IM 2

IM 2

அத்தியாயம்-2

ஐம்பதுக்கும் அதிகமான மாணவர்கள் அமர்ந்திருந்த அந்த பெரிய வகுப்பறையின் முன்னால் அமைக்கப்பட்ட சிறு மேடையில் நின்றபடி ‘மைக்ரோ பயாலஜி’ பாடத்தை விவரித்திக் கொண்டிருந்தார் அந்த  இளநிலை ஆசிரியர்! பிஸ்தா நிற முழுக்கை சட்டை, அதற்கு எடுப்பான நிறத்தில் கால்சட்டை, ஆள் பாதி ஆடை பாதி பற்றி தெளிவாய் புரிந்து வைத்திருக்கிறார்! அப்படி இருந்தவரை பார்த்துக் கொண்டும், அடிக்கடி எழுதுவது போல் பாசாங்கு செய்தும் தன் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள் அவள்!

மயூரிக்கு அவரின் வகுப்பு மிகவும் பிடிக்கும். அவர் நடத்தும் பாடத்திற்காக மட்டும் அல்ல! அவரின் கம்பீரமான தோற்றத்தையும், அந்த ‘போரான’ பாடத்தை மாணவர்கள் ரசிக்கும்படியாய் அவர் கொண்டு செல்லும் விதத்திலும் லயித்திருந்தவள் அடிக்கடி தன் கனவுகத்திற்குள் சென்றும் வந்தாள்!

முன்தினம் ஆரம்பித்த அவளின் ஓட்டம் இப்போதே முடிவுக்கு வந்தது! கல்லூரியில் கொடுத்தித்திருந்த பாட சம்மந்தமான வேலையை முடிக்கவேண்டி தன் தோழிகளுடன் நேற்றிரவு தோழிகளுடன் ஹாஸ்டலில் தங்கிவிட்டாள்! தற்போதே வீடு திரும்புகிறாள்! அதற்கு முன் விஷ்ணுவிடம் பேசலாம் என்று மெசேஜ் செய்தால் அவனுக்கு தலைவலியாம்!

‘ஒரு தலைவலிக்கே தலைவலி வருகிறதே…கேள்விக்குறி! அவனுக்கு அதை குறுந்தகவலாய் தட்டிவிட்டு தன் நிறுத்தத்தில் இறங்க, இவளை தாண்டி தன் வண்டியில் பறந்தான் விவேக். ‘இத்தனை சீக்கிரம் எதுக்கு இன்னிக்கு வீட்டுக்கு வந்தான்?’

வீட்டினுள் நுழைந்து தன் அறைக்குள் சென்று பதுங்காமல்,

“அத்தை ஐயம் பேக்” என்றபடி கிட்சனுக்குள் பாய்ந்தவள் அவன் அங்கிருப்பான் என்று சற்றும் எதிர்பாக்கவில்லை!

கிட்சன் மேடையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தான். இவளை பார்த்துக் கொண்டிருந்தவன் வழமை போல் நகராமல் அங்கேயே இருக்க, இவளுக்கோ தர்ம சங்கடம்!

“நான் ரூமுக்கு போறேன் அத்தை. நைட் டிபன் நான் செய்றேன்!”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீ படிக்கிற வேலையை பாரு வள்ளி!”

“இன்னிக்கு படிக்கிற வேலை எதுவுமில்லை, சொன்னா கேளுங்க.”

