MMV 18

அத்தியாயம் – 18

அவள் சிறிதுநேரம் அங்கே இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலா மருத்துவமனையின் வாசல் வரை சென்றவள், ‘ஐயோ இதை எப்படி மறந்தேன்..’ வேலை ஞாபகம் வந்தவளாக மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைய, “நிலா..” என்ற அவனின் அழைப்பு அவளை அங்கேயே தேக்கி நிற்கவைத்தது.

இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளைப் படித்தபடியே அவளருகில் வந்த பாரதி, “என்ன நிலா இவ்வளவு தூரம் வந்திருக்கிற? என்ன விஷயம்?” இயல்பாகவே விசாரித்தான். அவளின் மனதில் ரூபியின் முகம் தோன்றி மறைந்தது.

அவள் தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் நிற்பதை கண்டவன், “இவனிடம் என்ன பொய் சொல்லலாம் என்று சிந்திக்கிற போல..” என்றவன் அவளின் மனதை படித்தவண்ணம் கேட்க, “இல்ல..” என்று வேகமாக மறுத்தாள் நிலா.

“அப்புறம் என்ன?” என்று அவன் விடாமல் அவளிடம் வழக்கடிக்க, “என்னோட பிரிண்ட் ரூபிணிக்கு குழந்தை பிறந்திருக்கு அவளைப் பார்க்க வந்தேன்..” அவள் புன்னகையுடன் பதில் கொடுத்தாள்.

“ஓஹோ அந்த பொண்ணைப் பார்க்க வந்தாயா?” இயல்பாக பேச்சை திசைதிருப்பியவன், “வீட்டிற்கு தானே போகிற..” அவளைப் பார்த்து சந்தேகமாக இழுக்க, “ம்ம் வீட்டிற்கு தான்..” என்று அவனை சமாளிக்கும் விதமாக கூறினான்.
“வா நம்ம ரூமில் போய் பேசலாம்..” அவளை தன்னுடைய அறைக்கு அழைக்கவே, “வீட்டிற்கு போகணும்..” அவனுக்கு மீண்டும் நினைவுபடுத்தினாள்.

அவளின் பேச்சு அவனுக்கு கோபத்தை வரவழைக்கவே, “நானும் வீட்டிற்குதான் வர போகிறேன் சேர்ந்தே போகலாம்..” என்று அவன் அதட்டவே, அவளும் அமைதியாக அவனை பின்தொடர்ந்தாள்.

தன்னுடைய அறைக்கு சென்ற பாரதி அவனின் ஸீட்டில் அமர்ந்து, “நீயும் உட்காரு.. ஒரு சின்ன வேலை முடிந்தபிறகு போகலாம் .” என்றதும் சரியென தலையசைத்துவிட்டு அந்த அறையைச் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். மருத்துவமனை என்றாலும் அதற்கே உரிய தூய்மையுடன் இருந்த அவனின் அறையை அவளுக்கு பிடித்திருந்தது.

“ரூம் ரொம்ப சுத்தமாக இருக்கு..” என்று அவள் பாராட்ட, “தேங்க்ஸ்..” என்றான் பாரதி. அவன் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த அங்கிருந்த மாதஇதழ்களை புரட்டியவள் அதிலேயே மூழ்கிவிட்டாள்.

அவள் தீவிரமாக படிப்பதை புன்னகையுடன் கவனித்தவன் அவனின் கவனத்தை வேலையில் திருப்பினான்.

அது முடிந்ததும், “நிலா போகலாமா?” என்று கேட்க, “ம்ம்..” அவள் தலையசைக்க இருவரும் காரில் வீட்டிற்கு கிளம்பினர்.

பாரதி தன்னுடைய கவனத்தை சாலையில் பதிக்க நிலாவோ மறையும் சூரியனை வேடிக்கை பார்த்தவண்ணம் வரவே இருவரின் இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இன்றி அழகான மௌனம் குடிகொண்டது.

பாரதி எஃப். எம். ஆன் செய்ய, ‘மாவீரன் படத்திலிருந்து வண்டினத்தை சும்மா சும்மா..’ என்று பாடவே அவனை ஓரவிழியால் பார்த்தாள் நிலா. அவன் ‘என்ன’ என்பதுபோல கேள்வியாக புருவம் உயர்த்திட மறுப்பாக தலையசைத்துவிட்டு தன்னுடைய பார்வையை வெளிப்பக்கம் திருப்பிவிட்டாள் நிலா.

