NPG 6

NPG 6

கீதாஞ்சலி – 6

தன் மீதிருந்த கோல மாவைத் தட்டிவிட்டபடியே “சத்யாம்மா” என்று ஆர்ப்பாட்டமாகக் கத்தியபடி வந்து சத்யவதியைக் கட்டிக் கொண்டான் ராகுல்.

“ராகுல் கண்ணா எப்படிப்பா இருக்க? வந்ததும் வராததுமா உன் சேட்டையை ஆரம்பிச்சுட்டியா?” என்றபடி அவன் கன்னம் வழித்து முத்தம் வைத்தார் சத்யவதி.

“ம்மா நீ பெத்த புள்ள நான் இங்க நிக்கிறேன். என்னைக் கொஞ்சமாவது கண்டுக்கிட்டியா நீ? நேரா அவன் கிட்டப் போய் பாசப்பயிரை வளர்த்துக்கிட்டு இருக்க?” சிரித்துக் கொண்டே கேட்டான் கௌஷிக்.

அவனுக்குத் தெரியும் எப்பொழுதுமே ராகுல் என்றால் சத்யவதிக்குக் கூடுதல் பிரியம் என்று. இப்பொழுது என்றில்லை, சிறுவயதில் இவர்கள் ஒன்றாக வசித்தபொழுதில் இருந்து இப்படித்தான். தாயில்லா பிள்ளை என்று ராகுல் மீது கூடுதல் பாசம் சத்யவதிக்கு. சத்யவதிக்கு மட்டுமல்ல அமிர்தாவின் தாயாருக்குக் கூட ராகுல் மீதுத் தனிப் பிரியம்தான்.

ராகுல் எவ்வளவு சேட்டை செய்த பொழுதும் தத்தமது பிள்ளைகளைக் கண்டிப்பார்களே ஒழிய ராகுலை ஒரு வார்த்தைக் கூடக் கடிந்துப் பேசி விட மாட்டார்கள் இருவரும். இதனாலேயே ராகுலை அறவே பிடிக்காது அமிர்தவர்ஷினிக்கு.

அமிர்தவர்ஷினியின் அக்கா நிதய்வர்ஷினி பரம சாது. அதிர்ந்து கூட பேச மாட்டாள். அவளுக்கு எப்பொழுதும் வீடு தான் உலகம். அமிர்தா அப்படியல்ல. எப்பொழுதும் கௌஷிக் மற்றும் ராகுலுடனேயே விளையாடிக் கொண்டிருப்பாள். இவ்வளவுக்கும் இவர்கள் இருவரை விட ஐந்து வயது சிறியவள். ஆனால் இவர்களுக்கு இணையாக அவளும் ஆட்டம் போடுவாள்.

எப்பொழுதும் தங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு திரியும் அந்தப் குட்டிப் பெண்ணை ராகுல், கௌஷிக் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். கௌஷிக் அக்கறையாகப் பார்த்துக் கொள்வான், ராகுலோ எப்பொழுதும் அவளைச் சீண்டிக் கொண்டே இருப்பான். அவள் கோவப்படுவதைப் பார்த்து ரசிப்பது ராகுலின் வழக்கம்.

குட்டையாக ஒல்லியாக ஆண் பிள்ளைகள் போலவே முடி வெட்டிக் கொண்டுப் பார்ப்பதற்கு ரொம்பவுமே சின்னப் பெண்ணாக இருப்பாள் அமிர்தா. அதனாலேயே ராகுல் அவளை சோனி என்றழைத்து வெறுப்பேற்றுவான். அவளும் பதிலுக்கு கௌஷிக்கை அண்ணாவென்று அழைப்பவள் ராகுலை மட்டும் ஏக வசனத்தில் ‘டா’ போட்டுத்தான் பேசுவாள்.