அங்கிருந்து போனவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அன்னை தன்னை கவனிக்கிறாள் என்று தோன்ற தன் பார்வையை திருப்பிக் கொண்டான். அமுதாவுக்கு அவளின் மூத்த மகன் என்றுமே ஒரு புரியாத புதிர் தான். இந்த இரண்டு நாளில் இன்னும் புதிராய்த் தெரிந்தான். எந்த நாளும் அவனுக்கு மயூரவள்ளியை பிடித்ததில்லை. அவளை பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுவதும், சண்டை போடுவதுமாய் அவன் செய்த கூற்றை அவரால் இன்னமும் மறக்க முடியவில்லை! ஆனால் அவளை திருமணம் செய்கிறேன் என்கிறான். இதைபற்றி இளையவன் விஷ்ணுவிடம் பேசலாம் என்றால் அவனை பிடிப்பதே சிரமமாய் இருக்கிறது. அவரின் யோசனை முடியவும்,

“தம்பி நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன்” மகனிடம் சொன்னவர் சற்று நேரத்தில் கிளம்பிவிட இவன் தன் லாப்டாப்பில் மூழ்கிவிட்டான்.

“அண்ணனுக்கு கல்யாணமாமே?”

“ஆமா பேசிகிட்டிருந்தாங்க!”

“பொண்ணு யார் தெரியுமா? இல்லை அதையும் நானே சொல்லணுமா?”

“யாரு? உனக்கு தெரிஞ்ச பொண்ணா!”

இருவரும் அடுத்தவர் பேச்சை கேட்டு குழப்பமடைந்தனர்!

‘இவளுக்கு விஷயமே தெரியாதோ?’

“அதை அம்மாவே சொல்வாங்க! என் கிட்ட கேட்காதே!” என்றான்!

இவனிடம் கேட்காமல்…?

பேச்சில் அவன் காட்டிய ஒதுக்கத்திற்காக பதில் சொல்லாமலிருந்தாள்!

“மயூரி” விவேக்கின் குரல் கீழிருந்து கேட்டது!

“நான் அப்புறம் பேசுறேன் விஷ்ணு” பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தவள் இறங்கி வர,

“கதவை பூட்டிக்கோ, அம்மா வீட்டில் இல்லை. நான் கிளம்புறேன்!”

வண்டியை கிளப்பிக் கொண்டு போகிறவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ‘அவன் தானா இவன்’ என்று சந்தேகம்!!

அமுதா கனகவேல் அன்றிரவு அவளிடம் மேற்படி பேச முடிவெடுத்திருந்தனர்!

“விவேக் உன்னை கல்யாணம் செய்துக்க நினைக்கிறான் வள்ளிமா. உனக்கு இதில் சம்மதமா?”

சத்தியமாய் அவள் இதை எதிர்பார்க்கவில்லை! அதற்காக தான் அவனிடம் ஒரு மாற்றமா! என்ன பதில் சொல்வாள்!

யாருமற்று அனாதையாய் நின்றபோது தன்னை காத்த குடும்பத்துக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறாள். ஆனால் அதற்காக விவேக்?

விஷ்ணுவுக்கு இது தெரியுமா?

“நீ என்ன நினைக்கிறேன்னு தைரியமா சொல்லுமா. உன் விருப்பமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம்” இருவரும் ஒரே வாக்கியமாய் சொன்னாலும், அமுதா அத்தையின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பை அவள் அறிவாள். ஆனால்…?

“இன்னும் எனக்கு படிப்பு பாக்கியிருக்கு அத்த. எனக்கு இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாமே”

“படிப்பை பத்தி அப்புறம் யோசிக்கலாம் மா. விவேக்கை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமான்னு மட்டும் சொல்லு!”

அமுதா படபடக்க, கனகவேல் இடைப்புகுந்தார்.

“அமுதா அவளும் சின்ன பொண்ணு தானே! யோசிக்க கொஞ்சம் டைம் கொடு! வள்ளி நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாமா. நீ என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு முழு சம்மதம்!”

இருவரும் அவள் அறையிலிருந்து சென்ற பின்பும் நீண்ட நேர யோசனையில் அமர்ந்திருந்தாள். சுவற்றில் மாட்டியிருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை பார்த்த நொடியில் அவள் கண்கள் தானாக கலங்க ஆரம்பித்திருந்தது! அந்த

செய்வதறியாத சேய் போல் விஷ்ணுவை போனில் அழைக்க ஆரம்பித்தாள்.