பாரதியின் கவனம் பாட்டில் திரும்பிவிட,

“அது பெண்ணுக்கு உண்மையில் துணையாய் ஆகிடுமா..
உன்னை நிழலாய் தொடர்ந்து நான் வருவேனம்மா..
சிறுபூவாய் நெஞ்சோடு கொஞ்சதா பொன்மான்..
புது தென்றலைப் போலே தொடாத எம்மா..” அவனின் குரலில் இனிமையாக ஒலிக்கவே அவனின் கைகளோ ஸ்டீரிங்கில் தாளம்போட அவனின் கவனம் அனைத்தும் சாலையின் மீதிருந்தது.

அவன் பாடிய வரிகளின் அர்த்தம் புரிய நிலா திரும்பிய நிலாவின் பார்வையும் அவனின் பார்வையும் நேருக்கு நேராக சாதித்தது. அவனின் குரலைவிட அவனின் முகம் கண்ணாடி போல அவனின் மனதை அவளுக்கு படம்பிடித்து காட்டியது.
‘இந்த நிலாவை நீ நிழலாக தொடர்வாயோ..’ அவளின் விழிகள் அவனிடம் கேள்வி கேட்க அவனின் பார்வையால் அவள் பதிலைச் சொல்ல குறுஞ்சிரிப்புடன் திரும்பிக்கொண்டாள் நிலா.

கதிரவன் மேற்கு நோக்கி பயணிக்க மாலைபொழுதில் இளந்தென்றல் இதமாக வீசிட காரில் பயணத்தில் இணைத்திருந்த இருவரின் மனமும் அந்த பயணத்தை இனிமையான இசையுடன் ரசித்தனர். அவள் வழக்கமான நேரத்திற்கு வரவில்லை என்பதால் பதட்டமடைந்த சுமிம்மா வாசலில் வந்து அமர்ந்தார்.

என்னவோ நிலாவின் மீது அவருக்கு தனிபாசம் இருக்கவே செய்தது. பெண்பிள்ளை இல்லையா? தாயாக அவரின் மனம் அவளின் வரவை எதிர்பார்க்க பாரதியின் கார்தான் வீட்டிற்குள் நுழைந்தது.

அவன் வீட்டின் முன்னே காரை நிறுத்த சுமிம்மா வீட்டின் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கீங்க” என்ற கேள்வியுடன் காரிலிருந்து இறங்கினாள் நிலா.

மறுப்பக்கம் பாரதி காரிலிருந்து இறங்கவே இருவரையும் பார்த்த சுமிம்மா, “நீ வேலைக்கு தானே போன.. அப்புறம் எப்படி பாரதி கூட காரில் வர..” என்று கேள்வியாக புருவம் உயர்த்த அங்கே அவளின் குட்டு உடைந்து போனது.

‘இவரிடம் நான் என்ன சொல்லி சமாளிக்க..’ என்ற கேள்வியுடன் கையை பிசைந்த வண்ணம் நின்றவளை புன்னகையுடன் பார்த்த பாரதி, “அவள் நடந்துதான் வந்துட்டு இருந்தா.. நான்தான் காரில் வா போலாம் என்று அழைச்சிட்டு வந்தேன்..” என்றவன் அவர்கள் இருவரையும் கடந்து வீட்டிற்குள் சென்றான்.

அவன் பொய் சொல்வது அவளுக்காக என்று அவருக்கும் தெரியும் என்றாலும் சுமிம்மா அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அடுத்த சிலநாட்கள் அமைதியாக சென்று மறைய அன்று காலையில் பொழுது விடிந்ததும் கோவிலுக்கு கிளம்பவே சுமிம்மாவும் அவருடன் கிளம்பினார்.

அவர்களின் தயாராக நிற்பதை பார்த்து அவர்களின் அருகே வந்த பாரதி, “சுமிம்மா கோவிலுக்கு போறீங்களா? நானும் வருகிறேன்..” என்றவனை நிமிர்ந்து பார்த்த நிலா அமைதியாக இருந்தாள்..

“நானும் வருவேன்..” என்று பிரவீன் அவர்கள் முன்னாடி ஆஜராகவே, “அப்படியே அஜய், திவா, ரேணு, ரித்துக்கு போன் பண்ணி கோவிலுக்கு வர சொல்லு.. குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றால் அது நல்லது தானே..” என்ற சுமிம்மா அவரின் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவனும் மறுப்பு சொல்லாமல் அவர்களுக்கு அழைத்து விவரம் சொல்ல, “ம்ம் பாரதி அண்ணாவுக்கு, நிலா அண்ணிக்கும் இன்னைக்கு கோவிலில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு சீக்கிரம் வந்து சேருங்க..” என்று குறும்புடன் கூறிய பிரவீன் போனை வைத்தான்.

