Ila manasai thoondi vittu poravare 15

Ila manasai thoondi vittu poravare 15

அத்தியாயம் 15

“முத்தா குடுத்தியா?”

டீ கொடுத்தது போல அவள் சாதாரணமாக சொல்லவும் அதிர்ந்து விழித்தான் எட்வர்ட். மறுபடியும் அவள் இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டவள் உணரவில்லை அந்த கன்னத்து முத்தம் அவனை ஆட்டி வைத்திருந்த அளவை.

“ஏன் ப்ளேக்கி?” குரல் பட்டிலும் மென்மையாக வந்தது.

“ஏன்னு கேட்டா எப்படி துரை? நீங்க குடுத்தப்ப நான் ஏன்னு கேட்டனா?” பதில் கேள்வி கேட்டாள் சுப்பு.

திணறியவன்,

“நான் குடுத்தது தெரியுமா ப்ளேக்கி?” என கேட்டான்.

“அது கூடவா தெரியாது? எத்தனை தடவை என்னை தூக்கிட்டுப் போய் படுக்க வச்சிருக்கீங்க! தூக்க கலக்கத்துலயும் உங்க வாசனை எனக்குத் தெரியும். நீங்கன்றதால தான் நான் தூக்க விட்டேன் துரை. மத்தவங்கன்னா விட்டுருப்பேன்னா!”

“நான்னா என்ன ஸ்பெஷல்?” குரல் அடைக்க கேட்டான் எட்வர்ட்.

“ஸ்பெசல்னா என்னா?”

“என்னை மட்டும் தூக்க விட்டேன்னு சொன்னியே, நான் மட்டும் அப்படி என்ன உனக்கு பெருசா போயிட்டேன்னு கேட்டேன்”

“நீங்க எப்பவுமே எனக்கு ஸ்பெசலு தான். நாய் கிட்ட காப்பாத்துனதுல இருந்து, அக்காங்க கொட்டாம பார்த்துக்கற வரைக்கும் எனக்கு எம்புட்டு உதவி செஞ்சிருக்கீங்க! ஆரம்பத்துல திட்டுனாலும், அதுக்கு அப்புறம் என்னை திட்டறது இல்லையே. நான் கோக்குமாக்கா எதாச்சும் செஞ்சா தானே கோபப் படுவீங்க. என்ன சுத்தி உள்ள எல்லாரும் என்னை மரமண்டை, முட்டாளு, கூவை அப்படின்னு தான் சொல்லுவாங்க. நீங்க ஒரு ஆளுதான் என்னை புத்திசாலின்னு சொல்லிருக்கீங்க. நான் என்ன சொன்னாலும் காது குடுத்து கேக்கறீங்க. நான் கோச்சிக்கிட்டா சமாதானப்படுத்துறிங்க. எங்க வீட்டுலலாம் நான் கோவிச்சுக்கவே மாட்டேன். கோவப்பட்டா அதுக்கு ரெண்டு அடி கூட விழும். ஊசி மட்டும் போடாம இருந்தீங்கன்னா, நீங்கதான் எனக்கு ஸ்பெசலோ ஸ்பெசலு. ஊசி போட்டதால வெறும் ஸ்பெசலுதான்.” அழகாக புன்னகைத்தாள்.

“நான் உன்னை தூக்கனதுல, முத்தம் குடுத்ததுல உனக்கு கோபம் இல்லையா ப்ளேக்கி?”

“இல்லையே துரை! நான் முன்னெல்லாம் இப்படிதான் எங்க தூக்கம் வருதோ, அப்படியே தூங்கிருவேன். எங்க அப்பாருதான் தூக்கிட்டுப் போய் படுக்க வைப்பாரு. நீங்களும் அத தானே செஞ்சிங்க. எதுக்கு கோபப் படனும்? எங்க ஆத்தா பகல்ல என்னை கொஞ்சவே மாட்டாங்க. செல்லம் குடுத்தா நான் இன்னும் ராங்கி பண்ணுவனாம். ராத்திரி நான் தூங்கரப்போ உங்கள மாதிரியே தான் நெத்தியில, கன்னத்துல எல்லாம் முத்தா குடுப்பாங்க. அத தானே நீங்க செஞ்சீங்க, அப்புறம் ஏன் நான் கோபப் படனும்?”

