imk-17

imk-17

18(௧௮)

சாணக்கியத்தனம்

தமிழச்சி தன் கணவனை அங்கே எதிர்பார்க்காமல் அதிர்ச்சியோடு நின்றிருக்க விக்ரம் அப்போது, “எதையுமே யோசிச்சு பண்ண மாட்டியா? எல்லாத்துலயும் உனக்கு அவசரமாடி?” என்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள்.

அப்போது அடி வாங்கிய அந்தப் பெண் வேறு கோபத்தின் உச்சத்தில் ஹிந்தியில் தாறுமாறாய் கத்த ஆரம்பித்தாள். தான் யார்…  தன் பூகோளம் சரித்திரம் தெரியுமா என்றவள் கேட்டு எகிறிக் கொண்டிருக்க விக்ரம் அவளை அமைதியடையச் சொன்னான்.

தமிழச்சிக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. பேசவும் நா எழவில்லை. என்ன நிகழ்கிறது என்று யோசிக்கவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. அப்போது அந்த பெண்ணிடம் விக்ரம் காரசாரமாய் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அதெல்லாம் தமிழச்சியின் செவியில் ஏறவில்லை.

கணவன், காதல் என்ற சிந்தனையெல்லாம் ஒதுக்கித் தள்ளியவள் மீண்டும் அந்தப் பெண்ணின் கன்னத்தைப் பதம் பார்த்தாள். விக்ரம் அதிர்ச்சியில் தலையைப் பிடித்துக் கொள்ள… அந்தப் பெண் ஊமையாய் நின்றுவிட்டாள்.

அதோடு தமிழச்சி விடவில்லை. அந்தப் பெண்ணை இழுத்து அந்தக் காரிலேயே தள்ளிவிட்டு காரை எடுக்க முற்பட ஓட்டுனர் இருக்கையில் அமரப் போக, விக்ரம் அவளை தடுத்துத் தள்ளி இழுத்து வந்தான்.

“அந்தப் பொண்ணு யாருன்னு தெரியுமா?” என்று அவன் கேட்க தமிழச்சி சீற்றத்தோடு, “அவ எவ்வளவு பெரிய கொம்பா இருந்தாலும் எனக்குக் கவலையில்ல… என் கண் முன்னாடியே இவ்வளவு பெரிய அக்ஸிடென்ட் பண்ணி இருக்கா… அவளை விட்டுருவேனா நான்” என்று சினத்தோடு சீறிவிட்டு அந்தக் காரை அவள் ஸ்டார்ட் செய்ய, “தமிழ் நான் சொல்றதைக் கேளு” என்று அவன் பேச வர,

“நீ சொல்றதைக் கேட்க நான் இப்போ உன் பொண்டாட்டி இல்ல… … எது பேசுறதா இருந்தாலும் ஸ்டேஷேன் வந்து பேசிக்கோ” என்று யாரோ அறிமுகம் இல்லாதவனிடம் பேசுவது போல பேசிவிட்டு முன்னேறிச் செல்ல அவனுக்கு மூளை சூடேறியது.

தமிழச்சியின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடிக் கொண்டிருக்க, அப்போது அவள் அருகமையில் இருந்த அந்தப் பெண் தன் பேசியை எடுக்க அதனை ஒரு நொடியில் கைப்பற்றி விட்டு அவளை மீண்டும் அறைவதற்கு கை ஒங்கினாள்.

“ஏ ஏ! நான் யாருன்னு தெரியாம… நீ  இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க” என்று அவள் கூப்பாடு போட, “நீ என்னடி பெரிய இவளா… பணத் திமிருல உன் இஷ்டத்துக்கு யார் மேல வேணா காரை ஏத்திட்டுப் போயிடுவியா… நான் அதைப் பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?” என்று உச்சபட்ச கடுப்பாய் கேட்டாள்.

அந்தப் பெண் கொஞ்சம் மிரண்ட தோரணையில், “நான் பண்ண அக்ஸிடென்ட்டுக்கான நஷ்டஈடைக் கொடுத்துடறேன்” என்றவள்  சொன்ன மறுகணம் தமிழச்சியின் கோபம் இன்னும் தூண்டப்பட,

“அடிங்க! நஷ்ட ஈடு கொடுப்பியா… அடிப்பட்டவனுக்கு கை கால் போனா… இல்ல உயிர் போனா… எல்லாத்தையும் உன் பணத்தை வைச்சு சரிக் கட்டிடமுடியுமா?” என்று கடுப்பாய் கேட்டாள்.

