IM17
IM17
IM 17
மக்களே… நீதிமன்ற நடைமுறைகள்…. நுகர்வோர் சட்ட பிரிவுகள் அதையெல்லாம் தொடாம… வாதி… பிரதிவாதி…. [வழக்கு பதிவிட்டவர்… எதிர்ப்பவர்] -ன்னு புரியாத பாஷை-ல பேசாம…, நறுக்குன்னு நாலஞ்சு முக்கியமான ஸீன்கள் மட்டும்… உங்க பார்வைக்கு…
“ஸ்ரீ ராம் .. ஜெய் ராம்.. ஜெய் ஜெய் ராம்”, சரண்யு -வின் மனம் விடாது பிரார்த்தித்து கொண்டு இருந்தது.. காரணம், வீடு வெறும் வசிப்பிடம் ஆகி இருந்தது. ஒருவர்.. மற்றவர் முகம் காண, தயங்கினர். சரண்யு… SNPஇடமும், பாஸ்கரிடமும் பேசுவதை .. . வெகுவாய் குறைத்திருந்தாள் .. காரணம்… கல்பா-விற்கு இவ்வழக்கிற்கு சட்ட நுணுக்கங்களை சொல்லி கொடுத்துக் கொண்டுதானே இருக்கின்றாள்? ஏதேனும் பேசி .. தகராறு வந்தால்? என்ற நினைவும் ஒரு காரணம்.
இது தவிர.. இவள் வட்டாரத்தில் புறமுதுகு பேசுவதெற்கென இருக்கும் கூட்டம்… “என்னமா… அலையறாங்க பாரு… பப்ளிசிட்டிக்கு?. எப்போதும்.. ஊர்வம்பு இழுத்து விட்டுப்பாங்களே ரெண்டு பேரு … அதுல ஒருத்தி…. வீட்டுக்காரர் கம்பெனி மேலயே… கேஸ் போட்டுருக்கா… யார் வின் பண்ணினாலும்.. கொண்டாடலாம் பாரு… இவ கச்சேரி-ல சண்டை போடுவா… வீட்டுல கொஞ்சிப்பா… கர்மம் கர்மம்.. இதெல்லாம் ஒரு பொழப்பு….”.. என்று நீட்டி முழக்க, மீம்ஸ்-களில் வதந்திகள் வலம் வர… மனதளவில் நொந்துதான் போயிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் , லதிகாவை சாட்சி சொல்ல நீதி மன்றம் அழைத்திருக்க, அங்கு….. [ஒரு சின்ன FB .. So கொசுவர்த்தி ப்ளீஸ்…]
நீதிமன்ற நடைமுறைகள், சத்திய பிராமாணங்கள் முடிந்து,
“உங்களை பத்தி, சொல்லுங்க.”
“அதிதி ஸந்த்யா இளம்பரிதி டாட்டர் ஆஃப், சூர்ய நாராயண பிரகாஷ், நியோநேட்டாலஜிஸ்ட் ”
“உங்க வேலை மற்றும் இங்க நீங்க இருக்கிறதுக்கான காரணம் பற்றி சொல்ல முடியுமா?”
“சிசுக்குழந்தைகள் மருத்துவம் என்னோட வேலை , முக்கியமா குறை பிரசவ குழந்தைகள், அவங்களோட பிரச்சனைகள் பார்க்கறது, மகப்பேறு மருத்துவருக்கு (obstetrician), மற்றும் அந்த குழந்தைகளை பாக்கற வேற டாக்டர்ஸ்க்கு சஜெக்ஷன் தர்றது எங்க வேலை.. தவிர, தேவைன்னு தோணினா, OT -ல கூட இருப்போம்..”, என்றவள் தொடர்ந்தாள்…
“இந்த அக்சஸரீ[வெண்டிலேட்டர் சர்க்யூட்] , நாங்க ஒரு குழந்தைக்கு, ஃபிக்ஸ் பண்றதா இருந்தோம், தேங்க் காட். பண்ணல..”
“ஒருவேளை பண்ணி இருந்தா, அதோட விளைவுகள்?”
