உலாவரும் கனாக்கள் கண்ணிலே-19

அர்ச்சனாவைப் பார்த்த அன்பரசி மிகவும் மனமுடைந்திருந்தார்.  மருமகளின் வீட்டார் வந்தால் என்ன நினைப்பார்கள் என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், எதனால் இந்த அளவிற்கு மெலிவு என சந்தேகம் தோன்ற, மகனை தனியே அழைத்து அதட்டலாகவே கேட்டார்.

“என்னம்மா”, வந்தது முதல் தன்னைக் குறை கூறியபடி இருந்த தாயைக் கண்டவன், தனித்து அழைத்ததும் விடயம் புரிந்தாலும் புரியாத சிறுவன் போல வந்து நின்றிருந்தான் அமர்.

“என்ன நடந்துச்சு அங்க, அம்மாகிட்ட எதையும் மறைக்காம உண்மைய சொல்லு, சாதாரணமாக வந்த காய்ச்சலுக்கு ஒரு புள்ள இப்டி ஆகாது, என்ன செய்து வச்ச…”

“நான் ஒண்ணும் பண்ணல குயின், என்ன நம்புங்க…”, பாவம்போலச் சொன்னவனை விடாமல்

“இப்ப அவங்க வீட்ல இருந்து ஆளுங்க வந்து கேப்பாங்க அப்ப நீயே பேசிக்க… என்ன விடு ஆள”

“என்னம்மா… மிரட்டுறீங்க”, என தாயை மிரட்டியிருந்தான்.

“ஆமாடா… ஆளே மாறிப் போயி புள்ள வந்திருக்குனா… பெத்தவங்க கேக்காம இருப்பாங்களா?”

“காச்ச வந்து தான் அர்ச்சனா இப்டி காத்தாடி போல ஆகிருக்கு குயின்… என்ன நம்புங்க…”,அமர் அன்பரசியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த பத்ரி இருவரும் பேசுவதை சிரித்தபடி அமைதியாகக் கேட்டிருந்தான்.

“அதான் கலரா, அழகா இருந்த பட்டம் எப்டி இப்டி ஜீவன் இல்லாம நிறமெல்லாம் போயி இப்டி சிதைஞ்ச மாதிரி வந்திருக்கு…? அங்க என்ன நடந்துது ஒழுங்கா சொல்லு”, எனத் தாய் மிகவும் வற்புறுத்தவே, எதையும் மறைக்காமல் சொல்ல ஆரம்பித்தான், அமர்.

“என்ன சொல்ற?, நம்ம வீட்டுக்கெல்லாம் ஒரு முறை வந்தப்ப அவ்வளவு அமைதியா ஆண்டினு எங்கிட்ட அனுசரணையா பேசுன அந்த மௌனிகாவா இப்டி நடந்துக்குச்சு, என்னால நம்பவே முடியல அமரு”

“அவ என்ன நினச்சு செஞ்சானு தெரியல, ஆனா இப்ப அங்க போலீஸ் கஸ்டடியில தான் இருக்கா”

“கடவுளே, இதுக்கெல்லாம் யாரு பொறுப்பெடுத்துக்குவா? நம்ம அர்ச்சனாவ மீட்க போலீஸ்கிட்ட உதவி கேட்கப் போயி இப்ப அந்த பொண்ணு ஸ்டேசன்ல இருக்கா?”

“அதே தான் அர்ச்சனாவும் ஒரே பொலம்பல், பொம்பளப்புள்ள பாவம் சும்மா விடாதுன்னு… அதே மாதிரி நீங்களும் சொன்னா… நான் என்ன தான்மா செய்வேன்?”

“உன்ன சொல்லி என்னாகப் போகுது? அந்த பொண்ணோட முட்டாள் தனத்தால இப்டி ஒரு நிலைக்கு வந்து நிக்குது, பேசாம இங்கிட்டு எங்கயாவது நீ ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திரு… எனக்கு உங்கூட அர்ச்சனாவ அனுப்பவே பயமா இருக்குடா”, அன்பரசி.

“அப்ப அதுவரை அர்ச்சனா இங்கயே இருக்கட்டும்மா”, மனைவியின் நலனில் அக்கறை கொண்டு கூறினான் அமர்.

“ஆளுக்கு ஒரு இடத்துல இருக்கவா கல்யாணம் பண்ணோம்”, அன்பரசி.

