id-18

id-18

39

அரங்கேற்றிய நாடகம்

நீதிபதியிடம் சுபா, “இந்த சீடி ஆதாரத்தை தாங்கள் ரகசியமாகப் பார்க்க வேண்டும். இது பற்றி வெளியே தெரிந்தால் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும்” என்றாள்.

இதைக் கேட்ட நீதிபதி கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, “இந்த ஆதாரத்தை ரகசியமாக வைத்திருப்பதில் பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதனுக்கு ஆட்சபேணை இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்வதற்கு அனுமதி அளிக்கிறேன்” என்றார்.

“அந்த ஆதாரம் வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும்” என்று சொல்வதற்காக பத்மநாதன் எழுந்திருக்க…

அருகில் காவல் உடையில் நின்றிருந்த சிவா மெலிதான குரலில், “அந்த ஆதாரத்தை வெளியிட்டால் மினிஸ்டர் பெயரும் சேர்ந்து வெளியாகும், பரவாயில்லையா?” என்று சொல்ல… பத்மநாதன் கொஞ்சம் கதிகலங்கி போனார்.

தப்பித்தவறி மினிஸ்டர் வித்யாதரன் பெயர் வெளியிடப்பட்டால் தன்னுடைய நிலைமை என்னவாகுமோ என்று மிரண்டவர். “எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.

சமுத்திரனுக்கு சுபா கொடுத்த சீடி ஆதாரம், பிறகு பத்மநாதனின் பதில், எல்லாமே பெரும் குழப்பமாய் இருந்தது.

சுபா கொடுத்த சீடியை நீதிபதி தனிப்பட்ட முறையில் லேப்டாப்பில் போட்டு பார்த்தார். அது பற்றிய விளக்கங்களையும் சுபா அதனோடு இணைத்திருக்க ஒருவாறு அந்த ஆதாரத்தின் நோக்கம் புரிந்தது.

அங்கே இருப்பவர்கள் எல்லோரும் குழப்பத்தோடு அமர்ந்திருக்க நீதிபதி சுபாவிடம் தம் வாதங்களை எடுத்துரைக்கச் சொன்னார்.

“யுவர் ஒனர்… இந்த வழக்கில் காவல்துறை சேகரித்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபட்ட விளக்கங்களும் காரணிகளும் ஒரு தலைபட்சமானது.

மிஸஸ். கீதா குணசேகரன் வாக்குமூலத்தின்படி கேத்ரீனுடன் கல்லூரியில் படித்த மனோஜுடன் பெரியளவில் விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இது பற்றிக் காவல்துறை தம் விசாரணையில் எங்குமே குறிப்பிடவில்லை. இது எந்த விதத்தில் நேர்மையான விசாரணையாக இருக்க முடியும். இது பற்றிய சரியான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள இன்ஸ்பெக்டர் சிவாவிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்” என நீதிபதியிடம் அனுமதி கேட்டாள்.

“ப்ரொசீட் “என்று நீதிபதி அனுமதி வழங்க சிவா கூண்டில் ஏறி நின்றான்.

சுபாவின் அத்தனை செயலுக்கான சூட்சமங்களைக் கற்றுக் கொடுத்தவனே இப்போது அவள் முன் பதில் சொல்ல நின்று கொண்டிருக்கிறான். இதுவரை நடந்ததையும் சேர்த்து இப்பொழுது நடக்கப் போவதும் அவர்களின் நாடகத்தில் ஒன்றுதான்.

“உங்கக்கிட்ட நான் கேட்கிற கேள்விக்கு வெளிப்படையா பதில் சொல்றீங்களா இன்ஸ்பெக்டர் சிவா?” என்று கேட்டாள் சுபா.

“நிச்சயமாக” என்றான் சிவா.

“மனோஜ் பத்தின எந்தவொரு விஷயத்தையும் நீங்க விசாரிக்கத் தவறிட்டீங்களா இல்ல தெரிஞ்சே விசாரிக்காம விட்டுட்டீங்களா?”

