IO-7
IO-7
இரண்டல்ல ஒன்று – 7
விடிந்தும் விடியாத காலை பொழுது… உத்தமி எழுந்து கொள்ள, மஹாதேவன் தன் தோளில் இருந்த துண்டால் தன் முகத்தைத் துடைத்தபடி, “என்ன உத்தமி… நீ நினைத்த மாதிரி எல்லாம் நடந்திருச்சு போல?” என்று நக்கலாக தன் மனைவியைப் பார்த்து கேட்டார்.
“நான் அப்படி என்ன நினச்சேன்?” என்று தன் புடவை முந்தானையைச் சொருகியபடியே கேட்டார் உத்தமி.
“மகன் தனியா காலையில் தோட்டத்துக்கு போயிருக்கான்.” என்று மஹாதேவன் கூற, ‘நேற்று என்ன நடந்திருக்கும்?’ என்ற சிந்தனையோடு பின்கட்டுக்குச் சென்றார் உத்தமி.
அங்கு நின்று கொண்டிருந்த வாசுதேவனைப் பார்த்து பதறியபடி, “ஐயோ… வாசு…” என்று பதட்டத்தோடு சத்தமிட்டார்.
தன் தாயின் சத்தத்தில், நனவுலகத்திற்கு திரும்பிய வாசுதேவன்… கையில் வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்தான்.
தலையை இருபக்கமும் அசைத்து, அங்கிருந்த அடிபம்பின் கைப்பிடியை ஒரு கையால் அடித்து, வேகமாக விழுந்த தண்ணீரில் கைகளைக் கழுவினான் வாசுதேவன்.
“அவள எங்க?” என்று உத்தமி பதட்டமாக கேட்க, “தூங்கறா அம்மா…” என்று தன் கைகளைப் பார்த்தபடி வாசுதேவன் பதில் கூற, “பவித்ரா… பவித்ரா…” என்ற உத்தமியின் சத்தம் வீடெங்கும் ஒலித்தது.
“அம்மா… பவித்ரா சோர்வா தூங்கறா… அவள எழுப்ப வேண்டாம்.” என்று தன் தாயைத் தடுக்க முயற்சித்தான் வாசுதேவன்.
சோர்வான முகத்தோடும், கலங்கிய கண்களோடும் எழுந்த பவித்ரா உத்தமியின் சத்தத்தில் முகத்தைத் துடைத்தபடி தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
வாசுதேவன் இறுகிய முகத்தோடு பவித்ராவை மௌனமாகப் பார்த்தான். வாசுதேவன் முகம் பார்ப்பதை தவிர்த்து, பவித்ரா தலையைக் குனிந்து கொள்ள, வாசுதேவனின் ரத்தம் வடியும் கை, அவள் கண்ணில் பட்டது. பவித்ராவின் இதயம் வேகமாகத் துடிக்க, வாசுதேவன் அருகே சென்றாள்.
கையில் இருக்கும் காயத்தை கூர்ந்து கவனிக்க, அத்தனை ஆழமான காயம் இல்லை என்றறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் பவித்ரா.
நேற்று நடந்த வாக்குவாதத்தின் பலனால், மௌனம் மேற்கொண்ட பவித்ரா அமைதியாக, சுத்தமான ஈரத் துணியால் வாசுதேவனின் கைகளை இறுகக் கட்ட ஆரம்பித்தாள்.
“அட கூறு கேட்ட பயலே… இப்படியா காலங்காத்தால கையை அறுத்துப்ப… சூதானம வேல பாக்க வேணாமா? உனக்குக் கொஞ்சமும் அறிவில்லை…” என்று உத்தமி தன் போக்கில் வாசுதேவனைத் திட்ட, “அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே…” என்று முணுமுணுத்தாள் பவித்ரா.
வாசுதேவனின் இறுகிய முகத்தைத் தாண்டி, அவன் உதடுகள் மெலிதாக வளைந்தது.
அதைக் கண்டும் காணாதது போல் வாசுதேவனிடம் எதுவும் பேசாமல், துணியைக் கட்டி கொண்டிருந்தாள் பவித்ரா. அவன் அருகாமையில் பவித்ராவின் கண்கள் மீண்டும் கலங்கியது.
அதை உத்தமி அறியாவண்ணம் மறைத்துக் கொள்ள, தன் கண்களை இறுக மூடிக் கண்சிமிட்டினாள் பவித்ரா. அதையும் தாண்டி, பவித்ராவின் கண்களில் இருந்து வெளி வந்த கண்ணீர் வாசுதேவனின் கைகளில் விழுந்தது.
