Jeevan 25

Jeevan 25

  1. உன்னோடு தான்.. என் ஜீவன்..

    பகுதி 25

    காயத்ரிக்கு, கௌதம் இல்லத்தின் ஒவ்வொரு பகுதியாய் சுத்திகாட்டிய படியே சந்தோஷமாய் சென்றவன், ஒரு அறைக்குள் செல்லும் போது மட்டும், அதுவரை இருந்த இயல்பு மாறி, சட்டென முகம் வேதனையில் சுருங்கி போக, அதுவே சொல்லாமல் சொன்னது, அது யாருடைய அறை என்பதை…

    அவளின் எண்ணத்தை பொய்யாக்காமல், அது அவனின் தாய் வசந்தசேனாவின் அறையே.. அந்த அறை முழுவதும்,  அவரின் நினைவுகளை பறைசாற்றும் விதமாக, அவரின் குழந்தை பருவம் முதல் வளைகாப்பு வைபவம் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும், நேர்த்தியாய் இடம்பெற்றிருக்க, பார்த்த காயத்ரிக்கு அவரின் அழகும், அந்த கண்களும், தன் கௌதமிடம் அப்படியே வந்திருப்பதை உணர முடிந்தது.

    அவரின் புகைப்படத்தை பார்த்தபடி, தனது நினைவுகளில் புதைந்து நின்றவனின் தேவனையை உணர்ந்தவள், அவனை மாற்ற வேண்டி நெருங்கியவள், “ஏன்னா! மாமி நல்ல அழகா இருக்கா இல்ல. அவா அழகும், கண்ணும் உங்களுக்கு அப்படியே வாச்சிருக்கு போங்கோ. அவர மாதிரி நீங்களும் இருக்கேள், அதனால தான் நீங்க பார்க்கற மாதிரி சுமாரா இருக்கேள்! இல்லாட்டி…!” என சொல்ல,

    தனது தாயை அவள் பாராட்டிவிட்டு, தன்னை அதை கொண்டு கிண்டல் செய்யும், தனது செல்லம்மாவின் நோக்கம் புரியாதவனில்லையே கௌதம். எனவே, அதை கொண்டே,

    “அடிங்க ! யார் பார்க்கற மாதிரி சுமாரா இருக்கா?!  நானா..! போய், வெளிய கேட்டு பாரு. ஐயாவோட மவுச! போனா போகுதே இந்த அப்பாவி மாமிய கட்டிக்கிட்டா, நாளைக்கி கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பான்னு நினச்சா, நீ என்ன, இப்படி சொல்லிட்ட?!” என கேட்டு முடிக்கும் முன்பே..

    “என்னது, அப்படி இப்படியா?! கொன்னுடுவேன். யாராச்ச பார்தேள்ன்னு தெரிஞ்சா, அடுத்த செக்கண்ட் கொன்னு போட்டுடுவேன் பார்த்துக்கோங்க.. அப்படி முடியாத போனா, நானே இல்லாத போயிடுவேன்னா” என சொல்லி முடிக்கும் போதே, குரல் கொடுத்த கரகரப்பில் அவளின் மனநிலை உணர்த்த,

    விளையாட்டாய் பேசியதை கூட, இப்படி எடுத்துக் கொண்டு, தன் மீது உயிராய் இருக்கும், தனது செல்லம்மாவை விட்டு எப்போதும் பிரிந்திட கூடாது என மனதில் முடிவு செய்தவன், அறியவில்லையே பிரிவுக்கான அச்சாரமாய் தான் இந்த நிகழ்ச்சியில் அவளை பங்கெடுக்க வைத்திருக்கிறோம் என்று…

    *****

    கௌதம் காயத்ரிக்கு தனிமை கொடுத்து சமையலறைக்குள் சென்ற ஆரனை பார்த்த சமையல்காரர் மாரி,

    “ஆரன் தம்பி! எப்படிப்பா இருக்க? உனக்கு அடிபட்டதுக்கு அப்புறம், வரவே இல்லையே?! நல்லா இருக்கீயாப்பா?” என வாஞ்சையோடு, அவன் மீதான அக்கறையில் கேட்க,