“ரூம் டெம்ப். லேயே இளக ஆரம்பிக்கிற இது, கண்டிப்பா நேனோ பிளாஸ்டிக்கை அந்த குழந்தைக்குள்ள எடுத்திட்டு போயிருக்கும்.”
“நேனோ பிளாஸ்டிக்?”
“யெஸ் .. நேனோ பிளாஸ்டிக்.. இப்போதைக்கு உலகமே பயந்து பாக்கிற ஒரு துகள், தான உருவானதில்ல, நம்ம உருவாகினது. எங்க மருத்துவ உலகத்துக்கே இன்னமும் அதோட விளைவுகள் தெரிய ஆரம்பிக்கல “
“புரியல டாக்டர்.”
“வெல் .. நாம தூக்கி போடற பிளாஸ்டிக் எல்லாம், சீக்கிரம் மக்காது ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், ஆனா அதெல்லாம் நாளாவட்டத்தில் காத்து, வெயில், தண்ணி பட்டு பட்டு, கண்ணுக்கே தெரியாத பிளாஸ்டிக் துகள்களா மாறி நம்ம உணவுல, காத்துல, தண்ணீல கலந்துடுது.”
“சாதாரணமான பிளாஸ்டிக் தயாரிப்புக்கே, நிறைய முன்னெச்சரிக்கைகள் /கட்டுப்பாடுகள் இருக்கு.. இது உயிர் சம்பத்தப்பட்ட விஷயம்.. இதுல கவனக்குறைவுங்கிறது மன்னிக்க முடியாத குற்றம். இனி யாருக்கும் இந்த கம்பெனி சம்பத்தப்பட்ட எதையும் நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன்.. இது என்னோட ஸ்டாண்ட் “. தெளிவாய் தியா, SNP & Co.-வை சாடினாள் .
“தேங்க்ஸ் டாக்டர் “, என்று தியாவிடம் கூற,
நீதிபதி .. SNP யின் வக்கீலை பார்த்து, “நீங்க இவங்களை குறுக்கு விசாரணை செய்யணுமா?”, கேட்க..
“யெஸ் மை லார்ட் “
“ப்ரொசீட் “
“வணக்கம் டாக்டர். எனக்கு ரெண்டு மூணு கேள்விதான். ஒன்னு, தரமான பிளாஸ்டிக் மருத்துவ பொருட்கள் கூட , சீரான இடைவெளில மாற்றப்படணுமா இல்லையா?”
“மாற்றப்படணும்”
“ஏன்?”
“அதிக நாள் யூஸ் பண்ணினா, இன்பெக்ஷன் வர வாய்ப்புகள் இருக்கு.. உதாரணத்துக்கு சமீபத்துல இறந்து போன கழக தலைவர்.. அவர் உபயோகிச்ச ட்யூப் சீரான இடைவெளில மாற்றப்பட வேண்டிய ஒன்னு .”
“நன்றி டாக்டர்.. அடுத்து.. இந்த சர்க்யூட், SNP & Co லேர்ந்து சப்ளை பண்ணப்படலைன்னு ஆதாரத்தோடு நிரூபிச்சா.. உங்க so called ஸ்டான்ட் மாறுமா?”
“மே பீ, ஆனாலும் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்யும்.மெடிக்கல் கவுன்சில் ரெகமெண்ட் பண்ணினா, ஒருவேளை கன்சிடர் பண்ணுவேனோ என்னமோ?”, சொல்லிய விதத்திலேயே தெரிந்தது, இனி எப்போதும் SNP தயாரிப்புகளை உபயோகப்படுத்த மாட்டாள் என்பது..
“தந்தையின் தயாரிப்புகளை நிராகரித்த மகள்” – என்று அடுத்த மணித் துளிகளில் செய்திகள் வலம் வர துவங்கியது .. இன்றுவரை நின்றபாடில்லை..