இருவரும் அப்படி அடித்துக் கொண்ட போதும் கடைசியில் ராகுலின் குடும்பம் வேலை நிமித்தம் அந்த ஊரைக் காலி செய்து கொண்டு சென்ற பொழுது நட்ட நடு ரோட்டில் அழுது பிரண்டு பெரும் ரகளையே செய்துவிட்டாள் அமிர்தா. கடுமையான காய்ச்சலில் விழுமளவுக்கு அந்தப் பிரிவு அந்த வயதில் அவளைப் பாதித்திருந்தது.

சத்யவதி, ராகுல், கௌஷிக் மூவருக்குமே பழைய நினைவுகள் அனைத்தும் மனதில் மின்னல் வெட்டுவதைப் போலத் தோன்றி மறைந்தது. இவர்களைக் கலைத்தது “ஹாய் சத்யாம்மா” என்று தூக்கக் கலக்கத்தில் வெளி வந்த சந்தோஷின் குரல்.

“சந்தோஷ் குட்டி” என்றபடி ஆசையாக வந்து அவனை  அணைத்தாற் போலத் தூக்கிக் கொண்டார் சத்யவதி.

“இந்த ரெண்டு தடிப்பயலுகளுக்கும் தான் நான் சத்யாம்மான்னா உனக்குமா? அழகா அப்பம்மான்னு கூப்பிடு செல்லம்” என்று சொல்லியபடியே அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தார்.

ஏற்கனவே அவர் சட்டென்று தூக்கியதில் வெட்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்தவன் இப்பொழுது முத்தம் கொடுக்கவும் வெட்கச் சிரிப்போடு கன்னத்தைத் துடைத்துக் கொண்டான் சந்தோஷ். பாசம் மிகுந்த செயலே ஆனாலும் அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லாத செயல் தானே.

சந்தோஷின் செய்கையையும் வெட்கத்தையும் பார்த்த மற்ற மூவருக்குமே அழகான ஒரு புன்னகை வந்து முகத்தில் ஒட்டிக் கொண்டது.

“சத்யாம்மா, அவன் என்ன சின்னப் பிள்ளையா? கீழே இறக்கி விடுங்க. உங்களுக்குக் கை வலிக்கப் போகுது.” அக்கறையாகச் சொன்னான் ராகுல்.

“இருக்கட்டும்ப்பா. நானே எப்பவாவது தான் பிள்ளையைப் பார்க்கிறேன். இப்போ தூக்கிக்கிட்டா தான் உண்டு. இன்னும் ரெண்டு வருஷம் போனா தூக்க முடியுமா சொல்லு. அதுவும் உன் புள்ள இப்பவே இப்படி வெட்கப்படுறான். அப்ப எல்லாம் என் கிட்டக் கூட வருவானோ என்னமோ?”

“இதுக்குத்தான் எங்க கூட அங்கேயே வாங்கன்னு சொல்றேன். கேட்குறீங்களா நீங்க? இந்த ஊரையே பிடிச்சுத் தொங்கிட்டு இருக்கீங்க.” இது கௌஷிக்.

“நாந்தான் சொல்றனே. நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணு. நான் வந்து உன் கூடவே இருக்கேன்னு. கேட்டியா நீ?”

“சும்மா கல்யாணம் பண்ணு, கல்யாணம் பண்ணுன்னா… பொண்ணு என்ன வானத்துல இருந்து குதிக்குமா? ஒரு நல்ல அம்மாவா லட்சணமா பொண்ணு பார்க்கிறதை விட்டுட்டு, என்கிட்ட கேட்டா நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொல்லுவேன். நீங்க தானே பொண்ணு பார்த்துக் கட்டி வைக்கணும். அதை விட்டுட்டு சும்மா பொறுப்பில்லாம பேசாதீங்க சத்யவதி.”

“அடப்பாவி…” என்று சத்யவதி வாயடைத்துப் போக அவரின் பாவனையைப் பார்த்து சந்தோஷுக்குக் கூட சிரிப்பு வந்தது.