    “மாரிண்ணா, சும்மா ஜம்முன்னு இருக்கேன். இப்ப நோ ப்ராப்பளம்”

    “நல்லா இருந்தா போதும்ப்பா.. ஏதோ, நீ வீட்டுக்கு வந்தா தான், கௌதம் தம்பி எதாவது செய்ய சொல்லும்,  தட்டுல என்ன இருக்குன்னு பார்த்தும் சாப்பிடும். இல்லாட்டி, வச்சத சாப்பிட்டு போயிட்டே இருக்கும். அதனாலையே, நீ வந்தா நல்லா இருக்குமேன்னு இருக்குப்பா”

    “அப்ப, நா வந்தா கௌதமுக்கு நல்லதுன்னு தான் .. எனக்காக இல்ல..”

    “அச்சோ! நா, அப்படி சொல்லல தம்பி. நீ வந்தா தான், விதவிதமா செய்வேன். தம்பி மட்டும் இருந்தா எதையோ செய்ங்கன்னு போயிடும். நானா, பார்த்து வித்தியாசமா, எதாவது சமச்சு போட்டா தான் உண்டு.

    இன்னைக்கி காலைல கூட பாருங்க, நா எத செஞ்சேன்னு கேட்டா, அவருக்கு தெரியாது. அவ்வளவு தான், அதுல ஈடுபாடு. ஹூம் ! பாடுபட்டு, சொத்து சேர்த்து, என்ன பிரயோஜனம், அத அனுபவிக்க வேணாமா…?!”

    “இனி நீங்க அதுக்காக ஃபீல் பண்ணவே வேணாம். கொஞ்ச நாள்ல, ஐயா ஆளே மாறிடுவார்!” என்று காயத்ரி அக்கரையாய் பார்த்துக் கொள்வாள் என்பதை கொண்டு சொன்னவன், பேச்சை மாற்றும் விதமாக,

    “மாரிண்ணா, என்ன சமையல் இன்னைக்கி?!” என கேட்க,

    “கால்ல அடிபட்டு வந்திருக்கீங்க. இப்பவே போய் நல்ல ஆட்டுக்கால் சூப், நெஞ்செழும்பு எடுத்து குழம்பும், வச்சிடுறேன். கூடவே மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சுக்கா வறுவல், அப்புறம் …!” என யோசித்து, வரிசையாய் சொல்லிக் கொண்டே போனவரை பார்த்து கை காட்டி தடுத்தவன்,

    “அண்ணா ! உங்க ஊர் எது?”  என சம்மந்தமே இல்லாது கேட்வனுக்கு,

    “ஏன் தம்பி, காரைக்குடி தான் எங்க பூர்வீகம், நா, இந்த வீட்டுக்கு வரும் போது கௌதம் சின்ன குழந்தை. இப்ப எதுக்குப்பா கேட்ட?!”

    “அதுவா, உங்க ஊருக்கு டிக்கெட் போட தான்..”

    “நா எப்ப ஊருக்கு போறேன்னு சொன்னேன்…?!”

    “நீங்க இப்ப சொன்ன லிஸ்ட்ட செஞ்சு டைனிங் டேபிள்ல வச்சா, அடுத்த செக்கண்ட், நீங்க இந்த ஏரியவுலையே இருக்க முடியாது. அப்ப உங்க ஊர பார்த்து தானே போகணும்!” என சொன்ன ஆரனின் பேச்சில் குழம்பி போய் நின்றவரை, பார்க்க பார்க்க ஆரனால் சிரிப்பை அடக்கமுடியாது போக, சத்தம் போட்டு சிரித்தவனை புரியாத பார்வை பார்த்தவர்,

    ‘தம்பிக்கு, அடிபட்டதுல ஏதாவது ஏடாகூடமா ஆகிடுச்சா?! இதுவரை செஞ்சத தானே, இப்பவும் செய்ய போறேன்னு சொல்றேன். அதுக்கு எதுக்கு கௌதம் தம்பி வீட்டவிட்டு அனுப்ப போகுது?!’ என ஆரனின் சிரிப்பை பார்த்து, திகிலோடு, சிந்தனையில் இருந்தவரை, சமையலறையை விட்டு அழைத்து வரவும், கௌதம் காயத்ரி மாடியிலிருந்து வரவும் சரியாக இருக்க…

