IO-5

IO-5

 

இரண்டல்ல ஒன்று – 5

சென்னையில் பவித்ரா தன் தாயின் வீட்டில், சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருக்க, “பவி… பவி…” என்று வாசுதேவனின் குரல் அவர்கள் வீட்டில் ஒலிக்க, நந்தினி “க்ளுக்கு…” என்று சிரித்தாள்.

“ஏய் என்ன டி சிரிப்பு?” என்று பவித்ரா நந்தினியின் காதை கடிக்க, “சந்தோஷ் கூட உன்னை இப்படி கூப்பிடறதில்லை. அத்தான் உன்னை அத்தனை தடவை கூப்பிட்டறாங்க…” என்று கேலியாக கூறினாள் நந்தினி.

“முதலில் இவ வாயை தைக்கனும்…” என்று செல்வி கூற, “பாட்டி… சித்தி பாவம்.” என்று கூறினான் சந்தோஷ்.

“அப்படி சொல்றா, என் தங்க கட்டி…” என்று கூறி சந்தோஷை கொஞ்சினாள் நந்தினி.

“சித்தி… நீங்க எங்க ஊருக்கு வாங்க… நான் உங்களுக்கு நிறைய இடத்தைச் சுத்தி காட்டுறேன்.” என்று சந்தோஷ் பெருமையாக கூற, நந்தினி சம்மதமாக தலை அசைத்தாள்.

“இன்னைக்கு உங்க சித்தியை, சென்னையைச் சுத்தி காட்ட சொல்றா…” என்று வாசுதேவன் கூற, “அத்தான் நான் ரெடி… நாம phoenix mall போயிட்டு… Luxe சினிமாஸ் ல படம் பாக்கிறோம்.” என்று நந்தினி கூற, பவித்ரா, சந்தோஷ் இருவரும் சந்தோஷமாக தலை அசைத்தனர்.

“சாப்பிட வீட்டுக்கு வந்துருங்க.” என்று செல்வி கூற,”அதெல்லாம் சரியா வந்திருவோம் அம்மா.” என்று நந்தினி வேகமாகத் தலை அசைத்தாள்.

“அத்தை நீங்களும் வாங்க… எல்லாரும் சேர்ந்தே போவோம்.” என்று வாசுதேவன் கூற, “இல்லை மாப்பிளை நீங்க போயிட்டு வாங்க.. நீங்க வரும்பொழுது சூடா சாப்பாடு ரெடியா இருக்கும்.” என்று செல்வி கூறினார்.

“அம்மா… வெளிய சாப்பிடலாம்.” என்று பவித்ரா கூற, “அக்கா.. செம ஐடியா. அம்மா இப்ப நீங்க லஞ்ச் ரெடி பண்ணுங்க. நாங்க வந்து சாப்பிட்டு, மதியானம் ரெஸ்ட் எடுக்கிறோம். ஈவினிங் பெசன்ட் நகர் பீச் போயிட்டு, முருகன் இட்லி கடையில் சாப்பிடுவோம்.” என்று நந்தினி திட்டமிட்டாள்.

“சூப்பர் சித்தி…” என்று சந்தோஷ் அவளைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட, நந்தினி அவளை அணைத்துக் கொண்டாள்.

“நந்தினி… உனக்குச் சின்ன புள்ளைன்னு நினைப்பு… இவளை நம்பி நாம் மாப்பிளை பார்க்கிறோம்… அம்மாடி, இது உன் வேலை மாதிரி கிடையாது… பிடிக்கலைன்னு சண்டை போட்டுட்டு வர முடியாது…” என்று செல்வி கூற, “என்னை சமாளிக்க முடியலைன்னு வர மாப்பிளை ஓடாம இருப்பாரான்னு பாருங்க…” என்று நந்தினி நக்கலாகக் கூறினாள்.

கேலி கிண்டல்களோடு அவர்கள் நாட்கள் இனிதே நகர, நந்தினியைப் பெண் பார்க்கும் நாளும் வந்தது.

வேளச்சேரி தரமணி சாலையில் அமைந்திருந்த இல்லத்தில், அகல்யாவின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“சித்தப்பா.. இன்னைக்கு சித்திய பாக்க போறோமா?” என்று அகல்யா ஆர்வமாகக் கேட்க, ராம்பிரசாத் பரிதாபமாகத் தலை அசைத்தான்.

