UTN 17

UTN 17

உயிர் தேடல் நீயடி 17

ஒருவாரம் முடிந்து இருந்தது. லலிதாம்பிகை ஓரளவு குணமாகி வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு துணையாகவும் முழுநேரமும்‌ அவரை கவனித்து கொள்ளவும் நடுத்தர வயது பணிப்பெண்ணை அமர்த்தி இருந்தான் விபீஸ்வர்.

நிறுவன வேலைகளும் வழக்கம் போல சென்று கொண்டிருக்க, லலிதாம்பிகை மீண்டு வந்ததில் விபீஸ்வர் நிம்மதியாக உணர்ந்தான்.

“மாம் இன்னும் தூங்கலையா?” லலிதாம்பிகை சோர்வாக கட்டிலில் சாய்ந்து இருக்க, விபீஸ்வர் கேட்டபடி அவரருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவர் மருத்துவமனையில் இருந்து வீடு வந்த பிறகு இரவில் சிறிது நேரம் அம்மாவுடம் பேசுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான் அவன்.

“தூங்கணும் விபி, உன்கிட்ட பேசணும்னு தான் விழிச்சிருக்கேன்” அவர் குரல் வாஞ்சையாக ஒலித்தது.

“சொல்லுங்க மாம், ஏதாவது வலி இருக்கா, டாக்டரை கூப்பிடவா” அவனுக்குள் இன்னும் பதற்றம் மிச்சமிருந்தது.

“நான் நல்லா இருக்கேன் விபி கண்ணா, அது… நான் ஒண்ணு சொல்லுவேன் நீ கோபபடாம ஒத்துக்கணும் சரியா?” அவர் தயங்கி பேச,

விபி விரிந்த புன்னகையோடு, “சரி மாம் கோவபட மாட்டேன், சொல்லுங்க”

“உனக்கு சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும்னு ஆசைபடறேன் டா…”

“மாம், எனக்கு மேரேஜ் லைஃப் எல்லாம் செட் ஆகாது” என்று கைவிரித்து காட்டினான்.

“அப்ப கண்ட கண்ட பொண்ணுங்களோட பழகறது தான் உனக்கு செட் ஆகுமா கண்ணா?” அவரின் கண்களில் நீர் கட்டியது. தன் மகன் இப்படி வழிதவறி போவதை நினைத்து அவரின் தாயுள்ளம் கலங்கி தான் இருந்தது. ஆனாலும் மகனை என்ன சொல்லி கண்டிக்கவென்று அவருக்கு தெரியவில்லை.

அவனின் இத்தகைய போக்கும், திருமணத்தில் நாட்டமின்றி இருந்ததும் அவருக்குள் மன உளைச்சலை உண்டாக்க, தங்களுக்கு சொந்தமான கிடங்கு தீவிபத்தான செய்தி அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நிறுவன நட்டத்தை ஈடுகட்டும் வேலைகள் விபீஸ்வரை ஆக்கிரமித்துக் கொள்ள, அவனும் அம்மாவின் நிலையை கவனிக்காமல் போயிருந்தான். விளைவு அவரை அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றிருந்தது.

“மாம்… அது நான்…” தன் அம்மாவின் முன்பு பதில் சொல்ல முடியாமல் அவன் தலை குனியும் போதுதான் தன் நடத்தை பழக்கம் தவறென்று அவனுக்கு உறைத்தது.

“சாரி மாம், இனி நீங்க வருத்தபடுற மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று விபீஸ்வர் உறுதி தர,

லலிதாம்பிகைக்கு மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தது. “அப்ப உனக்கு கல்யாணத்துல சம்மதம் தானே விபி, நான் ஏற்பாடு பண்ணவா?” அவர் ஆர்வமாக கேட்க, விபீஸ்வர் யோசனையோடு தலையசைத்து விட்டு எழுந்து சென்றான்.

மகனின் தலையசைப்பையே சம்மதமாக நினைத்துக் கொண்டு, பெண் தேடும் வேலைகளை தொடங்க முடிவெடுத்தார் லலிதாம்பிகை.

‘திருமணம்…!’ இதுவரை அவன் புரிந்து கொள்ள விரும்பாத வார்த்தை!
இப்போது அந்த வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ள முடியுமா? என சிந்தித்தான்.

