Maadi veedu 21

Maadi veedu 21

மாடிவீடு – 21

‘அண்ணனை ஐயா கூப்டாகளே! என்ன சொல்லுறாகளோ தெரியலியே? போன அண்ணனையும் இன்னும் காணும்’ யோசனையுடனே வாசலையேப் பார்த்திருந்தாள் அன்பு.

அதே நேரம், தலையைக் குனிந்தபடி மெதுவாக வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தான் அழகு.

“அண்ணே! ஐயா என்ன சொன்னாக? அமுதனை கல்யாணம் பண்ணச் சரி சொல்லிட்டாகளா?” அவளுக்கு இன்னும் தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் தீவிரம் தெரியவில்லை.
அழகு பதில் கூறவில்லை. அன்புவை கூர்ந்துப் பார்த்தான்.

அவன் கண்கள் கலங்கின.

“அண்ணே!” அவனைப் பிடித்து உலுக்கினாள்.

அழகு அப்படியே அவளைப் பார்த்து நின்றான்.

‘திங்கக்கிழமை உன் சாதிசன குடிசை ஒன்னும் இருக்காது, அதில் உன் தங்கச்சியும் இருக்கமாட்டா’ ஐயாவின் கோபக்குரல் அழகு மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘அப்படின்னா என்ன அர்த்தம்? ஞாயித்துக்கிழமை இரவோடு இரவாக வீட்டுக்கு தீ வச்சிருவாகளோ? எல்லாரும் தீயிவ கருக்கிருவாகளோ? அன்பு? என் அன்புவுமா தீக்கு தீனியாகும்?’ அவனால் நினைத்து பார்க்கமுடியவில்லை.

‘ஐயாவுக்கு இதெல்லாம் சாதாரணம் இதே போல் எத்தனைச் செய்திருப்பார், ஆனால் எங்களுக்கு வாழ்வே இந்த குடிசையும் எங்கள் மக்களும் தானே?’

‘அன்புவின் ஆசைத்தேன் என் ஆசையும், ஆனா அவ ஆசையை நிறைவேத்திப் போட்டு, ஐயா அடுத்த நாள் ஊரை எரித்தால்?
அவளுக்காக மொத்த ஊரும் அழிய வேண்டுமா? வேண்டாம், அன்பு நான் சொன்னால் கேட்டுக் கொள்வாள்’ எண்ணியவன் அவளை நோக்கினான்.

“வர ஞாயித்துகிழமை உனக்கும், ஐயா சொன்ன மாப்பிள்ளைக்கும் கல்யாணம்”

“அண்ணே நான் அந்தாளை கட்டிக்கமாட்டேன்” வேகமாக கூறினாள்.

“அன்பு” என அழைத்தபடி லிங்கமும், செல்வியும் அங்கே வந்தனர்.

“ஏன் அன்பு இப்படி வெளிய நின்னு கத்துற, வீட்டுக்குள்ளார போ” அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் செல்வி.

“என்னாச்சு அழகு, ஊருக்குள்ளார கேள்விப்படுற விஷயம் நெசமா, என்னல்லாமோ சொல்லுறாக”

“…..”

“ஐயா வேற ரொம்ப கோவமா இருக்காகளாம், அவகளுக்கும் மனசு கஷ்டமாதேன் இருக்காம். நம்ம ஊர் பத்தி தெரிஞ்சும் இந்த புள்ள இப்படி பண்ணுதாம்? ரொம்ப வருத்தப்பட்டுப் பேசுறாகளாம் ஊருல பேசிக்கிறாக, என்னாச்சி அழகு?”
நடந்ததைக் கூறினான் அழகு.

அமைதியாக கேட்டுக் கொண்டான் லிங்கம். ‘இந்த அன்பு ஏன் இப்படி அடம் பிடிக்குது’ அவனுக்குமே புரியவில்லை.

அன்பு விஷயம் கேள்விப்பட்டதும், உடனே அமுதன் வீட்டை நோக்கித்தான் சென்றான் லிங்கம்.

ஆனால் அங்கு பூட்டு பெரிதாகத் தொங்கவும் யோசனையுடன் சென்றுவிட்டான். எதுவோ சரியில்லை என்றுதான் அவனுக்கு தோன்றியது. ஆனால், இப்பொழுது அழகு கூறுவதை கேட்டப்பிறகு நிச்சயமாகத் தெரிந்தது எதுவுமே சரியில்லை என்று.

