Jeevan 20

Jeevan 20

உன்னோடு தான் .. என் ஜீவன்…


பகுதி 20

ஆரன் சொன்னதை கேட்ட நிமிடம் தன்னை ஒட்டி இருந்தவளின் ஒதுக்கம், கௌதமின் கோபத்தை கூட்ட, அவள் விலகி நின்றதை விட, இருமடங்கு வேகமாய் அவளை  நெருங்கி நின்றவனை, பதறி போய் பார்த்த காயத்ரி, அவன் கண்ணில் தெரிந்த கோபத்தில் அதிர்ந்து தான் போனாள்.

கௌதமின் இந்த முகத்தை பார்த்தே இருந்தாலும், அவையாவும் அடுத்தவரிடம் தான். தன்னிடம் அவன் அந்த முகத்தை காட்டியதே இல்லையே! என்ற பயம் தோன்றினாலும், தன்னை அவன் நெருங்கி நிற்பதை பார்க்கும் போது, அவன், நீ என்னை எவ்வளவு தூரம் விலகினாலும், அதைவிட அதிகமாய் உன்னிடம் நான் நெருங்கி வருவேன் என்று நின்றவிதம், மனதின் ஓரத்தில் ஒருவித நிம்மதி பரப்புவதை உணர்ந்தவள் தேகம் சிலிர்த்தடங்கியது.

அவளை ஒட்டி நின்றவனின் மேனி, அவள் சிலிர்ப்பை சேர்த்து உணர, அதுவரை இருந்த கோபம் நீங்கி, ஒருவித கர்வமும், நிம்மதியும் தோன்ற, இதற்கு காரணமான ஆரனை என்ன செய்யலாம் எனும் விதமாய் அவனை பார்க்க அவனோ,


தன்னை பார்த்தவுடன் நடுங்கும் காயத்ரியின் அதிர்ந்து விழித்த விழியும், அந்த விழிகள் காட்டிய பயமும் பார்க்க விசித்திரமாய் இருக்க, இதுவரை தன்னை பார்த்த யாரும், அவனை கண்டு இப்படியான ஒரு ரியாக்ஷன் கொடுத்தது இல்லை என்பதால்,

‘என்னடா இது! நம்மல பார்த்தா அவ்வளவு டெரராவா இருக்கு..! இந்த புள்ள இந்த முழி முழிக்குது. ஆரா இப்படியே கெத்த மெயின்டெயின் பண்ணு. வாழ்க்கையில முதல் தடவ உன்ன பார்த்து ஒரு ஆள் இப்படி பயப்படுது விடாத!’ என்ற, தன் கற்பனையிலேயே சுழன்றவன், கௌதம் காயத்ரி இருவருக்கும் இடையே நடந்த அந்த சிறு ஊடலை உணராது,  தன் முறைப்பை அதிகரித்தவன், கௌதம் தன்னை என்ன செய்ய காத்திருக்கிறான் என்பதை அறியாது அதுவரை தான் மிதந்த கற்பனை உலகை விட்டு வெளியே வந்தவன், அப்போது தான் இருவரின் நெருக்கமும் கண்ணில் விழ,

“டேய் கௌதம்! என்னடா இது?! நீ.. இதெல்லாம் … இங்க வச்சு, இப்படி… ச்ச… நா உன்ன … எப்படி வச்சிருந்தேன்… ?!” என விட்டு விட்டு சொல்லி நிறுத்த,

கௌதமிற்கோ… ‘ஆஹா , அவன் நா பேசுனத முழுசா கேட்டுட்டானா?! போச்சு, இவன்கிட்ட செல்லம்மா பத்தி சொல்றதுக்கு முன்னாடியே, நா முத ராத்திரி பத்தி பேசுனத கேட்டு தொலச்சிட்டான் போல… கௌதம் சமாளி… ‘ என தன்னை தேற்றி கொண்டவன்,

“ஆரா என்ன நடந்தது ன்னா..?!” என ஆரம்பிக்க, “நிறுத்து! நடந்தது, பறந்தது, ஓடுனது எல்லாம் பார்த்தாச்சு. முதல்ல சொல்லு, யாரு இது?!” என காயத்ரியை காட்டி கேட்க,

“அது, நேத்து, நம்ம மால் போனப்ப, அங்க … ” என்றதும் புரிந்தவன்…

‘அடப்பாவி …. இது தான் நீ சொன்ன முக்கியமான வேலையா?!  பிகர பாத்ததும் ப்ரண்ட கட் பண்ணிடுவாங்கன்னு, கேள்விபட்டத உண்மையாக்கிட்டானே இந்த கௌதம்…’ என மனதில் நொந்தவன், வெளியே தன் முறைப்பை அதிகமாக்கி,