விஷ்ணு இவளின் பத்து மிஸ்டு கால்களையும் விட்டுவிட்டு பதினோராவது காலில் போனை எடுக்க,

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? எத்தனை தடவை கூப்பிடுறேன்! வீட்டில் என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா விஷ்…”

“என்ன நடக்குது?”

“நடிக்காதே. உனக்கு அத்தை சொல்லாமலா இருப்பாங்க! உன் அண்ணன் விஷயம் தான்”

“அண்ணன் விஷயம் மட்டுமா?”

“எல்லாம் தெரிஞ்சு ஏன் டா என்கிட்ட சொல்லலை? உனக்கு என்னை விட உன் குடும்பம் தானே முக்கியம்!”

சம்மந்தமே இல்லாமல் அவனிடமும் அழ ஆரம்பித்திருந்தாள்!

“நீங்க எல்லாம் ஒண்ணு, நான் மட்டும் வேற தானேடா!”

“ஹேய் லூசு! நீ தான் விஷயத்தை தெரிஞ்சிகிட்டே என் கிட்ட சொல்லலைன்னு நினைச்சேன்!”

அவள் அழுகை அவனை என்னவோ செய்தது!

“நான் உன்கிட்ட இதுவரை எதையாவது மறைச்சியிருக்கேனா? என் சைட்டிலிருந்து என் டயட் வரை எல்லாமே தான் உன்கிட்ட சொல்லி சலிக்கிறேன்!”

இன்னமும் அவள் விசும்பல் தொடர,

“சரி சரி…சமாதானம்! என் தப்பு தான். நான் முன்னமே உன்கிட்ட கேட்டிருக்கணும்! இப்ப சொல்லு, உனக்கும் இதில் சம்மதமா!”

பதிலில்லை.

“வள்ளி, சொல்லு டி”

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை! விவேக்கை பத்தி எனக்கு என்ன தெரியும்? எங்களுக்குள்ள ஒத்துவர மாதிரி ஒரு விஷயம் கூட இல்லையே!”

“ம்ம்! எனக்கும் அந்த யோசனை தான்.”

சற்று இடைவெளி விட்டவன்

“பேசாம அந்த பிரபொசர் மேட்டரை நம்ம வீட்டில் சொல்லிடேன்!”

“டேய் என்ன டா சொல்றே!”

“உனக்கு தப்பிக்க ஐடியா தரேன்! யோசிச்சு பாரு!”

ஏனோ கனகவேல் தம்பதியினரை கஷ்டப்படுத்த அவளுக்கு மனசு வரமாட்டேன் என்றது ! ஆனால் அதற்காக விவேக்குடன் திருமணம் என்றால் அதுவும் தன்னால் முடியாது!

விஷ்ணு சொன்ன திசையில் யோசிக்க ஆரம்பித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்!

பஸ் நிறுத்தத்தில் இருந்தவளின் பக்கம் தன் வாகனத்தை நிறுத்தியவன்,

“மயூரி லன்ச் மறந்துட்டியாம், இந்தா”

விவேக் அத்தனை தூரம் வந்து தந்ததில் கொஞ்சம் சங்கடமாயிருந்தது தான்.

அவனிடம் நெருங்கி வர,

“இன்னிக்கு ஏதும் விசேஷமா? எக்ஸ்ட்ரா அழகாயிருக்கே”

ரசனையான பார்வை அவனிடத்தில்!

அவனின் பளபளத்த கண்களை பார்க்க முடியவில்லை! சட்டென்று பார்வையை மாற்றியவள்,

“பர்ஸ்ட் இயர் இன்னிக்கு வருவாங்க! அதுக்கு ஒரு வெல்கம் பார்ட்டி!”

‘இளமாறன் சார் கிட்ட இன்னிக்கு சொல்ல போறேன், அதான்’

உள்ளும் புறமும் இரு வேறு பதில்களை சொன்னாள்!

