Imk – 15

Imk – 15

16

மதியழகி

ஜெஸிக்கா எப்போது தன் அறையை விட்டு வெளியேறினாள் என்பதைக் கூட கவனிக்காத நிலையில் அந்த ஓவியத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மா!

எப்படி அந்த ஓவியம் தன் விழிகளுக்கு மதியழகியாக தெரிகிறது என்ற சூட்சுமம் இன்னும் அவனுக்கு விளங்கவில்லை. ஒருவேளை தான் பார்த்து வரைந்த சிலையின் முக அமைப்பு அவள் முகத்தோடு ஒத்துப் போகிறதோ என்று அந்த சிலையின் படத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டான். ஆனால் அப்படியொன்றும் அவன் பார்வைக்குப் புலப்படவில்லை.

அவன் வரைந்த ஓவியத்திலிருக்கும் முகம்தான் அவளைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.  தவறு எங்கே நேர்ந்திருக்கும் என்றவாறு அவன் தன் ஓவியத்தையும் சிலைவடிவையும் ஆழமாய் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. அதேநேரம் அந்த சிலையின் வடிவமைப்பு அவனைத் துணுக்குற செய்தது.

பெண்மையின் அங்கங்களின்  அழகுகளை அந்த சிற்பி தேர்ந்த கலை நுணுக்கத்தோடு செதுக்கியிருந்தான்.  கலைநயத்தோடு பார்க்க அது அழகின் உச்சம். ஆனால் அந்த இடத்தில மதியழகியை வைத்துப் பார்ப்பது என்னவோ அவனுக்கு சரியாய் படவில்லை. அது தவறும் கூட என்று அவன் கண்ணியம் இடித்துரைக்க, அந்த ஓவியத்தை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அழிப்பானை மும்முரமாய் தேடிக் கொண்டிருந்தான்.

அப்போது பார்த்து அவனின் அறைக் கதவைத் திறந்து நுழைந்தான் நந்தக்குமார்!

சிம்மா அவசர அவசரமாய் அந்த ஓவியத்தைத் தன் தோழன் கண்ணில் படாவண்ணம் சுருட்டி எடுத்துவைத்தான். நந்தக்குமார் உள்ளே நுழைந்ததும்,

“ஏ சிம்மா… ஏதோ சிலையை வரைஞ்சிருக்கியாம்… எங்க அந்த ஓவியத்தை காமி பார்க்கலாம்… என்னவோ அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு பயங்கரமா புகழ்ந்து தள்ளிட்டு இருக்கா என் பொண்டாட்டி!” என்று சொல்ல, சிம்மா உடனே அந்த மேகஸினை நீட்டினான்.

நந்து அதனை உற்றுப் பார்த்துவிட்டு, “இது இல்லடா… நீ வரைஞ்சதை காமி” என்று கேட்க அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“இல்ல… அது வந்து… நான் நினைச்ச மாதிரி அந்த ஓவியம் வரல… அதான் அழிச்சிட்டேன்” என்று அப்பட்டமாய் பொய்யுரைத்தான்.

சிம்மாவுக்கேப் புரியவில்லை. எதற்காய் அவன் உள்ளம் இந்தளவு படபடத்துக் கொள்கிறது என்று!

நந்து நண்பனைப் பார்த்து, “அப்படியா? அப்புறம்… அவ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டிருந்தா” என்று வினவ,

“ஜெஸ்சியை பத்தித் தெரியாதா உனக்கு? நான் சுமாரா வரைஞ்சாலே அவ சூப்பரா இருக்குன்னுதான் சொல்லுவா” என்றான்.

“அது சரிதான்… ஆனா நீ சுமாரா வரைவேன்னு எல்லாம் கதைவிடாதே” என்று நந்து நண்பனை பார்த்துச் சொல்ல, “சரி சரி… எனக்கு பசிக்குது சாப்பிடலாம்” என்று சிம்மா பேச்சை மாற்றினான்.

