Jeevan 15

15
வானம் சற்று மழை வரும் போல இருந்ததால் களத்தில் காய வைத்திருந்த பருப்புகளை அள்ளிக் கொண்டிருந்தனர் பணியாளர்கள்.

சூழ்நிலை வெகு இதமாக இருந்தது. ஆபீஸ் ரூமில் உட்காராமல், அங்கிருந்த மாமரத்தின் அடியில் டேபிளையும் சேரையும் போட்டு அமர்ந்திருந்தாள் சுபத்ரா.

குடோனுக்கு வந்த பருப்பு மூட்டைகளையும் கணக்கெடுத்து எழுதியாகிவிட்டது. ஒரு வாரத்துக்கு குடோனில்தான் மொத்தமாக கொள்முதல் செய்த பருப்புகள் இருக்குமென்பதால், அங்கு இனி ஒரு வாரத்துக்கு அவ்வளவாக வேலையில்லை.

கையில் வைத்திருந்த செல்ஃபோனை விட்டு பார்வை அகல மறுத்தது. மனதைக் கட்டுப்படுத்தி அலைபேசியை கீழே வைத்தபோதும்… மீண்டும் தன்னைமறந்து ஃபோனை கைகள் எடுத்து, கண்கள் அதில் அவளும் அர்ஜுனும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசித்தது.

அவனது அலைபேசியிலிருந்து அவளது அலைபேசிக்கு அனுப்பியிருந்தான்.

இப்பொழுதெல்லாம் அவனது செய்கைகளைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அவனது பார்வைகள் நண்பன் என்ற நிலையிலிருந்து கணவன் என்ற நிலைக்கு மாறிவிட்டதை உணர முடிகிறது அவளால். ஏற்றுக்கொள்ளதான் முடியவில்லை.

என் கணவன் அவன் என்ற ஆசையும் எண்ணமும் உள்ளூர இருந்தபோதும் ஸ்வேதாவுக்கு துரோகம் செய்கிறாய் என்று மனசாட்சி விடாமல் வதைக்கிறது.

இயல்பான அவனது தொடுகைகளை அணைப்புகளை இனம்காண முடியாத அளவுக்கு பேதையில்லை அவள். ஆனால் அவற்றை அனுபவிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல், இது என்ன சித்ரவதை?

இன்றும் அப்படித்தான், காலையில் ஏதோ ஹோட்டலில் மீட்டிங் இருப்பதால் காலை உணவை வேண்டாம் என்றவன், அவள் உண்ண அமர்ந்து ஒருவாய் உணவை கையில் எடுத்ததும் அருகில் வந்து அவளது விரல்களோடு சேர்த்திழுத்து அவன் வாய்க்குள் திணித்துக் கொண்டான்.

நிதானமாக ஒவ்வொரு விரலாக சுவைத்து விடுவிக்க இவள்தான் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கூசிச் சிலிர்த்து, திக்குமுக்காடிப் போனாள். சரஸ்வதியும் நமுட்டுச் சிரிப்புடன் உள்ளே சென்றுவிட, “பூரி செம டேஸ்ட்… மிஸ் பண்ணிடக்கூடாதுல்ல, அதான் ஒரு வாய் சாப்பிட்டேன். மீதியை நீ சாப்பிடு.” என்று கன்னம்தட்டிச் சென்றவனை என்ன செய்ய…?

இவனை விட்டு பிரிந்து செல்வதை நினைத்தாலே உள்ளூர வலிக்கிறதே… அவனுடன் சேர்ந்து வாழ உள்ளம் துடிக்கிறதே. ஆனால் அது நியாயம் இல்லை. நான் இப்படியெல்லாம் நினைப்பதே தவறு என்றெண்ணிக் கொண்டவள்,

தன்னை மீறி வழிந்த கண்ணீரோடு மேஜையில் தலை சாய்த்துக் கொண்டாள்.
வந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது நான் ஊருக்குப் போய்விட்டு பிறகு வருகிறேன் என்று தேவகிப் பாட்டியும் கிளம்பிவிட்டார்.

கிளம்புவதற்கு முன் இவளை அமர வைத்து கணவனை எப்படியெல்லாம் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று பெரிய கதாகாலட்சேபத்தை நடத்தி முடித்துவிட்டு ஊருக்குச் சென்றிருந்தார்.

ஸ்வேதாவும் மும்பையிலிருந்து வந்திருந்தாள். வந்தவள் இதுவரை யாருடனும் பேசவில்லை. வெளியே போவதும் தெரியவில்லை, வருவதும் தெரியவில்லை. அவள் ஒருத்தி வீட்டிலிருக்கிறாள் என்பதே தெரியாத அளவுக்கு இருந்தது அவளது செய்கைகள்.

லோகேஸ்வரி தேவைப்பட்டால் பேசுவார், தேவையில்லை என்றால் ஒதுங்கியிருப்பார்.

மணிவாசகத்துக்கு என்னைக் கேட்காமல் மில் குடோன் பணத்தைத் தரக்கூடாது என்று அர்ஜுன் கூறியிருந்ததால், இவளும் தரமறுக்க, குரோதமாக முறைத்தபடி சென்றிருந்தார்.

சரஸ்வதியும் இவளும் மட்டுமே பேசிக்கொள்வது. அவரும் பொறுமையாக இரு எதுவென்றாலும் அர்ஜுன் பார்த்துக் கொள்வான் என்று கூறியிருக்க, அப்படியே கழிந்தன நாட்கள்.

