37

துரோகம்

நீதிமன்ற வாசலில் சுபா விந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

கேத்ரீனின் வழக்கு விசாரணைக்கான அழைப்பு வர எல்லோருமே நீதிமன்றத்தின் உள்ளே சென்று அமர்ந்தனர்.

ஆதித்தியா குற்றாவளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்தான்.

சுபா அவள் எடுத்த குறிப்புகளை மேலே வைத்துக்கொள்ள பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதன் தம் வாதத்தை முதலில் எடுத்துரைத்தார்.

“இந்த வழக்கில் கேத்ரீனை கொலை செய்ததிற்கான முக்கியமான சாட்சியே அந்தக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ ஆதாரம்தான்.

ஆதித்தியா அந்த இரவு சமயத்தில் தன் நிலை தவறியிருந்த கேத்ரீனை பின் தொடர வேண்டிய அவசியம் என்ன? அவளின் அறைக்குள் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இவை அனைத்தும் நல்ல எண்ணத்தில் செய்ததாக பெரும் ஹோட்டல் அதிபர் சந்திரகாந்தின் ஒரே மகன் ஆதித்தியா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன நல்ல எண்ணம் உங்களுக்கு ஆதித்தியா?” என்று ஆதியை பார்த்து வினவினார்.

“கேத்ரீன் டிரிங்ஸ் சாப்பிட்டா அப்நார்மலா மாறிடுவாங்க… அவங்களால தன்னை மேனேஜ் பண்ண முடியாது” என்றான் ஆதித்தியா.

“அப்போ கேத்ரீனை பற்றிய எல்லா விவரமும் உங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கு… அந்த சந்தர்பத்தைப் பயண்படுத்திதான் நீங்க கேத்ரீனை அடைய அறைக்குள் போயிருக்கீங்க”

“நோ… என் மனசில அந்த மாதிரி எண்ணம் துளிக்கூட இல்லை” என்றான் ஆதி.

“இது நம்பும்படி இல்லை” என்று பத்மநாதன் சொல்ல,. உடனே நீதிபதி சுபாவை பார்த்து, “இதில் நீங்கள் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“எஸ் யூர் ஆனர்… அந்த வீடியோ ஆதாரத்தை சரியா பார்க்காமலே மிஸ்டர் பத்மநாதன் உளறுகிறார். ஆதித்தியா அந்த அறைக்குள் சென்று மீண்டும் ஒரு சில விநாடிகளிலேயே பதட்டத்தோடு வெளியே வருகிறார்.

இத்தனை குறைவான நேரத்திலா ஆதித்தியா கேத்ரீனிடம் தவறாக நடந்து கொண்டிருப்பார்? அப்படியே நீங்கள் சொல்வதே உண்மை என்று வைத்து கொண்டாலும், மிதமிஞ்சிய போதையிலிருக்கும் பெண் ஒரு ஆணிடமிருந்து தன்னைக் காப்பாற்ற போராடி அவள் தவறி விழுந்துவிட்டதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். கொலை செய்யவோ கற்பழிக்கவோ திட்டமிட்டு செல்வதானால், ஆதித்தியா அறைக்கதவை ஏன் மூடாமலே உள்ளே செல்ல வேண்டும்?”

இதைக் கேட்ட பத்மநாதன் நீதிபதியை பார்த்து, “எதிர்க்கட்சி வக்கீல் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தன் கட்சிக்காரரை காப்பாற்ற வேலைக்கு ஆகாத விஷயங்களைச் சொல்லி கொண்டிருக்கிறார்“

“நோ பத்மநாதன்… அவங்க சொன்னதிலும் பாயின்ட் இருக்கு. சரி… இனி நீங்க உங்க தரப்பு சாட்சிகளை அழைக்கலாம்” என்று நீதிபதி பத்மநாதனை பார்த்து உரைத்தார்.

“என்னுடைய முதல் சாட்சி ஆதித்தியாவின் நெருங்கிய நண்பனாய் இருந்த சமுத்திரன்”

சமுத்திரன்… சமுத்திரன் என்று அழைத்ததும் அவன் கூண்டில் ஆதித்தியாவிற்கு எதிர்புறத்தில் நின்றான்.

பத்மநாதன் சமுத்திரனை நெருங்கி வந்து, “நீங்கள்தான் சமுத்திரனா?” என்றார்.

“ஆமாம்” என்றான்.

“நீங்களும் ஆதித்தியாவும் சுமார் எத்தனை வருடமாய் நண்பர்கள்”

“இருபது வருடம்”

“ஆதித்தியா கேரக்டர் எப்படி”

“எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். பார்க்கிற பெண்கள் எல்லோரும் ஒரே சந்திப்பில் அவனின் வலையில் விழுந்துடுவாங்க”

ஆதித்தியாவிற்கு கோபம் பொங்கி கொண்டு வர, எதிரே இருந்த சிவா கண் ஜாடையில் அமைதியாக இருக்கும்படி சொன்னான்.

“கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”

“அவன் லிஸ்டில் நிறையப் பெண்கள்… இதில் கேத்ரீனோட எப்போ பழக்கம் என்று எனக்கு எப்படி தெரியும்?”

“கேத்ரீன் இறந்த அன்னைக்கு நீங்க ஆதித்தியாவை பார்த்தீங்களா?”

“ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் அங்கே நடந்த ஆக்ஸிடன்ட் பத்தி ஃபோன் பண்ணணாரு… நான் நேரில் போய்ப் பார்த்தேன்… ஆதித்தியா அங்கே இல்லை“

“எங்க போனார்னு உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது… கிட்டதட்ட யாருக்குமே ஆதித்தியா அந்த ஆக்ஸிடென்ட் அப்புறம் எங்க போனான்னு தெரியாது… ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்தான்… எங்க போனன்னு கேட்டா சரியான பதில் இல்லை”

உடனே பத்மநாதன் நீதிபதியை பார்த்து,

“நோட் திஸ் பாயின்ட் யூவர் ஆனர். ஆதித்தியா கேத்ரீனின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்து கேஸ் தனக்கு எதிரா திரும்பவில்லைனு தெரிஞ்சதும் வெளியே வந்திருக்காரு” என்றார்

மேலே தம் கேள்விகளைப் பத்மநாதன் சமுத்திரனிடம் தொடர்ந்தார்.

“நீங்கதானே முதலில் ஆதித்தியா தரப்பில் ஆஜராவதாக இருந்தது. அப்புறம் ஏன் நீங்க விலகிட்டீங்க?”

“முதலில் ஆதித்தியா தப்பு செய்திருக்க மாட்டான்னு நம்பினேன். ஆனா ஆதித்தியா குற்றவாளினு எப்போ தெரிஞ்சுதோ நான் அநியாயத்திற்காக வாதாட விரும்பல”

“நண்பனா இருந்தாலும் நியாயத்தின் பக்கம்தான் நிப்பேன்னு சொல்றீங்க…”

“ஆமாம்”

“தட்ஸ் ஆல் யூர் ஆனர்” என்று பத்மநாதன் தம் இருக்கையில் அமர்ந்தார்.

நீதிபதி சுபாவிடம், “குறுக்கு விசாரணை செய்யப் போறீங்களா?” என்று கேட்க,

“எஸ் யூர் ஆனர்” என்றவாரு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சமுத்திரன் நின்றிருந்த கூண்டிற்கு அருகில் போய் நின்றாள். அவர்கள் பார்வைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன.

“நீங்கள் நியாயத்திற்காக மட்டுமே வாதாடுபவர்… இல்லையா?” என்று கேட்டாள் சுபா நக்கலாக.

“ஆமாம்” என்றான் அழுத்தமாக.

“அவ்வளவு நியாயம் தெரிந்த நீங்க எதற்கு ஆதித்தியா மாதிரி ஒருவருடன் நட்பு பாராட்டினீங்க?” என்று வினவினாள் சுபா.

“அதுக்குக் காரணம் இருக்கு… நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். படிக்க ஆசை இருந்தும் வசதி இல்ல. என்னோட அப்பாவோட முதலாளி சந்திரகாந்த் அவர்கள்தான் என்னைப் படிக்க வைச்சு இன்னைக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தை தேடிக் கொடுத்தது. அந்த நன்றிக்கடனை மறக்காமதான் சந்திரகாந்த்தின் ஓரே மகன் ஆதித்தியாவோட நட்போடு இருந்தேன்”

“அந்த நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தும் விதமாய் ஆதித்தியா எதிரா சாட்சி சொல்றீங்க?”

பத்மநாதன் எழுந்து நின்று கொண்டு, “அப்ஜக்ஷன் யூர் ஆனர்… சாட்சியைக் கலைக்கும் விதமாக எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்பது சரியல்ல” என்றதும்,

சுபா உடனே, “இருபது வருட நட்பை, நன்றி உணர்ச்சியை இவ்வளவு சுலபமா தூக்கிப் போடும் போது இந்த மாதிரி கேள்வி நம் மனதில் எழத்தானே செய்யும்…” என்றாள்.

நீதிபதி, “அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்” என்று சொல்ல, பத்மநாதன் அமைதியாய் உட்கார, சுபா “தேங்க்யூ யுவர் ஆனர்” என்று சொல்லி விசாரணையை மேலே தொடர்ந்தாள்.

