RR 7

ரௌத்திரமாய் ரகசியமாய்-7

நவீன கட்டிடங்களும், பழம்பெருமை வாய்ந்த பங்களாக்களும், மாளிகைகளும் நிறைந்த பகுதியில் நுழைந்தது பளபளக்கும் மூன்று கறுப்பு நிறக் கார்கள்.அந்த பாரிய கேட்டிற்கு முன் வந்து நிறுத்த வந்திருப்பது யாரென அடையாளம் கண்டு கொண்ட செக்யூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்தான்.

மூன்று‌ கார்களும் அந்த பெரிய‌ பங்களாவின் போர்டிக்கவோவில் வந்து வரிசையாக நிற்க, அவற்றிலிருந்து இறங்கினர் ஷூக்கால்கள் தடதடக்க, முழுவதும் கறுப்பு நிற கோர்ட்ஷூட்டும், யார் யாரை பார்க்கிறார்கள் என்று தெரியாத‌ கறுப்பு நிற கூலர்ஸுடன் காதில் ப்ளூடூத் கருவிகள் தாங்கிய பத்துப் பதினைந்து மெய்க்காப்பாளர்கள்.

அவர்களில் ஒருவன் வந்து காரை திறப்பதற்குள் தானாகவே இறங்கினான் ருத்ரன். அவனது வழமையான கறுப்பு நிற‌ ஜாக்கெட் தான். காரை விட்டு இறங்கியதுமே கூலர்ஸை கழற்றினான். உணர்ச்சியற்ற விழிகள் ஆனால் இறுகிய முகம். அதே வேகத்தில் தடதடவென நடந்து உள்ளே சென்றான்.

அந்த வேகமே அவனது தற்போதைய மனநிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது‌. அவன் கால்கள் நேரே ஹாலின்‌ இடது பக்க பிரம்மாண்ட அறையை நோக்கியே விரைந்தன.

அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பணிப்பெண் ருத்ரன் உள்ளே நுழைந்ததுமே அவனது ஒற்றை விரலசைப்பிலேயே வெளியேறி விட அவனது தணல் பார்வையோ சக்கர நாற்காலியில் அமரந்திருந்த பெண்ணை நோக்கி திரும்பியது.

அவள்‌ இதை எதிர்ப்பார்த்திருந்தாள் தான் ஆனால் அந்த பார்வையை சந்திக்க திராணியற்றவளாய் தலை குணிந்தவளாய் அமர்ந்திருந்தாள்.

“ரோஷினி..” என்ற‌ அவன்‌ அழைப்பில் இதயம் தூக்கிவாரிப் போட‌ நிமிர்ந்தாள். ஆனாலும் அவள் பார்வை அவன் முகத்தில் பதியவில்லை. முடிந்தளவு அவன் பார்வையை தவிர்த்தாள்.

“லுக் அட் மீ..” என்றான் கட்டளையாக.

அந்தக் குரலில் நிமிர்ந்தாள் அவள். “ருத்…” என்று அவள் ஆரம்பிக்க, அவளை நிறுத்துமாறு சைகை செய்தான்.

“நோ நீட் டு எக்ஸ்ப்ளயின். அனு ஹெல்த் கண்டிஷன் கூட தெரியாம என்ன‌ பண்ணிக்கிட்டு இருக்க? சொல்லு..” அவன் குரல் ஓங்கி ஒலித்தது. அவளுக்கு உள்ளே உதறல் எடுக்க பேச்சு வரவில்லை. இருந்தாலும் சிறு தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசிடத் துணிந்தாள்.

“நான் இப்போ இருக்கிற கண்டிஷன்ல என்னால சரிவர கவணிக்க முடியலை ருத்ரன். அதுக்காக தான் மாயா..”

“ஷட் அப்..” அந்த அறையே அதிர, ரோஷினியின் இதயமும் நின்று துடித்தது. அவன் கண்களில் அத்தனை கோபம்.

“இன்னொரு தடவை இந்த மாதிரி நடக்கக் கூடாது.” அடங்கி ஒலித்தது அவனது எச்சரிக்கை குரல். மீண்டும் அதே வேகத்தில் அறையை விட்டும் வெளியேறினான்.