அவள் மனதில் தன் பெற்றவர்களுக்கு இணையாக தன்னையும் வைத்திருக்கிறாள் என அவள் வாய் மொழியாக கேட்டவனுக்கு, என்ன உணர்கிறான் என்றே தெரியவில்லை. கை மட்டும் தன்னால் நீண்டு அவள் கன்னத்தைப் பாசமாக தடவியது.

“எதை செஞ்சாலும் திருப்பி செஞ்சிறனும். ஆத்தா மட்டும் குடுக்கலாம் நான் குடுக்க கூடாதா? எங்க ஆத்தா தூங்கறப்போ நானும் திருட்டுத்தனமா முத்தா குடுப்பேன் அவங்களுக்கு. முழிச்சுருக்கறப்போ குடுத்தா அடி பின்னிருவாங்க, ஏன்டி கன்னத்த எச்சி பண்ணறன்னு. அதே மாதிரி உங்களுக்கும் திருப்பி குடுக்கனும்னு நெனைச்சேன். நீங்க தான் என்னை தொட விடமாட்டீங்களே! அதான் என்னை திட்ட கூடாதுன்னு வாக்கு வாங்கிட்டு குடுத்தேன். எப்புடி?” சந்தோஷமாக சிரித்தாள்.

அவள் கன்னத்தில் கை வைத்திருந்தவன், பளீரென சிரித்தவளை பாசமாக பார்த்திருந்தான். அவள் உதட்டை மென்மையாக தன் விரலால் கிள்ளியவன், கிள்ளிய விரலை முத்தமிட்டுக் கொண்டான்.

அவன் செய்தது போலவே செய்வதற்கு அருகே வந்தவளை,

“ஹேய் ப்ளேக்கி. அங்கயே உட்காரு. கிட்ட வந்த, அடி வாங்குவ!” என செல்லமாக மிரட்டினான்.

“நீங்க மட்டும் இதெல்லாம் செய்யலாம், நான் மட்டும் செய்யக்கூடாது! இது தான் உங்க கிட்ட எனக்குப் பிடிக்காது. நான் போறேன் உள்ள” கோபித்துக் கொண்டு எழுந்தாள்.

எழுந்தவள் கையைப் பிடித்து மீண்டும் அமர வைத்தான் எட்வர்ட். பிடித்தக் கையை விடாமல்,

“ப்ளேக்கி” என மென்மையாக அழைத்தான்.

“ஹ்ம்ம்” பேசமாட்டாளாம்.

“உனக்கு நான் எப்படி புரியவைப்பேன் என் நிலமையை?”

“வேற எப்படி? வாயாலதான்” நொடித்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது எட்வர்டுக்கு.

“சிரிக்காதீங்க துரை. நான் கோவமா இருக்கேன்!”

“சரி, கோபப்படாதே ப்ளேக்கி! நீ என்னை தொடறப்போ எனக்குள்ள பல போராட்டம். கால காலமா ரத்தத்துல ஊறுன இனவெறி நீ தொடறப்போ எங்கயோ காணா போயிருது ப்ளேக்கி. உன் கை என் மேல படறப்போ என்னோட கட்டுப்பாட்ட நான் கொஞ்சம் கொஞ்சமா இழக்கறேன். காலம் காலமா சிற்றரசா இருந்த டியூக்(duke) பரம்பரைய சேர்ந்த நான், எட்வர்ட் ஸ்மித் டியூக் ஒரு அடிமை இன பெண்ணோட பிடியில நெகிழ்ந்து போறதான்னு ரொம்ப போராடிப் பார்த்தேன். என்னால என் கிட்டயே போராட முடியல ப்ளேக்கி. கோட்ட தாண்டியும் வர முடியாம, கோட்டுக்கு அந்தப் பக்கமும் நிக்க முடியாம நான் ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சுப் போறேன். நீ தொட்டா எல்லாத்தையும் மறந்தும் போறேன். எனக்கு கொஞ்ச நாள் குடு ப்ளேக்கி. அதுக்கு அப்புறம் முழுசா என்னை தொடலாம்” கரகரப்பான குரலில் கண்களில் லேசான நீர்படலத்துடன் முடித்தான் எட்வர்ட்.