“ஆமா எனக்கும்” என்று நந்து சொல்ல சிம்மா அந்த ஓவியத்தை தலையணைக்கு கீழாய் தள்ளிவிட்டு நண்பனோடு சென்றான். ஆனாலும் அவன் சிந்தனை… ஏன் தான் மதியழகியின் முகத்தை வரைந்தோம் என்ற கேள்வியை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இதில் ஜெஸ்சி வேறு…அவன்  உணவு உண்டு முடிக்கும்வரை அந்த ஓவியத்தைப் பற்றிப் பேசியே அவனைக் கடுப்பேற்றியிருந்தாள்.

அதற்காகவே விரைவாய் சிம்மா தன் இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினான். முதலில் அவன் பார்வையில் விழுந்தது அந்த ஓவியத்தின் தாள்தான். அதனைப் பிரித்துப் பார்க்க விரும்பாமல் மீண்டும் அதனை இடமாற்றியவனுக்கு ஒருவித அச்சம்.

என்னதான் மதியழகி தன் மாமன் மகளாகவே இருந்தாலும் அவளை அப்படி ஒரு ஓவியமாய் தான் வரைந்திருக்கக் கூடாது என்று அவன் மனம் சாடியது. அதேநேரம் வேறு யாரும் அவளை இப்படி ஒரு தோற்ற நிலையில் பார்த்துவிடக் கூடாது என்ற உள்ளூர படபடத்தும் கொண்டது.

சிம்மா மீண்டும் அந்த ஓவியத்தைக் கையிலேந்திவிட்டு அழிப்பானை தேடிக் கண்டெடுத்தான். அவன் அதனை அழித்துவிடலாம் என்று முனைந்த போது அவன் மனம் ஏனோ அதற்கு ஒத்துழைக்கவில்லை. இத்தனை அழகான கலையம்சம் பொருந்திய ஓவியத்தை அழிப்பதா? அவனுக்கு மனம் வரவில்லை. அதேநேரம் அவளை அப்படி பார்க்கவும் அவன் விரும்பவில்லை.

சிலநொடிகள் யோசித்தவன்  பென்சிலைக் கையிலெடுத்தான். தீவிரமாய் அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தான். பின் அதன் மீது சிற்சில மாற்றங்கள் செய்தவன் அந்த ஓவியத்திலிருந்தவளுக்கு அழகாய்  வஸ்திரம் தரித்தான். அழகுப் பதுமையாய் காட்சியளித்தவள் இப்போது அவன் வடித்த உடையில் புதுப்பொலிவு பெற்று பேரழகியாகக் காட்சியளித்தாள்.

அவன் செய்த அந்த மாற்றங்கள் எந்தவிதத்திலும் அந்தப் பெண்ணவளின் வடிவமைப்பைப் பாதித்துவிடவில்லை என்பதே வியப்பிலும் வியப்பு! மதியழகி நடன பாவங்களோடு உயிரோட்டமாய் அவன் கண்முன்னே நின்றது போலவே இருந்தது.

அவன் மனம் பின்னோக்கி அவளின் நினைவைத் தேடிக் கொணர்ந்தது.

வெளியே இருந்து நேராய் தன் அறைக்குள் செல்ல இருந்தவன் அப்படியே தேங்கி வாசலிலேயே நின்றான்.

‘உன்னைக் காணாது நான் இன்று  நான் இல்லையே

விதையில்லாமல் வேர் இல்லையே!’

அவன் அறைக்கு அருகில் உள்ள அவன் தங்கையின் அறையில் இந்தப் பாடலின் நாதத்தோடு சலங்கை ஒலியும் சேர்ந்து அவன் செவிகளை இதமாய் தீண்ட, தன்னையறியாமல் அவன் கால்கள் அவ்விடம் சென்று சேர்ந்தன.

