IMIA5

IMIA5

அத்தியாயம் ஐந்து
பரபரப்பாக ஓடி வந்தான் சின்னவன்!
“மாமா… ரேக்ளா ரேஸ்ஸுக்கு போலாமா?” அவசரமாக அவன் கேட்க… தென்னந்தோப்பில் கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த தம்பி மாமாவும் பரபரப்பானான்…
“எங்கடா நடக்குது?” ஆர்வமாக கேட்க,
“ஆனைமலை ரோட்டுல மாமா…” பதில் கூறினான் சிறுவன்.
“அப்படியா? சூப்பர்… இரு வர்றேன்…” என்றவன், நிழலில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு வர, இருவருமாக ஆனைமலை ரோட்டை நோக்கி சென்றனர்.
கூடியிருந்த கூட்டத்தில் கலந்த இருவருக்கும் வீட்டை பற்றி மறந்தே போனது. புழுதி கிளப்பியபடி மாடுகளை விரட்டியவர்களை கைதட்டி ஆராவாரம் செய்து இருவரும் சந்தோஷமாக ரேக்ளா ரேசை விசில் சப்தத்தோடு ரசித்து விட்டு வர… அந்த சிறுவனின் வீட்டின் முன் நின்றிருந்த தன் தந்தையின் காரை பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினான்…
“டேய் அப்பா வந்துருக்காங்கடா…” என்றவனின் வியப்பு சிறியவனுக்கும் தொற்றிக் கொண்டது.
“ஆமா… அப்படீன்னா இனிமே சண்டையெல்லாம் இல்லதான மாமா?” ஆசையாக கேட்டவனை இவனுமே ஆர்வமாக பார்த்தான்.
“அப்படியாதான் இருக்கும்…” என்றவனுக்கும் உள்ளுர குதூகலமாக இருந்தது.
இரு வீட்டிற்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லையென்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்த அவனுக்கு மனம் தன்னோடு விளையாடும் அந்த உறவுகளுக்காக தவித்தது… விடுமுறையின் போது வரும்போதெல்லாம் தன்னோடு சேர்ந்து கொண்டு ஊரை இரண்டாக்கும் தன் இளம் மச்சினனையும் பாப்பியையும் குட்டி தங்கையையும் விட்டு விட முடியாமல் அவன் குழந்தை மனம் தவித்தது… எப்படி இருந்தாலும் பதினோரு வயது பாலகன் தானே அவனும்!
இப்போது தந்தையின் கார் அங்கு நின்று கொண்டிருந்ததால் அனைத்தும் சரியாகிவிட்டது என்று எண்ணிக்கொண்டு மகிழ்ந்தான்… அதை தன்னுடன் இருந்த அந்த சிறுவனிடமும் கூறி சந்தோஷித்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
வெளியே தெருவை தாண்டி கேட்டுக் கொண்டிருந்தது வீட்டுக்குள் நடந்து கொண்டிருந்த யுத்தம். கண்டும் காணாமல் போக அது நகரமா என்ன? சிறிய கிராமம். சுற்றிலும் நான்கு நான்கு தெரு மட்டுமே இருக்கும் சிறிய கிராமம். அங்கு ஒரு வீட்டில் தும்மினால் ஊர் கோடிக்கும் கேட்டு விடும். அங்கு இது போன்ற குடும்ப சண்டைகளை ரகசியமாக நிகழ்த்தி விட முடியுமா என்ன? முணுக் என்பதற்குள் வீட்டின் வெளியே ஊர் கூடி விடாதா? ஆனால் சிறியவனின் அப்பத்தாவின் மேல் ஊருக்கே இருந்த பயம் அவர்களை கூட விடாமல் தடுத்தது. அதிலும் அப்போது நடந்தது அவ்வளவு சாதரணமா என்ன?
ஆங்காங்கே தலையை மட்டும் நீட்டி வீட்டை பார்வையிட்டுக் கொண்டு தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தவர்களை வித்தியாசமாக பார்த்தான் பெரியவன்.