எனவே .. சரண் விடிந்ததில் இருந்தே மிகவும் அலைப்புறுதலில் இருந்தாள் .. எனினும் எழுந்து… நரேனுக்கு கஞ்சி தயாரித்து.. பூஜை முடித்து… டிஃபன் தயார் செய்து…. என அனைத்தும் இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தாள்…. இருவரும் ரெடியாகி வர.. கணவனுக்கும், மகனுக்கும் பரிமாறி…. கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.. காரணம், இன்று விசாரணைக்கு கம்பெனி டைரக்டரை அழைத்திருந்தனர்.
ஒருவிதமான பயம், கல்பாவின் பேச்சாற்றல் இவள் அறியாததா? என்ன கேட்பாளோ? இவர்கள் இருவருமே சாமான்யர்கள் இல்லையே? அதுவும் பாஸ்கர்….? கோபம் வந்தால்… ஆடித்தீர்த்து விடுவானே? இத்தனைக்கும் மீறி , பத்திரிக்கையாளர்கள். ஏதாவது ஏடாகூடமாய் நடந்தால்…. நரேனுக்கு அகௌரவமாகி விடுமே ? ஏற்கனவே, இரண்டு நாள் முன்பு தியாவின் வாததினால் பிரச்சனை … என நினைத்து , நினைத்து முகமே ரத்தப் பசையின்றி வெளுத்திருந்தது.
அமைதியாய் பாஸ்கர் சாப்பிட்டு.., ” ம்மா…. போயிட்டு வர்றேன்….” என்றவாறே…. கிளம்பி … கார் ஷெட் -ஐ நோக்கி … நடந்துவிட்டான் …
SNP சாப்பிட்டு முடித்து நேராய். சரண்யுவிடம் வந்தான்… “எல்லாம் நல்லபடி முடியும் சரண்… எதுக்கு இவ்வ்ளோ டென்ஷன்?”, சொல்லியவாறே.. அவள்.. கைகளை பிடித்து இருந்தான்.. ஜில்லிட்டுருந்தன.. “நம்ம லைஃப் வேற . இந்த கேஸ் வேற… அதுபோலத்தான்… பாஸ்கர் கல்பாவோடதும்… அவங்க ஸ்ட்ராங்-ஆ இருந்தா இது ஒண்ணுமேயில்ல…. யாருக்குமே பாதகமில்லாம நான் இதை முடிச்சுடுவேன்.. ஆனா, எனக்கு நம்பிக்கை கொடு.. நீ அழுதா.. வருத்தத்தோடு இருந்தா.. எனக்கு எதுவுமே ஓடாது… கவலையா இருக்கிற உன் முகம்தான் கண்ணுக்கு வருது.. “.. என்று பேசி.. அவளின் கைகளை… தன கைகளில் வைத்து .. சூடு பறக்க தேய்த்தான்.
சரண், கண்களில் இருந்து மளுக்கென நீர் இறங்கியது… அவன் கைகளின் வேலையை நிறுத்தி… அவனை நிமிர்ந்து பார்த்து ….”இவன் என் கணவன்.. இவனுக்கு எதிரான வழக்கிற்கு நான் ஆலோசனை சொல்கிறேன்.. ஆனாலும்… செய்யாதே.. வேண்டாம்.. என்று ஒரு வார்த்தை கூறாத … என்னவன்… “, கர்வமாய் நினைத்தவாறு, SNP -யை மிக இறுக்கமாய் அணைத்திருந்தாள்…
ஆழ மூச்செடுத்து.. SNP யின் வாசத்தினை உள்ளிழுத்து…. மனதை சமன் செய்தாள்…”SNP க்கு நிக் நேம் சக்ஸஸ்.. , தெரியுமா நரேன்..?”, என்று அவள் அவன் காதினில் முணுமுணுக்க… சரண் மட்டுமல்ல .. நரேனும் மீண்டிருந்தான்… ஆம்.. விழியும் .. இதழும்தான் மொழி பேசுமா என்ன? இதோ பாஷைகள் தோன்றும் முன்… தோன்றிய ஆதி மனிதனின் உடல் மொழி… அத்தனை இறுக்கத்தையும் சரி செய்து இருந்தது… இது காமமில்லை.. காதல் கூட இல்லை… அதைவிட பெரிய நம்பிக்கை…. எதுவாகினும் நான் உன் பின் எப்போதும் இருப்பேன் என்ற நம்பிக்கை…
அவன் கேட்ட புத்துணர்வை… வார்த்தைகளிலும் .. உடல் மொழியாலும் தந்திருந்தாள், சரண்… அவளை அவனது உடலும் உணர்ந்து மறுமொழி சொல்ல… பாஸ்கர் கார் ஹார்ன் சத்தமிட…சரண்யு-வின் நெற்றியில் முட்டி , “வர்றேன்டி… என் பொண்டாட்டி…” , புன்னகையுடன் SNP கூறி விடைபெற… கவலைகள் நீங்கி … விடியலின் கதிரோனாய் மலர்ந்தவள், “ம்ம்ம்…”, என்று விடை கொடுக்க, காதல் சுகமானது….எந்த வயதிலும்….