அந்த பெரிய அறையில் உள்ள ஸ்பீக்கர் இந்த பாடலை ஒலித்துக் கொண்டிருக்க,  தமிழச்சியும் முகிலும் மதியழகியின் நடனத்தை ஆவென்று வாய்பிளந்து ஆச்சர்யத்தோடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

மதியழகியின் பாதங்கள் நடனமாட… அவள் விழிகளும் முகமும் பாவமாய் அந்த பாடலின் உணர்வுகளை அதிஅற்புதமாய் பிரதிபலித்தது. அதனைக் கண்டுகளிக்கத் தொடங்கிய சிம்மாவின் கால்களும் கூட அந்த இடம்விட்டு நகர மனமில்லாமல் அவள் நாட்டியத்தைக் காணும் ஆர்வத்தில் கட்டுண்டன.

அவளின் நடன அசைவுகள் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்க, ஏக்கம், காதல், தாபம், நாணம் என பல்வேறு உணர்வுகளையும் அவளின் முகபாவங்கள் மாறிமாறிக் காட்டிய விதத்தில் அவன் மதியையும் அப்போதே மயக்கி இருந்தாள் அந்த மதியழகி!

அவள் நடனமாடி மூச்சுவாங்கி நிற்க முகிலும் தமிழச்சியும் கைதட்டி ஆரவாரிக்க சிம்மாவுக்கும் அவளைப் பாராட்ட வேண்டும் என்றிருந்தது.

தமிழச்சி அப்போது மதியிடம், “ஏ அழகி! நீ உங்க அவரை நினைச்சுதானே இந்த பாட்டுக்கு ஆடின… எனக்கு தெரியும்டி” என்று அவளைச் சீண்ட, இல்லையென்று அவள் உதடுகள் மறுத்த போதும் விழிகள் வெட்கத்தில் நர்த்தனமாடியது.

அந்த வார்த்தைகள் ஏனோ சிம்மாவின் மனதை சஞ்சலப்படுத்தியது. அதன் பின் அவளைப் பாராட்டும் எண்ணம் விலகி… அந்த அவர் யாரென்று கேள்வி மேலெழும்ப மௌனமாய் தன் அறைக்குள் நுழைந்துவிட்டான். இன்றும் அந்தக் கேள்வி அவன் மன அமைதியைக் குலைக்கிறது.

அந்த ஓவியத்தைப் பார்க்கப் பார்க்க மனமெல்லாம் ஏதோ செய்தது. இப்படியான சூழ்நிலையில் இந்த எண்ணமெல்லாம் அவசியம்தானா என அவன் மூளை இடித்துரைக்க, அவளின் அந்த ஓவியத்தை தன் கண்களில் பட்டுவிடாதவாறு அவன் பேகிற்குள் உள்ள ஒரு ஃபைலின் அடியில் நுழைத்தான்.

அவளைப் பற்றிய எண்ணத்தை முழுவதுமாய் தவிர்க்க எண்ணி அவன் மூளையும்  மனதும் போராடிய நிலையில் இறுதியாய் வென்றது என்னவோ அவன் மூளைதான். கடமை முந்திக் கொண்டு காதல் இரண்டாம் பட்ச நிலைக்கு சென்றது.  அவன் விழிகளை உறக்கம் தழுவிக் கொண்டது. மனம் அமைதிபெற்றது.

ஆனால் அத்தகைய அமைதி நிலையை மதியழகியால் எட்ட முடியவில்லை. விடிந்து சிலநோடிகளே கடந்த நிலையில் அவள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். சூரியனின் செந்நிற கதிர்கள் வானவளை செந்தூரமாய் மாற்றி இருந்தது. அந்த ரசனை மிகு அழகை கண்டுகளிக்கக் கூட முடியாதளவுக்கு அவள் நினைப்பு முழுக்க அவன்… அவன்… அவன் மட்டுமே. அவனையன்றி வேறு சிந்தனையே இல்லை.

“உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே

விதையில்லாமல் வேர் இல்லையே” அவள் செவிகளில் மாட்டியிருந்த ஹெட் போனில் தீட்சண்யமாய் ஒலித்த அந்தப் பாடல் அவள் உணர்வுகளை அணுஅணுவாய் விவரிக்க… உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தாள் அவன் எங்கே என்ற தவிப்போடு!

மாடியில் தன் அறையில் நின்று கொண்டு ரவி மகளைப் பார்த்து, “என்ன அனு! மதி இவ்வளவு காலையில எழுந்துட்டா?” என்று தன் மனைவி அருந்ததியிடம் கேட்டார்.

“அவ எங்க தூங்குனா… நீங்க எழுதுட்டாளான்னு கேட்கறதுக்கு?” என்று அவர் கடுப்பாய் கணவனுக்குப் பதில் கொடுக்க,

“என்ன அனு சொல்ற?” என்று புரியாமல் கேட்டார் ரவி!

“ஹ்ம்ம்… நைட்டு எழுந்து பார்த்தா பால்கனில உட்கார்ந்துகிட்டு பாட்டு கேட்டுட்டு இருக்கா… வந்து தூங்குடின்னு சொன்னா தூக்கம் வரலங்கறா… அப்புறம் மிரட்டி படுக்க சொன்னேன்… புரண்டு புரண்டு படுக்குறாளே ஒழிய தூங்க மாட்டேங்குறா… இப்ப என்னடான்னா விடிஞ்சும் விடியாததுமா எழுந்து வாக்கிங் போயிட்டு இருக்கா… அவ நடவடிக்கையே எனக்கு ஒன்னும் சரியா படல” என்றவர் கவலையுற,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… அவ சொன்ன மாதிரி தூக்கம் வந்திருக்காது… நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காதே… சொல்லிட்டேன்” என்று ரவி திட்டவட்டமாய் சொல்ல அருந்ததி முகத்தில் பெரிதாய் எந்தவித மாற்றமும் இல்லை.

“அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா ரவி?” என்று அவர் நேரடியாகவே கணவனைக் கேட்க ரவி சிலநொடிகள் யோசித்துவிட்டு, “இப்ப இதைப் பத்தி பேச வேண்டாமே! அக்கா குணமாகட்டும்” என்றான்.

அருந்ததி வேதனையோடு, “நீங்க சொல்ற மாதிரி உங்க அக்கா நல்லபடியா குணமாகட்டும்… ஆனா இனிமே சிம்மாவுக்கு மதியழகியைப் பேச வேண்டாம்” என்றவர் தெளிவோடு  உரைக்க ரவி உக்கிரமான பார்வையோடு, “ஏன் பேசக் கூடாது?” என்று அழுத்தமாய் கேட்டார்.

“ஹ்ம்ம்… பெத்த அம்மாவுக்கு இப்படி இருக்கும் போது… பார்க்கக் கூட வராத… ஒருத்தனுக்கா என் பொண்ணைக் கட்டி வைக்க சொல்லுறீங்க” அருந்ததி முகத்தில் அத்தனை வெறுப்பு!

“வாயை மூடு அனு… சிம்மா எதாச்சும் முக்கியமான வேலையில மாட்டிட்டு இருப்பான்”

“ஆமா ஆமா… முக்கியமான வேலை… என்ன? கோடி கோடியா டர்ன் ஓவர் ஆகற கம்பெனிக்கு எம்.டியா இருக்கானா? தமிழ் படிச்சிட்டு எதோ ஆராய்ச்சின்னு கோவில் கோவிலா சுத்திட்டு இருக்கான்… சரி ஏதோ சொத்து பத்து எல்லாம் இருக்கேன்னு நானும் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல… இப்ப என்னடான்னா ஆள் எங்கன்னே தெரியல”

ரவியின் கோபம் கட்டுகடங்காமல் போய் கொண்டிருக்க, “அனு போதும் நிறுத்து” என்று அவர் குரலுயர்த்தினார்.

