விஷ்ணுவர்தன்
வெகு நேரம் கடந்து செல்ல ஆதுர சாலையில் இருந்து விஜயவர்தன் வீட்டிற்கு வருவான் என்று காத்திருந்து காத்திருந்து வைத்தீஸ்வரி சலிப்படைந்தாள்.
“வந்ததிலிருந்து என்னைப் பார்க்க வர வேண்டுமென்ற எண்ணமே அவருக்குத் தோன்றவில்லை… ஆதுர சாலையில் பொழுதெல்லாம் வைத்தியம் செய்வதில் மட்டும்தான் ஆர்வம்” என்று வைத்தீஸ்வரி புலம்பிக் கொண்டே இருந்தாள்.
அக்னீஸ்வரியோ கொய்த மலரை பூமாலையாக கட்டிக் கொண்டே சகோதரியின் புலம்பல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அக்காவின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் அத்தானும் ஏதேனும் முக்கியமான காரணத்தினால்தான் ஆதுர சாலையில் இருப்பார் என்பதாக அக்னீஸ்வரி எண்ணிக் கொண்டாள். ஆனால் அக்காவிடம் இவ்வாறு சொன்னால் அவள் கோபம் நிச்சயம் அதிகமாகும் என்பதை எண்ணி அமைதி காத்தாள்.
அக்னீஸ்வரி வண்ணமயமான பூமாலையை கோர்த்து முடித்து அதை இறைவனுக்கும் சூடிவிட்டாள். அப்பொழுதும் விஜயவர்தன் வந்தபாடில்லை.
வைத்தீஸ்வரி குடிலுக்குள் மனவேதனையோடு அமர்ந்திருக்க அக்னீஸ்வரி வெளியே நின்றபடி அவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
பொழுது சாய்ந்து ஆதவனின் பிடியிலிருந்து பூமி மீண்டிருக்கசந்திரன் தன் ஆளுமையை அப்போது மீட்டெடுத்து தலை தூக்கினான்.
விஜயவர்தன் புன்னகையோடு அக்னீஸ்வரியை நோக்கி வர அவளோ சந்தேகப் பார்வை பார்த்தாள்.
“அத்தான்தானா ?!” என்று யோசனையில் நின்றிருந்தவளின் அருகில் வந்தவன் அவளின் சந்தேகத்தை உணர்ந்து தலையில் குட்டிவிட “ஆ!! அத்தான்… வலிக்கிறது” என்று அலறினாள்.
“இப்போது நான் உன் அத்தான்தான் என்று நன்றாய் மண்டையில் உரைத்ததா?” என்று விஜயவர்தன் குறும்போடு புன்னகை செய்ய “நன்றாக உரைத்தது அத்தான்… ஆனால் அதற்கு இப்படிதான் குட்ட வேண்டுமா?” என்று வலியால் தலையை தேய்த்துக் கொண்டே கேட்டாள் அக்னீஸ்வரி.
“வார்த்தைகளால் சொன்னால்தான் உனக்கு விளங்கவில்லையே?” என்றான்.
விஷ்ணுவர்தன் நடந்தவற்றை அத்தானிடம் உரைத்திருக்கக் கூடும் என்பதை அக்னீஸ்வரி யூகித்து விட்டு “நான் இனி இத்தகைய தவற்றை செய்யவே மாட்டேன்” என்றாள்.
“அது உன்னால் முடியாது அக்னீஸ்வரி” என்று பரிகாசம் செய்தான் விஜயவர்தன்.
“அடுத்த முறை நான் உங்கள் இருவரையும் சரியாக அடையாளம் கண்டு கொள்வேன்” என்று அக்னீஸ்வரி உறுதியாக உரைக்க மீண்டும் விஜயவர்தன் சிரித்துவிட்டு “பார்ப்போமே!” என்றான்.
இப்போது அக்னீஸ்வரி முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு “அதை விடுங்கள் அத்தான்… நீங்கள் வந்ததிலிருந்து ஒரு முறை கூட பார்க்க வராமல்… ஆதுர சாலையிலேயே இருக்கிறீர்கள் என்று அக்கா ரொம்பவும் கோபம் கொண்டு இருக்கிறாள்” என்றாள்.