    “அதோ, அங்க வர்றாங்களே! அந்த மேடம் தான் இனி இங்க எல்லாம்.. அதுமட்டுமில்ல மாரியண்னே, மேடம் அக்ரகாரத்து மாமி… ! இப்ப சொல்லுங்க, நீங்க சொன்ன லிஸ்ட் செஞ்சா, என்ன ஆகுமின்னு?!” என்றதும், அப்போது தான் இந்த சில மாதங்களாக, கௌதம் முகம் காட்டிய மலர்ச்சிக்கான காரணம் புரிய,

    “அப்படியா தம்பி, ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. இப்பவாவது தம்பிக்கு தோணியிருக்கே, தனக்குன்னு ஒரு துணை தேவைன்னு.. ரெண்டு பேரும் சீரும், சிறப்புமா வாழணும், இந்த வீட்டுல” என சொன்னவரின், விழியில் இருந்ததது ஒரு வித நிம்மதியும், சந்தோஷமுமே….

    “ஆரன் தம்பி, நா போய் நல்ல சூப்பரான விருந்துக்கு ரெடி பண்றேன்” என சமையலறையை நோக்கி மாரி விரைய, ஹாலுக்கு வந்த ஆரன்,

    “என்னடா கௌதம், காயத்ரிக்கு வீட்ட சுத்தி காட்டியாச்சா?!” என கேட்க, ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தவன், “செல்லம்மா நீ ப்ராக்டீஸ் செய்ய, நா பர்மிஷன் வாங்கியிருக்கேன். சோ, நீ தினமும் இங்க வந்துட்டு அப்புறமா ஹாஸ்டல் போயிக்கோ…” என்றதும்,

    “என்னன்னா சொல்றேள்! தினமும் வர்றதா?!” என அதிர்ச்சி பாதியும், ஆச்சர்யம் மீதியுமாய் கேட்டவள், “அது சாத்தியமே இல்லை!” என்று மறுக்க, அவளின் மறுப்பை, பேசியே சரி கட்டியவன், “இந்த ரூம்ல, நீ ப்ராக்டீஸ் செஞ்சுக்கோ” என கீழேயே இருந்த ஒரு அறையை காட்டியவனுக்கு, அடுத்த பிரச்சனையாக தோன்றியது அவள் எப்படி வந்து போவது என்பதே…

    “செல்லம்மா, தினமும் நா கார அனுப்பிடுறேன். நீ, அதுல வந்திடு. நைட் நா, கொண்டு போய் விட்டுடுறேன். ஏன்னா, காலேஜ் முடுஞ்சு, நா கம்பெனி போயிட்டு வர்றதுக்கு, லேட் ஆகிடும்” என சொல்ல,

    “என்ன, நா மட்டும் தனியா இருக்கறதா?! இல்லன்னா, நேக்கு ஒரு மாதிரி இருக்கு. நா, இதுல கலந்துக்கவே இல்ல” என சொல்லிட,

    “செல்லம்மா, நா முடிவு பண்ணிட்டேன். கம்படீஷன்ல இல்லாம, ஜஸ்ட் டேலண்ட் ஷோவுல தான், உன் பேர ரெஜிஸ்டர் செஞ்சிருக்கேன். சோ, நீ கட்டாயம் கலந்துக்க தான் வேணும்” என உறுதியாய் சொன்னவனின் வார்த்தையை மீறவும் இயலாது, அதே நேரம், அவன் சொல்வது போல, இவ்வளவு பெரிய வீட்டில், சிறிது நேரமே என்றாலும், தனித்து இருப்பதை நினைத்தாலே ஒரு வித பயம் தோன்ற,

    “அப்ப, வீக் எண்ட் மட்டும், நா வந்து ப்ராக்டீஸ் செய்யவான்னா..!” என அதற்கு ஒரு தீர்வை கண்டுவிட்டதாய் கேட்க,