“ஏய்… அகல்யா கொஞ்சம் சும்மா இரு…” என்று கோமதி கூற, தன் தாயை கண்டு கொள்ளாமல் தன் பேச்சை தொடர்ந்தாள் அகல்யா.

“சித்தி வீட்டில், சந்தோஷ் இருக்கான் சித்தப்பா… அவன் எனக்கு friend ..” என்று என்னன்னவோ அகல்யா தொடர்ந்து பேச, ‘சித்தி என்று முடிவே செய்துவிட்டாள் போல…’ என்று அவளைச் சோகமாக பார்த்தான் ராம் பிரசாத்.

அப்பொழுது ராம் பிரசாத்தின் மொபைல் ஒலிக்க, “சொல்லு வைஷ்ணவி…” என்று மெதுவாகப் பதட்டமாக கூறினான் ராம்பிரசாத்.

வைஷ்னவி சில நிமிடங்கள் பேச, “சரி வரேன்.” என்று கூறி ராம் பிரசாத் தன் மொபைல் பேச்சை முடித்தான்.

ராம் பிரசாத் சில நிமிடத்தில் வெளியே கிளம்ப, ” என்னடா… நான், உங்க அம்மா… அண்ணன்… அண்ணி… அகல்யான்னு எல்லாரும் உனக்காகச் சென்னை வந்திருக்கோம்.. நீ என்னடான்னா கிளம்பி வெளிய போற?” என்று ராம் பிரசாத்தின் தந்தை கேள்வியாக தன் பேச்சையும் ராம்பிரசாத்தையும் நிறுத்தினார்.

“அப்பா… அவனுக்கு ஏதாவது அலுவலக வேலையா இருக்கும்.” என்று சந்துரு தன் தம்பிக்காக பேச, ” நீங்க போயிட்டு சீக்கிரம் வந்துருங்க. நாம 4:30 மணிக்குப் பெண் வீட்டுக்கு போகணும்.” என்று கோமதி கூற, சம்மதமாகத் தலை அசைத்தான் ராம் பிரசாத்.

‘இவர்கள் பெண் பார்க்கச் செல்வதற்குள், நாம் இந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். வைஷ்ணவியைச் சமாதானம் செய்து, அவளை கையோடு வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். ‘ என்ற எண்ணத்தோடு வைஷ்ணவி அழைத்த இடத்தை நோக்கிப் பயணித்தான் ராம் பிரசாத்.

வைஷ்ணவி ராம் பிரசாத்துக்காக காத்திருக்க, அவள் அருகே சென்ற ராம் பிரசாத், “வைஷு… இப்ப எதுக்கு இங்க என்னை வரச் சொன்ன…” என்று பொறுமையாக கேட்டான்.

“ராம்… நடந்துக்கிட்டே பேசுவோமா? ” என்று அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டு குழைவான குரலில் கேட்டாள் வைஷ்னவி.

இருவரும் சற்று தூரம் நடக்க, அங்கு register ஆபீஸ். “வைஷு… இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்று காட்டமாக கேட்டான் ராம்பிரசாத்.

“என்ன ராம்… தெரியாத மாதிரி கேட்கற… நான் தான் அடுத்த வாரம் நமக்கு register marriage ன்னு last week சொல்லிருந்தேனே…” என்று கொஞ்சும் குரலில் கூறினாள் வைஷ்ணவி.

“நான் அதுக்கு சம்மதம் சொல்லலை வைஷு… ” என்று ராம் நறுக்கு தெறித்தார் போலக் கூற, “நீ என்னை வேண்டாமுன்னு சொல்ல மாட்ட ராம்.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் வைஷ்னவி.

“இதை ஏன் call பண்ணும் பொழுது சொல்லலை…” என்று ராம் தன் கண்களைச் சுருக்கி கேட்க, ‘சொன்னால் நீ வர மாட்டேன்னு ஒரு சந்தேகம்…’ என்று எண்ணியவளாக மௌனம் காத்தாள் வைஷ்ணவி.