“வீட்டு மானத்தை வாங்கிட்டு போனாளே உன் தங்கச்சி அப்போ தெரியலையா பிள்ளைங்க ரெண்டும் கஷ்டப்ப்படும்ன்னு… இப்போ தான் தெரியுதா?”
உச்சஸ்தாயில் ஒலித்து கொண்டிருந்தது அந்த சிறுவனின் அப்பத்தாவின் குரல்…
“நடந்து முடிஞ்சு போனதை மாற்ற முடியதுங்கம்மா… அதுக்காக என் தங்கச்சி பசங்க கிட்ட அந்த கோபத்தை காட்ட கூடாதேம்மா…” சற்று தணிந்து தான் பேசினார் அவனது தந்தையும்…
“அவ செய்துட்டு போனதுக்கு அந்த பசங்களை இந்தளவு பார்க்கறதே பெரிய விஷயம்… பசங்களை மட்டும் என் மகனுக்கு தான்…” என்று ஆரம்பித்து கடுமையான வார்த்தைகளை கூற பார்த்த பெரியவரை…
“ஆத்தா…” என்ற அவரது சிறிய மகனின் ரவுத்திரம் நிறுத்த வைத்தது.
“நான் இருக்கப்பவே இப்படி பேசறீங்களே… யாரும் இல்லாதப்ப என்னன்னென்ன வார்த்தை சொல்லிருப்பீங்க… ரெண்டும் பிஞ்சு குழந்தைங்கம்மா… அதுங்க மனசு என்ன பாடு படும்… அதை கொஞ்சமாவது நினைச்சு பார்க்க கூடாதா நீங்க?” எப்படியாவது அவருக்கு புரிய வைத்து விடும் நோக்கத்தில் அவர் பேச, அவரை முறைத்த பெரியவர்,
“ஊர்ல தலைகாட்ட முடியல… என் முன்னாடி நின்னு பேச கூட யோசிச்ச பயலுகல்லாம் என்னை கேள்வி கேக்கறானுங்க… ஊர் சிரிக்குது… அந்த மேனாமினுக்கி பண்ணி வெச்சுட்டு போனதை உன்னை மாதிரியே நானும் அப்படியே விட்டுடனும்ன்னு நினைக்கிறியா?” என்ற தாயை பரிதாபமாக பார்த்தார் அவர்.
போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டவளை தான் பிடித்து வைக்க முடியுமா? அது நடக்கும் காரியமா? அப்படியே நடந்தாலும் அது தனக்கு எவ்வளவு கேவலம். அதற்கு நாண்டு கொண்டு விடலாமே!
“போய்ட்டா… என்னை பிடிக்கலைன்னு போனவளை பத்தி இவ்வளவு பேசணுமா ஆத்தா?” உண்மையில் அவரது ஓடிப்போன மனைவியை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர் தீக்குளித்துக் கொண்டிருந்தார். அவரது கௌரவம் கேள்விக்குறியானது. இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த மரியாதையை ஒரே நாளில் அடித்து துவைத்து அடிமட்டத்துக்கு கொண்டு சென்று, காதலனுடன் சென்றும் விட்டாள் மனைவி. ஆனால் அவளோடு வாழ்ந்த வாழ்க்கை பொய் இல்லையே. அந்த வாழ்க்கைக்கு சான்றாக இரண்டு இளம் குருத்துக்கள் இருக்கின்றதே!
அந்த குருத்துக்களையும் பேசி நோகடிக்கும் தாயை என்ன சொல்லி சமாதானம் செய்ய? இப்போதுள்ள நிலையில் அவரது தயவு மிகவும் அவசியம் எனும் போது என்ன சொல்லி அவரை எதிர்ப்பது?
“போனவ சும்மா போகலையே… வீட்டு மானத்தை சந்தி சிரிக்க வெச்சுட்டுல்ல போயிருக்கா… அந்த அசிங்கமெல்லாம் உனக்கு எங்க தெரியும்? சூடு சொரணை உள்ளவனுக்குத்தான் அதெல்லாம்…” என்றவரை முகமும் மனமும் இரு சேர இறுகிப் பார்த்தார் அவர்.
