IMIA1

IMIA1

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆனதோ!
அத்தியாயம் 1
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
மிக உயரமாக இருந்த அந்த கட்டிடத்தை பார்த்து மலைத்த ப்ரவலிக்காவின் உதடுகள் தன்னையும் அறியாமல் சஷ்டி கவசத்தை முணுமுணுத்தது! எண்ணி வந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் அதன் போக்கில் பிரார்த்தித்து கொண்டிருந்தது… அது அவளது வாழ்நாள் லட்சியம்!
அனைத்து தெய்வங்களையும் வேண்டி கொண்டு அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் காலடி எடுத்து வைத்தாள்…
கோவை ஜீவன் மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை!
ஒரு ஊரையே உள்ளடக்கி இயங்கிக் கொண்டிருந்தாலும் அடக்கமாக வீற்றிருந்தது… அதற்கு மாறாக மக்கள் கூட்டமும் ஊழியர் கூட்டமும் அலைமோதி கொண்டிருக்க… வியப்பாய் பார்த்த ப்ரவலிக்காவின் பார்வை தன் தோழி மதுவை தேடியது…
மதுவை அவள் தேடி கண்டுகொள்வதற்குள் ப்ரவலிக்காவை பற்றி ஒரு சில வார்த்தைகள்!
பெயர் ப்ரவலிகா மகாலக்ஷ்மி… கண்களை குளிர செய்யும் அழகு! படித்தது மருத்துவம்… ஆனால் மக்களுக்கு சேவையோ கூட்டோ பொரியலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்காகவெல்லாம் அவள் மருத்துவம் பயிலவில்லை… தந்தையின் நெருக்கடியால் மட்டுமே எம்பிபிஎஸ் படித்து முடித்தவள்!
மருத்துவத்தை பார்த்து பயந்ததற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை… சிறு வயது முதலே ரத்தத்தை கண்டால் பயம்… பயம்… பயம்… கோயிலில் கிடா வெட்டும் போது பயந்து மயங்கி விழுந்து வைக்கும் தைரியசாலியை மருத்துவப்படிப்பில் விட்டால் அவளும் தான் பாவம் என்ன செய்து விட முடியும்? ஒரே நாளில் சக்திமானை போல சக்தி உமனாக முடியாதே… பாவம் தான் அந்த கல்லூரி!
படித்து முடித்த பிறகு அவள் அந்த பயத்தை காட்டிகொள்வதில்லை என்றாலும் மருத்துவப்படிப்பில் சேர்ந்தபோதும் செய்முறை தேர்வுகளின் போதும் வெகுவாக பயந்து அழுதிருக்கிறாள்… தன்னால் செய்யவே முடியாது என்று சத்யாகிரகமும் செய்திருக்கிறாள்… செந்தில்நாதனின் ஒரே வாரிசு இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியாக, அழுமூஞ்சியாக பிறந்து விட்டதில் அவருக்கு மிகுந்த வருத்தம் தான்… ஆனாலும் அவளை மருத்துவராக்கியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருந்தார்…
“ஏன் ண்ணா? ப்ரவி குட்டி தான் பயப்படுதே… அது ஆசைப்படுற பேஷன் டெக்னாலஜியே படிக்கட்டுமே… நமக்கும் உபயோகமா இருக்குமே…” சிறிய தந்தை சுப்பிரமணி மில்லை மனதில் வைத்து கொண்டு கூற…
“ஏன் மணி… நம்ம பிள்ளை வந்துதான் மில்லை பார்க்க போகுதா? நம்ம பேர் சொல்ல ஒரு ஆஸ்பத்திரி வேணாமா? அதுவும் இல்லாம…” என்று ஆரம்பித்தவர் தம்பியின் முகத்தை கண்டு நிறுத்தியிருந்தார்… என்னதான் வேதனையை வெளிக்காட்டாமல் சிரித்து கொண்டு நடமாடி கொண்டிருந்தாலும் உடன்பிறந்தவனின் உள்ளக்குமுறலை அறியாதவரா செந்தில்நாதன்?