கைகளை பிசைந்து கொண்டு அப்படியே அமரந்திருந்தவளது செவிகளில் ருத்ரனது எச்சரிக்கை குரலே விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பாவம் அவளாலும் என்ன தான் செய்ய முடியும். கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. ஒரு புறம் தனது தற்போதைய நிலையை எண்ணி வருத்தம் மறுபுறம் தனது குழந்தையின் நிலைமை.

இந்த நிலைமை சில காலமாக அவளுள் உறங்கிக் கிடந்த பலி வெறியும் தட்டியெழுப்பி விட அவள் கண்ணீர் நிறைந்த விழிகளில் பலி வெறியுமே சேர்ந்து கொண்டது. கண்களில் வழிந்த கண்ணீரை தன்னிரு கைகளாலும் துடைத்து விட்டு மாயாவை அழைத்தாள்.

********

பெண்ணிற்கு முழுமை
தாய்மை அடையும்
நிலையில் தானாம்…
அந்தோ பரிதாபம்,
என் நிலைமையை
பார்க்கும் எவருக்கும்
நான் ஒரு பொறுப்பு
இல்லாதவளாகவே தோன்றுமே!

பெற்ற குழந்தை
மருத்துவமனையில்
யாரோ கவனிப்பில் இருக்க,
சூழ்நிலையும் நிகழும்
நிகழ்வுகளும் எனக்கு
எதிரியாகி பிள்ளையை
அருகில் இருந்து
பரிவாக பார்த்து கொள்ள
விடாமல் விட்டு விட்டதே!

அவன் கொள்ளும் உண்மையான
கோபத்திற்கு பதிலாக
என்னவென்று நான் கூறுவேன்!

வார்த்தைகள் வசம்
இழக்க பேதை நானும்
கண்ணீரிலே கரைய போக,
மூளையோ உறங்கி விட்டிருந்த
பழியை படம் போட்டு காட்ட,
அனைத்து பந்த பாசத்தையும்
மனதில் புதைத்து விட்டேனே!

*********

குழந்தைகளுக்கான‌ வார்ட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் தாமிரா‌. அந்த வார்டின் வாயிலிலேயே கறுப்பு நிற உடையணிந்த ‘ எத்தனை பேர் வந்தாலும் தூக்கி மிதிப்போம்’ என்ற‌ ரீதியில் இருவர் விறைப்பாக நின்றிருக்க அவளுக்கு புரிந்து விட்டது அது அந்த ரௌடியின் ஆட்கள் தானென்று.

இங்கே யாருக்கு காவல்? அந்த குழந்தைக்கா? எதற்காக இப்படி? குழந்தையை யார் என்ன செய்து விட முடியும்? ‘ஒரு வேளை அந்த மான்ஸ்டர் வந்து இருப்பானோ? அவனுக்காக தான் இந்த ப்ளாக் கேட்ஸ் இருக்காங்களோ?’ என‌ அவளாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டே வார்டுக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததுமே அவள் பார்வை அனன்யா‌ இருந்த கட்டிலை நோக்கியே திரும்பியது‌. அவள் நினைத்தது போல் அங்கே ருத்ரன் இருக்கவில்லை. குழந்தை அமர்ந்திருக்க சிந்து தான அவளிடம் பேச்சுக் கொடுத்தவாறு பரிசோதித்துக் கொண்டிருப்பதை கண்டாள். பக்கத்தில் அந்த ஒல்லிக்குச்சி மாயாவும் அமர்ந்திருந்தாள்.

அவன் அங்கு இல்லாதது அவளுள் ஒரு வித ஏமாற்ற உணர்வை அளிக்க, காரணம் அவளுக்கே புரியவில்லை. முன்தினம் அவன் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு பார்வையாலே கட்டளையிட்டுச் சென்றது அவள் மனக்கண் முன் தோன்ற, தாமாகவே அவள்‌ கால்கள் அனன்யாவை கட்டிலை நோக்கிச்‌ சென்றது.

குழந்தையை பரிசோதிக்க
நான் எத்தனிக்க
மனம் ஏனோ அவள்
தந்தையின் முக
தரிசனத்திற்காக காத்திருக்க,
காரணம் ஏனோ
அறியாமல் பேதை
நானும் இருக்க,
கண்ணிலே அவன்
கூறிய கட்டளையை
நிறைவேற்ற கால்களும் செல்ல,
மான்ஸ்டர் என்ற
அடையாளத்தோடும்,
பார்க்கும் பார்வையிலேயே
பயத்தை வரவழைத்தாலும்,
மனதில் நங்கூரமாய்
நீ பதிந்து விட்டது ஏனடா?

