இரண்டல்ல ஒன்று – 3
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
ஒத்தையிலே …
அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?
காரில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலில் தன்னை மறந்தவனாய், அதனுள் தன்னை துளைத்தவனாய் சந்திரசேகர் காரை அமைதியாக செலுத்திக் கொண்டிருந்தான்.
“என்னங்க…” என்று தன் கணவன் முகத்தைப் பார்த்தபடி சந்துருவை அழைத்தாள் கோமதி.
“ம்..” என்று தன் நினைவுகளில் இருந்து மீண்டு, கவனத்தை தன் மனைவியின் பக்கம் திருப்பினான் சந்துரு.
“நான் ஒன்னு சொல்றேன் கேட்கறீங்களா?” என்று மெதுவாகக் கேட்டாள் கோமதி.
“நீ சொல்லி நான் எதை கேட்காம இருந்திருக்கேன்.” என்று நக்கலும் கேலியுமாக உண்மையைக் கூறினான் சந்துரு.
“நம்ம ராம்க்கு, பவித்ரா தங்கச்சியைக் கேட்கலாமா?” என்று கோமதி கூற, சந்துரு அதிர்ச்சியில் சடாரென்று பிரேக்கை அழுத்தினான்.
சாலையில் கூட்ட நெரிசல் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லை.
சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு, மீண்டும் காரை செலுத்தினான் சந்துரு.
“என் அருமை பொஞ்சாதிக்கு, ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை?” என்று நக்கலாகக் கேட்டான் சந்துரு.
“எனக்கும் பவித்ரா தங்கைக்கும் ஒரு தீர்க்க படாத கணக்கு ஒன்று இருக்கு.” என்று கோமதி தீவிரமாகக் கூறினாள்.
“அது சரி… அவுகள நீ எப்ப பார்த்த?” என்று சந்துரு சுவாரஸ்யமாக வினவினான்.
“அவுக அக்காவைப் பாக்க நாம ஊருக்கு வந்தப்ப தான்… கோவில்ல வச்சி பாத்தேன்…” என்று கோமதி கூறினாள்.
“என்னை அக்கான்னு கூப்பிட்டு பேசுன்னு பவித்ரா அவுக தங்கச்சியை கண்டிச்சப்ப, அவுக பவித்ராவை தவிர வேற யாரையும் அக்கான்னு கூப்பிட மாட்டகலாம்… இப்படி அவுக சொல்றதை நானே கேட்டேன்…” என்று கோமதி தீவிரமாகக் கூறினாள்.
‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று சந்துரு அவளை முறைக்க, “கொழுந்தனை கல்யாணம் செய்தால், என்னை அக்கான்னு கூப்பிடனும்ல?” என்று கோமதி பெருமையாகக் கூறினாள்.
தன் மனநிலையைச் சரி செய்ய முயற்சிக்கும் மனைவியின் எண்ணம் புரிந்து, அவளைச் சிரித்த முகமாகப் பார்த்தான் சந்துரு.
அகப்பட்டுக் கொண்டவளாய் கோமதி வெட்க புன்னகை பூத்தாள்.
“என்ன சொல்ல வர கோமதி?” என்று சந்துரு பொறுமையாக கேட்டான்.
“பவித்ரா தங்கை படித்த பெண். அந்தப் பெண் பிடிவாதமா சொன்னாலும், அவங்க அக்கா மேல உள்ள பாசம் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சிது. ஆச பாசமான பொண்ணா தான் இருக்குமுன்னு எனக்கு தோணுது.” என்று கோமதி யோசனையாகக் கூறினாள்.
சந்துரு அமைதியாக வண்டியை ஓட்ட, “பவித்ரா அளவுக்கு அவ தங்கை அமைதியா இல்லைனாலும், ஒரே வளர்ப்பு தானே. அக்காவை மாதிரி இருக்க மாட்டாளா? உத்தமி அம்மா பத்தி மத்தவங்களுக்கு தெரியலைனாலும் நமக்கு தெரியும். பவித்ரா குணம் ஊருக்கே தெரியும். பவித்ரா ரொம்ப சாந்தம்… வீட்டுச் சத்தம் வெளிய தெரியாம குடும்பம் நடத்துற கெட்டிக்கார பொண்ணுங்க பவித்ரா.” என்று நிதானமாகக் கூறினாள்.
