jeevan 17(1)

jeevan 17(1)

உன்னோடு தான்… என் ஜீவன்….

பகுதி 17

ஷாப்பிங் மாலிற்கு செல்லும் வழி முழுவதும் தன்னிடம் வம்பு வளர்த்த ஆரனை சமாளிப்பது, ட்ராபிக்கில் வண்டி ஓட்டுவதைவிட கொடுமையாக கௌதமுக்கு இருந்தாலும், அவன் ஆரனுடன் இருக்கும் தனிமையை எப்போதும் விரும்புவான். காரணம் அவனின் குறும்பும், பேச்சும் அவனின் தனிமை உணர்வை போக்கும் அற்புத விசயமாயிற்றே. அவனுக்கு முழு உற்சாகத்தை தரும் மருந்தே ஆரன் தான் இதுவரையிலும். இனி…?

“கௌதம் எனக்கொரு டவுட்”

“சொல்லுடா, என்ன டவுட்?”

“இல்ல, வெளிய வந்தாலும் பார்மல் சர்ட் மட்டும் தானே போடுவ! இன்னைக்கு என்ன இப்படி? நீ இந்த மாதிரி எடுக்க மாட்டையே?! பட் நல்லா இருக்குடா?!

“இது, நா எனக்குன்னு எடுத்து வச்சிருந்த செட், பார்த்துட்டு இது தான் நல்லா இருக்குன்னு வம்பு பண்ணி, அத வாங்கிட்டு, நீ எடுத்தத என்கிட்ட கொடுத்தியே அது தான். இப்பவரை நீ மாறவே இல்லடா. தாத்தா இருந்தப்பவும் இப்படி தான் செய்வ. எனக்கு எடுத்ததே வேணுமின்னு நிற்ப. அதுக்காகவே தாத்தா ஒரே மாதிரி ஆர்டர் கொடுப்பாரூ. அது இப்பவும் உனக்கு தொடருது. அதென்னமோ மத்தவங்ககிட்ட பிடிவாதமா நின்னு எதையும் சாதிக்கற என்னையே நீ விட்டு கொடுக்க வச்சிடுற!” என சொல்ல, அசட்டு சிரிப்பை உதிர்த்த ஆரனோ..

“அது ஒன்னுமில்லைடா! என் சாய்ஸ் விட உன் சாய்ஸ் தான் பெஸ்ட் அன்ட் பெட்டர் சாய்ஸ்ஸா இருக்கு அதான்!” என சொல்ல, மௌனமாக தலையசைத்து ஆமோதித்த கௌதம்,

“டேய் ஆரா, நீ தான் ரொம்ப பசிக்குது சொன்னயில்ல. அதனால என்ன பண்ற,  நீ என்ட்ரன்ஸ்ல இறங்கிக்கோ. நா மட்டும் போய் வண்டிய பார்க் பண்ணிட்டு, ஃபுட் கோர்ட் வந்திடுறேன். சன்டே ங்கறதால கூட்டம் அதிகமா இருக்கும். ரெண்டு பேரும் கீழ போய் மேல வர்றதுக்கு, நீ முன்னாடி போய் ஆர்டர் பண்ணிடு, இதுக்கும் மேல நீ தாங்க மாட்ட”  என்று சாமுவேலின் எண்ணத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தான் கௌதம்.


இதை சொல்லி முடிக்கும் போது, மாலும்  வந்துவிட, ஆரனை விட்டுவிட்டு தான் மட்டும் பார்க்கிங் சென்றான். பார்க்கிங்கில் தனது வண்டியை நிறுத்தி கௌதம், அதற்கான டோக்கனுடன் அங்கேயே இருந்த லிப்டில் செல்ல வேண்டி அதனருகே செல்ல, அதற்கு பக்கத்தில் இரு பெண்கள் ஏற்கனவே காத்திருந்தனர் அதே லிப்டிக்காக..

“பெண்களுடன் தனியாக தான் எப்படி?!” என யோசித்தவன். அங்கிருந்த படி வழியாகவே சென்று விடலாம் என்று திரும்ப, சரியாய் அதே நேரம் அவனை கடந்து சென்றவனை கண்டவன் மனம் நடக்க போவது ஏதோ தவறு என உணர்த்த, தன் முடிவை மாற்றி லிப்ட்டினை நாடி  சென்றான்.