விஜயவர்தனின் புன்னகை மட்டும் மாறவேயில்லை. அவன் அக்னீஸ்வரியை நோக்கி, “உன் அக்காவின் கோபம் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்… அது பரவாயில்லை… அவள் நலமாக இருக்கிறாள்தானே… ரொம்பவும் சிரமப்படுகிறாளா?… நான் சொன்னது குறித்து நீ எதும் உன் அக்காவிடம் உரைக்கவில்லையே?” என்று கேள்விகளை அடுக்கினான்.
“நான் ஏதும் சொல்லவில்லை அத்தான்… அக்காவின் உடல் நிலையிலும் ஒரு குறையும் இல்லை… ஆனால் மனதளவில் உங்களைப் பார்க்காத ஏக்கத்தால் ரொம்பவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்” என்றாள் அக்னீஸ்வரி.
“அதுவுமே எனக்குப் புரிந்தது… இனி பேறுகாலம் வரை வைத்தீஸ்வரியை விட்டு நான் எங்கும் பிரிந்து செல்ல மாட்டேன்” என்று உறுதியோடு உரைத்தான்.
இப்போது வைத்தீஸ்வரி வெளியே வந்து அவர்கள் இருவரையும் கண்ட பின் “உங்கள் மைத்துனியிடம் அப்படி என்ன ரகசியம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?!” என்று வினவினாள்.
“எனக்கும் என் மைத்துனிக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்… அதெல்லாம் உனக்கு எதற்கு?”என்று விஜயவர்தன் சொல்ல,
வைத்தீஸ்வரி கோபத்தோடு “நான் எதற்கு உங்களுக்கு… என்னைப் பற்றிதான் உங்களுக்குக் கவலையோ அக்கறையோ இல்லையே” என்று மீண்டும் வேதனையோடு உள்ளே சென்றாள்.
அக்னீஸ்வரி கவலை தோய்ந்த முகத்தோடு “நீங்கள் பேசியதை கேட்டு அக்காவின் கோபம் அதிகரித்துவிட்டது” என்றாள்.
“அதனால் என்ன?… உன் அக்காவின் கோபத்தை சரி செய்யும் யுக்தி எனக்குத் தெரியும்… நீ கவலை கொள்ளாதே” என்று விஜயவர்தன் உரைக்க,
“ஆகட்டும் அத்தான்… உங்கள் யுக்தியைக் கையாளுங்கள்… நான் சற்று நேரம் இப்படி உலாவி விட்டு வருகிறேன்” என்றாள்.
விஜயவர்தனும் அக்னீஸ்வரியிடம் புன்னகை புரிந்துவிட்டு குடிலுக்குள் சென்றான்.
அன்று முழுநிலவு பிரகாசமாய் இருந்தது. ஆதுர சாலையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குகள் சுற்றியுள்ள இடங்களில் இருளை விலக்கி ஒளியூட்டியபடி இருக்க விஷ்ணுவர்தன் ஆதுர சாலையில் நின்றபடிஅக்னீஸ்வரி தனிமையில் அந்த நிலவொளியில் நடைபயின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். இருளிலும் கூட அவள் அழகான தேவதையாய் மின்னிக் கொண்டிருந்தாள்.
வானம் தோறும் நட்சத்திரங்களோடு நிலவு நடுநாயகமாய் நிற்க விஷ்ணுவர்தனின் மனம் அந்தக் காட்சியைக் கண்டு,
வான் வீதி தோறும் விளக்கேற்றி வைத்து மதியோன் தன் காதலியான பூமகளை இருளில் இருந்து இரட்சிக்கிறான் போலும்
என்று எண்ணமிட்டுக் கொண்டது.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு விஷ்ணுவர்தன் இவ்வாறெல்லாம் அழகை ரசித்ததில்லை. இன்று அவளைப் பார்த்ததுமே மனம் காதலில் திளைக்க எண்ணங்கள் கவிதையாய் ஊற்றெடுத்தது.