“ம்…” என்று சந்துரு யோசனையாகக் கூற, “உங்க நண்பர் நல்லவரா இருக்கலாம்… ஆனால், அம்மா பிள்ளை தானே…” என்று தயக்கத்தோடு கூறினாள் கோமதி.
“தேவா அம்மா பிள்ளையா இருக்கலாம். ஆனால், அவனுக்கு அவன் பொஞ்சாதி மேல் பாசம் அதிகம். அவன் பொஞ்சாதியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டான். அதை நான் அவன் பார்வையிலேசொல்லுவேன்.” என்று அழுத்தமாகக் கூறினான் சந்துரு.
கோமதி எதுவும் பேசாமல் அமைதி காத்தாள். பவித்ராவின் முகத்தில், தெரியும் மெல்லிய சோகம் கோமதியின் கண்முன் வந்தது. ‘சில பெண்களின் வலிகள் இந்த உலகத்திற்கு புரிவதில்லை. இதெல்லாம் சொன்னால் இவுகளுக்கு புரியாது.’ என்று எண்ணினாள் கோமதி.
“என்ன சிந்தனை?” என்று சந்துரு வினவினான்.
“நம்ம வீட்டில், அந்தப் பெண்ணுக்கு ஒரு குறையும் இருக்காது. நான் பார்த்து நீக்குப் போக்கா நடந்துப்பேன். பெண் பார்க்க நல்ல லட்சணம்… நம்ம ராம்க்கு பொருத்தமா இருக்கும்.” என்று கோமதி மீண்டும் தொடங்க,”உனக்கு இந்தக் கல்யாணத்தில் ஏன் இம்புட்டு ஆர்வம்?” என்று கேள்வியாக நிறுத்தினான் சந்துரு.
“சோழியங் குடுமி சும்மா ஆடுமா? அக்கா தங்கிச்சி வந்து போக இருந்தா… உங்க நண்பரும், நீங்களும் சமாதானம் ஆவீக… உங்களுக்கு நல்லது பண்ணலாம்ணு தான்…” என்று கோமதி இழுக்க, மறுப்பாகத் தலை அசைத்தான் சந்துரு.
“அது முடிந்து போன விஷயம் கோமதி. இந்த யோசனை சிக்கலில் தான் முடியும். பாவம் அந்த அக்கா, தங்கை வாழ்வில் நாம் விளையாட வேண்டாம்.” என்று கோமதியிடம் மறுப்பாகக் கூறினான் சந்துரு.
“எல்லாம் பார்வையில் தான் இருக்கு. தர்மர் பார்க்கும் பார்வை யிலும் துரியோதனன் பார்க்கும் பார்வையில் உள்ள வித்தியாசம்.” என்று கோமதி கூற, அவளை யோசனையாகப் பார்த்தான் சந்துரு.
“அந்தப் பெண், எந்தச் சூழ்நிலையிலும் அவங்க அக்காவை விட்டுக் கொடுக்க மாட்டா. பவித்ராவுக்கும், தங்கச்சி பக்கத்தில் இருப்பது சந்தோஷமா தான் இருக்கும். உங்களுக்கும் மனஸ்தாபத்தை சரி செய்ய ஒரு சந்தர்ப்பமா இருக்கும்.” என்று கோமதி தெளிவாகக் கூறினாள்.
“எல்லாம் நீ நினைப்பது போல் இல்லாமல், எதிர்மறையா திரும்பிடுச்சுனா?” என்று சந்துரு வினவ, “நாம் நல்லதையே நினைப்போம்.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் கோமதி.
‘இவள் நினைத்ததை முடிக்காமல் விடமாட்டாள்.’ என்ற எண்ணத்தோடு, “உன் இஷ்டம்.” என்று கூறினான் சந்துரு.