“அது மெடிக்கல் முடிக்கட்டும் மணி… காற்று போகாத இடத்துல கூட காசு போகும்… என் பொண்ணு டாக்டர் தான்…” வெகு பிடிவாதமாக செந்தில்நாதன் முடித்துவிட்ட பிறகு ப்ரவலிக்காவை பெற்ற காயத்ரி மேலும் ஊமையாகித்தான் போனார்!
இவர்களின் பிடிவாதத்தை மகளின் படிப்பில் காட்டுவதை விரும்பாவிட்டாலும் அதே மகள் சற்றேனும் தைரியமாக பேசவாவது செய்யலாம் என்பது அவரது மனதின் ஓரத்தில் இருக்கும் விருப்பம்… ஆனால் அவளோ அவருக்கும் மேல் ஊமையாகவல்லவா இருக்கிறாள் என்பதில் மிகுந்த வருத்தம் அவருக்கு! திருமணம் முடிந்து பத்து வருடங்கள் கழித்து பிறந்த பெண் என்பதால் அதிகமாக செல்லம் கொடுத்து தைரியத்தை வளர்க்காமல் போய்விட்டோமோ என்ற கவலையில் இருந்தார் அவர்!
தனியாக படித்து வேலை பார்த்தாலாவது அந்த தைரியம் வருமா என்று ஆசைப்பட்டுத்தான் அவரும் ப்ரவாவை கோவையில் இருக்கும் அந்த மருத்துவ கல்லூரியில் பயில அனுமதித்தது… ஆனால் அவளோ காயத்ரியை விடாமல் பற்றி கொண்டே கல்வியையும் முடித்து விட்டாள்!
படிப்பை முடித்தவுடன் பயிற்சிக்காக என்று அவளாக எடுத்த முடிவு மூவரையுமே அதிர வைத்ததோடு அவள் தன்னிச்சையாக இயங்க மாட்டாளா என்று எதிர்பார்த்த பெரியவர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது!
“ப்ரவிக்குட்டி… பொள்ளாச்சிலையே ஏதாவது நல்ல ஹாஸ்பிட்டல்ல சேர்ந்துக்கோடா… அப்பா உனக்கு இங்கயே ஹாஸ்பிட்டல் கட்டிதந்துடறேன்…”பொள்ளாச்சியில் ஏக்கர் கணக்கில் தோப்புகளும் தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிற்சாலைகளும் திருப்பூரில் பனியன் தொழிற்சாலையுமாக பரம்பரை பரம்பரையாக கோலோச்சி கொண்டிருக்கும் குடும்பத்தின் தலைமகன் அதுவரை இருந்த மனநிலைக்கு மாறாக கெஞ்ச…
“இல்லப்பா… அந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் ரொம்ப நல்லா இருக்குமாம்… மதுவும் அங்க தான் அப்ளை செய்து இருக்கா…”அவரது நண்பரின் மகளை காரணம் காட்டி பேசியவளிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காயத்ரியை பார்வையால் உதவிக்கு அழைத்தாலும் அதற்கும்பயனில்லாமல் போனது!
இப்போது மருத்துவமனைக்கும் வந்து சேர்ந்து மதுவையும் தேடிக்கொண்டிருந்தாள் ப்ரவா! செல்பேசியில் அழைத்து பார்த்த போதோ பதிலில்லாமலிருக்க… தவித்தபடி நின்று கொண்டிருந்தவளை…
“ஹேய் ப்ரவி செல்லம்…”என்றபடி கட்டி கொண்டாள் மதுபாஷினி!
ப்ரவாவுக்கோ மதுவை கண்டவுடன் நிம்மதி சூழ்ந்தது என்றாலும் இவ்வளவு நேரம் தவித்து நின்றதிலும் செல்பேசியை அவள் எடுக்காததிலும் எரிச்சல் சூழ்ந்திருந்தது…
“ஏய் பிசாசு… இப்போ மட்டும் கொஞ்ச வந்துட்டியா?இவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கேன்… ஒரு போன் கூடவா அட்டென்ட் பண்ண முடியல உன்னால? எருமை… உன்னை நம்பி வந்ததுக்கு என்னை…” என்று தலையிலடித்து கொள்ள… அவளது கோபத்தை பார்த்த மதுவுக்கு சிரிக்கத்தான் முடிந்தது…
அந்த தைரியசாலி பொள்ளாச்சியிலிருந்து கோவை வரை தனியே வந்ததே மிகப்பெரிய சாதனை எனும் போது தான் தென்படாத இந்த சில நிமிடங்களில் அவளது ரத்த அழுத்தம் எந்தளவு எகிறியிருக்கும் என்பதை அறியாதவளா மது?