அவளுக்கு புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. தான் கருப்பாக இருப்பதால் அவன் தொட மறுக்கவில்லை, அவனுள் வேறு என்னவோ பிரச்சனை அதனால் தான் மறுக்கிறான் எனும் அளவிலே சந்தோசமாகி போனாள் சுப்பு.

“அப்போ கருப்பு ஒட்டிகும்னு பயப்படலையா? நான் எவ்வளவு நாள் கவலைப்பட்டேன் தெரியுமா துரை? இப்போதான் நான் சந்தோசமா இருக்கேன். இனிமே உங்கள தொட மாட்டேன். சரியா? இப்போ சிரிங்க. நீங்க முகத்த சோகமா வைச்சா எனக்கும் சோகமா இருக்கு துரை. எனக்கு சோகம் வந்துச்சுனா நான் அழுதுட்டே தூங்கிருவேன்”

தொடமாட்டேன் என சொல்லியவள் கண் கலங்க, கீழே அமர்ந்திருந்தவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

 “மை காட் ப்ளேக்கி! நீ மட்டும் என்னிக்கும் நான் சொன்ன பேச்ச கேட்கமாட்ட!” முனகியவன், மெல்ல அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

படுத்த ஐந்து நிமிடத்தில் அவள் உறங்கி விட, மேசையை அருகே நகர்த்திக் கொண்டு விட்ட கணக்கெழுதும் வேலையத் தொடர்ந்தான் எட்வர்ட். இரண்டு மணி நேரம் புரண்டு, அசைந்து அவன் கால்களை அவள் ஒரு வழி பண்ணியப் போதும் அப்படியே அசையாது அமர்ந்திருந்தான் எட்வர்ட்.

இரண்டு நாட்கள் எப்பொழுதும் போல செல்ல, அன்று வேலை முடிந்து சீக்கிரமாகவே வந்திருந்தான் எட்வர்ட். ஜீப் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த சுப்பு, அவனைப் பார்த்து திகைத்துப் போய் நின்றாள்.

நொண்டி நொண்டி, பரசுவின் தோள் பற்றி நடந்து வந்தவனைப் பார்த்து துடித்துப் போனாள் சுப்பு. அவர்கள் அருகே ஓடியவள்,

“என்னாச்சு துரை? ஏன் நொண்டறீங்க? என்னாச்சு?” என படபடத்தாள்.

அவன் அமைதியாகவே வரவும், பரசுவிடம் திரும்பியவள்,

“துரைக்கு என்னாச்சு சித்தப்பூ? வாயைத் திறந்து சொல்லுங்களேன். வாயில கொளுக்கட்டையா இருக்கு?” என எரிந்து விழுந்தாள்.

“என்ன புள்ள இப்படி எகிறுற? செம்பணைக் காட்ட சுத்தி வரும் போது, கவனிக்காம மட்டையில கால வச்சிட்டாரு. அது சதைய பேத்து விட்டுருச்சு.”

நடந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னே போய் மறைத்தவாரு நின்றவள், கீழே குனிந்து அவன் காலை ஆராய்ந்தாள். கெண்டைக் கால் தோல் வலண்டு, ரத்தம் ஒழுகி கொண்டிருந்தது. கண்களில் குபுக்கென கண்ணீர் நிறைந்தது சுப்புவுக்கு.

“உங்களுக்கு துரைய ஒழுங்கா பாத்துக்க தெரியாதா சித்தப்பூ? பாருங்க எப்படி ரத்தம் வருது. அடி படனும்னா உங்களுக்கு பட வேண்டியது தானே, ஏன் என்னோட துரைக்குப்படனும்?” பரசுவிடம் கண்ணில் நீருடன் எகிறினாள்.

“என்னம்மோ நான் புடிச்சு தள்ளி விட்ட மாதிரி பொரியற புள்ள. நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்.”

“துரை கைய வுடுங்க! அடிபடற வரைக்கும் பராக்கு பாத்துட்டு, என் கிட்ட வந்து சிலுத்துக்கிறீங்க” பரசுவை விலக்கியவள், எட்வர்ட் கையைத் தன் தோளில் போட்டுக் கொண்டாள்.

