது வெளிய கூட்டிட்டு போவாரு… ரொம்பக் குறைவா பேசுவாரு… ஆனா நிறைய திட்டுவாரு… இவ்வளவுதான் எனக்குத் தெரியும்…

ஆனா திடீர்னு ஒரு நாள் அந்த அப்பா என்கிற உறவே இல்லாத போன போதுதான் தெரிஞ்சுது… அவரு வெறும் அப்பா இல்ல எங்க வீட்டோட அஸ்திவாரம். கனவுகளைத் தொலைச்சிட்டு பணத்தின் பின்னாடி ஓடும் போதுதான் தெரிஞ்சது… இழந்தது அப்பாவை மட்டும் இல்ல சகலத்தையும்.

ஆனா அந்தத் தலையெழுத்து உங்களுக்கு இல்ல… மாமா இன்னும் உங்க பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைச்சிருக்காரு… அந்த நன்றிக்காவது ஒரே ஒரு தடவை போய் பாருங்க… அப்பானு கூப்பிடுங்க…

அப்புறம் அவர் இல்லாம போயிட்டா நீங்க என்ன கூப்பிட்டாலும் அது வேஸ்ட்டுதான்… எந்த தனிமை உங்கள வாட்டுச்சோ அதே தனிமையை மாமாவும் அனுபவிச்சு இருக்காரே… ஒரு துணையைத் தேடிக்கணும்னு நினைச்சா உங்க நிலைமை என்னவாயிருக்கும்?

இதுக்கப்புறமும் உங்களோட பிடிவாதம்தான் முக்கியம்னு நினைச்சீங்கன்னா… பரவாயில்ல… அட்லீஸ்ட் அவரு முன்னாடி பொய்யா நடிங்க… பாசம் இருக்கிற மாதிரி பேசுங்க… நீங்க விட்டுக்கொடுத்து போறதினால ஏதாச்சும் நன்மை ஏற்படும்னா நீங்க அதைச் செய்யலாமே…

உங்க அப்பா உங்களுக்கு ஏற்படுத்தினதா நீங்க சொல்ற வலியை விட நூறு மடங்கு அவமானத்தையும் வலியையும் நீங்க எனக்குத் தந்திருக்கீங்க… இருந்தும் திரும்பவும் என் விதி… நான் அந்த அவமானத்தைப் பொறுத்துக்கிட்டு உங்க முன்னாடி பேசிட்டிருக்கேனா… மாமா குணமாகணும் என்கிற ஒரே காரணத்தினாலதான்…

எல்லா உறவுகளையும் உங்க சுயநலனுக்காக கொன்னு புதைச்சிட்டு நீங்க சந்தோஷமா இருக்க முடியாது ஆதி. பிளீஸ் யோசிச்சு முடிவெடுங்க” என்று அவனிடம் கண்ணீரோடு கை கூப்பிக் கேட்டுக்கொண்டாள்.

ஆதித்தியா விந்தியாவின் அழுகையினால் மொத்தமாய்க் கரைந்து போனான்.

விந்தியா கடைசியாய் , “இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. உங்க டைமை வீணடிச்சிருந்தா… ஐம் சோ சாரி” என்று சொல்லிவிட்டு ஆதித்தியாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கண்ணீர் நிரம்பிய கண்களோடு அங்கிருந்து வெளியேறினாள்.

விந்தியாவின் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்த ஆதித்தியாஅவளின் இன்னோரு பக்கம் வலியும் வேதனையும் கலந்தது என்பதை முதல் முறையாய் இப்போதுதான் உணர்ந்து கொண்டான்.

எப்போதுமே அழகாய் அவள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் அந்த விழிகள், அவனை ஏறிட்டும் பார்க்காமல் உணர்வுகளற்று கிடந்ததைப் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டான்… அவன் அன்று அவளுக்கு இழைத்தது பெரும் அநீதி என்று.

இங்கே விந்தியா ஆதியுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிவா கோவாவை சென்றடைந்தான். இம்முறை அவனின் எண்ணமெல்லாம் எம். வி. டி லிக்கர் ஃபாக்டரியை பற்றியதுதான். அந்த நிறுவனத்தின் எம். டி அவினாஷின் பி. ஏ ஷபானாவை சந்திக்க முடிவு செய்தான்.