விஷ்ணுவர்தனும் கம்பீரமான அழகு பொருந்தியவன். அவனின் முகத்தில் பிரகாசிக்கும் ஒளி அவனைப் பார்க்கும் எல்லாருக்கும் மரியாதையும் மதிப்பையும் ஏற்படுத்தும். அவன் வீரம் பொருந்தியவன் என்று சொல்வதை விட விவேகம் கொண்டவன் என்றே சொல்லலாம். அவனின் அறிவுக் கூர்மை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவனின் பேச்சிலும் செயலிலும் அது தெளிவாக வெளிப்படும்.
செல்லும் இடங்களில் சிறு தொலைவில் எத்தகைய மூலிகை இருக்குமென நுகர்ந்தே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன். எந்த ஜீவராசிகளையும் அறியாமல் கூட காயப்படுத்திவிடக் கூடாது என்று எண்ணம் கொண்டவன். அந்தப் பண்பே அவனின் சிறப்பும் கூட. இத்தகையவன் காதல்கல்யாணம் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளாதவனாய் இருந்தான்.
 அவன் ஒரு சிறந்த வைத்தியனாக இருந்து மக்களைப் பீடிக்கும் கொடிய நோய்களிலிருந்து அவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே திண்ணமாயிருந்தான். ஆதலாலேயே வைத்தீஸ்வரியை விஜயவர்தனுக்கு மணம் பேசி முடித்த அதே சமயத்தில் விஷ்ணுவர்தனுக்கும் அக்னீஸ்வரியை மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் விஷ்ணுவர்தன் திருமண பந்தங்களில் எனக்கு ஆர்வம் இல்லை எனத் தட்டி கழித்துவிட்டான். இப்போது அந்த முடிவை எண்ணி அவன் தினமும் வேதனைக் கொள்கிறான் என்றே சொல்லலாம்.
அக்னீஸ்வரியைப் பார்த்தவுடன் ஏற்படாத காதல் அவளிடம் பழகி பேசிய நாட்களில் துளிர்விட தொடங்கி இப்போது அவனறியாமலே அது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
அக்னீஸ்வரியை தூரத்தில் இருந்தே விஷ்ணு வர்தன் மனதளவில் ரசித்திருக்க திடீரென அவளின் செயலைக் கண்டு புரியாமல் கலக்கமுற்றான். என்னவானது என்று எண்ணி ஆதுர சாலையில் இருந்து வேகமாய் ஓடி வந்தவன் அக்னீஸ்வரியின் முன் வந்தே தன் பாதத்தை நிலை நிறுத்தினான்.
அக்னீஸ்வரி கண்கள் கலங்கி இருக்க, “அக்னீஸ்வரி என்னவாயிற்று?!” என்று பதட்டமாய் கேட்க,  “பூச்சி ஏதோ கடித்து விட்டது… வலி உயிர் போகிறது” என்ற உரைத்தாள்.
“எங்கே கடித்தது?!” என்று விஷ்ணுவர்தன் பதட்டத்தோடு கேட்க அக்னீஸ்வரி வேதனையோடு கழுத்திற்கு அருகில் தோள் புரத்தை தொட்டுக் காண்பித்தாள். அவன் அவள் அருகாமையில் சென்று அந்த இருளிலும் கூர்மையாகக் கவனிக்க, “பரவாயில்லை ஒன்றுமில்லை… !” என்று அக்னீஸ்வரி அவனிடமிருந்து விலகிச் சென்றாள்.
“அமைதியாக இரு… ஏதோ விஷ கடிப் போல தோன்றுகிறது” என்று சொல்லி விட்டு இருளில் அருகில் இருந்த தாவரங்களை உற்றுக் கவனித்து ஏதோ ஒரு இலையைப் பறித்தான்.
அக்னீஸ்வரி பயத்தோடு “ஆதுர சாலைக்குப் போகலாம் வாருங்கள்” என்றாள்.
“இதற்கு எதற்கு ஆதுர சாலை… இந்த இலையின் சாறு பிழிந்தால் சரியாகிவிடும்… என் அருகில் வா” என்று அழைத்தான்.
அக்னீஸ்வரி தயங்கியபடி “எனக்கு ஒன்றும் இல்லை” என்று சமாளித்தாள்.
“நேரம் கடந்தால் உடல்முகம் எல்லாம் தடிப்பு தடிப்பாகி மாறிவிடும் பரவாயில்லையா?!”என்று விஷ்ணு வர்தன் கேள்வி எழுப்ப “அப்படியா?!!” என்று அக்னீஸ்வரி பதறினாள்.