“இப்போ சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்கம்மா. நாங்க ஒரு வாரம் இங்க தான் இருக்கப் போறோம். அதுக்குள்ள ஒரு நல்ல பொண்ணா எங்க ரெண்டு பேருக்கும் பார்க்குறீங்க. நாங்க கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டு தான் இங்க இருந்து கிளம்புறோம்” ராகுலை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தான் கௌஷிக்.

“ரெண்டு பேருக்கும் ஒரு பொண்ணா” என்று கூறி சத்யவதி அதற்கும் அதிர்ந்து விழிக்க,

“ம்மா…” என்று கூறி பல்லைக் கடித்த கௌஷிக், “எனக்கு ஒரு பொண்ணு, அவனுக்கு ஒரு பொண்ணு பாருங்க மொத்தம் ரெண்டு பொண்ணு பாருங்க. போதுமா இவ்வளவு விளக்கம். கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த மாதிரி புத்திசாலித்தனமா நடந்துக்குறீங்களா? உங்களை எல்லாம் வைச்சுக்கிட்டு…” என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டான் கௌஷிக்.

“ராகுல்… கல்யாணம்… சந்தோஷ்” என்று மாற்றி மாற்றி வாய்க்குள்ளாகவே முனங்கிக் கொண்டிருந்தார் சத்யவதி.

அவருக்கு சிறிது நேரம் ஒன்றும் விளங்கவில்லை. ராகுலுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் இதுவரையிலும் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. இப்பொழுது கௌஷிக் சொல்லவும் இது ஏன் தனக்கு இத்தனை நாள் தோனவே இல்லை என்று தன்னைத் தானே நொந்து கொண்டார் சத்யவதி.

சத்யவதி தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்ட ராகுல் அவரைத் திசை திருப்பும் விதமாக, “டேய் நல்லவனே எல்லா விஷயத்தையும் வெளியில வைச்சே பேசி முடிச்சிடணுமா? எனக்கு இப்ப அவசரமா ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணணும். உள்ள போலாமா வேணாமா?” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு நெளிந்து கொண்டே கேட்க, அவன் உடல் மொழியைப் பார்த்து அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்தது.

“நான் ஒருத்தி, வந்தவங்களை வாசல்லே நிக்க வைச்சுப் பேசிக்கிட்டிருக்கேன். வாங்கப்பா எல்லாரும் உள்ள வாங்க” என்று கூறியபடியே சந்தோஷை அழைத்துக் கொண்டு முன் சென்றார் சத்யவதி.

ராகுலை வேண்டுமென்றே தவிர்த்தபடி சத்யவதியை வேகமாகப் பின் தொடரப் போன கௌஷிக்கின் தோள் மீது கை போட்டுத் தன்னோடு இறுக்கிக் கொண்டான் ராகுல். உதடுகள் சிரிப்பது போல் இருந்தாலும் வார்த்தைகள் கொஞ்சம் காட்டமாகவே வந்து விழுந்தது.

“இந்தப் பொண்ணு பார்க்குற வேலையை நீ விடவே மாட்டியா கௌஷிக்? நான் அன்னைக்கு சொன்னது தான் ஃபைனல். அதை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ. இனி நான் எப்பவுமே தனிக்காட்டு ராஜா தான் புரிஞ்சுதா? இன்னொரு தடவை பொண்ணு அது இதுன்னு என் காதுல எதாவது விழுந்துச்சு, அப்புறம் சந்தோஷை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு முழுசா உன் தலை மேல தான் வந்து விழும். பார்த்துக்க. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன், பார்த்து நடந்துக்க.”

சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே நுழைந்துவிட்டான் ராகுல். கேட்டிருந்த கௌஷிக் தான் திக்பிரமை பிடித்தாற் போல் சிலையாக நின்றிருந்தான். சந்தோஷைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு முழுதாகத் தன்னை வந்து சேருமென்று எந்த அர்த்தத்தில் சொல்லிச் செல்கிறான் இவன்? மனம் ஏதேதோ கற்பனை செய்தது. எந்தப் பக்கம் சென்றாலும் முட்டுக் கட்டைப் போடுபவனிடம் என்ன பேசுவது என்றுத் தெரியாமல் கொஞ்சம் குழம்பித் தான் போனான் கௌஷிக்.

அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும் மிகவும் பிசியாகவே சென்றது ராகுலுக்கும் கௌஷிக்கிற்கும். பள்ளிக்குச் சென்றது, ரசிகர்களுடன் கலந்துரையாடல் என்று நேரம் சிட்டாகப் பறந்து போனது.

குழந்தை சந்தோஷை சத்யவதியிடம் விட்டுவிட்டு காலையில் கிளம்பிப் போனவர்கள் இருவரும் வீடு வந்து சேரும் பொழுது இரவு மணி எட்டைத் தாண்டி இருந்தது. சந்தோஷ் சாப்பிட்டு முடித்து ஏதோ ஒரு கார்ட்டூனில் ஐக்கியமாகி இருந்தான்.

அன்றைய களைப்பு தீர குளித்து முடித்து வந்த நண்பர்கள் இருவருக்கும் உணவைப் பரிமாறிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தார் சத்யவதி.

“ராகுல் கண்ணா, தப்பா நினைச்சுக்காதேப்பா. கௌஷிக் சொல்ற வரைக்கும் எனக்கு இது தோனவே இல்லை கண்ணா. உன் மேல அக்கறை இல்லாம எல்லாம் இல்ல. எனக்குக் கௌஷிக்கும் கௌசல்யாவும் எப்படியோ அதே மாதிரி தான் நீயும்.

ஆனா உனக்குத் திரும்ப ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு ஏனோ எனக்குத் தோனவே இல்லை. இது தான் பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம் போல. இதே இது உன் அம்மாவோ இல்லை அக்காவோ இருந்திருந்தா உன்னை இப்படி விட்டிருப்பாங்களா?

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு மட்டும் சொல்லு. மத்ததெல்லாம் இந்த அம்மா பார்த்துக்குறேன்.”

சத்யவதி சொல்லவும் கௌஷிக்கை முறைத்துப் பார்த்தான் ராகுல். எல்லாம் உன்னால தான் என்று குற்றம் சாட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை. கௌஷிக் அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் தன் தட்டின் மீதே கவனமாயிருந்தான்.

“இங்கே என்னடா லுக்கு. கேட்குறாங்க இல்ல, பதிலைச் சொல்லு. சும்மா என்கிட்டயே எகிற வேண்டியது” என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் மும்முரமாக சாப்பிடத் துவங்கி விட்டான்.

“சத்யாம்மா,  இப்போ எதுக்கு நீங்க இவ்வளவு ஃபீல் பண்றீங்க? உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா இல்ல உங்க பாசம் தான் எனக்குப் புரியாதா? இப்ப எனக்கு என்ன குறை? அம்மாவா பாசம் காமிக்க நீங்க இருக்கீங்க, இதோ இந்த தடிமாடு இருக்கான். என் பேர் சொல்ல வாரிசா சந்தோஷ் இருக்கான். இது போதாதாம்மா?  இவன் ஏதோ லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்கான்ம்மா கொஞ்ச நாளா. நீங்க கண்டுக்காதீங்க.”

“அப்படிச் சொல்லாதேப்பா. என்ன தான் நாங்க இருக்கோம்னாலும் உனக்கே உனக்குன்னு ஒருத்தி வேணும்ப்பா. இப்ப இல்லைன்னாலும் வயசானப்புறம் நிச்சயம் ஒரு துணை தேவைப்படும்ப்பா.”

“அதெல்லாம் ஒன்னும் தேவைப்படாதும்மா. இப்போ நீங்க எல்லாம் இல்லையா? அப்பா இறந்து ஒரு அஞ்சு ஆறு வருஷம் இருக்குமா? நீங்க தனியா தானே இருக்கீங்க?”