மிகவும் பதட்டமாய் இருந்தது! காலையிலிருந்து அத்தை இவளை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் பார்ப்பது போலவே அவளுக்கு ஒரு எண்ணம்!

சீக்கிரம் இதற்கான முடிவை எடுத்தாளன்றி தப்பிப்பது கஷ்டம்!

ஸ்டாஃப் ரூமில் இருப்பார் என்ற நினைப்பை பொய்யாக்காமல் அவர் அங்கே தான் இருந்தார். அந்த கல்லூரியில் முப்பது வயதுக்கு உற்பட்ட ஆசிரியர்கள் பலர் வேலையில் இருந்தனர்! அதில் இளமாறன் அதிகமானவர்களுக்கு ஸ்பெஷல்! மயூரியும் அந்த அதிகமானவர்களில் அடக்கம்.

வீட்டில் இந்த பேச்சை எடுக்காமலிருந்தால் இன்னும் கொஞ்சம் தாமதித்திருக்கலாம், ஆனால் இப்போது வேறு வழியில்லை! அனுமதி கேட்டு உள்ளே போக அங்கே அவர் மாத்திரம் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

“யெஸ் மயூரவள்ளி, வாட் டூ யூ நீட்”

பேச்சு வருவேனா என்றது! கையெல்லாம் சில்லிட்டிருக்க, பேச வேண்டி வாயைத் திறந்தால் தந்தியடிக்கும் வாய்ப்பு இருப்பது போல் தோன்றியது!

“சார் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்!…”

“சொல்லுங்க மயூரி!”

அவள் வாக்கியத்தை இருபதாவது முறையாக மனதுக்குள் அமைத்து அவரிடம் சொல்ல வர, ஒரு சக ஆசிரியர் அந்த அறைக்குள் நுழைந்தார்!

“வாசன் சார் உங்களை தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்”

தன் பக்கமிருந்த் கவரிலிருந்து ஒரு அழைப்பிதழ் போல் தோன்றியதை அவரிடம் நீட்டினார்!

‘நோ’

மயூரிக்கு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது!

“என் கல்யாணத்துக்கு உங்க பேமிலியோட கண்டிப்பா வரணும் சார்!”

அவர் முகத்தில் தோன்றிய புன்னகை இன்னமும் அவரை அழகாக்கியது!

வாசன் சார் தந்த வாழ்த்தினை சிறு வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டவர், மயூரியிடமும் ஒரு அழைப்பிதழை நீட்டினார்.

“கட்டாயம் வந்திடணும் மயூரவள்ளி! உங்க கிளாஸ்ல எல்லாரும்!”

நா வறண்டு போனது அவளுக்கு!

“க…க…கங்கிராட்ஸ் சார்”

“தான்க்ஸ். என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க மயூரவள்ளி?”

“யெஸ் சார் வந்து லாஸ்ட் வீக் நோட்ஸ் இருந்தா வாங்கலாம்னு வந்தேன்!”

“ஓகே” அவர் தேடி எடுத்து தந்ததை பெற்றுக் கொண்டவள் விட்டால் போதும் என்று ஓடிவந்துவிட்டாள்.

அந்த நாள் முழுவதும் அவளுக்கு கண்ணீரில் கடந்தது யாருக்கும் தெரியவில்லை!

“என்ன ஆச்சு? சொல்லிட்டியா வள்ளி!”

விஷ்ணு அன்றிரவு வழக்கம் போல் அழைத்தான்!

“விஷ்ணு நீ எப்போ ஊருக்கு வரே! ஐ வாண்ட் டு சீ யு”

அவள் குரலிலிருந்தே புரிந்தது! சந்தோஷமான பதில் வந்திருக்கவில்லை என்பது!

“வரேன் வரேன் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்!”. பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்திருந்தாலும் இன்று அவளுக்கு வலி அதிகம் தான். அதற்கு ஆறுதல் தேடியது அவள் உள்ளம்!

error: Content is protected !!