அமுதா அத்தையுடன் பேசி பல நாட்கள் ஆகியிருந்தது. ஏனோ காலையிலிருந்தே அவர் நினைவாகவே இருக்க, மதியம் கிடைத்த உணவு இடைவெளியில் அவருக்கு போன் செய்தாள் மயூரி.

முழுதாய் ரிங் போயும் போனை எடுக்கவில்லை.

சற்று நேரத்தில் திரும்ப அவளுக்கு போன் செய்தவர் பேச முடியாததை போல் தடுமாற பதறிபோனது மயூரிக்கு!

“குடிகாரனுக்கு புத்தி மட்டு! அப்படி ஒருத்தன் கூட சண்டைப்போடுறவன் அதை விட மக்கு…இப்படியா சின்ன பசங்களை போல அடிச்சிப்பீங்க! வெளியே தெரிஞ்சா மகா கேவலம்”

“எனக்கே இந்த அடின்னா, வருங்காலத்தில் அவனுக்கு பொண்டாட்டியா வரப் போறவ நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாரேன்!”

அவன் கண்ணடித்து சொன்னதை கவனிக்காததை போல் மயூரி விஷ்ணுவின் காயங்களை சரி செய்ய முயன்று கொண்டிருந்தாள். காட்டனும் மருந்துகளுமாய் அவள் கையில் நிரம்பியிருந்தது.

“என்ன முன்னாடி காலம் மாதிரி இன்னமும் உங்களுக்கெல்லாம் வரவ உங்ககிட்ட அடி வாங்கிட்டிருப்பான்னு நினைப்பா! இப்போ உள்ளவ எல்லாம் ‘குடி’ன்னு சொன்னாலே தூக்கி போட்டு மிதிப்பா! சும்மா ஏதாவது உளறிகிட்டிருக்காதே விஷ்ணு!”

அவளை வினோதமாய் பார்த்தவன்,

“உன் கைய காட்டேன்”

பிடித்த அவள் விரல்களை உற்று பார்த்தான்.

“கழுத்தில் கூட புதுசா ஒரு செயினும் இல்லையே, ஏன் இப்படி பேசுறா!”

அவனின் நடிப்பை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவள்,

“என்ன உன்னை நடு மண்டையில் ஓங்கி அடிச்சிட்டானா உன் அண்ணன்! வேற மாதிரியெல்லாம் பேசுறே!”

“இல்ல தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரியே டயலாக் எல்லாம் உனக்கு வருதே! எனக்கு தெரியாம கல்யாணம் எதுவும் செஞ்சிட்டியோன்னு நினைச்சேன்!”

அவன் மண்டையில் லேசாக தட்டி விட்டவள்,

“வள்ளி”

என்ற அமுதா அத்தையின் அழைப்பை கேட்டு ஹாலின் பக்கம் வந்தாள்.

“இவனையும் கொஞ்சம் என்னன்னு பாரு மா! வெளியே ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போனா போலீஸ் கேஸ் ஆகிடுமோன்னு தோணுது!”

அமுதா தன் மூத்த மகனை நக்கலுக்காக சொன்னாலும், அவர் கண்களில் தெரிந்தது ஒரு சின்ன நப்பாசை. அதை மயூரவள்ளியும் அறிவாள். ஆனாலும்,

“இல்லை அத்தை என்னால பார்க்க முடியாது!”

என்று வீட்டின் உட்பக்கம் திரும்ப,

“ஏய் வள்ளி நில்லு. நீ இப்ப ஒரு டாக்டர். உன் சொந்த விருப்பு வெறுப்பெல்லாம் உன் கிட்ட வரும் நோயாளிங்க கிட்ட காட்ட கூடாது.” என்றான் நேற்று நடந்த களேபரத்தில் அவனை கிழித்து குதறிவிட்டிருந்த விஷ்ணு!

“அவ்வுனா!”