“ஆதித்தியா மேல இவ்வளவு ஸ்டராங்கான ஆதாரம் இருந்ததால் எங்க பார்வை வேறு பக்கம் திரும்பல”

“கடிவாளம் கட்டின குதிரையைப் போல ஆதித்தியாவை சுற்றியே உங்க விசாரணையை நடத்திருக்கீங்க… இல்லை?”

“இல்லை… கேத்ரீன் வழக்கோட எல்லா கேள்விக்கான பதிலும் ஆதித்தியாவை சுற்றியே இருந்தது”

“அதெல்லாம் சரி… ஆதித்தியா படிச்ச காலேஜ்ல நீங்க ஏன் விசாரிக்கல”

“வேணு மகாதேவன் சார் அவசியமில்லைனு சொன்னாரு”

“அப்படின்னா சரி… நீங்க போகலாம்” என்று சுபா சொல்ல. சிவா சரியாக அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகத்தின் மத்திய புள்ளியான வேணு மகாதேவனிடம் வந்து நின்றனர்.

சுபாவின் பார்வை புரிய நீதிபதியே அடுத்ததாக ஏ சி வேணு மகாதேவனை விசாரிக்க அனுமதி கொடுத்தார். வேணு மகாதேவன் கம்பீரமாய்க் கூண்டில் நிற்க, தான் தடுமாறிவிடக் கூடாது என்ற பயம் சுபாவின் முகத்தில் அதிகமாக தெரிந்தது.

“மிஸ்டர் வேணு மகாதேவன்… உங்களுக்கு மனோஜ் யாருடைய மகன் என்பது தெரியுமா?”

ஆரம்பத்திலேயே இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் மனதில் உள்ளதை முகத்தில் காண்பிக்காமல் பதில் சொன்னார்.

“மனோஜே யாருன்னு தெரியாத போது அவர் யாருடைய மகன்னு எனக்கெப்படி தெரியும்?”

“அதானே உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்போ மனோஜை கைது பண்ணுவதில் உங்களுக்கு எந்த வித ஆட்சபணையும் இல்லையே?”

“மனோஜை கைது பண்ணும் அளவுக்கு இந்த கேஸில் அவருக்கு எதிரான ஆதாரம் இல்லை”

“ஏன் இல்லை… மனோஜுக்கு கேத்ரீனை கொலை செய்ய மோட்டிவ் இருக்கு”

“என்றோ நடந்த சம்பவத்தைக் கொலைக்கான காரணம்னு எப்படிச் சொல்ல முடியும்? கேத்ரீனை சந்தித்து தொந்தரவு கொடுத்திருந்தாலோ இல்லை கொலை செய்வேன்னு மிரட்டி இருந்தாலோ நீங்கள் சொல்வது சாத்தியம்”

“இதெல்லாம் மனோஜ் செய்யலனு உங்களுக்கு எப்படித் தெரியும்? மனோஜ் சொன்னாரா… இல்ல கேத்ரீன் சொன்னாங்களா?”

கொஞ்சம் நேரம் யோசித்த வேணு பிறகு தான் நினைத்ததை பதிலாகச் சொன்னார்

“இந்தக் கேஸில் இரண்டு விஷயம்தான் சாத்தியம்… ஒன்று ஆதித்தியா கேத்ரீனை தள்ளி விட்டிருக்கணும் இல்லைனா ஆதித்தியா குற்றவாளி இல்லாத பட்சத்தில் கேத்ரீன் தானாக தவறி விழுந்திருக்கனும்… ஆதித்தியாவின் வாக்குமூலமும் அதுதான்”

“இன்னொரு விஷயமும் சாத்தியம் ஏசி சார்… அதுதான் கேத்ரீனின் தற்கொலை”

சுபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட எல்லோருமே குழம்பினர் நீதிபதி உட்பட…

அதிர்ச்சியில் இருந்து மீண்ட வேணு மகாதேவன் சுபாவை நோக்கி, “கேத்ரீன் எதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?“

“அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டுமென்றால் மனோஜ் இங்கே வர வேண்டும்”

பத்மநாதனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. எந்தத் திசையில் இந்த வழக்கு செல்ல கூடாதென்று நினைத்தார்களோ சுபா அதற்கு நேர்மாறாக காய்களை நகர்த்திக் கொண்டு சென்றாள்.