“என்னடீ , லிப்ட் வேற இன்னும் வரல.. அவளுங்க எல்லாம் எப்பவோ வந்துட்டேன்னு சொன்னாங்க. ஏற்கனவே உன் மேல இருக்கற கடுப்புல தான் இங்க வரவச்சிருக்காங்க. இதுல நீ வேற மால் ன்னா வரல வரல ன்னு … உன்னோட போராடி கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும் ன்னு ஆகிடுச்சு”

“நேக்கு ரொம்ப பயமா இருக்கு சுமி..!”

“க்கும்.. இப்படியே பயந்துட்டு இரு. நேத்து அவளுங்ககிட்ட பேச போறப்ப, நீயும் வான்னு எப்படியெல்லாம் கூப்பிட்டேன். நேத்து நீயும் வந்திருந்தா அங்கையே பிரச்சனை முடிஞ்சிருக்கும்!”

“அவா, இப்படி வர சொல்லுவான்னு நேக்கு தெரியாதே !”

“உனக்கு ஒன்னுமே தெரியாது தான். அதான் அவளுங்க பாத்ரூம்ல வச்சு பூட்டினாலும் அப்படியே அசடு மாதிரி நின்னுட்டு வர்றையே. உனக்கு எப்படி தெரியும்?!”

“என்ன சுமி இப்படி பேசறேள். அவாகிட்ட எதுவும் எதிர்த்து பேசாம இருக்குறப்பவே என்கிட்ட வம்பு வளர்க்கறா.. இதுல நா எதாவது பேச போய் வீணா எதுக்கு வம்பு சொல்லுங்கோ?!”

“அட அறிவுகொழுந்தே! உனக்கு புரியவே இல்ல. நீ பேசாம இருக்கறது தான் பிரச்சனையே! விடு, இதுவும் ஒரு விதத்தில நல்லது தான். இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு உன்ன எதுவும் செய்ய முடியாது”

“அப்புறம் எதுக்கு என்ன வர வச்சிருப்பாங்க?!”

“ம்ம்..! அவங்களுக்கு பொழுது போகலையாம் இங்க. அதான் நீ அப்படியே ஒரு பாட்டு பாடி, டேன்ஸ் ஆடி காட்டனா பொழுது நல்லா போகுமேன்னு தான்! “

“டேன்ஸ்ஸா! அச்சோ நேக்கு பாட்டு மட்டும் தானே வரும். நா வேணுமின்னா பாட்டு மட்டும் பாடவா?!”

“ஆமான்டீ , உனக்காக அவளுங்க மேடை போட்டு ரெடியா வச்சிருப்பாங்க. நீ போய் கச்சேரி நடத்திட்டு வா! அடீயேய்! நீ ஏன்டீ இப்படி இருக்க? ஆண்டவா!  அவளுங்க என்னத்த பண்ண போறாங்களோன்னு, எனக்கு தான் பக் பக்குன்னு இருக்கு. கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு!”

இருவரின் உரையாடலும், அதில் அந்த பெண்ணின் அறியாமை கலந்த வெகுளித்தனமான பதிலும் கௌதமிற்கு சிறு சிரிப்பை கொடுத்தாலும், அதை தனக்குள் மறைத்தவன், அவர்களை விடுத்து, அவன் கவனம் முழுவதையும் அருகே இருந்த மற்றொருவனிடமே வைத்திருந்தான், தனது கையில் உள்ள போனை நோன்டிக்கொண்டிருக்கும் பாவனையில்…

அவனின் நினைப்பை பொய்யாக்காமல் அந்த தளத்திற்கு லிப்ட் வந்தவுடன், பெண்கள் இருவரும் உள்ளே செல்லும் சமயம் பார்த்து, அவர்களில் ஒருத்தி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை அவசரமாக பறித்து கொண்டு, எதிர் திசையில் ஓட துவங்கினான் அவன்.

அவனையே கண்காணித்திருந்த கௌதமிற்கு, அவன் நோக்கம் புரியும் முன்பே இது நடக்க, ஒரு நொடியில் சுதாரித்தவன், அவனை வேறு பாதை வழியாக சென்று மடக்கினான்.