‘ஐயா அவனிடம் இங்கு உள்ளக் கலாசாரம் பற்றி எடுத்துக் கூறியிருப்பார் அதுதேன் அமுதன் ஊருக்கு கிளம்பிவிட்டான்… கிளம்பிவிட்டானா? இல்லை கிளப்பப்பட்டானா? ஐயாவை மீறி எதுவும் செய்யமுடியாது, இது ஊரே அறிந்த விஷயம், இது அன்புவும் அறிந்த விஷயம்’ என்ற யோசனையுடன் அழகைப் பார்க்க அவன் கண்களில் கண்ணீர் கட்ட அப்படியே அமர்ந்திருந்தான்.

அழகை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தான் லிங்கம்.

“ஏன் அன்பு, இப்படி அண்ணன் முன்னாடி கத்தி பேசுற, அது உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்திச்சி…

அது எப்பவும் உன்னை மட்டுந்தேன் நினைச்சுட்டே இருக்கும், இப்போ இப்படி சொல்லுதுன்னா, அதுக்கு பின்னாடி ஏதாவது இருக்கும் அன்பு கொஞ்சம் புரிஞ்சுக்கோ?” பதமாக எடுத்துக் கூறினாள் செல்வி.

“ஐயா பாத்திருக்க பையனுக்கு என்ன குறை அன்பு, படிச்சிருக்கார், பட்டணத்துல நல்ல வேலையில் இருக்கார். இதை விட உனக்கு வேற என்ன வேணும்?

நீ சுழுவா ஒருத்தனை மனசார நினைச்சுப்போட்ட, ஆனா, அதால எவ்ளோப் பிரச்சனைப் பாத்தியா? நாமத்தேன் சூதானமா நடந்துக்கோணும்”

“அன்பு, செல்வி சொல்லுறது சரித்தேன், மாப்பிள்ளை உனக்கு நல்ல பொருத்தமா இருப்பார்… அதை விட, இது ஐயா கொண்டு வந்த பையன், அவக நல்லதுதேன் செய்வாக ஐயாவை மீறி நம்மளால ஏதும் பண்ணமுடியாது அன்பு, அவக எதுசொன்னாலும் சரியாத்தேன் இருக்கும், ஞாயித்துக்கிழமை உனக்கு கல்யாணம்… இது ஐயா கட்டளையும் கூட”

“எனக்கு கட்டளையிட அவர் யார்?” ஆக்ரோஷமாக பொங்கினாள் அன்பு.

அதிர்ச்சியாக அன்பை பார்த்தான் லிங்கம்.

அன்பையே பார்த்திருந்தாள் செல்வி. இந்த எதிர்ப்பை எதிர்பார்த்தாள். அமுதனுக்காக இதற்கு மேலும் செல்வாள் என்று அவளுக்கு நன்கு தெரியும்.

அன்று அவளிடமே எப்படி வாதாடினாள். அமைதியாக அழகு முகத்தைப் பார்த்தாள் செல்வி.
அவனுமே அதிர்ச்சியாகதான் பார்த்திருந்தான்.

“யம்மா அன்பு, ஐயாவை இப்படி பேசாதே, அவக இந்த ஊருக்கே ஐயா, நமக்கு படியளக்கும் சாமி. அவகள இப்படி சட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசாத அன்பு, நமக்கு அவகத்தேன் வாழ்க்கையும் குடுத்திருக்காக, அவகள நாம இப்படி பேசப்பிடாது அன்பு.

ஞாயித்துக்கிழமை உனக்கும், மாப்பிள்ளைக்கும் கல்யாணம். இல்லன்னா திங்கக்கிழமை நாம யாரும் உயிருடன் இருக்கமாட்டோமாம்… நாம மட்டும் இல்லாம நம்ம சாதிசனம் யாரும் இருக்கமாட்டாகளாம் ஐயா சொல்லுறாக, நான் என்ன செய்யட்டும்?” அமைதியாக கேட்டான் அழகு.

செல்வி அதிர்ச்சியாக லிங்கத்தைப் பார்த்தாள். அவன் ‘ஆம்’ என மெதுவாக தலையசைத்தான்.

“அண்ணே, நம்ம ஐயாவா இப்படி சொன்னாக?” அவளால் நம்பமுடியவில்லை.