“அதச் சொல்லுங்க, ஆனாலும் இந்த மாதிரி ஒரு நிலமல அனுப்ப யோசிக்க வேண்டியதா இருக்கு… நம்ம நாட்டாம (அப்பா) கூட அந்த கிஃப்ட் வந்த பின்ன அந்த பொண்ணோட அப்பாவ நேரில பாத்து பேசிட்டு வந்ததா சொன்னாறேடா”, பத்ரி

“அப்டியா தலைவா… அது எனக்கு தெரியாதே! அவங்கப்பா கைய மீறி இது போயிருச்சு, அவரு சொன்னத கேட்டா தானே, இதுவா எதாவது டிசைட் பண்ணி… இப்ப இந்த நிலமைல வந்து நிக்குது”

“பங்கு…. எல்லாம் உம்மேல இருக்கற கிரஷ்ல தான்… இல்லனா எதுக்கு அர்ச்சனாவ இப்டி செய்யணும்?. எதிர்பாக்காம மாட்டிகிச்சு போல… அதான் இப்ப இந்த நிலைக்கு வந்திருச்சு அந்தப் பொண்ணு”

“ஆமா இவன் நாட் நாட் செவன் ஹீரோ மாதிரி அம்சமா இருக்கான், இவன பாத்து அதுக்கு காலங்கடந்து கிரஷ், அட போடா சொல்ல வந்துட்டான்”, அன்பரசி

இருவரின் பேச்சைக் கேட்டு சிரித்தவன், “அப்டியில்ல தலைவா… அது டாமினேட்டட் கேரக்டர், அதுக்கு கிரஷ்ஷூம் இல்ல ஒரு பிரஷ்ஷூம் இல்ல… படிக்கிறத காலத்துலயே நான் அது கண்ணுல பாத்ததெல்லாம் என்னவோ… பொறாமை மட்டும் தான்.

அதுக்கு தான் நினக்கிறத… நல்லதோ கெட்டதோ சாதிக்கணும், இடையில இருக்கற தடைய உடைக்க என்ன லெவலுக்குனாலும் போகும்.

அது சரி… குயினே தான் பெத்த ரத்தினத்தை நாட் நாட் செவன்னு கிண்டல் பண்ணா… வேற யாரு தான் என்னை ஒரு மனுசனா நினப்பாங்க”, பாவம் போல முகத்தை வைத்தபடி அமர் கூற, பத்ரியும் அன்பரசியும் அமரின் முகபாவத்தைக் கண்டு சிரித்துவிட்டனர்.

“ஆனாலும் இனி நம்மாள மெளனிகாவுக்கு என்ன உதவி செய்ய முடியும்?”,உண்மையான வருத்தத்துடன் கூறினார் அன்பரசி.

“நான் கம்ப்ளைன்ட் பண்ணும் போது நிச்சயமா இந்த மாதிரி ஒரு பிளான்னு எதிர்பாக்கவே இல்ல, ஆனா கம்ப்ளைன்ட் பண்ணாம இருந்திருந்தா அர்ச்சனாவ நாம பாக்கவே முடிஞ்சிருக்காது. அப்டி ஒரு இக்கட்டுல மாட்டிவிடப் பாத்திருக்கு அந்த பொண்ணு”, அமர்

“சரிடா இத அர்ச்சனா வீட்ல கேட்டா பயந்துக்க போறாங்க… பாத்து பதமா சொல்லணும். அர்ச்சனா கொஞ்ச நாள் இங்க இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும், நீ எப்ப கிளம்புவ ஒரிஷாவுக்கு?”

“வந்தவுடனே எப்ப கிளம்புவன்னு குயின் கேக்குறதப் பாத்தா… என்ன நாடு கடத்துற திட்டத்துல இருக்கீங்க போல… எனக்கு பயமா இருக்கே தலைவா”, அமர் சிரித்தபடி கூறினான்.

“நீ நல்லா பயப்புடுவ”, என நம்பாமல் சொன்ன பத்ரியைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தான் அமர்.

சற்று நேரத்தில் சந்துரு, ஜனதா, சுசீலா, செழியன் அனைவரும் அங்கு வந்துவிடவே வீட்டில் ஒரு கலகலப்பு இல்லாத சோகமான உரையாடல்கள்.  அனைவரையும் வரவேற்று உபசரித்த வீட்டினர் அர்ச்சனாவின் பெற்றோர் அர்ச்சனாவைக் கண்டதும் என்ன சொல்லப் போகிறார்களோ என யோசித்தபடி இருக்க

ஓய்விற்காகப் படுத்திருந்தவளை எழுப்பிய அமரைக் கண்டவள்,

“என்னங்க…?”