அவளை கண்டதுமே அனன்யாவின் முகம் புன்னகையில் மலந்தது.

“குட் மோர்னிங்! டாக்டர்” என்று சிரித்தது. தாமிராவும் அவளுக்கு பதிலை வழங்கி விட்டு தானும் அவளை பரிசோதிக்க முயல, அப்போது தான் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு நிமிர்ந்தாள் சிந்து.

“டாக்டர் மேடம். உங்க பேஷண்ட்டை நான் ஃபுல்லா செக் பண்ணிட்டேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்துடலாம்.” என்று தனது ஸ்டெதஸ்கோப்பை காதுகளை விட்டும் அகற்றி கழுத்தில் மாட்டிக் கொண்டாள்‌

“இல்லையில்லை நானும் ஒரு தடவை செக் பண்ணிடறேனே.” என் மீண்டும் முயன்ற தாமிராவை கைகளை பிடித்து முறைத்தாள் சிந்து.

“நானும் டாக்டர் தான். நீ படிச்ச அதே யுனிவர்சிட்டில தான் நானும் படிச்சேன். என்‌மேல நம்பிக்கை இல்லையா?”

” அது வந்து.. அவரு.. சொன்னாரு.. நான் தான் பார்க்கனும் விடு ” என்று இழுவையாக தடுமாற, இடைபுகுந்த சிந்து,

“எவரு? என்ன சொன்னாங்க?” என கேள்வியாக அவளை பார்த்து நின்றாள். தாமிராவின் வீணான தடுமாற்றம் அவளுக்கு புதிதாக தெரிந்தது.

“அதான் அனன்யாவோட அவரு?”

“அனன்யாவோட யாரு அவரு?” புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

“அந்த மொட்டை மான்ஸ்டர்..” என்றாள் சிந்துவுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருக்கும் போதே, அனன்யாவின் “பப்பூ..” என்ற அழைப்பில் இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே நின்றிருந்தான் ருத்ரன். வழக்கம் போல விழிகள் விரிய உறைந்து போய் நின்றிருந்தாள் தாமிரா.

‘ஓ இந்த மொட்டை ரௌடி குழந்தையா இது? அதனால இவ இப்படி பயந்தாளா?’ சிந்துவுக்குப் புரிந்தது. மெதுவாக தாமிராவின் பக்கம் திரும்பினாள்‌.

‘இந்த மொட்டை வேற திடீர் திடீர்னு வந்து பயமுறுத்துறான். இவ என்னடான்னா இவனை பார்த்தாலே பேயை பார்த்த மாதிரி நின்னுடறா.’ மனதால் புலம்பி விட்டு தாமிராவை அழைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பலாம் என்று நினைக்க, தாமிராவை நோக்கி வந்தான் அவன்.

“ஹவ் இஸ் ஷீ?” குழந்தையில் பார்வையை பதித்தவாறு கேட்டான்.

“ஷீ.. ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.” தாமிராவிடமிருந்து தட்டுத் தடுமாறி பதில் வந்ததே தவிர மறந்தும் அவனை பார்க்கவில்லை.

“குட்” ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான்.

குழந்தையருகே செல்ல குழந்தையோ அவன் கழுத்தை கட்டிக் கொண்டது.

“ஹவ் டூ யூ ஃபீலிங் நவ் மை பேபி டால்?” அவன் உதட்டோரம் லேசான சிரிப்பு. அதன் பின் இருவரும் வேறு உலகத்துக்கே சென்றிருந்தனர்.

அவனது இந்த பரிணாமம் பார்த்து சிந்துவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் இருந்தது. முன்தினம் தாமிராவும் அப்படியே உணர்ந்திருந்தாள். இருவருக்கும் அந்த இடத்தில் நிற்பதா இல்லை போவதா என்ற குழப்பம். ஒரு வித பயம் கலந்த குழப்பம். இது இந்த ருத்ரன் என்பதால் விளைந்த பயம் என்றே கூற வேண்டும்.