“இதுக்கு பவித்ரா வீட்டில் ஒத்துப்பாங்களா?” என்று சந்துரு புருவம் உயர்த்திக் கேட்க, “உங்க நண்பர் என்ன சொல்லுவார்?” என்று கேள்வியை அவன் பக்கம் திருப்பினாள் கோமதி.
“முயற்சி செய்… நடக்கறதை பார்ப்போம். நடக்கலைனா வருத்தப்படாத…” என்று சந்துரு தன் மனைவிக்கு மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்தான்.
அகல்யா தன் தாய் தந்தை பேசிக்கொண்டிருப்பதை கவனித்தபடி அமர்ந்திருந்தாள். அதன் பின் மூவரும் பேசியபடி வீட்டை நோக்கிச் சென்றனர்.
மூன்று நாட்களுக்குப் பின், அதிகாலை 5:௦௦ மணி
வாசுதேவன் கார் ஓட்டிக்கொண்டிருக்க, சந்தோஷ் உறங்கிக் கொண்டிருந்தான். பவித்ரா கோபமாக அமர்ந்திருக்க, “பவிக்கு என்ன கோபம்.” என்று பவித்ராவை வம்பிழுக்கும் தொனியில் கேட்டான் வாசுதேவன்.
“இப்ப எங்க போறோம்? இதைத் தான் நான் நேத்து துணி அடுக்கி வைக்க ஆரம்பத்திலிருந்து கேட்கறேன். நீங்க சொல்ல மாட்டேங்கிறீங்க.” என்று பவித்ரா சிணுங்க, ” வீட்டை விட்டு வெளிய வந்துட்டாலே என் பவி நடவடிக்கையே வேற மாதிரி இருக்கும்.” என்று செல்லம் கொஞ்சினான் வாசுதேவன்.
“இப்ப… நீங்க சொல்ல முடியுமா? சொல்ல முடியாதா?” என்று பவித்ரா மிரட்ட, “என்ன மிரட்டல் ரொம்ப தூக்கலா இருக்கு?” என்று வாசுதேவன் புருவம் உயர்த்தினான்.
” உங்க ஊரை விட்டு வெளிய வந்துடோமில்லை.” என்று கூறி, “க்ளுக்…” என்று சிரித்தாள் பவித்ரா.
பவித்ராவின் கேலியை ரசித்து, அவளை வாஞ்சையோடு பார்த்தான் வாசுதேவன்.
‘இவங்க அம்மா சம்பந்தப்பட்ட விஷயத்தைத் தவிர, இவுகளை மாதிரி கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ‘ என்று சிந்தித்தாள் பவித்ரா.
‘வருஷங்கள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும்.’ என்ற நம்பிக்கையோடு வாசுதேவனைப் புன்னகையோடு பார்த்தாள் பவித்ரா.
“இந்த ஊர் பிடிக்கலையா பவி? உங்க சென்னை மாதிரி இல்லாயா?” என்று ஆழமான குரலில் கேட்டான் வாசுதேவன்.
“சென்னை ஒரு அழகு. அழகியபுரம் வேற மாதிரி அழகு. ஊர் பிடிக்காமல் போகுமா? இத்தனை வருஷம் கழித்து இப்படி கேட்டால் என்ன அர்த்தம்?” என்று அவன் முகம் பார்த்து சிணுங்களாக கேட்டாள் பவித்ரா.
‘பவித்ரா முன்னை போல் இல்லை.’ என்று எண்ணினான் வாசுதேவன். ‘சரி எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும்.’ என்ற யோசனையோடு காரை ஓட்டினான் வாசுதேவன்.
தன் மனதில் இருப்பதைச் சொல்லி சூழ்நிலையைக் கெடுக்க விரும்பாத பவித்ரா, ‘இதைப் போல் தனிமை கிடைப்பதே அரிது.’ என்ற எண்ணத்தோடு வாசுதேவனின் அருகாமை சுகத்தை ரசித்தாள்.