“ஆதித்தியாவைக் காப்பாற்ற சுபா இந்த வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார்…” என்று பத்மநாதன் சொல்ல சுபா அவரை நோக்கி…

“மனோஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் கேட்க பத்மநாதன் வாயடைத்துப் போனார்.

நீதிபதி சில நிமிடங்கள் யோசித்த பின், “இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை நாளை மறுநாள் நடைபெறும். அப்பொழுது காவல்துறை மனோஜை தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுகிறேன் “என்று சொல்லி முடித்து விட்டு “நீதிமன்றம் கலையலாம்” என்றார்.

சுபா வெளியே வரும் பொழுது நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சரமாரியான கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பித்து வந்தாள்.

அவள் வெளியே வந்ததும் விந்தியா அவளை ஆரத்தழுவி கொண்டு, “ஓவர் நைட்டில் நீ பெரிய ஸ்டாராகிட்ட சுபா” என்றாள்.

“நீங்க வைச்ச நம்பிக்கைதான் எல்லாத்துக்குமே காரணம்” என்றாள் சுபா.

ஆதித்தியா சுபாவை பார்த்து நெகிழ்ந்தபடி, “கூடப் பிறந்தவங்க இல்லைனு நான் பலமுறை வருத்தப்பட்டிருக்கேன்… ஆனா நீ உண்மையில் கூடப்பிறந்த உறவுகளுக்கு எல்லாம் மேல்” என்றான்.

“நீங்க செஞ்ச உதவியை விட இதெல்லாம் பெரிய விஷயம் இல்லண்ணா” என்று சுபா சொல்லிக் கொண்டிருக்க… சிவா அவர்களை நெருங்கி வராமல் தூரத்தில் நின்றபடி வீட்டிற்குப் போகச் சொல்லி தலையசைத்தான்.

அங்கே அவர்களுக்கு ஏதோ ஆபத்து நிகழுமோ என்ற அச்ச உணர்வோடு அப்படி சொன்னான். விந்தியா ஆதித்தியாவோடு காரில் புறப்பட சுபா திருமூர்த்தியுடன் புறப்பட்டாள்.

காரில் பயணித்துக் கொண்டு வீடு வரும் வரை விந்தியாவும் ஆதித்தியாவும் மெளனமாகவே வந்து சேர்ந்தனர்.

காரிலிருந்து இறங்கி விந்தியா வீட்டிற்குள் நுழைய வீடே புகைமூட்டமாய்க் காட்சியளித்தது. இருமலுடன் உள்ளே வந்த விந்தியா என்னவென்று நந்தினியிடம் விசாரித்தாள். அவள் ஹோமம் பூஜை யாகம் புதிதாய் ஏதேதோ கதை சொல்ல விந்தியாவிற்கு எரிச்சல் ஏற்பட்டது.

“இதெல்லாம் அம்மாவோட வேலையா?” என்று விந்தியா நந்தினியிடம் கேட்டாள்.

“ஆமாம் அண்ணி… அண்ணனோட பிரச்சனை தீர்வதற்கு இதுதான் வழி” என்று சொல்லி நந்தினி ஏதோ தீர்த்த தண்ணீரை தெளிக்க வர விந்தியா அவளைத் தடுத்தாள்.