‘வாழ்க்கை முழுவதும் ஒருத்தியோடு மட்டும்!’ என்று நினைக்கும் போதே ‘அதெப்படி தன்னால் முடியும்?’ என்ற கேள்விதான் எழுந்தது அவனுக்கு.

இந்த இடைப்பட்ட ஒன்றரை மாத காலத்தில்… அவனால் ஏனோ எந்த பெண்ணையும் நாட முடியவில்லை. தன் பார்வையில் விழும் அழகிகளை சற்றே ரசனையாக பார்க்க முயன்றாலும் காவ்யாவின் ஆவேசமான முகம் தான் அவனுள் வந்து போனது காரணமே இல்லாமல்!

பார்ட்டிகளில் தன்னை நெருங்கிவரும் பெண்களை கூட ஏனோ விலக்கியே நிறுத்தி இருந்தான். அலைப்பேசியில் அழைக்கும் பெண் தோழிகளையும் தவிர்க்க தான் முயன்றான்.

முன்பு தனக்கு பிடித்தவை சுகித்தவை இப்போதெல்லாம் அலுப்பு தட்டியது போன்று தொன்றுவதின் காரணத்தை தேட முயலவில்லை அவன். தனக்குள் ஏற்படும் மாற்றத்தை மாற்றத்தான் அன்று கேளிக்கை விடுதியை நாடி இருந்தான். அங்கும் அவனால்‌ முன்பு போல் மனம் ஒன்ற முடியாமல் அவன் குழம்பிய சமயத்தில் தான் அங்கே அவள் நேராகவே அவனை தேடி வந்தது… அன்றைய பொழுதில் அம்மாவின் உடல்நிலை தந்த அதிர்ச்சி… காவ்யாவின் பரிவிலும் அருகாமையிலும் அவனுள் பரவிய இதம்… இப்போதும் அவனுக்குள் சுகமாய் பரவுவதாய்…!

சிலநேரம் குழந்தை தனமான வெகுளியாக… சிலநேரம் பக்குவம் நிறைந்த பெண்ணாக… தான் இடும் கட்டளைகளை பிசிரின்றி நிறைவேற்றும் திறமையானவளாக… அவனிடம் இணங்க மறுத்து அவனை எதிர்பவளாக… அவன் தளர்ந்து போகும் போது ஆதரவும் ஆறுதலும் தரும் தோழியாக… ஒரு பெண்ணுக்குள் இத்தனை முகங்களா! என்று வியந்து தான் போனான்.

அதுவும் இந்த ஒருவாரமாக அவள் நடந்து கொள்ளும் விதம்…!

விபீஸ்வர் என்ன சொன்னாலும் இரண்டு வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் தந்து சென்றாள் காவ்யா!

முதலில் இதனை கவனித்தவனுக்கு தாமதமாக தான் காரணம் புரிந்தது. ‘அடிபாவி… ஜஸ்ட் ஹக் பண்ணது பெரிய குத்தமா?’ என்று நினைத்து சலித்து கொண்டான்.

தன் திருமணம் பற்றிய சிந்தனை காவ்யாவிடம் வந்து நிற்பதை உணர்ந்தவன், தலையை குலுக்கி கொண்டு அவளின் நினைவை உதறினான்.

அம்மாவிடம் இத்தனை வேகத்தை விபீஸ்வர் எதிர்பார்க்கவில்லை. மறுநாளே ஒரு பெண்ணின் நிழற்படத்தை அவன் அலைப்பேசிக்கு பகிர்ந்து, விபீஸ்வரின் சம்மதம் கேட்டாரிருந்தார்.

அரை மனதாக தான் விபீஸ்வரும் அந்த பெண்ணின் நிழற்படத்தை திறந்து பார்த்தான். அவன் பார்வைக்கு வெகு அழகாக தெரிந்தாள் அவள்!

“பேரு வர்ஷினி… மேற்படிப்பெல்லாம் முடிச்சுட்டு அப்பா, அண்ணாவோட சேர்ந்து கன்ஸ்டிரக்ஸ்ஷன் கம்பெனியை கவனிச்சிட்டு இருக்காங்க… பொண்ணுக்கு தங்கமான குணம்… உங்க வசதிவாய்ப்புக்கு எல்லா விதத்திலும் நிகரானவங்க… பாரம்பரியமான குடும்பம்…” பெண்ணைப் பற்றி லலிதாம்பிகையின் தோழி சொன்னவற்றை அப்படியே விபீஸ்வரிடம் ஒப்புவித்தவர், “உனக்கு பிடிச்சிருக்கு தானே விபி?” என்று ஆவலாக கேட்டார்.