காலையில் நடந்த தொழில்முறை பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கம்பெனிக்குச் சென்ற அர்ஜுனை ஒரு உணவகத்தின் பெயரைச் சொல்லி வரச் சொல்லியிருந்தான் ஸ்ரீராம்.

விபரம் ஏதும் கூறாமல் வரச்சொன்னதால் என்ன ஏதென்று புரியாமல் வந்தவனை வரவேற்றது இறுகிய முகத்தோடு இருந்த ஸ்ரீராமும் பிரகாஷும்தான்.

“என்ன ஸ்ரீ எதுக்கு அவசரமா வரச்சொன்ன?”

“ம்ம் பிரகாஷ்கிட்ட உங்க மாமாவை ஃபாலோ பண்ணச் சொல்லியிருந்தேன் இல்லையா? கிடைத்த தகவல்களைப் பார்.” என்றபடி மடிக்கணினியில் சிறு பென்ட்ரைவைச் சொருக, சற்று கலங்கலாக சில காட்சிகள் விரிந்தன,

ஏதோ ஒரு உயர்தர பார் போன்ற இடத்தில் மணிவாசகம் அமர்ந்திருக்க, அவருக்கு பக்கவாட்டிலிருந்து எடுக்கப் பட்டிருந்தது வீடியோ. ஒளி மங்கலாக இருந்தாலும் ஒலி துல்லியமாக இருந்தது.

போதையில் எதிரே அமர்ந்திருந்த நபரிடம் உளறிக் கொண்டிருந்தார்.

“அர்ஜுன் அழியனும்… அவன் கம்பெனிய மூடிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படற நிலைமை உருவாகனும்… இல்லல்ல… நான் உருவாக்குவேன்.

நீ என்ன பண்ற அவன் குடோன ஆளுங்களை ஏற்பாடு பண்ணி கொளுத்தி விட்டுடு. மொத்தமா சரக்கு கொள்முதல் பண்ணி குடோன்ல வச்சிருக்கான். பெருசா நஷ்டப்படுவான். அவன் எழமுடியாதபடிக்கு அடுத்தடுத்து அடிச்சிகிட்டே இருப்போம்.

என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டான். இனி அவன் நிம்மதியா இருக்கக் கூடாது.

அவன்கிட்ட பணமும் கறக்க முடியல… எனக்கே பணம் கொடுக்க கணக்கு பார்க்குறான் இப்பல்லாம்.
அவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கோமதிய எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மிரட்டி எல்லா சொத்தையும் அவன் பேர்ல எழுதி வாங்கிகிட்டு ஊரைவிட்டு விரட்டி விட்டேன்.

அந்த சொத்தையெல்லாம் என்பேர்ல எழுதி வாங்கியிருந்தா நான் இன்னைக்கு கோடீஸ்வரன்… என் பொண்ணை கால்ல விழுந்து கல்யாணம் பண்ணியிருப்பான்.” போதையோடு சிரித்தவர்,

“ஏன் என் பேர்ல எழுதி வாங்கலன்னு கேட்கறியா? “

“அந்த மாதவனையும் அவன் குடும்பத்தையும் கொல்ல லாரிய ஏற்பாடு பண்ணி விபத்துமாதிரி செட் பண்ணவனே நான்தான். ஆனா அதுல எங்கக்காவும் மாமாவும் அந்த மாதவனோட சேர்ந்து செத்து போயிட்டாங்க. அதுல போலீசு என்மேல சந்தேகத்தோடயே ரொம்பநாள் சுத்துச்சி.

அதனாலதான் அப்ப அர்ஜுன் பேர்ல சொத்தை எழுதி வாங்கினேன். அந்த கோமதி இருக்காளே அர்ஜுன் மேல ரொம்ப பாசமா இருப்பா.

அவனுக்குன்னவும் பேசாம எழுதிக் குடுத்திட்டு ஊரை விட்டு போயிட்டா.
எங்கம்மாவுக்கே என்மேல சந்தேகம் உண்டு. ஆனா நான் அவங்களுக்கு அடங்கி இருக்கறமாதிரியே நடிச்சு இப்பவரை எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.

அதுலயும் அர்ஜுன் படுமுட்டாள். என்னை ரொம்ப நம்புவான்.
சரி நம்ம பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க போறான், காலத்துக்கும் இதே மாதிரி ஓட்டிடலாம்னு நினைச்சேன். ஓடிப் போன கழுதைய எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்து… இன்னைக்கு அவ என் பொண்ணுக்கு போட்டியா நிக்கறா…”

மேலும் மேலும் பலவாறாக உளறிக் கொண்டிருக்க வீடியோ தொடர்ந்தபடி இருந்தது. கண்கள் கலங்க அதனை வெறித்திருந்தவன் வெகுவாக நொந்து போனான்.

‘மாமாவா இப்படி? இத்தனை நாட்களாக பாம்புக்கா பால் வார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறேன். என் பெற்றவர்களைக் கொன்னவரோடு சகஜமாக இத்தனை வருடங்களாக ஒரே வீட்டில் இருந்திருக்கிறேன்.

பாட்டியின் அறிவுரைகளுக்கும் பார்வைகளுக்குமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. பாட்டிக்கு சந்தேகம் இருந்ததாலேயே ஸ்வேதா எனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.’