வாசுதேவன் கண்ணுயர்த்தி பவித்ராவின் முகத்தை பார்த்தான்.
பவித்ரா வெடுக்கென்று தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
எதிர் பக்கம் நின்று கொண்டிருந்த உத்தமிக்கு இருவரின் மௌனத்தை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பவித்ரா எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
பட்டாளையில் இருந்த நாற்காலியில் வாசுதேவன் அமர்ந்திருக்க, பவித்ரா இறுக்கமான முகத்தோடு அவனுக்குக் காபி கொடுத்துவிட்டு, மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்க, உத்தமியின் கண்கள் அவர்களையே கண்காணித்து கொண்டிருந்தது.
பவித்ராவின் செய்கையைப் பார்த்து, ‘இது சரி வராது…’ என்றெண்ணி, “அம்மா… சந்தோஷுக்கு நாளைக்குப் பள்ளிக்கூடம் போகணும். அவன் வீட்டில் இருக்கட்டும்… நானும், பவித்ராவும் வெளிய போயிட்டு வரோம்.” என்று வாசுதேவன் கூற, பவித்ரா சமையலறையில் இருந்து வாசுதேவனை முறைத்துப் பார்த்தாள்.
மகனின் வார்த்தைக்கு நேரில் எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கம் இல்லாத உத்தமி, பல சிந்தனைகளோடு சம்மதமாகத் தலை அசைத்தார்.
“பவித்ரா… அடுக்களையிலிருந்து முதலில் வெளிய வா… அம்மா பாத்துப்பாங்க…” என்று கண்டிப்பான குரலில் கூறினான் வாசுதேவன்.
பவித்ரா அவர்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள, வாசுதேவன் வெளியே செல்ல ஆயுதமானான்.
“இதைத் தானே நீ எதிர்பார்த்த?” என்று மஹாதேவன், உள்ளே சென்ற மருமகளை பார்த்தபடி, குற்றம் சாட்டும் குரலில் உத்தமியிடம் அவருக்கு மட்டும் கேட்குமாறு வினவினார்.
“எனக்கு இந்தத் திருமணம் நடப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. சந்துரு பண்ண வேலை அப்படி…” என்று கடுப்பாக கூறினார் உத்தமி.
“தப்பு நம்ம பக்கமும் இருக்கு…” என்று மஹாதேவன் வருத்தமான குரலில் கூற, “சந்துரு நினைச்சிருந்தா தப்பே நடந்திருக்காது…” என்று உத்தமி கலங்கிய குரலில் விடாப்பிடியாகக் கூறினார்.
“உத்தமி அது பழைய கதை… மறக்கக் கூடாதா?” என்று மஹாதேவன் சமாதானம் செய்யும் குரலில் கூறினார்.
உத்தமி கண்கலங்க மஹாதேவனை பார்த்தார். “உங்களால் மறக்க முடியுமா?” என்று உடைந்த குரலில் உத்தமி தன் கணவரைப் பார்த்து கேட்டார்.
மஹாதேவன் தன் கண்களை இறுக மூடி தலையை இரு பக்கமும் அசைத்து, பழைய நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டார். “மறக்க முயற்சிக்கலாம்…” என்று மகாதேவனின் உதடுகள் முணுமுணுத்தது.
“சந்துரு என்னை அம்மான்னு கூப்பிடும் பொழுது, வாசுவுக்கும் அவனுக்கும் நான் வித்தியாசமே பார்ததில்லைங்க… ஆனால் சந்துரு, வித்தியாசம் பார்த்துட்டான்…” என்று உத்தமி கசப்பான குரலில் கூறினார்.
“ஏதோ நடந்தது நடந்து போச்சு…” என்று மஹாதேவன் தன் மனைவியின் மனதை மாற்ற முயற்சிக்க, உத்தமி மறுப்பாகத் தலை அசைத்தார்.
“என்னால் அவனை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.” என்று உத்தமி உறுதியாகக் கூற, மஹாதேவன் தன் மனைவியை அமைதியாகப் பார்த்தார்.
அந்த மௌனம் நீடிக்க, “அது தான் உன் மகன் மனசை குழப்பிட்டியே…” என்று மஹாதேவன் சலிப்பாக கூற, “வாசுவை நம்ப முடியாது. என் முன்னாடி என் கிட்ட தலை ஆட்டுவான்…அவன் பொஞ்சாதியை பாத்ததும் மனசு மாறிருவான்…” என்று உத்தமி தலை அசைத்து கணக்கிடும் குரலில் கூறினார்.