‘ஆம்’ என தலையை குனிந்துக் கொண்டான். தங்கை ஆசைக்காக அவனால் ஐயாவை எதிர்க்கமுடியவில்லையே,

“அண்ணே, எனக்காக யாரும் சாகவேண்டாம். என்னை சாகடிச்சிரு. என் மூலமாவது எல்லாருக்கும் புத்தி வரட்டும், நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்சும் காதலை செய்து தவிக்காமல் இருக்கட்டும். என்னை கொன்னுருண்ணா” கேவிக்கேவி அழுதாள் அன்பு.

அழகு அழுகையில் குலுங்கினான்.
“நல்ல காரியம் பேசும்போது ஏன்டி இப்படி அழுவுற? எல்லாம் நல்லதே நடக்கும்… அழாதே அன்பு” செல்வி தான் கூறினாள்.

“உன்னை மகாராணி போல நாங்க வளர்த்து வச்சிருக்கது, இப்படி சாக குடுக்கவா? நீ வாழனும் அன்பு, அதை உன் அண்ணன் பார்த்து பார்த்து பூரிக்கணும். இதுக்குதேன் இத்தனை வருஷமா பாடுபட்டு வளர்த்தான். நீ என்னடான்னா இப்படி சாகுறேன்னு சொல்லுற, உன் நல்லதுக்குதேன் நாங்க எல்லாரும் சொல்லுதோம்” லிங்கம் வருத்தமாய் கூறினான்.

அழகு மனதில் தமிழும், அன்பும் மாறி மாறி வந்தனர்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இருவரும் செய்திருக்கும் செயலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. யாருக்காக அவன் பேசுவது?

ஐயாவை எதிர்த்து அவனால் ஒன்றும் செய்ய முடியாது?

இந்த நேரம் ஐயாவிடம் எதிர்த்து போராட அவனாலும் முடியவில்லை.

அவன் செய்திருக்கும் செயல் அவன் கண் முன் வந்து நின்று தடுக்கிறது.

இவனுடன், இந்த நேரம் அமுதன் கைகோர்த்து வந்தாலாவது பேசலாம். அவனையும் காணவில்லை. அவனும் அமுதனைதான் தேடிக் கொண்டிருக்கிறான்.

அவன் எங்கே என்று அன்புவிடமும் இப்பொழுது கேட்கமுடியாத நிலை. அமுதனுக்கு கட்டிவைத்தால், ஊரை அழித்துவிடுவார் ஐயா, அவன் என்னதான் செய்வது?
தலை குனிந்து நின்ற அழகுவின் முன் வந்து நின்றாள் அன்பு.

“அண்ணே, நான் உன்கிட்ட இதுவரை எதுவும் ஆசையா கேட்டதே இல்லண்ணே, நான் கேக்கதுக்கு முன்னமே நீ எனக்கு தந்திருவ, மொத முறையா உன்கிட்ட ஒன்னு கேக்குதேன் உன் தங்கச்சிக்கு செய்வியாண்ணே?”

“…….”

“அண்ணே, ஏண்ணே அமைதியா இருக்க? உன்னால முடியாதாண்ணே… எனக்கு அமுதன் வேணும்ன்னே?

நா… நா… மொத முறை அமுதனை பாக்கச்ச அப்படியே நீதாண்ணே நினைவுக்கு வந்த, உன்னை போலதாண்ணே அவரும் என் மேல அவ்ளோ பாசம் வச்சிருக்கார். எனக்காக எதையும் செய்வாருண்ணே… எனக்கு அவரு வேணுண்ணே”

“அன்பு… ஐயாவை மீறி எப்படி அன்பு” கேவலுடன் கட்டியணைத்துக் கொண்டான்.

“அண்ணே அழுவாதண்ணே?” வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவள்,

“வாண்ணே நாம இப்போவே எங்கையாச்சும் போலாம், நமக்கு யாரும் வேணாம்… இல்லன்னா என்னை இங்கனையே கொன்னுரு”

“ஏன்? அன்பு இப்படி எல்லாம் பேசுத? வலிக்குது அன்பு. உன்னை நெஞ்சில சுமந்த இடம் வலிக்குது அன்பு, இப்படி பேசத்தேன் உன்னை இப்படி வளத்தனா?”

“ஏண்ணே நான் ஆசைபட்டது தப்பா?”