மேலும் ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் தாக்க அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டவனை ஆறுதலாகப் பார்த்த ஸ்ரீராம்,

“இப்பவாவது விஷயம் தெரிய வந்துதேன்னு சந்தோஷப்படு. இப்ப என்ன முடிவு எடுக்கப் போற…?”

“என்னால நம்பவே முடியல ஸ்ரீ. ரொம்பக் கஷ்டமா இருக்கு. நினைவு தெரிஞ்சதிலிருந்து எனக்கு ஒரே சொந்தம்னு அவர்மேல நிறைய பாசம் வச்சிருந்தேன்டா… அவரோட மறுபக்கம் இவ்வளவு மோசமானதா…?
சுபத்ராவும் எவ்வளவு பாவம்.

குழந்தையிலேயே அவ அப்பாவை இழந்து, வேற எங்கயோ கண்காணாத ஊர்ல போய் கஷ்டப்பட்டு வளர்ந்து… இவரோட பேராசையால எவ்வளவு கஷ்டம்… நாங்க இரண்டு பேருமே பெத்தவங்களை இழந்துட்டோமேடா…?

மேலும் மேலும் புலம்பியவனை ஆறுதல் படுத்தியவன், பிரகாஷையும் அனுப்பி வைத்தான்.

“அர்ஜுன் எது எப்படியோ, ஸ்வேதாவை நீ கல்யாணம் செய்யாம உன்னை விதி தடுத்தது எவ்வளவு நல்லதா போச்சு.

ஒருவேளை உங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் இதெல்லாம் தெரியவந்திருந்தா உங்க இரண்டு பேர் வாழ்க்கையும் நரகமாயிருக்கும்.
சுபத்ராவை உன் கண்முன்னாடி கொண்டு வந்ததும் விதிதான்.

அவளை உன்னோட சேர்த்ததும் விதிதான். நடந்தது எல்லாமே நல்லதுக்குதான். இனி உன் வாழ்க்கையை நிம்மதியா வாழப்பாரு.”
மௌனமாக ஆமோதித்தவன்,

“சுபத்ரா மனசுல என்ன இருக்குன்னே என்னால புரிஞ்சுக்க முடியல ஸ்ரீ. நான் எவ்வளவு நெருங்கி நெருங்கி போனாலும் விலகி விலகிப் போறா.

மனசு காயப்பட்டு போயிடுவாளோன்னு அவளை ஓரளவுக்கு மேல என்னால நெருங்க முடியல. அவளுக்கு ஒருவேளை என்னைப் பிடிக்கலைன்னா, விவாகரத்து வாங்க ஏற்பாடு பண்ணனும்.” விரக்தியோடு பேசியவனை முறைத்த ஸ்ரீராம்.

“நீ உண்மையிலேயே முட்டாள்தான்டா. சுபத்ரா மனசுல நீதான் இருக்க. நீ மட்டும்தான் இருக்க. ஸ்வேதா பிரச்சனைய முடிவுக்குக் கொண்டுவா. மீதியெல்லாம் தன்னால நடக்கும்.” என்றவன் அன்று சுபத்ரா அவனிடம் சொன்ன அனைத்தையும் கூறினான்.

“என்ன சொல்ற ஸ்ரீ? நிஜமாவா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.” வெகுவாக மகிழ்ந்தவன்,

“உன்கிட்ட சம்பளம் கேட்டாளா? பைத்தியக்காரி… அந்த மில்லு குடோன் எல்லாமே அவ பேர்லதான்டா இருக்கு. நான் எப்பவோ அதை மாத்திட்டேன். இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ரொம்ப நன்றி ஸ்ரீ. இந்த உதவிய நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்.”

“டேய்… நமக்குள்ள என்னடா நன்றியெல்லாம். உன் வாழ்க்கை எனக்கு முக்கியம். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்.” என்றவனை அணைத்துக் கொண்டவன், ஸ்ரீராமிடம் விடைபெற்று நேராக வீட்டுக்கு வந்திருந்தான்.

சரஸ்வதியிடம் நடந்ததைச் சொல்ல, அவரும் வெகுவாக அதிர்ந்து போனாலும் கோமதிக்கு நடந்தது எனக்கும் பாட்டிக்கும் தெரியும் என்று கூறினார்.

“ஏன் பெரியம்மா என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல?”

“நீ அவரு மேல ரொம்ப பாசம் வச்சிருந்த கண்ணா. உனக்கு பழைய நியாபகங்கள் வேற இல்லை.

எல்லாரையும் மறந்துட்ட. டாக்டரும் கட்டாயப்படுத்தி நியாபகப்படுத்த வேணாம்னு சொல்லிட்டாரு.

அதுவுமில்லாம உங்க மாமா பண்ணதெல்லாம் சந்தேகமாதான் தெரியுமே தவிர உறுதியா சொல்ல முடியல… எல்லாத்துக்கும் மேல ஸ்வேதாவ நீ விரும்பின.”
அதற்குமேல் எதுவுமே பேச முடியாமல் அமைதியாகிப் போனான்.

‘நான் கண்மூடித்தனமாக அவர்களை நம்பியது என் தவறுதான்’ உள்ளுக்குள் மறுகியபடி அமர்ந்திருக்க சுபத்ரா வீட்டுக்கு வந்தாள்.