“நீங்க பதில் சொல்லுங்க சமுத்திரன்” என்று சுபா சொல்ல மனைவியின் முன்னே இப்படி நிற்பது அவமானமாய் இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

“நன்றி உணர்ச்சி நிறைய இருப்பதினால்தான் ஆதித்தியாவிற்கு எதிரா சாட்சி சொல்றேன். என்னோட காட்பாஃதர் சந்திரகாந்த் இப்படி ஒரு மகனை பெத்துட்டு ஒரு நாள் கூட சந்தோஷமா இல்லை.

போதாக் குறைக்கு இப்படி ஒரு தப்பை தன் மகன் செஞ்சிட்டானேனு கவலையிலேயே உயிரை விட்டுட்டார். இவன் யாருக்குமே உண்மையா இல்லை. ஆதித்தியா செஞ்ச தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கணும்” என்று சமுத்திரன் இமோஷனலாகப் பேசி கண்களைத் துடைத்துக் கொண்டான்.

ஆதித்தியாவிற்கு இப்போதுதான் அவனின் சுயரூபமே புரிந்தது. அவன் துரோகத்தின் முழு உருவமாய் நின்றான். அவன் பேசியது வார்த்தைகள் இல்லை. ஆதித்தியா மீது வீசிய வாளாக இருந்து.

தந்தை இழந்த வேதனையிலிருந்து அவன் மீளாத போது சமுத்திரனின் துரோகம் இன்னும் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.

சுபாவுக்கு அவனின் நீலிக்கண்ணீர் புரிந்த போதும் ரொம்பவும் இயல்பாகவே அவனிடம் கேள்விகளைக் கேட்டாள்.

“நீங்க கேத்ரீன் டெத் நடந்த போது எங்க இருந்தீங்க?”

“என் வீட்டில கிளைன்ட்டோட பேசிட்டிருந்தேன்”

அவன் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை என்பது சுபாவுக்குத் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தாள்.

“அப்போ மேனேஜர் ரமேஷ் சொல்லித்தான் உங்களுக்கு விஷயம் தெரியும் இல்லையா?”

“ஆமாம்”

“தெரிந்த அரைமணி நேரத்தில் ஹோட்டலில் இருந்தீங்க இல்லை?”

இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சமுத்திரன் திணற… அவன் பதிலை எதிர்பார்க்காமல்…

“நீங்க போகலாம் மிஸ்டர். சமுத்திரன்” என்றாள்.

பத்மநாதன் விந்தியாவை அடுத்தச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று சொல்ல

“விந்தியா… விந்தியா” என்று அழைக்க விந்தியா வந்து எதிரே நின்றாள்.

“நீங்கதான் மிஸஸ். விந்தியா ஆதித்தியாவா?” என்று பத்மநாதன் கேட்க விந்தியா எதிரே நின்றிருந்த ஆதியை பார்த்தாள். ஆதித்தியா முதல் நாள் இரவில் அவளிடம் சொன்ன வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது.

‘அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நீ விந்தியா ஆதித்தியா என்ற அடையாளத்தை மாற்ற முடியாது‘ என்று சொன்னதும் இருவரின் நினைவிலும் மின்னலடித்து மறைந்தது.

இந்த நொடி நேர ஞாபகங்களைக் கடந்து, “ஆமாம் “என்று பதில் உரைத்தாள் விந்தியா.

“நீங்கதான் ஹோட்டல் ஆதித்தியாவை நிர்வாகம் பண்ணிட்டிருக்கீங்களா?”

“பண்ணிட்டிருந்தேன்… இப்போ இல்லை…” என்றாள்.

“அப்படின்னா… இப்போ நிர்வாகம் யாரு கையில் இருக்கு?”

“என் கணவர் கிட்ட” என்று சொன்னதும் ஆதித்தியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“சரி… அது போகட்டும்… நீங்கதானே அந்தச் சீசிடிவி ரெக்கார்ட்டிங்கை பேக்கப் எடுத்து இன்ஸ்பெக்டர் சிவாவிடம் கொடுத்தது?”

“ஆமாம்”

“அது உங்க கணவருக்கு எதிரான ஆதாரம்னு தெரிஞ்சும் கொடுத்தீங்களா?”

“தெரியும்”

“கணவனே ஆனாலும் அவருடைய தப்புக்கான தண்டனை கிடைக்கணும்னு நினைக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்”

“நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க… என் கணவர் தப்பு செய்யலனு நான் நம்பினதினால் கொடுத்தேன்”

“புரியலயே மிஸஸ். விந்தியா “

“தப்பு செய்றவங்கதானே ஆதாரத்தை மறைக்கணும்… அந்த அவசியம் எங்களுக்கு இல்லை”

“கரெக்டான பாயின்ட்… இந்த ஆதாரம் பத்து மாதத்திற்கு முன்னாடி போலிஸ் கையில் கிடைச்சிருந்தா இந்த வழக்கில் தீர்ப்பே வந்திருக்கும்… ஆனா ஆதித்தியா ஆதாரத்தை போலீஸ்கிட்ட இருந்து புத்திசாலித்தனமா மறைச்சிருக்கார்…”

“ஆதித்தியா மறைக்கல”

“அப்போ வேற யார்?”

