Kamyavanam9

                                         காம்யவனம் 9

இதற்கு முன் ரதியை பிரிந்த துயரத்தை விட இப்போது அதிகமாக துயருற்றான். பிரத்யும்னன் மனித பிறவியானதால் இப்போது பிரிவின் கொடுமையில் மிகவே வாடினான்.

நாட்டிற்குச் சென்றான். அங்கே அவனது தந்தையான பகவான் கிருஷ்ணரை தனிமையில் சந்தித்தான். இப்போது அவனுக்கு அவர் பரமாத்மா என்பது நன்றாகவே தெரியும்.ஆகையால் அவரிடம் ஒரு வரம் வேண்டினான்.

“நான் தேவலோகத்தை சென்றடையும் நேரம் வந்துவிட்டது. மன்மதனாகிய நான் சாப விமோசனம் அடைந்து விட்டேன். எப்போது என்னுடைய பிறப்பின் ரகசியம் தெரிந்துவிட்டதோ இனி இந்த பூவுலகில் இருக்க எனக்கு விருப்பமில்லை.

என் ரதியுடன் இந்தப் பிறவியில் நான் சேர முடியாமல் போனதே பிரபு! அது தான் எனது வருத்தம்.” கண்ணீர் சிந்தினான்.

“பிரத்யும்னா. கவலைப் படாதே! ரதிக்கு இந்தப் பிறவி சாஸ்வதமில்லை என்று எண்ணிக்கொள். நிச்சயம் அடுத்த பிறவியில் நீங்கள் ஒன்று சேர்வீர்கள்.” கிருஷ்ணர் அவனுக்கு உறுதியளிக்க,

“தங்கள் வாயினால் இதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பெருமானே! இருப்பினும், என்னுடைய இந்த பிரத்யும்ன பிறப்பு அப்படியே இருக்க வரம் கொடுங்கள். என் ரதியுடன் நான் எப்போது சேர்கிறேனோ, அப்போது தான் நான் மன்மதனாக மேலுலகம் செல்வேன். அது வரை நான் இந்தக் காம்யவனக் காட்டில் யார் கண்களுக்கும் தெரியாமல் அவளை நினைத்துக் கொண்டு இருந்துவிடுகிறேன். எனக்கு அதற்கு அருள் செய்யுங்கள்!” மண்டியிட்டு அவரிடம் வேண்டினான்.

“நீ நினைத்த வண்ணம் வரம் கிடைக்கப் பெற்றாய்!” என அவனை வாழ்த்தி அனுப்பினார்.

அந்த நிமிடத்திலிருந்து அவன் அந்தக் காட்டில் உலவ ஆரம்பித்தான். ஒரு யுகம் போனது. கலியுகம் பிறந்து அவனைச் சற்று தேற்றியது. மறுபடியும் புது தெம்புடன் உலவினான். அவன் பயிரிட்ட அனைத்து தானியங்களையும் தினமும் கவனித்து அவற்றுடன் பேசினான்.
“என்னையும் என் மாயாவையும் இணைக்க நீங்கள் தான் உதவ வேண்டும். அவளை எப்படியாவது இந்த இடத்திற்கு வரவைத்து அவளுக்கு உங்கள் மூலம் தான் எங்களின் உறவை நினைவுபடுத்த எண்ணியுள்ளேன். நான் எப்போது அழைத்தாலும் என் மனதை புரிந்து கொண்டு நீங்கள் நடந்து கொள்ளவேண்டும்.” என அவைகளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் பிரத்யும்னன் காற்றாக மாறி காம்யவனத்தில் மிதந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு ஆதிவாசிக் கூட்டம் அந்த இடத்திற்கு வந்தனர். அங்கே யாரும் இல்லையென்றதும் அந்த இடத்தில் கூடாரம் போட ஆரம்பித்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரத்யும்னனுக்கு சற்று கோபம் வந்தது.