“ராம்… இப்ப எதுக்கு இந்தத் தேவை இல்லாத பேச்சு… உனக்கு இன்னைக்கு பெண் பார்க்க போறாங்க… தேவை இல்லாம எந்த பேச்சையும் வளர விடாமல், முதலில் நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவோம்…” என்று வைஷ்ணவி பிடிவாதமாக நின்றாள்.

ராம் வைஷ்னவியை கோபமாக முறைக்க, அவனைச் சட்டை செய்யாமல், “நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்… அப்பா, வந்துருவாங்க… வா போகலாம்…” என்று வைஷ்னவி தன் முடிவில் உறுதியாகக் கூறினாள்.

“அப்பாவா?” என்று ராம் அதிர்ச்சியாகக் கேட்க, “எங்க அப்பா இல்லாமல் எப்படி? நான் உன் ஊருக்கு வர முடியாது. உங்க வீட்டில் இதை ஒத்துக்க மாட்டாங்க… நமக்குன்னு யாரவது வேணுமில்லை. எங்க அப்பா எல்லாம் பார்த்துப்பாங்க… அப்பாவுக்கு என் கல்யாணம் இப்படி நடப்பதில் வருத்தம் தான். ஆனால், வேற வழி இல்லையே… நீ எதுக்குமே ஒதுக்க மாட்டேங்கற… உங்க வீட்டில் என் பக்க நியாயத்தைப் பேச மாட்டேங்கற… அதுக்கு தான் இந்த ஏற்பாடு… நம்ம reception யை பெருசா வச்சிரலாமுன்னு முடிவு பண்ணியாச்சு…” என்று வைஷ்ணவி தெளிவாக கூறினாள்.

வைஷ்ணவி பேசியதில் எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சி பேசுறியா வைஷ்ணவி?” என்று அழுத்தமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

“ம்… எனக்கு எங்க அப்பாவும் வேணும். நீயும் வேணும்… நம்ம கல்யாணம் நடந்துவிட்டால் எல்லாம் சரி ஆகிரும்.” என்று வைஷ்ணவி தன் மனதில் உள்ளதை மறைக்காமல் கூறினாள்.

“என் விருப்பம்?” என்று ராம் நிதானமாகக் கேட்க, “நீ என்ன இன்னைக்கு பார்க்க போற பெண்ணையா பிடிச்சிருக்குனு சொல்ல போற… உன் விருப்பம் நான் தானே ராம்.” என்று அவன் கண்களை பார்த்து நிதானமாகக் கூறினாள் வைஷ்னவி.

ராம் மறுப்பாகத் தலை அசைத்து, “நான் அந்தப் பெண்ணை பிடிச்சிருக்குனு சொல்றேன்… இல்லை பிடிக்கலைன்னு சொல்றேன்… அது என் பிரச்சனை… ஆனால், நீ…. ச்ச…” என்று வெறுப்பாகக் கூறினான் ராம் பிரசாத்.

“எனக்கு உன்னைப் பிடிக்கும்… உண்மை தான்… உன்னைக் கல்யாணம் செய்யணும்னு ஆசைப் பட்டது உண்மை தான். ஆனால், எங்க வீட்டைத் தூக்கி எறிஞ்சிட்டு உன் பின்னாடி வர அளவுக்கு இல்லை.” என்று கோபமாக கூறினான் ராம்பிரசாத்.

“ஆஹா.. அப்ப நான் மட்டும் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன் பின்னாடி வரணுமா?” என்று வைஷ்ணவி கோபமாக கேட்க, “நான் புதுசா எதுவும் சொல்லலை வைஷ்னவி… காலாகாலமா நடக்கிறது தானே. உன் பணத்தை உன் பிடிவாதத்தை தூக்கிப் போட்டுட்டு உன் சொந்தத்தோடு வா… ” என்று வைஷ்ணவியின் முகம் பார்த்து கூறினான் ராம்பிரசாத்.