“சமுத்திரன்”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

“ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் சொன்னாரு”

“சரி… அது போகட்டும். உங்க கணவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததா?”

“பல பெண்களோடு அவர் இயல்பா சிரிச்சு பேசி பழகுறதையும், இவர்கிட்ட எல்லாப் பெண்களும் இயல்பா பழகுறதையும் பலர் தப்பா புரிஞ்சிட்டிருக்காங்க”

“அப்படின்னா அவரு கரைப்படாத கணவன்னு சொல்றீங்க” என்று கேலியான தொனியில் கேட்டார் பத்மநாதன்.

“நோ டெளட்… ஆதித்தியா என்னுடைய இடத்தில் வேறு பெண்ணை வைச்சு பார்த்ததுமில்லை… இனி பார்க்கவும் மாட்டார்… ஹி இஸ் எ பெர்ஃக்ட் ஜென்டில்மேன்”

ஆதித்தியா அப்படியே திகைத்து போய் நின்றான். யாருமே அவனை இத்தனை துள்ளியமாய் கணித்திருக்க முடியாது. தன்னைத் தானே அவன் கரைபடிந்தவனாய் காட்டிக் கொள்ளவதெல்லாம் அவன் தந்தையை வேதனைப்படுத்த… அவன் மீதான அவளின் புரிதல் ஆதித்தியாவிற்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

“அப்போ கேத்ரீனை உங்க கணவர் பலவந்தபடுத்தல? “

“நான் இவ்வளவு நேரம் சொன்னது உங்களுக்குப் புரியல… என் கணவர் எந்த காரணத்தைக் கொண்டும்… எந்தப் பெண்ணையும் விருப்பமில்லாமல் பலவந்தப்படுத்தும் ஈனத்தனமான காரியத்தை செய்யவே மாட்டார்”என்று அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல ஆதித்தியாவிற்கு உள்ளூர குத்தியது.

“கணவர் என்கிற காரணத்துக்காக நீங்க விட்டுக்கொடுக்காம பேசிறீங்க” என்றார் பத்மநாதன்.

விந்தியா லேசாகச் சிரித்து விட்டு, “நான் பொய் சொல்லித்தான் என் கணவரை காப்பாத்தணும்னா அந்த சீடி ஆதாரத்தை போலிஸ் கிட்ட கொடுக்காமலே இருந்திருப்பேனே” என்று அவள் மடக்கி கேட்ட கேள்விக்குப் பத்மநாதனால் பதில் சொல்ல முடியவில்லை.

“தட்ஸ் ஆல் யுர் ஆனர்” என்று சொல்லி முடித்தார்.

38

முகம் தெரியாத நபர்

வக்கீல் பத்மநாதன் போலீஸ் தரப்பின் கடைசி சாட்சியாகக் கேத்ரீனின் நெருங்கிய தோழி மகிளாவை விசாரிக்க அனுமதி கேட்டார்.

“மகிளா மகிளா மகிளா”என்று அழைக்க,

மகிளா அவளின் அழைப்பை ஏற்று கூண்டில் வந்து நின்றாள். மகிளாவிற்குத் தமிழ் தெரியாத காரணத்தால் பத்மநாதன் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் விசாரிக்க அனுமதி பெற்றார்.

வாசகர்களே! என்னுடைய வசதிக்கும் தங்களுடைய புரிதலுக்கும் ஏற்ப விசாரணை தமிழிலியே நடப்பது போல் சித்தரத்துள்ளேன்.

பத்மநாதன் மகிளாவிடம் தம் கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.

“நீங்கதானே மிஸஸ் மகிளா தேவ்?”

“ஆமாம்”

“உங்களுடைய சொந்த ஊர்?”

“மும்பை”

“நீங்க எப்படி கோவாவிலேயே வளர்ந்த கேத்ரீனுக்கு நெருங்கிய தோழியா இருந்தீங்க?”