கௌதமிடம் சிக்கிய அவனும் தொழில் புதிது போல, தன் வறுமையை போக்க வழி தெரியாது, பசி அவனை அவ்வாறு செய்ய வைத்திருந்தது. அவனை மடக்கி பிடித்தவன், அடித்த இரண்டாம் அடியிலேயே, அவனின் காலில் விழுந்தவன், தன் நிலையை கூறி அழ,  தன் முகவரியை கொடுத்து நாளை அங்கே வருமாறு கூறியவன், அவனை புகைபடமும் எடுத்து கொண்டே..

“இங்க பாரு,  உன் போட்டோ எங்கிட்ட இருக்கு.  நாளைக்கு நீ அங்க வரல. இது போலீஸ்க்கு போகும். நீ ஜெயிலுக்கு போவ. இந்தா இதுல ஐநூறு ரூபா இருக்கு.  நாளைக்கு இதுல இருக்கற இடத்துக்கு வர்ற. சரியா?” என்றதும், நன்றியுடன் அவனிடம் அந்த பணத்தையும் விசிட்டிங் கார்டையும் பெற்றுக்கொண்டு நடந்தான்.

“டேய் தம்பி, உன் பேர சொல்லாமா போனா எப்படி?!” என்ற கௌதமின் கேள்விக்கு “அமுதன் ண்ணா” என பதில் சொன்னவனை பார்த்தவன், “நாளைக்கு கண்டிப்பா வர்ற!” என்று தனது போனையும் ஆட்டி காட்டி சொல்லிவிட்டு,

“கொடிது இளமையில் வறுமை”ன்னு பாடி வச்சவங்க சும்மாவா! கண்ணு முன்னாடி நிக்குது உதாரணம்.. ஹூம்..! என்று  பெருமூச்சோடு லிப்ட்டின் அருகே வந்தவன், அங்கு யாருமில்லாது இருப்பதை கண்டு, ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்.

‘என்னடா இது! நம்ம இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருத்தன சேஸ் பண்ணி, அடிச்சு, அவங்க ஹேண்ட் பேக்கோட வந்தா,  அவங்கள காணோம்!

ஒருவேள அவங்களும் வேற யாராவது கிட்டயிருந்து அடிச்சிருப்பாங்களோ! அவங்க பொருள இருந்தா இப்படி அசால்ட்டா விடுவாங்களா!? ச்சே, ச்சே! அவங்க பேசினத வச்சு பார்த்தா, தப்பாவும் தோனலையே? எதுக்கும் ஓப்பன் பண்ணி பார்த்தா தெரியுது!’ என்ற சிந்தனையுடன் அதை திறந்தவனுக்கு, இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு தன்னையும் மீறி வெளிப்பட்டது.

காரணம் அந்த பை முழுவதும், ஏதோ சாமியார் மடத்தில் வைத்திருப்பது போல அத்துணை வகையான விபூதி குங்கும பாக்கெட்டும், சாமி போட்டோவும் தவிர பெரிதாக பணம் என்று எதுவுமில்லை.  அதோடு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் லாலிபப் மட்டும் அந்த பையில் குறைந்தது பத்து இருந்தது.

‘இது கண்பார்மா, இது அந்த இன்னோசெண்ட் மாமியோடது தான். சில்லி கேர்ள். ஆள் மட்டும் வளர்ந்திருக்கா!’ என்று நினைத்தவன், ‘நா கொடுத்த ஐநூறு ரூபாய் எவ்வளவோ அதிகம் இந்த ‘பேக்'(Bag)க்கு, இத அவன் பார்த்திருந்தா.!! மை காட், செம ஷாக் ஆகியிருப்பான். அதோட இந்த தொழிலையே விட்டுருப்பான்’ என்ற எண்ணம் தோன்ற சிரிப்பே வந்தது தன்னிடம் மாட்டிய அமுதனை நினைத்து..

அந்த பேக்கில் பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் அதை தூக்கி போடும் எண்ணம் மட்டும் ஏனோ கௌதமிற்கு வராவே இல்லை. காரணம் அவனுக்கே புரியாத புதிர் தான்.