++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிமன்ற வளாகத்தின் முன் .. பத்திரிகை நிருபர்கள் குழுமி இருக்க… பாஸ்கர் ஆதித்யாவும்….SNP -யுடன் காரில் வந்து இறங்கினான்…
காரில் இருந்து இறங்கும்போது… “டாட்.. டாஷ்போர்ட் -ல என் செல் இருக்கு.. கொஞ்சம் எடுங்க…”, சொல்லியபடி பாஸ்கர் ஆதித்யா கீழிறங்க… அவனை வித்தியாசமாய் பார்த்த SNP , “இவன் பேச்சில எதுக்கு இவ்வளவு பதட்டம்?”, என்று யோசித்து.. அலைபேசியை எடுக்கும்முன்…. பாஸ்கர் ஆதித்யாவை … பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்தனர்… “ஒ.. இதுதான் விஷயமா?”.. என்று நினைத்து கொண்டான்…
“எஸ்…”, என்று பாஸ்கர் ஆரம்பிக்க….
“சார் இது SNP கம்பெனி தான?”
” இது எங்க குரூப் ஆப் கம்பெனி.. & என் கண்ட்ரோல்-ல இருக்கிற கம்பெனி.. அவரும் டைரக்டர்..”, மறுபக்கம் இறங்கும் SNP -யை பார்த்தவாறே கூறினான்… இதை கேட்ட SNP …சற்றே புருவம் சுழித்து… சின்னதாய் .. இளநகை அரும்ப… ” எம்பையன் வளந்திட்டான் … என்னையே காப்பாத்த ட்ரை பண்றான்…? ம்ம் “, மனதுள் நினைத்தான்…
“அப்படின்னா… நீங்க தான் இதோட….”
“சீப் எக்சிகியூடிவ் ஆபிஸர் கம் டைரக்டர்…..”
“கேஸ் பத்தி…. உங்க கருத்து…”
“இத்தனை நாளா பாத்துட்டே இருக்கீங்க… ரெண்டு பக்க ஆர்க்யூமென்ட்டை கேக்கறீங்க… இன்னும் கொஞ்ச நாள்ல தீர்ப்பு வரும் .. அப்போ… தெரிஞ்சுக்கோங்க…,”.. துளி கோபமில்லை…. பதட்டமில்லை… அழகாய் நிருபர்களை கையாண்டான்….
“சார் ஒரு க்ளூ வாவது கொடுங்க சார்….”
“நியாயம் நிச்சயம் வெல்லும்…”…
“அப்போ உங்க மேல கேஸ் போட்டவங்க அநியாயக்காரங்களா?”
“ஹேய் …ட்யுட்….. இதெப்ப நான் சொன்னேன் ?… “, கவனமாய் ..அழகாய் .. சிரித்த பாஸ்கர் ஆதித்யா… அனைவரின் கவனத்தை குவியமாய் ஈர்த்து இருந்தான்.
அழகாய் சிரிக்கும் மகனை, பார்த்திருந்தான் SNP. காரணம் அவன் சிரிப்பு கண்களை எட்டவில்லை.