“பிடிச்சிருக்கு மாம், பட் வர்ஷினிகிட்ட பேசிட்டு தான் நான் எந்த முடிவையும் சொல்ல முடியும்” விபீஸ்வர் பதில் நேராக வந்தது.

“அவ்வளவு தான, நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் பார்த்து பேசிட்டு வந்து உன் முடிவை சொல்லு கண்ணா” லலிதா அவசரமாய் சொல்ல, இவனும் மறுக்க முடியாமல் ‘சரி’ என்றான்.

மறுநாள் வர்ஷினி வீட்டின் முன் விபீஸ்வரின் கார் நிற்க, வர்ஷினியின் அப்பாவும் அண்ணனும் வாசலில் காத்திருந்து அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்தனர்.

விபீஸ்வருக்கு இதெல்லாம் புதிதாக தோன்றியது. வழக்கமான அறிமுகங்கள் நலவிசாரிப்புகள் முடிய, பெண்ணை அவள் அம்மா அழைத்து வந்து அவன்முன் அமர்த்தினார்.

தழைய பட்டு சேலை உடுத்தி, தங்க நகைகள் பூட்டி, விரிந்த கூந்தலில் மலர் சரம் சூட்டி, மிதமான அலங்காரத்தில் சற்றே தலைதாழ்த்தி அமர்ந்தவளை விபீஸ்வர் பார்வை வருடியது.

ஏனோ வர்ஷினியின் அமையாதியான அழகு, காவ்யதர்ஷினியின் சாயலை இவனுக்கு நினைவுபடுத்தியது.

‘அந்த சோடாபுட்டி ரொம்ப தான் டிஸ்டர்ப் பண்றா என்னை!’ என்று அவளின் நினைவை துறத்த முயன்றவன், வர்ஷினியிடம் பேச அனுமதி கேட்டான்.

இருவரும் பின்புற தோட்டத்து நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.

“ஹாய் பேபி, ஐ’ம் விபீஸ்வர்” அவனே பேச்சை தொடங்கினான்.

“நான் வர்ஷினி” அவனுக்கு பதிலாய் சிறு புன்னகை தந்தாள்.

“உண்மைய சொல்லணும்னா எனக்கு மேரேஜ்ல சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல… மாம் ஃபோர்ஸ் பண்ணதால தான் இங்க வந்தேன்” எந்த தடங்களும் இன்றி இயல்பாக பேசினான்.

“ஓ மை காட், தேங்க் யூ, எனக்கும் இன்ட்ரஸ்ட் இல்ல பா… அம்மா, அப்பா தான் ஃபோர்ஸ் பண்ணி சேரி, நகையெல்லாம் போட்டு என்னை இப்படி உக்கார வச்சுட்டாங்க” வர்ஷினி முகத்தை சுருக்கி சொல்ல, விபீஸ்வர் சிரித்து விட்டான்.

“நீங்க உம்முன்னு வரும் போதே நான் கவனிச்சேன்”

“எக்ஸ்ரே கண்ணு தான் சர் உங்களுக்கு” வர்ஷினி அவனுக்கு இணையாக பேச்சு கொடுத்தாள்.

“நான் என் கேரக்டர் பத்தி சொல்லிறேன். அப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும்… இட்’ஸ் ஓகே” விபீஸ்வர் ஆரம்பிக்க, வர்ஷினி சம்மதமாய் தலையசைத்தாள்.

“ம்ம்”

“என்னோட ஃபுல் இன்ட்ரஸ்ட் பிஸ்னஸ்ல தான், இன்னும் இன்னும் பெருசா வளர்ந்துட்டு போகணும்னு பேராசை எனக்கு” பெருமையாக சொல்ல,

“உங்க கம்பெனி நம்பர் ஒன் பொஸிஷன்ல இருக்கறதா‌ அப்பா பெருமையா சொல்லிட்டு இருந்தார்” இப்போதே உன் தொழில் வளர்ந்து தான் உள்ளது என்ற பொருள்பட வர்ஷினி பதில் தந்தாள்.