மீண்டும் தனது வண்டியருகே வந்தவன், அதிலுள்ள கவரில் அந்த பேக்கை வைத்துவிட்டு, லிப்டின் உதவியுடன் புட் கோர்ட்டை அடைந்தான் அதே புன்னகையுடன்..

புட்கேர்ட்டில், வருவோர் நன்கு தெரியுமிடத்தில் அமர்ந்திருந்த ஆரன்,  கௌதமின் அந்த கோலத்தை பார்த்து, வாயில் வைத்த உணவுடன், திறந்திருந்த வாயை மூட மறந்து பார்த்திருந்தான்.

கௌதம் சிரிப்பான் தான். ஆனால் அது ‘இதழ்களுக்கு வலிக்குமோ!’ எனும் வண்ணம் மிதமான புன்னகையாக இருக்கும். அது கூட தான் அருகே இருந்து செய்யும் கலாட்டாவால் தான். கம்பெனி பொறுப்புகளை அதிகமாய் பார்க்க ஆரம்பித்த பிறகோ, அதுவும் குறைந்து விட்டிருந்தது நன்கு தெரியுமே ஆரனுக்கு. அப்படி இருக்க, இப்படி விரிந்த புன்னகையை, அதுவும் இப்படி பொது இடத்தில்!

அவனருகே வந்த கௌதம், “டேய் பக்கி,  ஏன்டா, இப்படி வாயத்தெறந்துட்டு இருக்க மூடு. ஏதாவது வாயுக்குள்ள போய் குட்டி போட்டு, குடுத்தனம் நடத்திட போகுது” என புன்னகை முகமாய் சொன்னவனை இன்னும் உலகத்தின் எட்டாம் அதிசயமாய் பார்த்தான் ஆரன்.

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல், போக ஆரனை பார்த்த கௌதம், “டேய் என்னடா இப்படி பிகர பார்க்கற மாதிரி கண்சிமிட்டாம பார்க்கற?!” என்பதும்

அதிர்ந்த ஆரன், அடுத்த நொடி சந்தோஷமாக, “கண்பார்ம்டா, யார்ரா அவ?!  என் கௌதமையே மயக்கின ஆளு?!” என கேட்டதும், இப்போது அதிர்வது கௌதம் முறையானது.

அவனின் அதிர்ச்சியும், பெண்களை பற்றி பேச வந்தாலே தடுப்பவன், இப்போது அமைதியாய் இருப்பதிலேயே ஆரனுக்கு தெளிவாகி விட்டது, எதோ ஒன்று நடந்திருப்பது.

கௌதமோ, “அவளா..என்னடா.. சொல்ற! அப்படியெல்லாம் .. இல்லையே!” என தடுமாற்றத்தோடு, வேறு எங்கோ பார்த்து சொன்ன போதும், அவனின் புன்னகையும் , அவன் தன் முகம் பார்க்கமல் இருப்பதிலுமே பொய் என்பதை புரிந்து கொண்டவன்,

“அப்படியா! அப்ப பொண்ணு இல்லன்னா மோகினி பிசாசு அடிச்சு இருக்குமோ?! வயசு பசங்கள கண்டா விடாது ன்னு சாமூ சொல்லும், வா நம்ம சர்ச்சுக்கு போயிட்டு வரலாம்” என சீரியஸ்ஸாக சொல்வது போல நடிக்க,

“மோகினியெல்லாம் இல்ல, மாமி தான் அடுச்சிட்டா! ” என்று தனக்குள் முனுமுனுத்தாலும் ஆரனுக்கு அது நன்றாகவே புரிய,

வாயில் வைத்த உணவு ஆரனுக்கு புரையோற, “உக்கூ… உக்கூ.. ” என இருமி கொண்டே தண்ணிரை பருகி தன்னை நிலை படுத்தியவன், “டேய் கௌதம் … என்னடா சொல்ற மாமி அடுச்சாளா?! யார்ரா அவ? எதுக்குடா அடிச்சா? அப்படி நீ என்ன பண்ண?! “என முதலில் பதறியபடி கேட்டவன்,

பின்பு நிதானித்து, கௌதம் முகத்தை உற்று பார்த்துக் கொண்டே, “இல்லையே ! மாமி அடிச்சா, நீ எதுக்கு இப்படி சிரிக்கபோற. இன்நேரம் அந்த பொண்ணு கன்னத்த பழுக்க வச்சிட்டில்ல வந்திருப்ப?! உண்மைய சொல்லு அந்த பொண்ணுகிட்ட வேற மாதிரி அடி வாங்கினியா, ம்ம்ம்ம்ம் ? “என தன் உதட்டை வட்டமடித்து , ஒற்றை கண் சிமிட்டி கேட்க..