அவர்கள் சண்டையை சிரிப்புடன் பார்த்திருந்தான் எட்வர்ட். பரசுவைப் போக சொல்லி தலையாட்டியவன், சுப்புவின் மேல் அதிகம் பாரம் படாதவாறு நடந்து வீட்டினுள் சென்றான். ஹால் நாற்காலியில் அமர்ந்தவன்,

“உள்ளே போய் என்னோட மருந்து பெட்டிய எடுத்துட்டு வா ப்ளேக்கி” என வலி நிறைந்த குரலில் சொன்னான்.

ஓடி போய் எடுத்து வந்தவளை, சுடுநீரும் ஒரு வாளியில் எடுத்து வர சொன்னான். முகத்தை சுளித்தவாறே காயத்தை சுடுநீரால் கழுவி விட்டான். அவன் ஒவ்வொரு முக சுளிப்புக்கும், சுப்புவின் கண்ணில் நீர் இறங்கியது. வாய் விடாமல்,

“வலிக்குதா துரை?” என  கேட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அவள் புலம்பலை பொறுக்க முடியாதவன்,

“ப்ளேக்கி!” என அழுத்தமாக அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“காயம் யாருக்குப் பட்டுருக்கு? உனக்கா எனக்கா?”

“உங்களுக்குதான்”

“அப்புறம் நீ ஏன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?”

“நீங்க அழல அதான் நான் அழறேன்” தேம்பினாள்.

“இப்போ அழறத நிறுத்தப் போறியா இல்லையா?”

“ஹ்ம்ம், அழல துரை. மருந்து நான் போடவா?”

“இல்ல பரவாயில்ல”

“குடுங்க அழாம போடறேன்”

“இப்போ நீ இருக்க, போடுவ! நீ உங்க ஆத்தா வீட்டுக்குப் போயிட்டா நான் அனாதை மாதிரி தனியா தானே இருப்பேன். அப்போ யாரு போடுவா ப்ளேக்கி?” அமைதியாக அவள் கண்ணைப் பார்த்து கேட்டான்.

அவள் திகைத்து போய் அமர்ந்திருந்த நேரத்தில் ஐயோடின் மருந்தைப் போட்டவன், காயத்தை வெள்ளை துணி கொண்டு கட்டினான். ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறே நொண்டி நொண்டி அவன் அறைக்குப் போய் கதவை அடைத்துக் கொண்டான் எட்வர்ட்.

திகைத்துப் போய் அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது அவளுக்கு. சுரணை வரவும், அவன் ரூமுக்கு ஓடினாள். கதவைக் கூட தட்டாது உள்ளே நுழைந்தவள்,

“துரை ஏன் அப்படி பேசறீங்க?” என அழுகுரலில் கேட்டாள்.

“நிஜத்த தானே சொன்னேன் ப்ளேக்கி” தலையணையில் காலை வைத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் எட்வர்ட்.

அழுதவாறே அவன் கட்டிலை நெருங்கி நின்றவள் கண்ணைத் துடைத்தவன்,

“இங்கயே, என் கூடவே இருக்கியா?” என ஆசையாக கேட்டான்.

முடியாது என தலையாட்டியவள், அழுதபடியே வெளியே ஒடிவிட்டாள்.

இரண்டு நாள் வீட்டில் இருந்தவன், அவனுக்கான எந்தப் பணிவிடையையும் அவளை செய்ய விடவில்லை. கஸ்டப்பட்டாலும் அவனே எல்லாவற்றையும் செய்தான்.

மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் அவன் முன்னே போய் நின்றவள்,

“துரை” என கூப்பிட்டாள்.

“என்ன?”

“நீங்க ஏன் ரெண்டு நாளா இப்படி நடந்துக்கறீங்க?”

“எப்படி?”

“என்னை ஏன் கிட்டவே விட மாட்டிக்கிறீங்க?”

“நீ ஆத்தா வீட்டுக்குப் போய்ட்டா நான் தனியா தானே இருக்கனும். அதான் இப்பவே பழகிப் பார்க்கறேன்”

“நான் போய்ட்டாலும் வேற யாராச்சும் வேலை செய்ய வருவாங்க தானே? அப்புறம் ஏன் கோபம் துரை?”

“மத்தவங்களும் நீயும் ஒன்னா ப்ளேக்கி?”