“ஓ! நீ சொன்ன அந்த இன்னோஷன்ட் மாமி இது தானா?! ” எனவும், ‘ஆம்’ என்பதாய் கௌதம் தலையசைக்க,

“அந்த குச்சிமிட்டாய் பார்ட்டியா நீ?!” என கேட்க, தனது ஹேன்பேக்கில் இருந்ததை பார்த்து, கௌதம் சொல்லியிருக்க வேண்டும் என்பதை ஊகித்தவள், இதை ஆரனிடம் சொன்னதால் வந்த கோபத்திலும், தனது சிறுபிள்ளை செயல் அவர்களுக்கு தெரிந்திருப்பதை கண்டு வெக்கத்திலும் சிவந்த தன் முகத்தை, கௌதமின் முதுகுக்கு பின்னால் மறைக்க முயல,

ஆரனுக்கு அவளை மேலும் சீண்டும் எண்ணம் வந்தாலும், தங்கள் வகுப்பிற்கு செல்லும் நேரம் கடந்ததை உணர்ந்தவன், அவளை பிறகு பார்த்து கொள்ளலாம் என நினைத்து, “கௌதம் அவள அனுப்பிட்டு வா! முக்கியமா பேசனும்” என சீரியஸ்ஸாக சொல்லி செல்ல, ஆரனின் செயலுக்கு பின் இருக்கும் காரணம் புரிந்தவன், காயத்ரியை பார்க்க,  

அவளே, ‘தன்னை விட்டால் சரி!’ என்பது போல, “ஏன்னா! நேக்கு கிளாசுக்கு நாழியாறது.. நா போட்டா?” என கேட்க.. அவளுடன் சிறிது நேரம்  இருக்க மனம் விரும்பினாலும், இருக்கும் சூழல் நினைவில் வர,

“ஓகே செல்லம்மா! நீ கிளாஸ்க்கு போ! ஆப்டர் நூன் லன்ச் ப்ரோக்ல, கேன்டீன் வந்திடு ” என்றதும்,

“அப்ப நீங்க ஆப்பீஸ் போகலையான்னா?! எனக்கு வேண்டி இங்கையே இருக்க போறேளா?! இங்க இருந்தேல்ன்னா உங்க முதலாளி ஒன்னும் சொல்லமாட்டாளா?!” என்றவள்,

நிறுத்தி மீண்டும் தனது சத்தத்தை குறைத்து, “அங்க நிக்கறாளே, அவாளும் உங்க கூட வேல பாக்கறாளோ? உங்க சீனியரா?! உங்களையே மிரட்டுறா?! ஆனா, நேக்கு உங்கள பார்த்தா தான் ஜம்முன்னு வேலைக்கு போறவா மாதிரி இருக்கு. அவாள பார்த்தா கலக்கூத்தாடி தான் நியாபகம் வர்றது. அவா மண்டையும், அதுக்கு மேல சேவல் மாதிரி கொண்டையும் பாக்கறச்ச செம காமெடியா இருக்குன்னா. ஆப்பீஸ்ல எதுவும் சொல்ல மாட்டாளா இப்படி வந்தா?!” என சிரிப்போடு, தன் கண்களில் வியப்பும் , ஆச்சர்யமும் கொண்டு அப்பாவியாய் கேட்ட காயுவின் வார்த்தையில், வந்த சிரிப்பையும் அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும்,


சற்று தள்ளியிருந்தாலும் இருவரின் உரையாடலும் கேட்கும் தூரம் நின்றுருந்த ஆரனை கொண்டு கஷ்டப்பட்டு அடக்கி,
“மதியம் வா, அப்ப உனக்கு பதில் சொல்றேன்!” என சிறு புன்னகையுடன் கூற,

அவனின் புன்னகையை பார்த்தவளுக்கு கொஞ்சம் தைரியம் பிறக்க, “சரின்னா, பார்த்துக்கோங்கோ. நா கிளாஸ் முடிச்சிட்டு வந்திடுறேன்!” என்று புன்னகைமுகமாய் கூறிவிட்டு திரும்ப, தன்னை முறைத்து பார்த்த ஆரனை கண்டு தலையை குனிந்து அந்த இடத்தை விட்டே ஓட்டமாய் ஓடிவிட்டாள்.