பின் அவள் அமைதியாய் இருக்க அவனே அருகில் வந்து தோளில் சிவந்திருந்த இடத்தில் அந்த இலையின் சாற்றை கசக்கிப் பிழிந்தான்.
“என்ன இலை இது… இந்த இருளில் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்” என்று அக்னீஸ்வரி சந்தேகமாய் கேட்க,
“இருளாய் இருந்தால் என்னஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு தனித்துவமான வாசம் உண்டு… ஏன் நம் கண்களால் பார்க்கும் போது ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும தாவரங்களைக் கூட… அதன் வாசத்தை வைத்து நுகர்ந்து பார்த்து வித்தியாசம் கண்டு கொள்ளலாம்…
 இந்த இலை அதிமஞ்சரி…எல்லா இடங்களிலும் இந்த தாவரம் படர்ந்திருக்கும்… இது பலவகையில் பயன்படும்… விஷக்கடிக்கும் சேர்த்து… பூனை வணங்கி என்று கூட இதற்குப் பெயருண்டு” என்று அவன் சொல்வதை ஆர்வமாய் கேட்டபடி இருந்த அக்னீஸ்வரி இப்போது புருவத்தை உயர்த்தி “அதென்ன பூனை வணங்கி?!” என்று வினவினாள்.
“மதம் கொண்ட யானையில் இருந்து சிங்கம்புலி போன்ற கொடிய காட்டு மிருகங்கள் கூட ஏதாவது ஒரு மூலிகைக்கு கட்டுப்பட்டு நிற்கும்… அதில் பூனை மட்டும் விதிவிலக்கா என்ன?!இந்த அதிமஞ்சரி தாவரம் பூனையைக் கட்டுப்படுத்தவல்லது” என்று உரைக்க அவனுடைய மூலிகைகள் குறித்த ஆழமான அறிவை எண்ணி வியந்தாள்.
இவன் நிச்சயம் வரும் காலங்களில் வைத்திய முறைகளில் தேர்ந்தவனாய் திகழ்வான் என்று எண்ணினாள். பின்னர் இருவரும் குடிலை நோக்கி நடக்க ஆரம்பிக்க அக்னீஸ்வரி அவன் புறம் திரும்பி “எனக்கு பூச்சி கடித்ததென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும்? ” என்று குழப்பத்தோடு கேட்டாள்.
“நீ இந்த இருளில் எங்கே செல்கிறாய் என்று திடீரென கவனித்தேன்… அப்போது நீ வலியால் துடித்தபடி நிலை கொள்ளாமல் அவதியுற… என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு வந்தேன்… அது சரி… நீ எங்கே சென்று கொண்டிருந்தாய்?!” என்றான்.
“நான் எங்கேயும் செல்லவில்லை… எதையோ யோசித்தபடி நடந்து அந்த புதர் பக்கம் சென்றுவிட்டேன்” என்றாள்.
“நீ செல்லும் பாதையை உணராத அளவிற்கு நீ ஏதோ கனவுலக மாயைக்குள்ளேயே இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு விஷ்ணுவர்தன் புன்னகை புரிய அவள் அவனைக் கோபமாய் நோக்கினாள்.
“கனவுலக மாயையா… அது என்ன?!” என்று வினவினாள்.
“உன் அழகின் மீது நீ கொண்ட பற்று…உன்னைஅத்தகைய மாயைக்குள் சிக்க வைக்கிறது… நிலையற்ற அழகின் மேல் உனக்கு எதற்கு அக்னீஸ்வரி இத்தனை பற்றுதல்” என்றான்.
இப்போது அக்னீஸ்வரி சிரித்தபடி “நிலையற்ற அழகாஅது சரிதான்… ஆனால் இந்த பரந்து விரிந்த உலகில் நிலையானது எது என்று தாங்கள் சொன்னால் அதன் மீது நான் பற்றுதல் கொள்வேன்… எனக்கு தெரிந்து நிலையானது என்று எதுவும் இல்லாத பட்சத்தில் நாம் எதன் மீதும் பற்றுதல் கொள்ளக் கூடாதோ?!… அப்படி என்றால் நான் தங்களைப் போல் துறவியாகத்தான் போக வேண்டும்” என்று வேடிக்கையோடு கூறினாள்.