    “சாரிடா, இன்னும் ப்ரோகிராம் நடக்க கொஞ்ச நாள் தான் இருக்கறதால, எனக்கு காலேஜ்ல நிறைய வேலை இருக்கும். வீக் எண்ட் ப்ரீ யா இருப்பனா, தெரியாது. அதோட கம்பெனி வேலையும் இருக்குமே?!” என யோசனையோடு இழுத்தவன்,

    “ஆரா, ஒரு வேலை செய், நீ, தினமும் காலேஜ் முடுஞ்சதும், காயுவ கூட்டிட்டு இங்க வந்திடு. அவளுக்கும், துணைக்கு ஆள் இருந்த மாதிரி இருக்கும். நா, வந்து அவள ட்ராப் பண்ணிடுறேன்” என இப்போதைய பிரச்சனைக்கு தீர்வை சொன்னவனின், வார்த்தையை ஆரனும் காயத்ரியும், மீறிட இயலாமல்  உடன்பட்டனர்.

    அன்றிலிருந்து, கல்லூரி முடிந்த உடன், ஆரனோடு, கௌதம் இல்லத்திற்கு வருபவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தனது பயிற்சியை தொடங்க, ஆரன், மாரி அண்ணாவோடு சேர்ந்து தனது ட்ரேட்மார்க் கலாட்டாவோடு நேரத்தை போக்கி கொண்டிருப்பான்.

    கௌதம் வந்ததும், அங்கிருந்து ஆரன் விடை பெற, இரவு உணவை அங்கேயே உண்ண வைத்த பிறகே, காயத்ரியை ஹாஸ்டல் கொண்டுவந்து விடுவது வழக்கமாகி போனது.

    ****

    நாட்கள் அழகாய் நகர துவங்க, இன்னும் சில தினங்கள் மட்டுமே விழாவிற்கு இருக்க, அந்த கல்லூரி முழுவதும் அழகாய் உருமாறி கொண்டிருந்தது விழாவிற்காக…

    மேடை அமைப்பு பற்றியும், அதில் செய்ய வேண்டியவை குறித்தும் விழா குழுவோடு கலந்துபேசி, ஏற்கனவே இருக்கும் விழா அரங்கம் என்றாலும் இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம் என்ற பலரின் கருத்தினை கொண்டு அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்கத்துவங்கின…

    அந்த பொறுப்பை ஏற்கவென, ஒரு சிலரை பணித்த கௌதம், “ஜுனியர்ஸ், ஸ்டேஜ் டெக்கரேஷன், லைட்டிங் எல்லா பொறுப்பும், இனி உங்க டீம் தான் பார்த்துக்கணும். இதுக்கு முன்னாடி, செஞ்சத காட்டிலும், பிரமாண்டமா இருக்கறதோட, எதாவது ஒரு தீம் வச்சு யோசிங்க… ஆல் தி பெஸ்ட்…” என சொல்லிட, தங்களிடம் கொடுத்த பொறுப்பை, ‘எப்படியெல்லாம் சிறப்பாக செய்யலாம்!’ என்பதில் மும்முரமாக ஈடுபட்டனர் அந்த குழுவினர்…

    அவர்கள் மட்டுமல்லாது, வரவேற்பிலிருந்து, இறுதி நிகழ்ச்சி வரையிலும், ஒவ்வொரு பகுதியையும், சில குழுக்கள் மூலமாக பங்கிட்டு, அவர்களுக்கான ஐடியாக்களை கூறி, சிறப்பாக செய்திட தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்த, கௌதமின் எண்ணம் போலவே அனைத்து பிரிவுகளிலும், வேலை எந்த பிரச்சனையும், தடையுமின்றி அழகாய் நடைபெற, அவனிடம் தாங்கள் ஒப்படைத்தது நல்லதே.. என்ற நிறைவை கொடுக்க துவங்கியது விழாவை நடத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு….