“…” அமைதியாக நின்றிருந்தான் அழகு.

என்ன பதில் சொல்வான் அவன், தன் தங்கை செய்த அதே தவறைத்தானே அவனும் செய்திருக்கிறான்.
அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அன்பை அப்படியே அணைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

‘எதுவோ சரியில்லை, அமுதனும் வீட்டில் இல்லை. இப்போ ரெண்டு நாள் டைம் குடுத்திருக்கார், அவசரமா கல்யாணம் வைக்க சொன்னதும் அவகத்தேன் இப்போ ரெண்டு நாள் அவகாசம் தரதும் அவகத்தேன், ஒருவேளை அமுதன் காணாம போனதுக்கு அவக சம்மந்தம் இருக்கா?’ யோசனையோடு அமர்ந்திருந்தான்.

அழகுவுக்கு, லிங்கம் அளவுக்கு யோசனை போகவில்லை. மனம் தமிழையும், அன்புவையும் மட்டுமே சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.

‘ஏதாவது அதிசயம் நடந்தாவது, அன்பு ஆசை நிறைவேற வேண்டும்’ என்ற வேண்டுதல் மட்டுமே அழகு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

*******************************************

“ஏன்ம்மா அப்பாரு இப்படி பேசிப்புட்டாக? அழகு பாவம்ல” அமுதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் தமிழ்.

“அவக என்ன தப்பா பேசிட்டாகன்னு நீ கண்டுட்ட?”

“ம்மா, அன்பு ஆசைபட்டா கட்டிவைக்கவேண்டியது தான, அது அன்பு, அழகு சம்மந்தபட்டது அப்பா ஏன் ஊடால போறாக?”

“இது அவன் சம்மந்தபட்டதுத்தேன், அதுவும் அவன் சாதிக்குள்ள அவன் சம்மந்தம் பேசும் வரைத்தேன், என்னைக்கு அவன் நம்ம வாசல் தாண்டி வரணும்னு நினைச்சானோ அப்பவே இது ஊர் பஞ்சாயத்து ஆச்சு… அதேன் அப்பாரு பேசுறாக” கோபமாக கூறினார் அமுதா.

“இதுல என்னம்மா பஞ்சாயத்து இருக்கு, காதல் எல்லாம் தகுதி பாத்து வராதும்மா? எப்படினாலும் அப்பாரு பண்ணுனது ரொம்ப தப்பு”

“இதெல்லாம் நீ ஏன் பேசுத? அப்பாரு இந்த ஊர் தலைவர், அவரு ஊர் சார்பா எதுனா செய்வாக நீ உன் சோலியைப் பார்த்துட்டு போ தமிழ்”

“இதுக்குதேன் சொன்னேன், சேரக்கூடாத சேர்க்கை சேர்ந்தா இப்படித்தேன் நீ பேசுவ? எனக்கு அப்பவே தெரியும் நீ அந்த அழகு பயக்கூட சுத்தச்‌சவே தெரியும் நீ இப்படித்தேன் பேசுவன்னு,

இதுமட்டுமா பேசுவ இன்னும் என்ன எல்லாம் செய்யப்போறியோ? நானும் பார்த்துகிட்டுத்தேன் இருக்கேன், நீ பேசுறது, உன் நடவடிக்கை எதுமே எனக்கு சரியாப்படல” வெத்தலையை இடித்துக் கொண்டே தமிழை எச்சரித்தார் அப்பத்தா.

“நீ சும்மா கிட கிழவி, நீ தான் எல்லாரையும் கெடுத்து வச்சிருக்க” முறைத்தவள் ஊஞ்சலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

ஏதாவது செய்யவேண்டும் என்று அவள் மனம் விடாமல் பிராண்டிக்கொண்டிருந்ததால் ஆலமரத்தானிடம் பேச ஊஞ்சலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

“நீ திருந்தமாட்டாடியம்மா, உன் அப்பாருட்ட ரெண்டு அப்பு வாங்குனாத்தேன் உன் புத்தி தெளியும்” உரைத்தவர் தன் வெத்தலையை கவனிக்க ஆரம்பித்தார்.

“என்ன ஆத்தா உன் சத்தம் தெருமுனைவரைக்கும் கேக்குது என்னாவாம்?” என்றபடியே வீட்டின் உள்ளே நுழைந்தார் ஆலமரத்தான்.