“என்னோட பாட்டி தாத்தா கோவாவில் இருந்தாங்க… அவங்க கூடவே தங்கி படிச்சேன். நாங்க இரண்டு பேரும் ஓரே பள்ளியில் படிச்சோம்…

கேத்ரீனோட அம்மா இறந்த பிறகு என்னோடுதான் அவ எல்லாக் கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துப்பாள். கல்லூரி படிப்புக்காகப் பேங்களூர் போன போது கூட அவ என் கிட்ட ஃபோன் பண்ணி நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்பாள்”

“அப்படின்னா கேத்ரீன் ஆதித்தியாவைப் பற்றியும் உங்கக்கிட்ட சொல்லி இருப்பாங்க இல்லையா?”

“நிறையச் சொல்லிருக்கா… ஆதித்தியா அவளுடைய நல்ல நண்பன்…”

“கேத்ரீன் வாழ்க்கையில் ஆதித்தியா வெறும் நண்பன் மட்டும்தானா?”

“முதலில் அப்படித்தான் நினைச்சிட்டிருந்தா… ஆனால் அவளின் அப்பாவின் இறப்பிற்கு பிறகு ஆதித்தியாவோட சப்போர்ட் அவளின் மனநிலையயை மாற்றியது. ஆதித்தியாவோட துணை வாழ்க்கை முழுக்க இருக்கணும்னு நினைச்சா”

“தனிமையில் இருந்த கேத்ரீனின் மனதை ஆதித்தியா தன் வசப்படுத்திக்கிட்டார் இல்லையா?”

இந்த வார்த்தைகளுக்கு மகிளா என்ன பதில் பேசுவது என்று புரியாமல் நின்றிருந்தாள்.

“சரி… கேத்ரீன் ஆதித்தியாவிடம் தன் காதலை சொன்னாங்களா?”

“ஆதித்தியாவின் பிறந்த நாளுக்காக கேத்ரீன் தன்னுடைய வீட்டில் பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தா… என்னையும் கூப்பிட்டு இருந்தாள்… ஆனால் நான் போக முடியாத சூழ்நிலை உருவாயிடுச்சு.

அன்னைக்குத் தன் காதலை ஆதித்தியாக்கிட்ட சொல்லப் போவதாகச் சொன்னாள். கூடவே அவரை அவள் பாஃக்டரியோட பங்குதாரராய் மாற்றப் போவதாகவும் சொன்னாள். ஆனா என்ன நடந்தது ஏது நடந்ததுனு தெரியல… அவங்க இரண்டு பேரும் அன்றோடு பிரிஞ்சிட்டாங்க. நான் ஆதித்தியாவை பத்தி ஏதாவது கேட்டாலும் பதில் சொல்லாம எழுந்து போயிடுவா”

“உங்களுக்கு அவங்க இரண்டு பேருக்குள் என்ன பிரச்சனைனு தெரியாதா?”

“இல்ல தெரியாது… கேத்ரீன் என்கிட்ட அதப்பத்தி பேச கூட விருப்பபடவில்லை”

பத்மநாதன் உடனே நீதிபதியின் முன் திரும்பி, “கேத்ரீன் தன் நெருங்கிய தோழியிடம் கூடச் சொல்ல முடியாதளவுக்கு அவள் மனதை பாதித்த சம்பவம் அது.

ஆதித்தியாவின் பிறந்த நாளன்று தன் காதலை கேத்ரீன் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதித்தியா அவள் தொழிலில் செய்த உதவிகளுக்காகப் பங்குதாரராகவும் மாற்றிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாள்” என்று சொல்லி கேத்ரீனின் லாக்கரில் கிடைத்த பத்திரத்தை நீதிபதியிடம் ஒப்படைத்துவிட்டு மேலும் தன் வாதத்தைத் தொடர்ந்தார்.

“ஆனால் ஆதித்தியா கேத்ரீனின் காதல், சொத்து இரண்டையும் நிராகரித்தது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். ஆதித்தியாவின் நிராகரிப்பை தாங்க முடியாமல் மதுபானம் அருந்தி தன் நிலைத்தவறி இருந்த கேத்ரீனை அக்கறையோடு அவள் அறைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்து தன்னுடைய காமப் பசிக்கு இறையாக்கி இருக்கிறார் ஆதித்தியா. அந்தச் சம்பவத்தைக் கேத்ரீனால் யாரிடம்தான் சொல்லமுடியும்” என்று சொல்லி தன் வாதத்தை முடிக்கும் போது ஆதித்தியா அந்த வார்த்தைகளால் மனம் கலங்கிப் போனான்.

தான் கேத்ரீன் மீது காட்டிய அக்கறைக்கு எல்லோரின் முன்னிலையில் தப்பானவனாய் கூனி குருகி நிற்பது அவனுக்கு அவமானமாய் இருந்தது. அந்த அவமானத்தோடு வாழ்வதை விட மரணமே மேல் என்று ஆதித்தியாவிற்குத் தோன்றிற்று.