“ஆ…என்ன டி திடீர்னு தெலுங்கில் பேசுறே! முழுசா சந்திரமுகியா மாறிட்டியா வள்ளி!”

அவனுக்கு மட்டும் கேட்கும் மென்குரலில்,

“அதான் உன் அண்ணன் மாத்திட்டானே! இப்ப அவனை என்ன செய்றேன்னு மட்டும் பாரு”

ஹாலில் சோபாவில் இருந்த விவேக்கிடம் சென்றாள். அவனுக்கு முகமெல்லாம் பயங்கர காயம்! விஷ்ணு தன் பங்குக்கு நன்றாக வைத்து செய்திருந்தான் தன் உடன் பிறந்த அண்ணனை!

கண் ஒரு பக்கம் வீங்கியிருக்க, உதடு கிழித்து அதில் ரத்தம் காய்ந்திருந்தது! அவனுக்கு வெளியில் சிந்தியிருந்த ரத்தத்தை பார்த்து அவளுக்கு உள்ளுக்குள் வலித்தது!

‘இவரை இப்படி போட்டு அடித்திருக்கிறானே’ என்று தன் நண்பன் விஷ்ணுவை மனதில் வைதவள், இவனுக்கான சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தாள். காயப்பட்ட இடங்களை சுத்தம் செய்து மருந்து போட்டவள், டிடி ஊசி போட ஏத்தனிக்க,

“ஊசி எல்லாம் வேண்டாம்” என்றான் விவேக் தன் வீங்கி போன உதடுகளின் ஊடே.

அவள் அவனுக்கு பதில் ஏதும் கூறவில்லை.

உணவு மேஜையில் அமர்ந்திருந்த விஷ்ணுவை ஒரு முறை பார்த்துக் கொண்டே விவேக்கின் கையில் அந்த ஊசியை செலுத்தினாள்.

ஊசியை வலியில்லாமல் போட மயூரிக்கு தெரியும் தான், ஆனால் இப்போது இவனுக்கு மட்டும் அப்படி செய்யவில்லை!

‘ஆ’ என்ற முனகல் சத்தம் வந்தாலும் அவன் முகத்தை பார்க்காது கீழே கிடந்த மருத்துவ குப்பைகளை எல்லாம் எடுக்க ஆரம்பித்தாள்!

“ஒருத்தனுக்கு ஒருத்தன் எப்படி வச்சி செஞ்சியிருக்கானுங்க பாரு வள்ளி மா. ஸ்கூல் பிள்ளைங்களை விட கேவலம், அடிச்சு மூஞ்சி முகரை எல்லாம் கோரமா போயிட்டு!

ஆபிஸுக்கு கூட போக வக்கில்லாம இப்ப வீட்டில் இருக்கானுங்க!”

அமுதா பேசத் தொடங்க விவேக் விஷ்ணு ‘அவமானம் தாங்காமல்’ அவரவர் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டனர். அவர் இன்னமும் தொடர்ந்தார்!

“கொஞ்ச நாளா இந்த வீட்டில் நடக்குறது எதுவும் சரியில்லை வள்ளி மா. எனக்கு எதுவும் பிடிக்கலை. சொல்லி அழக் கூட எனக்கு ஆளில்லை”

ஒருவாறு அவரை சமாளித்து அவள் கிளம்ப, வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டு நின்றிருந்தார் கனகவேல்.

“அதுக்குள்ள கிளம்பிட்டியா வள்ளி”

“ஆமா மாமா, பெர்மிஷன் போட்டுட்டு தான் இன்னிக்கி வர முடிஞ்சது”

“வள்ளி, நடந்த எல்லாத்தையும் மறந்திட்டு நீ மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்திரணும்னு இருக்கு எனக்கு! விவேக் செஞ்சதுக்கு நான் வேணா உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்!”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா”

சங்கடமான சூழ்நிலை இருவருக்கும்!