“என்ன படிச்சிருந்தாலும்… டிப் டாப்பா டிரஸ் பண்ணிருந்தாலும் நீ ஒரு பட்டிக்காடு தான் ராம் பிரசாத்.” என்று வைஷ்னவி கூற, “யாரு பட்டிக்காடு?” என்று தன் கண்களைச் சுருக்கி வைஷ்னவியை கூர்மையாக பார்த்து அழுத்தமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

“நீ பட்டிக்காடு… பையன் வேலை அவன் வாழ்க்கையை புரிஞ்சிக்க தெரியாத உங்க வீட்டு ஆளுங்க தான் படிக்காத பட்டிக்காடு…” என்று வைஷ்ணவி விட்டெறியாக கூற, “போதும்… வைஷ்னவி நிறுத்து… நீ கோபத்தில் முட்டாள்தனமா பேசிட்டுட்டு இருக்க… என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.” என்று தன் கைகளை இறுக கட்டிக்கொண்டு கர்ஜித்தான் ராம்பிரசாத்.

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன். நம்ம படிச்ச படிப்புக்கு உங்க கிராமத்தில் வேலை இல்லை. எங்க அப்பா.. எங்க பிசினெஸ் எல்லாம் இங்க தான்… அதனால் நீ இங்க வந்திரு… இதைச் சொல்லி உங்க வீட்டில் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குன்னு சொன்னேன்… உனக்கு அதுக்கு துப்பில்லை.. இப்பவும் சொல்றேன்… திரும்பவும் சொல்றேன்… நீ ஒரு பட்டிக்காடு… வயலில் வேலை பார்த்து, குடும்பத்தை நடத்தும் உங்க குடும்பம் பட்டிக்காட்டு குடும்பம். இன்றைய படிப்பு, வேலை இதை எதையும் புரிஞ்சிக்க தெரியாத நாகரிகம் தெரியாத பட்டிக்காடு…” என்று நிறுத்தாமல் பேசி கொண்டிருந்த வைஷ்னவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் ராம்பிரசாத்.

” யாரை பாத்து, என்ன பேசுற? கிராமம்ன்னா என்னனு தெரியுமா? விவசாயம் பத்தி தெரியுமா? அவங்க வாழ்க்கையைப் பத்தி, அதோட அருமை பெருமை தெரியாத நீ தான் படிச்சும் அறிவில்லாத முட்டாள். பெண்ணாச்சேன்னு பொறுமையா இருந்தா… இன்னும் ஒரு வார்த்தை பேசி பாரு… சங்கை நெரித்து கொன்றுவேன்.” என்று ராம்பிரசாத் வைஷ்ணவியை தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்ட, அப்பொழுது அங்கு வந்த வைஷ்ணவியின் தந்தை ராம் பிரசாத்தின் சட்டையைக் கொத்தாக பிடித்தார்.

“அப்பா… விடுங்க… ராம் எனக்கு வேணும். அதுவும் நான் நினைத்தபடி என் வாழ்க்கை இதே ஊரில் உங்க கூடவே அமையனும்.” என்று குழந்தையின் பிடிவாதத்தோடு கூற, “நடக்கும்…” என்று அழுத்தமாகக் கூறினார் வைஷ்ணவியின் தந்தை.

ராம்பிரசாத், அவர்கள் இருவரையும் கோபமாக பார்த்து, “என்ன நடக்கும்… நீங்க நினைத்த மாதிரி எதுவும் நடக்காது.” என்று ராம் அவர்களைச் சட்டை செய்யாமல் எங்கோ பார்த்தபடி கூறினான்.

“போங்க.. நீங்க பார்த்த பெண்ணைப் பார்த்து சம்மதம் சொல்லுங்க… உங்க ஊருக்கு வந்து உங்க கல்யாணத்தை நிறுத்தி, உங்களை உங்க கிராமத்தில் வாழவிடாமல் செய்றேன். என் பொண்ணோட ஆசைக்காக நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்.” என்று வைஷ்ணவியின் தந்தை சூளுரைக்க, ராம் அழகாகப் புன்னகைத்தான்.

அவர் முன் சொடக்கிட்டு, “இப்பவும் சொல்றேன்.. சம்மந்தமே இல்லாமல் இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க எனக்கும் விருப்பம் இல்லை.. நான் உங்க பெண் மேல் வைத்த அன்பு உண்மை. இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் உங்களுக்கு நேரம் தரேன். உங்க பணக்கார திமிர், அகங்காரம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வாங்க… நான் மனசார சந்தோஷமா உங்க பெண்ணை கல்யாணம் செய்றேன்.” என்று தன் பேச்சை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான் ராம்பிரசாத்.