இதை ராகுல் சொன்னதும் கௌஷிக் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். ‘ஆஹா பய கரெக்டா அம்மா வாயடைக்கிற மாதிரி கேட்டுட்டானே. இதுக்கு அம்மா எப்படி பதில் சொல்லி சமாளிக்கப் போறாங்க’ என்று தான் இருந்தது அவன் எண்ண ஓட்டம். ஆனால் சத்யவதி விடவில்லை. வாழ்ந்து முடித்தவர் அல்லவா. அந்த அனுபவம் அவரைப் பேச வைத்தது.

“நான் வாழ்ந்து முடிச்சவ ராகுல். என் வாழ்க்கையை உன் கூட கம்பேர் பண்ணாதே.”

“வயசானப்புறம் துணை வேணும்னு நீங்க தானேம்மா சொன்னீங்க.”

“எனக்கு கௌஷிக் கௌசல்யா ரெண்டு பேரும் இருக்காங்க ராகுல்.”

“அதே தான் நானும் சொல்றேன், எனக்கு சந்தோஷ் இருக்கான்.”

“சரி உன் வழிக்கே வரேன். கௌஷிக் அப்பா இறந்தப்போ என் பசங்க ரெண்டு பேருமே வளர்ந்துட்டாங்க. சமாளிச்சுக்கிட்டாங்க. சந்தோஷ் சின்னப் பையன்ப்பா. அவனுக்கு அம்மா பாசம்னா என்னன்னு தெரியாமலேயே வளர்த்துக்கிட்டு வரோம். அவனுக்காகவாவது நீ இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம் இல்லையா?”

“வர்றவ சந்தோஷுக்கு அம்மாவா தான் இருப்பான்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா சத்யாம்மா?”

இந்தக் கேல்விக்கு என்ன பதில் சொல்வதென்று சத்யவதிக்குத் தெரியவில்லை. அவர் மௌனித்திருந்த சில நொடிகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராகுல்,

“சொல்ல முடியலை பார்த்தீங்களா. என்னோட சௌகரியத்துக்காக இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷ் வாழ்க்கையை நான் மேற் கொண்டு கெடுக்க விரும்பலை. இப்போ அம்மா இல்லைங்குற ஒரு குறை தானே தவிர அவன் நிம்மதிக்கோ சந்தோஷத்துக்கோ எந்தக் குறையும் இல்லை. இது இப்படியே தொடர்ந்தாலே எனக்குப் போதும். இந்தப் பேச்சை இதோட விட்றுங்க சத்யாம்மா.

இந்தா ஒன்னும் தெரியாதவன் மாதிரி ஒருத்தன் உட்கார்ந்து மொக்கிட்டு இருக்கானே இவனுக்கு முதல்ல பொண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை முடிங்க. தலைவர் ஃப்ரீயா இருக்குறதால தான் கண்டபடி யோசிக்கிறார். ஒரு கால் கட்டுப் போட்டா எல்லாம் சரி ஆகிடும்”

என்று சொல்லிவிட்டு எழுந்து அங்கிருந்த வாஷ் பேசினில் கையைக் கழுவியவன், தனக்கென ஒதுக்கி இருந்த மாடி அறையை நோக்கிச் சென்று விட்டான் ராகுல்.

“என்ன கௌஷிக் இது? இந்தப் பையன் இப்படி சொல்லிட்டுப் போறான்?” பெருமூச்சுடன் கௌஷிக்கிடம் வினவினார் சத்யவதி.

“பொறுங்கம்மா. இப்ப தானே ஆரம்பிச்சு இருக்கோம். அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? அவன் வாயாலேயே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வைப்போம். அவனுக்கு ஒரு வழி பண்ணிட்டு தான் நானும் கல்யாணம் பண்ணிப்பேன்.”

“அடேய், ரெண்டு பேரும் என்னங்கடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? நீ என்னடான்னா அவனைக் கை காட்டுற, அவன் உன்னை சொல்றான். ரெண்டு பேரும் பேசி வைச்சுக்கிட்டு என்னை ஏமாத்த பார்க்குறீங்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.”