“அஹான், ஆனா எனக்கு இன்னும் பெருசா கொண்டு போகணும்ற ஐடியா இருக்கு, அதுக்கு என் பார்ட்னர் சப்போர்ட் இருந்தாகணும்”

“ம்ம் கண்டிப்பா அப்புறம்”

“என்னோட பர்சனல் லைஃப்ல இதுவரைக்கும் பெருசா எந்த கட்டுபாடும் வச்சிக்கிட்டதில்லை, டிரிங்க்ஸ், கேர்ள்ஸ்னு ஜாலியா இருந்து பழகிட்டேன்…”

“ஓ பிளே பாய்னு சொல்லுங்க, அப்புறம் எதுக்கு பாஸ் உங்களுக்கு கல்யாணம்?” அவன் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பேச்சு இவளை கவரத்தான் செய்தது.

“ப்ச் ஈஸியா போயிட்டு இருந்த என் லைஃப்ல ஒரு புள்ளபூச்சி குறுக்க வந்திடுச்சு… அவ ஏதோவொரு விசயத்தில என்னை அசைச்சு பார்த்துட்டா…”

“இன்டர்ஷ்டிங் யாரது?” வர்ஷினி கதைகேட்க ஆர்வமானாள்.

தனக்குள் உழலும் மாற்றங்களை யாருடனாவது பகிர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று தான் தோன்றியது இவனுக்கும்.

“என்னோட பிஏ, சரியான மூடி டைப்! பார்வைக்கு சோடாபுட்டி கண்ணாடியோட வெகுளிதனமா தெரிவா, ஆனா செம ஸ்மார்ட், டேலன்டட்… பெருசா ஒண்ணும் இல்ல, ப்ச் ஒன் நைட்க்கு ஆஃபர் பண்ணேன்…”

“ஆடாபாவி…” வர்ஷினி அதிர்ந்து எழுந்து விட்டாள்.

“ஹேய் கூல் பேபி…”

“டோன்ட் கால் மீ பேபி ஓகே” வர்ஷினி அவனிடம் சீற, விபி சத்தமாகவே சிரித்து விட்டான்.

“காவ்யாவும் இப்படி தான் கோபபடுவா, அவளை ‘கவி’ன்னு கூப்பிட்டா” என்றான்

“உங்களுக்கு கீழ வேலை செய்யற பொண்ணுங்கனா அவ்வளவு எளக்காரமா போச்சா உங்களுக்கு? காவ்யாவுக்கு என்னாச்சு?” வர்ஷினி பதறி கேட்க, அவர்களிடையே நடந்தவற்றை முடிந்தளவு அவளிடம் ஒப்புவித்தான்.

வர்ஷினி ஆசுவாசமாக மறுபடி அமர்ந்து கொண்டாள். “எனக்கு ஒரேயொரு உண்மைய மட்டும் சொல்லுங்க விபீஸ்வர்!”

“என்ன?”

“நீங்க நல்லவனா? கெட்டவனா?”

“ப்ச் அதையெல்லாம் பத்தி நான் யோசிக்கிறது இல்ல”

“எனக்கு புரியுது, நீங்க பார்த்து பழகின மத்த பெண்கள் மத்தியில காவ்யா மட்டும் உங்களுக்கு வித்தியாமா தெரிஞ்சிருக்கா இல்ல?”

“ம்ம் அவளோட ஆட்டிடியூட், கேரக்டர், கோபம், வருத்தம், என்கிட்ட காட்டற எதிர்ப்பு, வெறுப்பு… ஏன் அவ என்னை விலகி போகும்போது கூட நான் டிஸ்டர்ப் ஆகுறேன், எனக்கு இந்த ஃபீல் புதுசா இருக்கு”

“அவகிட்ட டிஸ்டர்ப் ஆகிட்டு என்னை எதுக்கு பொண்ணு பார்க்க வந்தீங்க?” அவளுக்கு பெரிதாக சந்தேகம் எழுந்தது.

“மாம் மேரேஜ் பத்தி கேட்கும்போது எனக்கு ஒண்ணு தோணுச்சு… காவ்யா மாதிரி கேரக்டர் என் லைஃப்ல வந்தா நல்லா இருக்கும்னு…”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல விபி! உங்களை மென்டலா டிஸ்டர்ப் பண்ண ஒருத்தியோட கேரக்டர் எனக்கு மேட்ச் ஆகுதான்னு பார்க்க வந்தீங்களா?” வர்ஷினி கேட்கும் போதே அவளுக்குள் கசந்தது.