உடனே அவர்கள் முன் தன் நிஜ உருவத்தில் சட்டெனத் தோன்றி நின்றான். அதைக் கண்டவர்கள் பயந்து நடுங்கினர்.

“யார் நீங்கள்? இங்கு எதற்கு வந்தீர்கள்? இது நான் வாழும் இடம். திரும்பிச் செல்லுங்கள்.” கோபமாக கர்ஜித்தான்.

அந்தக் கூட்டத்தின் தலைவன் முன்னே வந்தான்.

“சாமி, நீங்க யாருன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா, பாக்க ராசா மாதிரி இருக்கீங்க. நாங்க காட்டுவாசிங்க. எங்களுக்குன்னு தனியா இடம் ஏதும் இல்லை. நாட்டுக்குள்ள எங்களுக்கு இடமும் இல்லை. அதுனால கொஞ்சம் தயவு பண்ணி இங்க இருக்க இடம் குடுங்க சாமி!” கெஞ்சினான் அவன்.

பிரத்யும்னன் கோபத்தை விடுத்து சற்று யோசனை செய்தான். பிறகு அந்த கூட்டத்தை அங்கேயே இருக்கச் சொல்லி சம்மதித்தான்.

“சாமி, ரொம்ப நன்றி. இது நாங்க செஞ்ச பாக்கியம்.உங்களுக்கு நாங்க இங்க இருக்கற வரைக்கும் எல்லா பணிவிடையும் செய்வோம். ஆனா நீங்க யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?” பிரத்யும்னனின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.

பிரத்யும்னன் அவனை எழுப்பி  தான் யார் என்பதை உரைத்தான்.

அதைக் கேட்ட அனைவரும் வாய் பிளந்து நின்றனர்.

“நாங்க எல்லாரும் ஒரு தெய்வம் இருக்கற கோயிலுக்கு வந்திருக்கோம். இது நாங்க செஞ்ச பாக்கியம் தான். மேலும் உங்களுக்கு நாங்க என்ன வேணா செய்யக் காத்திருக்கோம்.” இப்போது அனைவருமே விழுந்து வணங்கினர்.

பிரத்யும்னன் அவர்களிடம் எதிர்காலத்தை உரைத்தான்.

” இன்னும் பல ஆண்டுகள் கழித்து என்னுடைய ரதி, மாயாவதி என்ற பெயருடன் இந்தக் காட்டிற்கு வருவாள். அப்படி வந்ததும் நானும் அவளும் இந்த இடத்தில் சில காலம் வாழ்ந்துவிட்டு பிறகு அவளை என்னோடு ஸ்வர்கத்துக்கு அழைத்துச் செல்வேன். அவள் அல்லாமல் வேறு யாரும் இந்தக் காட்டிற்குள் இனி நுழையாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த இடத்தை யாரும் தவறான எண்ணத்தோடு பார்க்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அப்போது  தான் என் மாயவை என்னிடம் சேர்க்கும் வகையை யோசிக்க முடியும்.

உங்கள் இனத்தோர்  உங்கள் வாரிசுகள் அனைவரும் இனி ஜென்மம் கடைத்தேறி மோக்ஷம் பெறுவார்.” எனக் கூறினான்.

அனைவரும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தனர்.

காலங்கள் பல சென்றன. அங்கே வந்த மக்கள் இறந்து பின் அவர்கள் வாரிசுகள் அவனுக்கு பணிவிடை செய்தனர். பிரத்யும்னன் மாயவிற்காக காத்திருந்து அவனுக்கு அவளை எப்போது காண்போம் என்றானது.

அதுவரை அவன் வேறு யாரையும் பார்க்கவும் விரும்பவில்லை. அதனால் அப்போதைய தலைவனை அழைத்தான்.

“இனி நான் உங்கள் முன் வரப்போவதில்லை. என் மாயா வரும் வரை நான் வெளியே வர மாட்டேன்.” என்றான்.

“சாமி! உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு வரம். இனி அந்த பாக்கியம் கூட இல்லையா?” என கண்ணீர்விட்டு வருந்தினான்.