ஹாலில் மௌனமாக தலையை பிடித்தபடி அமர்ந்திருந்த அர்ஜுனைக் கண்டவள் என்வென்று புரியாமல் அவனருகே வர, அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளது கையைப்பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டான். அவளது கரங்களை தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டவனை புரியாமல் பார்த்திருந்தாள்.

ஏற்கனவே அலைபேசியில் மணிவாசகத்தை வரச் சொல்லியிருந்தான். கூடவே ஸ்வேதாவும் லோகேஸ்வரியும் வரவும் அவர்களையும் அமரச் சொன்னான். ஸ்வேதாவை பார்த்தவன், அவள் தந்தை செய்த செயலுக்கு அவள் என்ன செய்வாள் பாவம் என்று நினைத்தபடி,

“பொட்டீக் வைக்கற வேலை எப்படி போயிட்டு இருக்கு ஸ்வேதா?”

ஸ்வேதா திரும்பி தன் தந்தையை பார்த்துக் கொண்டவள், ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் நீட்டினாள், புருவம் சுருங்க அதனை வாங்கியவன் விழிகளை அதில் ஓட்ட, சிறு புன்னகை வந்தமர்ந்தது அவனது உதட்டில்.

அவளது கடை திறப்பு விழாவும், அவளது திருமண நிச்சயதார்த்த விழாவும் ஒரே நாளில் நடக்கப்போவதை தெரிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பத்திரிக்கை.

“சோ… உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் முடிவாகியாச்சு… கடை திறக்க தேதியும் குறிச்சு பத்திரிக்கையும் அடிச்சாச்சு. ஆனா பத்திரிக்கைய நானா கேட்டதுக்கப்புறம் தர்ற…”
அவனது வார்த்தைகளில் வெகுவாக அதிர்ந்து போனாள் சுபத்ரா…

‘ஸ்வேதாவுக்கு கல்யாணமா? அப்ப அர்ஜுனின் நிலை…” என்ன நடக்கிறது என்றே புரியாமல் அவர்களைப் பார்த்திருந்தாள்.

“என்கூட காலேஜ்ல படிச்சவர். உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அவரும் நல்ல வசதியானவர்தான். ரெண்டு பேரும் ஒரே தொழில்ல இருக்கோம். கல்யாணம் பண்ணிக்க கேட்டார் ஒத்துகிட்டேன். என்ன தப்பு?”

“தப்பேயில்லை… நல்லாயிரு. உன் கல்யாணத்துக்குத் தேவையான பணம் உன் அக்கவுண்டுக்கு வரும்.” அர்ஜுன் முடித்துக் கொள்ள…

“என்ன ஸ்வேதா சொல்ற… நீ செய்யறது உனக்கே நியாயமா இருக்கா?” சுபத்ராதான் கோபப்பட்டாள்.

மணிவாசகம், “ஏய்… நியாயத்தைப் பத்தி நீ பேசாத… எல்லாமே உன்னாலதான். என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்ததே நீதான். பாசமா இருந்த எங்களையும் அர்ஜுனையும் பிரிச்சவளே நீதான்.” ஏகத்துக்கும் எகிற….

“ரொம்பப் பேசாதீங்க மாமா. உங்க பாச சாயமெல்லாம் வெளுத்துப் போச்சு…”
வெடித்த அர்ஜுனை புரியாமல் மணிவாசகம் அதிர்ந்து போய் பார்த்தார். அர்ஜூன் பென்ட்ரைவைச் சொருகி மடிக்கணினியை ஓடவிட்டான்… அந்த காட்சியைக் கண்டதும் மணிவாசகம் சுத்தமாக ஆடிப்போனார். சுபத்ராவோ பேயறைந்தது போல நின்றாள். ‘தன் அத்தனை துன்பத்துக்கும் காரணம் இவரா…’ அவளால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

“மாப்ள… அது வந்து…”

“எதுவுமே பேசாதீங்க… உங்க மேல கொலைவெறியில இருக்கேன். எங்க ரெண்டு பேரோட எல்லா கஷ்டத்துக்கும் நீங்கதான் காரணம். துரோகம் பண்ண வீட்லயே கூடவே இருந்து உடம்பை வளர்த்திருக்கீங்களே வெக்கமா இல்லை. என்னைப் பெத்தவங்க சாவுக்கே நீங்கதான் காரணம்னு தெரியாம உங்க மேல எவ்வளவு பாசமா இருந்திருக்கேன் நான்.

இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது. நான் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன். இனிமே உங்களை விட்டுவைக்கறதா இல்லை.”
அதிர்ந்து போன லோகேஸ்வரி,

“அர்ஜுன் வேண்டாம்பா என் பொண்ணு வாழ்க்கை வீணாப் போயிடும்பா. ஜெயிலுக்கு போனவர் பொண்ணை எவன் கட்டுவான்.

நாங்க செஞ்சது தப்புதான் ஸ்வேதாவுக்காக எங்களை. மன்னிச்சிடுப்பா.” என்று கையெடுத்து கும்பிட்டுக் கதற..