சில நிமிடங்கள் கழித்து, “அம்மா, அப்பா, நந்தினி எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன். நீங்க இருந்தாலும், அவங்க என் பக்கத்தில் இல்லாதது, எனக்கு ஒரு தனிமையை கொடுக்கும்.” என்று தயக்கத்தோடு கூறினாள் பவித்ரா.
‘அவன் கோபப்படுவானோ… ‘ என்று அச்சத்தோடு அவன் முகத்தை பவித்ரா பார்க்க, வாசுதேவன் அழகாகப் புன்னகைத்தான்.
“பேசாமல் நந்தினிக்கு நம்ம ஊரில் சொந்தத்தில் மாப்பிளை பார்த்திருவோமா?” என்று வாசுதேவன் விளையாட்டாகக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தாள் பவித்ரா.
“நான் தான் வேலைக்குப் போகலை… அந்த யோசனையோடு படிக்கவும் இல்லை. ஆனால் அவ அப்படி இல்லை… நல்ல படிச்சிருக்கா… படித்த படிப்புக்கு வேலைக்கு போகணும்.” என்று அழுத்தமாக வாசுதேவனின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தாள் பவித்ரா.
“அப்பப்பா… என்ன சூடு. உங்க வீட்டு ஆளுங்களை சொன்னால், அப்படி வார்த்தை எல்லாம் தெறிச்சு விழுது.” என்று வாசுதேவன் பவித்திராவிடம் நக்கல் தொனியில் கேட்டான்.
“ஆமா… என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம்… அவ நல்ல வேலைக்குப் போய் பெரிய ஆளா வரனுமில்லை.” என்று பவித்ரா ஆதங்கமாகக் கேட்க, அவளை ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் வாசுதேவன்.
பேச்சுவாக்கில், “நந்தினி phone பண்ணிருந்தா.” என்று கூறினான் வாசுதேவன்.
“என்கிட்டே பேசலை?” என்று பவித்ரா கேள்வியாக நிறுத்த, “நீயும்,சுபாவும் எங்கயோ இருந்தீங்க. அது தான் நானே பேசிட்டேன்.” என்று கூறினான் வாசுதேவன்.
“என்ன சொன்னா?” என்று பவித்ரா தலை சாய்த்துக் கேட்க, “உன்னை தேடுது.. உன்னை பார்க்கணுமுன்னு சொன்னாள்.” என்று கண்ணில் குறும்போடு கூறினான் வாசுதேவன்.
“அத்தான்…. சென்னைக்கா போறோம்?” என்று பவித்ரா ஆனந்த கூச்சலிட்டாள்.
வாசுதேவன் சிரித்த முகமாகத் தலை அசைக்க, “நேத்தே சொல்லிருந்தா, நான் அவளுக்குப் பிடித்த அல்வா, பால்கோவா, ஆந்திரா முறுக்கு, மிச்சர், பனங்கிழங்கு எல்லாம் வாங்கிருப்பேனே…” என்று பவித்ரா அந்த ஆனந்தத்திலும் குறையோடு கூறினாள்.
“என் பவி என்னல்லாம் வாங்கணுமுன்னு நினைப்பாலோ… எல்லாம் வாங்கியாச்சு.” என்று வாசுதேவன் கூற, “அத்தான்னா… அத்தான் தான்…” என்று குதூகலமாக கூறினாள் பவித்ரா.
“சென்னைன்னு சொன்ன உடன் தான் உனக்கு இந்த அத்தான் கண்ணுக்கு தெரியறேன்.” என்று வாசுதேவன் குறை பட, பவித்ரா அவனைப் புன்னகையோடு பார்த்தாள்.
அவர்களை விட வேகமாக நாம் சென்னைக்கு பயணிப்போம்.
காலை பத்து மணி. இடம் ராம்பிரசாத் அலுவலகம்.
ராம் பிரசாத்தின் கண்களுக்கு முன் பல வேலை இருந்தாலும், அவன் சிந்தனை வைஷ்னவியைச் சுற்றியது.