“வேண்டாம்…  இதுக்காக நீ ரொம்ப வருத்தபடுவ” என்று அந்தப் பெண் மிரட்ட தமிழச்சி அவளை உஷ்ணப் பார்வை பார்த்த நொடி அவள் கப்சிப்பென்றானாள்.

கார் ஸ்டேஷனை அடைந்ததும் அங்கிருந்த லேடி கான்ஸ்டபிளை அழைத்து அவளை உள்ளே இழுத்துப் போக சொல்ல… அந்தப் பெண் அவள் புறம் திரும்பி மிரட்டலாய், “நான் யாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல நீயா தெரிஞ்சுப்ப” என்று உரைக்க தமிழச்சி அவளை இளக்காரமாய் பார்த்து, “போடி”  என்றாள்.

பின் அவள் அந்தக் காரை ஆராய்ந்து உள்ளே இருந்த பேக் மற்றும் சில பொருட்களைக் கையிலெடுத்தாள். அதில் அந்தப் பெண்ணின் கைப்பையும் இருந்தது. அதனைப் பிரித்து தமிழச்சி சோதிக்க, அதில் இருந்த பாஸ்போர்ட் அவள் கண்ணில் பட்டது. அதலிருக்கும் தகவலை ஆராய்ந்தாள்.

தமிழச்சிக்கு உண்மையிலேயே ஷாக்கடித்த உணர்வுதான். அமிர்தா ராய். சம்யுக்தா ராயின் ஒரே மகள் சுதந்திர பாரத் கட்சியின் தலைமைச் செயலாளர்… மற்றும் தற்போதைய இந்தியப் பிரதமர்! அவளின் அண்டசராசரமும் ஒரு நொடி ஆடித்தான் போனது.

தன் மேலதிகாரியிடம் இது பற்றிப் பேசிவிடலாம் என்ற எண்ணத்தோடு அவள் பேசியை எடுக்கும் போதே அவர் அழைத்திருந்தார்.

“என்ன பண்ணி இருக்கீங்க தமிழச்சி?” என்றவர் கோபத் தொனியில் கேட்க அவள் நடந்தவற்றை அவருக்கு விவரமாய் உரைத்தாள். எதிர்புறத்தில் ஆழ்ந்த மௌனம்.

“சார்!” என்றவள் ஆரம்பிக்கவும், “லீவ் ஹெர்” என்று அவர் ஒற்றை வார்த்தையில் சொல்லி முடிக்க, “சாரி சார் முடியாது” என்று அவளும் தெளிவாய் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து வைத்தாள்.

அதற்குப் பிறகு வந்த அவரின் எந்த அழைப்பையும்  ஏற்காமல் தன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தவள் அந்தப் பெண்ணின் மீது எப் ஐ ஆரைப் போடச் சொல்லும் போதே எதிர்புறத்தில் அவள் வாகன ஓட்டுனர் அழைத்தான்.

மருத்துவமனையில் சேர்த்த நால்வரில் ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கிறான் என்று செய்தி வர தமிழச்சிப் பதட்டமானாள். அதோடு அந்தப் பெண்ணை கோபமாய் பார்த்து, “யாருக்காவது உயிருக்கு ஏதாவது ஆகட்டும்… உன்னை ஒரு வழி பண்ணிடுறேன்” என்று மிரட்டிவிட்டு உடனே நேராய் மருத்துவமனை செல்ல முடிவெடுத்தாள்.

அந்தப் பெண்ணின் கைப்பை மற்றும் இதர பொருட்களையும்  பத்திரமாய் உள்ளே வைக்க சொல்லிவிட்டு அவள் மருத்துவமனைக்கு விரைய, காயம்ப்பட்ட நால்வரில் ஒருவன் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. மற்ற மூவரும் பலத்தக் காயங்களோடு உயிர் பிழைத்துக் கொள்ள அவர்களிடம் விசாரித்துவிட்டு அவள் புறப்பட, அடுத்தடுத்து அவளுக்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

காவல் நிலைய வாசலில் அந்தக் கார் இல்லை. அங்கிருந்தவர்களை விசாரித்துக் கொண்டே அவள் உள்ளே நுழைய அங்கே அந்தப் பெண்ணும் இல்லை. அவள் அதிர்ச்சியோடு அவர்களை விசாரிக்க, “யாரு மேடம்? எந்தப் பொண்ணு… அப்படி யாரையாச்சும் கூட்டிட்டு வந்தீங்களா என்ன?” என்று எல்லோரும் மாறி மாறி அவளையே திருப்பிக் கேள்வி எழுப்ப கோபத்தில் சிவந்தன அவள் விழிகள்!