“பிரவீன் உன்னோட சேட்டை எல்லை கடந்து போகிறது.. இது சரியில்ல..” நிலா அவனை மிரட்ட பாரதியோ தம்பியை முறைத்தான். ‘அண்ணி இருக்காங்க.. நம்ம அப்புறம் பேசிக்கலாம்..’ என்று குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தான் பிரவீன். அதன்பிறகு நால்வரும் கோவிலுக்கு சென்றனர்.

பிரவீன் போட்ட குண்டு சரியாக வேலை செய்ய நால்வரும் கோவிலுக்கு வந்து சேர கூலாக காரைவிட்டு இறங்கிய பாரதியைப் பார்த்த அஜய், “அண்ணா இன்னைக்கு உங்களுக்கு கல்யாணமா?” என்று சந்தேகத்துடன் இழுத்தவனின் பார்வை நிலாவின் மீது கேள்வியாக படிந்தது..

சுமிம்மா பதில் எதுவும் சொல்லாமல் பூஜைக்கு பூவாக செல்ல, “நீங்க இருவரும் காதலிக்கிறீங்க என்று எங்களிடம் சொல்லவே இல்லல்ல..” கோபத்துடன் திவாகர் அவர்களிடம் சண்டைக்கு வந்தான்.ரேணுவும், ரித்துவும் அவளிடம் பேசவே இல்லை.
நிலா பரிதாபமாக பாரதியைப் பார்க்க, அவனோ அவளை மாட்டிவிட்டு வேறுபக்கம் வேடிக்கை பார்த்தான்.

“ஐயோ அது அவன் விளையாட்டிற்கு சொன்னது? நம்ம எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிடலாம் என்று அம்மாதான் சொன்னாங்க..” என்றதும் அவர்களின் முகம் தெளிந்தது.

“எல்லாம் இவனால் வந்தது..”என்று பிரவீன் முதுகில் அடித்தாள்.

“இதைதான் அண்ணி நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்..” என்று பிரவீன் புன்னகைக்க மற்றவர்களுக்கு விஷயம் புரிந்துவிட, “கூட்டு களவாணிகளா..” என்றவர்களின் முகமும் மலர்ந்தது.

“அது நான் இல்ல..” என்றவள் ஓடிவிடவே, “அண்ணா அண்ணி வேகத்தில் ஓடுறாங்க..” என்ற அஜய் சொல்ல பாரதியின் சிரிப்பொலி அவளை பின்தொடர்ந்தது.

“நேரம் ஆகிறது வாங்கடா சீக்கிரம் அப்புறம் பொங்கல் கிடைக்காமல் போயிரும்..” என்று சுமிம்மா வேகமாக கோவிலுக்குள் நுழையவே, “ஓஹோ கும்பலாக வர சொன்னது இதற்குதானா சுமிம்மா..” என்று சிரித்தபடியே கோவிலுக்குள் நுழைந்தனர்.
அங்கே சந்நிதானம் முன்னே நின்றிருந்த சிவகுமாரைப் பார்த்ததும், “மா..மா..” என்ற அழைப்புடன் அவரை நோக்கி ஓடிய நிலாவின் விழிகளில் கண்ணீர் உற்றேடுக்க சிவகுமார் திரும்பி அவளின் முகம் பார்த்தார்.

“நிலாம்மா எப்படிடா இருக்கிற..” என்றவர் அவரின் தலையை பாசத்துடன் வருடியவர், “சிந்து நான் சொல்வேன் இல்ல என்னோட பெரிய மகளேன்று அது இவள்தான்..” நிலாவை அந்த பெண்ணிற்கு அறிமுகம் செய்தார்.

அந்தப்பெண் அவளைப் பார்த்து புன்னகைக்க அவளின் கையைப் பிடித்தவண்ணம் ஐந்து வயது சிறுவனும் அந்த பெண்ணின் தோளில் மூன்று வயதுடைய பெண் குழந்தையையும் நின்றவரை அளவிட்டது நிலாவின் பார்வை.

நிலாவிற்கு அவர்களை அடையாளம் தெரியாமல் போகவே, “மாமா இவங்க..” என்றவள் அவரின் கையிலிருந்த தாலியைப் பார்த்தும், “மாமா..” என்று திகைப்பில் சிலையாகி நின்றாள்.