அவரை மௌனமாக பார்த்தவன், மிகுந்த வெறுப்பைத் தேக்கிய குரலில், “எனக்கு உங்க யார் முகத்துலயும் முழிக்கவே பிடிக்கல…

உங்களுக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள இந்த வீட்டை விட்டு போயிடனும். அதுக்கப்புறம் எக்காரணம் கொண்டும் என் கண்ணு முன்னாடி வரவேகூடாது. இல்லைன்னா போலீஸ்க்கு கம்ப்ளெயிண்ட் போறது உறுதி”

சரஸ்வதியிடம் திரும்பி, “இவங்க வெளியில போனதும் வீட்டைக் கழுவி விடுங்க பெரியம்மா…” என்றவன் சுபத்ராவிடம்

“நீ மாடிக்கு வா…” என்றுவிட்டு மாடியேறினான்.
எதுவுமே பேசமுடியாமல் மணிவாசகம் குடும்பத்தோடு வெளியேற… செய்வதறியாமல் பார்த்திருந்தவள் அர்ஜுனைப் பார்க்க மாடிக்குச் சென்றாள்.

அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள், “உங்க மாமா பண்ணது தப்புதான். அதுக்காக ஸ்வேதாவை ஏன் அனுப்பனும்? நீங்க அவளை எவ்வளவு விரும்புனீங்க.”
மௌனமாக அவளைப் பார்த்தவன் அறைக்கதவை தாழிட்டபடி,

“அவளைப் பத்தி அப்புறம் பேசலாம். இப்ப உன்னைப்பத்தி சொல்லு.”

“என்னைப்பத்தி என்ன…?”

“உன்னோட வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சித் தரவேண்டியது என்னோட பொறுப்புன்னு சொல்லியிருக்கேன்ல. உன்னோட மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை உனக்கு வேணாமா…?”

“எனக்கு அதெல்லாம் எதுவும் வேணாம்.”

“ஏன் சுபா…?” என்றபடி மெல்ல நடந்து அவளை நெருங்கியிருந்தான். பதில் சொல்லிக் கொண்டே பின்னே நகர்ந்து கொண்டிருந்தாள் சுபத்ரா.

“…”

“ஏன்னு கேட்கறேன்ல…? பதில் சொல்லு. வேற யாரையாவது விரும்புறியா நீ.”
அவனது பார்வையும் அருகாமையும் ஏதோ செய்ய, என்ன சொல்கிறோம் என்று புரியாமலேயே தலையாட்டினாள்.
மெல்ல சிரித்துக் கொண்டவன்,

“யாரை விரும்புற சுபா? நீ விரும்பறதை அவன்கிட்ட சொல்லிட்டியா?”

“அ…அது வ…வந்து… சொல்லல…” அவனது துளைக்கும் பார்வையும் செயலும் பிடிபடாமல், பின்னாலேயே நகர்ந்தவள் சுவரின் அருகே வந்து இடித்து நிற்க, அவளுக்கு இருபுறமும் கரங்களை வைத்து சிறை செய்தவன்,

“ஏன் சொல்லலை சுபா?”
அவன் பார்வையின் வித்தியாசத்தில் சிலிர்த்துப் போனவள் மொழியின்றி மௌனமாக…

“அவனே உன்கிட்ட சொல்லனும்னு எதிர்பார்க்கிறியா?”
ஏதாவது பதிலைச் சொல்லிவிட்டு இங்கிருந்து சென்றால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள் ஆமாம் என்று தலையசைத்து விட்டு அவனை விலக்கி நகர முயற்சிக்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“என்னை சொல்லச் சொல்லிட்டு நீ எங்க போற…” அணைத்ததும் அதிர்ச்சியில் விழிகளை விரித்து அவனை பார்க்க… அவளது நெற்றியோடு நெற்றியை முட்டியவன், “ஐ லவ் யூ டி பொண்டாட்டி.”
அவனது வார்த்தையில் சிரிப்போடு கண்ணீரும் சேர்ந்து போட்டிபோட்டது.

இமைகளை அசைக்காமல் அவனையே பார்த்தவளின் கன்னத்தில் கரங்களைப் பதித்தவன்,

மெல்ல அவளிதழ்களில் தன்னிதழை புதைத்துக் கொண்டான். நொடிகள் நிமிடங்களாக, சர்க்கரை பாகில் விழுந்த எறும்பாக கிறங்கியவன் மெதுவாக அவளிடமிருந்து நிதானித்து விலகினான்..

விலகி அவளது முகம் நோக்கினான்… விலகியவன் கண்டது கண்ணீர் ததும்பும் விழிகளைத்தான்..

“நான் உங்களுக்குப் பொருத்தமே இல்லை.” சொல்லும்போதே கண்களில் நீர் கரைகட்டி நிற்க… இமைகளில் இதழ் பதித்தான்.

“நீ எனக்கு எவ்வளவு பொருத்தம்னு நான் நிரூபிக்கவா?” என்றபடி அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டுபோய் கட்டிலில் கிடத்தி அவள்மீது படர்ந்தான்.

அவள் நெற்றியிலிருந்து தன் இதழ்களை பதித்தபடி முன்னேறிட… இதழ்களில் இளைப்பாறி கழுத்தில் புதைந்தவன், தடைகளை விலக்கி மேலும் முன்னேற…

எனது உதடுகள்,
உந்தன் மார்பில்,
போகும் ஊர்வலங்கள்,
நகங்கள் கீறியே,
முதுகில் எங்கும்,
நூறு ஒவியங்கள்,

எங்கு துவங்கி?
எங்கு முடிக்க?
எதனை விடுத்து?
எதனை எடுக்க?
என்ன செய்ய?
ஏது செய்ய?
உரச உரச…

காதல் தீ பற்றிக் கொள்ள… காமன் கணைகளை வீசும் நேரம், காதல் பாடங்களை முறையாக அவளுக்குச் சொல்லித் தரத் துவங்கினான்.