“என்ன விளையாடுறீங்களா… எப். ஐ. ஆர் போட சொன்னேனே… என்னாச்சு?” என்று அவள் கேட்க, “என்ன மேடம் சொல்றீங்க? எதுக்கு எப்.ஐ ஆர்?” என்று அங்கிருந்தவர்கள் அவளை முட்டாளாக்க முற்பட, சரியாய் அந்த சமயம் பார்த்து அவளின் மேலதிகாரியின் அழைப்பு!

இம்முறை அதனை ஏற்று அவள் பேச, “உடனே உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போங்க தமிழச்சி!” என்று அவர் அழுத்தமாய் சொல்ல,

“இதெல்லாம் உங்க வேலைதானா சார்?” என்று கேட்டவளின் குரலில் அத்தனை வலி கோபம்!

“நீங்க இந்த இஷ்யூவை பெருசாக்கிட்டு இருக்கீங்க”

“நான் பெருசாக்கறேனா… அந்தப் பொண்ணு பண்ண அக்சிடென்ட்ல ஒருத்தனோட உயிரே போயிடுச்சு” அவள் கொதிப்போடு சொல்ல,

“எந்தப் பொண்ணை சொல்றீங்க?” அவர் நிதானமாகவே கேட்டார்.

“அமிர்தா ராய்!” அவள் சீற்றமாய் அந்தப் பெயரை உச்சரிக்க,

“எந்த அமிர்தா ராய்… என்னாச்சு உங்களுக்கு… அதான் அக்சிடென்ட் பண்ண கண்டைனரையும் டிரைவரையும் பிடிச்சு உள்ள போட்டாச்சே” என்றார் இயல்பாக!

“கண்டைனரா? டேமிட்… நான் அந்த பாஃரின் கார் அக்ஸிடென்ட் பண்ணதை என் கண்ணால பார்த்தேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நீ உன் மேலதிகாரி கிட்ட பேசிட்டு இருக்க தமிழச்சி… அது நினைவு இருக்கட்டும்” என்றவர் அழுத்திச் சொல்ல,

“அப்படி நீங்க நடந்துக்கலயே சார்… அதுவும் ஒரு குற்றவாளிக்கு சாதகமா இந்தவளவுக்குக் கீழ இறங்கி” என்றவள் கடுப்பாக, அவர் கர்ஜித்தார்.

“தமிழச்சி… திஸ் இஸ் யுவர் லிமிட்… உங்க சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி பண்ணி வைச்சிருக்கு… நாளைக்கு வந்து அபீசில கலெக்ட் பண்ணிக்கோங்க” என்று அவர் சொல்லி முடிக்க அவள் அதிர்ச்சியின் உச்சத்தோடு, “நான் என்ன தப்பு செஞ்சேன்?” என்று கேட்டாள்.

“சிட்டி லிமிட்குள்ள காரை வேகமா ஓட்ட சொல்லி இருக்கீங்க… அதுவும் எந்த காரணமுமே இல்லாம”

“எந்தக் காரணமுமே இல்லாமலா?” என்றவள் அதிர்ச்சியாகும் போதே அவர் தொடர்ந்தார்.

“அது மட்டுமா… உங்க மேலதிகாரியான என்கிட்ட அவமரியாதையா பேசி இருக்கீங்க…  சோ உங்க மேல டிசிப்லினரி ஆக்ஷன் எடுக்கிறேன்” என்று சொல்ல அவள் கசந்த முறுவலோடு, “நேர்மையா இருந்தா…  டிசிப்லினரி ஆக்ஷன் எடுப்பீங்க இல்ல?” என்று கேட்கும் போதே எதிர்புறத்தில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. நிராதரவாய் நின்றது போல் ஒரு உணர்வு அவளைப் பீடித்தது.