அவளின் பேச்சை கேட்ட ஆரனுக்கும் சிரிப்பு தான் வந்தது, காலை தன் தந்தை தன்னை பார்த்து சொன்னதை அப்படியே சொன்னவள், இருக்கும் வரை கஷ்டப்பட்டு, தன் முகத்தை சீரியஸாக வைத்தவன், அவள் அங்கிருந்து சென்ற நொடி, வெடித்து சிரித்து கொண்டே கௌதமை நெருங்கியவன், “என்னடா மாமி…  இப்படி அப்பாவியா இருக்கு.?! தோள்ல காலேஜ் பசங்க யூஸ் பண்ற பேக்கை பார்த்துமா தெரியல அவளுக்கு. ஒருவேள அது லேப்டாப் பேக் ன்னு நினச்சிட்டாளோ! உன்ன பத்திசொல்லலையா நீ…?!” என சிரிப்புடனே கேட்க…

” ஆரா…. நா என்னோட பேர் மட்டும் சொன்னேன். அதோட என்ன பத்தி சொல்ல ஆரம்பிச்சு கம்பெனி நேம சொன்னதும் அவளே நா அங்க வேலை பார்க்கறதா முடிவு பண்ணிட்டு பேசினா, அப்ப தான் அவளும் இந்த காலேஜ்ல படிக்கறது தெரிஞ்சது,  சோ,சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு சொல்லல… ” என கூற,

“எப்படியோ, நீயும் தனி மரமா சுத்தறதுக்கு, இப்பவாவது லவ், கல்யாணமுன்னு தோணியிருக்கே,  நல்லது தான் ” என்று உண்மையான பாசத்துடன் கூறி தோளோடு அணைத்தவனை, கௌதமும் ஆர தழுவி கொண்டான்.

“மாமி பேர் என்ன?! செல்லம்மா ன்னு தானே சொன்ன!” என்றதும், “அவ பேரு காயத்ரிடா… எனக்கு மட்டும் என்னோட செல்லம்மா! ” என கண்களில் கனவுடன் சொல்ல,


“சரி தான்! பாத்த ரெண்டாவது நாள்லையே இப்படி மந்திருச்சு விட்ட மாதிரி ஆகிட்டையே! செல்லப்பேர் வச்சிருக்கறது என்ன?! கொஞ்சி கொஞ்சி பேசறது என்ன?! அவளுக்காக கை ஓங்கறது என்ன?!” என ராகமாய் பாட ஆரம்பிக்க, அவனை அடிக்க கைகளை ஓங்கியவன், “ஏற்கனவே நீ வந்ததும் செஞ்ச வேலைக்கே உதைக்க நினச்சேன். இப்ப கிண்டலா பண்ணற?! உன்ன… !” என்றபடி துரத்த, ஆரன் அவனிடம் சிக்காதவாறு போக்கு காட்டிக் கொண்டே தங்கள் ப்ளாக் நோக்கி ஓடினான்.

ஆரனும், கௌதமும் தங்கள் வகுப்பு நடக்கும் பகுதியை அடைந்ததும், சிரித்தபடியே மூச்சு வாங்க நின்றவர்கள், “ஆரா நீ கிளாஸ்க்குள்ள போ! நா இப்ப வர்றேன்!”  என்றதும், அவனை ஒரு மார்க்கமாய் பார்த்த ஆரன், “கௌதம், அதுக்குள்ள உன்னோட ஆள மறுபடியும் பாக்கனுமா?! இதெல்லாம் ஓவருடா!” என கூறி சிரிக்க,

“அடச்சீ! சில மெயில் அனுப்பனும்,  கிளாஸ்ல வச்சு முடியாது, அதான்” என்றதும்..

“ஓகேடா , சீக்கிரம் வா… ” என்ற படியே அவனுக்கு தனிமை கொடுத்து விலகினான் ஆரன்.

கௌதம் தொழில் என வரும் போது நிச்சயம் அதில் சிறிதும் விளையாட்டு தனம் இருக்காது. அந்த நேரத்தில் யாரும் அவனிடம் விளையாடவும் கூடாது. அவ்வாறு நடந்தால் அவனின் பார்வையே அவர்களை தள்ளி நிறுத்தும். அதையும் மீறினால் அவனின் கைகள் தான் முதலில் பேசும் என்பதை இவ்வளவு வருடம் உடன் இருக்கும் ஆரன் அறிய மாட்டானா?!