“உங்க வீட்ல வந்திருக்காங்க, வா வந்து பாரு”, என்றதும் முகம் கழுவி விரைவில் ஹாலுக்கு வந்து வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள்.

மகளின் மலர்ந்த வரவேற்பு புதிதானாலும், அவளின் தோற்றம் மனதில் சங்கடத்தைத் தர செழியன் அது ரெண்டொரு நாளில் சரியாகிவிடும் என மனதைத் தேற்றியிருந்தார்.  ஆனால் சுசீலா

“ஏன் அர்ச்சனா, காச்ச கண்ட மாதிரி தெரியலயே உன்ன பாத்தா, ரொம்ப நாளா பட்டினியா கிடந்த மாதிரி முகத்துல ஒரு அருளே இல்லாம அரண்டு போன மாதிரி இருக்கியேம்மா, எதையும் பாத்து பயந்துட்டியா? என்ன செய்யுது உனக்கு?”, பெற்றவளாய் மகளின் தோற்றம் தந்த உணர்வை வார்த்தைகளாகக் கேட்டிருந்தார்.

“எனக்கு ஒண்ணுமில்லம்மா, அந்த ஊருல எனக்கு சாப்பாடு டேஸ்ட் பிடிக்கல, அதோட அங்கயே காச்ச வேற வந்து நாலு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தது அப்டி இருக்கு, இங்க வந்துட்டேன் இல்ல… இனி எல்லாம் சரியாகி பழையபடி ஆகிருவேன்”

சந்துருவிற்கு அர்ச்சனாவின் தோற்றம் தந்த குறையை அவளின் வார்த்தைகள் சரி செய்திருந்தது.  ஜனதாவும் அர்ச்சனாவிடம் இருந்த மாற்றத்தை உணர்ந்திருந்தாள்.

“என்ன அண்ணி நல்லா இருக்கீங்களா? எங்க அண்ணன் தான் பாக்க நல்லா இருக்கு, உங்கள பாத்தா நீங்களும் அப்ப இருந்த மாதிரி நல்லா இல்லயே… டல்லா இருக்கீங்களே…”, என ஜனதாவிடம் கலகலவெனப் பேசிய அர்ச்சனா அனைவருக்கும் புதியவள்.

வந்த இரண்டு நாட்கள் வேகமாகச் சென்றிருந்தது.  அறையை அடை காத்த அர்ச்சனா தற்போது அறைக்குள் செல்லாமல் ஓரகத்தி, மாமியார் இருவருடனும் கிச்சனிலும், மற்ற வேலைகளிலும், வேலை முடிந்திருந்த நேரங்களில் நிசி,நிகியுடனும் இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த மகிழ்வைத் தந்திருந்தது.

ஆனாலும் அதை அவளிடம் சொல்லாமல், “முடியாமல் இருக்கும் போது ஏன் அலட்டிக் கொள்கிறாய்? போய் ஓய்வெடு..” என வீட்டிலுள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அர்ச்சனாவைத் தாங்கினர்.

இரு நாட்களில் முகத்தில் மலர்ச்சி மீண்டிருந்தாலும், உடல் அயர்வு இருந்தது.  இதற்கிடையில் அடுத்த நாள் ஒரிஷா செல்ல இருப்பதாக அமர் அறிவிக்கவே, அன்பரசி அர்ச்சனாவிடம் “ஏம்மா உன் ஆளு ஊருக்குப் போறான்… நீ இங்க இருந்து உடம்ப தேத்து… அடுத்து அவன் தீபாவளி லீவுக்கு வரும்போதுனா அவங்கூட போறீயா”, எனக் கேட்க

“அது அவுங்க என்ன சொல்றாங்களோ அப்டியே செய்யுறேன்த்த”, என்றவளிடம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, அன்பரசி.  இருவரும் பேசி முடிவுக்கு வாருங்கள் என்று விட்டுவிட்டார்.

அறைக்கு வெளியில் இருக்கும் போது சாதாரணமாக  வெளியே காட்டிக் கொண்டாலும், மனதிற்குள் அமர் தன்னை இங்கு விட்டுச் சென்று விடுவானோ என்ற பதைபதைப்பில் இருந்தாள் அர்ச்சனா.