    கல்லூரியில் விழா ஏற்பாடு, மாலையில் கம்பெனி என ஓயாத அலைச்சலிலும், அவனை புத்துணர்வாக இருக்க செய்தது என்னவோ, அவனின் செல்லம்மா தான்… கலைத்து போய் வீட்டிற்கு வரும் நேரம், புன்னகையோடு அவனின் இல்லத்தில் காத்திருக்கும் செல்லம்மாவை பார்த்தால், அவனின் அத்தனை நேர கலைப்பும் பறந்து தான் போயிடும்.

    தினமும் கௌதம் வந்த உடன் விடை பெற்று ஆரன் செல்ல, பிரஷப் ஆகி வரும் கௌதமிற்கு, தானே உணவை பார்த்து பார்த்து பரிமாறும் காயுவின் அன்பில், கௌதம் வயிறு மட்டுமில்லாது, மனமும் சேர்ந்தே நிறைந்து.

    அவள் கௌதம் வீட்டிற்கு, ஆரனோடு தனித்து வந்த இரு தினத்திலேயே, மாரியை காயத்ரிக்கு ஆரன் அறிமுகம் செய்து வைக்க, தன் வருங்கால எஜமானி என மரியாதையோடு பேச விளைந்தவரை தடுத்த காயத்ரி, அவளின் வெகுளித்தனத்தால், அவரை சகஜமாக பேச வைத்தவளுக்கு, அவர் சொன்ன சில விசயத்தால் கௌதமின் மீது இன்னுமே அக்கரை கூடி தான் போனது.

    ***

    அன்று மாலை வேளையில் பெய்த மழையை ரசித்த படி, மாரி செய்து கொடுத்த பஜ்ஜியோடு, ஆரனுடன் ஹாலில் பேசிக்கொண்டிருக்கும் போது, “அம்மாடி, நீ எப்படாம்மா இங்க நிரந்தரமா வருவேன்னு இருக்கு?!” என்ற மாரியின் வார்த்தைக்கு பதிலாய்,

    “ஏன் கேட்கறீங்க..?! நேக்கு படிப்பு முடியணுமே!” என சொல்லிய காயத்ரியை பார்த்தவர்,

    “இல்லடாம்மா, நீ சீக்கிரமா கல்யாணத்த பண்ணிட்டு கூட படிக்கலாமே, என்னடா..!  இவன், ரொம்ப உரிமை எடுத்து பேசறான்னு நினைக்காதடாம்மா?! கௌதம் தம்பி, உன்கிட்ட எல்லாமே சொல்லி இருக்கா? இல்லையா? தெரியல. சின்ன வயசுல இருந்தே, தனியாவே இருக்கறதால, அவ்வளவு சட்டுன்னு அவருக்கு எதாவதுன்னா சொல்லவே மாட்டாரூ. நம்மளா பார்த்து கேட்டா தான் உண்டு.

    ஆரன் தம்பி உங்களுக்கு தான் தெரியுமே. ஒரு தடவ நைட்ல காய்ச்சல் வந்திருக்கு. அதோடவே ஃபுல் நைட்டும் இருந்திருக்காரு தம்பி. நா, நைட் சமையல முடிச்சிட்டு கெஸ்ட்ஹவுஸ் போயிடுவேன். அதனால எனக்கும் தெரியல. ஆரன் தம்பி காலைல வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிஞ்சுது. போய் பார்த்தா, அவ்வளவு காய்ச்சல்ல நைட் முழுக்க இருந்ததால, கண்ணே திறக்க முடியாம, வாடி போய் அரை மயக்கத்துல இருந்தாரு. ஹாஸ்பிடல் போய் ரெண்டு நாள் அட்மிட் பண்ணி பார்த்தாங்க.