அந்நேரம் பார்த்து ருத்ரனின் அலைபேசி சிணுங்கியது. குழந்தையை கட்டிலில் அமர்த்தினான்.

“பேசிட்டு வந்துட்றேன்‌. இங்கேயே இரு” என்று குழந்தைக்கு கூறுவது போல கூறினாலும் அவனது பார்வை தாமிராவில் விழ, அவளது தலையும் தானாகவே ஆடியது. அவனும் தனது அலைபேசியை காதுக்கு கொடுத்தவாறே அவ்விடம் விட்டும் நகர்ந்தான்.

இது வரை நடந்ததை ஓரமாக நின்று சிந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் நகர்ந்ததும் அவளருகில் வந்தாள்.

“என்ன‌டி இது அவன் சொன்னதும் உன் தலை தானா டான்ஸ் ஆடுது?” சந்தேகமாக அவளை பார்த்தாள்.

“இல்லைனா தலையிருக்காதே எல்லாம் அந்த பயம் தான்.” என்று‌ விட்டு அவள் குழந்தையிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்க, சிந்துவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

திடீரென ஏதே உள்ளுணர்வு உந்த அந்த வார்டின் வாயிலை நோக்கி திரும்பிப் பார்த்தாள் சிந்து. உள்ளே நுழைந்தவனை கண்டதும் திகைத்து விழித்தாள். அதுவும் அவர்கள் இருந்த திசை நோக்கி வரவும் இடம், பொருள்‌ மறந்தவளாய் “ஆத்தி.. அண்டர்டேக்கர்..” மனதுக்குள் கூறுவதாக எண்ணி வாய் விட்டே கூறி விட்டாள்.

“என்னது அண்டர்டேக்கரா?” அனன்யாவும் தாமிராவும் புரியாமல் திரும்பி பார்த்தனர். வருபவனை அடையாளம் கண்டு கொண்ட குழந்தையோ விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கியது.

“ஐயோ டாக்டர். அது அண்டர்டேக்கர் இல்லை அமர் சித்தப்பா.” என்று சிரிக்க, அதற்குள் அந்த இடத்திற்கு வந்து விட்டான் அவன். வந்ததுமே அனன்யா அவனிடம்,

“அமர் சித்தப்பா, இந்த டாக்டர் உங்களை அண்டர்டேக்கர்னு சொன்னாங்க. நான் தான் சொன்னேன் நீங்க அண்டர்டேக்கர் இல்லை அமர் சித்தப்பானு” என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டாள்.

அமர் முகத்தில் எவ்வித மாறுதலும் இருக்கவில்லை. தலையை‌ கூட திருப்பவில்லை. அவன் கண்கள் மட்டும் சிந்துவை ஒரு தரம் பார்த்து மீண்டது. அதற்கே அவளுக்கு உள்ளே அச்சத்தை கிளப்பியது.

“இந்த பொண்ணு இப்படி கோர்த்து விட்டுருச்சே. ஐயையோ அண்டர்டேக்கர் மொறைக்குறானே. அடிச்சிடுவானோ? பயமா இருக்கே என்னடி பண்றது இப்போ?” என பயந்தவளாய் தாமிராவின் காதுக்கருகே கிசுகிசு குரலில் முணுமுணுக்க,

“உன்‌ நாக்கை இழுத்து வச்சு வெட்டனும்.” என்றாள் கடித்த பற்களுக்கிடையில்.

தாமிராவின் இந்த பதிலில் புரியாமல் அவளை பார்த்தாள் சிந்து.

“பின்னே என்ன‌டி? வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குறதே‌ உன் வேலையா போச்சு.” மெல்லிய குரலில் அவளை வறுத்தெடுக்க, அவர்களது இந்த குசுகுசு உரையாடலுக்கு ருத்ரனின் வருகை‌ முற்றுப்புள்ளி வைத்தது.

அன்றே அனன்யா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

*********

சிவனின் கோப கனலே
உன் கண் அசைவிடும்
கட்டளையை செய்யும்
நாய்க்குட்டியாக என்னை
மாற்றி விட்டாயே!

சூரியன் வரும் வேலை
நிலவும் வானில்
தெரிவது இல்லை…
என் கண் பார்வையில்
நீ இருக்கும் நேரம்
நெஞ்சில் வேறு
நினைவும் இல்லை…

பாரதி கண்ட
புதுமை பெண்ணாய்
திரிந்த என்னுள்
பய விதையை விதைத்து,
நாளுக்கு நாளாய்
தண்ணீர் விட்டு
ஏன் என் ஜீவனை குடிக்கிறாய்?