பெரும் முயற்சிக்குப் பின் அவள் சிவாவை சந்திக்க சம்மதித்தாள். அதுவும் ஆராவாரித்துக் கொண்டிருக்கும் அரபிக் கடலின் நடுவில்…

ஒரு பெரிய போட்டில் இருவரும் அமர்ந்திருக்க அவளின் பத்து வயது மகன் ஆஷிக் கடலுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எகிறி குதிக்கும் டால்ஃபின்ஸை பார்த்தபடி சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.

“நான் உங்களை ரொம்பவும் தொந்தரவு செய்திட்டேனோ?” என்று சிவா கேட்டான்.

“ரொம்ப… ரொம்ப” என்றாள் ஷபானா தன்னுடைய விருப்பமின்மையை.

“நீங்க சென்னையா ஷபானா?”

“அதென்ன தமிழ் நாடுன்னாலே சென்னைதானா? வேற ஊரெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாதா? நான் திருநெல்வேலி… என் கணவர் இங்க இருந்ததினால நான் இங்கே வந்துட்டேன். இப்போ ஹி இஸ் நோ மோர். இருந்தாலும் என்னோட வேலை… குழந்தையோட படிப்புக்காக இங்கயே செட்டிலாயிட்டேன்”

“நீங்க முதலில் கேத்ரீன் ஆபிஸிலதானே வேலை பார்த்தீங்க… திடீர்னு ஏன் எம். வி. டில ஜாயின் பண்ணீங்க?”

“கேத்ரீனோட டெத்துக்குப் பிறகு அங்க மேனேஜ்மென்ட்… சரியில்ல”

“அது மட்டும்தான் ரீஸனா?”

“இல்லதான்… ஆனா காரணத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லணுமா?”

“கேத்ரீனோட இருந்த போது நீங்க ஆதித்தியாவை பார்த்திருக்கீங்களா?”

“எனக்கு ஆதித்தியாவை நல்லா தெரியும்… ஆனா அவங்களுக்கு இடையில திடீர்னு டெர்ம்ஸ் சரியில்லாம போயிடுச்சு”

“அதற்கான காரணம் உங்களுக்கு தெரியாதா?”

“தெரியாது”

“நீங்களும் கேத்ரீனோட ஹோட்டல் ஆதித்தியாவில் வங்து தங்கி இருந்தீங்க இல்ல?”

“ஆமாம்… ஆனா மீட்டிங் முடிஞ்சதும் மேடம் என்னைக் கிளம்பச் சொல்லிட்டாங்க… அவங்க அடுத்த நாள் வருவதா சொன்னாங்க… ஆனா பேட் லக் அந்த அக்ஸிடென்ட்”

“அது ஆக்ஸிடென்டா?”என்று கேட்டான் சிவா.

“ஹௌ டு ஐ நோ?… நான்தான் அங்க இல்லியே”

“மினிஸ்டர் வித்யாதரனை உங்களுக்குத் தெரியுமா?”

“எம். வி. டி லிக்கர் பாஃக்டரியோட உண்மையான ஓனர்… ஆனா இதை நீங்க எந்தக் கோர்ட்டில் சொன்னாலும் எடுபடாது”

“அந்த மினிஸ்டரோட மகனைத் தெரியுமா உங்களுக்கு?”

“அந்த பொறுக்கி பெயர் மனோஜ்… அடிக்கடி கோவாவிற்கு வருவதும், குடிப்பதும், கேம்ப்ளிங் ஆடுறதும் அவனோட வழக்கம்”

அவன் அவளிடம் ஒரு ஃபோட்டோவை காண்பிக்க ஷாபானா அவளை அடையாளம் காண்பித்தாள். விந்தியாவின் யூகம் சரியாக இருந்தது. இவர்களின் பேச்சுத் தடைபடும் விதமாய்ப் பெரிய சத்தம் ஒலித்தது.

அவர்கள் என்னவென்று யோசிப்பதற்குள் ஷபானாவின் மகன் ஆஷிக் தண்ணீரில் விழ அவள், “ஆஷிக்… ஆஷிக்” எனக் கதறினாள்.

சிவா கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்தக் கணமே கடலில் குதித்தான்.

ஆஷிக்கை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பின் சிவா அந்த ஈர துணியில் அமர்ந்திருக்க, ஷாபானா தன் மகனை எண்ணி கதறினாள்.

சிறிது நேரத்தில் ஆஷிக் ரொம்பவும் இயல்பாக மருத்துவமனையின் படுக்கை மீது அமர்ந்து கொண்டு தான் விழுந்த கதையை ஹிந்தியில் ஷபானாவிடம் சொல்லி கொண்டிருந்தான்.