“ஹ்ம்க்கூம், இந்த வாய் எல்லாம் என் கிட்டதான். அவன் கொஞ்சம் மடக்கிப் பேசினா அமைதியாகிட வேண்டியது. இதோ சந்தோஷ் அங்க தானே உட்கார்ந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கான். அவன் சாப்பிட்டானா, தூக்கம் வருதா எதாவது கேட்டானா இவன்? எனக்கென்னன்னு போயிட்டான்.”

“அது நாம பார்த்துப்போம்னு நம்பிக்கையில போயிருப்பான் கௌஷிக்.”

“இல்லம்மா அங்கேயும் இவன் இதைத் தான் பண்றான். சந்தோஷுக்குத் தேவையானது எல்லாமே வீட்டிலிருக்குற சர்வென்ட்ஸ் தான் செய்யணும். அப்புறம் அப்பான்னு இவன் எதுக்கு இருக்கான்? சந்தோஷுக்கு அம்மா தான் இருந்தும் இல்லாத மாதிரின்னா அப்பாவும் அதே கதை தான். எனக்கு சந்தோஷைப் பார்க்கும் போதெல்லாம் பாவமா இருக்கும்மா. அவனுக்கு ஒரு அம்மா கிடைக்கட்டுமேன்னு தான் நான் இந்தப் பேச்சையே ஆரம்பிச்சேன்.”

“ஆனா ராகுல் சொல்ற மாதிரி வர்றவ குணம் நமக்குத் தெரியாதேப்பா. மேற்கொண்டு சந்தோஷ் வாழ்க்கையை சிக்கலாக்கிட கூடாதே.”

“அதுக்குத்தான் அந்தப் பொறுப்பை உங்க கிட்ட விடறேன். எனக்கு வேணா பொண்ணு செலக்ட் பண்ணத் தெரியாம இருக்கலாம். உங்களால நிச்சயம் முடியும்மா. நாம நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்.”

“அப்படிங்குற, சரி பார்க்கலாம். இந்த அமிர்தா பொண்ணும் இப்படித்தான் ஒத்தையில நிக்குது. ராகுலைக் கூட சம்மதிக்க வைக்க முடியும், ஆனா இந்தப் பொண்ணு… ” என்று சொல்லியபடியே சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் சத்யவதி.

***********

மாடியில் அறைக்குள்ளாகவே இங்கும் அங்குமாக நடந்து கொண்டே இருந்தான் ராகுல்ரவிவர்மன். தூக்கம் எட்டி நின்று அவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. சில வருடங்களாக ஏதோ ஒரு போதையிலேயே தூங்கிப் பழகி இருந்தவனுக்கு இன்று அது இல்லாமல் தூங்க முடியவில்லை. மனம் எதையோ எதிர்பார்த்தது.

மெல்ல வெளியில் வந்து மாடிப்படியின் அருகில் நின்று எட்டிப் பார்த்தான். கீழே அனைவரும் தூங்கிவிட்டதன் அடையாளமாக விளக்குகள் அணைக்கப்பட்டு நைட் லேம்ப் மட்டுமே போடப்பட்டிருந்தது.

ஒற்றை சிகரெட்டில் ஆறுதல் தேட விழைந்தவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். மாடியில் பெரிய ஹாலும் இரண்டு பெரிய படுக்கை அறைகள் மட்டுமே இருந்தன அந்த வீட்டில். மீதியிருந்த இடம் காலியாகத் தான் இருந்தது. எனவே அங்கு வந்து நின்று கொண்டு பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

ஒன்று இரண்டாகி, முழு பாக்கெட்டும் காலியானது தான் மிச்சம். தூக்கம் வந்தபாடில்லை. அந்தப் பக்கவாட்டுச் சுவற்றின் மீது கையை ஊன்றி உடலைச் சாய்த்து நின்றவாறு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன் சத்யாம்மா கூறிய வார்த்தைகளே மனதில் ஊர்வலம் வந்தது. ‘உங்க அம்மாவோ அக்காவோ இருந்திருந்தா உன்ன இப்படி விட்டிருப்பாங்களா?’ முகம் பார்த்தேயிராத தாய்க்காகவும், தாயாக மாறித் தன்னை வளர்த்தத் தமக்கைக்காகவும் மனம் ஏங்கியது.