“அப்ப பொஞ்சாதியை பாத்தா என்னை மாதிரி மாறிருவான்னு சொல்லு…” என்று கூறி மஹாதேவன் பெருங்குரலில் சிரிக்க, உத்தமி முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை தோன்றினாலும் அதை மறைத்துக் கொண்டு, தன் கழுத்தை நொடித்து பின்கட்டுக்கு சென்றார்.
பச்சை பசேல் என்ற இலைகள், அங்கு வீசிய காற்றில் மெலிதாக அசைந்தாட, அதை ரசிக்க மனம் இல்லாமல், வெளியே கிளம்பவும் மனம் இல்லாமல், தங்கள் அறையில், பவித்ரா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நிற்க, அவளை இடித்துக் கொண்டு பவித்ரா அருகே சென்று நின்றான் வாசுதேவன்.
சடாரென்று, அங்கிருந்து பவித்ரா விலக எத்தனிக்க, வாசுதேவன் அவளை தன் கையால் சுற்றி வளைத்து ஜன்னல் கம்பியை பிடித்திருந்தான்.
சிறைப்பட்டவளாய், திரும்ப முடியாமல் பவித்ரா அதே நிலையில் நின்று கொண்டிருக்க, வாசுதேவன் மெலிதாக புன்னகைத்தான்.
‘ நீ வாய் திறந்து பேசினால் தான் கையெடுப்பேன்…’ என்ற மறைமுக ஆணை வாசுதேவனின் கண்களில் இருப்பதாக பவித்ராவுக்கு தோன்றியது.
சற்று நேரம் பொறுத்து, பொறுமை இழந்தவளாய் பவித்ரா தன் தொண்டையை கனைத்துக் கொள்ள அவளைப் போலவே வாசுதேவன் தன் தொண்டையை கனைத்துக் கொண்டான்.
பவித்ரா, “ம்..க்கும்..” என்று சலிப்பாக குரல் எழுப்ப, வாசுதேவன் அவளை போலவே சத்தம் எழுப்ப, பவித்ரா கடுப்பாகி வாசுதேவனைக் கோபமாக முறைத்துப் பார்த்தாள்.
வாசுதேவன் அவளைப் புன்னகையோடு பார்க்க, “யாரும் என்னைச் சமாதானம் செய்ய வேண்டாம்…” என்று மிடுக்காகக் கூறினாள் பவித்ரா.
“யாரும் யாரையும் சமாதானம் செய்யலை…” என்று அசட்டையாகக் கூறினான் வாசுதேவன்.
“அது தானே, எதுக்கு சமாதானம் செய்யணும்? ராத்திரி பொண்டாட்டியை அடிஅடின்னு அடிச்சாலும் மறுநாள் காலையில் அதே பொண்டாட்டி விஷத்தைக் கொடுக்காமல் காபி கொடுத்தா எதுக்கு சமாதானம் செய்யணும்?” என்று குரலில் வெளி வந்த ஏமாற்றத்தோடு கேட்டாள் பவித்ரா.
கைகளை எடுத்து, அவளிடமிருந்து சற்று விலகி நின்று அவளை ஆழமாகப் பார்த்தான் வாசுதேவன்.
“நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?” என்று ஆழமான குரலில் கேட்டான் வாசுதேவன்.
பவித்ரா பதில் கூறாமல் அவனை முறைக்க, “வழக்கமா தேவாமிர்தமா இருக்கிற காபி… இன்னைக்கு விஷம் மாதிரி தான் இருந்துச்சு…” என்று வாசுதேவன் கண்ணடித்து கூற, பவித்ரா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
தன் நகைச்சுவை சுவைக்காமல் போனதை உணர்ந்து, வாசுதேவன் பவித்ராவின் முகத்தை தன் பக்கம் திருப்ப, அவள் தன் தலையை அழுத்தமாகக் குனிந்து கொண்டாள்.
வாசுதேவன் வல்லந்தமாக அவள் முகத்தை நிமிர்த்த பவித்ராவின் கண்கள் கலங்கியது.
பவித்ராவை அருகில் இழுத்துக் கொண்டு, அவள் கண்களை துடைத்த படி “அழாத டீ… மனசு தாங்கலை…” என்று தேனினும் இனிதான குழைவான குரலில் கூறினான் வாசுதேவன்.