சிவா எதுவும் புரியாதவனாய் அவன் எப்படி விழுந்தான் என ஷபானாவிடம் கேட்டான்.

“அவனா விழலயாம்… அங்க இருந்த கயிறு தடுக்கி விட்டிருச்சாம்” என அவனின் பாணியிலேயே சிவாவிடம் சொன்னாள்.

சட்டென்று சிவாவிற்கு ஆஷிக்கின் பதில் வேறு ஒரு கேள்விக்கான பதிலாய் தோன்றியது.

இப்படி அவன் சிந்தித்துக் கொண்டிருக்க ஷபானா நெகிழ்ச்சியோடு நன்றி கூறினாள். கேத்ரீன் கேஸில் அவளால் முடிந்த உதவிகளை எப்பேர்பட்ட ஆபத்து வந்தாலும் செய்வதாக உறுதியளித்தாள்.

34

விந்தியா ஸ்தம்பித்தாள்

விந்தியா ஆதித்தியாவிடம் பேசிவிட்டு வந்த பிறகும் அவன் புரிந்து கொண்டு வருவானோ என்று அவளுக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

அதே நேரத்தில் மருத்துவமனையில் சந்திரகாந்தை அவளே உடன் தங்கி கவனித்துக் கொண்டிருந்தாள். நர்ஸ் வந்து சில ரிப்போர்ட்ஸை வாங்க விந்தியாவை அழைத்துச் செல்ல ஆதித்தியா சந்திரகாந்த்தின் அறை தேடி வந்து சேர்ந்தான்.

உறங்கி கொண்டிருந்த சந்திரகாந்தை எழுப்ப மனமின்றி அவன் அந்த அறையின் ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தான். சந்திரகாந்த் விழி மூடியபடி ஆதித்தியா என்ற பெயரை முணுமுணுத்துக் கொண்டிருக்க மெலிதாய் அவரின் அழைப்பு அவன் காதுகளில் விழுந்தது. அவரை ஆசுவாசப்படுத்த தன் கைககளால் சந்திரகாந்தின் கரத்தை பிடித்துக் கொண்டான். எத்தனை பெரிய பிரிவாயினும் தன் மகனின் தொடுகையைப் புரிந்து கொண்டவராய் கண்கள் திறந்து பார்த்தார்.

கனவுக்கும் நினைவுக்கும் இடையில் ஆதித்தியாவின் முகம் அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்த, ஆதித்தியா தான்  அந்நாள் வரை விரும்பாத அந்த வார்த்தையை மனதில் பொங்கிய பாசத்தோடு உச்சரித்தான்.

“ஐம் வெரி சாரி டேட்… நான் உங்களைப் புரிஞ்சிக்காமலேயே இத்தனை காலமாய் இருந்துட்டேன்”

இளம் வயதில் ஆதித்தியா அழைத்த தோரணையும் உச்சரிப்பும் அதே அன்புடன் வெளிப்பட்டது. இத்தனை காலமாய் சந்திரகாந்தை அழுத்தி கொண்டிருந்த பாரம் அந்த ஒற்றை வார்த்தையில் கரைந்து போனது.

விந்தியா ரிப்போர்ட்டினை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைய கதவினை திறந்தாள். சந்திரகாந்தும் ஆதித்தியாவும் கண்கள் கலங்கியபடி தாங்கள் தேக்கி வைத்திருந்த அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது.

அவர்களுக்கு இடையில் செல்ல விரும்பாமல் விந்தியா, ஃபிளாஸ்க்குடன் எதிரே வந்த சண்முகத்திடம் ரிப்போர்டுகளை ஆதித்தியாவிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு தன் கடமை முடிந்ததென புறப்பட்டாள்.

சரியாக நேரெதிரே சமுத்திரன் கடந்து போக இருவருமே பார்த்தபடி செல்ல, விந்தியா அவனை ஏளனமாய்ப் பார்த்து சிரித்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம் சந்திரகாந்தின் அறைக்குள் நுழையும் வரை சமுத்திரனுக்கு புரியவில்லை. ஆதித்தியா சந்திரகாந்தை நிமிர்த்தி சாய்வாக அமர வைத்தான்.

சமுத்திரன் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து அதிர்ச்சியுற்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல் சந்திரகாந்திடம் சந்தோஷக் களிப்பாய் இருப்பது போல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தான்.