**************

மெல்லிய கீற்றாய் எட்டிப் பார்த்திருந்த பிறை நிலவை முற்றிலும் மறைத்திருந்தது, கருத்துத் திரண்டிருந்த கார் மேகங்கள். ஆள் நடமாட்டம் வேறு குறைந்திருந்தது.

அடிக்கடி கையிலிருந்த செல்ஃபோன் திரையில் நேரத்தை பார்த்துக் கொண்டே அந்த சாலை வழியே வேகமாக நடந்து கொண்டிருந்தாள் தாமிரா.

இரண்டு நாட்களாக சிந்துவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் ஹாஸ்பிடலும் வரவில்லை. தாமிராவும் தனியே வீடு திரும்பும் நிலை. இன்று ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வரவே மணி ஒன்பதை தாண்டியிருந்தது.

இடியும் மின்னலும் அவளை அச்சுறுத்தியது. ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விடலாமென வேக வேகமாக நடந்தாள். அன்று ஏனோ அந்த சாலையில் ஜன நடமாட்டமே இல்லை.

இதே வேகத்தில் நடந்தால் கூட அவள் தங்கியிருக்கும் வீட்டை அடைய இருபது நிமிடமே எடுக்கும். அவளால் நடந்தே சென்று விட முடியும் ஆனால் இப்போதைய பிரச்சினை உறுமும் வானம் தான். எந்த நேரத்திலும் மழை கொட்டி விடும் போல் இருந்தது.

அந்த ஊரின் ஜில்லென்ற காலநிலையில் ஈரப்பதன் மிக்க குளிர்காற்று அவள் உடலை ஊசியாய் துளைத்தது. சுடிதாருக்கு மேலாக ஸ்வெட்டர் அணிந்திருந்தாள், கழுத்தோடு சுற்றியிருந்த துப்பட்டாவை எடுத்து தலையில் முக்காடு போல போட்டுக் கொண்டாள்.

அடியை எட்டிப் போட்டு வேகமாக நடந்து கொண்டிருந்த போது தான் அவள் ஸ்வெட்டர் பாக்கெட்டினுள் இருந்த கைபேசி ஒலித்தது. வீடு செல்ல தாமதமானதால் சிந்து தான் அழைத்திருந்தாள்.

“இதோ கிளம்பிட்டேன்டி”

“…..”

“நத்திங்..இன்னும் இருபது நிமிஷத்துல வீட்ல இருப்பேன்.”

“……”

“ஒன்னும் பிரச்சினை இல்லைடி. இதோ சீக்கிரம் வந்துட்றேன்.பயப்படாதே” அஞ்சிய சிந்துவுக்கு பதிலளித்து விட்டு அழைப்பை துண்டிக்க, மழை தூறல் விழத் துவங்கியது. அவளது நடையின் வேகமும் கூடியது.

ஆங்காங்கே சில சாலை விளக்குகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்க, இருளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வழமைக்கு மாறாக அன்று ஏனோ அவள் மனம் வேறு பதட்டமானது.

வானமும் ஆள்
இல்லாத வீதியும்
விட்டு விட்டு எறியும்
மின் விளக்குகளும்
கோரப்பல் கொண்டு
சிரிக்கும் இடிகளும்
தோழி இல்லாமல்
இருக்கும் தனிமையும்
மனதில் பயத்தை
விதைக்க பார்க்க…
கை விட்டு விடுவேன்
என்று ஏளனச் சிரிப்பு
சிரிக்கும் தைரியத்தின்
கையை கெட்டியாக
நானும் பிடிக்க…
விதியோ தன்
சதுரங்க ஆட்டத்தில்
என்னை பகடைக் காயாக
வைத்து சிறப்பாக
விளையாட நினைத்ததோ?
பயம் என்ற சிலந்தி
வலையில் சிக்கி கொண்டேனே!

மழை வேறு சற்று வலுத்துக் கொள்ள வேக வேகமாக நடந்தவள், காலில் ஏதோ தட்டுப்பட சமநிலையின்றி விழ நேர்ந்த வேளை, ஓர் கரம் அவள் இடையை பற்றி தாங்கவும் சரியாக இருந்தது.