“என்னால திரும்ப இங்க வந்து இருக்க முடியாது. எனக்கும் தன்மானம்னு ஒண்ணு இருக்கு மாமா! தயவுசெய்து புரிஞ்சிகோங்க”

அந்த பெண்ணின் மனதை மேலும் புண்படுத்த அவருக்கு விருப்பமில்லை. இப்படித்தான் நீ செய்ய வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் போன்ற எந்த நிபந்தனைகளும் அவளிடம் இதுவரைக்கும் சொல்லாதவர் என்பதால் இப்போதைக்கு அப்பேச்சை விட்டார்.

“உன் அத்தை ரொம்ப கவலைபடுறா. உன்னை இப்படி தனியா எங்கையோ விட்டிட்டு இருக்கிறது அவளுக்கும் கஷ்டமாம். அதனால் தான் கேட்டேன்! ஆனா உன் முடிவு தான் வள்ளி. சரி இப்ப நீ கிளம்பு மா, இருட்டுறதுக்கு முன்னாடி நீ ஹாஸ்டல் போய் சேர சரியா இருக்கும்!”

மயூரவள்ளி தன் சூழ்நிலையை ஆராய்ந்தாள். அத்தைக்காக பார்த்தால் தன் நிலை இன்னமும் மோசமாகிவிடுமே என்ற யோசனை. இங்கே வந்தால் அவனை பார்ப்பதை தவிர்க்க முடியாது, அது மறுபடியும் வீண் பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கும்.

என்ன தான் வேண்டாம், இது தேவையில்லாத வேலை என்று முடிவெடுத்திருந்தாலும், அடுத்த நாள் அதற்கான எதிர் முடிவுடன் விஷ்ணுவுக்கு போன் செய்தாள்.

“எனக்கு ஒரு வேலை செய்யணும் நீ. என் வீட்டில் வாடகைக்கு இருக்கிறவங்களை கொஞ்சம் காலி செய்து கொடுக்கணும். ரெண்டல் அக்ரிமெண்ட் மாமா கிட்ட இருக்கும், வாங்கிக்கோ”

“ஏன் உன் பிரண்ட் யாரும் இங்க குடி வராங்களா!? கொஞ்சம் எனக்கு ஒத்துவர மாதிரி ஆளா பார்த்து வையேன் வள்ளி”

“உன்னை சத்தியமா திருத்தவே முடியாது விஷ்ணு! அவ்ளோ ஆசையா இருந்தா சீக்கிரம் ஒரு கல்யாணத்தை செஞ்சித் தொலையேன் டா!”

“எல்லாம் என் நேரம்! நீயெல்லாம் இதுவும் சொல்லுவே இன்னமும் சொல்லுவே! உனக்கும் அவனுக்கும் எல்லாம் ஒழுங்கா போயிருந்தா இந்நேரம் அம்மா எனக்கே எனக்கா ஒரு பொண்ணை பார்த்து பேசி முடிச்சிருப்பாங்க! உன்னால நான் கெட்டேன், என்னால் நீ கெட்டேன்னு இருக்கு நம்ம கதை, இதில் பெருசா நியாயம் பேச வந்துட்டா!”

சத்தமில்லை அவள் பக்கம். அதிகமாய் பேசிவிட்டேனோ என்றிருந்தது விஷ்ணுவுக்கும்!

“ஹலோ வள்ளி, லைனில் இருக்கியா?”

“ம்ம்”

“சரி சரி. பேச வேண்டியதை விட்டுட்டு வழக்கம் போல் வேற எதையோ பேசிகிட்டிருக்கேன் பாரு. நீ சொன்ன விஷயத்தை ஏற்பாடு செய்றேன். ஆபிஸ் கால் இருக்கு இப்ப… அதை முடிச்சிட்டு இதை பார்க்குறேன். இப்ப வச்சிடுறேன்”

போனை வைத்த பின்பும் விஷ்ணுவின் பேச்சை மீண்டும் நினைவுட்டியது அவள் மனம்! தன் ஒருத்தியால் தன்னை சார்ந்த பலருக்கும் துன்பமோ! தன் நண்பனுக்கும் சீக்கிரம் தன் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டாமா! ‘குறுக்கே நின்று அவன் நல் வாழ்வை கெடுக்கிறேனோ!’