இப்போது விஷ்ணுவர்தன் அதிர்ந்து “நான் துறவியாகப் போகிறேன் என்று உன்னிடம் யார் சொன்னது?!” என்றான்.
“அப்படித் தானே தாங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்…அதுவும் இல்லாமல் அழகை ரசிக்கத் தெரியாத தங்களைப் போன்ற ஆடவர்கள் துறவு பூண்டு விடுவதே நல்லது” என்று கூறி அவனை அலட்சியமாய் பார்த்தாள்.
வைத்தீஸ்வரியின் திருமணப் பேச்சு நடந்த போது அவளை விஷ்ணுவர்தனுடன் மணம் முடிக்கப் பேசியதும் அவன் மறுப்பு தெரிவித்ததையும் அவள் மறந்துவிடவில்லை. அழகின் மீது கர்வம் கொண்டிருக்கும் அக்னீஸ்வரிக்கு ஒரு ஆண்மகனின் நிராகரிப்பு இயல்பாய் அவன் மீது வெறுப்பைத்தானே உண்டாக்கும். அதைத்தான் சமயம் பார்த்து வெளிப்படுத்தினாள்.
அவள் தன்னை குத்தலாய் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட விஷ்ணுவர்தன் கோபத்தோடு, “உனக்கு நிறைவாய் அழகைத் தந்த இறைவன்உனக்கு பெயரளவில் கூட அடக்கத்தைத் தர மறந்துவிட்டான்” என்றான்.
அக்னீஸ்வரி கோபத்துடன் திரும்பி “என்னைப் பார்த்தால் அடக்கம் இல்லாதவள் போல் தோன்றுகிறதா உமக்கு?” என்றாள்.
“அதீத அகந்தை பிடித்தவள் என்று தோன்றுகிறது” என்றான் அழுத்தமாக!
“போதும்… இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாதீர்கள்” என்று பார்வையில் அனலென கக்கி கொண்டிருந்த அக்னீஸ்வரியை பார்த்து மீண்டும் புன்னகையோடு, “நீ கோபப்பட்டாலும் நீ அகந்தை பிடித்தவள்தான் அக்னீஸ்வரி… தான்தான் பேரழகி என்ற அகந்தை…..அது நல்லதிற்கில்லை” என்றான்.
அவளுக்குக் கோபம் எல்லையே மீறியது.
“இவ்வாறு நீங்கள் இன்னொரு முறை சொன்னால்” என்று அக்னீஸ்வரி அவனை எரித்து விடுவது போல் பார்க்க “என்ன செய்வாய் அக்னீஸ்வரி… பார்வையாலேயே எரித்து விடுவாயோ?” என்று அவள் கோபத்தைத் தூண்டிவிடுவது போல் அவன் பேச,
“உண்மையிலேயே எனக்கு அவ்விதம் தான் தோன்றுகிறது… ஆனால் அத்தகைய சக்தி எம்மிடம் இல்லாததினால் நீங்கள் உயிர் பிழைத்துக் கொண்டீர்கள்” என்று உரைத்தவள் அதற்கு மேல் அவனிடம் பேச விரும்பாமல் முன்னேறி நடந்தாள்.
அப்போது அவள் பாதங்கள் கற்களில் ஊன்றித் தடுமாற விஷ்ணுவர்தன் விழப் போனவளை தன் கரங்களால் தாங்கிக் கொண்டான்.
அக்னீஸ்வரி நொடிப் பொழுதில் அவனிடம் இருந்து விலகி வந்து நின்று, “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று சினங்கொண்டாள்.
“விழப் போன உன்னை தாங்கிக் கொண்டது ஒரு குற்றமா?… விழுந்து காயம் பட்டிருந்தால் புரிந்திருக்கும்” என்றான்.
“உங்கள் கரம் பற்றுவதை விட எனக்குக் காயம் பட்டிருந்தாலே மேல்” என்று வெறுப்பான வார்த்தைகளைக் கொட்டிவிட்டு குடிலை நோக்கி விரைந்து விட,எதிரே வந்த விஜயவர்தன் அவள் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கவனித்தான்.