    இது மாதிரியே தான் ஒவ்வொரு தடவையும் நடக்குது. எதாவது முடியலைன்னா, எனக்கு கால் பண்ணுங்க, இல்ல ஆரனுக்காவது சொல்லுங்கன்னு, சொன்னா, ‘சரின்னு..’ சொல்லறதோட சரி. அத அடுத்த தடவை செய்யமாட்டாரு!” என சொல்லி வருந்திட,

    ‘கௌதம், தனது தனிமையில் அனுபவித்த வேதனை, இது போல இன்னும் எத்தனையோ?!’ என்ற எண்ணம் தோன்ற, கண்ணில் அதை உணர்ந்து கொண்ட வலியோடு, ஆரனிடம் ‘உண்மையா!’ என்பது போல பார்க்க, அவனும், அன்று, தான் பார்த்த கௌதமின் நிலையில், முகம் வாட, அவளிடம், ‘ஆமாம்!’ என தலை அசைக்க,

    ‘இனி எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம், கௌதமின் தனிமையை குறைத்து சிறு விசயத்தை கூட, அவன் தன்னிடம் மறைக்காமல் சொல்லிட வைக்க வேண்டும்’ என உறுதி எடுத்தவளுக்கு தெரியாதே, சிறு வயது முதலே, தனது வேதனையை சட்டென வெளியே சொல்லியே பழகாதவன், எல்லாவற்றையும் தன்னிடம் மறைக்காமல் வெளிப்படுத்திட மாட்டான் என்பதை….

    அதன் பிறகே, அவன் வந்ததும், அவனை அக்கரையோடு, உணவு உண்ண வைத்து, அவனிடம் சிறிது நேரம் பேசி, அவனின் சீண்டல்களை அனுபவித்து, அவனை மேலும் சிரிக்க வைத்துவிட்டே  அங்கிருந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டாள் காயத்ரி.

    சில நாட்கள், அவளே சமைப்பதும் நடக்க, அதை பார்த்தவன், “செல்லம்மா, உன்ன சாங் ப்ராக்டீஸ் பண்ண வர சொன்னா, நீ, என்ன குடும்பம் நடத்த ப்ராக்டீஸ் பண்ணற மாதிரி இருக்கு. நீ, செய்யாத வேலைன்னா, ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு. அதையும் செஞ்சிட்டா பர்பெக்ட் பொண்டாட்டி ஆகிடுவ..!” என சொல்பவனின் வார்த்தையில் இருக்கும், குறும்பிலும், இதழில் தோன்றும் விசம சிரிப்பிலுமே தெரிந்து போகும், அந்த ஒன்று எதுவென…

    அதை கண்டும், காணாதது போல கடந்து போக இப்போது நன்கு பழகி போனாள் காயத்ரி. அதனால் சில நேரம் பேச்சை விட செயலால் அவளை தவிக்க விட ஆரம்பித்தான் அவளின் கள்வன்.

    ****

    அன்று ஞாயிறு என்பதாலும், கல்லூரி விழாவிற்காக, தனது செல்லம்மாவிற்கு தானே ஒரு உடையை வாங்கி தருவதோடு, சிறு சர்ப்ரைஸ் தருவதற்கு, என கௌதம் காயத்ரியின் வரவிற்காக வீட்டிலேயே காத்திருந்தான்.

    கௌதம், முதல்நாளே அவளிடம் நாளை காலையிலேயே வரும்படி சொல்லி இருந்ததால், சரியாக அவன் சொன்னது போலவே தயாராகி வந்தவள், எதிர் கொண்டது மும்முரமாக போனில் பேசிக்கொண்டிருந்த கௌதமையே….

    அவன் பேச்சு, அவனின் தொழில் தொடர்பானது என்பது, அவனின் பேசும் தோரணையிலேயே தெரிய, அவனின் கம்பீரமான குரலையும், அவன் அமர்ந்து பேசும் அழகையுமே, ரசித்த படியே நின்றிருந்தவளை, சிறிது நேரம் சென்றே கவனித்த கௌதம், அவள் கண்ணில் தெரிந்த ரசனையில், அவளை சீண்டும் எண்ணம் எழ, அவளை பார்த்தும், பார்க்காதது போல இருக்க, ‘அவன் தன்னை கவனிக்கவில்லையோ!’ என நினைத்தவள், அவன் முன்பு சென்று, நின்றும், நடந்தும் அவனை தன்னை கவனிக்க வைக்க செய்த செயல்களையும், அவனோ காணாதது போலவே பாவனை காட்ட,