“என் மாயா வரும் வரை எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பணிவிடை எதுவும் வேண்டாம். நீங்கள் உங்கள் பரம்பரை என இந்தக் காட்டை பாதுகாத்து வாருங்கள். அவள் வந்ததும் நான் வருவேன்.” பிரத்யும்னன் முடிவாகக் கூற,

“அவங்கள நாங்க எப்படி அடையாளம் தெரிஞ்சுக்கறது சாமி! அதை எங்களுக்கு சொல்லுங்க! எங்க சந்ததிக்கும் சொல்லி வளக்கறோம். உங்கள மறுபடியும் பாக்கற பாக்கியம் யாருக்கு கிடைக்குமோ? எங்களுக்கு வழி சொல்லுங்க!” தலைவன் மன்றாடினான்.

அப்போது பிரத்யும்னன் அவர்களுக்கு மாயாவை அறிந்து கொள்ளும் யுக்தியை சொல்லிக் கொடுத்தான்.

இங்கே இருக்கும் சமயல் தானியங்களை வைத்து என்னையும் அவளையும் பிணைத்துள்ளேன். அவளுக்கு இங்கே வரும் வரை அவள் யாரென அவளுக்கே தெரியாது. வந்த பிறகு நான் அவளுக்கு நினைவூட்டுவேன். நீங்கள் அதற்கு உதவுங்கள்.

நான் கூறும் பதினோரு தானியங்களை அங்கே இருக்கும் ஆற்று நீரில் கரைத்து, அவள் மேல் தெளியுங்கள். அவளது உடம்பில் அந்த நீர் பட்டவுடன், அவளது உடம்பு அதை உடனே ஈர்த்துக் கொள்ளும். அவள் தான் என்னவள்.

அது மட்டுமல்ல, அவளுக்கு அதன் பிறகு திரும்பிப் போகும் எண்ணமே வராது. அவளுடைய வாழ்க்கைப் பாதையை இந்த பதினோரு தானியங்களை வைத்துச் செய்த பலகையில் அமர்த்தி   நினைவு படுத்துங்கள். அவள் மொத்தமும் அங்கேயே தொலைத்துவிட்டு என்னிடம் வருவாள். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.” மாயாவைக் கண்டறியும் வழியை அவர்களுக்குக் கூறினான்.

“வேறு யாரையாவது நாங்கள் இந்தப் பலகையில் அமர வைத்தால் என்ன நடக்கும்?” அந்த தலைவன் சந்தேகத்தைக் கேட்க,

“அப்படி வேறு யாரும் பொய்யாக இங்கு வந்தால், அவர்கள் வந்த நோக்கம் அவர்களது உண்மையான மனது என அனைத்தையும் இதில் அமர்ந்ததும் அவர்களே உளறிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, அப்படி தவறான எண்ணங்களோடு இங்கு வருபவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் சக்தியும் உன் பரம்பரைக்கு நான் அளிக்கிறேன்.” பிரத்யும்னன் அந்த தலைவனுக்கும் அவனது பரம்பரைக்கும் அந்த சக்தியை அளித்தான்.

அவனும் அதை பயபக்தியோடு ஏற்றுக் கொண்டான்.

“சரி நான் வருகிறேன்.” பிரத்யும்னன் கிளம்பினான்,

அங்கிருந்த அனைவருமே அவனை இனி காண முடியாதா என வருந்தினர்.

“உங்களுக்கு நாங்க இனி எப்படி பணிவிடை செய்வோம்” கண்கலங்கினர் அனைவரும்.

“பௌர்ணமி தான் எனக்கு விசேஷமான நாள். அன்று எனக்கு பூஜை செய்து நள்ளிரவு நிலவு உச்சிக்கு வரும் சமயம் அந்த ஆற்றில் வந்து பாருங்கள். தெளிந்த நீரில் நீங்கள் நிலவினை கச்சிதமாகக் காணும் சமயம், நான் அங்கு தான் இருந்து உங்கள் பூஜைகளை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.” என தெளிவாகக் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான்.