அவனிடமிருந்து, விலகி நின்று “அத்தான்… என்னை அடிச்சிடீன்கள்ல?” என்று கண்ணீர் மல்கக் கேட்டாள் பவித்ரா.
“நான் தான் உன் அத்தான் இல்லியே…” என்று குரலில் தழுதழுப்போடு கூறினான் வாசுதேவன்.
“இப்பவும் அதைத் தான் சொல்றேன்…” என்று கோபமாக பவித்ரா கூற, அங்கு மொபைல் ஒலித்தது.
அதில் நந்தினி என்ற பெயர் மின்ன, “சொல்லு நந்தினி…” என்று பவித்ரா தன் கலங்கிய குரலை மறைத்து, சிரித்தமுகமாக கூறினாள்.
“என்ன அக்கா ஜாலியா இருக்கியா உங்க வீட்டில… இன்னும் ஒரு மாசம் தான்… அப்புறம் நேரங்காலம் இல்லாமல் உன் வீட்டுக்கு வந்து உன் உயிரை எடுப்பேன்…” என்று நந்தினி உரிமையாகக் கூறுவது, வாசுதேவனின் காதிலும் விழுந்தது.
“வா… நந்தினி…நீ எப்ப வருவேன்னு தா நான் காத்துகிட்டு இருக்கேன்….” என்று பவித்ரா வாஞ்சையோடு கூற, வாசுதேவனின் புருவங்கள் முடிச்சிட்டன.
அக்கா தங்கையின் உரையாடல் தொடர, ‘என் கஷ்டத்தையும், நீங்க அடிச்சா சொல்லி அழக் கூட யாரும் இல்லாமல் நான் இந்த ஊரில் தனியா வாழற வாழ்க்கைக்கு விடிவு காலம்… என் தங்கை இங்க வந்தவுடன் வரும். அவ என்னைப் பார்க்க அடிக்கடி வருவா…’ என்று நேற்று பவித்ரா கூறிய வார்த்தைகள் வாசுதேவனின் காதில் மீண்டும் ஒலித்தது.
தலை அசைத்து ஒரு முடிவுக்கு வந்தான் வாசுதேவன்.
வாசுதேவன் வெளியே செல்ல தயாராக, தங்கையுடனான உரையாடலை முடித்துக் கொண்டு, தன் மறுப்புக்கு மதிப்பிருக்காது என்றறிந்து பவித்ரா அவனோடு வெளியே செல்ல தயாரானாள்.
“கையில் அடிபட்டிருக்கு… அவசியம் போகணுமா?” என்ற பவித்ராவின் கேள்விக்கு வாசுதேவனிடமிருந்து பதில் வரவில்லை.
பவித்ரா அவனை மௌனமாகப் பின்தொடர, “கையில் கட்டோடு போகணுமா?” என்று உத்தமி அவர்களை நிறுத்த, “அவ்வளவு பெரிய காயம் இல்லைம்மா…” என்று தன் தாயிடம் கூறிவிட்டு, அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.
‘பவித்ராவோடு பொறுமையாகப் பேச வேண்டும்… தனியாகப் பேச வேண்டும்…’ என்ற எண்ணத்தோடு வாசுதேவன் ஜீப்பை கிளப்பினான். பவித்ரா நந்தினியின் கல்யாண கனவோடு அமைதியாக அமர்ந்திருக்க, அவள் அமைதியைக் கலைக்க விரும்பாமல் வாசுதேவனும் மௌனத்தை கடைப்பிடித்தான்.
இவர்கள் மௌனத்திற்கு நாம் ஏன் இடைஞ்சலாக? பவித்ரா, வாசுதேவன் இருவருக்கும் சற்று தனிமை கொடுத்து, நாம் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள அவர்களை நோக்கிப் பயணிப்போம்.
பண்ணைவீட்டில், அனைவரும் திருமண வேலைகளைப் பற்றி மும்முரமாகப் பேசி கொண்டிருக்க, ராம் அந்த வீட்டின் நடு கூடத்தில் சிந்தனையில் ஆழ்ந்தவனாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
“உங்க அண்ணன் சந்துரு இந்தக் கிராமத்தில் விவசாயம் பாக்கறான்… நீ என்ன பண்ண போற?” என்று அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த ராம் பிரசாத்தின் தந்தை அவனிடம் கேட்க, “சொல்றேன் அப்பா…” என்று பதவிசமாக கூறினான் ராம்.