காதல் தீ எரிய,
கண்ணில் நீர் வழிய,
நான் நின்றேன்,
அருகில் நின்றேன்,
தீண்ட தீண்ட,
மலர்ந்ததென்ன?
உன் பார்வை பார்த்து,
நான் கலந்ததென்ன?
கற்றுக் கொள்ள முதலில் தத்தளித்தவளோ, பின்னர் அவனோடு ஒன்றிப் போக… துளி இடைவெளியின்றி அவன்மீது ஒட்டிக் கொள்ள…
மெல்ல நமது கால் விரல்,
ஒன்றை ஒன்று தீண்டிட,
உன் காது நுனியின் ஒரமாய்,
கொஞ்சம் கொஞ்சம் கூசிட,

உன்னை கலந்துவிட,
என் உள்ளம் தவித்திட,
கால்கள் பூமியுடன்,
கல்லாகி கிடந்திட,
வார்தை உதடுகளில்,
வழுக்கி விழுந்திட,
உனக்குள் எனக்குள்,
நெருப்பு எரிந்திட,

மோகம் கொண்டு கொஞ்சிக் கொள்ளும் இவர்களைக்கண்டு அப்பொழுதுதான் வந்திருந்த வெண்ணிலவும் மேகப் போர்வை போர்த்திக் கொள்ள…
சற்று முன்பு வரை,
ஜொலித்த வெண்ணிலா,
மேக போர்வையில்,
ஒளிந்து கொள்ள,
கண்கள் ஓரம் நீர்,
துளித்து நின்றது,
அடித்த காற்று,
அதை துடைத்து சென்றது,
நிறைவான கூடலை முடித்து,

கலைந்து களைத்துக் கிடந்தவளை அள்ளித் தன்மீது போட்டுக் கொண்டவன், கிசுகிசுப்பாக, “இப்ப புரிஞ்சிகிட்டியா? உன்னைத் தவிர வேற யாரும் எனக்குப் பொருத்தமில்லைன்னு.”

ஆமோதிப்பது போல அவன் மார்பின்மீது சுகமாய் சாய்ந்து கொண்டாள்.
அவளது உச்சந்தலையில் இதழ்களைப் பதித்தவன்,

“இப்ப நாம பேசறதுதான் ஸ்வேதாவைப் பத்தி கடைசியா பேசறது. ஓகேவா…”
அவனை நிமிர்ந்து பார்த்தவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“நான் காலேஜ் படிக்கும் போதும்சரி அதுக்கப்புறமும் சரி பெண்கள் மேல என் கவனம் போனதில்லை சுபா. பாட்டியோட வளர்ப்பு அப்படி.
ஆனா ஸ்வேதா அப்படியில்லை.

என்னோடவே வளர்ந்தவ. தனியாவே வளர்ந்ததால அவமேல எனக்கு எப்பவுமே பாசம் உண்டு. கல்யாணம் அப்படின்னு ஒரு எண்ணம் வந்தப்ப இயல்பா என்கூடவே வளர்ந்த மாமாவோட பொண்ணுதான் எனக்கு நினைவுக்கு வந்தா.

ஆனா பாட்டி காரணமே இல்லாம மறுக்கும் போது எனக்கு கஷ்டமா இருந்தது. மாமாவும், எங்கம்மாவே எங்களை ஒதுக்குறாங்கன்னு என்கிட்ட வருத்தப்பட்டப்ப ஸ்வேதாவைதான் கல்யாணம் செய்துக்கனும்னு உறுதியா நினைச்சேன்.

உன்னை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரும்போதே எனக்குத் தெரியும் உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி பாட்டி கேட்பாங்கன்னு.

நான் முடியாதுன்னு மறுத்துப்பேசி என் மனசை சொன்னதும் சொத்தை பிரிச்சு கொடுக்க சொன்னாங்க. அது எனக்கு பெருசா தெரியல. நியாயமா உனக்கு சேர வேண்டியதுதானேன்னு உடனே ஒத்துக்கிட்டேன்.

ஆனா ஸ்வேதா மாமா ரெண்டுபேரோட மறுபக்கத்தை நான் தெரிஞ்சிக்க முடிஞ்சது அன்னைக்குதான். என்னைவிட என் உணர்வுகளைவிட சொத்துதான் முக்கியம்னு ஸ்வேதா சொல்லும்போது எதுலயோ நான் தோத்துப்போயிட்ட உணர்வு.

இரண்டுநாள்தானே உங்களை பணயம் வச்சா தப்பில்ல அவ கழுத்துல தாலியக் கட்டுங்கன்னு ஸ்வேதா சொல்லும்போதே முடிவு பண்ணிட்டேன் எனக்கான துணை அவ இல்லைன்னு.

அந்த நேரத்துல பாட்டியோட கடைசி ஆசையாவது நிறைவேறட்டுமேன்னுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவங்க முன்னாடி சொன்னேன். ஆனா, அவங்க முன்னாடி நான் செய்த சத்தியம் நிஜம் சுபா. நீதான் இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவி என்பதை மனசுல நல்லா பதிய வச்சிகிட்டுதான் உன்கழுத்துல தாலியை கட்டினேன்.