“எல்லாம் உம்பொண்ணை கேளு, வைக்கவேண்டிய இடத்தில் அதை அதை வைக்கோணும் இல்லன்னா இப்படித்தேன் வந்து நிக்கும்”

“என்னாச்சி, நீ என்ன சொல்லுத?” புரியாமல் கேட்டார் ஆலமரத்தான்.

“அமுதனுக்கு, அன்பை கட்டிக்கொடுக்கணுமாம் உம்பொண்ணு சொல்லுதா, இதெல்லாம் ஏன் அவ சொல்லுதான்னு நீ யோசிச்சியா?”

“விளங்கும்படி சொல்லுத்தா”

“அன்பு பாவமாம், அவ ஆசைப்பட்ட பையனையே அவ கூட சேர்த்து வைக்கோணுமாம், இதுக்குதேன் சொல்லுறது வேலைக்காரங்களை வேலைக்காரன் போல வைன்னு,

எல்லாருக்குமா இவ பேசுதா? இந்த அன்பு புள்ளைக்காண்டி மட்டுந்தேன் பேசுதா, அதேன் அவகளையும் நீ வேலைக்காரன் போல வச்சிருந்தா இவளுக்கும் அவக இனம் கண்ணில பட்டிருக்கும், ஒன்னு மண்ணா இருந்துபோட்டு, அவகளும் நம்ம இனம்னு நினைச்சிபோட்டு கண்டதையும் பேசுதா”

“சரி… சரி… நீ விடுத்தா அவ சின்ன புள்ளை அவளுக்கு என்ன தெரியும், நாமதேன் சூதனமா சொல்லோணும், எம்பொண்ணுக்கு நல்லாவே தெரியும் இனம் இனத்தோடுத்தேன் சேரோணும்னு, நீ வா கண்ணு” என்றபடி தமிழை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

“ஹுக்கும்… என்னைய ஒன்னும் பேசவிட்டிராத” நீட்டிமுழக்கியவர் அப்படியே சரிந்து படுத்துக் கொண்டார்.

“இங்காரு கண்ணு, எப்பவும் அவக வேறத்தேன், ஏணி வச்சாக் கூட அவக நம்ம பக்கத்துல வரமுடியாது, அவக வேற, நாம வேற, அவக பழக்க வழக்கம் வேற நம்மது வேற, நம்ம இனத்தையும், நம்ம கலாச்சாரத்தையும் நாமத்தேன் காப்பாத்திகோணும்.

ரெண்டு இனத்தையும், ஒன்னாக்க முடியாது, அவக பழக்க, வழக்கம் கூட நம்மதை சேர்க்க முடியாது. எப்பவும் ரெண்டும் சேராது.

தனிதனியாத்தேன் பிரிஞ்சு நிக்கும். வேற வேற இனத்தை சேக்கிறதும், தண்ணியையும், எண்ணையையும் சேக்கது போலத்தேன். ரெண்டும் என்னைக்கும் ஒட்டாதுக் கண்ணு.

அப்படியும் நாம ஒட்டவைக்க நினைச்சோம்னா ஏதாச்சும் ஒன்னுத்தேன் நிலைச்சு நிக்கும்.

இப்படியே வைச்சிக்கோயேன், எண்ணையையும், தண்ணியையும் ஒன்னாக்க நினைச்சி நாம அடுப்புல வச்சோம்னா ஏதாவது ஒன்னு உயிரை விட்டு இன்னொன்னை வாழவிடும் அப்படித்தேன் இதுவும்.

எதுக்கு கண்ணு நமக்கு தேவையில்லாத பிரச்சைனையும், வம்பும். அவக அவகளா இருக்கட்டும், நாம நாமளா இருப்போம்.
எப்பவும் நமக்கு அவக வேணும், அவகளுக்கு நாம வேணும். இப்படியே இருந்துட்டு போவேமே?

சரி விடு… உனக்கு எதுக்குமா இந்த யோசனையெல்லாம், நேரம் ஆகிட்டு போ போய் தூங்கு” தலையை வருடிக் கூறியவர் தன் அறைக்கு சென்றார்.

“நல்லா கேட்டுக்கோடி” என்றபடி அமுதாவும் அவரின் பின்னே சென்றார்.

************************************

அன்று பிறகு அன்பு எதுவும் பேசவில்லை. அழகுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அன்பு வீட்டைவிட்டு எங்கும் செல்லவும் இல்லை. அன்பு அருகிலேயே செல்வி நடமாடிக் கொண்டிருந்தாள்.