தனக்கு தனிமை கிடைத்ததும் , காலை தனக்கு அனுப்ப சொன்ன தகவல்களை கொண்டு, அடுத்து அடுத்து சில பல வேலைகளை செய்தவன், நிம்மதியாக தனது வகுப்பை கவனிக்க சென்றான். மதியம் காணப்போகும் தன்னவள் நினைவுகளையும் சேர்த்து, மனதில் நினைத்தவனாய்….

**********

துஷ்யந்த் கொடுத்த வேலையை மதியத்திற்குள் செய்து முடித்த ஏஜென்சி அதன் ரிப்போர்ட்டை அவனுக்கு மெயிலில் அனுப்ப, அதை பார்த்தவன் சற்று வியந்து தான் போனான்.


கௌதமை பற்றிய தகவலில் அவர்கள் பல தலைமுறையாக பலமான தொழில் மற்றும் பொருளாதார அடிப்படை கொண்டவராக இருக்க, அவனின் தந்தையோ இந்த தலைமுறையில் அதுவும் தன் மகளின் பிறப்பிற்கு பிறகே பொருளாதாரத்தில் நிறைவை பெற்றவர்.

தங்களுக்கு என சொந்தமாக ஒரு குடிசை கூட இல்லாமல், சென்னைக்கு வந்தவர்களுக்கு, ஸ்வேதாவின் வரவு வரையிலும் கால் வயிற்று பாடுதான். அதிலும் அவளின் தந்தை ரவுடி தொழிலால் வந்தது. பல அரசியல்வாதிகளுக்காக அடிமட்ட வேலை செய்யும் கும்பலில் ஒரு கூலியாக செயல்பட்டு வந்தவர், மகள் பிறந்த பிறகு ஒருவரின் பினாமியாய் மாறிட, அன்று துவங்கிய பொருளாதார உயர்வு இன்றும் தொடர்கிறது.

மகள் பிறந்த ராசி தான் இந்த தன் நிலை உயர்வுக்கு காரணம் என நினைத்து தான் அவளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்தது.

அவரின் மற்றொரு முக்கிய தொழில் வட்டி வசூல். மீட்டர் வட்டி முதல் ஜெட் வட்டி வரை அவரிடம் கடன்பட்டவரின் மொத்த சொத்தையும் பெறும் வரை இருப்பது அனைத்தையும் கறந்துவிடுவார். அவ்வாறு சேர்த்த சொத்துக்கள் தான் இன்று முக்கிய பகுதியில் டிபார்மெண்ட் ஸ்டோராகவும், காம்ப்ளக்ஸ்ஸாகவும் உருமாறி இருக்கிறது. பணம் வந்த போதும் கௌரவம் என்பது அவர்களை பொறுத்த வரை கேள்வி குறி தான்.

துஸ்யந்த், கௌதமின் பின்னணியை ஆராய்ந்து பார்த்ததும் செய்த முடிவு தங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, கௌரவத்தையும் கொடுக்கும் தகுதி கௌதம் சக்கரவர்த்தி தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக வந்தால்..  என்பது….

அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டில், ஆரன் குறித்தும் இருக்க, அதை படித்தவன், தன் தங்கை சொன்ன மற்றொருவன் இவன் என்பதை கொண்டு, அவனுக்கான தண்டனையை முடிவு செய்தவன், ‘ஆரனுக்கு எதாவதுன்னா துடுச்சு போயிடுவேன்னு இந்த ரிப்போர்ட் சொல்லுது. அதையும் டெஸ்ட் பண்ணி பார்த்திடலாம். குட்டிம்மா நாளைக்கி நீ எழும் போது ரெண்டு ஹேப்பி நியூஸ் காத்திட்டு இருக்கும். ஒன்னு கௌதம் பத்தி நீ தெரிஞ்சுக்க நினச்சது. அடுத்து ஆரனுக்கான தண்டனை’ என நினைத்தவனின் கண்களில் வந்த பழிவாங்கும் வெறி, ஆரனை என்ன செய்ய போகிறதோ?!

******

தனக்கு வர போகும், ஆபத்தை பற்றி எதுவும் அறியாது, காயத்ரிக்காக காத்திருக்கும், கௌதமை கேலி செய்து கொண்டே தனது உணவை கபளீகரம் செய்து கொண்டிருந்தான் ஆரன்.

கேண்டீன் சென்ற காயத்ரி, கண்களால் கௌதமை தேட, ஓரிடத்தில் கௌதமும் ஆரனும் எதிரெதிரே அமர்ந்திருந்தாலும், தன்னவன் விழிகள் அவளின் வருகையை எதிர்பார்த்திருந்தது போல… அவளை கண்ட நொடி அவன் முகம் காட்டிய பாவனையும், சிரிப்பும் கண்டவள் மெல்ல அவர்கள் அருகே சென்றாள்.