“கூல் buddy கூல்… ஏன் இவ்வளவு டென்ஷன்? நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் தான் ரிப்போட் செய்ய போறோம்… அதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரை கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு இருந்தேன்… சத்தத்துல போன் ரிங் ஆனது என் காதுல விழல… எம்டி இன்னும் வரவே இல்லடி… அதுக்குள்ளே என்ன லூசு?”
பொறுமையாக விளக்கம் கொடுத்த மதுவை பதட்டம் குறைந்து சிறு புன்னகையோடு பார்த்தவள்…
“மதுக்குட்டி… இன்னைக்கு நான் ஒரு பேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்தேன்…”என்று குறும்பாக புன்னகைத்தவாறே கூறி… இடைவெளி விட்டு…
“ஒருத்தருக்கு வர்ற நைன்டி பர்சன்ட் ப்ராப்ளம்ஸ ப்ரெண்ட்ஸ் தான் சால்வ் பண்றாங்களாம்…”என்று கண்ணாடிக்க… மதுவோ இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள… ப்ரவா சிரித்தபடி…
“ஹன்ட்ரெட் பர்சன்ட் ப்ராப்ளம்ஸ் வர்றதும் அதே ப்ரெண்ட்ஸால தானாம்டி…”அதே புன்னகையோடு கூற…
“அடிப்பாவி எல்லாம் நேரம் தான்…”என்று ப்ரவாவின் இடையை கிள்ளி வைக்க… அதற்கு அவள் துள்ளி வைக்க… இவர்களின் சேட்டையை குறுஞ்சிரிப்போடு ரசித்து சிரித்தபடி கடந்தது ஒரு உருவம்… அதை அறியாமல் இருவரும்”நண்பிடி”என்று ஹைபை கொடுத்து கொண்டு எம்டி அறையை நோக்கி சென்றனர்!
***
ஜீவானந்தன் சக்திவேல்! குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் என்பது அவனது படிப்பை கொண்டு அறிய முடிந்தது…
பித்தளையில் பளபளத்த பெயரை பார்த்தபடி உள்ளே நுழைந்தனர் ப்ரவாவும் மதுவும்! ப்ரவாவுக்கு ஏனோ நெஞ்சுக்குள் குதிரையின் குளம்படி சப்தம் கேட்டது… அறைக்குள் நுழைந்ததும் முகத்தில் அறைந்த ஏசியின் காற்றும் இதமான ரூம் ஸ்ப்ரேயும் பதட்டத்தை குறைப்பதற்கு பதிலாக மேலும் அதிகமாக்க உள்ளுக்குள் தடதடத்தபடி எம்டியின் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முன் அனுமதி கடிதத்தை நீட்ட… இதமான புன்னகையோடு அதை வாங்கியவன் படித்து பிரித்தபடி இருவரையும் அமர கூறினான்…
“ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்…”
கூர்மையான கண்களும் … அழுத்தமான உதடுகளுமாக மாநிறத்தில் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்தோடு அமர்ந்திருந்தவனை விழிஎடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ப்ரவலிகா… அவன் என்ன கூற போகிறான் என்பதை உள்வாங்க காத்து கொண்டிருந்தாள்…
“ஓகே கேர்ள்ஸ்… இன்னைக்கே ஜாயின் பண்ணிக்கறீங்களா ஆர்?…”எம்பிபிஎஸ் முடித்து பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி எடுக்க இருவரும் அப்ளை செய்திருந்தனர்…
“எஸ்… சியூர் சர்…”சட்டென கூறிய மதுவை பார்த்து சிரித்தான் அவன்…
“இந்த சுறுசுறுப்பு ரொம்ப முக்கியம் தான்… ஆனா என்னை சர்ன்னு சொல்ல வேண்டாம்… பி கேசுவல்…”புன்னகையின் இடையில் கூறவும்… கதவை தட்டிவிட்டு அவன் வரவும் சரியாக இருக்க…
அவன் விஷ்வஜித்!