அப்பொழுது கோவிலுக்குள் நுழைந்த அஜய், “பாரதி அண்ணா நிலா யாருடன் பேசிட்டு இருக்கிற..” என்று கேட்க “அது யாரென்று நீயே வந்து பாரு..” என்றவன் முன்னே செல்ல சுமிம்மா அவனை பின்தொடர்ந்தார்.

மற்றவர்கள் அவர்களை நெருங்கிவிட, “நிலா இது யாரு..” என்ற சுமிம்மாவின் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவள், “என்னோட மாமா..” என்றாள் நிலா புன்னகையுடன்.

“மாமா இவங்க சுமிம்மா இவங்கதான் என்னை படிக்க வெச்சாங்க” என்றவர்களை அறிமுகம் செய்து வைக்க, “என்னோட நிலாவை நீங்க எல்லோரும் ரொம்ப பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி..” என்றவர் தொடரின் கண்கள் தானாக கலங்கியது..
“நான் இவளுக்கு மாமா முறை என்றாலும் இவள்தான் என்னோட பெரிய மகள்.. இவள் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதற்கு நீங்கதான் காரணம்.. ரொம்ப நன்றி.. ” என்றவரின் தோளில் நிலா சாய்ந்து கொள்ள பாரதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்தார்.

“மாமா என்ன நடந்தது? ஏன் இப்படியொரு முடிவு..” நிலா அவரிடம் கேள்வி எழுப்ப,

“நான் கோகிலாவை டைவர்ஸ் பண்ணிட்டேன்ம்மா. இவள் சிந்து பாவம் கணவனை இழந்துட்டு இரண்டு குழந்தையை வெச்சிட்டு கஷ்டப்படறா அதன் இவளைக் கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தேன்..” என்றார்.

யாரும் அற்றவர்கள் போல அவளின் மாமா நின்ற நிலையைக் கண்டு அவள் கலங்கி நிற்க, “நீங்க நிலாவோட மாமா என்று தெரிந்த பிறகு நாங்க இல்லாமல் கல்யாணம் நடக்குமா என்ன?” என்ற சுமிம்மா ரித்து ரேணுவிடம் சேலையைக் கொடுத்து, “சிந்துவை அலங்காரம் பண்ணி கூட்டுட்டு வாங்க..” என்றார்.

“இந்த வயதில் உங்களோட முடிவு எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம். உங்களுக்கு நாங்க இருக்கிறோம்..” என்ற பாரதி அவரை அழைத்துச்சென்றான்.

அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடைபெற சிவகுமார் – சிந்துவின் திருமணம் சுமிம்மாவின் தலைமையில் சிறப்பாக நடந்தது. தன்னுடைய கணவனின் முகத்தை புன்னகையுடன் பார்த்த சிந்து நிலாவுடன் இயலாப பேசி பழகிட ஒரு உறவில் தவறான கணக்கு ஒன்று இன்று நேரானது. அந்த குழந்தைகளும் நிலாவிடம் ஒட்டிக்கொண்டது. சிந்துவை அவளுக்கு பிடித்துபோகவே, “அக்கா அக்கா..” என்று அவளையே சுற்றி வந்தாள்.

அதன்பிறகு நிலாவை தனியாக அழைத்து கன்னியாகுமரியில் நடந்த அனைத்தையும் கூறியவர், “உன்னை தேடிட்டு உங்களோட பழைய வீட்டிற்கு போன பொழுதுதான் பாரதியைப் பார்த்தேன் நிலா..” என்றவர் தொடர்ந்து,

“நான் நிலாவை தேடி வந்தேன் என்று சொன்னதும் அவரும் அவரின் மனதை சொன்னார். நல்ல பையன் நிலா..” என்றவர் சொல்ல நிலாவின் பார்வை அவளையும் அறியாமல் பாரதியின் மீது படிந்து மீண்டது.

“உன்னோட பாஸ்ட் அவரிடம் நான் சொல்லல..” என்று சொல்ல அவளின் மனதில் நிம்மதி பரவியது. பாரதியின் காதல்மனம் அவளுக்கு புரிந்தாலும் நிலாவின் இழப்பு எத்தகையது என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

அனைவரும் கோவிலில் இருந்து கிளம்ப, “அடுத்து நம்ம பாரதி – நிலாவோட கல்யாணம் தான்..” சுமிம்மா நிலாவை வம்பிற்கு இழுக்கவே, வெக்கத்தில் சிவந்த கன்னங்களை மறைக்க கோவிலைவிட்டு வெளியேறினாள்.