அவள் அந்த நொடியே உடைந்து அவள் தனக்குக் கீழ் பணிபுரியும் காவல் ஊழியர்களைப் பார்த்து, “ஏன் இவ்வளவு போலித்தனம்… எது உங்களை இப்படி எல்லாம் பேச வைக்குது? அதிகாரமா… பணமா… இல்ல பயமா?” என்றவள் கேட்க அவர்கள் யாரும் பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொள்ள,

“பணம்தான் பெருசுன்னா அதுக்கு நிறைய சம்பளம் தர்ற நல்ல வேலையெல்லாம் பார்க்கலாமே… இல்ல அதிகாரத்தைப் பார்த்து பயம்ன்னா… அதுக்கு இந்த வேலைக்கு நீங்க யாரும் வந்திருக்கவே கூடாது… இந்த காக்கி யூனிபார்மைப் போட்டிருக்கவே கூடாது… ச்சே! ஷேம் ஆஃப் யு ஆல்” என்று சொல்லி அவர்கள் எல்லோரையும் அசூயையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள்.

இரவு மணி மூன்று! தமிழச்சி தன் வீட்டின் கதவருகில் வர அது பூட்டபடவில்லை. அதனை திறக்கக் கூடத் திராணி இல்லாமல் மெதுவாய் தள்ளித் திறந்துவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள். விக்ரம் முகப்பறையில் சோபாவில் தலை சாய்த்து முகத்தைத் தன் ஒற்றைக் கரத்தால் மூடியபடி படுத்திருந்தான். ஆனால் அவன் உறங்கவில்லை. அவள் வந்த சத்தம் கேட்டு அவன் எழுந்து அமர்ந்தானே ஒழிய அவள் முகத்தை நேர் கொண்டு பார்க்கவில்லை. தரையை நோக்கியபடி அவன் அமர்ந்திருக்க,

அவள் பார்வை அவனையே கூர்ந்து நோக்கியது.

 “அந்த அமிர்தா உன் கூட எப்படி?” என்று கேட்டுக் கொண்டே அவள் நிற்க முடியாமல் சுவற்றில் சாய்ந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “அமிர்தா மாதாஜியோட ஒரே வாரிசு” என்றவன் ஆரம்பிக்க,

“அதான் எல்லோருக்குமே தெரியுமே” என்றாள்.

“தெரியும்… ஆனா அவளை யாரும் பார்த்ததில்ல… பதினைந்து வருஷம் கழிச்சு இதான் முதல் தடவை ஸ்டேட்ஸ்ல இருந்து அமிர்தா இந்தியா வந்திருக்கா… இந்த விஷயத்தை சில அரசியல் காரணங்களுக்காக இப்போதைக்கு சீக்ரெட்டா வைச்சு இருக்காங்க… அன்ட் மீடியா தேவையில்லாம அவ வரவைப் பெருசாக்க வேண்டாம்னும் நினைச்சாங்க… டெல்லில என்னை அவ்வளவா யாருக்கும் தெரியாது… சோ! என்னைத்தான் அவளை ஏர்போர்ட்ல ரிசீவ் பண்ண அனுப்பினாங்க… ஜஸ்ட் ஒரு பாதுகாப்புக்காகதான் நான்அவ கூட வந்தேன்” 

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “இதான் நீ பாதுகாப்புக்குப் போற லட்சணமா? விட்டிருந்தா அவ இன்னும் பத்து பேரை ஏத்தி கொன்றுப்பா” என்று அவள் கோபமாய் உரைக்க,

“எனக்கென்ன ஜோசியமா தெரியும்… அவ இப்படி ஏடாகுடமா வண்டி ஓட்டி மோதுவான்னு… நான் டிரைவ் பண்றேன்னு சொன்னாளேன்னு விட்டேன்… அது தப்பா போச்சு” என்று சொல்ல,

“இல்ல நான் தெரியாமத்தான் கேட்கறேன்… அவ கண்ட மேனிக்கு டிரைவ் பண்ணுவா…  நீ பார்த்துக்கிட்டு பக்கத்தில உட்கார்ந்திருப்பியா?” என்று அளவில்லா கோபத்தோடு அவனை முறைத்துப் பார்த்தாள்.

“நான் எவ்வளவோ சொன்னேன்… அவ கேட்டுத் தொலையல… ஒரு லிமிட்டுக்கு மேல பக்கத்துல உட்கார்ந்திட்டு நான் மட்டும் என்ன பண்ண முடியும்?”