“வா விஷ்வா…”என்று அவனை அழைத்தவன் இவர்கள் புறமாக திரும்பி…”கேர்ள்ஸ்… திஸ் இஸ் விஷ்வா… நியுரோ சர்ஜன் அண்ட் ஓன் ஆப் தி டைரக்டர் ஆப் திஸ் ஹாஸ்பிடல்…”என்று கூற… இருவரும் திரும்பி சிநேகபூர்வமான புன்னகையை சிந்தி வைக்க…
“வெல்கம் லேடீஸ்…”என்று கூறி பேச்சை துவங்க… செல்பேசி அவசரமாக அழைத்தது!
“எஸ்… ஐ ல் கம்…”அவசர சிகிச்சைக்காக அழைக்கப்பட… விஷ்வா ஜீவாவை நோக்கி…
“அர்ஜென்ட் ஆக்சிடென்ட் கேஸ் ஜீவா… இவங்க ரெண்டு பேருமே வந்து அசிஸ்ட் பண்ணட்டும்…”என்று கூறிவிட்டு எழுந்தவன்…
“ஆனா இனிமே லாபில பப்ளிக்கா இடுப்பை கிள்றது, அடிக்கறது, கடிக்கறது எல்லாம் வேண்டாம் லேடீஸ்… பிகாஸ் நாம பொறுப்பான டாக்டர்ஸ் யூ நோ…”சிரிக்காமல் கூற… அதை கேட்ட மதுவுக்கு முகம் சிவந்தது… ப்ரவாவுக்கும் முகம் புன்னகையில் விரிந்தது…
“எஸ் சியூர் சர்…”சங்கடமாக மது கூற…
“கால் மீ விஷ்வா… இங்க யாரையுமே சர்ன்னு கூப்பிட மாட்டாங்க… இன்க்ளுடிங் ஜீவா… ஒன்லி பை நேம்… ஓகே…”என்றுபுன்னகையோடு முடிக்க…
“ஓகே விஷ்வா…”என்ற மது அவனது அவசரத்தை புரிந்து கொண்டு எழுந்து கொள்ள… ஜீவாவும் எழுந்து மரியாதை நிமித்தமாக…
“ஆல் தி பெஸ்ட்…”என்று கை கொடுக்க… மது இயல்பாக புன்னகைத்தபடி கை கொடுக்க … ப்ரவாவோ கைகளை குவித்து நன்றி தெரிவிக்க… அவனது முகம் சற்று சுருங்கி மீண்டது…
“யூ ஆர் ப்ரவலிகா… ரைட்?”என்றவன்…”ஹேன்ட்ஷேக் செய்றது தப்பு கிடையாது… டோன்ட் டூ லைக் திஸ்…”சற்று அழுத்தமாக கூற… ப்ரவாவின் இமைக்குடைகள் தாழ்ந்தது!
“ஓகே… ச… ஜீவா சர்…”திணறிகொண்டே அவள் கூற… குறும்புப்பார்வை பார்த்தவனை எதிர்நோக்க முடியாமல் தலை மேலும் தாழ…
“பழகிக்குவா ஜீவா…”மது சங்கடமாக கூற… அவளை பார்த்து சிரித்தவன்…
“நம்ம ப்ரோபஷனுக்கு இந்த ஆட்டிடுட் சரி வராது… அவங்க சேஞ்ச் ஆகிக்கனும்…”என்று கூறிவிட்டு…”ஓகே… சீக்கிரம்… கம் டு எமெர்ஜென்சி வார்ட்…”என்றவன் விஷ்வாவை அழைத்து கொண்டு வெளியேற… இருவரும் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்த ப்ரவாவை முதுகில் தட்டி கொடுத்தாள் மது… அவளது மனநிலை புரிந்து!
பார்வையில் புள்ளியாகி போன விஷ்வாவை கண்களில் நீரோடு பார்த்து கொண்டிருந்தாள் ப்ரவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!