அவன் நேராக விஷ்ணுவர்தனை நெருங்கி “அக்னீஸ்வரிக்கு என்னவாயிற்று… நீ ஏதேனும் வம்பு செய்தாயா?!” என்றான்.
விஷ்ணுவர்தனும் கோபத்தோடு “நான் எந்த வம்பும் செய்வில்லை… உங்கள் மைத்துனிக்குத்தான் கர்வம் அதிகமாயிருக்கிறது” என்றான்.
இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை என்ற அளவில் விஜயவர்தன் புரிந்து கொண்டபடி “அப்படி என்ன நடந்தது?” என்று கேள்வி எழுப்பினான்.
“நான் அவளுக்குச் செய்த உதவிக்கு எனக்குக் கிட்டிய பரிசு… இருந்தாலும் இவளுக்கு இத்தனை கோபம் ஆகாது… பார்வையாலேயே எரித்து விடுவாளாம்… இவளின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் மூலிகை ஏதேனும் இருந்தால் நன்றாயிருக்கும்” என்று விஷ்ணுவர்தன் உரைக்க விஜயவர்தன் சத்தமாய் சிரித்துக் கொண்டே,
 “அவளின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் மூலிகையும் இல்லை… உன்னைப் பீடித்திருக்கும் காதல் நோயைத் தீர்க்கும் மூலிகையும் இப்பூவுலகில் இல்லை” என்றான்.
“என்னை காதல் நோய் பீடித்திருக்கிறதா…உளறாதீர்கள்” என்று விஷ்ணுவர்தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“ஒன்றை புரிந்து கொள் விஷ்ணுவர்தா… நாம் இருவரும் இன்று நேற்றல்ல…கருவறையில் இருந்து ஒன்றாகவே இருக்கிறோம்… ஆதலால் உன் எண்ணங்களையும் மனஉணர்வுகளையும் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்… அக்னீஸ்வரியை நீ விரும்பவில்லை என்று என்னை பார்த்து சொல்”  என்று விஜயவர்தன் கேட்க விஷ்ணுவர்தன் மறுக்க விரும்பாமல் மௌனமாய் நின்றான்.
“அப்படி எனில் உனக்கு அவள் மீது விருப்பம்தான்” என்றான் விஜய வர்தன்.
“ஆனால் அவளின் அகந்தைதான்” என்று விஷ்ணுவர்தன் உரைக்க,
விஜயவர்தன் அவனைக் கையமர்த்தி  “என் மைத்துனியிடம் அழகோடு கொஞ்சம் அகந்தையும் இருக்கிறது… அதனால் என்ன?!… அவள்தான் உனக்கு பொருத்தமானவள்… தேவையில்லாமல் அவளிடம் வம்பு வளர்க்காதே… அப்புறம் திருமணம் வேண்டாம் என உரைத்துவிடுவாள்… அக்னீஸ்வரி அத்தனை துணிச்சல் கொண்டவள்தான்” என்றான். இவ்வாறு விஜயவர்தன் உரைக்க வரப் போகும் இன்னலை உணராமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து மகிழ்வுற்றனர்.
விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியிடம் பேசியதெல்லாம் அவளின் கோபத்தை உள்ளூர ரசிக்கத்தான். அவளைச் சீண்டி விளையாடுவதும் காதலின் ஓர் அத்தியாயம் என்று அவன் எண்ணிக் கொண்டாலும் அது அக்னீஸ்வரியின் மனதில் வெறுப்பை ஊன்றியதை அவன் உணரவில்லை.
அருகாமையில் இருக்கும் விஷ்ணுவர்தனின் மனதில் உள்ள எண்ணத்தை அக்னீஸ்வரி புரிந்து கொள்ளாமல் ருத்ர தேவனின் நினைப்பில் ஆழ்ந்திருந்தாள்.
விரைவில் ருத்ர தேவனும் அக்னீஸ்வரியும் மீண்டும் சந்தித்துக் கொள்ளப் போகும் நிகழ்வால் அவர்கள் இருவரின் காதல் புரிதலோடு மலரஅது மூவரின் வாழ்க்கையையும் விடையில்லா கேள்வி குறியாய் மாற்றப் போகிறது.
error: Content is protected !!