“எனக்கெதுக்கு? பின்னாடி வருகிறவருக்குதான் எல்லாப் பிரச்சனையும்… போய் அவர் தலையில் மொத்தமா கொட்டு. அப்பையாவது பிரச்சனை தீருதானு பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்.

ஆதித்தியா பின்னோடு வர மாதவி தானாகவே வந்து பிரசாதம் கொடுத்துத் தீர்த்தம் தெளித்து விட்டு திருநீர் இட்டாள். அவனும் அமைதியாக மாதவியின் செயலுக்கு உடன்பட்டான்.

ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன பலமான யோசனை?” என்று ஆதித்தியா விந்தியாவின் முகத்தைப் பார்த்து கேட்டான்.

“இல்ல… நீங்க இவ்வளவு பவ்யமா நடிக்கிறீங்களே… அது யாரை ஏமாற்ற?” என்று கேட்டாள்.

“நான் நடிக்கிறேனா?”

“எங்க அம்மாகிட்ட எதுக்கு இந்த நல்ல பிள்ளை வேஷம்?”

ஆதித்தியா சிரித்தபடி அவள் முகத்தைப் பார்த்தான்.

“நீ மட்டும் வேஷம் போடல”

“நானா?”

“என்னைப் பிடிக்காத மாதிரி நடந்துக்குறது… வெறுக்கிற மாதிரி பேசுறது… இதெல்லாம் வேஷமில்லை?”

“இல்லை… பிடிக்கல… வெறுக்கிறேன் என்பதெல்லாம் அப்புறம்… எனக்கு உங்கள பார்க்க கூட விருப்பமில்ல” என்றாள்.

“அவ்வளவு கோபம்? அப்புறம் ஏன் வார்த்தைக்கு வார்த்தை கோர்ட்டில என்னோட கணவர்னு அழுத்தமா சொன்ன? ஏன் ஆதித்தியான்னு சொல்லியிருக்கலாமே?”

“ஆமாம் சொன்னேன்… அதுதான் உண்மையில் நடிப்பு”

“சும்மா பொய் பேசாதே… உன் வார்த்தையில ஆரம்பிச்சி மனசு முழுக்க நான் இருக்கேன்… ஆனா நீ அதை மறைக்கிற”

“நான் எதையும் மறைக்கவும் இல்ல… மறக்கவும் இல்ல…”

“சரி விந்தியா… நான் உன் நம்பிக்கைய உடைச்சிட்டேன்… உன் பேச்சை கேட்கல… உன்னை வேதனை படுத்திட்டேன்… உன்னைப் பத்தி கவலைபடாம சுயநலமா நடந்துகிட்டேன்… அதுக்காக நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்…

பட் இத காரணமா சொல்லி என்னை விட்டு போணும்னு சொல்லாதே… நீ இல்லாம என் வாழ்க்கை கண்டிப்பா முழுமையடையாது… நான் செஞ்ச கடைசி… கடைசி தப்பு இதுதான்னு நினைச்சுக்கோ… என் மனசில இருந்து சொல்றேன்… என்னை மன்னிச்சிடுடி”

“தப்பு செஞ்சா மன்னிப்புக் கேட்கலாம்… நீங்க செஞ்சது தப்பா ஆதி… சொல்லுங்க… அது என்னைப் பொறுத்தவரைக்கும் கொலை. என் காதலையும் நம்பிக்கையையும் கொன்னுட்டு ஈஸியா மன்னிப்பு கேட்குறீங்க…

அன்னிக்கு நான் அழுத போது நீங்க அதைப் பெரிசாவே எடுத்துக்கல… என்னை நீங்க மனுஷியா பார்க்கல… ஒரு பொம்மை மாதிரி இல்ல பாத்தீங்க…

போதும் ஆதித்தியா… இனிமே நீங்க என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படுத்தாதீங்க… ப்ளீஸ்… நான் உங்க வாழ்க்கையில வந்ததுக்காக நான் வேணும்னா மன்னிப்புக் கேட்கிறேன்… என்னை விட்டுடுங்க ஆதி”

“சரிடி விட்டுடறேன்… ஆனா என்னைப் பிரிஞ்சி வாழ உன்னால முடியும்னு நினைக்கிறியா?” என்று அவள் கோபமாகப் பேசினாலும் அவன் இயல்பாகவே கேட்டான்.