தாய் சொல்வதும் உண்மைதானே. அந்த சூடும் சொரணையும் இருந்திருந்தால், அந்த மழை நாளில் அந்த அசிங்கத்தை பார்த்த அன்றே, ஒன்று அவளை கொன்றிருக்க வேண்டும்… இல்லையென்றால் தான் தூக்கி மாட்டியிருக்க வேண்டும். இரண்டுமே நடக்காமல் போனதில் தாய்க்கு வெகு வருத்தம் போல என்று நினைத்துக் கொண்டார்.
தன்னிடம் இத்தனை வருடமாக வாழ்ந்த மனைவிக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதை புரிந்து கொண்ட கணம் மிகவும் கனமானது. கடக்க முடியா அந்த நிமிடங்களில் ஆயிரம் முறை இறந்து பிழைத்தவரிடம் சூடு இருக்கிறதா சொரணை இருக்கிறதா என்று கேட்டால் என்ன செய்ய முடியும். வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ளவரைக்குமான வெகுவான அடியாக வாங்கியிருந்தார்.
அவரிடம் வெடித்த அவரது தாய், பின் திரும்பி ,
“இங்க பாரு சக்திவேல்… உன் தங்கச்சி பசங்களை கூட்டிட்டு போறதுன்னா போகலாம்…  நான் என்ன பேசணும் பேசக்கூடாதுன்னு நீ சொல்ல தேவையில்லை… ஓடுகாலி பெத்த புள்ளைங்களுக்கு நான் சவரட்னை செய்யணும்ன்னு அவசியம் இல்லை… மொதல்ல கிளம்பு நீ…” யார் என்ன நினைப்பார்கள் என்று சற்றும் நினைக்காமல் அவர் வார்த்தைகளை அள்ளி விட… பெரியவர்களின் கோபத்தை பார்த்து ஒடுங்கி நின்ற அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்து மனம் வெந்து போனார் சக்திவேல்…
“ஆத்தா… அது என் புள்ளைங்க… நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கீங்க… என் பிள்ளைங்களை யாருக்கும் தர முடியாது…” சுப்பிரமணி அவரது வாழ்கையிலேயே முதன்முறையாக தாயை எதிர்த்து வாதம் செய்ய… அவரை நெற்றி கண்ணை கொண்டு முறைப்பது போல முறைத்தார் மகாலட்சுமி…
“நான் சொன்னா சொன்னதுதான்… இங்க நான் சொன்னதுதான் சட்டம்… நீ மாத்தறதா இருந்தா வெளிய போய்க்க… உன் பொண்டாட்டியால நான் தலை குனிஞ்சது போதும்…” சிறிதும் இரக்கமில்லாமல் முடிக்க… நடுங்கி கொண்டு நின்ற விஷ்வாவை அணைத்து கொண்டார் சக்திவேல்…
அமைதியாக பார்த்து கொண்டிருந்த செந்தில்நாதனோ…
“மச்சான்… ஆத்தா பேசறதை கேட்டெல்லாம் நீங்க இப்படி ஒரு முடிவுக்கு வராதீங்க… சுப்பிரமணி பொண்டாட்டி ஓடிப் போனது எங்களுக்கு ரொம்ப தலைகுனிவான விஷயம் தான்… ஆனா பிள்ளைங்க எங்க பொறுப்பு… மூணு பேருமே ஒரு வயித்துல பொறந்த பொறப்பா தான் பழகுதுங்க… ஆத்தாவை பத்தி தான் உங்களுக்கும் தெரியுமே… விட்டுடுங்க… கொஞ்ச நாள் போனா சாரியாகிக்கும்… காயத்ரி மூணு பேரையுமே தன் புள்ளைங்களாத்தான் பார்க்கறா… அதை மட்டும் பாருங்க…”
செந்தில்நாதன் தன்னால் முடிந்த அளவு சமாதானப்படுத்தி விட வேண்டுமென தவிப்பில் சக்திவேலிடம் பேச… அவருக்கு அநாதை போல நின்று கொண்டிருந்த தங்கை மகனை பார்த்து விழியில் நீர் கோர்த்தது… விஷ்வாவை கண்ணால் அழைக்க… பாசத்தை அளவில்லாமல் பொழியும் மாமனை அவசரமாக வந்து கட்டி கொண்டான்!