அச்சத்தில் கண்களை மூடியவாறு தன்னிரு கைகளையும் குறுக்கி மார்புக்கு மத்தியில் வைத்திருந்தாள் தாமிரா. அவள் இதய துடிப்பு வீதம் எகிற மெல்ல கண்களை திறந்தாள். அவள் முகத்துக்கு வெகு அருகாமையில் அவன் முகம்.

அவன் அந்த ராட்சசன்‌. அவன் இருக்கும் திசையில் கூட தலை வைத்து படுக்கக் கூடாது என்று நினைத்திருந்தவளுக்கோ தனக்கு மிக அண்மையில் அவன் கைப்பிடியில் வேறு இருந்ததில் இதயம் தாறுமாறாக துடித்தது.

அவனை கண்டதும் பயத்தில் மேலும் விரிந்த அவள் விழிகளை தான் அவனும் பார்த்திருந்தான் போலும். அவன் பிடியிலிருந்து விலக நினைத்தவளாய் திமிறிக்கொண்டு விடுபட முயல மீண்டும் நிலை தடுமாறி அவன் மீதே சரிந்து விழுந்தாள். அவனும் இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அவனும் தடுமாறி இருவரும் விழ நேர்ந்த அதே நேரம் அவர்கள் இருவர் தலைக்கு மேலாக பாய்ந்து வந்த தோட்டா ஒன்று எதிர்த்திசையில் இருந்த பாரிய மரத்தின் தண்டை குறிபார்த்தது.

எதிர்பாராத நேரத்தில் அந்த துப்பாக்கி சுடும் சத்தத்தில் இருவருமே அதிர்ந்தனர். கீழே விழ நேர்ந்ததால் தலை தப்பியது. இல்லேயெனில் யாராவது ஒருவரின் தலை சிதறியிருக்கக்‌ கூடும். மூளை மரத்து செயலற்று போய் நின்றிருந்தாள் தாமிரா.

இது ருத்ரனுக்கு வைக்கப்பட்ட‌ குறி. அவனுக்கு புரிந்து போனது. அவன் முகம் மாறி விகாரமானது. அவன் விழிகள் அந்த இடத்தை‌ சுற்றிலும் ஒரு தரம் நோட்டம் விட்டன. அந்த இருளில் யார் எங்கே இருந்து தாக்கக் கூடும் என சரிவர தெரியாத நிலையில் ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. அவளை பார்த்தான்.

மறுநொடி அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட எத்தனிக்க, மீண்டுமோர் தோட்டா அவர்கள் இருந்த திசையை நோக்கி வந்து அருகிலிருந்த காரொன்றின் கண்ணாடியை நொறுக்கியது.

“ரன்..” என்று அடிக்குரலால் சீறினான் ருத்ரன்.

மிரண்டு போனாள் தாமிரா. அவன் கைப்பிடியில் அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. ‘ஓடு.. ஓடு’ என்று அவளது மூளையும் அவளை விரட்ட, நொடிப் பொழுதில் முடிவு செய்து, கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டுக்குள் புகுந்து அவனுடன் ஓடினாள்.

அவர்கள் இருவருக்கும் பின்னாலேயே தட தட காலடிச் சத்தம் வேறு‌. துப்பாக்கி முளைத்த கையோடு பத்து பதினைந்து பேர் அவர்களை துரத்தியது. இருளின் பிடியில் அவர்களது குறி தப்பிக் கொண்டே இருந்தது‌.

எவ்வளவு தூரம் ஓடினார்களோ‌அவளுக்கு தெரியாது. வரண்டு போன நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. மூச்சிரைத்தது. இதற்கு மேல் ஓர் அடி கூட எடுத்து வைக்க திராணியற்றவளாய், “இதுக்கு மேல என்னால ஓட முடியாது.” மடிந்து அமர்ந்து விட்டாள். ஆனாலும் அவளது கை அவன் பிடியிலேயே இருந்தது. அவனது ஓட்டமும் தடை பட்டு நின்றது.

அவன் முகத்தில் வழியும் நீரை வழித்தெறிந்து விட்டு பார்வையை கூர்மையாக்கினான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

“இப்படியே இருந்தா கொன்னுடுவாங்க. கெட் அப்.” என்று சீறினான்.