“எப்படியோ போங்க… ஆனா நானும் மதியும் இன்னைக்கு புறப்படுறோம்… நீங்க உங்க அக்காவுக்கு சரியான பிறகு கிளம்பி வாங்க” என்று சொல்லி முடிக்க,

“மதி உன் கூட வந்தா… கூட்டிட்டு போ” என்று ரவி அலட்சியமாய் உரைத்தார்.

“வருவா… வந்துதான் ஆகணும்… உங்க அக்கா பொண்ணு வாழ்கை மாதிரி என் பொண்ணு வாழ்க்கையும் சரியில்லாம போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு” என்று அருந்ததி சொன்ன மறுகணம், “அனு” என்று ரவி கத்த அப்போது அந்த அறை வழியே நடந்து சென்று கொண்டிருந்த தமிழச்சி தன் மாமாவின் குரல் கேட்டு மிரண்டு நின்றுவிட்டாள். அவர்கள் சம்பாஷணை மேலும் தொடர்ந்தது.

“அடிங்க ரவி… ஆனா நான் சொன்னதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லிட்டு அடிங்க… என்  அக்கா பையன் ஐஏஎஸ் முடிச்சிருக்கான்…  உங்க அக்கா பொண்ணுக்கு அவனை பேசலாமுன்னு சொன்னேன்… என் பேச்சை கேட்டீங்களா… அவளுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லி… அந்த பையனுக்குக் கட்டி வைச்சீங்க… இப்ப அவ ஒத்தையா நிற்கிறா பாருங்க”

“அனு போதும் இதோட நிறுத்திக்கோ… தமிழச்சியைப் பத்தி இன்னும் ஒத்த வார்த்தை பேசுன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்றவர் மேலும்,

“கிளம்பணும்னு சொன்ன இல்ல நீ… இன்னைக்கே டிக்கெட் புக் பண்ணித் தரேன்… ஒழுங்கா உன் பொண்ணை கூட்டிகிட்டு ஊருக்கு போய் சேர்ற வழியப் பாரு” என்றவன் பேசி முடிப்பதற்கு முன்னதாகவே தமிழச்சி அந்த இடம் விட்டு அகன்றிருந்தாள். அருந்ததியின் வார்த்தைகள் ஈட்டியாய் அவள் இதயத்தில் பாய்ந்திருந்தது.

வீட்டிற்கு வெளியே வந்தவள் தோட்டத்தில் மதி நடந்து கொண்டிருப்பதை பார்த்து முகத்தை துடைத்துக் கொண்டு அவள் அருகில் சென்றாள்.

ஆனால் மதி இவள் வந்து நின்றதைக் கூட உணரவில்லை. தமிழச்சி அவள் காதிலிருந்த ஹெட் போனை பிடுங்கிவிட… அப்போதே அவள் பார்வை இவளைப் பார்த்தது.

“குட் மார்னிங்!” என்று மதி முகம் மலர, தமிழச்சியின் முகத்தில் துளி கூடப் புன்னகையில்லை. அதோடு அவள் விழிகள் இரண்டும் வீங்கி சிவந்திருக்க,

“என்னடி? முகமெல்லாம் அழுத மாதிரி இருக்கு” என்று மதி தமிழச்சியின் கன்னத்தைத் தழுவ அவள் கரத்தைத் தட்டி விட்டவள், “ஆமா… அழறதுக்கு வேற எனக்கு காரணம் வேணுமாக்கும்” என்று சலிப்போடு சொல்ல,

“என்னாச்சு?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி கூர்ந்து பார்த்தாள் மதி!

“நீ மும்பைக்கு புறப்படு” என்று தமிழச்சி வெடுக்கென்று சொல்ல மதி அதிர்ந்து, “ஏன் இப்படி சொல்லுற… அதுவும் அத்தை இந்த நிலைமையில இருக்கும் போது… உஹும்… என்னால முடியாது”  என்று திட்டவட்டமாய் மறுத்தாள்.