“ஓகே .. ப்ரெண்ட்ஸ் .. அப்பறம் பாக்கலாம் .. பை…”, நீதிமன்ற வளாகத்தை நோக்கி நடந்தவாறே… இன்னமும் சிரித்த முகமாய் இருந்தான். கோர்ட் அறைக்குள் நுழைந்தவுடன், சிரிப்பென்னும் முகமூடி களைந்து… பாறையாய் இறுகியது… அவன் முகம்.
SNP …, பெருமூச்சுடன்… , என்னைப்போலவே… .. இவனும் உணர்ச்சிகளை சிரிப்புங்கிற போர்வையில் மறைக்க கத்துக்கிட்டான், என்று யோசித்தவாறே.. பாஸ்கரின் தோளில் தட்டி…. ” போ. ..”, என்றான்,அமைதியாய்.
கோர்ட் வளாகம், இவர்கள் பரம்பரையே கண்டறியாதது. அதுவும் அனைவராலும் மிகவும் மரியாதையாகவே பார்க்கப்பட்ட குடும்பம் , இன்று ஊரார் கேலி பார்வைக்கு உள்ளாகி இருக்கின்றதென்பது…சொல்லொண்ணா வருத்தத்தை கொடுத்தது…
அதையும் ஒற்றை நொடியில், கடந்தனர். தந்தையும் தனயனும்… இது வருந்துவதற்கான நேரமில்லை.
கோர்ட் பணியாளர், SNP குழுமத்தின் SIPCOT தலைமையை, கூண்டிற்கு அழைக்க…. பாஸ்கர் எழுந்திருந்தான்….
விரலசைத்து கூப்பிட்டு, “டேய் .. ரெண்டு பேரும் போடற சண்டையெல்லாம் இப்போவே போட்டுக்கோங்க… கல்யாணத்துக்கப்பறம், யாராவது ஒருத்தர் .. பேசணும்.ஒருத்தர் கேக்கணும்..”, என்று சிரித்தவாறே சொல்ல….
தந்தையின் புறம் குனிந்து கேட்டு கெண்டிருந்தவன், தன்னையும் மீறி முறுவலித்து…. SNP யிடம் ,”ப்பா… வீட்ல நீங்க பேசி … நான் கேட்டதேயில்லை “, சிரித்தவாறே கூற….., ” ஹ ஹ ஹ….. அதெல்லாம் சீக்ரெட்…டா… போ…. போய் எம் மருமகளை சமாளி…”, பார்த்துக் கொண்டிருந்த சிலரை தவிர அனைவர்க்கும்… இவர்கள் நெருக்கமும் , இலகுவான பேச்சும் சிரிப்பும் அழகாய் .. ரசனையாய் இருந்தது…
உண்மையில், பாஸ்கரை .. SNP பேசி இலகுவாக்கி இருந்தான்… சிரித்த.. மலர்ந்த முகம் ,வெற்றியின் அடையாளம்.
ஆனால், லதிகாவை நேரிட்டு பார்த்ததும்…”இந்த கம்பெனி, பேரு, ஊரு, அட்ரஸ், அப்பா, அம்மா, அக்கா….. எதுவுமே வேணாம் – நீ மட்டும் போதுன்டி…. எங்காவது போயிடலாமா ?” என்ற எண்ணம் .. மனதில் சூறாவளியாய்.. தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை…கடிவாளமிட்டான் பல நாட்களுக்கு பிறகு பார்கின்றான்… மெலிந்திருந்தாள் .. முகத்தின் பொலிவு மட்டும் மீதமிருந்தது…
இனி, தான் பேசப்போகும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு ஏறப்புடையதாய் இருக்கப்போவதில்லை என்று தெரியும்..அவன் இங்கே பேசப்போவதை, ஒத்திகை செய்திருந்தனர்.. என்ன ஒன்று … SNP பேசுவதாய் இருந்தது.. அதை பாஸ்கர், தன் வேலையாக்கி கொண்டான், .. தன்னைத் தாண்டித்தான், தந்தையை காயப்படுத்தவோ/கேள்வி கேட்கவோ முடியும் என்ற உறுதியுடன் ..