ஆனால்ஆதித்தியாவிற்கு சமுத்திரனை பார்ப்பதில் துளி கூட விருப்பமில்லை என அவனின் முகபாவனையில் தென்பட்டது. அந்தச் சமயத்தில் சண்முகம் ரிப்போர்ட்ஸை ஆதித்தியாவிடம் விந்தியா கொடுக்கச் சொன்னதாக நீட்டினான்.

உடனே ஆதித்தியா விந்தியாவைத் தேடிக் கொண்டு மருத்துவமனை வாசல் வரை சென்றான். அவள் போன திசை தெரியாமல் அவனின் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க, அவனின் இதயம் அவளின் ஒரு சந்திப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவனின் தோளில் பட்ட கை அவனைத் திரும்பி பார்க்க வைத்தது.

பின்புறம் சமுத்திரன் நின்றிருந்தான். ஆதித்தியாவிற்கு அவன் மீது கோபம் குறையவில்லை என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

“என்ன ஆதித்தியா… இன்னும் ஒரு வாரத்தில் கேத்ரீனோட கேஸ் ஹியரிங்க் வருது… ஞாபகம் இருக்கா?” என்றான்.

“மறக்கல…”

“நான்தான் உனக்காக ஆஜராகணும்”

சிறிதும் யோசிக்காமல் ஆதித்தியா, “அவசியமில்லை” என்றான்.

சமுத்திரன் கொஞ்சம் சத்தமாகச் சிரித்து விட்டு, “அப்படின்னா விந்தியா உனக்காக…”

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ஆதித்தியா கோபக் கனலோடு அவனைப் பார்த்து

“டோன்ட எவர்…” என்று விந்தியாவின் பெயரை சொன்னதுக்கு விரல்களை ஆட்டி மிரட்டினான்.

“அப்புறம் உன் இஷ்டம்… கடவுள்தான் உன்னைக் காப்பத்தணும்”என்று சொல்லிவிட்டு சமுத்திரன் சென்றான்.

ஆதித்தியா சமுத்திரனை இளக்காரமாய் பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

விந்தியா வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து சிவா கோவாவிலிருந்து அவளுக்குப் ஃபோன் செய்தான்.

“எங்க இருக்க விந்து?” என்று கேட்டான் சிவா.

“வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்” என்றாள்.

“அந்த வேணு மகாதேவன் வீட்டுக்கு போயிட்டு இருக்காராம்”

“எதுக்கு… அவனுக்கு வேறு வேலையில்லையா?”

“அதெல்லாம் பேச நேரமில்ல விந்து… வனிதா உளறிட்டானா… போச்சு எல்லாமே வீணா போயிடும்… ஏதாவது ஐடியா பண்ணுடீ”

“என்னடா சிவா நீ… நான் என்ன ஐடியா குடோனா வைச்சிருக்கேன்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது… டூ சம்திங்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விந்தியா என்ன செய்வதென்று குழம்பினாள். உடனே வனிதாவுக்குத் தொடர்பு கொண்டு, சில விஷயங்களைச் சொல்லி அதன்படி நடந்து கொள்ள சொன்னாள். ஆனால் மனதில் ஒருவிதமான பயம் குடிகொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததும் வனிதா தலையைச் சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளே போன மறு கணமே “என்னாச்சு?” என்றாள் விந்தியா.

“பயந்துட்டேன் அக்கா… பட் நீ சொன்ன விஷயம் வொர்க் அவுட் ஆச்சு… அந்த மனிஷன் வாசலோடவே போயிட்டார். “

“நான் யாரு?” என்று விந்தியா சுடிதாரின் காலரை தூக்கி விட அவளின் பின்மண்டையிலேயே அடி விழுந்தது.

பின்னாடி இருந்த சரோஜாவை பார்த்து, “அத்தை!” என்றாள்.

“யாருடி இந்த வேலை எல்லாம் பார்த்தது?” என்றாள் சரோஜா.

விந்தியாவும் வனிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“சிவாவுக்கு அம்மை போட்டிருச்சுனு சொன்னா அந்த ஆபிஸர் உள்ளே வர மாட்டார். வெளியவே வேப்பிலையைப் பார்த்து வாசலோடு போயிடுவாருன்னு…” இழுத்தாள் விந்தியா.