“என்னால முடியும்” என்று சொல்லிக் கொண்டு ஆதித்தியாவை பார்த்தபடி அவனைக் கடந்து போக அவளின் காலில் ஏதோ தடுக்க விழ போனாள்.

ஆதித்தியா “பாத்து” என்று சொல்லி அவளை நெருங்கி போக, விந்தியா அவனின் தயவும் இல்லாமலே சுதாரித்துக் கொண்டாள்.

“ஆதி ஸ்டே அவே… நான் விழல… என்னைத் தாங்கிப் பிடிக்கிற சீனெல்லாம் இங்க இல்ல…” என்று சொல்லி விட்டு வெளியே போனாள் விந்தியா.

போன சில நொடிகளிலே “அம்மா” என்று அவளின் சத்தம் கேட்க ஆதித்தியா வெளியே வந்தான்.

விந்தியா தரையில் விழுந்து கிடந்தாள். தன்னையும் மீறிக்கொண்டு சிரிப்பு வர விந்தியாவிற்குக் கோபமாய் வந்தது.

“ஏ நந்தினி… தீர்த்தம் தெளிக்கிறேன்னு தரையெல்லாம் தண்ணி கொட்டி வைச்சிருக்க”

“அவ தண்ணி கொட்டினா… உனக்குக் கண்ணு தெரியல… தரைய பாத்து நடக்கனும்” என்றாள் மாதவி.

நந்தினி “சாரி அண்ணி “என்று சொல்லிக் கொண்டு அவளுக்குக் கை கொடுத்து தூக்க வர, ஆதித்தியா அவளை விலகச் சொல்லிட்டு தானே விந்தியாவைத் தூக்கிக் கொண்டான்.

நந்தினியும் மாதவியும் சிரிக்க விந்தியாவோ கத்தினாள்.

“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று அவள் சொல்லுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் தூக்கி வந்து படுக்கவைத்தான்.

“உன்னைத் தாங்கிப்பிடிக்கிற சீன் இல்லைனு சொன்ன… அது இருக்கா இல்லையானு நான் முடிவு பண்ணனும்” என்றான் ஆதித்தியா கேலியாக.

“நல்லா இருக்கிறவளை தூக்கிட்டு வந்துட்டு டயலாக் வேற” என்று சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

“பொய் சொன்னா இப்படி எல்லாம் நடக்கும் விந்து”

“நான் பொய் சொன்னேனா?”

“ஆமாம்”

விந்தியா அவனிடம் விதாண்டாவாதம் செய்யத் தயாராக இல்லை. ஆனால் ஆதித்தியா அவன் சொல்ல நினைத்ததைச் சொன்னான்.

“நீ பொய் சொல்லு… திட்டு… சண்டை போடு… கோபப்படு… என்ன வேணா பண்ணு. ஆனா இந்தப் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போகும் போது என் கூடக் கிளம்பி வந்துரு… உனக்கு வேற ஆப்ஷனே இல்ல”

“அதிகாரம் பண்றீங்களா?”

“அன்பா சொன்னா கேட்டுடுவியா?”

அதற்கு மேல் விந்தியா எதுவும் பேச விருப்பபடவில்லை. அவர்களுக்கு இடையில் ஒரு விதமான மெளனம் நிலவியது. விந்தியாவின் கோபமும் இறுக்கமும் சூரிய ஒளி பட்ட பனிப் பாறைகள் போல கறைந்து கொண்டே வருவதை அவள் உணர ஆரம்பித்தாள்.