“நிஜமாவா…” விழி விரித்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “நிஜம்தான்டா…”

“ஆனா அதுக்கப்புறம் உன்னோட சம்மதம்கூட கேட்காம உன் கழுத்துல தாலியக் கட்டுனது தப்போன்னு ரொம்பவே மனசு நொந்து போச்சு. அதனாலதான் உனக்கு விருப்பமிருந்தால் உன்னோட வாழனும். இல்லையின்னா ஒருவருஷம் கழிச்சு பிரிஞ்சதும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும்னு என்னை சமாதானப் படுத்திக்கிட்டேன்.

ஆனா நாளாக நாளாக என்னைமீறி என் மனசு உன்மேல் சாய்ந்தது நிஜம் சுபா. பாட்டி முன்னாடி செய்த சத்தியம் என்னைக்கும் பொய்யாகக் கூடாதுன்னு நினைச்சுப்பேன். உன் மனசுலயும் நான்தான் இருக்கேன், என்னை விட்டு பிரிஞ்சு போனாலும் தாலியை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நீ சொன்னதை ஸ்ரீராம் சொன்னப்ப, நான் தோத்துப் போகலை என் பாட்டி எங்க அப்பா அம்மா உன்னோட அப்பா அம்மா எல்லாரும் என்கூடவே இருந்து என்னை ஜெயிக்க வச்சிருக்காங்கன்னு புரிஞ்சது.”

“…”

“இப்ப இந்த நிமிஷம் உலகத்துலயே சந்தோஷமான ஆள் நான்தான். என்னோட வாழ்க்கை இப்ப என் கையில…”

சந்தோஷமாக அவள் கழுத்தில் முகம் புதைத்தவன், சட்டென்று நிமிர்ந்து…

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அந்த விபத்துல அடிபட்டு பழசு எல்லாமே மறந்து போச்சு. எங்கம்மா அப்பா முகம்கூட நான் ஃபோட்டோல பார்த்ததுதான்…

அவங்களோட இருந்த நிகழ்வுகள் ஒன்னுகூட நினைவில்லை.
ஆனா கோமதி அத்தையோட கழுத்துல நான் சாய்ந்து தூங்கினது லேசா நினைவுல இருக்கு, அவங்களோட குரல் நிறைய நேரம் என் காதுகள்ல ஒலிக்கும். சின்ன குழந்தையோட கை விரல்களை பிடிச்சிக்கிட்ட நினைவுகள் வரும்…
ஆரம்பத்துல இதெல்லாம் கனவுன்னு

நினைச்சுப்பேன். ஆனா என்னைக்கு உன்னோட ஸ்பரிசத்தை முதன்முதல்ல உணர்ந்தேனோ அன்னைக்குதான் இது பழைய நினைவுகளின் மீதின்னு புரிஞ்சுது. நாம ரெண்டு பேரும் சேரனும்ங்கறது கடவுள் போட்ட முடிச்சு சுபா…

அதனாலதான் உன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எனக்கு மறக்கலை.”

“ஆனா ஸ்வேதா பாவம்தானங்க… நான் இங்க வந்ததாலதான இப்படியெல்லாம் ஆச்சு. இல்லைன்னா நீங்க அவளை கல்யாணம் பண்ணியிருந்திருப்பீங்க.”

“அப்படியில்லடா… நீ சொல்ற மாதிரி ஒருவேளை எங்க கல்யாணம் நடந்திருந்தாலும், எங்க மாமா பண்ண துரோகம் எனக்கு என்னைக்காவது தெரிய வரும்போது, எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் வீணாப் போயிருக்கும். என்னை அதுல இருந்து மீட்டவளே நீதான்.”

“…”

“ஸ்வேதா என்னுடைய வாழ்க்கைக்கு தேவையில்லைன்னு முடிவெடுக்க எனக்கு ஒரு நாள் போதுமாயிருந்துச்சி. என்னைவிட வேற நல்ல பையனை தேர்ந்தெடுக்க அவளுக்கு பத்துநாள்தான் ஆகியிருக்கு… இதுவா உண்மையான நேசம்…?
ஆனா உன்னைவிட்டு பிரியனும்னு நினைக்கும்போதே கஷ்டமாயிருக்கும். உன்னைத்தவிர வேற வாழ்க்கை எனக்கில்லைங்கறதுல நான் உறுதியா இருந்தேன். உனக்கும் அப்படிதான்ங்கறது எனக்குத் தெரியும். இதுதான் சுபா உண்மையான நேசம்.
இப்படிதான் நடக்கனும்ங்கறது

இறைவன் போட்ட முடிச்சு. இனி எல்லாமே நமக்கு நல்லதாதான் நடக்கும்.”
மேலும் பேச வந்தவளின் இதழ்களை அடைத்தவன், “போதும் மீதியை காலையில பேசிக்கலாம்…” என்றபடி மீண்டும் அவள்மீது தன் தேடலைத் தொடர்ந்தான்.