விந்தியாவிற்கோ ஆதித்தியா மீதான இந்த அவதூறான பழியைக் கேட்க முடியாமல் நீதிமன்றம் என்று பாராமல் எழுந்து செல்ல பார்த்தவளை திருமூர்த்தி வற்புறத்தி அமர வைத்தார்.

நீதிபதி சுபாவை பார்த்து, “மகிளாவிடம் குறுக்கு விசாரணை செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டார்.

சுபா எழுந்து நின்று, “இல்லை யுவர் ஆனர், ஆனால் பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதன் அவர்கள் சொன்ன கதைக்கான சில விளக்கங்களை நான் தெரிஞ்சிக்க விருப்பப்படுறேன். அதனால் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க அனுமதி வழங்கணும் யுவர் ஆனர்” என்றதும்,

நீதிமன்றத்தில் உள்ள அனைவருமே கொஞ்சம் அசந்து போய்ப் பார்த்துக்கொண்டிருக்க… நீதிபதி, “ப்ரொசீட்”என்றார்.

பத்மநாதன் தன் கோர்ட்டை கழட்டி விட்டு கூண்டில் ஏறி நிற்க அங்கே பெரும் அமைதி நிலவியது.

“கோவாவில் கேத்ரீன் வீட்டிற்கு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?”

“இல்லை”

“கேத்ரீனிடம் முன்னே பின்னே பேசியதுண்டா?”

“இல்லை”

“அப்படி இருக்க கேத்ரீனின் நெருங்கிய தோழிக்கு கூடத் தெரியாத ரகசியம் உங்களுக்கு எப்படி தெரிந்தது?”

“ஆதித்தியாதான் போலீஸ் விசாரணையின் போது சொன்னாரே”

“ஒ… ஆதித்தியாவே கேத்ரீன் போதையில் இருக்கும் போது தான் தவறாக நடந்து கொண்டதாக சொன்னாரா?”

“தப்பு செய்றவங்க என்னிக்கு அவங்க தவறை ஒத்துக்கிட்டிருக்காங்க?”

“அது சரிதான் பத்மநாதன் சார்… ஆனால் விசராணையின் போது ஆதித்தியாவின் வாக்குமூலம் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி”

பத்மநாதன் கொஞ்சம் யோசிக்க சுபா நீதிபதியின் முன் திரும்பி, “என் கட்சிக்காரர் விசாரணையின் போது சொன்னது என்னவென்றால் கேத்ரீன் தன் நிலைத்தடுமாறிக் கொண்டிருக்க அவளை அறையில் படுக்கவைத்து விட்டு திரும்பியிருக்கிறார்.

அந்த சமயத்தைப் பயண்படுத்திக் கொண்டு முகம் தெரியாத நபர் கேத்ரீனிடம் தவறாக நடந்து கொள்ள… தனக்கு நிகழ்ந்ததை சரியாகத் தெரிந்து கொள்ளாத கேத்ரீன் ஆதித்தியாவின் மீது பழி போட அவர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டது. உண்மையிலேயே ஆதித்தியா தவறு செய்வதவராய் இருந்தால் யாருக்குமே தெரியாத விஷயத்தை போலீஸிடம் மூடி மறைத்திருக்கலாமே…” என்றாள்.

பின்பு பத்மநாதன் புறம் திரும்பி, “போதையிலிருந்த கேத்ரீன்தான் உணர்ச்சி வேகத்தில் ஆதித்தியா மீது பழி போட்டார் என்றால் … நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு மோசமான பழியை என் கட்சிக்காரர் மீது சுமத்தினீர்கள்?” என்று கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை.

இதை கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி பத்மநாதனிடம், “எந்த வித ஆதாரமுமின்றி இப்படி ஒரு பழியைச் சுமத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

பின்னர் சுபாவிடம் இனி அவர்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க அனுமதி வழங்கினார்.

சுபா முதல் சாட்சியாக ஹோட்டல் ஆதித்தியாவில் மேனேஜராக வேலை செய்யும் ரமேஷை அழைத்தாள்.

“ரமேஷ் ரமேஷ் ரமேஷ்” என்ற அழைப்பை ஏற்று ரமேஷ் கூண்டில் ஏறி நிற்க சுபா தம்முடைய கேள்விகளைக் கேட்க தொடங்கினாள்.

“நீங்கதான் ரமேஷா?”

“ஆமாம்”

“நீங்க சுமார் எத்தனை வருடமாய் ஆதித்தியா ஹோட்டலில் மேனேஜரா இருக்கீங்க?”

“ஐந்து வருஷமாய்”

“கேத்ரீன் அறையிலிருந்து தவறி விழுவதற்கு முன்பு அவங்க ஆதித்தியாவை பார்க்க வந்தது உண்மையா?”