சத்திய பிராமாணங்கள் முடிந்து, விசாரணை ஆரம்பித்தது. கல்பலதிகாவும் பாஸ்கரும் நேருக்கு நேராய்….
“நீங்க?”
“ம்ம்ம்… மன்னார்சாமி …” இடக்காய் மைண்ட் வாய்ஸ் குரல் கொடுக்க….அதை அடக்கி..” பாஸ்கர் ஆதித்ய பிரகாஷ்… .. CEO ஆப் SNP குரூப்..”
“அதாவது.. எல்லாத்துக்கும் நீங்கதான் பொறுப்பு இல்லையா?”
“நிச்சயமா…”
“அப்போ ,உங்க புரொடக்ட் நம்பகத்தன்மை இல்லைன்னு..”
“ஒரு சின்ன திருத்தம்…. எங்க ப்ரொடக்ட்-ன்னு எப்படி அதை சொல்லுவீங்க? “
“அதுல உங்க trade mark இருக்கு”
“அதனாலேயே இது எங்க தயாரிப்பு ஆகிடுமா?”
“எங்க லோகோ – வை யாரோ பயன்படுத்தி எங்க குட் வில்ல கெடுக்க நடந்த சதிதான் இந்த போர்ஜரி …”
“அடப்பாவி…, முழு பூசணிக்காயை …..” பழமொழியை வாய்க்குள் மென்றவள்…. புஸ்ஸு.. புஸு வென புகைந்தாள் .. அவளுக்கு “பொய் சொல்ல நினைக்காத.. எனக்கு பிடிக்காது”, என மிரட்டிய பாஸ்கர் ஆதித்யா நினைவில் வந்தான்.
“ஏதாவது ப்ரூப் இருக்கா, நீங்க சொல்றதுக்கு?”
“யெஸ் … நாங்க ஏற்கனவே பைல் பண்ணின கம்பளைண்ட் காப்பி குடுத்துருக்கோம்”
[இந்த புகார்… SNP யின் வழக்கறிஞர்களால் , சில பல காவல் துறை தலைகளின் ஒப்புதலோடு.முன்தேதியிட்டு தயாரிக்கப்பட்டது]
“ஆனா, வேற ஸ்டேட் ல்ல புகார் பதிவாகி இருக்கு?”
[பின்ன.. இங்க, பொய்யா FIR போட்டா , நீ கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கே ? அதான் வேற ஸ்டேட்-ல போட்டாங்க.]
“ஆமா .. அங்கதான் எங்க ரீடைலர் , ப்ராடக்ட் தரம் பத்தி முதல்ல கண்டுபிடிச்சு சொன்னாரு.. ஆனா… எங்க ரெக்கார்ட்-ல அந்த குறிப்பிட்ட பார்மசி -க்கு, எங்க ஹோல் சேல் யூனிட் எதையும் சப்ளை பண்ணல…, அதுக்கும் ஆதாரம் இருக்கு..”
“அப்போ இந்த ப்ரொடக்ட் உங்களுது இல்லை-கிறீங்க….”
“ஆமா “
“இவ்ளோ நிச்சயமா சொல்ல முடியுதுன்னா… அதுக்கும் ஆதாரம் இருக்கா…”
“யா.ரெண்டு நாள் முன்னால, அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷன்-ல நாலு பேர் அரெஸ்ட் பண்ணிருக்காங்க, அதுல ஒருத்தன் எங்ககிட்ட வேலை பாத்தவன். அப்ரூவர் ஆகி எல்லா விவரத்தையும் சொல்லிட்டு இருக்கான்”.
கல்பலதிகா மனதுக்குள் வசை பாடினாள் , “பக்கி, பக்கி.. பிராடு ”
“இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் பிளாஷ் நியூஸ்-ல வரும் பாருங்க..”
அனைத்தையும்… பார்வையாளர்களில் ஒருவனாய் தாடிக்குள் முகத்தை மறைத்து அமர்ந்து, பார்த்திருந்தான் மனோகரன், கோபமாய்.
மொழிவோம்…