தோட்டத்துப் பூக்களின் வாசத்தை தென்றல் ஏந்தி அறைக்குள் கொண்டு சேர்க்க, இனி இங்கு வேலையில்லையென்று முகில் கொண்டு தன்னை மறைத்தபடி வெண்ணிலவு மெல்ல நகர்ந்தது…

சில மாதங்களுக்குப் பிறகு…
வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருந்தனர். வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன இரட்டை வீடுகள்.

வந்தவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி.

ஏழுமாத மேடிட்ட வயிற்றுடன் முகத்தில் புன்னகை மிளிர அலங்காரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் சர்வலங்கார பூஷிதையாக அமர்ந்திருந்த மனைவியை ரசித்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.

ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்ததும் அந்த மாதத்திலேயே பெரிய ஹோட்டலில் அனைவரையும் அழைத்து ரிசப்ஷன் ஒன்றை ஏற்பாடு செய்து தனது திருமணத்தை முறைப்படி அறிவித்திருந்தான் அர்ஜுன்.

சுபத்ராவுக்கு கைநிறைய வளையல்களை அடுக்கிவிட்டு திருஷ்டி எடுத்த மங்களம் அவனையும் வளையல் போட அழைக்க, மெல்லிய பூங்கரத்தில் தங்க வளையல்களை அடுக்கியவன் சந்தனத்தை அள்ளி முகத்தில் பூச…

அவளது வெட்க நிறத்தை அது லேசாக மறைத்தது.

“ஹலோ… அண்ணா… இப்படி கன்னத்தை தடவிக்கிட்டே நீங்க நின்னுகிட்டு இருந்தா நாங்கலாம் எப்ப வளையல் போட…?”

ஜானவியின் கிண்டலில் உலகுக்கு வந்தவன்,

“டேய்…ஸ்ரீ… இவளை இன்னுமாடா அடக்க முடியல உன்னால…?

“எங்க… பின்னாடியே அலைய வேண்டியதா இருக்கு… எப்ப எங்க ஏறி குதிப்பாளோன்னு…” சுகமாய் அலுத்துக் கொண்டவன் ஐந்துமாத கர்ப்பிணியான மனைவியை காதலுடன் நோக்க… சிரித்துக் கொண்டான் அர்ஜுன்.

சற்றுமுன்தான் மரத்தில் மாட்டிக் கொண்ட பட்டத்தை எடுத்துத் தரச்சொல்லி வாண்டு ஒன்று கேட்க… எல்லாரும் சுதாரிக்கும் முன்பு மாடி கைப்பிடி சுவரைத் தாண்டி சன்ஷேடில் இறங்கியிருந்தாள் ஜானவி…

“வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு என்ன வேலை பார்க்குறா பாரு” என்று பதறியபடி ஸ்ரீராம்தான் அவளைத் தூக்கியிருந்தான். அவளைக் கண்காணித்தபடி அலையவே அவனுக்கு சரியாய் இருந்தது.

வந்தவர்களுக்கு விருந்தோம்பல் செய்து அனைவரையும் முறையாய் அனுப்பி வைத்தபின்,

குடும்பத்தினரை அமர வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார் தேவகி பாட்டி.

இப்போது ஊருக்கு கிளம்புகிறேன். பிரசவ நேரத்தில் கூடவே வந்து இருக்கிறேன் என்று கூறியவர், அர்ஜுனை அமர வைத்து மனைவியை கர்ப்ப காலத்தில் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“அந்தப் பிள்ளையே இப்பவரைக்கும் வாந்தி எடுத்துகிட்டு சோர்ந்து போய் இருக்குறா… நீ சுபா… சுபான்னு அவ பின்னாடியே சுத்தி தொந்தரவு பண்ணிகிட்டு இருந்தா எப்படி?

நீதான் அவளை தாங்கி பார்த்துக்கனும்… ஆனா அவதான் உன்னைத் தாங்கிகிட்டு இருக்கா…” என்று அறிவுரைக்கு மேல் அறிவுரையாக பொழிந்து கொண்டிருக்க, அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கணவனை ரசித்தவள்,

‘போனதடவை வந்திருந்தப்ப இந்த பாட்டி என்னை அவர் பின்னாடியே ஓட ஓட விரட்டிகிட்டு இருந்தாங்க… இப்ப அவருக்கு…’ மனதுக்குள் நகைத்துக் கொண்டவள், ‘பாட்டிக்கு நாங்க நல்லபடியா வாழனும்னு எவ்வளவு ஆசை’ என்று எண்ணியபடி மெல்ல நடந்து வந்து பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து அவரை கட்டிக் கொண்டாள்.

புன்சிரிப்போடு எழுந்து வந்த அர்ஜுனும் மறுபுறம் அவரை அணைத்துக் கொள்ள… நடுங்கிய கரங்களைத் தூக்கி இருவரையும் ஆசீர்வாதம் செய்தவர், “எங்க அக்காவுக்குதான் உங்களை இப்படி பார்க்க கொடுத்து வைக்கலை. ஆனா அவ மேல இருந்து உங்களை ஆசீர்வாதம் பண்ணிகிட்டு இருப்பா. நல்லா இருங்க பிள்ளைகளா…”

அந்த சந்தோஷ தருணத்தில் சரஸ்வதியும் வந்து அமர்ந்து அவர்களோடு இணைந்து கொள்ள…

இனி அங்கு என்றும் சந்தோஷம் மட்டுமே நிறைந்து வழிய நாமும் ஆசி கூறி விடைபெறுவோம்…

—- முற்றும்.