“எல்லாம் நாங்க பாத்துக்கறோம்… நீ புறப்படுற வழியைப் பாரு” என்று தமிழச்சி சொல்லிவிட்டு மதியைத் தவிர்த்துவிட்டு திரும்பி நடக்க, “நாங்கன்னா” என்று நின்ற இடத்தில் இருந்து அதிர்ச்சியாய் கேட்டாள்.

“அப்பா நான் முகில் தேவி சித்தி சித்தப்பா ஆதிம்மா… எல்லோரும் இருக்கோம்… பார்த்துக்கறோம்” என்று சொல்லிக் கொண்டே தமிழச்சி நடந்து செல்ல மதி ஓடி வந்து அவளை வழிமறித்து, “அப்ப நான்” என்று கேட்டு விழிகள் கலங்கி நின்றாள்.

தோழியின் முகத்தைப் பார்த்த தமிழச்சி வேதனையோடு, “புரிஞ்சுக்கோ அழகி! உங்க அம்மாவுக்கு இங்க நீ இருக்கறது பிடிக்கல… மாமாகிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க… அவங்க பேசுனதெல்லாம் நான் கேட்ட வரைக்கும் சரி… அப்பவோ தாத்தாவோ கேட்டிருந்தா… இருக்கிற பிரச்சனையில இதெல்லாம்” என்று அவள் தவிப்புற, “அம்மா என்ன பேசுனாங்க?” என்று மதி அழுத்தமாய் கேட்டாள்.

“அத்தை தப்பா எதுவும் பேசல… அவங்க இடத்தில இருந்து பார்த்தா அவங்க ஆதங்கம் கோபம் எல்லாம் நியாயம்தான்… எனக்கென்ன தோணுதுன்னா… அம்மா குணமாகிற வரைக்கும் வீட்டில எந்த பிரச்சனையும் வேண்டாம்… அதனால நீ” என்று தமிழச்சி தயக்கமாய் அவளைப் பார்க்க,

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது… நான் பார்த்துக்கறேன்… இப்போதைக்கு அத்தை குணமாகனும்… அதான் முக்கியம்”  என்று மதி தீர்க்கமாய் உறைத்தாள். தமிழச்சி அவளைத் தவிப்பாய் பார்க்க மதி, “போக மாட்டேன்னா போக மாட்டேன்…” என்றுஅழுத்தமாய் சொல்ல தமிழச்சி அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள். இருவருக்குமே விழிகளில் கண்ணீர் பெருகிற்று.

சில நொடிகள் கழித்து மதியழகி, “மேடம் இன்னைக்கு ட்யூட்டிக்கு போகலையா?” என்று கேட்க

“ஹ்ம்ம்… போகணும்” என்று சலிப்போடு இழுத்தாள் தமிழச்சி!

“அப்போ கிளம்பு” என்று மதி அவளை விட்டு விலகி நின்று சொல்ல தமிழச்சியும் புறப்பட எத்தனித்து அங்கிருந்து திரும்பி நடந்தவள… பட்டென மீண்டும் தன் தோழியின் புறம் திரும்பி, “ஏ அழகி! நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே” என்று அவள் கை பிடித்து ஒதுக்கமாய் அழைத்து வந்தாள்.

“என்ன சொல்லணும்?”

“நான் நேத்து அண்ணா கிட்ட பேசினேன்” என்று தமிழச்சி சொல்லி முடித்த மறுகணம…  மதி முகம் பளீரென்று பிரகாசிக்க, “எங்க இருக்காராம்? எப்ப வருவாராம்?” என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள்.

“அதெல்லாம் ஒரு மண்ணும் சொல்லல… அப்புறம் பேசுறேன்னு போனை வைச்சிடுச்சு பக்கி” என்று இவள் நொடித்துக் கொள்ள, “அதான் அப்புறம் பேசுறேன்னு சொன்னாரு இல்ல… பேசுவாருடி” என்றாள் மதி!