“அவ செவுல்லையே ஒன்னு குடுத்திருக்கணும்” என்றதும் அவன் மௌனமாய் இருந்தான்.

அவள் மேலும், “நீயும் அந்த அக்சிடென்ட்டை பார்த்ததானே… நீ நினைச்சா முடியும்? வா… ரெண்டு பேரும் மேலிடத்துல கம்ப்ளெயின்ட் பண்ணுவோம்… கண்டிப்பா சிசீடிவில எதுலையாச்சும் ரெகார்ட் ஆகி இருக்கும்… நான் இதை ப்ருவ் பண்றேன்” என்றவள் சொல்லிக் கொண்டே போக,

“உனக்கென்ன மூளை மழுங்கிருச்சா… எந்த மேலிடத்துக்குப் போவ… ஆட்சியே இன்னைக்கு அவங்க கையில” என்றான்.

“சரி மேலிடத்துக்குப் போக வேண்டாம்… சோஷியல் மீடியால போடுவோம்” அவன் மௌனமாய் யோசிக்க,

“ஒ! இப்படியெல்லாம் பண்ணா உன் அரசியல் வாழ்கை அஸ்தமிச்சிடும் அப்படித்தானே?” என்று கேட்டாள்.

அவன் தவிப்போடு, “புரிஞ்சுக்கோடி… அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நம்மால ஒன்னும் பண்ண முடியாது… அப்படி பண்ணணும்னாலும் அது நமக்கே எதிராதான் முடியும்” என்றான்.

அவனையே ஆழ்ந்து பார்த்தவள் இப்போது மெல்ல கோப நிலையை விட்டு இறங்கி, “நம்ம கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போயிடுச்சே டா… நீயும் தடுக்க முயற்சி செய்யல… என்னாலையும் தடுக்க முடியல” என்று அவள் இறங்கி வேதனையில் கண்ணீர் வழிய சொல்ல அவனையும் அந்தக் குற்றவுணர்வு தொற்றிக் கொண்டது.

அவன் மெளனமாக நிற்க அவன் அருகமையில் வந்தவள், “உனக்கு கஷ்டமா இல்லையா விக்ரம்… இது தப்பில்லையா விக்ரம்?” என்று அவள் அவன் முகத்தைக் குற்றவுணர்வாய் பார்க்க, “சரி தப்பைத் தாண்டி… சில விஷயங்கள் நம்ம சக்திக்கு அப்பாற்ப்பட்டது தமிழச்சி” என்றவன் பிடி கொடுக்காமலே பேசினான்.

அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டவள் ஆவேசத்தோடு, “ஒருத்தன் செத்துப் போயிட்டான்னு சொல்றேன்… நீ தத்துவம் பேசுற” என்றவள் கேட்க,  “இப்பவும் சொல்றேன்… நம்மால இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.

“நீ எதுவும் பண்ணலன்னா பரவாயில்ல… என்னால இந்த விஷயத்தை அப்படி எல்லாம் விட முடியாது… நான் அவ்வளவு சீக்கிரம் என் தோல்வியை ஒத்துக்க மாட்டேன்… நான் எதாச்சும் செய்வேன்” என்றவள் அழுத்திச் சொல்ல,

“செய்… அப்புறம் உன் சஸ்பென்ஷன் டிஸ்மிஸ்ல போய் முடியும்… சொல்லிட்டேன்” என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் முகம் கோபமாய் மாறி பின் யோசனை நிலைக்கு சென்று, “என்னை சஸ்பன்ட் பண்ணது உனக்கு எப்படித் தெரியும் விக்ரம்? நான் அதைப் பத்தி உன்கிட்ட சொல்லவே இல்லையே” என்று அவள் சொல்ல, அவன் விழிகள் தவிப்பாய் அலைபாய்ந்தன.

“அது… அது வந்து” என்றவன் தடுமாற அப்போது வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. தமிழச்சி விக்ரமின் முகத்தைப் பார்த்துவிட்டு முன்னே சென்று கதவைத் திறக்க செல்ல விக்ரமும் எழுந்து அவள் பின்னோடு வந்தான்.

தமிழச்சி கதவைத் திறந்த நொடி அவள் விழிகள் ஸ்தம்பிக்க விக்ரமின் முகத்தில் ஏகபோகமாய் பதட்டம்.

