விஷ்ணு அடுத்த வாரத்திலும் கிளம்புவது போல் தெரியவில்லை!

ஆனால் மயூரி மேலும் தாமதிக்காமல் கல்லூரிக்கு வர ஆரம்பித்திருந்தாள்!

முதல் நாளே யாரை பார்க்க கூடாது என்றிருந்தாளோ அவரே அடிக்கடி அவள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தார்! அவரை பார்க்க சங்கடப்பட்டு கிடந்த மனம் அடுத்து வந்த நாட்களில் அதனை ஏற்க பழகிக் கொண்டது.

அவர் இன்னொரு பெண்ணுடைய கணவனாய் ஆகப்போகிறவர் என்ற எண்ணம் அவளை மாற்றியது என்றாலும் விஷ்ணுவும் அவன் பங்குக்கு சூப் சாங், ஃபிளாப் சாங் என்றெல்லாம் அவளை அழவைக்கும் அளவுக்கு ஓட்டியே ஒரு வழி செய்து சரியாக்கிவிட்டான்!

‘நீயெல்லாம் ஒரு ஃபிரண்ட்!’

அவன் வெட்டி சீண்டல்கள் அவளுக்கு விரைவில் எரிச்சலை உண்டாக்கின!

“என் அடிபட்ட மனசு உனக்கு இப்ப புரியாது டா, அந்த மோனிகா உனக்கு கிடைக்கலைன்ன அப்ப நல்லா புரியும், பார்த்திட்டே இரு!”

“ஹேய் என்ன! மோனியை விட்டா உலகத்தில் வேற பொண்ணுங்களே இல்லையா?”

“அதெல்லாம் இருக்காங்க, ஆனா நம்ம மோனியை மாதிரி வருமா!”

அவள் செய்த நக்கலுக்கெல்லாம் அசைந்து போகிறவனா விஷ்ணு!

“வருது வராம போகுது அதை நான் பார்த்துக்குறேன். நீ உன் வேலையை பாரு மா வள்ளி!”

இருவரும் இப்போது அமர்ந்திருந்தது அவர்கள் வீட்டு வாசல் படியில்! கதை பேசுவதை தீவிரமாய் செய்துக் கொண்டிருக்க, அலுவலகத்திலிருந்து திரும்பிய விவேக்கை எதிர்பார்க்கவில்லை!

விவேக் அவளை பார்த்த நொடி மயூரி விஷ்ணுவுடன் சேர்ந்து ஆத்மார்த்தமாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

வண்டியை வெளியில் விட்டுவிட்டு வந்தவனை நெருக்கத்தில் பார்க்கும் வரை அவன் வந்திருந்ததை அறியவில்லை இருவரும்!

‘ஹலோ’ பொதுவாய் இருவருக்கும் சொன்னவன் அவர்கள் பதிலுக்காக நிற்காமல் வீட்டினுள்ளே சென்றிருந்தான். அவனுக்கு  அவர்களை பற்றி எழுந்த எண்ணத்தீ இப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. அதனை விரைவில் அணைக்க வேண்டும் என்ற நிலையில் அவன்,

அதற்காக யோசிக்க ஆரம்பித்தான்!

கனகவேல் யோசித்த விஷயம் இந்த நொடி வாஸ்தவமாய் தெரிந்தது அவர் மனைவி அமுதாவுக்கு! தன் பிள்ளைகள் சம்மந்தபட்டதாயிற்றே! அவரையும் குழப்பம் தொற்றிக் கொண்டது.

விஷ்ணுவின் வரவுக்கு பின்பு தான் மயூரியிடம் ஒரு சந்தோஷம். அதை இருவருமே உணர்ந்தனர்!

இருவரும் தற்போது தங்கள் மாலை நடைபயிற்சிக்காக வந்திருந்த அந்த  பூங்காவில் வந்த காரியத்தை செய்ய மனமில்லாது ஓரிடத்தில் அமர்ந்து இதை பற்றி பேச ஆரம்பித்தனர்.

“என்னங்க என்னையும் சேர்த்து குழப்பி விடுறீங்க! அவங்க ரெண்டு பேரும் எப்பவும் அப்படி தானே! இதில் புதுசா யோசிக்க என்ன இருக்குன்னு சொல்லுங்க!”

அமுதாவுக்கு எந்த பக்கமும் உறுதியாய் நிற்க முடியவில்லை!

தனியே சிந்திக்கையில் தான் நினைத்தது சரி என்றும், அவரிடம் பேசுகையில் அவர் சொல்வதே மிகச் சரி என்றும் மாறி மாறி எண்ணங்கள்!