40

இனிமையான தனிமை

சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன் மனோஜை கைது செய்வதில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனோஜை காப்பாற்றினாலோ அல்லது தலைமறைவாய் வைத்திருந்தாலோ அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படலாம் என அமைதி காத்தார். ஆனால் அந்த மெளனத்தின் பின்னே பெரிய திட்டத்தையே வடிவமைத்துக் கொண்டிருந்தார் வித்யாதரன்.

மனோஜுக்கு ஆதரவாக சமுத்திரன் வாதாட முடிவெடுத்தான். அவன் அதற்காக ரொம்பவும் மும்முமரமாக குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். தன் மனைவி சுபாவை நேரடியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தான். அவளைத் தோல்வியுற செய்து மீண்டும் வீட்டுக்குள் தன் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.

சுபாவிற்கு சமுத்திரனின் புத்திசாலித்தனம் நன்றாகத் தெரியும். அவனை அத்தனை சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவும் மாட்டான். சமுத்திரனை எதிர்த்து வாதாடப் போவது சுபாவுக்கு நிச்சியம் சவாலாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த சவாலை மீறிக் கொண்டு அவள் வெற்றி பெறுவாளா என்பது பெரும் புதிராய் இருந்தது.

போலிஸ் ஸ்டேஷனில் மனோஜ் உட்கார வைக்கப்படிருந்தான். அதுவும் ராஜ மரியாதையுடன். வேணு மகாதேவன் அசிஸ்டன்ட் கமிஷனராய் இருந்து கொண்டு அவனுக்கு பணியாளன் போல வேலை செய்து கொண்டிருக்க சிவாவுக்கு எரிச்சலாய் வந்தது.

வேணு மகாதேவன் சிவாவின் அருகில் வந்து, “உன்னோட போலீஸ்கார திமிரை மனோஜிடம் காண்பிக்காதே… நான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று வெளியே புறப்பட்டார்.

மனோஜ் கால் மீது கால் போட்டுக் கொண்டு சிவாவை சொடுக்கு போட்டு தன் அருகில் அழைத்தான்.

சிவா தன் கம்பீரம் குறையாமல் அவன் அருகில் வந்து நின்றான்.

“கேத்ரீன் கேஸில் உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது… இந்தக் கேஸ் முடியும் போது உன் லைஃப்… வைஃப்… எதுவும் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ”

சிவா எதுவும் பேசாமல் பொறுமையாகவே நின்றிருந்தான்.

“எப்படி இருக்கா அந்த அரபியன் குதிரை?”என்றான்.

சிவா கொஞ்சம் யோசித்தபடி மனோஜை பார்க்க, “உன் ஃபிரண்டு விந்தியாவைத்தான் சொல்றேன்” என்று மனோஜ் சொல்லி முடிக்க… சிவாவிற்கு அவன் எண்ணம் புரியும் போது மனோஜின் கன்னத்தில் விழுந்த அடி அவன் தாடை சிவந்து வீங்கிப் போனது.

“என்ன மனோஜ்… இதுதான் போலிஸ் அடி வாங்கி இருக்கியா? என்ன கோபம் வருதா? என்ன செய்வ? என்ன செய்யணும்னு விருப்பப்பட்டாலும் இன்னைக்குள்ள செஞ்சிடு.

நாளைக்கு உன்னோட சாப்டர் க்ளோஸ்… உங்க அப்பா செஞ்ச பாவம்… நீ செஞ்ச பாவம் எல்லாமே உன் தலையிலதான் விடியப்போகுது” என்றான் சிவா.

“எங்க அப்பாவோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?”

“நல்லா தெரியும்… அந்தப் பவரும் பதவியையும் காப்பாத்திக்கவாச்சுசம் உங்க அப்பன் நிச்சயம் உன்னைக் காப்பாத்தமாட்டான்”

“இந்தக் கேஸில எனக்கெதிரா எந்த ஆதாரமும் இல்ல…”

“நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி விதைச்ச விதை உனக்கெதிரா வளர்ந்து நிக்குதே”

“என்ன சொல்ல வர்ற?”