“இப்படி கல்யாண நேரத்தில், வேலையை அவசியம் விடணுமா?” என்று சிவசைலம் கேட்க, “இல்லை அப்பா… நான் படிச்ச படிப்புக்கு எனக்கு நிறைய கனவுகள் இருக்கு… இத்தனை வருஷம் வேலைக்குப் போனது ஒரு வெளி உலக அனுபவத்திற்காகத் தான்… எனக்கு நம்ம ஊரில் தான் இருக்கணும்… நான்…” என்று ராம் மேலும் பேச ஆரம்பிக்க, சந்துரு குறுக்கே புகுந்தான்.
“அப்பா… ராம் அதெல்லாம் பொறுப்பா பார்த்துப்பான்… நீங்க அவனை பத்தி யோசிச்சி கவலைப் பட வேண்டாம்…” என்று தன் தந்தையிடம் கூறி, “ராம், எதுனாலும் கல்யாணம் முடிந்த பிறகு பார்த்துக்கலாம்…” என்று சந்துரு கூற, ராம் சம்மதமாக தலை அசைத்தான்.
“நான் வயலுக்கு போயிட்டு, அப்படியே மில்லயும் பாத்துட்டு வாரேன்…” என்று கூறி சந்துரு வெளியே கிளம்பினான்.
ராம் சிந்தனையோடு, தன் அறைக்குள் நுழைந்தான்.
வேலையை விட, வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை ராம் முன் பூதாகரமாய் எழுந்து நின்றது.
‘நான் நந்தினியிடம் பேச வேண்டும்… அவளிடம் எல்லா விஷயங்களையும் கூற வேண்டும்…’ என்று எண்ணியவனாக தன் மொபைலை எடுத்து தன் அண்ணி கோமதியின் கைகாரியமாக கிடைத்த நந்தினியின் எண்ணைப் பார்த்தான்.
சற்று தயக்கத்தோடும், தடுமாற்றத்தோடும் ராமின் இதயம் வேகமாகத் துடித்தது.
ராம் யோசிக்க அவகாசம் கொடுத்து, நாம் சென்னை நோக்கிப் பயணிப்போம்.
நந்தினி தன் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அது ஒரு சூழல் நாற்காலி, அரை வட்டம் அடித்து, தன் முன் இருந்த சிறு பொம்மையை பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் அருகே ஒரு Gift box இருந்தது.
‘ என்னைப் பெண் பார்க்க வந்த அன்னைக்கு, அகல்யா… எங்க சித்தப்பாவும் இந்த மாதிரி பொம்மை செய்வாங்கன்னு சொன்னாலே… ஒரு வேளை அவங்களுக்கு என்னை மாதிரி இதெல்லாம் பிடிக்குமோ?’ என்று சிந்தித்தாள் நந்தினி. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
நாம் கூர்ந்து கவனித்தால், அதைப் பொம்மை என்று மட்டும் சொல்ல முடியாது. உலோகத்தால் ஆன அந்த பொம்மை, ஒரு சிறிய ரோபோட் பொம்மை போல் காட்சி அளித்தது.
“மனுஷன் மாதிரி இருந்தா தா ரோபோட்ன்னு கிடையாது… நான் சொல்ற மாதிரி செய்ற நீங்களும் ரோபோட் தான்… சரியா?” என்று நந்தினி கேட்க, ” கரெக்ட்…” என்று இயந்திர குரலில் கூறியது அந்தச் சிறிய பொம்மை.
அது Voice Recognition பொருத்தப்பட்ட, பொம்மை என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. பொம்மை போல் காட்சி அளித்தாலும், நந்தினியின் மனம் கோணாமல் இருக்க நாமும் இனி பொம்மையை ரோபோட் என்று அழைப்போம்.
“நந்தினி பேரழகி…” என்று நந்தினி கூற, “கரெக்ட்…” என்று இயந்திர குரலில் அந்த ரோபோட் கூற, நந்தினி ஆர்வமாக, “நந்தினி அறிவாளி…” என்று தீவிரமாக கூறினாள்.
“கரெக்ட்…” என்று இயந்திர குரலில் அந்த ரோபோட் கூற, நந்தினி க்ளுக் என்று சிரித்தாள்.
“ராம்…” என்று நந்தினி மென்மையாக வெட்கப்பட்டுக் கூற, “நந்தினி…” என்று இயந்திர குரலில் கூறியது ரோபோட் .