அன்பு தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டாள். அதை செயல்படுத்த நேரம் பார்த்துக் கொண்டு வீட்டிலே அமர்ந்திருந்தாள்.

ஆலமரத்தான் ஒவ்வொரு நொடியும் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவளுக்கு நன்கு தெரிந்தது. அவளே அவளுக்கு ஒரு முடிவை எடுத்துக் கொண்டாள்.

அவள் முடிவில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை.

இனி யாரை பற்றியும், எதை பற்றியும் சிந்திக்க அவள் தயாராக இல்லை.

என் வாழ்க்கை என் முடிவு என்பதில் தீவிரமாக இருந்தாள்.

ஐயாவை மீறி எதுவும் செய்யமுடியாது என்று லிங்கத்துக்கு நன்கு தெரிந்தது. திருமண வேலையை அவனே பார்த்துக் கொண்டான்.

தான் சந்தித்த அத்தனை, ஆண், பெண்களிடம் திருமண விஷயத்தை அவனேக் கூறிக்கொண்டான்.

பந்தல், மேளம், சமையல், பூ எல்லாம் அவனே ஏற்பாடு செய்துவிட்டான்.

கல்யாணபத்திரிக்கை அடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், பையன் வீட்டு சார்பாக ஆலமரத்தானே அடித்துவிட்டார்.

அழகு, அன்பு முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவளோ, அவனை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.

அவள், அவள் போக்கில் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

மாட்டுவண்டியின் சத்தம் வாசலில் கேட்க, தலையை மெதுவாக வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான் அழகு.

ஆலமரத்தான் தான் வந்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வெள்ளை, வேட்டி சட்டை அணிந்த இன்னொருவர் பார்ப்பதற்கே கம்பீரமாக இருந்தார். ஓடி வந்து வாசலில் நின்றான் அழகு.

ஒரு பெரிய தாம்பளத்தில் வெற்றிலையும், பாக்கும் பழமும், திருமண பத்திரிக்கையும் எடுத்து வைத்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றார் அவர்.

“அழகு, நான் சொன்னேன்ல, இவன் தான் பையனோட அப்பா. வேலுசாமி. திருமணப்பத்திரிக்கை குடுக்கணும்ல அதேன் கையோட அழைச்சிட்டு வந்துட்டேன்” உரைத்தவர் அருகில் நின்றவரை அறிமுகப்படுத்தினார்.

“வணக்கம்ங்க”

“என்ன தம்பி, இப்படி அசமந்தமா நிக்குறீக, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாளுதேன் இருக்கு. சீக்கிரமா வேலையை பாக்காண்டாமா?” சிரிப்புடன் கூறியவர் தான் கண்டு வந்த தாம்பளத்தை அழகு கையில் கொடுத்தார்.

இருவருக்கும் தண்ணீர் கொண்டு கொடுத்த செல்வி தாம்பளத்தை எடுத்து வீட்டின் உள்ளே சென்று இன்னொரு தாம்பளத்தில் வெற்றிலைப்பாக்கு வைத்துக் கொடுக்க, அழகு அவர் கையில் கொடுக்க என்று சிறிது பேசி சென்றார் அவர்.

அமைதியாக வீட்டின் உள்ளே அமர்ந்திருந்து இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த அன்பு முகத்தில் சிறு புன்னகை கீற்று.

சிறிது நேரத்தில் அங்கு வந்த லிங்கம், அழகை அழைத்து ஊரில் இருக்கும் எல்லார் வீட்டுக்கு பாக்கு வெத்தலை வைக்க சென்றனர்.

அப்படியே ஆலமரத்தான் வீட்டுக்கும் சென்றனர்.

“எல்லாம் நல்லபடியா நடக்கும் அழகு. அன்பு எப்பவும் நல்லா இருக்கணும்னுதேன் நானும் நினைக்கிறேன். பேசின எதையும் மனசுல வைச்சுக்காத” தன்மையாக அவனிடம் கூறியவர், பாக்கு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.

அழகுவையே பார்த்தபடி வாசலில் நின்றிருந்தாள் தமிழ்.

அவளை, அவள் முகத்தை எட்டிப் பார்க்காமலே விலகிச் சென்றான் அழகு.

error: Content is protected !!