அறைக்குள் தனது துணிமணிகளை எடுத்து வைத்தபடி இருந்தவனைக் கண்டவளுக்கு அவன் மேல் வந்த ஆத்திரத்தில், தனது அடுத்தகட்ட நடவடிக்கையில் உடன்பாடு உண்டாகும் வரை போராட்டம் நடத்த திட்டமிட்டவள் கதவை மெதுவாகச் சாத்தினாள்.  கதவின் சத்தத்தில் திரும்பியவன், மனைவியின் செயலில்

“என்னடி அச்சு, எனக்கு இச்சு தர கதவ சாத்துறியா?”,எனக் கேட்டபடி அர்ச்சனாவைப் பார்க்க

“இச்சு தான… தரேன்… நீங்க என்ன பண்ணுறீங்க?”

“நாளைக்கு காலையில கிளம்பணுமில்ல, அதான் என் டிரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கேன்”

“யாரு கூட போறீங்க?”

“என்னடி கேள்வி இது?”

“கேட்டதுக்கு பதில்?”

“உனக்கு அங்க வர பயமாருக்கு தான, அதான் நான் மட்டும் கிளம்பறேன்”

“உங்ககிட்ட நான் அப்டி சொன்னேனா?”

அர்ச்சனாவின் பேச்சில் வியந்து அருகில் வந்தவன், “அட என் ஜான்சிராணியே, அப்ப உனக்கு பயமெல்லாம் இல்லங்கறீயா? இல்ல போயிருச்சா?”

“அது இருக்கு… போகுது…, அத பத்தி உங்களுக்கென்ன, என்னய விட்டுட்டுப் போனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“என்னடி ரௌடி மாதிரி டயலாக் எல்லாம் சொல்லி மிரட்டற”

“ம்… இல்லனா தான் என்னய ஏமாத்திட்டு நீங்க எஸ்ஸாகிருவீங்களே”

“உனக்கு அங்க கம்ஃபர்டபிளா இருக்கும்னா வா, நான் உன்ன காவ காக்க முடியாது. நான் வேலைக்கு போயிட்டா நீ தனியா இருந்துக்குவனா வா”

“மாமு… இந்த கேமு எல்லாம் எங்கிட்ட வேணாம்.  எனக்கு பயமாதான் இருக்கு.  ஆனா உங்கள விட்டுட்டு இங்க என்னால தனியா இருக்க முடியும்னு தோணல”

“என்னடி ரைமிங்கா எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட? ஆமா இங்க என்ன தனியா இருக்கப்போறேங்கற… வீட்ல இம்புட்டு ஆளுங்க இருக்காங்க”, ஆச்சர்யமாகக் கேட்டான் அமர்.

“மாமு… என்ன தான் சொல்ல வரிங்க… கூட்டிட்டு போக முடியுமா இல்ல முடியாதானு டக்குனு சொல்லுங்க”

“கதவ அடைச்சத தப்பா புரிஞ்சுகிட்டு இப்ப உங்கிட்ட தனியா மாட்டிக்கிட்டு தவியா தவிக்கிறேன்டி”, என்றபடி காதிலிருந்து பின்னந்தலையை இரு கைகளால் முடியை வருடி தன்னை மீட்டுக் கொண்டான்.

“உங்கள நான் என்ன கொடுமையா படுத்தறேன்?”

“சொல்லு, என்ன செய்யலாம்?”

“ரெண்டு பேருமாவே போவோமே”, என அவன் அருகில் வந்து குனிந்தபடி சொன்னவளை

“என்னடி ரொம்ப வெக்கமெல்லாம் படற”

அருகில் நின்றிருந்தவனின் மார்பில் சாய்ந்தபடி, “என்னால உங்கள விட்டுட்டு இங்கனு இல்ல எங்கயும் தனியா இருக்க முடியாது.  அதனால அத்தை கிட்ட சொல்லிருங்க நானும் உங்க கூட வரேன்னு”

மார்பில் சாய்ந்திருந்தவளை தன் இருகைகளால் அணைத்தவன், “அச்சு வெல்லம், அம்சமா டிசைட் பண்றடி.  ஆனா மாமா கூட வந்தா தைரியமா எதையும் தாங்கும் இதயத்தோட வரணும்.  இப்டி ஹாஸ்பிடல்ல போயி படுத்துட்டு என்ன படுத்தக் கூடாது. என்ன சரியா?”

பாவம் போல முகத்தை நிமிர்த்தி கணவனைப் பார்க்க, கீழே குனிந்து மனைவியைப் பார்த்தவன், மனைவியின் கண்களில் தெரிந்த வருத்தத்தைக் கண்டு

“ஹாஸ்பிடல்ல என்ன பயமுறுத்திட்டடி… அதத்தான் அப்டி சொன்னேன்”, என்றபடி மனைவியின் வருத்தம் போக்க இதழ் நோக்கிக் குனிந்தான் அமர்.