“அடிங்க! ஏன்டா என்ன பார்த்தா எப்படி தெரியுது. பாத்தும் கிஸ்ஸடிக்கற பொறுக்கி மாதிரியா?! ” என கேட்டவனுக்கு தெரியவில்லை தான் அதை செய்ய போகிறோம் என்பதை,
பின்பு கீழே நடந்தவற்றை  சொல்ல, ஆரனுக்கும் தன் சிரிப்பை அடக்க முடியாது போயிற்று.” டேய் கௌதம்! நல்ல வேளடா. பாவம் அந்த பையனுக்கு நீ பணம் கொடுத்த,  இல்லாட்டி அவனோட நிலைமைய யோசிச்சு பாரேன். ஆமா அந்த சாமியாரினி ஆள் எப்படி?! ” என கண்ணடித்து கேட்க…

“யார் பார்த்தா?! நா அவ பேசினத தான் கேட்டேன். அதுக்குள்ள அந்த பையன் இப்படி பண்ண, அதோட சரி. அவ ஒயிட் கலர் சுடி போட்டிருந்தா, அப்புறம்?! ” என யோசிக்க,

“அடேய் கௌதம், தெளிவா பார்த்து வச்சிருக்கற பொண்ணையே இந்த கூட்டத்துல தேடி பிடிக்க முடியாது. இதுல ஒயிட் சுடி போட்ட பொண்ணுன்னு  தேடினா முக்கால்வாசி பொண்ணுங்க அப்படி தான் இருக்கும் போடா.. நீயெல்லாம் பிஸ்னஸ்மேன்னு சொல்லிக்காத!” என சலித்துக் கொள்ள,

“ஏய்! வெயிட் ! வெயிட்! என்ன நீ பாட்டுக்கு பேசிட்டே போற. ஆமா அந்த பொண்ண கண்டுபிடிச்சு என்ன பண்ண போற. ஜஸ்ட் அந்த பொண்ணோட இன்னோசென்ஸ் பிடிச்சிருந்துச்சு. அந்த பொண்ணு யாருக்கோ பயப்படுறத பார்க்கறப்ப, நா இருக்கேன்னு உனக்கு துணையான்னு சொல்லனுமின்னு இருந்துச்சு. பட் நீ நினைக்கற மாதிரி இல்ல” என்று சொல்ல, மானசீகமாய் தலையில் அடித்து கொண்டான் ஆரன்.

‘இவனுக்கு எப்படி புரிய வைக்க.  ஆண்டவா! நீயே இவனுக்கு புரிய வை!’  என்று பொறுப்பை இறைவனிடம் விட்டவன், தொடர்ந்து, “ஆமா மச்சி … அந்த பொண்ணு கைல காசே இல்லாம வந்து, இங்க என்னடா பண்ண போகுது?! ” என்ற ஆரனின் கேள்விக்கு,

“அவங்க பேசினத வச்சு பார்க்கறப்ப அவளுக்கு இங்க வரவே பிடிக்கல. கட்டாயபடுத்தி எதுக்கோ வரவச்சிருக்காங்கடா. என்ன பிரச்சனையா இருக்கும்?!” என்றவன் இதுவரை இருந்த சந்தோஷ நிலை மாறி கவலை தொற்றிக் கொள்ள, ‘அவள வரவச்சவங்க, எப்படி அவள இம்சை செய்ய போறாங்களோ?!’ என நினைக்க, சரியாக அதே ஃபுட் கோட்டில் நுழைந்தாள் கௌதமின் அழகிய மோகினி.

error: Content is protected !!