“நீ கேத்ரீன் பார்ட்டிக்கு அழையா விருந்தாளியா போனல்ல… அங்க நீ செஞ்ச லீலைக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு “

“நீ பொய் சொல்ற… சும்மா என்னைப் பயப்படுத்திப் பாக்கிற… தேவையில்லாம பேசி என்னைக் குழப்பாதே… எதாவது இனி பேசணும்னா என் வக்கீல்கிட்ட பேசிக்கோ”

சிவா அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாய் சிரித்தான்.

“அந்த சமுத்திரனை தானே சொல்ற… அவனுக்கு அவன் சுயநலம்தான் பெரிசு. அவன் தான் தலைக்கு கத்தி வராதவரைக்கும்தான் உனக்காகப் பேசுவான்.

ரொம்ப யோசிக்காதே மனோஜ்… கேத்ரீனுக்கு நீ செஞ்ச பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு விசாரணை அறையை விட்டு வெளியேறினான்.

சிவா அடித்ததை விட அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவனை அதிகமாய்க் கலவரப்படுத்தின. வித்யாதரன் தன்னைக் காப்பாற்றுவாரா என்ற புரியாத குழப்பம் மனோஜ் மனதில் வளர்ந்தது. அதைதான் சிவாவும் விரும்பினான்.

விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.

தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.

வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.

விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.

“நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?” என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.

“ஜஸ்ட் ஒன்…”

“இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?”

“டென்ஷனா இருந்துச்சு… நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ… அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்… யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா… அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்”

“இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது… அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்”

“ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?”

“ஒய் நாட்… அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்… நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா… நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா… இதில தப்பென்ன இருக்கு?”

“நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா”

“அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு”

“என்ன பெரிய சூழ்நிலை… உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்… ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல… அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே… ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே”

அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.

“நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது… இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.

ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா… எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்”

“அப்புறம் பேசிக்கலாம் ஆதி… ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு… நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்” என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.

“கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?”

“வழி விடுங்க நான் போகணும்” என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.

“கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”

“ஆதித்தியா… எனக்குத் தலைவலிக்குது… வழி விடுங்க”

அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.

“இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு”

“நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்… நீ போய் தூங்கு”

அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.

“ப்ளீஸ் ஆதி… அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க… பிடிவாதம் பிடிக்காதீங்க…”

“நானா?”

“இல்ல நான்தான்… நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்… என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்…

உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்… ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்…

நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்… இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்…

நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்… ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்…

இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்… நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்…

என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்… போதுமா… அதை தூக்கி போடுங்க ஆதி” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.

கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.

அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.

கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.

“இந்தக் காதல் போதும்… இந்த ஜென்மம் இல்ல இன்னும் நூறு ஜென்மத்திற்கு. எத்தனை தூரமானாலும் எத்தனை காலமானாலும் உன் கூடவே வருவேன் அள்ள அள்ள குறையாத இதே காதலோடு… லவ் யூ சோ மச் டியர்” என்று விந்தியாவின் கண்களைப் பார்த்தபடி சொன்ன ஆதித்தியா, தன் காதலைக் கொண்டு அவள் பிடிவாதத்தையும் இறுக்கத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினான்.

பிரிந்திருந்த அந்தக் காதல் பறவைகளை இனிமையான அந்த தனிமையில் விடுத்து இப்போதைக்கு நாம் விலகி செல்வோமாக.

விந்தியா ஆதித்தியாவின் வாழ்க்கை… போராட்டங்களைத் தாண்டி மரணிக்காத காதலோடு அவர்களின் இந்த காதல் அத்தியாயம் முடிவு பெறப் போவதில்லை.

error: Content is protected !!