வானில் பிறை நிலா மேகத்தில் மறைவதும் பின் வெளி வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென மின்வெட்டு ஏற்பட அந்தப் பகுதியே அப்படியே அமைதியாகிப் போனது.

அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எழும்பியது ஒரு குழந்தையின் அழுகுரல். சத்தம் வந்த திசையைக் கணக்கில் கொண்டு பார்த்த பொழுது அது அமிர்தவர்ஷினியின் வீட்டிலிருந்து வருவதை ராகுலால் புரிந்து கொள்ள முடிந்தது.

சிறிது நேரத்தில் அவள் வீட்டில் ஜன்னல் ஓன்று திறக்கப்பட்டது. உள்ளே மெழுகுவர்த்தியோ விளக்கோ எதுவோ ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதற்கு மேல் அந்த இருளில் வேறோன்றும் ராகுலின் கண்களுக்குப் புலப்படவில்லை.

குழந்தையின் அழுகை அடங்காமல் போகவே குழந்தையை சமாதானம் படுத்தும் பொருட்டு பாடத் துவங்கினாள் அமிர்தா.

சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா

செல்வக்களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே – உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே – என் முன்னே

ஆடி வரும் தேரே!

ஓடி வருகையிலே – கண்ணம்மா

உள்ளம் குளிருதடி

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப் போய்

ஆவி தழுவுதடி

உச்சி தனை முகர்ந்தால்

கருவம் ஓங்கி வளருதடி!

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி!

கன்னத்தில் முத்தமிட்டால்

ஆஹா… ஹா…

அந்த ஆலாபனையில் மனம் மயங்கியவன் அப்படியே அந்த கட்டாந்தரையில் வானம் பார்த்துப் படுத்துக் கொண்டான். சற்று முன் ஒற்றை சிகரெட்டில் தேடிய மன அமைதி அவனைத் தேடி வந்தது செவி வழியாக. கண்களை மூடி அந்தக் கானத்தில் லயிக்கத் தொடங்கினான்.

உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவையன்றோ – கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ!

பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறான், பல பிரபல பாடகர்களின் குரல் வழிப் பலத் தாலாட்டுப் பாடல்களை அருகிலிருந்து கேட்டும் இருக்கிறான். அப்பொழுதெல்லாம் கிட்டாத அமைதி, ராகம் தாளம் பற்றி அரிச்சுவடியே அறியாத ஒரு பெண்ணின் குரலில் வந்ததே.

பாரதியாரின் வரிகளா, செந்தமிழா அல்லது பாவையின் குரலா எதுவோ ஒன்று அவனை அமைதிப் படுத்தியிருந்தது. இதுவே இவனிடம் பாடும் வாய்ப்பு கேட்டு வந்திருந்த ஒரு பெண் பாடியிருந்தால் இதில் ஆயிரம் குறை கூறியிருப்பான். ஆனால் இப்பொழுதோ அனைத்தையும் மறந்து அந்தக் குரலில் மயங்கிப் போனான்.

அமிர்தா பாடலைப் பாடி முடித்த பொழுது குழந்தையும் தூங்கியிருந்தாள். ராகுலும் தூங்கியிருந்தான். பஞ்சு மெத்தையிலும் ஏசி ரூமிலும் வராத தூக்கம் கட்டாந்தரையில் கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்த பொழுது சுகமாக அவனைத் தழுவிக் கொண்டது.

யாராரோ பாடினாலும்

ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும்

தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாய் தந்தை பாட்டு தானம்மா.

error: Content is protected !!