அன்று பல கொஞ்சலுக்களுக்கு பின்னும், அவர்கள் பேச்சு வார்த்தை சண்டையில் தான் முடிந்தது என்பதை ராம் பிரசாத்தின் முகம் தெளிவாக கூறியது.
‘இன்றோடு மூன்று நாட்கள்… நானும் வைஷுவிடம் பேசவில்லை.அவளும் என்னோடு பேசவில்லை. ஆனால் இன்றும் என்னால் அவளிடம் பேசாமல் இருக்க முடியாது.’ என்று யோசித்தான் ராம் பிரசாத்.
‘பெண், வாசு அண்ணாவுக்குச் சொந்தம். இதை சந்துரு அண்ணா கூறும் பொழுது அண்ணாவின் குரலில் எவ்வளவு சந்தோசம்.’ என்று யோசித்தான் ராம்பிரசாத்.
‘இதை வளர விடக்கூடாது. நான் இன்றே வைஷ்னவியைப் பார்க்க வேண்டும்’ என்று எண்ணியபடி தன் காரை எடுத்துக் கொண்டு வைஷ்னவியை coffee shop இல் சந்தித்தான் ராம்பிரசாத்.
ராம்பிரசாதை கண்ட வைஷ்னவி, “ராம். எனக்குத் தெரியும்… உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது.” என்று அவன் அருகே சென்று அவனை அணைத்துக் கொண்டு கூறினாள் வைஷ்னவி.
“வைஷு… சீரியஸ்… எங்க வீட்டில் பெண் பார்க்க போறாங்க… இந்த இடம் எங்க வீட்டுக்கு ரொம்ப நெருக்கம், முதலிலேயே தடுக்கலைனா அப்புறம் தடுக்க முடியாது.பெரிய சிக்கல் ஆகிரும்.” என்று ராம்பிரசாத் பதட்டத்தோடு கூறினான்.
வைஷ்னவி சோர்வாக காட்சி அளித்தாள். அவள் கண்களில் ராம் மீதான காதல் கண்ணீரோடு வெளிப்பட்டது.
“ராம்… என் நிலைமையை யோசித்துப் பார். எனக்கு அம்மா, கூட பிறந்தவங்க யாரும் கிடையாது. எனக்கு எங்க அப்பா தான் உலகம். நான் அவரை விட்டுவிட்டு எப்படி வர முடியும்? நான் உன்னைத் தானே உலகமா நினைக்கிறேன். எனக்காக நீ இங்க வரக் கூடாதா?” என்று வைஷ்னவி பரிதாபமாக கேட்டாள்.
வைஷ்னவி பக்க நியாயம் ராமின் மனதை உறுத்த, ராம் மெளனமாக நின்றான்.
வைஷ்னவியின் கண்களில் கண்ணீர் வழிய, அவள் முகத்தை தன் கையில் ஏந்தி, “ஆனால், இதை எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க.” என்று ராம் அவளை சமாதானம் செய்யும் விதமாகக் கூறினான்.
“நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். உங்க வீட்டில் என்னைக்கு சம்மதிக்கிறாங்களோ, அன்னைக்கு ஊரறிய கல்யாணம் செய்துட்டு வாழலாம்.” என்று வைஷ்னவி வழி கண்டுபிடித்தவளாக பிடிவாதமாக கூற, ராம் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
“Just ஒரு safety க்கு தான்.” என்று வைஷ்னவி கூற, ராம் அவளை யோசனையாகப் பார்த்தான்.
‘ஒரே பெண்ணாக பணக்கார வீட்டில் செல்லமாக வளர்ந்ததால், சற்று பிடிவாதம் அதிகம்… முன்கோபம் ஜாஸ்தி… ஆனால் இவள் என் மீது கொண்டுள்ள காதல் உண்மை அன்றோ?’ என்ற எண்ணத்தோடு ராம் வைஷ்னவியை ஆழமாகப் பார்த்தான்.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…