வாயாலும் மூக்காலும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியேற்றியபடி தலை குணிந்து இருந்தவளது தலை முடியாதென இடவலமாக ஆடியது.

கடுப்பானான் ருத்ரன். தன்னிரு கைகளாலும் தலையை அழுந்தக் கோதினான். மறுநொடி அங்கிருந்த மறைவான ஓர் இடத்திற்கு அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.

அவள் மெல்ல தலை உயர்த்தி அவனை பார்த்தாள். அவனது அந்த தோற்றமே அவளை அச்சுறுத்தியது. ஒரு புறம் அவளது தற்போதைய நிலைமை மறுபுறம் அவளுக்காக காத்திருக்கும் சிந்துவின் நிலை.

“ச்சே உன்னால தான் இப்படி ஓடி வர வேண்டியதா போச்சு. இல்லைனா ஒரு அஞ்சு பேரையாவது சுட்டு தள்ளியிருப்பேன்‌.” அவள் மேல் எறிந்து விழுந்து கொண்டிருந்தான் அந்த ராட்சசன்.

என்னது சுட்டுத் தள்ளியிருப்பானாமா? உயிரைக் கொல்வதை கூட இவ்வளவு அசால்ட்டாக எண்ணும் இவனுக்கு உயிரின் மதிப்பு எங்கே தெரியப் போகிறது. உயிர் காக்கும்‌ மருத்துவரான அவளுக்கு இவனது இப் பேச்சு வேறுஅதீத ஆத்திரத்தை கிளப்பியது‌.

மூச்சிரைக்க அமர்ந்திருந்தவள் தலை உயர்த்தி அவனை முறைத்தாள்.

“அவங்க ஒன்னும் என்னை துறத்தலை உங்களை தான் துறத்துறாங்க. சும்மா ரோட்ல இருந்தவளை இழுத்துட்டு ஓடி வந்தது நீங்க தான். உங்களால் தான் என் உயிருக்கும் ஆபத்து. நான் என்ன உங்களை மாதிரி ரத்த வெறி பிடிச்ச ரௌடியா? ” வாய்க்கு வந்தபடி பேசி வைத்து விட, ரௌடியில் அவள் கொடுத்த அழுத்தத்தில் அவனுள் சுர்ரென்று ஏறியது. அவன் கண்களில் எரிமலையின் சீற்றம் தெரிந்தது.

அதே சமயம் அவர்களை துறத்தி வந்த துப்பாக்கி ஏந்திய‌ தடியர்கள் சிலர் அந்தப் பக்கம் வந்து விட்டனர். அவர்களது காலடிச் சத்தம் வேறு நெருங்கியது. இடுப்பிலிருந்து துப்பாக்கியை உருவி எடுத்தான். அவளை சிறிது நேரம் வெறித்தான்.

“உன் உயிருக்கு ஒன்னும் ஆகாது.” பற்கள் நறதறுக்க கூறிவிட்டு, அதே சீற்றத்தோடு மறைவான இடத்தை விட்டு வெளியே வந்தான் ருத்ரன்.

அவனது செயல் அவள் உள்ளத்தை பதறச் செய்தது. அவனை தடுக்க எண்ணி அவசரமாக எழ முயன்ற‌ வேளை, ‘டமால் டுமீல்’ வெடிச் சத்தம். எழுந்தவள் உடலோ தூக்கிப்போட காதுகளிரண்டையும் கைகளால் பொத்தியபடி அப்படியே குறுகி அமர்ந்து விட்டாள். அடுத்த சில நிமிடங்கள் ஓயாத இடி போல ஒரே துப்பாக்கி சத்தம்.

இப்படி ஓர் இடத்தில் மாட்டிக் கொண்ட தன் நிலையை எண்ணி நொந்து போனாள். அவள் உடலின் நடுக்கம் குறையவில்லை. அவனுக்கு ஏதும் ஆகியிருக்க கூடுமோ? கண்களில் கண்ணீர் கசிந்தது. கைகள் இரண்டாலும் வாயை அழுந்த மூடிக் கண்ணீர் வடித்தாள்.

பெரு மழை அடித்து ஓய்ந்தது போல் ஒரே நிசப்தம் நிலவியது. இதயத்தின் படபடப்பு இன்னும் ஓயவில்லை. என்ன நடந்தது? யாருக்கு என்னவானது? ருத்ரன் எங்கே? ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு.