“அந்த கல்யாணம் எங்க ஊரில், எங்க வீட்டு ஆளுங்க முன்னாடி நடக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் எங்க ஊரில் தான் எங்க வாழ்க்கை அமையனும். எங்க வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை இல்லைன்னா, இத்தோட எல்லாத்தையும் முடிச்சிப்போம். அப்படியே போய்டுங்க… இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம். எங்க ஊருக்கு வந்து உங்களால் ஒரு புல்லை கூட எனக்கு எதிரா அசைக்க முடியாது.” என்று சவால் விட்டு அங்கிருந்து கிளம்பினான் ராம் பிரசாத்.

மாலை ராம் பிரசாத் குழப்பமான மனநிலையில் இருந்தான். ‘வைஷ்னவி விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டுமா… இல்லை சொல்ல வேண்டாமா…’ என்று அவனுக்கு உண்மையாக தெரியவில்லை.

ராம் பிரசாத்தின் குழப்பமான முகத்தை பதட்டம் என்றெண்ணி, “பெண் பார்க்க போகும் பொழுது நமக்கு இருக்கும் இந்தப் பதட்டம் யாருக்கு தெரியுது.” என்று சந்துரு பிரசாத்தின் தோள் மேல் கை போட்டுக் கோமதியை பார்த்து கேலியாக கூறினான்.

சந்துருவின் தாயோ, “உங்களுக்கு ஏன் டா பதட்டமா இருக்கு. எனக்குத் தான் வயிற்றில் புளியை கரைக்குது. வாசு இருப்பான். அவன் முகத்தை காட்டிருவானோ? இன்னைக்கு உத்தமி இருக்க மாட்டான்னு நம்பறேன்.. அவ வந்திருந்தா பழைய கதை பண்டக் கதையெல்லாம் பேசிருவாளோ நானே உயிர் நாடியைக் கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கேன்…” என்று பதட்டமாக கூறினார்.

“அத்தை… அவங்கெல்லாம் வந்திருக்க மாட்டங்க… பெண் தானே பார்க்க போறோம்.” என்று கோமதி சமாதானமாகக் கூற, “என்னைக்கு நாளும் அவளைச் சந்தித்து தானே ஆகணும்.” என்று விடாப்பிடியாக கூறினார் பார்வதி.

“பார்வதி அதை அப்ப பார்த்துக்கலாம்… தேவை இல்லாமல் எதுக்கு பேசிகிட்டு…” என்று சிவசைலம் கண்டிக்க, பார்வதி அமைதியாக அவர்களைப் பார்த்தார்.

ராம் அவர்கள் பேசுவதை கேட்டு, சிந்தனையில் ஆழ்ந்தான். ‘நான் திருமணத்தை மறுத்தால், காரணம் கேட்கிறார்கள்… என்னால் வைஷ்னவியை நம்பி எதைச் சொல்ல முடியும்… இப்படி திருமண பேச்சு இவ்வளவு தூரம் வந்திருச்சே… ‘

செய்வதறியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ராம்பிரசாத்.

‘விதி நம்மைத் துரத்துகிறதா?

இல்லை விதியின் பின் நாம் ஓடுகிறோமா?

பதில் தெரிந்தால் சித்தாந்தம்…

பதிலில்லா கேள்விகள் வேதாந்தம்…’

என்றோ யாரோ கூறியது நினைவு வர புன்னகைத்துக் கொண்டான் ராம் பிரசாத்.

சிறிது நேரத்தில், ராம்பிரசாத் வானம் போன்ற நீல சட்டை அணிந்து விதியின் போக்கின் படி தயாராகிருந்தான்.. சந்துரு, சிவசைலம் வேஷ்டி சட்டை அணிந்து கிளம்பியிருந்தனர். கோமதி, பார்வதி இருவரும் பட்டு சேலை, நகைகளோடு கிளம்பியிருக்க , அகல்யா பட்டு பாவாடை அணிந்து அங்குச் செல்வதற்கு ஆர்வமாகக் காத்திருந்தாள். அனைவரும் நந்தினியின் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

நந்தினி வீட்டில் செல்வி, ஆவுடையப்பன், பவித்ரா மூவரும் இவர்களை வாசல் வரை வந்து வரவேற்றனர். சந்தோஷ் அகல்யாவை உள்ளே அழைத்துச் செல்ல, வாசுதேவன், அவர்களைக் காண விரும்பாமல், வெளியே வருவதைத் தவிர்க்கவும் முடியாமல் அவர்கள் அறைக்குள் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தான்.