கனகவேல் அந்த பேச்சுக்கு உடன்படவில்லை!

“நானும் அப்படி தான் இத்தனை நாளும் நினைச்சிருந்தேன், ஆனா என்னவோ இப்ப சரியா பட மாட்டேங்கிது அமுதா!”

நீண்ட யோசனையில் இருந்தார்!

“என்னன்னு சொல்லுங்க, எனக்கும் புரியுற மாதிரி! அன்னைக்கு பேச ஆரம்பிச்சிட்டு பிள்ளைங்க வந்துட்டாங்கன்னு சட்டுன்னு பேச்சை மாத்திட்டீங்க!”

மனைவியை நேராக பார்த்தவர்,

“மயூரிக்கு விஷ்ணுவை கல்யாணம் செய்துக்கணும்னு நினைப்பு இருக்குமோன்னு ஒரு சின்ன சந்தேகம் அமுதா!”

சட்டென்று பதில் வந்தது.

“அப்படி எல்லாம் இல்லைங்க! எனக்கு தெரிஞ்சு அவங்க ரெண்டு பேரும் அப்படி பழகலை!”

“நாமளா ஒரு முடிவுக்கு வருவது சரி கிடையாது அமுதா! இந்த விஷயத்தில் நீ வள்ளிக்கு அம்மாவா நடந்துக்க பாரு! விவேக் கல்யாணம் செஞ்சா போதும்னு நாம அவளை கஷ்டப்படுத்த முடியாது, சரியா!”

தாயில்லாத அந்த பெண் மனதில் என்னென்ன ஆசைகள் உள்ளதோ! அமுதா அறிந்த வரை முடிந்தளவு எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்! இதை மாத்திரம் ஏன் விடுவானேன்!

“நீங்க சொல்றது சரிதான். நான் அவ கிட்ட இன்னொரு தடவை இதை பத்தி பேசுறேன்!”

மயூரியிடம் அன்றே பேச முயன்றான் விவேக்!

வழக்கமாய் இரவு உணவு முடிந்து தன் அறைக்குள் சென்று அடைந்து விடுகிறவள் அன்று பார்த்து ஹாலில் தொலைக்காட்சி முன் மூழ்கியிருந்தாள்.

வீட்டுக்கு திரும்பியிருந்த தன் பெற்றோர் முன் அவளிடம் சென்று பேசுவதே ஏதோ பெரிய குற்றம் போல் நினைத்த விவேக், தன் அன்னையின் போனிலிருந்து மயூரியின் போன் நம்பரை எடுத்தான்.

‘மயூரி உன்னுடன் பேச வேண்டும்! மாடியில் காத்திருக்கிறேன்’

முதல் முறையாய் அவளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு தன் அறையிலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் போனை பார்ப்பது கண்ணில் படவும் மாடி படிகளில் ஏற ஆரம்பித்தான்.

இத்தனை நாளும் விவேக்கை நேரில் பார்த்தாலே படபடக்கும் மயூரவள்ளிக்கு! இப்போது அவன் அனுப்பிய தகவலை படிக்கையிலேயே நெஞ்சு படு வேகமாய் துடிக்க ஆரம்பித்தது!

‘என்ன பேசப்போகிறான்!’

‘அங்கே செல்வதா வேண்டாமா!’

‘சாரி தூங்க போறேன்’ பதில் அடித்துவிட்டு அதை அழித்திருந்தாள்.

மனதுக்குள் பலவிதமாய் பட்டிமன்றம் நடந்தது!

எந்த விஷயமென்றாலும் சந்தித்து தான் ஆக வேண்டும்! பேசி பார்ப்போம்!

முடிவெடுத்த அடுத்த நொடி அவனெதிரில் இருந்தாள்!

அவனுக்கும் இந்த பதட்டம் தயக்கம் எல்லாம் உண்டா? அவள் இதுவரை அறிந்திடாத விஷயம்!

இவளை எப்போதும், இந்த சில நாட்களை தவிர, எரித்து விடுவதைப் போல் பார்ப்பவன் இப்போது நேராக பார்க்க தயங்கினான்.

அவனுக்கு முன்னால் பரவியிருந்த இருட்டில் எங்கையோ வெறித்தபடி,

“அம்மா அப்பா உன் கிட்ட விஷயத்தை சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் மயூரி”

அவள் பதிலுக்காக அவன் விட்ட இடைவெளி நீண்டு கொண்டிருப்பதை உணர்ந்தவள்,

“ஆமா” என்க,

“அதைப்பற்றி எதுவும் யோசிச்சியா?”