அன்றிலிருந்து இன்று வரை, அவர்களின் பரம்பரைகள் அனைத்துமே மாயாவின் வருகைக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தீய எண்ணத்தோடு வருபவர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. மீறி வருபவர்கள் அந்தக் காட்டில் காணமல் போய் விட்டனர்.

இது தான் இத்தனை நாள் நடந்து கொண்டிருந்தது. இந்தக் காட்டில் இருப்பவர்கள் பிரத்யும்னனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வந்து இப்போது அவனின் மாயாவையும் கண்டுவிட்டனர். அந்தத் தலைவனின் கடைசி வாரிசு தான் இப்போது குருவிற்கும் தேவவிற்கும் கதை சொல்லிக்கொண்டிருக்கும் உடுக்கை அடிப்பவர்.

சொல்லி முடித்தவர் கதையை நிறுத்தி தேவாவையும் குருவையும் பார்த்தார். இருவரும் வேறு ஒரு உலகத்திலிருந்து நிதர்சனத்திற்கு வந்தது போல உணர்ந்தனர்.

“அப்போ எங்க ப்ரென்ட் மாயா தான் அந்த ரதின்னு சொல்றீங்களா?!” தேவா பதட்டத்தோடு கேட்டான்.

“இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா தம்பி?” கடற்கரை திருப்பிக் கேட்டார்.

அவனிடம் பதில் இல்லை.

“அப்போ நாங்க ஏன் இந்தக் காட்டுக்கு வரனும்? எங்களுக்கு அனுமதி இருக்கா?” குரு பயத்தில் கேட்க,

“தம்பி மாயாவதி அம்மா பிறந்தது லேந்து அவங்கள சுத்தி நடக்கற எல்லாமே அவருக்குத் தெரிஞ்சிருக்கும். அவர் இந்தக் காட்டுல தான் இருக்காரு. ஆனா இதைத் தாண்டி நடக்கற விஷயங்கள் கண்டிப்பா அவருக்கு தெரியாம இருக்காது. நீங்களும் அவரோட அனுமதில தான் வந்திருக்கீங்க” உடுக்கை அடிப்பவர் ஆணித்தரமாகக் கூறினார்.

குருவும் தேவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “அப்டீனா மாயா …!” ஒரு நொடி இருவரும் யோசித்து,

அவளை இப்போதே காண வேண்டுமெனக் கருதி அங்கிருந்து கிளம்பினர்.

“ரொம்ப நன்றி ஐயா… நாங்க வரோம். இனி நாங்க என்ன செய்யறது?” தேவா கேட்க,

“அவங்க சேருவதற்கு உதவி பண்ணுங்க. எங்க கூட சேந்து மாயா அம்மாவுக்கு மீண்டும் பழைய நினைவுகள் சீக்கிரம் வரணும்னு பிராத்தனை செய்ங்க.” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

இருவரும் கிளம்பி தங்களின் குடிசைக்கு வந்தனர். கதவு மூடி இருக்க இரண்டு மூன்று முறை தட்டிப் பார்த்தனர். திறக்காததால் , கதவை லேசாகத் தள்ள அது திறந்து கொண்டது.

ஆனால் உள்ளே மாயா, மகதி இருவரும் இல்லை.

“எங்க போயிருப்பாங்க?” குரு திகைக்க,

“கவலைப் படாத இங்க தான் பக்கத்துல எங்கயாவது இருப்பாங்க. ரெண்டு பெரும் தான காணும். அப்போ சேந்து தான் போயிருப்பாங்க. வா போய் பார்க்கலாம்.” தேவா பயத்தை தனித்து அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்ற பாதையை இவர்கள் அறியாவிட்டாலும் , அவர்கள் பாதங்களும் அந்தக் குளத்தை நோக்கியே சென்றது.