இனியும் செய்ய நினைத்திருப்பது சரிதானா என்ற குழப்பத்தின் ஊடே நீண்ட நாட்களுக்கு பின் அவளின் சொந்த வீட்டிற்கே  குடி வந்து விட்டாள் மயூரி. இந்த சில மாதங்களாய் சில முக்கியமான முடிவுகளை சட்சட்டென்று எடுப்பது போல் அவளுக்கே ஒரு தவிப்பு. ஆனால் வேறு வழி எதுவும் புலப்படவில்லை. அன்னை போல் தன்னை காத்த அமுதா அத்தைக்காக இந்த மாறுதல் அவசியம் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள் மயூரி!

மயூரவள்ளி தன் பெற்றோருடன் வாழ்ந்த இந்த வீடு அவளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அவள் நின்று கொண்டிருக்கும் இந்த தோட்டத்தில் வைத்து பெற்றோருடன் பேசியதும், சிரித்ததும் நினைவில் வந்தது.

வீட்டை வாடகைக்கு விட்டதும் இந்த பக்கம் வராமல் விட்டிருந்தாள்.

அந்த வீட்டுத் தோட்டம் பராமரிப்பு ஏதுமின்றி இப்போது காய்ந்து போய் கிடக்க, அதை காண மனம் பொறுக்கவில்லை மயூரிக்கு. தன்னை சுற்றி எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்ற முடிவோடு தன் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.

அவளின் வரவில் மிகுந்த மகிழ்ச்சி அமுதா அத்தைக்கு மாத்திரமே. விஷ்ணு, ‘நீ வந்தா வா வரலைன்ன போ’ என்றிருந்தான் என்பது வேறு கதை.

“வள்ளி நீ இங்க சமைக்கிறேன்னு எதையும் செஞ்சிட்டிருக்காதே. அங்கே நம்ம வீட்டுக்கு வந்திடு நான் உனக்கு எல்லாம் செஞ்சு தரேன், என்ன” என்றார் அமுதா அத்தை.

“இருக்கட்டும் அத்தை நானும் எப்போ தான் இதையெல்லாம் கத்துக்குறது!”

“அப்புறம் பார்த்துக்கலாம் மா, என்ன அவசரம். இப்ப நீ ஹாஸ்பிட்டல் வேலையில் மட்டும் கவனமா இரு, மத்ததை என் கிட்ட விடு!”

விவேக் நிலைமை தான் நிரம்பவும் சங்கடம். வீட்டில் யாரும் அவனிடம் அதிகம் பேசுவது கூட இல்லை. தனியாய் அங்கே வந்தான் போனான், உணவு அவனுக்கு நேரத்துக்கு கிடைத்தது அவ்வளவே! மயூரி அங்கே பக்கத்தில் வந்துவிட்டது கூட நிறைய நாள் வரைக்கும் அவனுக்கு தெரியாது.

இவனைக் கண்டால் முதலிலெல்லாம் ஒதுங்கி சென்று கொண்டிருந்தவள் நாள்பட இவன் இருப்பை கூட உணராததை போல் நடந்துக் கொள்ள ஆரம்பித்தாள். விவேக்கின் உள்ளம் மயூரியை காண்கையில் இப்போதெல்லாம் கட்டுக்கடங்காமல் தடுமாற தொடங்கியது! நடந்தது எல்லாம் தன் தவறு தானோ! தான் பேசிய பேச்செல்லாம் எந்த பெண்ணிற்கு தான் பிடிக்கும்! அவளை சந்தேகப்பட்டது போலல்லவா இருந்தது அவன் சொன்னது!

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய முயல்கிறான்.

error: Content is protected !!