வாசுதேவனின் கண்முன் பல காட்சிகள் தோன்றி, அவனை இம்சித்தது.

ஆவுடையப்பன், அனைவரையும் அறிமுகப்படுத்த, வேறு வழின்றி வாசுதேவன் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்து அவர்களைத் தலை அசைத்து வரவேற்றான்.

“வ….” என்று பார்வதி உண்ர்ச்சி பொங்க பேசத்தொடங்க, தன் மனைவியை அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினார் சிவசைலம்.

அப்பொழுது, வாசுதேவனை, “பெரிய மாப்பிள்ளை…” என்று ஆவுடையப்பன் அறிமுகப்படுத்த, சந்துருவைத் தவிர அனைவரும் அமைதியாகத் தலை அசைத்துக் கொண்டனர்.

“சந்துரு… சந்திரசேகர்…” என்று தீவிரமான முகபாவனையோடு புதிய நபரைப் போல் வாசுதேவனிடம், சந்திரசேகர் கை குலுக்க, பவித்ராவின் இதயம், படு வேகமாகத் துடித்தது.

வாசுதேவன் வேறு வழின்றி கைகுலுக்கி எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.பெரியவர்கள் ஏதோதேதோ பேச, ராம்பிரசாத் குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

பவித்ரா தன் தங்கை இருக்கும் அறைக்குள் சென்றுவிட, அப்பொழுது, சந்துரு அருகே இருந்த கோமதி, “என்னங்க.. உங்க நக்கல் வேலை எல்லாம் இங்க வேண்டாம்…” என்று தன் கணவன் காதில் கிசுகிசுத்தாள்.

“அவுக கோபமா இருக்கிற மாதிரி தெரியுது… பிரச்சனை இல்லாமல் கல்யாணத்தை முடிச்சிட்டு, அப்புறம் எல்லாத்தையும் சரி செய்வோம்…” என்று தன் கணவன் சந்துருவை எச்சரித்தாள் கோமதி.

“கல்யாணம் பேசணுமுன்னு சொன்னது நீ.. பேச வந்தாச்சு… அப்புறம் நடக்கறதை எல்லாம் அமைதியா வேடிக்கை மட்டும் பாரு. யாரும் ஒரு பிரச்சனையும் பண்ண முடியாது… அவுகளுக்கு மட்டுந்தா கோபமா? ஏன் எனக்குக் கோபம் இல்லையா? எனக்குக் கோபத்தை தாண்டி வருத்தமும் இருக்கு.” என்று முணுமுணுத்தான் சந்திரசேகர்.

” தேவாவுக்கு அவுக வீட்ல எல்லாரையும் அவன் கட்டுக்குள் வைத்திருக்கிறதா நினைப்பு… நான் தேவா குழந்தையை தூக்கக் கூடாதா? கொஞ்சக் கூடாதா? எனக்கு இல்லாத உரிமையா? ஊரில் சந்தோஷை கண்ணில் காட்ட மாட்டேங்கிறான்… இப்ப என்ன பண்ணறேன் பாரு. நீ நொய்…நொய்யுன்னு எதுவும் சொல்லாம இரு…” என்று தன் மனைவியிடம் கூறி, “சந்தோஷ், அகல்யா இங்க வாங்க..” என்று கூறி இருவரையும் தங்கள் மடியில் வைத்துக் கொண்ட சந்துருவின் முகத்தில் குறும்பு புன்னகை பூத்தது.

வாசுதேவன் சந்துருவின் எண்ணங்கள் புரிந்து, அவனை கோபமாகப் பார்க்க, ‘இவுக ஏற்கனவே வச்சிருந்த திட்டத்தை நம்ம பேரைச் சொல்லி செய்றாகளோ…’ என்று தன் கணவனைச் சந்தேகமாக பார்த்தாள் கோமதி.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…

error: Content is protected !!