“இல்லைதான். நான் சுப்புலெட்சுமி. மத்தவங்க பேரு வேறயா இருக்கும்”

லேசாக சிரிப்பு வந்தது. அவள் முன் காட்டாமல் அடக்கிக் கொண்டான்.

“நீங்க முன்ன மாதிரியே இருக்க நான் என்ன பண்ணட்டும்?” சோகமாக கேட்டாள்.

“ஆத்தா வந்து கூப்பிட்டா போக கூடாது! துரைகூட தான் இருப்பேன்னு சொல்லனும்”

“அதெப்படி முடியும்? நான் அப்படி சொல்ல மாட்டேன். ஆத்தா கூப்புட்டா போயிருவேன். போனாதானே எனக்கும் முத்து மாமாவுக்கும் கண்ணாலம் நடக்கும். அப்போதானே ஆத்தாவோட சுமை குறையும்”

“ஓ! சரி போ. சந்தோஷமா இரு” ரூமுக்குள்ளே போய் விட்டான்.

அங்கே ஆற்றோரத்தில்,

“யோ பரிசல்! இப்பவாச்சும் எங்கள அந்த எஸ்டேட்டுக்கு கூட்டிப் போவியா? எத்தனை மாசமா நாங்களும் வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கோம்” எகிறினார் தங்கம்.

“ஏத்தா! நான் என்ன பண்ணறது? அந்த ஊர் முழுக்க விஷ காய்ச்சல் பரவி, மக்கா மனுஷா செத்துட்டு கிடக்காங்க. அங்க போயி என்னையும் சாக சொல்லுறியா?”

“ஏய்யா, இன்னுமாயா அந்த காய்ச்சல் சுத்திட்டு கிடக்கு? நான் பெத்த புள்ள கண்ணுலயே நிக்கறாயா! ஆத்த விட்டா அங்கிட்டு போறதுக்கும் வேற வழி இல்ல. எங்க நிலமைய கொஞ்சம் நினைச்சுப் பார்க்க கூடாதாயா? நீயும் புள்ள குட்டி பெத்தவன் தானே!’ கெஞ்சினார் அன்னம்.

“புரியுது ஆத்தா! நான் என்னத்த செய்ய! பெரிய ஆபிசரு ரூலா சொல்லிப்புட்டாரு யாரையும் ஊருக்குள்ள விடக்கூடாதுன்னு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. காய்ச்ச பரவறது நின்னு எல்லாம் நல்லா போயிரனும்னு சாமிய கும்பிட்டுக்குங்க. அவந்தான் உங்க குடும்பத்த காப்பாத்தனும்” சூசகமாக சொன்னான் அந்த பரிசல்காரன்.

“ஆம்புள இல்லாத வீடுன்னு எல்லாருக்கும் இளக்காரமா போச்சு. அந்த மனுசன் மட்டும் உசிரோட இருந்திருந்தா இந்த எடுபட்டவன்லாம் நம்மட்ட இப்படி பேசுவானா? கட்டையில போறவன். அந்த பரிசல் கவுந்து அப்படியே ஆத்தோட போயிருவான்” சாபம் இட்டார் தங்கம்.

அன்னம் கண்களிலோ கண்ணீர் வழிந்தது.

“எனக்கு என்னமோ பெத்த வயிறு கலங்கி துடிக்குதடி அன்னம். நான் பெத்த புள்ளைக்கு என்னமோ ஆக போற மாதிரி. நான் ஒரு கூறு கெட்டவ, கால் வயிறு கஞ்சினாலும் புள்ள நம்ம கூடவே இருக்கட்டும்னு விடாம, இப்படி கண் காணா தூரத்துக்கு அனுப்பி வச்சிட்டேன். பாக்கியம் கூட இருக்குனு நினைச்சு மெத்தனமா வேற இருந்துட்டோம். இப்போதானே தெரியுது, பேத்தி பிரசவம் முடிச்சு அவங்க ஈந்தியாக்கு(இந்தியா) போயிருக்கற விஷயம்.”

கதறும் தமக்கையை அணைத்துக் கொண்டார் தங்கம்.