அவனுக்கு அருகே இருந்த இடத்தில் அமர்ந்தாலும், காலையில் பேசிய போது  தன்னை முறைத்ததை மனதில் கொண்டு, எதிரில் இருந்த ஆரனை பார்க்க பயந்து அவன் புறம் பார்க்காமலேயே கௌதமை பார்த்து மெல்லிய குரலில், “ஏன்னா! ரொம்ப நாழியாயிடுத்தா? சாரி! நேக்கு கிளாஸ் முடியவே இவ்வளவு நாழியாகும். நீங்க உங்க வேலைய முடிச்சிட்டேளா?!” என தனக்காக வெகு நேரம் காத்திருப்பார்களோ என்ற படபடப்போடு கேட்க,


அவளை பார்த்து சிரிப்புடன், “செல்லம்மா, கூல். நானும், ஆரனும் ஜஸ்ட் இப்ப தான் வந்து புட் வாங்கி உக்காந்தோம். நீயும் உடனே வந்துட்ட… சரி சொல்லு! உனக்கு எப்படி போச்சு கிளாஸ்? எல்லாம் ஓகே தானே?!  யாரும் எதுவும் பிரச்சனை செய்யலையே?!” என அவளின் வேலை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல், தன் கேள்வியை அடுக்க,

“யாரும் எதும் செய்யலன்னா, அமைதியா தான் போச்சு. ஆனா யாரோ என்ன தொடர்ந்து வாட்ச் பண்ற மாதிரியே ஃபீல் ஆகுதுன்னா. அது ப்ரம்மையா இல்லையா தெரியல”  என்றதும்…


இதுவரை, இருவரின் பேச்சை கேட்டாலும், கண்டு கொள்ளாது சாப்பிட்டு கொண்டிருந்த ஆரன், கௌதமை நிமிர்ந்து, அர்த்தமுடைய ஒரு பார்வை பார்க்க, கௌதமும், காயத்ரி அறியா வகையில் அவனுக்கு, கண்களால் “ஆம்” என கூறினான்.

இந்த நிகழ்வு சில நொடியில் நிகழ,  தன் குழப்பத்தில் இருந்த காயத்ரி அதை கவனிக்க வாய்ப்பில்லாது போயிற்று.
அவ்வாறு கவனித்திருந்தாலும், கௌதம் தனக்கே தெரியாது,  தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையத்தை உருவாக்கியிருப்பதை அவள் அறியவா போகிறாள்…..!!! அதை அறிந்திருந்தால் அவளே அதை உடைத்து வெளியே வந்திருக்கவும் மாட்டாள், லட்சுமணன் கோட்டை தாண்டியதால், தன் தலைவனை பிரிந்த சீதை போல, தன்னவனை விட்டு பிரிந்தும் சென்றிருக்க மாட்டாள்.


தங்கள் வகுப்பில் கிடைத்த தனிமையில் ஆரனிடம் ஒரளவு காயத்ரி பற்றிய விசயத்தை கூறியவன், இதை சொல்லவில்லையே! என்ற எண்ணம் ஆரனுக்கு வந்தாலும், ‘கௌதம் சொல்லாமல் விட்டால், அதிலும் எதாவது காரணம் இருக்கும்’ என்று நினைத்து அதை ஒதிக்கி தன் வேலையை தொடர்ந்தான். (அதாங்க கொட்டிக்கறது… ஏன்னா சோறு நமக்கு முக்கியமாச்சே…)


“செல்லம்மா! அது ப்ரம்மையோ! இல்ல நிஜமோ! இப்படியே பேசிட்டு இருக்காம சாப்பிடு மொதல்ல. அப்புறம் அத பத்தி ஆராய்ச்சி செய்யலாம்” என பேச்சை மாற்றி அவளை சாப்பிட வைத்தவன்.

“அடுத்து உனக்கு கிளாஸ் இருக்கா செல்லம்மா?!” என தௌதம் கேட்க, காலை முதல் பல முறை அவன் அந்த பேர் சொல்லி அழைத்திருந்தாலும், அப்போது இருந்த சூழலில் மனதில் பதியாதது, இப்போது நன்கு பதிந்து போக, சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவள் கண்களோ மகிழ்ச்சியில் நீர் கோர்த்தது.