“ராம்… ராம்…” என்று நந்தினி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற, “நந்தினி… நந்தினி…” என்று தான் உருவாக்கிய ரோபோட் கூற, நந்தினி தன் வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
அப்பொழுது அவள் அறைக்குள் வேகமாக நுழைந்த செல்வி, நந்தினியின் தாயார், அவள் தலையில் குட்டு வைத்து, “லூசு மாதிரி எப்ப பாரு பொம்மையோடு பேசிகிட்டு… இந்தப் பொம்மை பார்க்கவாது அழகா இருக்கா… எதோ machine மாதிரி இருக்கு…” என்று கடுப்பாக கூற, “கரெக்ட்…” என்று அந்த ரோபோட் இயந்திர குரலில் கூறியது.
“பார்த்தியா… அதுக்கு கூட தெரியுது..” என்று செல்வி கூற, “கரெக்ட்…” என்று அந்த ரோபோட் மீண்டும் இயந்திர குரலில் கூறியது.
“இது correct தவிர வேற எதுவும் சொல்லாத?” என்று செல்வி அந்தப் பொம்மையை கையில் எடுத்து அதை பார்த்தபடியே கேட்க, “கரெக்ட்…” என்று அந்த ரோபோட் மீண்டும் இயந்திர குரலில் கூறியது.
“நீ பண்ண பொம்மை தானே… அது தான் உன்னை மாதிரி லூஸாவே இருக்கு…” என்று செல்வி கேலியாகக் கூற, “கரெக்ட்…” என்று அந்த ரோபோட் மீண்டும் இயந்திர குரலில் கூற, செல்வியால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நந்தினி தன் ரோபோட் பொம்மையை கடுப்பாகப் பார்த்தபடி, “நீ வேற நேரங்காலம் தெரியாமல்…” என்று முணுமுணுக்க, “நந்தினி…” என்று செல்வி அவளைச் சத்தமாக அழைக்க, “ராம்…” என்று அலறியது அந்த ரோபோட்.
செல்வி நந்தினியை வைத்த கண் வாங்காமல் பார்க்க, “அது நாம என்ன சொன்னாலும் கரெக்ட் சொல்லும்… ராம் ன்னு சொன்னா, நந்தினின்னு சொல்லும்…. நந்தினின்னு சொன்னா ராம்ன்னு சொல்லும்…” என்று அசட்டுப் புன்னகையோடு கூறிய நந்தினி அந்தப் பொம்மையை OFF செய்தாள்.
செல்வி தன் தலையில் அடித்துக் கொண்டு, “இந்நேரம் ஏதாவது சமையல் வேலை கத்துக்கிட்டா, உன் மாமியார் வீட்டில என்னை திட்டாம இருப்பாங்க…” என்று கடுப்பாக கூறினார்.
‘ சமையல் வேலைக்கெல்லாம் robot பண்ணனும்…’ என்று மனதில் எண்ணிக்கொண்டு, “ஓ… கத்துக்கிட்டா பாராட்டுவாங்களா?” என்று நந்தினி அந்தப் பொம்மையை வைத்து விளையாடியபடியே கேட்க, அவள் விரல்கள் பட்டு ரோபோட் ON ஆனது.
“அது சரி… இப்படி எல்லாம் ஆசைப் படாத நந்தினி… புகுந்த வீட்டில் பாராட்டை எதிர்பார்த்தால் வாழ்க்கையில் ஏமாற்றம் தான் மிஞ்சும்… ஏதோ ஒன்னு ரெண்டு வீட்டில் அத்தி பூத்தால்ல பாராட்டலாம்…” என்று நந்தினியின் தாய் செல்வி அறிவுரை கூறினார்.
“கரெக்ட்…” என்று ரோபோட் இயந்திர குரலில் கூற, “பார்த்தியா இந்த பொம்மைக்கு இருக்கிற அறிவு கூட உனக்கில்லை…” என்று செல்வி சிரித்த முகமாகக் கூற, ரோபோட் பொம்மையின் விபரீத பதில் அறிந்து அது பேசும் முன் அதை அவசரமாக off செய்தாள் நந்தினி.
ராம்.. நந்தினி இப்படி சொல்ற மாதிரி உன்னை special ஆக ப்ரோக்ராம் பண்ணனும்.’ என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டாள் நந்தினி.
பாவம் நந்தினி அறியவில்லை அதற்கு அவசியமே இருக்காது என்று!
நந்தினியின் சிந்தனையை கலைக்கும் விதமாக அவள் மொபைல் ஒலித்தது.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…