அமிர்தா! அதுவும் அதே காரில் அவர்கள் வீட்டு வாசலிலேயே வந்து நின்றாள். தமிழச்சியின் உதடுகள் கோபத்தில் துடிக்க அவள் தன் உணர்வுகளைக் காட்டும் முன்னர் அமிர்தா அவளைக் கண்டும் காணாமல் சென்று விக்ரமை அணைத்துக் கொண்டாள்.

தமிழச்சிக்கு உலகமே சுழன்ற உணர்வு! விக்ரம் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே அவளை தள்ளிநிறுத்தி, “இந்த நேரத்துல ஏன் வந்தீங்க? கிளம்புங்க” என்று சொல்ல,

“தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா? எவ்வளவு பெரிய மேட்டரை அசால்ட்டா முடிச்சுட்டீங்க… எங்க?  இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு நான் பயந்துட்டேன்… ஆனா இதை நீங்க ஒரே ஆளா ரொம்ப அழகா ஹேன்டில் பண்ணி ஒன்னும் இல்லாமப் பண்ணிட்டீங்க… தேங்க்ஸ் அ லாட்” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டுவிட விக்ரம் கடுப்பானான். ‘நன்றி சொல்றேன் பேர் வழின்னு என் வாழ்கைக்கே இவ சமாதி கட்டிடுவா போல’ என்று எண்ணிக் கொண்டே அவளை மீண்டும் தள்ளி நிறுத்தி, “இட்ஸ் ஓகே கிளம்புங்க” என்றான்.

தமிழச்சி அதிர்ச்சி நீங்காமல் அப்படியே நின்றுவிட அமிர்தா அவளை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள். அந்தப் பார்வையை விட தன் கணவனின் துரோகம்தான் அவளுக்கு உயிரின் அடி ஆழம் வரை வலித்தது.

அமிர்தா சென்ற நொடி விக்ரம் அவசரமாய் கதவை மூடிவிட்டு அவள் அருகில் வந்து பேச எத்தனிக்கும் முன்னர் அவள் முந்திக் கொண்டு, “நீ நேத்து சொல்லும் போது புரியல… இப்போ புரியுது… அரசியல் சாணக்கியத்தனம்னா என்னன்னு” என்றவள் கேட்டு அவனை வலி நிறைந்த பார்வை பார்க்க, அவன் முகம் இருளடர்ந்து போனது.

“தமிழச்சி!” என்றவன் தாழ்ந்த குரலில் அழைக்க, “ஏன்டா இப்படி பண்ண… என்னால இப்பவும் நம்ப முடியல… என் விக்ரமா… எனக்கு எதிரா… அப்படின்னா உனக்கு என்னை விட உன் அரசியல் வாழ்க்கைதான் முக்கியமா?” என்று அதிர்ச்சியோடு கேட்டு அவனைப் பார்க்க,

“உனக்கு புரிய மாட்டேங்குது… செப்பு கலக்காத தங்கம் புழக்கத்துக்குப் பயன்படாது… ” என்று அவன் சொல்ல, “அப்போ நேர்மையா நியாயமா இருந்தா பிழைக்க முடியாதுன்னு சொல்ற… அப்படித்தானே?” என்று கேட்டு அவனை எரிப்பது போல் பார்த்தாள்.

“நான் இப்ப என்ன விளக்கம் கொடுத்தாலும் அது உனக்கு தப்பாதான் தெரியும்… உனக்கு இதெல்லாம் புரிஞ்சுக்க புத்திசாலித்தனம் போதாது”

“இப்ப சொன்னியே… அது கரெக்ட்… எனக்கு புத்திசாலித்தனம் போதாது… இல்லாட்டிப் போனா இத்தனை நாளா செப்பை… தங்கம்னு நினைச்சு ஏமாந்திட்டு இருப்பேனா?” என்றவள் குத்தலாய் அவனைப் பார்க்க, அவனால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

சில நிமிடங்கள் அங்கே மௌனம் ஆட்சி செய்ய தமிழச்சி அந்த மௌனத்தை உடைத்து, “நம்ம இரண்டு பேரும் இனிமே சேர்ந்திருக்க முடியாது” என்றாள் அழுத்தமாக அதேநேரம் சுருக்கமாக!

அவன் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்து, “அப்படியெல்லாம் என்னால உன்னை விட முடியாதுடி” என்று உரைக்க,

“அப்படின்னா உன் அரசியல் வாழ்க்கையை விட்டுடு விக்ரம்” என்று அவள் சுலபமாய் சொல்லிவிட்டாள்.