“ம்ம்கும்… கிழிப்பாரு” என்று  தமிழச்சி வருத்தப்பட மதியின் முகத்தில் அத்தகைய வருத்தமில்லை. எங்கயோ அவர் நன்றாய் இருக்கிறார் என்ற செய்தியே அவளுக்கு நிறைவாய் இருந்தது.

தமிழச்சி சில நொடிகள் புலம்பித் தீர்த்துவிட்டு, “இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும்” என்று அவள் சொல்லவும், “ஓகே ஓகே சொல்லல… ஆனா திரும்பவும் அவர் ஃபோன் பண்ணா என்கிட்ட மறக்காம சொல்லு” என்று கெஞ்சலாய் கேட்க தமிழச்சியின் இதழ்கள் மலர்ந்தன.

“ஹ்ம்ம்… சொல்லத்தான் நினைக்கிறன்… சொல்லாமல் தவிக்கிறேன்… காதல் சுகமானது” என்று தமிழச்சி மதியைப் பார்த்து கேலி செய்து பாட, “சீ போடி” என்று நாணத்தோடு அந்த இடம்விட்டு மதியழகி தப்பித்தால் போதுமென ஓடிவிட்டாள்.

அந்த நொடி தமிழச்சியின் மனநிலை லேசாய் தெளிவுப் பெற்றுவிட வேலைக்குத் தயாராகி சென்றாள். அங்கே ஏடிஜிபி தயாளன் அவளைப் பத்திரிக்கை சந்திப்புக்கு அழைத்துச் சென்று விட்டார். அந்த சந்திப்பில் அவர் பத்திரிகையாளர்களிடம் ஃபிரான்சில் கிடைத்த சிலைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டவர், விரைவில் அந்த சிலைகள் தமிழகம் வந்து சேரும் என்ற நற்செய்தியை உரைத்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்கள் எப்போதும் போல் அவர்களின் எடக்குமுடக்கான கேள்விகளில் தயாளன்  மற்றும் தமிழச்சியைத் தாக்கத் தொடங்கினர்.

அதோடு சிலைக் கடத்தல் குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என்று தமிழச்சியைக் கேட்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை. சில சமாளிப்புகள் மழுப்பல்கள் என அந்த சந்திப்பு ஒருவாறு முடிவுறும் சமயத்தில்,

“மேடம்! வி வி கே உங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு அம்ரிதா ராயை கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேச்சு அடிபடுதே… உண்மையா?!” என்று கேட்டு வைக்க, தமிழச்சி அந்தக் கேள்வியைக் கேட்டவனை எரிப்பது போல் பார்த்தாள்.

“அமிர்தா ராய் கூட வி வி கே பத்தி சமீபத்தில ட்வீட் பண்ணியிருந்தாங்க” என்று அடுத்தவர் சொல்ல, “அதனாலதான் அவருக்கு எம் பி சீட் குடுத்து இருக்காங்கன்னு கட்சி வட்டார்த்துல பேசிக்கிறாங்க” என்று தொடர்ச்சியாய் அடுத்த அடுத்த பத்திரிக்கையாளர்கள் அவளை வார்த்தைகளால் தாக்க… அந்த நொடி  உச்சபட்ச கோபத்தைத் தொட்டவள்,

“ஹலோ ஹலோ… ஸ்டாப் இட்… ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க… நானும் வி வி கேவும் எப்பவோ பிரிஞ்சிட்டோம்… இப்போ எனக்கும் அவருக்கும் எந்தவித  சம்பந்தமும் இல்ல” என்றாள்.

“அப்போ அவர் அமிர்தா ராயைக் கல்யாணம்” என்று ஒருவர் மீண்டும் ஆரம்பிக்க,

“பண்ணிக்கட்டுமே… எனகென்ன?” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு அந்த பத்திரிக்கை கூட்டத்தை விலக்கிக் கொண்டு சென்றாள் அவள்.

 

error: Content is protected !!