மெல்ல எழுந்து நடந்து வந்து மறைவான அந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தாள். எங்கும் இருள் பரவிப் படர்ந்திருந்தது. அவன் எங்கே? அவனுக்கு என்னவானது? ‘கடவுளே! அந்த ராட்சசனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது’ அவள் உள்ளம் மானசீகமாக கடவுளை வேண்டியது‌. அக்கணம் சிந்துவை மறந்தே போயிருந்தாள்.

அவள் விழிகள் அந்த இடம் முழுவதையும் ஆராய்ந்தது. ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. அவன் இருந்த சுவடே தென்படவில்லை. அவள் கண்களில் நில்லாமல் கண்ணீர் வழிந்தது.

மெல்ல மெல்ல அவள் அழுகை அதிகரிக்கத் துவங்க, யாரோ அவள் தோள் மேல் கொடுத்த அழுத்தத்தில் அச்சம் தலை துக்க இதயம் எகிற, பதறி திரும்பினாள் தாமிரா. அது அவன் தான். அவனை கண்டதுமே வேறு எதுவும்‌ தோன்றவில்லை அவளுக்கோ எல்லாம்‌ மறந்து போனது. அவன் யாரென்பதையும் மறந்து அமர்ந்த நிலையிலேயே அவன்‌ நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

அவன் இதயத் துடிப்பின் வேகத்தை அவளால் துல்லியமாக உணர முடிந்தது .அவனோ எந்த எதிர்வினனையும் ஆற்றாமல் அசைவின்றி அமைதியாக இருக்க, அவனை விட்டும் அவள் சட்டென விலகினாள். மறுகணம் தோள்பட்டையில் இரத்தம் வழிய அப்படியே அவள் மடி மீது சரிந்து விழுந்தான்.

***************

தடுமாறி விழ போனேன்
இடை வளைத்து
என்னை தாங்கினாய்…
அவனிடம் என்றோ
விழுந்து விட்டாயடி
என்று மனமும் கேலி பேச,
கூச்சத்திலும் மனத்தோரும்
குடி கொண்ட பயமும்
உன்னை விட்டு
விலக சொல்ல,
விடுபட முயன்று
உன்னிடமே மீண்டும்
தஞ்சம் கொள்ள,
காலனுக்கு எல்லாம் காலனே
உன் உயிரை களவாட
வந்த கயவரிடம் இருந்து
என்னை அறியாமலே
உன்னை காப்பாற்ற,
என் உயிரை நினைத்து
போராளி நீயும் புறம்
காட்டி ஓடி வந்தாயோ?
தோடாக்களுக்கும்
உன்னிடம் நடுக்கமோ?
பயந்தோடி எங்கோ செல்லுதே!
கை பிடித்து மார்க்கம்
அறியாது ஓடினோம்…
ஓடி ஓடி களைத்து
தான் போனேன் அன்பே!
மறந்தும் கோர்த்த
கைகளை விடவில்லை நீ!
உயிரை காக்கும்
உன்னத தொழிலை
உயிர்க்கும் மேலாக
நேசிக்கும் என்னிடம்
உயிரை துச்சமாக
நீயும் பேசலாமா?
பயத்திலும் கோபத்திலும்
ஏற்பட்ட தைரியத்தில்
வச மொழி நானும் பாட,
போராட நீயும்
தனியே சென்றாயே!
கடல் அலையாக ஒலித்த
துப்பாக்கி சத்தத்தில்
பயத்தில் நானும் நடுங்க,
ராட்சசனே உனக்கு
ஏதும் ஆகாமல் இருக்க
எல்லா கடவுளை வேண்டினேனே!
வெறுப்பை உன் மேல்
உமிழ்ந்தாலும் உனக்கு
ஒன்றென்றால் என்னால்
அதை தாங்கிடவும் இயலுமோ?
காதல் ஆடும் ஆட்டம்
மட்டும் புரியவில்லை எனக்கு!
மடிமீது சரிந்து போது
இதயமும் ஒரு நொடி
துடிக்க மறந்ததே!
என்னை நீங்கி செல்லாதே
கணமும் என்னால்
அதை தாங்க இயலாதே!

*************