அவன் அதிர்ந்து, “அதெப்படி?… நான் உன் போலீஸ் வேலையை விட சொன்னா நீ விடுவியா?” என்றவன் பதில் கேள்வி கேட்க,

“சத்தியமா முடியாது… அதனாலதான் சொல்றேன்… நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுடுவோம்” என்று திருத்தமாய் உரைத்தாள்.

அவள் சொன்னதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, எனினும் அந்த முடிவை அவனால் அப்போதைக்கு உறுதியாய் எதிர்த்து நிற்கவும் முடியவில்லை. அன்று அவள் மனநிலையை கருத்தில் கொண்டு மௌனமாய் இருந்துவிட்டான். ஆனால் இப்போது வரை அவள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அதற்கு சான்றாக அவள் பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வார்த்தை அவன் மனதை ஆழமாய் உறுத்தியது. பரபரப்புக்காக இந்த மாதிரியான செய்திகள் பரப்பப்படுவது வழக்கம்தான் எனினும் அதற்கு தூபம் போட்டது போலிருந்தது தமிழச்சியின் வார்த்தைகள். விக்ரமை அந்த வார்த்தைகள் பாதித்த அதே நேரம் விஷ்வா ஆதியையும் அந்த வார்த்தை காயப்படுத்தியிருந்தது. மகன் வந்ததும் அவனிடம், “உங்களுக்குள்ள அப்படி என்னதான்டா பிரச்சனை? சொல்லு… நான் தெரிஞ்சுக்கணும்” என்றார் ஆதி!

இது நாள் வரை ஏதோ கணவன் மனைவிப் பிரச்சனை என்று கேள்வி கேட்காமல் அவர்கள் விலகி இருக்க, விக்ரமும்  தமிழிச்சியும் கூட அது பற்றி அவர்களுக்கு விளக்கம் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது தமிழச்சி காட்டும் கோபம் அவர்கள் மனதை ஆழமாய் பாதித்தது.    

விக்ரம் பதில் சொல்லாமல் யோசனயாய் அவர்களைப் பார்க்க இவானுக்கும் ஆதியின் கேள்வி ஓரளவு பிடிப்பட்டது. அந்த கேள்விக்கான பதிலை அவனும் ஆர்வமாய் எதிர்ப்பார்த்தான். ஆனால் விக்ரம் பதில் கூறாமல் தன் அறைக்கு வர, இவான் உட்பட யாருக்கும் அவர்கள் பிரச்சனையின் காரணம் புரியவில்லை.

தன் அறையில் ஒருவாறு மனதை சமாதானம் செய்து கொண்டிருந்த நேரம் பார்த்து விக்ரம் என்று பெயரிட்ட உரையோடு ஒரு கடிதம் இருந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி!

அவன் கோபம் எல்லையைக் கடக்க, வேகமாய் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவன் வெளியேறப் பார்க்க இவான் அவனை வழிமறித்து, “வாட் ஹெப்பேன்ட்… ஆர் யு கோயிங் டு மீட் தமிழிச்சி நவ்? (என்னாச்சு விக்ரம்… தமிழச்சியைப் பார்க்கப் போறீங்களா?)” என்று கேட்க அவன் வெறுப்பாய்,

“தட்ஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ் (அது உனக்குத் தேவையில்லாத விஷயம்)” என்றான்.

“ஐ நோ… பட் ப்ளீஸ் டோன்ட் கோ நவ் (தெரியும்… ஆனா இப்போ போகாத)” என்று தடுத்தவன் மேலும் “நீ ரொம்ப கோபமா இருக்க… இப்ப வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தும் விக்ரம் கேட்கவில்லை.

இவான் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழச்சி வீடு நோக்கி சென்றான். அந்த சமயத்தில் தமிழச்சியின் மனநிலையும் படுமோசமாகத்தான் இருந்தது. காலையிலிருந்து  அவள் நினைத்த எந்த வேலையும் நடக்கவில்லை. இவானைப் பார்க்க எண்ணி அதற்கும் அவளுக்கு நேரம் கிட்டவில்லை.