“அடிப் பாவீங்களா… தெய்வ குத்தமாயிடும்டி”

விந்தியா விழுந்து விழுந்து சிரித்து விட்டு

“நல்லதுக்காகச் சொல்ற பொய்யினால் எதுவும் ஆகாது” என்றாள்.

“கலி காலம்” என்று சொல்லிவிட்டு சரோஜா உள்ளே சென்றாள்.

விந்தியாவின் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த வனிதா, “அக்கா… நீ எல்லாமேஆதி மாமாவுக்காகத் தானே செய்யுற” என்று கேட்டாள்.

அத்தனை நேரம் பளீரெனச் சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் இருள் அடர்ந்து போனது. வனிதாவை கூர்மையாய் பார்த்து விட்டு விந்தியா மாடி ஏறி தனிமையைத் தேடி சென்றாள்.

ஆதித்தியாவின் கவனிப்பில் சந்திரகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆதித்தியாவின் கேஸ் கோர்ட்டுக்கு வரும் அதே நாளில் சந்திரகாந்திற்கு டிஸ்சார்ஜ். தானும் கோர்ட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்தவரை சண்முகத்துடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆதித்தியா மட்டும் கோர்ட்டுக்கு வந்தான்.

அங்கே சிவாவும் வேணுவும் கேஸைப் பற்றி மும்முமராகப் பேசிக் கொண்டிருந்தனர். சிவா கோவாவிற்குப் போனதோ வந்ததோ வேணுவுக்குத் தெரியாத போதும் சிவாவிற்கு அம்மை போட்டதாக சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. சிவாவின் முகத்தில் எந்தவித அடையாளமும் இல்லாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆதித்தியா கோர்ட்டில் தனியாகவே நின்று கொண்டிருந்தான். அவனுக்காக வாதாட ஒரு வக்கீலை கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை.

அந்தச் சமயத்தில்தான் சுபா வக்கீல் உடையில் ஆதித்தியாவை நோக்கி நடந்து வந்தாள்.

ஆதித்தியா அவளை அப்படிப் பார்த்ததே இல்லை. சுபா ஆதித்தியாவை நெருங்கி வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக,

“என்ன சுபா இதெல்லாம்… ஒண்ணும் புரியலியே”

“நீங்கதான் என் வீட்டுக்காரர உங்க கேஸில் ஆஜாராக கூடாதுன்னீங்களே”

“அதுக்காக சமுத்திரன் உன்னை அனுப்பினானா?”

“நீங்க வேறண்ணா… இந்தக் கருப்பு கோட்டை போட்டதிலிருந்து ஃபேன்ஸி டிரஸ் காம்படிஷன் போறியானு கிண்டல் பண்ணிட்டிருக்காரு”

“அப்புறம்… நீயாகவே எனக்காக வந்தியா?”

“அண்ணிதான் இந்தக் கேஸில் ஆஜாராகச் சொல்லி வற்புறுத்தினாங்க… நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன்… நீ வாதாடுன்னாங்க” என்றாள்.

“விந்தியாவா!” என்று கேட்ட ஆதித்தியா அவள் கோர்ட்டுக்கு வந்து இருப்பாளா என அவன் மனம் தேடி அலைந்தது. ஆனால் அவன் தேடல் வீண்தான். விந்தியா அங்கு இல்லை.

அவனின் தேடலை உணர்ந்தபடி சுபா அவனிடம், “அண்ணி வரலண்ணா… நாம உள்ளே போவோமா? நமக்குக் கொஞ்சம் ஃபார்மாலிட்டீஸ் இருக்கு” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சிவா வேணுவிடமிருந்து விலகி வந்து விந்தியாவை தொடர்பு கொண்டான்.

“நீ வரலியா?” என்றான்.

“இல்ல சிவா”

“ஏன்?”

“நான் வருவதைப் பத்தி இப்போ என்ன… சுபா கோர்ட்டுக்கு வந்துவிட்டாளா?” என்றாள்.

“வந்துட்டாங்க… பட் சுபாவை நினைச்சா பயமா இருக்கு… வேற எக்ஸ்பீரியன்ஸ்ட் லாயரா பாத்திருக்கலாமே”

“புரியாம பேசுற சிவா நீ… வேற எந்த லாயரை வைத்தாலும் அவன் அந்த மினிஸ்டருக்கு விலை போகமாட்டான்னு என்ன நிச்சயம்? அப்புறம் எல்லாமே வேஸ்ட்டா போயிடும்… மோரோவர் எந்த சூழ்நிலையிலும் சுபா ஆதியை விட்டு கொடுக்க மாட்டாள்” என்றாள்.