“இல்ல பெரிய மாப்பிள்ளை… இப்போதைக்கு நான் பிள்ளைங்களை கூட்டிகிட்டு போறேன்… கொஞ்ச நாள் போகட்டும்…” இரண்டு வயது குழந்தையையும் தூக்கி கொள்ள… காயத்ரிக்கு பதைத்தது…
“அண்ணா… மதிய என்கிட்டவே விடுங்கண்ணா… குட்டி நான் இல்லாம இருக்க மாட்டா…” பரிதவிப்பாக கெஞ்ச…
“இல்லம்மா… குழந்தைங்களை இங்க விட்டுட்டு போனா அங்க என்னால நிம்மதியா சாப்பிட கூட முடியாது… கொஞ்ச நாள் போகட்டும்மா…” என்று இருவரையும் அழைத்து கொள்ள…
“அண்ணா…” என்று அழுகையோடு விஷ்வாவை கட்டி கொண்டாள் பாப்பி…
“அண்ணா எனக்கு வேணும்… என் தங்கச்சிய நான் விட மாட்டேன்…” அழுகையில் கரைந்த அந்த இளம் மொட்டின் கண்ணீர் யாரை கரைத்ததோ இல்லையோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த தம்பி மாமாவை கரைத்தது…
 விஷ்வாவும் மதியும் தங்களோடு வருகிறார்கள் என்பதில் மகிழ்ந்தவன் பாப்பி அழவும் அவனுக்குமே அழுகை வந்தது… அவளையும் அழைத்து கொண்டு போக முடியாதா என்று மனம் வெதும்பினான்… அதே நிலையில் அழுது கொண்டிருந்த இன்னொரு ஜீவன் விஷ்வா தான்… குட்டி தங்கையின் அழுகை அவனையும் அழுகையில் கரைத்தது…
“இல்லடி பாப்பி… சீக்கிரம் வந்துடுவேன்… அப்பத்தா கோபம் போனவுடனே நானும் குட்டி பாப்பியும் வந்துடுவோம்…” பெரிய மனிதனாக சமாதானம் செய்ய… அந்த காட்சி சக்திவேலின் கண்களிலும் செந்தில்நாதன் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது… சுப்பிரமணி இறுகி இருந்தார்… அதுவே அவரது தாயிடம் பேசிய கடைசி வார்தைகளாகுமென யாரும் அறியவில்லை…
தன்னை பிடிக்கவில்லையென இரண்டு குழந்தைகளான பின் முன்னாள் காதலனோடு சென்று விட்ட மனைவியை அவர் நினைத்தால் கண்டுபிடித்து அழைத்து வந்துவிடலாம் தான்… ஆனால் அவரது தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை… பார்ப்பதற்கு சுமாராக வேண்டுமானால் அவர் தோற்றம் இருக்கலாம் ஆனால் அதனுள் இருந்த மென்மையான மனதை படிக்க தெரியாமல் போய்விட்ட மனைவி அவருக்கு அருவருப்பை கொடுத்தாள்…
ஆனால் குழந்தைகள் அப்படி அல்லவே… தன்னுடைய ரத்தத்தில் உருவானதென்று ஒரு தந்தையால் உணர முடியாததா? அதை தன் தாய் கேவலப்படுத்தி கூறியபோது இறுகியவரால் இயல்பு நிலைக்கு உடனே திரும்ப முடியவில்லை… ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்திருந்தது… ஒன்றுமே பேசாமல் நின்று கொண்டிருந்த தனது தந்தையை ஏக்கமாக பார்த்தபடியே தாய்மாமாவுடன் கிளம்பினான் விஷ்வா தனது குட்டி தங்கையை அழைத்துக்கொண்டு! அந்த ஏக்கமே தந்தை மேல் வெறுப்பாக மாறிவிடும் என்பதை அறியாமல்!
கண்ணீர் வழிந்த பாப்பியின் கண்களை பார்த்தபடியே தன் தந்தையுடன் கிளம்பினான் தம்பிமாமா… ஜீவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!