“ஆமாம் வந்தாங்க… நான்தான் அவங்களை ஆதித்தியா சாரை பார்க்க விடமா தடுத்தேன்”

“நீங்க எதுக்கு அவங்கள பார்க்க விடாம தடுக்கணும்?”

“அவங்க நிதானத்தில் இல்லை… நிறைய குடிச்சிருந்தாங்க”

“அப்புறம் எப்போ ஆதித்தியாக்கிட்ட நீங்க கேத்ரீன் வந்ததைப் பத்தி சொன்னீங்க?”

“கேத்ரீன் கொடுத்த விசிட்டிங் கார்ட்டை அவங்க கிளம்பினதுமே கொடுத்துட்டேன். “

“அப்புறம் என்ன நடந்துச்சு?”

“ஆதித்தியா சார் உடனே கேத்ரீனை பார்க்க அவங்க ரூம் நம்பரை விசாரிச்சிட்டு போனவர்தான்… அதுக்கப்புறம் 603 ரூம்ல இருந்து ஒரு லேடி தவறி விழுந்துட்டாத நீயூஸ் வந்துச்சு… நான் உடனே போலீஸ்க்கு தகவல் சொன்னேன்…

ஆதித்தியா சாரை கான்டாக்ட் பண்ணேன் அவர் எடுக்கல… சந்திரகாந்த் சாரும் ஊரில் இல்ல… அப்புறம் கடைசியா சமுத்திரன் சாரை கான்டாக்ட் பண்ணேன்… அவர்தான் உடனே உதவிக்கு வந்தார் “

“உடனே வர அவர் என்ன ஹோட்டல் ஆதித்தியாவிலா இருந்தார்?”

“எனக்குத் தெரியாது மேடம்”

“சரி… போலிஸ்தான் சீசிடிவியை செக் பண்ணனும்… நீங்க எதுக்கு அந்த ரெக்காட்டிங்க்ஸை எடுத்து எடிட் பண்ணீங்க?”

“அது நான் இல்ல மேடம்… சமுத்திரன் சார்”

உடனே பத்மநாதன் எழுந்து நின்று நீதிபதியை பார்த்து, “தன்னுடைய ஹோட்டலிலேயே வேலை செய்யும் ஒருவரை ஆதித்தியாவிற்கு சாதகமாக சாட்சி சொல்ல வைத்து நம்மை எல்லாம் முட்டாளாக்க பார்க்கிறார் எதிர்க்கட்சி வக்கீல்”

“நான் யாரையும் முட்டாளாக்க பார்க்கவில்லை. சிசிடிவி பதிவு இருக்கும் அறைக்குள் எல்லோருமே நுழைய முடியாது. பாதுகாப்பு கருதி அந்த அறைக்குள் போகவே சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஆதித்தியா அந்த நேரத்தில் அங்கே இல்லாத காரணத்தால், அப்போ மேனேஜர் உள்ளே சென்று மாற்றினாரா என்று கேட்டேன். அவர் இல்லை என்று மறுத்து மிஸ்டர். சமுத்திரனை கை காட்டினார்,,. அவ்வளவுதானே” என்றாள் சுபா இயல்பாக

“ஆதித்தியா இல்லாவிட்டால் என்ன? தானே இந்த மேனேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்தப் பதிவுகளை மாற்ற சொல்லிருக்கலாமே?” என்றார் பத்மநாதன்

“உங்கள் கற்பனை திறம் அபாரம். எல்லாக் குற்றங்களையும் நீங்கள் என் கட்சிக்காரர் மீது சுமத்துவதில் குறியாய் இருக்கிறீர்கள். சரி போகட்டும். இதில் உங்கள் யூகங்களே சரியாக இருந்துவிட்டு போகட்டும்“ என்று சொல்லிவிட்டு ரமேஷை பார்த்தாள்.

“இவை எல்லாம் நீங்கள் நம்பக் கூடாத சிலரை நம்பியதால் உங்கள் மீது ஏற்பட்ட அவப்பெயர்…” என்று கூறிவிட்டு தம் விசாரணையை முடித்துக் கொண்டாள்.

பத்மநாதன் ரமேஷை எந்தவித குறுக்கு விசாரணையும் செய்ய விருப்பபடவில்லை. சுபா அடுத்ததாகத் தன்னுடைய முக்கியமான சாட்சியாக ஆதித்தியா கேத்ரீன் படித்த கல்லூரியின் தலைமையாசிரியர் கீதா குணசேகரனை அழைத்தாள்.

கீதா குணசேகரன்… கீதா குணசேகரன் என்று அழைப்பை ஏற்று ஐம்பது வயது மதிக்கத்தக்க மரியாதை குரிய தோற்றத்தில் வந்து நின்றார் கீதா குணசேகரன்.