அவளின் திடீர் செய்கையில், ‘என்ன??’ என கண்களால் வினவ,  “ஒன்னுமில்லன்னா!” என்றவளுக்கு அவ்வளவு ஆனந்தம், அவனின் அந்த அழைப்பில்… அவளின் விழியில் தோங்கிய நீரை கண்டதும், “ஏன்டா, சாப்பாடு ரொம்ப காரமோ?!” என கேட்டபடி தண்ணீரை கொடுக்க, “இல்லை ” என தலையசைத்தவள், அவன் தந்ததற்காக அந்த நீரை பருகினாள்.

அவளின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்தாலும், பிறகு கேட்கலாம்,  என நினைத்து ஒதுக்கியவன், மீண்டும் அதே கேள்வியை கேட்க…

“இல்லன்னா… நேக்கு இனி ப்ரீ ஹவர் இன்னைக்கு இல்லை. ஏன்னா கேக்கறேள்?!” என்றதும், தன்னை குறித்த அனைத்தையும், தனது செல்லம்மாவிடம் சொல்லிட, அவளை வெளியே அழைத்து செல்ல நினைத்தவன் எண்ணம் ஈடேறாமல் போக,

“ஒண்ணுமில்ல, செல்லம்மா! சும்மா தான் கேட்டேன். இது என்னோட போன் நெம்பர். மறக்காம ஷேவ் செஞ்சு வச்சுக்கோ. எந்த நேரத்திலையும், என்ன பிரச்சனைன்னாலும் நீ என்ன கூப்பிடு, இப்ப நீ க்ளாஸ் போடா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு காலைல பார்க்கலாம்” என்றவன்,  ‘எப்படியாவது நாளைக்காச்சும் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிடனும்!’ என்ற முடிவோடு அவளுக்கு விடை கொடுத்தான். முடிவு எடுப்பது சுலபம். அதை செயல்படுத்த காலமும் நேரமும் ஒத்துழைக்க வேண்டுமே?!

கௌதமும், ஆரனும் தங்கள் வகுப்பிற்கு சென்ற சிறிது நேரத்தில் கௌதமிற்கு போன் வர, தனது ப்ரப்பஷரிடம் அனுமதி வாங்கி வெளிய வந்து பேசியவன் தான் உடனே அலுவலகம் செல்ல வேண்டி வர,
முக்கிய வகுப்பு என்பதால் அடுத்த பாடவேளையில் வருவதாக தகவல் சொன்னவன் மீண்டும் வகுப்பை கவனிக்க சென்றான்.

அந்த பாடவேளை முடிந்தததும், “ஆரா! ஒரு இம்பார்ட்டன்ட் வெர்க். சோ நா கிளம்பறேன். நீ என்ன பண்ணு இன்னைக்கு நடந்த கிளாஸ் சம்மந்தமான புக்ஸ் லைப்ரரில ரெபர் பண்ணி, எனக்கும் சேர்த்து நோட்ஸ் எடுத்துடு!” என சொல்லி முடித்ததும், அவனுக்கோ, “பக் ” கென்றது.

“அடேய்! ஏன்டா கௌதம் இப்படி செய்யலாமா?! எல்லா நாளும் நீ எடுக்கற நோட்ஸ் தான் நா வாங்குவேன். நானா எப்ப எடுத்தேன் அந்த கருமத்த, அய்யோ, இப்படி மாட்டவச்சிட்டானே! ” என நொந்த பார்வை கௌதமை பார்க்க…

“ஒரு நாளாச்சும் எப்படி நோட்ஸ் எடுக்கறதுன்னு கத்துக்கோ. எப்பவும் ஓப்பி அடுச்சே பாஸ் பண்ண கூடாது. நா கிளம்பி போனதும், நோட்ஸ் எடுக்காம இருந்துட்டு நாளைக்கி என்ன செய்ய வைக்கலாமின்னு பார்த்த, மகனே நீ காலி. நைட் எனக்கு புல் நோட்ஸ் வரணும்” என கட்டளையாய் சொல்லி செல்ல,

தனது தலைவிதியை நொந்தபடி, தங்களின் பாடம் சம்மந்தமான நூலகம் நுழைந்தவன் அதில் அந்த குறிப்பிட்ட புத்தகத்தோடு மூழ்கி போனவனுக்கான ஆபத்து கௌதமிற்கு புரிந்திருந்தால்,
ஆரனை தனித்து விட்டு, செல்லாமல் அவனையும் உடன் அழைத்து சென்றிருப்பானோ?!

error: Content is protected !!