    சிறிது நேரம் வரை பொறுத்தவள், அவனின் விளையாடான தவிர்ப்பை கண்டுவிட்டு, ‘ஏன்னா! என்கிட்டையேவா..?!  இருங்கோ’ என நினைத்தபடி, தனது உதட்டை சுழித்து, அழகு காட்டிவிட்டு, நேரே அங்கிருந்து செல்ல, அவளின் சிறுபிள்ளை செயலில் வந்த புன்னகையை, தனது அலுவலை முன்னிட்டு தடை போட்டவன், தொடர்ந்து பேச்சில் மூழ்கிட,

    காயத்ரிக்கோ, ‘என்னடா இது! இன்னும் அவர காணோம். எப்பவும் இப்படி திருப்பின்டு வந்தா, பின்னாலையே சமாதானம் செய்யறேன்னு வந்திடுவாரே.. இப்ப என்ன நிஜமாவே அவரு கவனிக்கலையோ..?!’ என்ற சிந்தனையோடு இருந்தவளை, கலைத்த மாரி, “அம்மாடி காயத்ரி! இந்தா, நீ எப்பவும் குடிக்கற பில்டர் காபி” என கொடுத்த பிறகே, தான் சமையலறைக்கு வந்திருப்பது விளங்க, “தேங்க்ஸ்..” என்றபடி அதை வாங்கி குடித்தவள்,

    “மாரியண்ணா, நா இன்னைக்கி சமையல் செய்யட்டா. அவருக்கு என்ன பிடிக்குமின்னு சொல்லுங்கோ.. ?! அத நானே செய்யறேன்” என கேட்க,

    “கௌதம் தம்பிக்கு பிடிக்காதது பிடிச்சதுன்னு எதுவுமே இல்லம்மா. எத செஞ்சு கொடுத்தாலும், முகம் மாறாம சாப்பிடும். இது நல்லா இருக்கு, இத செய்யுங்க, இத செய்யாதிங்கன்னு, தம்பி சொன்னதே இல்ல. நானா, அவரு ஒரு வாய் சேர்த்து சாப்பிடறத வச்சு, அதை செஞ்சு கொடுப்பேன். அதனால, உனக்கு எது நல்லா செய்ய வருமோ, அதையே செய்யும்மா காயத்ரி” எனவும்,

    ‘எதை செய்யலாம்’ என யோசித்து தீர்மானித்தவள், அதற்கு தேவையான பொருட்களை கேட்க, அதை இருக்கும் இடத்திலிருந்து எடுத்து கொடுத்தவர், அவளுக்கு தேவையான காய்கறிகளை வெட்டி கொடுக்க, இருவரும் பேசியபடியே சமையல் வேலையை தொடர்ந்தனர்.

    தனது பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வந்த கௌதம், மாரியோடு சேர்ந்து பாந்தமாய், தனது இல்லத்தில் உரிமையாய், தனக்கென சமையலில் ஈடுபட்டுள்ள செல்லம்மாவை காண காண தெவிட்டவில்லை. அவள் சமையல் முடிப்பதற்கு முன்பு, தானும் ரெடியாகிட எண்ணி மேலே சென்றான்.

    சமையல் செய்யும் மும்முரத்தில், கௌதம் வந்ததும், போனதும் அறியாது அதிலேயே மூழ்கி இருந்தவள், சமையல் முடியும் தருணத்தில் ரசத்திற்காக, மல்லி இலை கேட்க,

    “தோட்டத்துல ப்ரஸ்ஸா இருக்கும்மா, நா போய் பரிச்சிட்டு வர்றேன்” என, பின் வாசல் வழியாக, தோட்டத்திற்கு மாரி செல்ல, செய்த உணவுகளை அதற்கான பாத்திரத்தில் மாற்றி, ஒழுங்கு செய்து கொண்டிருந்தவளுக்கு, எதோ வித்தியாசமாய் பட, சட்டென திரும்ப கௌதமின் நெஞ்சில் மோதி நின்றாள் பாவையவள்…

    மேலே சென்று தயாரானவன், மீண்டும் வரவும், மாரி வெளியே செல்லவும் சரியாக இருக்க, தன்னிடம் செல்ல கோபத்தோடு வந்தவளை, சமாதானம் செய்ய அவளை நெருங்கவும், அவள் திரும்பவும் சரியாக இருக்க, அவனுமே அவளின் ஸ்பரிஷத்தில் தடுமாறி தான் போனான்.