இப்படியான மன நிலையோடு வீடு வந்து சேர்ந்தவள் தன் வேதனையை யாரிடமும் காட்டிக் கொள்ள விரும்பாமல் இயல்பாய் இருப்பது போல் கொஞ்சம் நடித்தாள். தந்தையை உணவு உண்ண அழைத்துவிட்டு மதியழகியோடு சேர்ந்து டேபிளில் இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அங்கே வந்த விக்ரமின் பார்வை அவள் மீது மட்டுமே விழுந்தது. அவள் உணர்வதற்கு முன்னதாகவே அவள் கரத்தைப் பிடித்து வெளியே தோட்டத்திற்கு இழுத்துக் கொண்டு சென்றான்.

“விக்ரம் கையை விடு” என்றவள் கத்த, அவன் விழிகள் அனலைக் கக்கிக் கொண்டிருந்தன.

“யாரைக் கேட்டு மீடியால அப்படி சொன்ன? யாரைக் கேட்டு… இப்படி ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்க?” என்றவன் அந்தப் பத்திரத்தை உயர்த்திக் காட்ட,

“நீதானே கேட்ட” அலட்சியமாய் வெளிவந்த அவள் வார்த்தை அவன் கோபத்தை அதிகரிக்க, “கேட்டேன்… ஆனா நீ முடியாதுன்னு சொல்லுவேன்னு பார்த்தேன்… நம்ம காதலை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நம்பினேன்” என்றவன் வார்த்தைகளில் அத்தனை வலி!

“நம்ம காதலா?… அதை இன்னும் நீ கழற்றித் தூரப் போடலையா… என் போட்டோவை கழற்றிப் போடும் போதே அதையும் தூக்கிப் போட்டிருப்பேன்னு இல்ல… நான் நினைச்சேன்” என்றவள் எகத்தாளமாய் கேட்க, “உன் போட்டோவைக் கழட்டினதுக்குக் காரணம் அந்த இவான்… இடியட்” என்று சொன்ன மறுகணம்,

“வாயை மூடு விக்ரம்… அவரைப் பத்தி நீ இந்த மாதிரி எல்லாம் பேசாதே” என்றாள்.

“இப்போ எதுக்கு நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற… அவனைப் பத்தி அப்படியென்ன தெரியும் உனக்கு?”

“ஹ்ம்ம்… உன்னை விட நல்லவர்… போதுமா?”  என்றவள் சொல்ல அவன் முகத்தில் கோபம் ருத்ர தாண்டவமாடியது.

“இதுக்கு மேல இந்தப் பிரச்சனையை வளர்க்க வேண்டாம்… கிளம்பு… நாம போகலாம்” என்றவன் அவள் கரத்தைப் பிடித்து இழுக்க , “எனக்கு உன் கூட வாழ விருப்பமில்ல… நான் வர மாட்டேன்…”  என்று அவள் சொல்லித் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உதறினாள். இருவருக்கும் இடையில் அவர்களின் காதலும் ஈகோவும் போரிட்டுக் கொண்டிருக்க ஒரு நிலைக்கு மேல் விக்ரம் தன் பொறுமையிழந்து,

“அறைஞ்சேன்னா பாரு” என்று சீற்றமாய் அவளை அடிக்க அவன் கை ஒங்க, அவள் சுதாரித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அப்போது, “விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்” என்று வீரேந்தரனின் குரல் கர்ஜணையாய் வர இருவரின் பார்வையும் ஒரு சேர அவர் புறம் திரும்பியது. விக்ரம் அவளை அடிக்க உயர்த்திய கரத்தை கீழிறக்க தமிழச்சி அதிர்ச்சியாய் நின்றாள்.

 “அவங்க அம்மாவையே  அவ மேல கை ஒங்க நான்  விட்டதில்ல… நீ யாருடா?” என்றவர் அடங்கா கோபத்தோடுக் கேட்டுவிட மகளின் மீதான அதீத பாசமும் உரிமையும் அவரை அப்படி பேச வைத்துவிட்டது. ஆனால் அந்த வார்த்தை விக்ரமை வெறி கொள்ள செய்தது.

தன்னவள் புறம் திரும்பியவன் அவளை எரிமலையாய் பார்த்து, “அசிங்கப்படுதிட்ட இல்ல… ம்ஹும்… இனிமே இந்த விக்ரம் உன்னைத் தேடி வர மாட்டான்… அட் எனி காஸ்” என்று முடிவாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட  அவன் விழியில் தெரிந்த வெறுப்பு அவள் மனதைக் குத்திக் கிழித்தது.

error: Content is protected !!