“அண்ணி எங்கே ஓடுறீங்க.. அண்ணா அண்ணியை பிடி..” என்று பிரவீன் அவனுக்கு கட்டளையிட, “ஏண்டா அவளிடம் வம்பு இழுக்கிற..” என்று நிலாவிற்கு சாதகமாக அவன் பேச மற்றவர்கள் அவனை கேலி செய்தனர்.

அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவனைப் பார்த்த நிலாவின் விழிகள் கோபத்தில் சிவந்தது. அவளின் புன்னகை உதட்டோடு உறைந்தது.

அதற்குள் அவளைப் பார்த்தவன், “நிலா..” என்றழைக்க திரும்பியவள் அவனின் அருகில் பூஜை தட்டுடன் நின்றவளை பார்த்ததும் நிலாவின் முகம் செந்தணலாக மாறியது.

“இன்னொரு முறை என்னோட பெயரை சொன்ன செருப்பு பிஞ்சிரும்..” என்ற நிலாவின் எச்சரிக்கையில் இருவரும் அதிர்ந்து நின்றனர்.

அவளின் பின்னோடு வந்த மற்றவர்கள் அமைதியாக நிற்கவே, “அவள் யார் கூட பேசற..” சுமிம்மா அவளின் அருகில் செல்ல நினைக்க, “அம்மா அவள் பேசட்டும் நீங்க அமைதியாக இருங்க..” என்று அவரைத் தடுத்தார் சிவக்குமார்.

மற்றவர்கள் தங்களை வேடிக்கைப் பார்ப்பதை உணர்ந்து, “நிலா நான்..” என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்னே கைநீட்டி தடுத்த நிலா, “செய்த தப்பை உணராமல் ஊருக்குள் அவனோட கைகொர்த்துட்டு வர உனக்கு வெக்கமாக இல்ல..” என்று கேட்க அந்த வார்த்தைகள் தான் அவர்களுக்கு கிடைத்த முதல் சவுக்கடி.

“நிலா அனைத்தும் மறந்துவிடு. வா நம்ம சேர்ந்து வாழலாம்..” என்று அவன் சொல்ல அவனை அருவருப்புடன் ஏறிட்டவள், “ஏன் உன்னோட குழந்தை இவள் வளர்க்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?” கோபத்துடன் கேட்க அவளோ தலைகுனிந்து நின்றாள்.
“என்ன அமைதியாக நிற்கிற பதில் சொல்லுடா..” இளக்காரமாக கேட்க, “குழந்தை கருவில் கலந்துவிட்டது நிலா..” என்று கூறிவே அவளின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

“என்னோட வாழ்க்கையில் நீ விளையாடினாய்.. உன்னோட வாழ்க்கையில் கடவுள் விளையாட்டிடான்..” என்ற நிலா அவர்களின் முன்னாடி நிமிர்ந்து நின்றாள். அவர்களோ அவளை பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றனர்.

“என்னோட மாமா அவரோட குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறார் பாரு. அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்கும் இரண்டு குழந்தைகள்..” என்ற நிலா தொடர்ந்து,

அவளின் அருகில் நின்ற பாரதியின் கைகோர்த்து, “நானும் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இவர் பாரதி எனக்கு பார்த்திருக்கும் டாக்டர் மாப்பிள்ளை..” என்று கர்வத்துடன் அவர்கள் முன்னிலையில் தன்னுடைய காதலை நிலைநாட்டிட, அவளின் வார்த்தைகளில் மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர்.

அவளின் பின்னணி அறிந்தவன் அவளுக்காக பொறுமையாக காத்திருந்தான் அவனின் காத்திருப்பு இன்று கைகூடிய சந்தோஷம் அவனின் முகத்தில் தெரிந்தது.

“நீங்க இவரும் செய்த தவறால் எங்களோட வாழ்க்கை வீணாகல.. அதெல்லாம் சொன்ன புரியுமா? உங்களை பார்க்கவே அருவருப்பாக இருக்கு..” என்று உதட்டை சுளித்தவள்,

“வாங்க வீட்டிற்கு போலாம்..” என்றவளின் நடையில் தானாக கம்பீரம் வந்திருப்பதை உணர்ந்த சுமிம்மாவின் விழிகள் கலங்கியது. அந்தநொடிதான் சுமிம்மா வாழ்க்கையை வென்றார்.

மற்றவர்கள் அவளை பின்தொடர சிவகுமாரின் பார்வை அவர்களை குத்தி ரணபடுத்த, தாங்கள் செய்த தவறை எண்ணி அவர்கள் இருவரும் தலை குனிந்து நின்றனர்.