“ச்சே ச்சே அப்படி இல்ல வர்ஷினி… உன்னோட சாயல், பேச்சு எல்லாம் காவ்யாவோட மேட்ச் ஆகுது… தட்ஸ் ஆல், நான் வேறெதுவும் யோசிக்கல”

“போதும் விபீஸ்வர்… என்னை உங்க காவ்யா கூட கம்பேர் பண்ணாதீங்க…” வர்ஷினி குரல் உயர்ந்து ஒலித்தது.

“நான் வர்ஷினி… எனக்குன்னு தனிப்பட்ட கேரக்டர் இருக்கு, மனசு இருக்கு, எண்ணங்கள், உணர்வுகள், இருக்கு… எனக்கே எனக்கான என்னை… இன்னொருத்தி குணத்தோட சேர்த்து பார்க்கிறது எனக்கு பிடிக்கல…”
அழுத்தமாக ஆவேசமாக வர்ஷினி சொல்ல, விபீஸ்வருக்கும் அவன் செய்த முட்டாள்தனம் புரிந்தது.

“சாரி வர்ஷினி… நான் உன்ன ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல, காவ்யா மாதிரி…”

“ஏன் மாதிரிய தேடிட்டு இருக்கீங்க மிஸ்டர் விபீஸ்வர்… உங்களுக்கு காவ்யாவ பிடிச்சிருக்குன்னா அவளையே கட்டிக்க வேண்டியது தான…”

“இல்ல, நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்ட போல, ஜஸ்ட் அந்த கேரக்டர் தான் எனக்கு பிடிச்சிருக்கு”

“ஆங் அதெப்படி சர்? உங்க காவ்யா கேரக்டர் மாதிரி நான் இருந்தா! எனக்கே எனக்குன்னு இருக்க கேரக்டருக்கு என்ன மதிப்பு?”

“அது… நான் அப்படி சொல்லல…!”

“நீங்க குழம்பி இருக்கீங்க மிஸ்டர் விபீஸ்வர், நான் இன்னும் தெளிவா தான் இருக்கேன். என்கிட்ட மட்டும் இல்ல வேற எந்த பொண்ணுகிட்டையும் காவ்யா மாதிரி கேரக்டரை தேடாதீங்க. கிடைக்காது”.

“உங்க மனசுல, செயல்ல காவ்யா இவ்வளோ பாதிப்பை ஏற்படுத்தி இருந்தா, நீங்க அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்கன்னு அர்த்தம்… முதல்ல போய் உங்க காவ்யா கிட்ட ப்ரோபோஸ் செய்யற வழிய பாருங்க…”
வர்ஷினி தன் அறிவுக்கு உறைத்ததை சொல்ல,

“சான்ஸே இல்ல… நான் லவ் பண்றேனா?” இன்னும் விபீஸ்வரால் நம்ப முடியவில்லை.

“அதானே, உங்களால எப்படி காதல் உணர்வை புரிஞ்சிக்க முடியும்!”

“…!”

“சாரி, இதுக்கு மேல உங்க கூட பேச எனக்கு விருப்பமில்ல, நீங்க கிளம்பலாம்” வர்ஷினி நேராக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

விபீஸ்வர் அப்படியே உறைந்து நின்றிருந்தான். ‘நான் லவ் பண்றேனா? அதுவும் ‘கவி’மேல எனக்கு லவ் வந்திருக்கா?’ யோசிக்க யோசிக்க அவனுக்கே பிரமிப்பாக தோன்றியது.

ஒரு தலையசைப்போடு அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவன் தனிமையான இடம் நோக்கி காரை செலுத்தினான்.

‘காதல்…’ அவனை பொருத்தவரை அர்த்தமில்லாத ஒரு வார்த்தை!

அந்த மூன்றெழுத்து வார்த்தையின் அர்த்தம் மொத்தமாய் பெரும் உணர்வு அலைகளாய் அவனை மூழ்கடிக்க, மூச்சு காற்றுக்காய் தவிக்கும் இதயம் போல அவனும் பரிதவித்து போனான்.

“கவி…!”

முதல் முறையாய் உயிரின் அடியாழத்தில் இருந்து அவளின் பெயரை உச்சரித்து பார்த்தான்.
அவனுக்குள் மெல்லிய உணர்வலைகள் இதமாய் பரவ, அவனின் தனிப்பட்ட உலகம் எங்கும் அவளின் பிம்ப சிதறல்கள்…

#

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!