“எல்லாம் என்னால வந்தது. என்னை மன்னிச்சுப்புடு அக்கா. கடவுள் நம்ம புள்ளைய எந்த தீங்கும் அண்டாம பாத்துக்குவான். மனச தேத்திக்க. இன்னும் ரெண்டு மாசத்துல திரும்ப வரலாம். இந்த பரிசல்காரன் மண்டைய பொளந்தாவது அக்கரைக்குப் போலாம்.” சமாதானப் படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றார்.

தங்கத்துக்கும் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. கண்டிப்பாக இருந்தாலும், நெஞ்சு நிறைய பாசத்தை அந்த வெள்ளந்தி மேல் வைத்திருந்தாரே.

‘இது சரிப்படாது! ரெண்டு மாசம் கழிஞ்சு ஆள் விட்டு இந்த முத்துப்பயல வர வைக்கனும். அவன வச்சுத்தான் அக்கரைக்குப் போவனும். போய் அப்படியே அந்தப் புள்ளைய கூட்டிக்கிட்டு வந்துரனும். எங்களால நகை நட்டு போட முடியாது. இவ வயசுக்கு வந்தா, அப்படியே கட்டிக்கறதுன்னா கட்டிக்க. இல்லைனா உள்ளுக்குள்ளயே காசு கேக்காதவன் எவனுக்காச்சும் கட்டிக் குடுத்துருவேன்னு மிரட்டி கல்யாணத்த முடிச்சுப்புடனும். புள்ள மேல ஆசையா கிடக்கான். கண்டிப்பா கட்டிக்குவான்.’ மனதில் கணக்குகளைப் போட்டவாறு வீட்டை நோக்கி நடைப்போட்டார் தங்கம்.

விதியோ “உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே” என பாடியபடி அவர்கள் பின்னால் போனது.

ஐந்து நாட்களாய் தொடர்ந்த எட்வர்டின் மௌன போராட்டம் சுப்புவின் மனதை கலங்கடித்தது. உறக்கம் வராமல் புரண்டவள், மெல்ல எழுந்து விரித்து விட்ட கூந்தலுடன் எட்வர்டின் அறைக்குப் போனாள். இரண்டு முறை கதவை தட்டியவள்,

“உள்ள வா ப்ளேக்கி!’ என்ற குரலில் ஆச்சரியம் அடைந்தாள்.

‘துரையும் இன்னும் தூங்கலியா?’

உள்ளே நுழைந்தவள் இருட்டில் தட்டு தடுமாறினாள். அதற்குள் அருகில் வந்திருந்த எட்வர்ட் அவளை இருக அணைத்துக் கொண்டான்.

“என் கிட்ட பேச வரதுக்கு உனக்கு அஞ்சு நாள் எடுத்துச்சா ப்ளேக்கி?” மென்மையாக கடிந்தவன், அவள் கூந்தலில் தன் கைகளை நுழைத்து அவளை தன் நெஞ்சில் சிறை செய்தான்.

“விடுங்க துரை. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!” அவனை தள்ளினாள் சுப்பு.  

அவளது கைப்பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்று அமர வைத்தவன்,

“என்ன வேணும்னு இப்ப வந்த ப்ளேக்கி?” என கேட்டான்.

“நீங்கதான் வேணும். என் கிட்ட பேசுங்க துரை. எப்போதும் போல இருங்க துரை” அழுகுரலில் கேட்டாள் சுப்பு.

“நான் பேசலைன்னா உனக்கு கஸ்டமா இருக்கா ப்ளேக்கி?”

“ஆமா, ரொம்ப கஸ்டமா இருக்கு”

“அப்போ நான் என்ன சொன்னாலும் கேப்பியா?”

தலையை ஆட்டினாள் சுப்பு.

“வாயால சொல்லு”

“கேப்பேன் துரை”

“சத்தியமா கேப்பியா?”

“சத்தியமா கேப்பேன்”

“சத்தியத்த காப்பாத்தலைனா என்ன நடக்கும்?”

“சாமி கண்ண குத்தும்!”

“அப்போ சரி”

அவனுக்கு என்ன வேண்டும் என கேட்டான் எட்வர்ட். அவன் கேட்ட விஷயத்தில் அதிர்ச்சியாகி மயங்கினாள் சுப்பு.

(தூண்டுவான்)

error: Content is protected !!