    தனது மீது மோதியவள், உடனே சுதாரித்து விலகி, “இங்க என்ன செய்யறேள்?! போங்கோ, உங்க போன கட்டின்டு அழுங்கோ! இப்ப மட்டும் எதுக்காக வந்தேள்?!” என வீம்போடு விலகியவளின், இருபுறமும் தனது கைகளால் அணை போட்டவன்,

    எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருக்க, அவனின் பார்வையில் தடுமாறினாலும், பொய் தோபத்தை இழுத்து பிடித்து, “பாருங்கோன்னா! நா உங்க மேல கோபமா இருக்கேன். வழிய விடுங்கோ. வெளிய போனவரு வந்தா, நல்லா இருக்காது” என சொல்லியும், தனது கைகளை விலக்காமல் இருக்கும் கௌதமிடமிருந்து, ‘எப்படி தாண்டி செல்வது, அவனை தொடாமல்?!’ என யோசித்தவளின் முகத்திலிருந்தே, அவள் தன்னை தீண்டாமல் விலகி செல்ல நினைப்பது புரிய, ‘பார்க்கலாம் செல்லம்மா, நீ எப்படி விலகி போறன்னு!’ என்று மனதோடு சொல்லிக்கொண்டவன், அதே சவால் பார்வையை காயத்ரி மீது வீசிட,

    அவன் தனக்கு வழி விட போவது இல்லை என்பது தெளிவாக புரிந்தாலும், தானும் இறங்கி போக கூடாது என்ற முடிவோடு அப்படியே நின்றவளின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு, அவளின் இதழ்களும், ஒட்டி கொண்டு நிற்காது இருந்தாலும், நெருக்கமாய் இருக்கும் நிலையும், போதையை ஏற்றிட அவனின் பார்வையும் மாற்றம் கொண்டது அவனின் எண்ணத்தை போலவே….

    சிறிது நேரம் எந்த மாற்றமும் இல்லாது இருக்க, மெல்ல நிமிர்ந்து கௌதமின் முகம் பார்த்தவளுக்கு அவனின் கண்கள் காட்டிய போதையில் தடுமாறி நிற்க, அவளின் விழியோடு ஆரம்பித்த அவனின் கண்களின் பயணம், மெல்ல இடம் பெயர்ந்து மூக்கு, கன்னம் என நகர்ந்து இதழ்களை பார்க்கவும், அவளின் முகம் அந்தி வானமாய் சிவந்து போனது அவனின் பார்வை உணர்த்திய செய்தியில்…

    அதோடு நிற்காமல், இதுவரை அவளின் முகம் மட்டுமே பார்த்து பேசியவனின் கண்ணியம் கடந்து, அவனின் பார்வை மெதுவாக கீழிறங்க, மெல்லிய படபடப்பும், பதட்டமும் கொண்டாலும், அவனை விட்டு விலகி செல்ல அவளால் இயலாது,  அவனின் பார்வையை தடுக்கும் வழியும் அறியாது இருந்தவளை மேலும் சோதிக்கும் நோக்கில், அவள் சமையல் செய்ய ஏதுவாய், தூக்கி சொறுகி இருந்த புடவையின் விளைவால், பளிச்சென்று தெரிந்த வெண்ணிற இடையில், அவன் பார்வை பதிய, ‘இதற்கு மேலும் தன்னால் அவனின் பார்வையை தாங்கிட இயலாது!’ என்பது போல, அவன் பார்வையை தடுக்கும் பொருட்டு, சட்டென அவனை அனைத்தவள், அவனின் பார்வையிலிருந்து காத்துக்கொள்ள, அவனின் நெஞ்சத்தையே கவசமாக்கி கொண்டாள்.



error: Content is protected !!