“வெரி கிளவர்… சரி நான் உள்ளே போறேன்… அப்புறமா கேஸ் விசாராணை முடிந்ததும் ஃபோன் செய்றேன்” என்று சொல்லிவிட்டு கோர்ட்டிற்குள் சென்றான்.

கேத்ரீன் கேஸின் முதல் அமர்வு என்பதால் இரு பக்கமும் தங்கள் தங்கள் வாதங்களை விளக்கினர். அதிலும் சுபா ஆரம்பத்தில் திணறினாலும் ஆதித்தியா குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் ஆதாரம் வெறும் யூகமே என்று வாதாடினாள்.

கடைசியில் ஆதித்தியாவின் நிபந்தனை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீதிபதி அடுத்த அமர்வில் விசாரிக்க வேண்டிய சாட்சிகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கேஸை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்தார்.

விசாரணை முடிந்து வெளியே வரும் பொழுது ஆதித்தியா சுபாவினை வாய் ஒயாமல் பாராட்டினான்.

சுபா கேத்ரீனோட இறப்புக்கு நியாயம் கிடைத்த பிறகே முழுமையான வெற்றி என்றாள். அவளின் முதிர்ச்சி அவனுக்கு ஆச்சிரயமாக இருந்தது.

“சிவா அண்ணன்தான் என்னுடைய நேர்த்தியான வாதத்திற்கு காரணம்” என்றாள் சுபா.

ஆதித்தியாவிற்கு சுபா சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிவாவை தான் எதிரியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் தனக்காக இத்தனை பெரிய உதவியைச் செய்து கொண்டிருக்கிறானா என்பதை ஆதித்தியாவால் நம்பவே முடியவில்லை.

தான் இன்று வரையில் நண்பன் யார் எதிரி யார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பதை மட்டும் ஒருவாறு உணர்ந்து கொண்டான்.

விந்தியா ஆதித்தியாவின் சந்திப்பை தவிர்க்க கோர்ட்டுக்கு போகவில்லை என்றாலும், அவள் மனம் முழுக்க அந்த நினைப்பிலேயே தவித்துக் கொண்டிருந்தது.

விந்தியாவின் ஃபோன் ஒலிக்கச் சிவாவாக இருக்கும் என்றெண்ணி போனை எடுத்தாள்.

மறுபுறத்தில் வேறு யாருடைய குரலோ ஒலித்தது.

“என்ன அரபிக் குதிரை… எப்படி இருக்க?” என்று கேட்டது அந்தக் குரல்.

விந்தியா ஒன்றும் புரியாமல், “யார் நீங்க… உங்களுக்கு யாரு வேணும்?”

“நீதான்டி வேணும்”

விந்தியாவிற்கு கோபம் தலைக்கேற, “யாருடா நீ… மரியாதை இல்லாம பேசிட்டிருக்க…”

“யாருன்னு சொன்னா… ஞாபகம் வருமா? நீ அடிச்ச அடியை நான் மறக்கலடி… அதுக்குப் பதிலடி கொடுக்க வேணாம்?”

விந்தியாவிற்கு இப்போது புரிந்தது. அது அந்த மினிஸ்டர் மகன் மனோஜ்.

“கோழை மாதிரி ஃபோன்ல பேசிட்டிருக்க… நேர்ல வாடா ராஸ்கல்” என்றாள் விந்தியா.

மறுபுறத்தில் கலகலவென சிரிப்புச் சத்தம் கேட்டது.

“நிச்சயம் உன்னைத் தேடி வருவேன்… ஆனா நீ கதறி கதறி அழுவதைப் பார்க்க வருவேன். யாரு செத்தா நீ ரொம்ப அழுவ… உன் நண்பன் சிவாவா… இல்லன்னா உன் ஆசை புருஷன் ஆதித்தியாவா?” இப்படி மனோஜ் கேட்டதுமே விந்தியா கலக்கமுற்றாள்.

விந்தியாவிற்கு பேச வார்த்தைகளே வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“என்ன அமைதியாகிட்ட… வலிக்குதா? உன் நண்பன் இல்லைன்னா உன் கணவன்… இவங்கள்ள யாருக்கு என்னவாகுமோனு கதறுடி…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் மனோஜ்.

விந்தியாவிற்கு அந்த நொடி உலகமே சுழலாமல் நின்று போனது. அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

error: Content is protected !!