“நீங்க தானே மிஸஸ். கீதா குணசேகரன்”

“ஆமாம்”

“உங்க எதிரே கூண்டில் நிற்பது யாரென்று தெரியுதா மேடம்?”

“மை ஸ்டூண்ட் ஆதித்தியா…” என்று கீதா பதில் சொல்ல ஆதித்தியா முகத்தில் சந்தோஷத்திற்கு பதிலாய் வேதனையே படர்ந்திருந்தது.

“கல்லூரியில் ஆதித்தியாவோட நடவடிக்கை எப்படி?”

“வெரி வெரி நாட்டி… எப்பவுமே கிளாஸை கவனிச்சதும் இல்ல… எங்களை நடத்த விட்டதும் இல்ல”

“அப்போ சரியா படிக்க மாட்டாரா?”

“அதுதான் ஆச்சரியமே… ஹீ இஸ் அ ப்ரில்லியன்ட் ஸ்டூண்ட்”

“பெண்கள் விஷயத்தில ஆதித்தியா எப்படி?”

“அவனைச் சுத்தி எப்பவுமே பெண்கள் பட்டாளமே இருக்கும்… ஆனா யாருமே அவன் அநாகரீகமா நடந்து கொண்டதா சின்னக் கம்பிளைன்ட் கூட வந்ததில்லை”

“கேத்ரீனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“எஸ்… ரொம்பவும் தைரியமான பெண்… படிப்பு ஸ்போர்ட்ஸ் எல்லாத்திலயும் நம்பர் ஒன்… கேத்ரீனும் ஆதித்தியாவும் வெரி குட் ஃபிரண்ட்ஸ்”

“இப்போ நான் ஒரு ஃபோட்டோ காண்பிக்கப் போறேன்… அந்த ஃபோட்டோவில் இருக்கும் நபரை நீங்க அடையாளம் காண்பிக்கணும்”

“நிச்சயமா”

எல்லோருமே பார்க்க முடியுமளவுக்கு ப்ரொஜக்டர் மூலமாக அந்த ஃபோட்டோ பெரிது பண்ணி காண்பிக்கப்பட்டது.

அந்த ஃபோட்டோவை பார்த்த ஆதித்தியாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது. அந்த ஃபோட்டோவை பற்றி அவன் யோசிக்க அன்று விந்தியா வந்து போனது நினைவுக்கு வந்தது.

கீதா குணசேகரனே அந்த ஃபோட்டோவில் உள்ள எல்லோரின் பெயரையும் வரிசையாகச் சொல்ல மனோஜ் என்று சொன்ன போது சுபா குறுக்கிட்டாள்.

“இந்த மனோஜ் யாருனு சொல்ல முடியுமா?”

“நல்ல ஸ்டூண்ட்ஸை எப்படி மறக்க முடியாதோ அப்படி இந்த மாதிரி சிலரையும் மறக்க முடியாது.

மனோஜ் ரொம்பவும் மோசமான கேரக்டர்… படிப்பு சுத்தமா வராது… பல பெண்கள் அவனைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணியும் அன்று அவங்க அப்பாவோட பதவி அவனை எங்களால் எதுவும் செய்ய முடியாதபடி தடுத்திடுச்சு.

அந்த மனோஜ் ஒரு முறை கேத்ரீன் கிட்ட தப்பா நடந்துக்க அவள் அதை லேசில் விடவில்லை… அவங்க அப்பா அமரேஷோட பவரை யூஸ் பண்ணி காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ண வைச்சுட்டா… அதுக்கப்புறம் நான் அவனைப் பார்க்கல”

“இந்தத் தகவல் இந்த வழக்கின் பெரிய திருப்புமுனை… மேடம்” என்று கீதா குணசேகரனை பார்த்து சுபா சொல்லிவிட்டு நீதிபதியின் புறம் திரும்பி, “தட்ஸ் ஆல் யுவர் ஆனர்” என்றாள்.

கீதா குணசேகரனின் சாட்சியைக் கேட்ட பத்மநாதன் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்தார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. கீதாவை குறுக்கு விசாரணை செய்தால் மினிஸ்டர் வித்யாதரன் பெயர் அடிபட போய் ஏதேனும் வம்பாய் முடிந்துவிட போகிறது என அமைதியாகவே இருந்தார்.

சுபா மேலே என்ன சொல்ல போகிறாள் என பத்மநாதன் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்க, ஒரு சீடி ஆதாரத்தை நீதிபதியிடம் கொடுத்தாள்.

இப்போதைக்கு இந்த ஆதாரம் வெளியிடப்பட வேண்டாமென நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாள்.

error: Content is protected !!