*******************************

     சந்துரு குடும்பத்தார் அனைவரும் அர்ச்சனாவைப் பார்த்துவிட்டு உடனே விருத்தாசலம் திரும்பியிருந்தனர்.

சுசீலா மகளை விருத்தாசலத்திற்கு வருமாறு அழைத்தும் அர்ச்சனா மறுத்துவிட்டாள்.  அது மனவருத்தத்தைத் தர, செழியனிடம் புலம்பிவிட்டார்.

“நம்ம அர்ச்சனா ரொம்ப மாறிப் போச்சு, வெடுக்குனு பேசுது. நம்ம அம்மானு ஒரு அனுசரனை இல்ல”

“ஏண்டி, கல்யாணம் பண்ணிக் கொடுத்து வாழப் போன இடத்துல அங்க எப்டி இருக்கணுமோ அப்டி இருக்குது.  அது நல்லதுதான.  அதுக்கு எதுக்கு இப்டியெல்லாம் பேசுற”

“உங்களுக்கு நான் எது சொன்னாலும் அத மறுத்து சொல்லணும்.  அது போலவே எல்லா புள்ளைகளும் அப்பா மாதிரியே வந்துருச்சுக”

“உங்கிட்ட உக்காந்து பேசுனா சண்ட தான் வரும், நான் கடைக்குப் போறேன்”, என்றபடி கிளம்பிவிட்டார், செழியன்.

சந்துரு வீட்டில் அனைவரையும் கொண்டு வந்து விட்டவன் உடனே கிளம்பியிருந்தான்.  ஜனதா வழக்கம் போல அடுக்களை வேளைகளில் மூழ்கி இருந்தாள். மகன் தன்னிடம் பணம் கொடுத்து வீட்டிற்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளுமாறு கூறாமல் கிளம்பியது மனதை உறுத்த சுசீலா புலம்பியவாறு இருந்தார்.

“வந்த கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் தன்னோட கன்ரோல்ல வைக்கிற அளவுக்கு இப்ப உள்ள புள்ளைங்க வந்துருதுக… முன்னல்லாம் அப்டியா இருந்தோம். பெரியவக பாத்து செஞ்சா அத வாங்கிக்குவோம். யாரும் முகம் வாடாம எல்லாத்தையும் அனுசரிச்சுப் போவம்.”

மாமியின் பேச்சு காதில் விழுந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் சமையலில் கவனமாகியிருந்தாள்.  மதிய உணவிற்கு வந்த சந்துருவுடன் தங்களின் பிரிண்டிங் வேலை நடக்கும் கடைக்கு கிளம்பிவிட்டாள், ஜனதா. கிளம்பும்போது சுசீலா அர்ச்சனாவின் அறையில் இருந்ததால் “அத்த” என இரு முறை அழைத்துப் பார்த்தாள்.

அறையில் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள்.  நல்ல உறக்கத்தில் இருக்கும் சுசீலாவைக் கண்டவள் எழுப்ப மனமின்றி வாயில் கதவு மற்றும் கேட் கதவை சாத்திவிட்டு வந்தவள் சந்துருவிடம் விடயத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

“அத்த தூங்குறாங்க… எழுந்தா என்ன தேடுவாங்கள்ல, நாளைக்குன்னா நான் கடைக்கு வரவா?” என ஜனதா கேட்க

“எங்கம்மா டெய்லி இந்நேரம் தூங்குனா நீ வெளியே எங்கயும் கிளம்பிப் போகவே மாட்டியா? இன்னிக்கு வா.  சாயங்காலம் வந்து சொல்லிக்கோ. இல்ல போன் பண்ணா நானே சொல்லிறேன்”,என சிரித்தபடி கூறியவன், மனைவியை அவர்களின் கடையில் விட்டுச் சென்றான்.

கோரல்டிரா அப்ளிகேஷன் டூல்ஸ் மட்டும் கற்றுக் கொண்டபின் அன்று வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்,ஜனதா.  சந்துரு வெளியூர் வேலையாக சென்றுவிட்டதால் திரும்பி வரும்போது ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஜனதா.

மருமகள் தனியே ஆட்டோவில் வந்திறங்கியதைப் பார்த்த சுசீலா அன்று இரவு அதை பஞ்சாயத்தாக்கியிருந்தார்.

“கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமக… எதயும் வீட்டில இருக்கற பெரியவங்க கிட்ட கேக்காம அதுவா வெளிய கிளம்பிப் போறதும், வரதும் நல்லா இல்ல”, சந்துரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் சுசீலா கூற,

“என்னம்மா பிரச்சனை”

“நான் என்ன பிரச்சனை பண்ணேன்.  இது என்ன சத்திரமா… நினச்ச நேரத்துக்கு வரதுக்கும், போறதுக்கும்”

“யாரு சொன்னா சத்திரம்னு?”

“ஒரு வார்த்தை எங்கிட்ட எதுவும் சொல்லல அது பாட்டுக்கு வீட்ட அப்டியே போட்டுட்டு எங்கயோ ஆட்டோல போகுது, வருது.  இதெல்லாம் குடும்பத்துல நல்லாவா இருக்கு?”

“ஏம்மா ஜனதாவக் காணோம்னு தேடுனியா?”

“இங்க உங்க ரும்ல இருக்குதுனு நான் நினச்சுகிட்டு இருந்தேன் சேகரு.  பாத்தா ஆட்டோல வந்து இறங்குது”

“நீ தூங்கிட்டு இருந்ததால ஜனதா இன்னிக்கு கடைக்கு போகலன்னு சொன்னா, நான் தான் வந்து சொல்லிக்கலாம்னு கூட்டிட்டுப் போனேன்”, சந்துரு.

“போனாவது போட்டுச் சொல்லிருக்கலாமே எங்கிட்ட”, சுசீலா

“நேருல சொல்ல வந்தப்பவே நீ தூங்கறேனுதான் ஜனதா சொல்லல… போன போட்டா மட்டும் எடுத்துருவியாம்மா?

உன் போன எடுத்துப் பாரு, கடைக்குப் போனவுடனே நானும் கூப்பிட்டேன், ஜனதாவும் கூப்பிட்டுச்சு உங்கிட்ட சொல்ல… ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு”

“நான் தான் சேகரு, சார்ஜர ஊர்லயே போட்டுட்டு வந்துட்டேன், ஊருல இருந்து யாராவது வந்தா எடுத்தாரச் சொல்லணும்”, என பேசியவர் மகனிடம் அதற்குமேல் பேச ஒன்றுமில்லை என நினைத்து அவரின் அன்றாட வழக்கமான பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

 

இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தவன்,

“ஏன் ஜனதா நீ வீட்டுக்கு வந்தவுடனே எங்கம்மாகிட்ட சொல்லலயா?”

“வந்தப்ப அத்த வாசல்ல தான் நின்னாங்க… அப்பவே சொல்லிட்டேனேங்க.. ஏன் கேக்குறீங்க?”

“சும்மாதான் கேட்டேன், அப்புறம் எனக்கு இரண்டு நாள்ல வெளியூர் போகற மாதிரி இருக்கும்னு நினக்கிறேன்.  உனக்கு இங்க இருக்க முடியும்னா இரு… இல்லனா உங்க அம்மா வீட்ல போயி இரு… நான் வந்தப்புறம் கூட்டிட்டு வரேன்”, என்றவன்

“இந்த அர்ச்சனாவ நினச்சா எனக்கே ரொம்ப ஆச்சர்யமா போச்சு இன்னிக்கு, முடியாமப் போனதுல ஆளே ரொம்ப டல்லாயிருச்சு  ஆனாலும் இன்னிக்கு தான் சிரிச்ச முகமா வந்து வாங்கண்ணேனு சொல்லிருக்கு”, சந்துரு.

“பாவம் அதுவே முடியாம ரொம்ப கிறங்கிப் போயிருக்கு, காச்சல்லயா இப்டி ஆகும்!. எனக்கு பாத்தவுடனே ரொம்ப கஷ்டமா இருந்துதுங்க.  அத்த இங்க கூப்டும் வர மாட்டேனு சொல்லிருச்சு”, என ஜனதா வருத்தத்துடன் கூற

அர்ச்சனாவிற்கு நடந்த விடயங்கள் பற்றி அமர் தன்னிடம் கூறியதை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான் சந்துரு.

அதைக் கேட்டவளுக்கு மனதில் பாரம் அழுத்த புலம்பிவிட்டாள்.

“ரொம்ப பயந்துருச்சு போல, அதான் காச்ச வந்திருக்கு”, என அர்ச்சனாவைப் பற்றி பேசி அங்கலாய்த்துப் போனாள் ஜனதா.

****************************

error: Content is protected !!