அவளிடம் பதிலில்லை!

அவளை பார்க்க திரும்பி நின்றுக் கொண்டான்!

“என் கிட்ட நேரிடையா உன் பதிலை சொல்லணும்னு எதிர்பார்க்கிறேன் மயூரி! எந்தவிதமான பதிலென்றாலும் சரி”

‘எல்லாரும் ஏன் என்கிட்ட பதில்களை மட்டுமே எதிர்பார்க்குறீங்க!’ அவளுக்கு சங்கடமாயிருந்தது!

அவன் கண்களை நேராக சந்தித்தாள்!

“நான் இன்னும் அதைப்பத்தி எதுவும் யோசிக்கலை விவேக்! எனக்கு இன்னும்  கொஞ்சம் கால அவகாசம் வேணும்!”

மருண்ட பார்வையில் மெதுவாய் அவள் பேசிய விதம் அவனை என்னவோ செய்தது! முன்பு அவளை எத்தனை பாடு படுத்தியிருக்கிறான் என்பதெல்லாம் இப்போது கண் முன்னே வந்து போனது!

“ஓகே மயூரி. டேக் யுவர் டைம்! எந்த விஷயம்னாலும் என் கிட்ட சொல்லலாம்! தயக்கம் வேண்டாம்! குட் நைட்”

சற்று தூரம் போனவனை,

“விவேக்”

அதே இடத்தில் நின்று அவளை திரும்பி பார்த்தவனிடம்,

“உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்”

“ம்ம் சொல்லு!”

“உங்களுக்கு என்னை பிடிக்காதே! இப்ப மட்டும் ஏன் இந்த திடீர் முடிவு?”

அவளுக்கு இதை கேட்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது, ஆனால் இத்தனை சீக்கிரம் கேட்டுவிடுவாள் என்று அவளே அறிந்திருக்கவில்லை!

“அப்போ பிடிக்கலை! ஏன்னு தெரியலை! ஆனா இப்ப ரொம்ப பிடிச்டிருக்கு, அதுவும் ஏன்னு தெரியலை”

ஒரு புன்னகையை உதிர்த்தபடி சொன்னவன் வேகமாய் படிகளில் இறங்கி மறைந்துவிட்டான்!

விஷ்ணு அன்று தன் நண்பர்களை சந்தித்துவிட்டு தாமதமாய் வீடு திரும்ப, மாடியில் வள்ளியும் அண்ணனும் அருகருகே நின்றிருந்தது அவன் கண்களில் பட்டது!

‘அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்களா?

இன்னிக்கு காலையில் கூட வேணாங்குற மாதிரி சொன்னாளே! இந்தா வரேன்!’

சற்று நேரம் காத்திருந்தவன் பேச்சு சத்தம் முடியவும் அவளை தேடி அங்கு வந்திருந்தான்.

“ஹலோ வள்ளி மேடம்! இங்க இருட்டில் தனியா என்ன செய்றீங்க!”

“ஹேய் வாடா! வழக்கத்தை விட இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே!”

“எல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை கண்ணால் பார்க்கத்தான்னு வந்த பிறகு தான் தெரிஞ்சது!”

அவன் சொல்ல வந்தது கொஞ்சம் கூட புரியவில்லை அவளுக்கு!

சற்று நேரம் அவளை பார்த்தவன்,

“என்ன, அண்ணனோட முக்கியமா பேசிகிட்டிருந்தே போலையே!”

‘பார்த்துவிட்டானா?’

“உனக்கெப்படி தெரியும்”

“இல்லையா, ஆமாவா அதை மட்டும் சொல்லு”

‘பயபுள்ள பார்த்திருக்கான்! இவனை வேற சமாளிக்கணுமா!’

“ம்ம் ஆமா”

“என்ன பேசினேன்னு நான் கேட்டா நல்லா இருக்காது பாரு! சோ நீயே சொல்லிடுவியாம்!”

எப்போதும் போலவே தான் அவன் கேட்டான். ஆனால் இன்னமும் பல சிந்தனைகளிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த மயூரிக்கு ஏனோ ஆத்திரத்தை உண்டு செய்ய அது மாத்திரம் போதுமானதாக இருந்தது!

“உன் கிட்ட எதுக்கு டா நான் சொல்லணும், எதுக்குங்கிறேன்!”

மூச்சு வாங்கியது அவளுக்கு!

“அப்படியா, அப்ப சொல்லமாட்டே!”

“ஆமா… மாட்டேன்!”

“ஓகே குட்! அப்போ நான் தூங்க போறேன்! நீ இங்க இப்படியே சுத்திகிட்டிரு! காத்து கருப்பு ஏதாவது வரும், அடிச்சிடாதே!”

போய்விட்டான்!

அடுத்த நாள் இவள் கல்லூரி கிளம்புகையில் அவன் ‘டிராவல் பேக்’ தயாராய் ஹாலில் இருந்தது!

அவனை தேடி அவன் அறைக்கு சென்றவள் அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து எழுப்பாமல் விட்டாள்.

அமுதாவிடம்,

“இப்ப தானே வந்தான் அத்தை, அதுக்குள்ள ஏன் கிளம்பணும்” என்க,

“அவன் சொல்லலையா உன் கிட்ட வள்ளி! இங்க வச்சி படிக்கவே முடியலையாம். தினமும் ஃபிரண்ட்ஸ் வெளியே கூப்பிடுறாங்களாம்! அதனால் கிளம்புறேன்னு சொன்னான். நீ தூங்கிட்ட போல அதான் உன் கிட்ட சொல்லாம விட்டிருப்பான். இன்னும் பத்து நாள் தானே, பரிட்சை முடிஞ்சதும் இங்கேயே வந்திடுவானே!”

திருப்தி இல்லாதபடி அவர் சொன்னதுக்கு மண்டையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அந்த நாள் அவளுக்கு இனிமையானதாக அமையவில்லை. ஏதோ அவனை உதாசினப்படுத்தியது போல் ஒரு குற்றயுணர்வு அவளை தாக்கியது!

‘சாரி விஷ்ணு, உன் கிட்ட கோவப்பட்டுட்டேன்’

‘இட்ஸ் ஓகே. இனி நம்ம வாழ்க்கை தனி தனி தானே! நீ எல்லாத்தையும் என் கிட்ட சொல்லணும்னு அவசியமில்லையே. இந்த உண்மையை நேத்து எனக்கு புரிய வச்சதுக்கு நன்றி வள்ளி!’

‘அப்படியெல்லாம் இல்ல டா, வந்து’

‘ஹேய் பரவாயில்லை. நீ வீணா டென்ஷன் ஆகாதே! நீ செஞ்சது ஒண்ணும் தப்பில்லை வள்ளி! அடுத்த முறை பார்க்கலாம். பை’

கண் கலங்கியது அவளுக்கு! ஆனாலும் இந்த

இறுக்கமான சூழ்நிலையில் அவனிடம் விடைபெற மனசில்லை!

‘மோனியை பார்க்காமலேயே போறே? கோவிச்சுக்க போறா டா விஷ்ணு!’

‘என் டார்லிங் மோனிகாவா! அத்தான் கிட்ட எல்லாம் கோவிச்சிக்க மாட்டா! சரி கிளம்புறேன் நேரமாகுது வள்ளி!’

“கிளம்புறேன் மா, அப்பாட்ட சொல்லிடுங்க!”

அவன் குரல் கேட்டு தன் அறை வாசலுக்கு வந்த விவேக்கின் இருப்பை உணர்ந்தாலும் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை விஷ்ணு!

அவன் காதிலும் பட வேண்டும் என்பதாய் தன் பெற்றோரிடம்,

“இந்த கல்யாண விஷயத்தில் வள்ளி என்ன முடிவெடுத்தாலும் அது தான் இறுதி! நீங்க யாரும் அவளை கட்டாயப்படுத்தக் கூடாது! அப்படி செய்ய நானும் ஒத்துக்க மாட்டேன் மா. எல்லார்கிட்டையும் சொல்லி வை” உறுதியான குரலில் சொன்னான்!

விவேக் இதையெல்லாம் எவ்வித முகமாறுதலும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்!

வெளியேற போன விஷ்ணுவை,

பெயர் சொல்லி அழைத்தான் பெரியவன்!

நிமிர்ந்து அண்ணனை பார்க்க,

“பத்திரமா போயிட்டு வா விஷ்ணு”

என்றான்! அமுதா கூட ஆச்சரியமாய் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஷ்ணு அவனிடம் எந்த பதிலும் சொல்லாது வெளியேறிவிட்டான். விவேக் மயூரவள்ளியை என்று அழவைத்தானோ அன்றிலிருந்து விஷ்ணு தன் உடன் பிறந்தவனிடம் அதிகம் பேசுவதில்லை!

error: Content is protected !!